Saturday 7 October 2017

காற்றின் உட்பக்கம் - மிலோராட் பாவிச் (செர்பியா) The Inner side of the Wind - Milorod Pavic (Serbia)

காற்றின் உட்பக்கம் (The Inner Side of the Wind)
செர்பிய மொழி : மிலோராட் பாவிச் (Milorod Pavic)
ஆங்கிலம் வழி தமிழில் ச. ஆறுமுகம் 




காற்றின் உட்பக்கம் 
வயதுவந்த லியாண்டர் வாசிக்கக் கற்றுக்கொண்டபோது, இரு புகழ்பெற்ற காதலர்களின் கதையைக் கண்டுணர்கிறான். “ஒருவேளை லியாண்டர் தண்ணீரில் அல்லாமல் காலத்தில் நீந்திவந்திருக்கவேண்டும்” என்கிறார், அவர், அவனது ஆசிரியரிடம். இந்தப் பயணத்தைத்தான் திரு. பாவிச் அவரது அற்புத நாவலில் நமக்குக் கருவாக்குகிறார்.
டபிள்யூ. எஸ். டி பியாரோ, நியூயார்க் டைம்ஸ் புக் ரிவ்யூ
முழுமை மற்றும் பாதியின் கருத்தாக்கத்தினைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், காற்றின் உட்பக்கம், உலகம் மற்றும் நூல் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பார்வையினையும் உருவாக்குகிறது.

Milorad Pavic Interaktivni Milorad Pavi

                           















காற்றின் உட்பக்கம் அல்லது கதாநாயகன் மற்றும் லியாண்டரின் நாவல்
மிரோலாட் பாவிச்















உள்ளடக்கம்
காற்றின் உட்பக்கம் அல்லது கதாநாயகன் மற்றும் லியாண்டரின் நாவல்
1
2
3
கதாநாயகன்
1
2   காப்டன் பீட்டர் டி விட்கோவிச்சின் கதை
3  சகோதரன் மற்றும் சகோதரியின் கதை













அவன் ஏதோ ஒன்றின் பாதி. அந்த ஏதோ ஒன்றின் வலிமைமிக்க, அழகுவாய்ந்த, திறமைமிக்க ஒரு பாதி, ஒருவேளை, அவனைவிடவும் வலிமையானதாக, மேன்மை மிகுந்து, அழகும் வாய்ந்ததாக இருக்கலாம். அப்புறம், அவன் நேர்த்திமிக்கதும் ஆழம் காணமுடியாததுமான ஏதோ ஒன்றின் மாயமந்திரப் பாதியாகவுமிருந்தான். அவளோ முற்று முழுதான ஒரு முழுமையாக இருந்தாள்.  சிறிய,  நெகிழ்வான, மிகவும் வலுவாகவோ அல்லது இணக்கமானதாகவோயில்லாத ஒரு முழுமை, ஆனால் அதேநேரத்தில் முழுமையான ஒரு முழுமை.
                







