Sunday, 2 July 2017

ருசியச் சிறுகதை - பெருந்தலைக் காதல் - மாக்சிம் கார்க்கி - Fat Faced Passion

பெருந்தலைக் காதல் ( FAT FACED PASSION ) 

ருஷ்ய மொழி : மாக்சிம் கார்க்கி MAXIM GORKY  ஆங்கிலம் வழி தமிழில் ச.ஆறுமுகம்Image result for maxim gorkyஅது, கோடைகாலப் புழுக்கமான இரவு. குடிகாரப் பெண் ஒருத்தி சேற்றுக் குட்டைக்குள் முழங்கால் மூழ்க, இறங்கி நின்று விரசப்பாடல் ஒன்றின் இராகத்துக்கு உடலசைத்து ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்தவழியே வருகிற அந்நியன், இருபத்தொரு வயது லியோனிட், அந்தப்பெண் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கிவிடுவாளோவெனப் பயந்து, அவளைக் குட்டையைவிட்டு வெளியே இழுக்கிறான். அவளோ, அந்த அந்நியனை முறைத்து விரட்டி, உதவி,உதவியெனக் கூச்சலிட்டு, மீண்டும் குட்டைக்குள் செல்ல விரைகிறாள். இரவுக் காவலன் அங்கு வந்து, அந்தப் பெண் உள்ளூர் மாஷா தான் எனக் கண்டுகொள்கிறான். கால்கள் ஊனமுற்ற ஒரு மகனிருக்கிற அவள் தினமும், ஒருநாள் இரவு கூடத் தவறாமல் இப்படித்தான் பிரச்சினை செய்கிறாள். இருவருமாகச் சேர்ந்து அவளை வீட்டில்கொண்டுபோய்ச் சேர்த்துவிடலாமென லியோனிட் யோசனை சொல்கிறான். அவனுக்கு விருப்பமானால், அவன் அப்படிச் செய்துகொள்ளலாமென்றும், ஆனால், அதற்குமுன் அவள் முகத்தை ஒருமுறை பார்த்துவிடுமாறும் அறிவுரை சொல்லிவிட்டு, அந்த இரவுக்காவலன் இடத்தை விட்டகன்று செல்கிறான்.
மீண்டும் மாஷாவைத் தண்ணீரிலிருந்து இழுத்துக்கொணர்ந்த லியோனிட் இம்முறை அவளது முகத்தைப் பார்க்கிறான் – தழும்புகள் நிறைந்து, விகாரமாகச் சிதைந்த ஒரு முகம். லியோனிட் அவளை, அவளுடைய தூய்மையற்ற அடித்தளக் குடியிருப்பில்லத்துக்கு அழைத்துச் செல்கிறான். அவர்கள் உள்ளே நுழையும்போது, மாஷாவின் 12 வயது மகன், அவன் பெயரும் லியோனிட்தான், லயாங்கா எனச் சுருக்கமாக அழைக்கப்படுபவன் விளக்கினை ஏற்றுகிறான். மாஷா, அப்படியே படுக்கையில் விழுந்து, ஆழ்ந்து உறங்கத் தொடங்குகிறாள். லியோனிட் அவளது ஈர உடையைக் களைந்து சூட்டடுப்பின் மீது காயப் போடுகிறான். அவன் அங்கேயே தங்கி, மாஷாவுடன் படுத்துக்கொள்ளப் போகிறானாவென, லயாங்கா கேட்கிறான். ………. அப்படித்தான் எல்லோரும் செய்வதாகச் சொல்கிறான், சிறுவன், லயாங்கா.
அவனுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பினை மறுதளித்த லியோனிட், கால்கள் இழந்த சிறுவனுடன் பேசுவதற்காக அமர்கிறான். சிறுவன் மகிழ்ச்சியோடு அவனது உயிரினச் சேகரிப்புகளைக் காட்டுகிறான்: சிறுசிறு பெட்டிகளில் ஈ, கரப்பான், பூச்சிகள், வண்டுகள்; பல்வகைப் பண்பியல்புகளையும் அவற்றின் மீது ஏற்றி, அதற்கேற்ப அவற்றுக்குப் பெயர்களையும் சூட்டியுள்ளான். ஒரு இராணுவத்தான் போல் தற்புகழும் அனிசிம் என்ற பெயரில் ஒரு கரப்பான், ஒன்றுக்கும் உதவாத ஒரு உண்மையான கழிசடை `அதிகார வர்க்கத்தினன்` (பியூரோகிரட்) என்ற பெயரில் ஒரு ஈ, எதற்குமே பயனில்லாத, வெட்கங்கெட்ட ஒரு குடிகார `நிலப்பிரபு` என மற்றொரு கரப்பான். விட்டில் மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் தாம் அங்கே இல்லை. அது துரதிர்ஷ்டம் தான்.