1
” எதிர்கால வாய்ப்புகள் எல்லாமே சிறப்பான ஒரு பண்புநலத்தினைக் கொண்டுள்ளன; அவற்றை நீங்கள் கற்பனைசெய்கிற மாதிரியில், அவை ஒருபோதுமே அமைவதில்லை.” என்றார், லியாண்டரிடம் அவனது அப்பா.
அந்த நேரத்தில், லியாண்டர் முழுவதுமாக வளர்ந்துவிட்ட ஒரு ஆணாக இல்லை; அவன் அப்போதும் கல்லாதவனாகவேயிருந்தான்; ஆனால், ஏற்கெனவேயே அழகானவனாகியிருந்தான்; அவன் அப்போது லியாண்டர் என அழைக்கப்பட்டுவிடவில்லை, ஆனால், அவனது அம்மா அவனது தலைமுடியை, அவன் பயணத்தின் போது வாரிக்கொள்ள வேண்டிய அவசியமில்லாதபடி டச்சு லேஸ் போலப் பின்னி, இறுகக் கட்டியிருந்தாள். அவன் வெளியே செல்வதைப் பார்த்த அவனது அப்பா, “அவனுக்கு அன்னம் போல நீண்ட, அழகான ஒரு கழுத்து;  வாளுக்கு இரையாகிச் சாகாமல் கடவுள் தடுப்பாராக.” என்றார்.
அதோடு, லியாண்டர் அந்த வார்த்தைகளை அவனது வாழ்நாள் முழுவதும் நினைவுவைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
தலைமுறை, தலைமுறையாக, லியாண்டரின் சிகோரிச் குடும்பத்தினரில் அவனது அப்பாவைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே, கொத்தனாராக, கருமாராக மற்றும் தேனீ வளர்ப்பவராகத் தான் இருந்திருக்கிறார்கள். சிகோரிச்கள், மொழியின் முதலெழுத்துக்களைக் கற்பதற்கு முன்னதாகவே, தேவாலயப் பிரார்த்தனை கீதங்களைக் கற்றுக்கொள்வதும் உச்சியிலிருந்து இறங்கும் தண்ணீர் இரண்டு கடல்களுக்குள் வழிவதான, உச்சிமேட்டின் ஒருபக்கம் மழை மேற்காகப் பெய்து நெரெட்வா ஆற்றுக்குள்ளும் ஏட்ரியாடிக் கடலுக்குள்ளும் இறங்குவதான, உச்சிமேட்டின் மறுபக்கத்தில் மழை கிழக்காகப் பெய்து, ட்ரினா வழியாக சாவா ஆற்றில் இறங்கி டான்யூப்பில் புகுந்து கருங்கடலுக்குள் சேர்கிற  ஹெர்செகோவினா பகுதியிலிருந்து பெல்கிரேடின் அடிப்பகுதியில் ஓடும் டான்யூப் பகுதிக்கு வந்து சேர்ந்தவர்கள். குடும்பத்தினரில் வழிமாறி, வீடு கட்டுமானம் குறித்து காதிலே போட்டுக்கொள்ளக்கூட மறுத்துவிட்ட ஒரே நபர், லியாண்டரின் அப்பாதான்.  
” வியன்னாவில், அல்லது புடாவில் நான் துணிச்சலுடன் வெளியிறங்கிய உடனேயே, எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நீங்கள் சிறிது கூடக் கருணையின்றி எழுப்பியுள்ள கட்டிடங்கள் மத்தியில், நான் என்னைத் தொலைத்துவிட்டு, பெப்ருவரியில் பைக் மீன்கள் முட்டாள்தனமாக மொய்க்கின்ற, நான் யார், எங்கிருந்து வருகிறேனென நான் உணர்கிற டான்யூபில் தான் முகிழ்த்து வெளிவருகிறேன்.”
சிகோரிச்கள் குடும்பத்தின் தந்தை யாரென்றோ, அல்லது  எங்கிருந்தாரென்றோ அல்லது அவர்கள் எங்கே வசித்திருந்தார்களென்றோ ஒருபோதும் தெரிந்துகொண்டதில்லை. அவன் அவர்களுக்குச் சொன்ன ஒரே விஷயம், அவர்கள் தண்ணீர் மற்றும் மரணத்தின் மீதே வாழ்ந்தார்கள் என்பதுதான்; ஏனென்றால், எப்போதுமே மனிதன் மரணத்தின் மீதுதான் வாழ்கிறான். அப்புறம், லியாண்டரின் அப்பா உண்மையிலேயே டான்யூப் அல்லது சாவாவில் நனைந்து, - ஒவ்வொரு ஆறும் அததற்கேயுரிய தனித்த மணம் கொண்டிருப்பதால் அவற்றைத் தனித்தனியாகக் கண்டுகொள்வது மிக எளிதானது – ஈரம் சொட்டச்சொட்ட, மிகப் பிந்திய பின்னிரவில் வீட்டுக்கு வந்தார். அவர் நனைந்திருந்ததால் நடு இரவிலும் எண்ணிவைத்தது போல் பத்து முறை தும்முவார். 
சிறுவயதில் ரடாச்சா, மில்கோ போன்ற பெயர்களையும் கொண்டிருந்த லியாண்டர், குழந்தைப் பருவத்திலிருந்தே அவனது தாத்தாக்கள் மற்றும் மாமா, பெரியப்பாக்கள் வழியில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குமாறும் அவர்களது குடும்பத் தொழிலான கட்டுமானத் தொழிலினைத் தொடருமாறும் கற்பிக்கப்பட்டிருந்தான். அவன் கட்டுமானத்திலும் சலவைக்கல் செதுக்குவதிலும் நுண்திறன் பெற்றவனாக இருந்தான்; புனிதச்  சின்னங்களைக் கல்லறைகளில் புதைக்கும் சடங்குகளில் அவனால் உதவமுடியும் என்பதோடு தேன்கூடுகள் மீது ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்துவதிலும், தேனீக்களை மிக எளிதாகவும் விரைவாகவும் அப்படியே கூட்டமாகப் பிடிப்பதிலும் இயல்பார்ந்த திறமை பெற்றிருந்தான். கோடை காலத்தின் எரிக்கும் வெயிலில், ஹெர்செகோவினாவின் ஆற்றுக்குள் மீன் பிடிக்க, துப்பாக்கிச் சுடு வரம்பின் இருபது மடங்கு தூரம் வரையிலும் செல்லவேண்டியிருக்கும்போது, லியாண்டரைத்தான் அனுப்புவார்கள்; அவனும் தனியாளாகவே சமாளித்து, மீன்பிடித்து, அதற்கான நெட்டில் என்னும் தழைகளுக்குள் பொதிந்து, அவற்றிலிருந்து நாற்றமெழும் முன்னரே கொண்டுவந்துவிடுவான். பிற்காலத்தில், அவனது பல கடற்பயணங்களில் ஒன்றின்போது, முடியரசன்  தூர்த் பிராங்கோவிச் (despot Djurdje Brankovich) நினைவாக டான்யூபில் நீரெடுத்துப் பிசைந்த மாவில் தயாரித்து, ஸ்மெடெரேவோவின் நமது மாதா தேவாலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட ரொட்டியினை அவாலா மலைக்குச் செல்லும் வழி முழுவதும் குதிரைவண்டிக்காரர்கள் ஆளாளுக்குக் கை மாற்றிச் சுமந்துசென்றதைக் (என்றென்றும் அவன் நினைவில் நிற்கப்போகிற காட்சியினைக்) கண்டான். டான்யூபிலிருந்து வருகின்ற அந்த ரொட்டி, சூடு தணியும் முன்பாகவே அரசனின் உணவு மேஜைக்கு அவ்வளவு விரைவாகக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கே நறுக்கப்பட்டு ஜர்நோவா கிராமத்தில் காய்ச்சப்பட்ட உப்புடன் பரிமாறப்பட்டது.
“நாம் எல்லோருமே கட்டிட வேலைசெய்பவர்கள் தாம்,” இரவு உணவின்போது லியாண்டரிடம் பேசுகிற தாத்தா எப்போதும் சொல்வது, “ஆனால், கட்டுமானத்திற்கு, வழக்கத்திலேயே இல்லாத சலவைக்கல்லைப் பெற்றிருக்கின்றோம் : மணிக்கணக்கான நேரங்கள், நாட்கள் மற்றும் ஆண்டுகள், தூக்கமும் ஒயினுமே சாந்து. நாம் எல்லோரும் காலத்தின் கட்டுமானக்காரர்கள், நிழலினை அண்டவிடாமல் துரத்தி, கொப்பூழ்களில் நீரைத் தேக்குகிறோம்; மணித்தியாலங்களால் அவரவர் வீட்டினைக் கட்டி எழுப்புகிறோம், காலத்தால் அவரவர் தேன்கூட்டினைக் கட்டி, அவரவர் தேனைச் சேகரிக்கிறோம், வயிற்றுத் தீக்காக, அடிவயிற்றில் காலத்தைச் சுமக்கிறோம். ஒரே பைக்குள் செம்புடன் கலந்துவிட்ட தங்க நாணயங்கள் போல், வெள்ளை மறிகளும் கறுப்பும் போல், அப்படியே நமது வெள்ளைச் சலவைக்கல்லுடன் கறுப்பும் கட்டிடத்துக்காகக் கலக்கப்படுகின்றன. அவனது பைக்குள் அவனது செம்பே அவனது தங்கத்தை விழுங்குவது அல்லது அவனது இரவுகள் அவனது பகல்களைக் கபளீகரம் செய்கிற துயரமே அவனுக்கு மிஞ்சுகிறது. காலம் மற்றும் காரணகாரியத்துக்கப்பாற்பட்டு அவன் கட்டவேண்டும்………”
இதையெல்லாம் கேட்டு, மறுநாளைப்பற்றியல்ல, அதற்கும் மறுநாளைப் பற்றிய யோசனையில் எப்போதுமே ஆழ்ந்திருந்த லியாண்டர், அவனது தந்தை மூன்று கரண்டிகளுக்கு ஒருமுறையே மொச்சையினை எடுத்துச் சாப்பிடுவதை வியப்புடன் கவனித்தான். அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் எத்தனை கரண்டி என முன்கூட்டியே அளவிட்டு எடுத்துவைத்துவிடுவர்; எவரும் அவருக்கென ஒதுக்கப்பட்ட உணவின் அளவினை மீறுவதேயில்லை; ஆனால் லியாண்டர், மற்றவர் சாப்பிடுகிற அதே அளவினை மூன்றிலொரு பங்கு நேரத்திலேயே சாப்பிட்டுவிடுவான். கொஞ்சம் கொஞ்சமாக, மிருகங்களில் கூட வேகமாக உண்பவை, மெதுவாக உண்பவை, வேகமாக நகருபவை, மெதுவாக நகருபவை என இருப்பதையும், அவனைச் சுற்றியுள்ள உலகத்தில் இருவேறு வகையான உயிரோட்டங்கள், ஒன்றுக்கொன்று சமமில்லாத இரண்டுவித நாடித் துடிப்புகளுடனான இரத்த ஓட்டம், அதுவே தாவரங்களிலெனில் உயிர்ச்சாறு  இருப்பதையும், எல்லோருக்கும்  சமநீளமுள்ள ஒரே மாதிரியான இரவுபகல்கள் என்ற ஒரே சட்டத்துக்குள் இருவேறு மாதிரியான நபர்கள் இறுக அழுத்தமாகப் பதிக்கப்பட்டுள்ளதையும், இப்படியாகச் சிலர் தேவைக்கும் குறைவாகப் பெறுவதும், மற்றவர்கள் ஏராளமாக அளிக்கப்படுவதையும் மெதுமெதுவாகப் பிரித்து அறிந்துகொள்ளத் தொடங்குகிறான். அதன் தொடர்ச்சியாக, அவனது இயக்கத் துடிப்பு வகையல்லாத மனித, மிருக, தாவரங்கள் எல்லாவற்றின் மீதான சகிப்புத்தன்மை அவனுக்குள் தன்னுணர்வின்றியே குறைவதினை உணரத் தொடங்கினான். அவன் பறவைகளைக் கவனித்து, அவனுக்கேயுரிய பாடல்முறையில் இசைக்கின்றவற்றைத் தனியாகப் பிரித்தெடுத்தான். ஒரு நாள் காலையில், அவனது தந்தை நீர் அருந்திக்கொண்டிருந்த குவளைக்காகக் காத்திருக்கையில், அவர் எத்தனை மிடறுகளாக விழுங்குகிறார் என எண்ணிக்கையிடும்போது, வீட்டைவிட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தான். அவனது அப்பா ஏற்கெனவேயே  அதிக அளவிலான  அன்பினையும் அறிவினையும் அவனுக்குள்ளும் அவனது உடன்பிறப்புகளுக்குள்ளும் புகுத்தி முதலீடாக்கியிருக்கிறார்; அதுவே அவனது வாழ்க்கை முழுவதற்கும் மகிழ்ச்சியையும் உணவினையும் அளிக்கப் போதுமானதாக இருக்கும்; அதுவுமில்லாமல் எதிர்காலத்தில், இந்த அன்பின் நோக்கமும் பயனாளருமான லியாண்டரே கூட வாழ்கிறவர்களில் ஒருவராக இல்லாமல் போகலாமென்கிறபோது, பெற்ற பாசமென்பது வீணாகவே, அதன் இலக்குக்கும் அதிகமாகி, காற்றிலடித்துப் போகலாமென்கிற நிலையில் அந்த அன்பின் ஒரு பகுதியை மேற்கொண்டும் அனுபவிப்பதை நீட்டிப்பதில் எந்த நியாயமும் இல்லையென அவன் திடீரென்று உணர்ந்தான்.          
லியாண்டரின் வெளியேறுகை பின்வருமாறு நிகழ்ந்தது. `சான்டிர்` என்ற நரம்பிசைக் கருவியை அவனுக்கு மீட்டத்தெரியும்; விடுமுறைநாட்களில் அவனது இசைப்பினில் மகிழ்ந்தவர்கள் அந்தக் கருவிக்குள் செம்பு நாணயங்களை விட்டெறிவதுண்டு. அந்தக் காலத்தில் சாவா ஆற்றின் கப்பல் துறையில் வாழ்ந்த நான்கு முன்னாள் வணிகர்கள் சான்டிர் இசைப்பதில் புகழ்பெற்றிருந்தனர். வெளியூர்ப்பயணம் ஒன்றுக்குச் செல்லவிருந்தநேரத்தில் அவர்களில் ஒருவர் நோயுற்றுவிடவே, அக்குழுவுக்கு சான்டிர் இசைக்க நான்காவதாக ஒரு ஆள் தேவைப்பட்டார். தந்தை சிகோரிச், அவரது மகனுக்கு எழுதக் கற்றுக்கொடுப்பதெனத் தீர்மானித்து, அப்போதுதான் அவனது முதன்முதல் எழுத்தான, தியோடோகாஸ் (கடவுளின் தாய்) என்ற வார்த்தை தொடங்கும் மொழிமுதல் `ஓ` வினைக் காட்டிய ஒரு காலைநேரத்தில், அதே, அதே காலை நேரத்தில் விருந்தினர் வந்தனர். லியாண்டர் அவனது பேனாவினைச் சரியாகக்கூட மூடாதபொழுதில்  சிகோரிச் வீட்டுக்குள் நுழைந்த வணிகர்களில் மூத்தவர், சுவரிலிருந்து லியாண்டரின் சான்டிரை எடுத்துக் கையாலேயே எடை பார்த்தார். அதற்குள்ளிருந்த நாணயங்களின் எடையே இளம் இசைக்கலைஞனுக்குப் போதிய பரிந்துரையாக அமைந்தது. அந்த வணிகர், கான்ஸ்டான்டிநோபிளுக்கு ஒரு முறை சென்றுவர நான்காவது சான்டிர் கலைஞராக அவரது மகனை அனுப்புமாறு மூத்த சிகோரிச்சிடம் கோரினார். லியாண்டர் இரண்டாம் யோசனைக்கே இடம்கொடுக்காமல், உடனே ஒப்புக்கொண்டான்; இப்படியாகத்தான், அவனது எழுத்துக் கல்விக்கு ஆரம்பத்திலேயே தடையேற்பட்டது; அதன்பிறகும், அவன் ஒருபோதும் அந்த முதலெழுத்தினைத் தாண்டவேயில்லை. ஆனால், அவனை வெளியே இழுத்துவந்த மூத்த வணிகர் அந்த நேரத்திலேயே நோய்வாய்ப்பட, அந்த இடத்தை நிரப்ப ஹெர்செகோவினியன் எல்லையான டியோமிடஸ் சுபோட்டாவிலிருந்து லியாண்டரின் நண்பன் ஒருவனை சான்டிர் கலைஞனாகச் சேர்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று.   
அந்த வணிகர்கள் பெல்கிரேடிலிருந்து கான்ஸ்டன்டைன் நகருக்கு பழைய கான்ஸ்டான்டிநோபிள் ரோடு வழியாக சலோனிகா பாதையில் புறப்பட்டனர். அவர்கள் செஸ்டோஸ் மற்றும் அபிடோஸ் நகரங்களுக்கிடையே   ஹெல்லெஸ்பாண்ட் கடற்கால்வாயினைப் பார்த்துவிட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரும்பினர்; ஆனால், பயணத்தின் போதே எஞ்சியிருந்த  சான்டிர் இசைக்கும் வணிகர் இருவரில் ஒருவர் வினோதமான முறையில் அவரது மரணத்தைச் சந்தித்தார். பின்னால் நேரப்போவது தெரியாமலே, அவரது சொந்தத் தேவைகளுக்காகவே அவர், ஒட்டகத்தை முழங்காலிடுமாறு பணித்தார்; அவர் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோதே ஒட்டகம் அவர் மீது அப்படியே விழுந்து அவரைக் கொன்றுவிட்டது. அடுத்த ஆண்டு, அவர்கள் கான்ஸ்டான்டிநோபிளுக்கு மீண்டும் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவருக்குப் பதிலாளாக ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டிருந்தனர்; ஆனால் பயணம் புறப்படுகின்ற நாளில் கடைசியானவராக எஞ்சியிருந்த சான்டிர் கலைஞரான அந்த நான்காவது வணிகர், பயணக்குழுவில் சேர்ந்துவரத் தவறிவிட்டார். சான்டிர் கலைஞர்களான வணிகர்களுக்குப் பதிலாட்களாக அங்கு வந்திருந்த இளைஞர்கள்,  பழைய சான்டிர் கலைஞர்கள் ஒருவர் கூட அங்கு இல்லையென்பது தெரிந்ததும் ஒருவருக்கொருவர் பார்வையாலேயே வியப்பினைப் பரிமாறிக்கொண்டு அவர்களுக்குள் ஏற்கெனவே ஏதோ ஒப்பந்தம் செய்திருந்ததுபோல் அனைவருமே வாத்தியங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, இசைஞர்களாக அல்லாமல் வணிகர்களாகப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