நெஞ்சு நிமிர்ந்த ஒரு புன்னகை முகத்தோடு, அவனது அம்மா ஒரு மாபெரும் ஆளுமை என்கிறான், லயாங்கா. கொஞ்சம் அதிகக் குடி அவ்வளவுதான், என்றும் சொல்கிறான்.
லியோனிட் ஒரு திருடன் போலிருப்பதாக லயாங்கா நினைக்கிறான்; ஆனால், அவன் ஒரு க்வாஸ் மது விற்கும் பணியாளன்தானென்பதைப் பின்னர் கண்டுகொள்கிறான். அந்தச் சிறுவனை லியோனிடுக்கு மிகவும் பிடித்துவிட, அவன் கண்டிப்பாக மீண்டும் வந்து பார்ப்பதாகச் சிறுவனுக்கு உறுதி கூறுகிறான். சிறுவன் அவனிடம், கொஞ்சம் க்வாஸும் அவனது பூச்சிகளுக்காகக் கொஞ்சம் பெட்டிகளும் கொண்டுவருமாறு கேட்கிறான்.
வீட்டுக்குத் திரும்பியபின், லியோனிட் ஒரு கடைக்குச் சென்று, அழகும் நேர்த்தியும் கொண்ட சில பெட்டிகளை வாங்குகிறான். அவன் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள சிறுவர்களிடம் பூச்சிகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்துவரச் சொல்கிறான். பின்னர், பூச்சிகள், பெட்டிகள், அப்பங்களுடன் வட்டரொட்டிகளையும் எடுத்துக்கொண்டு லயாங்காவிடம் செல்கிறான். பரிசுப் பொருட்களைக் கண்டதும் வியப்பில் அதிர்ந்துபோகிற லயாங்கா, அந்தப் பெட்டிகளைத் தொடும் முன்பு கைகளைக் கழுவிவிடச் சொல்கிறான். மாஷா, மகனைக் கட்டிப்பிடித்துச் செல்லம் கொஞ்சுகிறாள். புதுவரவுப் பூச்சிகளில் ஒன்று, பெண் தோழிகளைப் பிந்திய இரவுகளில் சந்திப்பதற்காகச் சாளரங்களில் ஏறுவதற்கு வசதியாகக் கயிற்று ஏணி செய்யுமாறு மாஷாவைக் கூலிக்கமர்த்திய துறவியைப் போலவே இருப்பதாக, லயாங்கா, அவளிடம் சொல்கிறான். தேநீர்ப் பானையை அடுப்பில் ஏற்றுமாறும் சொல்கிறான். சர்க்கரை வாங்கிவருமாறு மாஷாவிடம் லியோனிட் காசு கொடுக்கிறான். புறப்பட்டுச் செல்கிற மாஷாவிடம், லயாங்கா, அவனது அடித்தளச் சாளரத்தை, வெளி உலகத்தைப் பார்க்க வசதியாக, அப்படியே சுத்தம் செய்துவிடுமாறு சொல்கிறான்.
அவள் சென்ற பின்னர், அவனது அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடல்களில் ஒன்றைப் பாடத் தொடங்குகிறான், லயாங்கா; இருந்தாலும், வெளியே ஒரு ஆர்மோனியத் தெருப்பாடகன் பாடும் சத்தத்தைக் கேட்டு, பாடுவதை நிறுத்துகிறான். சாளரம் வழியாகப் பார்ப்பதற்காக, அவனைத் தூக்கிக் காட்டுமாறு லியோனிடைக் கேட்கிறான். லியோனிட் அப்படியே செய்கிறான். அக்கம்பக்கத்தினர் சிலர், அந்த ஆர்மோனியத் தெருப்பாடகனை அங்கிருந்து துரத்துகின்ற வரையில், அவன் இசைப்பதைப் பார்த்தும் இசையினைக் கேட்டும் பரவசமாகிறான், லயாங்கா.
பின்னர், லயாங்கா, அவனுக்கு ஏற்படும் திகில் கனவுகளைப் பற்றி லியோனிட்டிடம் சொல்கிறான். ஒரு முறை அவன் தலைகீழாக வளரும் ஒரு மரத்தைக் கனவுகண்டான்; வேறொரு நாள் நாய் ஒன்று அவனது அம்மாவின் குடலைக் கடித்துத் தின்று, தின்று வெளியே துப்பியது. ஆனாலும், அவனொன்றும் அந்தத் திகில் கனவுகளால் பயந்துவிடவில்லை, என்கிறான், அவன்.