துருக்கிய வலிமை வியன்னாவுக்கு எதிராகச் செயல்பட்டபோது, மேற்கும் கிழக்கும், ஐரோப்பாவும் ஆசியாவும் என்ற இரு உலகங்களுக்கிடையே நிகழ்ந்த அபாயகரமான பயணமும் லாபகரமான வணிகமும் நல்ல வருமானத்தைக் கொடுத்தன; அந்தப் பயணத்தில்தான், லியாண்டர், அவனது தந்தையின் அன்பினையும் அதுபோலவே இசையினையும் வாழ்நாள் முழுவதுக்குமாக வேண்டிய அளவுக்கு நிறைத்துக்கொண்டுள்ளதாகவும் அதற்கும் மேலாக வேறு எதனைக் கொண்டுபோய்ச் சேர்த்தாலும் பொங்கித்தான் வழிவதோடு, வெற்றுப் பாழில் மறைந்துவிடுகிறதென்பதையும் உணர்ந்தான். அப்படியாக, வணிகத்தால் வரவேற்பும் மகிழ்வும் பெற்ற அவன் மீண்டும் சான்டிர் பக்கம் திரும்பவோ, அதைக் கையில் கூட எடுக்கவோ, இந்த உலகத்தில் அவனைச் சுற்றியிருக்கும் நாட்களையெல்லாம் விழுங்கிக்கொண்டிருந்த இசையைக் கேட்கவேண்டுமென்று உணரவோ கூட இல்லை. புதிய வணிகத்தில், பயணத்தில், உண்மையில் பிரபஞ்சத்தையே விழுங்கிவிடுவதான, ஒருவகை வேகம் மற்றும் செயல்திறனில் நம்ப இயலாதபடிக்கு அளவிலாத வலுவினை மறைப்பதான, ஒட்டகங்களின் மெதுவான, வலுவாக அழுந்த நடக்கும் நடையில் வசீகரிக்கப்பட்ட அவன், அவற்றைப் போலவே அவனுடைய உள்ளூக்கத் துடிப்பினை, அவனது உட்பக்கக் கால ஓட்டத்தினை, அவனது வேகத்தினை மெதுவான, அதிராத மென்னடை கொண்ட நீண்ட அசைவுகளில் உள்ளடக்கி, ஒட்டகங்களின் நடையினைப் பிரதிபலிக்க முயற்சி செய்தான். சோம்பலுக்குள் முகம்மூடி, மறைக்கப்பட்ட வேகம் என்பதே, அவனது பண்பொழுக்க இலக்காக இருந்தது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, அதுவே சிறந்த வழியெனத் தெரிந்துகொண்ட அவன், எப்போதுமே அவனது திரி எவ்வளவு குறைவாக எரிந்திருக்கிறதென்பதை மறைத்ததுடன், காற்றின் முதுகுக்குப் பின்னால், கால ஓட்டத்தில் அவன் கண்டவற்றைப்பற்றி மவுனமே சாதித்தான். ஆக, ஒட்டகங்களைக் கவனித்துணர்ந்ததன் மூலமும், பல்லாண்டுகளாகச் செயல்படுத்திவந்ததன் மூலமும் அவனுடைய அசாதாரணச் செயல்திறனை,  அவனுடையதைப் போன்றதான அச் செயல் வேகத்தினை மக்கள் அபாயகரமான ஒரு ஆயுதமாகக் கருதுவதாக அவன் உணர்ந்து, அவனுக்குக் கிடைத்த மேம்பட்ட ஒன்றினைக் கெட்ட ஒரு அம்சத்தைப் போல முழுவதுமாக மறைத்து நடந்துகொண்டான். அதுவே, அவனைப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்தது; கடினமான நேரங்களின் போதும், இரத்தம் தோய்ந்த ஆடைகளால் நிரம்பியிருந்த சாலைகளிலிருந்தும் பாதுகாத்தது. வணிக சாத்துகளை வழிமறித்து வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பெரும் அழிவினை ஏற்படுத்துகின்ற வளைந்த வாள்களை வீசுகின்ற துருக்கியர்கள், வேகம் நிறைந்த வேட்டைக்காரர்கள், தலைகளைக் கொய்பவர்களைப் பற்றித் தேவைக்கும் அதிகமாகவே பயங்கரக் கதைகளை, வர்த்தகர்களிடமிருந்து லியாண்டர் கேள்விப்பட்டிருந்தான். வளைந்த வாளினை வைத்திருப்பவன் எப்போதுமே சுயமைதுனக் கையினை விலைமதிப்பற்ற ஒன்றினைப் போலப் பின்பக்கமாக மறைத்துக்கொண்டு, அது சோர்வடைந்துவிடாமலிருப்பதற்காக, அக்கைக்கு அதிகபட்சமாக எந்த வேலையும் கொடுக்காமல், மறுகையாலேயே வெட்டி வீழ்த்துவானென அவர்கள் சொன்னார்கள். சாத்தானால் உயிரைக் கொல்ல முடியாதே, கடவுளால் மட்டும்தானே உயிரைப் போக்கமுடியுமென, லியாண்டர் வீணாகச் சிந்தித்தான்; அவன் பயந்துபோனான்; வளைந்த வாள்காரனின் நினைப்பு ஏற்பட்டபோதே அவனது முகம் மற்றும் கன்னங்கள் முழுவதற்குமாகக் கண்கள் பயத்தில் பிதுங்கி வெளித்தெரிந்தன.
அவனுக்குள்ளிருந்த பயம் குறிகாரன் ஒருவனால் அதிகமாகியது.
அந்தக் குறிகாரன் இடிந்துபோன ஒரு தண்ணீர்த்தொட்டிக்குள் வசித்தான்; அவனால் இரவுகளில் தூங்க முடியாதபோது எழுந்து கத்திகளைத் தீட்டவோ அல்லது அவனது கால் பாதங்களைக் காலுறைகளால் துடைக்கவோ செய்வான்; உடனேயே அவனது தனிமை பாலாடைக்கட்டியைப் போலக் கரைந்துபோய்விடும். லியாண்டர் கேள்விப்பட்டது ; “நீங்கள் அவனுக்கு ஒரு நாணயம் கொடுத்தால் அவன் உங்களுக்கு முடி மழித்துவிடுவான், இரண்டு கொடுத்தால், மழிக்கும்போதே உங்கள் அதிர்ஷ்டத்தையும் சொல்வான். ஆனால், கவனமாக இருங்கள், அவன் ஒரு நல்ல நாவிதன் என்பதைவிட நல்ல ஒரு குறிகாரன்.”
தொட்டியின் முன்பாக, லியாண்டர் ஒரு கல்மீது அமர்ந்து, இரண்டு நாணயங்களை எடுத்து நீட்டினான். குறிகாரன் புன்னகைத்தான்; அவனிடம் அந்தப் புன்னகை மட்டுமே முதுமையடையாத ஒரே விஷயம் என்பதை எவராலும் கண்டுகொள்ள முடியும். அவன் லியாண்டரிடம் வாயை விரியத் திறக்குமாறு சொல்லி, அதனுள் திடீரெனத் துப்பிவிட்டுத் தனது வாயை அகலத் திறந்தான். லியாண்டர் எதிர்வினையாகக் குறிகாரனின்  வாய்க்குள் துப்பியதும், குறிகாரன் லியாண்டரின் இரு கன்னங்களிலுமாகத் துப்பி எச்சிலைப் பரப்பித் தேய்த்துவிட்டுப் பின் மழிக்கத் தொடங்கினான்.
‘துருக்கியர்கள் நாளை அல்லது அதற்கு மறுநாள் தாக்குவார்களா?” எனப் பாதி கிண்டலாகக் கேட்டான், லியாண்டர்.
“அதுபற்றி எனக்கு எந்த யோசனையும் இல்லையே .” குறிகாரனின் குரல் அவர்களைச் சுற்றிப் பெரும் தொகுப்பாக மிதந்தது.
“நல்லது, அப்படியென்றால் எந்த மாதிரியான ஒரு குறிகாரன் நீ?
“தெரிந்துகொள்ளுங்கள், இரண்டு வகையான குறிகாரர்கள் இருக்கின்றனர்.   பெருஞ்செலவு மற்றும் மலிவு. ஆனால், அதற்காக முதலாமவர் நல்லதென்றும் மற்றவர் மோசமென்றும் நினைத்துவிடாதீர்கள். அதுவல்ல கருத்து. முதலாமவர் இரகசியங்களை வேகமாகவும் மற்றவர் மெதுவாகவும் கையாள்கின்றனர்; ஆகவே அவர்களுக்கிடையில் வேறுபாடு இருக்கிறது. உதாரணத்துக்கு நான் ஒரு மலிவான குறிகாரன், ஏனென்றால், நான், அதிகபட்சம் நீங்கள் எதிர்பார்க்கும் நாளையையோ அல்லது அடுத்த ஆண்டினையோ பார்ப்பதில்லை. எதிர்காலத்துக்குள் வெகுதூரம் நுழைந்து பார்க்கிறேன்; இருநூறிலிருந்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஓநாய்கள் எப்படி அழைக்கப்படுமென்பதோடு, எந்தப் பேரரசு கவிழுமென்பதையும் என்னால் கூறிவிடமுடியும். இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளில் என்ன நிகழுமென்பதைத் தெரிந்துகொள்ளும் அவசியம் யாருக்கிருக்கிறது? யாருக்குமில்லை, எனக்குங்கூடத்தானில்லை. நானொன்றும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், வேறு சிலர் இருக்கிறார்கள், உதாரணத்துக்கு ட்யூப்ரோவ்நிக் நகரிலுள்ள பெருஞ்செலவுக்  குறிகாரர்கள், நாளை அல்லது ஒரு ஆண்டுக்குள் என்ன நடக்குமென்பதைக் கூறுகிறவர்கள்; ஒரு வழுக்கைத்தலை மனிதனுக்கு தொப்பி தேவைப்படுகிற மாதிரியில் எல்லோருக்கும் அதுதான் தேவைப்படுகிறது, அதுமட்டுமல்ல, அது போன்ற பொருளுக்கு விலையைக்கூடக் கேட்காமல் பன்றியின் இறக்கை கிடைக்குமென ஒயின் பீப்பாயைக் கொடுப்பது போல, கை நிறைய அள்ளிக் கொடுக்கிறீர்கள். இந்த இரண்டு வகையான குறிசொல்பவர்களுக்கிடையிலும் குறிசொல்லல் முறையிலும் பொதுவான எதுவுமே இல்லையென்றோ அவை ஒன்றுக்கொன்று முரண்பாடானவையென்றோ நினைத்துவிடாதீர்கள். உண்மையில் சொல்லப்போனால், அவை இரண்டுமே ஒரே குறிசொல்முறை தான்; அதனை, உட்பக்கம், வெளிப்பக்கம் என்று இருபக்கங்கள் கொண்ட காற்று, மழையின் ஊடாகக் கடக்கும்போது, வெளிப்பக்கம் நனைந்தும் உட்பக்கம் நனையாமலிருப்பதோடும் ஒப்பிடலாம். அதனால், ஒரு குறிகாரர் காற்றின் வெளிப்பக்கத்தை மட்டுமே காணும்போது, மற்ற குறிகாரர் உட்பக்கத்தை மட்டுமே காண்கிறார். இரண்டு பக்கத்தினையும் பார்ப்பவர் யாருமில்லை. அதனால் தான் முழுப்படத்தையும் உருவாக்குவதற்கு, உங்கள் காற்றின் சரியான பக்கத்தைச் சரிகையிட்டுத் தைப்பதற்கு, நீங்கள் குறைந்த பட்சம் இரண்டு குறிகாரர்களிடம் செல்ல வேண்டியிருக்கிறது.  ……..
“ அதுசரி, இப்போது நீ, என்னிடமிருந்து என்ன பெறப்போகிறாயென்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு மனிதன் என்பவன் கப்பலின் திசைகாட்டுங்கருவியைப் போன்றவன்; அவனுடைய அச்சில் நின்று வட்டமாகச் சுழன்று திரும்பும் போது உலகின் நான்கு பக்கங்களையும் பார்க்கிறான்; ஆனால், தலைக்கு மேலும் காலுக்குக் கீழுமிருப்பதை அவனுக்குக் காட்டப்படுவதில்லை. அவன் கவலைப்படுவதும் தெரிந்துகொள்ள விரும்புவதுமான அந்தத் துல்லியமான இரண்டு விஷயங்கள் எவையென்றும்  அவை எங்கிருக்கின்றனவென்றும் கேட்டால், அவனுக்குக் கீழேயிருக்கின்ற காதலும் அவன் தலைக்கு மேலாக இருக்கிற மரணமும் தான்.
”காதலில் பலவகைகள் இருக்கின்றன. சிலவற்றை முள்கரண்டி கொண்டு மட்டுமே குத்திப் பிய்த்து உண்ண முடியும்; சிலவற்றை சிப்பிகளைப் போலக் கையாலேயே எடுத்துத் தின்றுவிட முடியும். வேறு சில, தொண்டையில் சிக்கிக்கொள்ளாமலிருப்பதற்காக அவற்றைக் கத்திகொண்டு வெட்டியே தீர வேண்டும்; அது மட்டுமல்ல கரண்டியால் மட்டுமே உண்ணக்கூடியவகையில் சில பிசுபிசுப்பான திரவமாகவும் இருக்கின்றன. அல்லது அவை, ஆதம் பறித்த ஆப்பிளைப் போலப் பறித்தெடுக்கப்படுகின்றன.
மரணத்தைப் பொறுத்தவரையில், இறைவானத்தில் அது, ஒரு பாம்பினைப் போல நம்முடைய மூலாதார மரத்தில் ஏறவும் இறங்கவும் முடியும். நீ பிறப்பதற்கு முன்பிருந்தே கூட, அது, நூற்றாண்டுக் கணக்காக உனக்காகப் புதர் மறைவில் காத்துக்கிடக்க முடியும். அது உனக்காக மீண்டும் திரும்பி வரலாம். கண்ணுக்கெட்டாத எதிர்காலத்தின் வெகு தூரத்திலிருந்து கூட, அது உன்னைச் சந்திக்க வரலாம். உனக்குத் தெரியாத, நீ பார்க்கவும் முடியாத, யாரோ ஒருவன், உன்னைப்போன்ற அதே நிலையிலிருந்துகொண்டு,  அவனது மரணத்தை உன் மீது கவுதாரி மீது பாயும் வேட்டைநாயைப் போலச் செலுத்தவும், அளக்கக்கூடமுடியாத வெகு தொலைவிலிருந்து உன்னைப் பிடிக்கச் சொல்லி அனுப்பவும் முடியும். ……
‘அவற்றையெல்லாம் நாம் வேறுபுறம் ஒதுக்கிவைப்போம். உனக்கு ஒரு அழகான கழுத்து இருக்கிறது. இந்த மாதிரியான கழுத்து ஒரு பெண்ணின் கைகளையும் ஈர்க்கிறது; போர்வீரனின் வளைவாளினையும் ஈர்க்கிறது. உண்மையில் புதையரணக் காலணிச் சீருடையில் நிற்கும் ஒரு போர்வீரன் என் கண்களுக்குத் தெரிகிறான். பொன்னிறக் குஞ்சம் கொண்ட வளைவாள் கொண்டு மழித்துக்கொள்கிறான்; அதே வளைவாளால்தான் அவன் உன் தலையை வெட்டியெறியப்போகிறான். ஏனென்றால், பார், நான் உன் தலையையும் தெளிவாகக் காண்கிறேன். அது ஞானஸ்நானம் செய்விக்கும் புனித ஜானின் தலையைப் போல ஒரு தட்டின் மீது இருக்கிறது. இதற்கெல்லாம், ஒரு பெண்தான் காரணம் … ஆனாலும் கவலைப்படாதே, அது உடனேயே அல்லது சீக்கிரத்திலேயே நடக்கப்போவதில்லை. அதற்குள் பெருமளவிலான  காலமும் அதனுள் சிறப்பாகக் கருக்கொண்ட பல வருடங்களும் கடந்துவிடும், எனது அழகிய அன்னமே, அதற்கிடையில் நீ உன் கழுத்தைப் பெண்ணிடமிருந்தும் வளைவாளிடமிருந்தும் காத்துக்கொள், கூடவே நன்கு கழுவிக்கொள் …..        
ஆகவே, முக மழிப்பும் குறி கேட்டலும் முடிவுக்கு வந்தன. அவன் அங்கிருந்து அகலவும், அந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு லியாண்டரின் பின்புறம் நிகழ்ந்தது; அந்தக் குறிகாரனின் வலிமை மிகுந்த குரலும் ஓய்ந்தது. ஒரு கந்தைத்துணியின் மீது ஒட்டிக்கொள்வதைப் போல, பனி அப்படியான குரலின் மீதும் கூட ஒட்டிக்கொள்ளுமென லியாண்டர் நினைத்தான். அத்துடன், தலைக்கு மேலான வெளிக்குளிரிலும் உள்ளுக்குள்ளான பயத்திலும் அவன் நடுக்கம்கொண்டான்.
அந்தக் குறியுரைத்தல் லியாண்டரைத் தொல்லைப்படுத்தியது. வளைவாள் கொள்ளையர்கள் குறித்து அச்சங்கொள்வது, முன்னெப்போதையும் விட இயல்பானதாகத் தோன்றியது, அவனுக்கு. அவனது இதயம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு நகர்ந்தது. அச்சம் அவனது கனவுகளைத் தொற்றும்தன்மை மிக்கதாக்கியது; பசு ஒன்று லியாண்டரின் பல்லை நாக்கால் தடவி நக்கினால் (கனவில் அவன் அதைப் பார்த்துச் சிரித்ததால் அது அப்படி நக்கியது) அந்த நாளில் அவன் யாரையெல்லாம் தொட்டானோ, அவர்கள் எல்லோரும், காகம் ஒன்று அவர்களின் பற்களைக் கொத்துவது போன்ற கனவுகண்டனர்.