லியோனிட் கொண்டுவந்த மிட்டாய்களில் ஒன்றைத் தின்றுமுடித்த அவன், தாளினைக் கவனமாகத் தடவி, அழுத்திச் சமப்படுத்துகிறான். அவனது ஒரே தோழியான தண்ணீர் சுமக்கும் கட்காவுக்கு ஏதேனும் அழகுப்பொருள் செய்வதற்கு, அவன் அதை உபயோகப்படுத்திக்கொள்வான். கண்ணாடித் துண்டுகள், மண்பாண்டம் மற்றும் அட்டைத் தாள் துண்டுகள் போன்ற அழகான பொருட்களை மட்டுமே அவள் விரும்புகிறாள்.
பின்னர் லயாங்கா, “ கரப்பான் பூச்சி ஒன்றுக்குப் போதிய அளவுக்குத் தீனி கொடுத்தால் ஒரு குதிரை அளவுக்குப் பெரியதாக வளருமா?” எனக் கேட்கிறான். அந்தச் சிறுவன் அதனை நம்புவதைப் பார்த்து, லியோனிட் `ஆம்` என்கிறான். லயாங்காவுக்கு மகிழ்ச்சி; அவனது அம்மா இந்தப் பேச்சினைக் கேட்டு நகைப்பதாகக் கூறுகிறான். ஈக்களை நாய்கள் அளவுக்கும் கரப்பான்களை குதிரைகள் அளவுக்கும் பெரியனவாக வளரச்செய்வதாகக் கனவுகாண்கிறான். அந்தக் கரப்பான்களை செங்கல் இழுக்கப் பயன்படுத்த முடியும்; அதற்கான கட்டுக்கயிறுகளாக அவற்றின் உணர்கொம்புகள் பயன்படும். அப்படியான இராக்கதக் கரப்பான்களை விற்று அந்தப் பணத்தை, லயாங்கா, அவனது அம்மாவுக்காக திறந்த வெளியில் ஒரு வீடு வாங்குவதற்குப் பயன்படுத்தமுடியும்.
லியோனிட் எப்போதாவது திறந்த வயல்வெளிக்குச் சென்றிருக்கிறானாவென சிறுவன் கேட்க, அவன், வயல்களையும் சமவெளிகளையும் விவரிப்பதைக் கண்ணிமைக்காமல், ஆர்வத்துடன் கேட்கிறான். திறந்த ஒரு வெளியினை அவன் பார்க்க விரும்புவதாகவும், அப்படி எப்போதாவது அங்கு செல்ல நேர்ந்தால், அவனுடைய உயிரினச் சேகரிப்புகளையும் எடுத்துச் சென்று, வயலில் விட்டுவிடுவானென்றும் கூறுகிறான்.
மாஷா, சர்க்கரை மற்றும் வோட்காவுடன் வீடு திரும்புகிறாள். அம்மா, அவனது சாளரத்தைத் தூய்மைப்படுத்தாதபோது மட்டும் அவனுக்கு அம்மா மீது கிறுக்குத்தனமான கோபம் ஏற்படுகிறதென்கிறான், லயாங்கா. தேநீர் வழங்கப்படுகிறது. லயாங்கா பெரியவனாக வளரும்போது, அம்மா, அவனுக்கு ஒரு வண்டி செய்து தருவாளென்றும் அதில் சென்று அவன் நகருக்குள் பிச்சையெடுப்பானென்றும் அவன் சொல்கிறான். அதோடு, அவன் ஒரு திறந்த வெளி வயலையும் பார்ப்பானாம். திறந்த வயல் என்னமோ சொர்க்கமாக இருக்குமென்று அவன் கற்பனைசெய்வதாகச் சொல்லிச் சொல்லி, அம்மா சிரிக்கிறாள். அங்கே, தொல்லைகொடுக்கும் இராணுவத்தான்களோடு குடிகார உழவர்களையும் சிறைமுகாம்களையும் அவன் காணவேண்டியிருக்குமென்று அம்மா நினைவூட்டுகிறாள். அவர்களும் குழந்தைகளாகிவிட்டதைப் போலவே இது குறித்த விவாதத்தில் ஈடுபட்டனர்.
லயாங்கா நன்கு களைத்துவிட்டிருந்தான்; இருந்தாலும், லியோனிட் அவனைவிட்டுப் போய்விடுவானென்ற பயத்தினால் தூங்க விரும்பவில்லை. அவனைத் தங்கச்செய்வதாக மாஷா வாக்குறுதி கொடுக்கிறாள். தூங்கிவிழும் முன்பு, லயாங்கா, அம்மாவிடம், அவள் லியோனிடைத் திருமணம்செய்ய வேண்டுமென்கிறான்…. அவன் நல்லவன், அவளை அடிக்க மட்டுமே செய்கிற மற்றவர்களைப் போல் இல்லை.
சிறுவன் ஆழ்ந்து தூங்கியதும், வாழ்க்கையில் அவளுக்கான ஒரே ஆறுதல் லயாங்கா தானென்றும் அவனை நினைத்து அவள் ரொம்பவே பெருமைப்படுவதாகவும் மாஷா, லியோனிட்டிடம் கூறுகிறாள். அவனுடைய தந்தை, அவள் பணிப்பெண்ணாக வேலை பார்த்த பழைய நோட்டரி என்றும் கூறுகிறாள்.
அந்த நாளினை லயாங்காவுக்கான விடுமுறை நாளாகச் செய்ததற்காக, மாஷா, லியோனிட்டுக்கு நன்றி சொல்கிறாள். அவளது கையினை, அவனது மூட்டின் மீது வைத்துக்கொண்டு, அவனுக்குத் திருப்பிச் செலுத்த விரும்புவதாக அவள் பரிவுடன் சொல்கிறாள். லியோனிட் அந்த வாய்ப்பினை மறுதளிக்க, அவன் விரும்பினால் அவள் தனது முகத்தைக் கூட மூடிக்கொள்வதாகக் கூறுகிறாள். அப்போது தான், லயாங்கா தூக்கத்தில் ஏதோ முணுமுணுக்கிறான். மாஷா அன்பு மேலிட, மகனருகில் செல்கிறாள். அமைதியாக அங்கிருந்து கிளம்பிய லியோனிட் அடித்தளச் சாளரத்தைக் கடக்கும்போது, மாஷா அவளது மகனுக்காகப் பாடும் வித்தியாசமான ஒரு தாலாட்டு அவன் காதில் விழுகிறது.
பெருந்தலைக் காதல்கள் எழுந்துவருகின்றன
வரும்போதே பேரழிவைக் கொண்டுவருகின்றன
அவை பேரழிவைக் கொண்டுவருகின்றன
உன் இதயத்தை, அவை, சுக்குநூறாக்கும்!
ஓ, துரதிர்ஷ்டமே, ஓ, துரதிர்ஷ்டமே,
நாங்கள் எங்கே போய் ஒளிந்துகொள்வது, எங்கே?
துக்கத்தில் எழுகின்ற ஓலத்தைத் தடுக்க, பல்லைக் கடித்துக்கொண்டு அவன் விரைந்தோடுகிறான்.
*****
இத்தமிழாக்கம், நொய்டா, மாப்பிள் பிரஸ் பிரைவேட் லிட், தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷிய சிறுகதைகள், 2017 தொகுப்பிலுள்ள Fat Faced Passion ஆங்கிலப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது.
மலைகள் இணைய இதழ் எண் 124 நாள் ஜூன், 18, 2017 இல் வெளியானது. 

Wednesday, 28 June 2017

ஸ்பானியச் சிறுகதை (கொலம்பியா) - வெறும் நுரை அவ்வளவுதான் - ஹெர்னாண்டோ டெல்லெஸ் - Just Lather, That`s All by Hernando Tellez

வெறும் நுரை, அவ்வளவுதான் (Just Lather, That`s All) ஸ்பானியம் (கொலம்பியா) : ஹெர்னாண்டோ டெல்லெஸ் ( Hernando Tellez )
ஆங்கிலம் : டொனால்டு .யேட்ஸ் (Donald A. Yates)


ஹெர்னாண்டோ டெல்லெஸ் (மார்ச், 22, 1908 – 1966) – கொலம்பிய நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் நூலாசிரியர். 1950 இல் இவரது சிறுகதைத் தொகுதி Cenizas para el viento (Ashes to the Wind and other stories) வெளியானதும் இவரது பெயர் பரவலாக வெளிப்பட்டது. இன்ப, துன்பக் கலவையான இவரது கதைகள், சமகால வாழ்க்கையை, குறிப்பாக அவரது சொந்த நாட்டின் அவலநிலை குறித்த அவரது கூர்ந்த அவதானிப்புகளுக்குச் சான்றுகளாக விளங்குகின்றன. கொலம்பியாவுக்கான .நா. தூதராகவும் பணியாற்றிய இவரது சிறுகதைகளில் உலகம் முழுவதும் அதிகம் வாசிக்கப்பட்ட கதையாக தற்போது தமிழாக்கம் செய்யப்பட்ட கதை திகழ்கிறது. இக்கதை அவரது Lather and Nothingelse தொகுதியிலுள்ளது.