ஆனால், அந்த நேரத்தில் அவன் வளைவாள்கார பயத்தில் கடுமையாகத் தத்தளித்தபோது, அவனைச் சந்தித்திருக்கவில்லை. வளைவாள்காரனுக்கு முன்னதாகவே, பதின்வயதுப் பெண் ஒருவளை, அவன் சந்தித்தான். `ஓரித்` நகரத்தில் குளிர்காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தபோது, அவன், அவனது பயத்தினை மிகைப்படுத்திக்கொண்டதாகவும் அவனது உள்ளூக்க எழுச்சித் துடிப்பினை இழந்துவிட்டதாகவும், அவனது இரகசியப் பண்பொழுக்கத்தில் முன்னேற்றமின்றிப் பின்தங்குவதாகவும் அவன் உணர்ந்தான். ஒருநாள் மாலையில் சான்டிரின் வலியதொரு ஒலியினை அவன் கேட்டான். முன்பு போல மாறுபாட்டுணர்வுக்குப் பதிலாக, அவனே விரும்பிக் கேட்கத் தொடங்கிவிட்டான். அதுவே அவனுக்கு ஒரு அடி பின்னோக்கிய நகர்வாகவே தோன்றியது.  ஆண் அல்லாமல் ஒரு பெண்தான் இசைத்துக்கொண்டிருந்தாள்;  அந்த வேறுபாடு எந்த அடிப்படையில்,  எப்படித் தோன்றியதென அவனுக்குத் தெரியாதிருந்த போதிலும், அது லியாண்டரின் கவனத்துக்குத் தப்பவில்லை. கேட்கக் கேட்க, இன்னுமொரு விஷயத்தையும் கூடுதலாக அவன் கவனித்தான். இசையின் இடைவெளிகளில், விரல்கள் நரம்புகளைத் தாண்டவேண்டிய இடங்களில் சான்டிர் அமைதியாகி, மீண்டும் சில பல நொடிகளுக்குப் பின் உயிர்பெற்றெழும்; அதாவது அங்கே ஒரு பெருமூச்சு இழுத்து நிறுத்தப்பட்டுக் கடத்தப்படுவதைப் போல. அது என்னவாக இருக்குமென்பதை லியாண்டர் புரிந்துகொண்டு, மறுநாள், சான்டிர் இசைத்துக்கொண்டிருந்த பதின் பெண்ணைப் பார்த்தபோது அவளிடம் பேசிய முதல் விஷயம் : ”நீ இசைத்ததை நான் கேட்டேன். உன்னுடைய இடது கையில் ஒருவிரல் இல்லை; நான்காவது விரல். அதை நீ இழப்பதற்கு முன்பாகவே சான்டிர் இசைக்கக் கற்றிருக்கவேண்டும். சரிதானா?”
“அது சரிதான்’’ என்றாள், அந்தப் பதின் பெண். “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாபங்களுக்குப் பரிகாரம் செய்ய, பழுக்கச் சிவந்த நரம்புகளுள்ள உலோக சான்டிரை இசைக்கச் செய்துவிட்டனர். அன்றிலிருந்து, அந்த நினைவினை என்னுள் மீண்டும் மீண்டும் எழுப்பிக்கொள்வதற்காக, நான் இப்படித்தான் இசைத்துக்கொண்டிருக்கிறேன்; ஆனால், நீங்கள் அதைக் கேட்க வேண்டியதில்லையே……..”
உடனேயே லியாண்டர், அவனது சொந்த வாழ்க்கை முறையே கூட அவளது துயரங்களை மறக்க உதவுமேயென நினைத்தான். பிறர் சொல்வதற்குக் காதுகொடுக்காமல் வாழ்க்கையை வேகமாகக்கொண்டுசெல்வதெப்படியென்று அவன், அவளுக்கு விளக்க முற்பட்டான்; இரவினைத் தொடரும் இரவுகளாக, அவர்கள் ஏரிக்கரையில் உலவுகையில்,  செயல்வேக உள்ளெழுச்சியினை மறைப்பதென்ற அவனது அசாதாரணமான பண்பொழுக்க நடைமுறையினை அவளுக்குக் கற்பிக்க முயற்சித்தான். அது, விரைந்து கற்றுக்கொள்பவளான டெஸ்பினாவை, அதுதான் அவளது பெயர், மாற்றியமைக்கவே, விரைவிலேயே, அவளது துயரம் மிகுந்த, பழைய பழுக்கக் காய்ச்சிய நரம்புகளுள்ள சான்டிர் நாட்களெல்லாம் மறந்துபோயின. வணிகர்களின் செய்கைகளினால் மனம் வெறுத்துப்போன லியாண்டர், பயத்தினாலும், தேவையான பணத்தைச் சம்பாதித்திருந்ததாலும், வணிகர்களைவிட்டு விலகியதைப்போலவே, அவளும் சான்டிர் கருவியினை என்றென்றைக்குமாக முற்று முழுதாகத் தலைமுழுகினாள். உணவு உண்பதில் அவனுடைய தனி வேகத்தை மெல்லமெல்ல எட்டி, கைக்கொண்ட டெஸ்பினா, அவனது பேச்சு மற்றும் நடை அசைவுகளைப் பிரதிபலிப்பதிலும் வெற்றிகண்டாள். கண்களை அவன் பயன்படுத்துகிற, மயக்கம்தருகிற, அதே வேகத்தில் பயன்படுத்த அவள் பயிற்சி மேற்கொள்ள, மேற்கொள்ள,   ஒவ்வொரு நாளையும் இரண்டிரண்டு நாட்களாகத் தாவுவதுபோல், அவளுக்கு அவ்வப்போது தோன்றியது. ஆனால், இந்தப் பாடங்கள் மற்றும் துளைக்கும் கண்களைத் தவிர்க்க மேற்கொண்ட ஏரிக்கரை உலாவல்கள் மற்றும் அவர்களின் செயல்வேக எழுச்சியினை ஒரு இரகசியம் போல மறைக்கும் செயல்களுக்கிடையில், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மெல்ல நெருங்கினர். சிலநேரங்களில் அவள், அவளது மோதிரத்தின் பளிச் மின்னலை அவன் கண்களில் செலுத்த, அவளைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவன்,  பாவம் செய்யும் சில பெண்களின் சுவரோவியங்களைப் போல், அவளது மார்பில் இரண்டு முலைக்காம்புகளுக்கும் பதிலாக பெண்பன்றியின் வால் சுருளைக் கொண்டிருப்பாளோவென, நினைத்துக்கொண்டிருப்பான். அந்த நேரத்தில், லியாண்டருக்கு, பெண்களைப்பற்றி மட்டுமல்ல, தன்னைப்பற்றியும் கூட எதுவுமே தெரிந்திருக்கவில்லை. பெண்ணை மதுவைப்போலப் பயன்படுத்தவேண்டுமென்று மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ‘’கோடையில் ஒரு மாதிரியிலும் குளிர் காலத்தில் வேறு மாதிரியிலும்; வலுவான மதுவகைகள் கோடைக் கோப்பைகளிலும், மென்வகைமது, குளிர்காலக் கோப்பைகளிலும் நிரப்பப்படவேண்டுமென்பதை அவன் அறிந்திருந்தான். குடும்ப உரையாடல்களிலிருந்து பெண்களைப்பற்றி, அவன் தெரிந்துகொண்டதெல்லாம் அவ்வளவுதானென்றபோதிலும், ஒருவிரல் இழந்த அந்தப் பதின்பெண் அவனைக் கவர்ந்தாள். காலத்தின் ஏதோ ஒரு மூலையில் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்த, அவனுடைய கட்டுக்கதைவகையிலான ‘’வெற்றுக் கதை’’ லியாண்டர் எனக் கூவிக்கொண்டு, இறுதியாக அவனுக்குள் இறங்கத் தொடங்கியது.                  
ட்ரின் ஆறு, ஓரித் ஏரி வழியாகத் தன்னைப் பாதியாகக் குறைத்துக்கொண்டு பாய்கிறது. ஒரு நாள் மாலையில் டெஸ்பினாவும் லியாண்டரும் மீன்பிடி வலை ஒன்றைத் தூக்கி, படகில் போட்டுக்கொண்டு ஏரிக்குள் துடுப்பிட்டுக் கடந்து,  ஆற்றுக்குள் செல்ல, அது, அவர்களை விடிகாலைக் கருக்கலில் கொண்டுபோய் எதிர்க்கரையில் சேர்த்தது. அன்று இரவு, அந்த இரட்டைத் தண்ணீரில் மிதந்த படகினுள் மீன்பிடிவலையே மறைப்புக்கவசமாக, அவர்கள் முதன்முதலாகச் சேர்ந்து படுத்தனர்.       
எதிர்காலத்தில் நடக்கவிருப்பது அனைத்தையும் பலமணி நேரத்திற்கு முன்னதாகவே லியாண்டர் அறிவானென்பதும், அவனது எதிர்பார்ப்புகள் முடிந்த கணத்திலேயே, அவனுடைய தோழியைக் காட்டிலும் அவன் விரைவானவன் என்பதால் அவர்கள் ஒருவரையொருவர் தொடுவதைக்கூட அவர்களால் சமாளிக்க இயலவில்லையென்பதும் வெளிப்பட்டது. அவனது   இயக்கச் சீரமைவு கூட அவளை விடவும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கவே, அவனது இரகசியப் பண்பொழுக்கத்தின் அடித்தளத்தில் காத்துக்கிடந்த பயங்கர விதியோடு முதன் முதலாக முரண்பாட்டினை எதிர்கொண்டான். பிற்காலத்திலும் கூட, அவர்களால் ஒருவருக்கொருவர் இணக்கமாகிக்கொள்ள இயலாமற் போனதோடு, அதைத் தொடர்ந்த இரவுகளில் அவன் ஏரிக்குள்ளும், ஆற்றின் போக்கிலும்  மீன்கருத் திரள்களைப் போல மிதந்துகொண்டிருந்தாலும் அவனுக்குக் கீழிருந்த பெண்மையை நிறைப்பதற்குப் பதிலாக,  வலைக்குள் மீன்களை நிறைத்துக்கொண்டிருந்தான்.
கடைசி மாலையில் டெஸ்பினா, இரண்டு மெழுகுதிரிகளை துறவி நாவ்ம் மடாலயத்தில் வாங்கினாள்; ஒன்றை லியாண்டரிடம் கொடுத்துவிட்டு, இன்னொன்றினை அதன் சிறிய குவளையுடன் தன்னிடமே வைத்துக்கொண்டாள். வழக்கம்போல், அவர்கள் ஏரியின் வழியாக ஆற்றுக்குள் சென்றதும் லியாண்டர் மேலும் ஒருமுறை, அதுவே கடைசித் தடவையென முயற்சித்தான்; அதுவும் தோல்வியில் முடிந்த போது, (ஏனெனில் அவன்தான் அவளைத் தொடும் முன்னரே சிதறவிட்டிருந்தானே!) அவன் மெழுகுதிரியாலேயே அவளைப் பெண்மை நலமிழக்கச் செய்ய, அவள் அனுமதித்தாள். பின்னர், விடிவதற்குச் சிறிது முன்னர், அவள் துடுப்பினை எடுத்து,  நீர்வழி மூலம் மட்டுமே செல்லமுடிகிற செர்பிய முடியரசர்களின் மடலாயமான நமது ஜாஹும் மாதா முன்பாகப் படகினைக் கொண்டுபோய் நிறுத்தினாள். அங்கிருந்து ட்ரின் ஆற்றுக்குள் இறங்கத் துடுப்பினை வலிக்கும் முன்பாக, அவளிடமிருந்த இன்னொரு மெழுகுதிரியை ஏற்றி, லியாண்டரிடம் கொடுத்து, அவனை முத்தமிட்டு, மடத்திலேயே இறக்கிவிட்டாள்.
முற்றிலுமாகச் சோர்ந்து, மனம்வெறுத்துப்போன இருவரும், என்றென்றைக்குமாகப் பிரிந்தனர்; தொடுதல் அவர்களுக்கு முடியாத ஒன்றெனத் தங்களைத் தாங்களாகவே சமாதானப்படுத்திக்கொண்டனர். கையில் மெழுகுதிரியுடன் லியாண்டர் கரையில் இறக்கிவிடப்பட்டபோது, மடாலயத்தில் காலைச் சேவை அநேகமாக முடிந்திருந்தது. அவன் தேவாலயத்துக்குள் நுழையும் முன்பாகவே, மடாலயத்தில் புனிதச் சின்னம் ஒன்றினைப் புதைப்பதற்கான சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருந்ததை அவன் கவனித்தான். பெலகோனியாவைச் சேர்ந்த அது மிகவும் பழமையானது; கல்லறைக்குள் அதை வைத்து ஒயினை அதன் மீது ஊற்றுவதற்கு முன்பாகவே, லியாண்டர், அந்தப் புனித ஓவியத்தை ஒருவழியாகப் பார்த்துவிட்டான். கன்னி மாதா அவளது கைக்குழந்தையை அணைத்துக்கொண்டிருக்க, அவர்கள் அருகில் மரம் சீவும் பாய்ச்சு உளியான வாய்ச்சியும் கையுமாக ஒரு மனிதர், உண்மையில் அது திருமுழுக்காட்டும் புனித ஜான் தான், நின்று கொண்டிருந்தார். குழந்தையின் காலணி அதன் சின்னஞ்சிறு பாதத்திலிருந்தும் கழன்று விழுந்திருக்க, அதனை அந்தப் பெண்ணின் அருகில் நின்றிருந்த ஆண் கையிலெடுத்து மீண்டும் குழந்தையின் காலில் அணிவிக்க, அதன் வாரைக் கழற்றிப் பிடித்தவாறிருந்தார்; திடீர்த் தொடுகையை உணர்ந்த குழந்தை, அம்மாவின் மார்பகக் காம்பினைக் கடிக்க, என்ன நிகழ்ந்திருக்குமென உணர்ந்த அவள் காலணியை மாட்டும் மனிதன் மீது பார்வையைச் செலுத்தியவாறிருந்தாள்.
இப்படியாக, வட்டம் முடிவுறும்படியாக அந்த மனிதன், அவனது கை, குழந்தையின் கால் பாதம், பெண்ணின் மார்பகம் மற்றும் அந்த மனிதன் மீதே திரும்பும் அவளின் பார்வை என ஒரு இடையறாக் கோடு, இடைவெளியற்று ஓடியது. அந்தப் புனித ஓவியம் மண்ணில் புதைக்கப்படும் முன்னர், அந்தக் கோட்டினைப் பார்த்துவிட்ட லியாண்டர், அது அவன் கற்றிருந்த ஒரே எழுத்தான தீற்றா, `o` வடிவத்தினைப் போலத் தோன்றியதும், “அப்படியானால், அந்தத் தொடுதலும் இயலுகிற ஒன்று தானா!” என நினைத்தான்.
பின்னர், அவன் மடாலயத்துக்குள் நுழைந்து, துறவியானான்.
துறவியாவதற்கொன்றும் அவன் நேரடியாக அனுமதிக்கப்பட்டுவிடவில்லை. அது ஏனென்றால், முதல் காரணம், அவன் தாடியில்லாமலிருந்தான். அத்துடன், அவன் எங்கிருந்து வந்திருக்கிறானென்றும் அவனது முன்னோர் கிழக்கு அல்லது மேற்கத்திய கிறித்துவத்தைச் சேர்ந்தவர்களல்லவென்றும், ஆனால், அவர்களுடைய தந்தைத் தலைமுறையினரின் இறை விசுவாசம் போகோமில்ஸ் அல்லது பண்டைக் காலத்து பாட்டரேன்ஸ் போன்றதெனத் தெரிவித்தபோது, சகோதரப்பணிக்கு அவனைச் சேர்த்துக்கொள்ளும் முன்பாக,  புதிதாகச் சமய மாற்றம் பெற்ற ஒருவருக்கு இணையாகத் தொடக்கநிலைப் பயிற்சியாளராகப் பல வருடங்களுக்குச் சேவையாற்றுமாறு பணிக்கத் திருவுளங்கொண்டனர். அக்காலகட்டத்தில், அவன் புத்தகங்கள் நிரம்பிய மர மணிக்கூண்டு அறைக்குள் தன்னை நிலையாகப் பொருத்திக்கொண்டான். மணியடிக்கும் கயிற்று வடச்சுருள்களின் மேல்தான், அவன் உறங்கினான்; அவனுக்கடியில் உருண்டுகொண்டிருந்த கயிற்றுவடங்கள், இரவுகளில் காற்று மணிகளை அசைத்தடிக்கும்போது அவனை எழுப்ப, போதையேறிப்போன ஏரி, மடாலயத்தின் கதவுகளில் மிக்க வலிமையுடன் கூழாங்கற்களை எறிவதை, அவன் கேட்டான். ஆனால், லியாண்டருக்குள் அதன் பின்பு பயமென்று எதுவுமே இல்லை. டெஸ்பினாவோடு அவனுக்கு நேர்ந்த அனுபவம், வளைவாள்காரர்கள் மற்றும் திகில் கனவுகளையெல்லாம் ஏதோ சிறுபிள்ளை விளையாட்டுப் போல நினைக்கச்செய்துவிட்டது.
மடாலயத்தின் பக்கத்தில் காற்று ஒதுக்கமான ஒரு இடத்தில், புனிதச் சின்னங்களின் இடுகாடு ஒன்றை, அவன் சிறிதாக அமைத்து, அதற்குள் பூச்செடிகளை நட்டு, பாறைக்கற்களால் சுற்றுக்கட்டு அமைத்து, அதற்கொரு வாயிலும் அமைத்தபோது, “வயிற்றுக்கில்லாத அப்பனுக்குப் பிறந்த பயல், ஒருநாளும் தேறமாட்டான்,” என, அவனைப்பற்றி, துறவிகள் சொன்னார்கள். மிகவும் பிந்திய இரவு நேரங்களில், இருட்டினை விரட்டுவதற்காக, அவன் ஒரு சிறிய மெழுகுதிரியினை ஏற்றிச் சிறிய சாளரத்தில் வைப்பான்; நகலெடுக்கும் துறவிகளுக்கான இறகுகளைச் சீவுவதோடு, பழச்சாறு மற்றும் வெடிமருந்துத் தூள் கலந்து அவர்களுக்கான எழுது மையும் தயாரிப்பான். பின்னர், மெழுகுதிரியில் எச்சில் துப்பி அணைத்துவிட்டு, மடாலயத்திற்குள் அவன் அனுமதிக்கப்படப் போகும் நாளைக் குறித்தும், எழுதவும் மணிக்கூண்டுக்குள் வரிசை, வரிசையாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் படிக்கவும் தெரிந்துகொள்வது பற்றியும், நடு இரவுச் சேவை முடிகிற நேரத்தில், அவனுக்கு மிகவும் கடினமானதும், விரைவில் கிடைக்காததுமான தூக்கத்தில் அவன் முழுமையாக ஆழும்வரையில், இருட்டுக்குள் கனவுகண்டுகொண்டிருப்பான்.                



 ஜூலை 2017, உன்னதம் மிலோராட் பாவிச் சிறப்பிதழில் வெளியாகியுள்ளது. 

             .                   
      


                                       


மாதுளை - யசுநாரி கவாபட்டா - POMOGRANATE - YASUNARI KAWABATTA

மாதுளை : யசுநாரி கவாபட்டா Yasunari Kawabatta ஆங்கிலம் : எட்வர்டு ஜி. சீய்டன்ஸ்டிக்கர் Edward G. Seidensticker 

தமிழில் : ச.ஆறுமுகம்

download (90)
இரவு அடித்த பெருங்காற்றில் மாதுளை மரத்தின் இலைகள் அனைத்தும் ஆடைகளைப் போல் உருவப்பட்டிருந்தன. 
இலைகள் அடிப்பாதத்தைச் சுற்றி வட்டமாகக் கிடந்தன.
கிமிகோ, காலையில் அந்த மரத்தை நிர்வாணமாகப் பார்த்ததாக அதிர்ந்தாள்; வட்டத்தின் குறையற்ற முழுமையைக் கண்டு வியந்தாள். காற்று அந்த வட்டத்தைக் குலைத்திருக்குமென அவள் எதிர்பார்த்திருப்பாளாக இருக்கலாம்.
மிகவும் அழகான மாதுளம்பழம் ஒன்று மரத்திலேயே விடப்பட்டிருந்தது.
“அம்மா, இங்கு வந்து பாரேன்,” அவள் அம்மாவை அழைத்தாள்
“மறந்து விட்டிருக்கிறேன்” அம்மா, மரத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குத் திரும்பினாள்.
அது கிமிகோவை, அவர்களுடைய தனிமை பற்றிச் சிந்திக்கவைத்தது. மாதுளம் பழமும் தாழ்வாரத்திலிருந்து பார்க்கும்போது தனிமையாகவும் மறக்கப்பட்டுவிட்ட ஒன்றாகவும் தோன்றியது.
ஒரு இரண்டு வாரம் போல இருக்கும், அவளுடைய வீட்டுக்கு வந்திருந்த ஏழு வயது மருமகன், உடனடியாகவே மாதுளம் பழங்களைக் கண்டுவிட்டான், அவ்வளவுதான், மரத்தின் மேலே தொற்றிப்பிடித்து ஏறிவிட்டான். கிமிகோவுக்கு வாழ்க்கையின் முன்னால், உயிர்ப்புடன் நிற்பது போலிருந்தது.
“மேலே ஒன்று, பெரிதாகக் கிடக்கு, பாரு,” அவள் தாழ்வாரத்திலிருந்து கூவினாள்.
“அது சரி. ஆனால், அதைப் பறித்துவிட்டு, நான் கீழே இறங்க முடியாதே.“
அது உண்மை. இரண்டு கைகளிலும் மாதுளைகளை வைத்துக்கொண்டு, இறங்குவதென்பது எளிதில்லைதான். கிமிகோ புன்னகைத்தாள். அவன் மனதுக்கு நெருக்கமானவன்.
வீட்டுக்கு, அவன் வருகிறவரையில், அவர்கள் மாதுளையை மறந்துதான் விட்டிருந்தார்கள்; மீண்டும் இவ்வளவுநேரம் வரையில் கூட மறந்துதான் இருந்தார்கள்.
அதன் பின்னர் பழம், இலைகளுக்கிடையே மறைந்துபோயிருந்தது. இப்போது, வானத்திற்குச் சவால்விட்டுக்கொண்டு தெள்ளத்தெளிவாகத் தொங்குகிறது.
பழத்திலும் அடிப்பாதத்திலிருந்த இலைவட்டத்திலும் உயிர் இருந்தது. கிமிகோ மூங்கில் கழி ஒன்றை எடுத்துவந்து, பழத்தை அடித்து வீழ்த்தினாள்.
அது நன்கு பழுத்து, உள்ளிருக்கும் விதைகள் தாம் அதனை வெடிக்கச்செய்தது போலத் தோன்றியது. கிமிகோ அதைத் தாழ்வாரத்தில் வைத்தபோது, விதைகள் வெயிலில் மினுமினுத்தன. வெயில், விதைகளுக்குள் ஊடுருவிச்செல்ல முயற்சிப்பதாகத் தோன்றியது.
ஏதோ ஒருவகையில் அவள் தவறுசெய்துவிட்டதாக, அவளுக்குள் தோன்றியது.
பத்து மணி வாக்கில், அவள் மாடியில் தையல் வேலையிலிருந்தபோது , கெய்கிச்சியின் குரலை, அவள் கேட்டாள். கதவு தாழிடப்படாமலிருந்தாலும், அவன் தோட்டத்துக்குச் சுற்றுவழியில் வந்ததாகத் தோன்றியது. அவன் குரலில் அவசரம் தெரிந்தது.
”கிமிகோ, கிமிகோ!” அம்மா கூப்பிட்டாள். “கெய்கிச்சி வந்திருக்கிறான்.”
கிமிகோ நூலிலிருந்தும் ஊசியை உருவினாள். அதனை ஊசிமெத்தையில் குத்தி நிறுத்தினாள்.
“ நீ போவதற்கு முன்பு உன்னை ஒருமுறை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று கிமிகோ சொல்லிக்கொண்டிருந்தாள். “கெய்கிச்சி, போருக்குப் போய்க்கொண்டிருக்கிறாய். இருந்தாலும், யாரும் கூப்பிடாமல் நாங்களாக வந்து உன்னைப் பார்க்கவும் முடியாது. நீயும் வரவில்லை. இன்று நீயாகவே வந்துவிட்டாய். உனக்கு நல்ல மனசு.”
மதியம் சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு அம்மா எவ்வளவோ சொன்னாள்; ஆனால், அவன் அவசரப்பட்டான்.
“நல்லது, ஒரு மாதுளம் பழமாவது சாப்பிடு. நம்ம வீட்டிலேயே விளைந்தது.” அவள் கிமிகோவை மீண்டும் அழைத்தாள்.
அவள் இறங்கிவரும் வரையில் காத்திருப்பதற்கு, அது எவ்வளவோ மேலென்பதைப் போல, அவன் அவளைக் கண்களாலேயே வரவேற்றான். அவள் படிக்கட்டிலேயே நின்றுகொண்டாள்.
அவன் கண்களுக்குள் ஏதோ ஒன்று வெதுவெதுப்பாக நிறைவது போலத் தோன்றியது. அப்படியே, அவன் கைதவறி, மாதுளை கீழே விழுந்தது.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முறுவலித்தார்கள்.
தான் புன்னகைத்துக்கொண்டிருப்பதாக, அவள் உணர்ந்தபோது, வெட்கத்தில் சிவந்தாள். கெய்கிச்சி தாழ்வாரத்திலிருந்தும் எழுந்தான்.
“ உடம்பைப் பார்த்துக்கொள், கிமிகோ.”
‘நீயும் தான், நன்றாகப் பார்த்துக்கொள்.”
அவன் அதற்குள்ளாகவே எழுந்து, அந்தப் பக்கமாகத் திரும்பி, அவளிடம் கையசைத்து விடைபெற்றுக்கொண்டிருந்தான்.
அவன் சென்ற பிறகு, கிமிகோ தோட்டத்துக் கதவினை ஏறிட்டுப் பார்த்தாள்.
”அவனுக்கு அவ்வளவு அவசரம் போல,” என்றாள், அம்மா. “ ம், எவ்வளவு அழகான ஒரு மாதுளம்பழம்.”
அவன், அதைத் தாழ்வாரத்திலேயே வைத்துவிட்டுப் போயிருந்தான்.
அவன் கண்களுக்குள் ஏதோ ஒன்று வெதுவெதுப்பாக நிறையும் போதே, பழத்தை இரண்டாகப் பிளக்கத் தொடங்கிய நிலையிலேயே, அவன் அதைத் தவறவிட்டிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. அவன் அதனை முற்றாக, இரண்டாகப் பிளந்துவிடவில்லை. விதைகள் மேலே தெரிய அது, தாழ்வாரத்தில் கிடந்தது.
அம்மா, அதனை அடுக்களைக்கு எடுத்துச் சென்று கழுவித் துடைத்து, கிமிகோவிடம் கொடுத்தாள்.
கிமிகோ முகம் சுழித்து ஒரு அடி பின்வாங்கிப் பின், மீண்டுமொரு முறை முகம் சிவந்து, சிறிது குழப்பத்துடனேயே அதைக் கையிலெடுத்தாள்.
கெய்கிச்சி அதிலிருந்து ஒன்றிரண்டு விதைகளை எடுத்திருப்பான் போலென அவளுக்குத் தோன்றியது.
அம்மா முன்பாக, அதைச் சாப்பிட மறுப்பது கிமிகோவுக்கு என்னவோ போலத் தோன்றியிருக்கவேண்டும். அவள் விருப்பமற்று, அதனுள் சிறிது கடித்தாள். புளிப்பு அவள் வாய்க்குள் பரவியது. அது, அவளுக்குள் அடிவரைக்கும் துளைத்து இறங்குவதாக அவள் ஒரு வருத்தமான மகிழ்ச்சியை உணர்ந்தாள்.
அம்மா, அங்கு ஆர்வமில்லாமல், வெறுமனேதான் நின்றுகொண்டிருந்தாள்.
அம்மா கண்ணாடி முன் சென்று அமர்ந்தாள். “ என் தலையைத் தான் பாரேன், கிமிகோ, இந்தப் பரட்டைத்துடைப்பத் தலையோடுதான் நான் கெய்கிச்சியை வழியனுப்பியிருக்கிறேன்.”
தலை வாரும் ஒலி கிமிகோவின் காதில் விழுந்தது.
”உன் அப்பா இறந்தபோது,” அம்மா மெல்லிய குரலில் சொன்னாள், “என் தலையை வாருவதற்குப் பயந்தேன். தலை வாரத் தொடங்கும்போது, நான் என்னசெய்துகொண்டிருக்கிறேனென்பதையே மறந்துவிடுவேன். தன்னுணர்வுக்கு வரும்போது, நான் தலைவாரி முடிக்கட்டுமென்று உன் அப்பா காத்திருந்தது போலத் தோன்றும்.”
images (66)
அப்பா, சாப்பிட்டுவிட்டுத் தட்டில் மீதி வைத்திருப்பதை அம்மா வழக்கமாக உண்பதை கிமிகோ பார்த்திருக்கிறாள்.
அவளை ஏதோ ஒன்று உள்ளிழுப்பதாக, அவளுக்கு அழவேண்டும்போல் தோன்றச்செய்கிற ஒரு மகிழ்ச்சியினை உணர்ந்தாள்.
மாதுளையைத் தூர எறிவதற்கு மனமில்லாமல், அம்மா அவளிடம் அதனைக் கொடுத்திருக்கலாம். பொருட்களை வீணாகத் தூக்கியெறியாமலிருப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. அதனாலேயே அவள் அதை அவளுக்குக் கொடுத்திருப்பாள்.
கிமிகோ, அவளுடைய தனிப்பட்ட மகிழ்ச்சியினாலேயே, அம்மாவின் முன்பாக, வெட்கமாக உணர்ந்தாள்.
கெய்கிச்சி அறிந்திருந்த வழியனுப்புகைகளுக்கெல்லாம் மேலானதாக, இது அமைந்துவிட்டதாகவும், அவன் திரும்பிவருவதற்கு எவ்வளவு நீண்ட காலமானாலும் அவளால் காத்திருக்கமுடியுமென்றும் அவள் நினைத்தாள்.
அவள் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். அம்மா அமர்ந்திருந்த கண்ணாடிக்கு அப்பால் காகிதத் தோரணங்கள் மீது வெயில் வீற்றிருந்தது.
இருந்தாலும், எதனாலோ, அவள் மடியிலிருந்த மாதுளையை எடுத்துக் கடிக்கப் பயந்தாள்.
*****
ஹோவர்ட் ஹிப்பெட் தொகுத்த சமகால ஜப்பானிய இலக்கியம் (நியூயார்க் : A.A.Knopf, 1977) பக்கம் 293 – 295.
http://afe.easia.columbia.edu/special/japan_1950_kawabata.htm 
மலைகள் இணைய இதழ் எண் 125 ஜூலை 03, 2017 இல் வெளியானது.