********
அவன் உள்ளே நுழைந்த போது, எதுவும் சொல்லவில்லை. என்னிடம் இருந்த சவரக்கத்திகளிலேயே சிறந்ததைத் தேய்ப்புத்தோலில் முன்னும் பின்னுமாக இழுத்துத் தீட்டிக்கொண்டிருந்தேன். அவன்தானெனக் கண்டுகொண்டபோது, நடுங்கிவிட்டேன். ஆனால், அவன் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. எனது உணர்வுகளை மறைத்துக்கொள்வதான நம்பிக்கையுடன், நான் கத்தியைத் தீட்டினேன். என் பெருவிரல் தசையில் பதம்பார்த்துப் பின்னர், வெளிச்சத்தில் தூக்கிப்பிடித்துக் கூர்ந்து நோக்கினேன்.
அதே கணத்தில் குண்டுகள் கோர்த்து, கைத்துப்பாக்கி தொங்கும் அவனது இடுப்புக்கச்சினை அவிழ்த்துச் சுவரிலிருந்த கொக்கி ஒன்றில் மாட்டியதோடு, இராணுவத் தொப்பியினையும் அதன் மீது மாட்டினான். பின்னர் என்பக்கம் திரும்பி, கழுத்துப் பட்டையினைத் தளர்த்திக்கொண்டே, “நரகம் மாதிரிக் கொதிக்கிறது, முகத்தை மட்டும் மழித்துவிடு.” என்றவன் நாற்காலியில் உட்கார்ந்தான்.
அது, நான்குநாள் தாடியெனக் கணக்கிட்டேன்எங்கள் போராளிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நான்கு நாட்கள். அவன் முகம் வெயிலில் வறண்டு, சிவந்து தோன்றியது. நான் மிகக் கவனமாகச் சோப்பினைத் தயார்செய்யத் தொடங்கினேன். சில சுருள்களைச் சீவிக் கிண்ணத்தில் போட்டு, கொஞ்சமாகச் சுடுநீர் சேர்த்துக் குறுமுடிக் குஞ்சம் கொண்டு உருட்டித் தேய்க்கத் தொடங்கினேன். உடனடியாகவே நுரை எழும்பத் தொடங்கியது.
எங்களின் மற்ற பயல்களுக்கும் இதேயளவு தாடி இருக்கும்.” என்றான், அவன். நான் எதுவும் பேசாமல் சோப்பு நுரையைக் கலக்கிக் கலக்கித் தேய்த்துக்கொண்டிருந்தேன்.
ஆனால், நாங்கள் செம்மையாகச் செய்தோம், தெரிந்துகொள். முக்கியமான தலைகளையெல்லாம் பிடித்துவிட்டோம். கொஞ்சம் பேரைப் பிணமாகத் தான் கொண்டுவந்தோம். உயிரோடு சிலரும் பிடிபட்டார்கள். ஆனால், எல்லோருமே வெகுசீக்கிரத்திலேயே இறந்துவிடுவார்கள்.”
எத்தனை பேரைப் பிடித்தீர்கள்?” எனக் கேட்டேன், நான்.
பதிநான்கு. அவர்களைப் பிடிக்கக் காட்டுக்குள், நடுக்காட்டுக்கும் உள்ளே செல்லவேண்டியிருக்கிறது. எப்படியும் அவர்களைப் பிடித்துவிடுவோம். ஒருவன் கூட, ஒரே ஒருவன் கூட உயிர் தப்ப முடியாது.”
கையில் சோப்பு நுரை தளும்பும் குறுமுடிக் குஞ்சத்துடன் என்னைக் கண்டதும், அவன் நாற்காலியில் பின்புறமாகச் சாய்ந்தான். நான் அப்போதும் அவன் மீது துணியைப் போர்த்தியிருக்கவில்லை. சந்தேகமேயில்லை, நான் குழம்பித்தான் போயிருக்கிறேன். இழுப்பறையிலிருந்து போர்த்தும் துணி ஒன்றை எடுத்து, அவன் கழுத்தில் சுற்றி முடிச்சிட்டேன். அவன் பேச்சை நிறுத்துவதாகத் தெரியவில்லை. ஒருவேளை, நானும் அவனுடைய கட்சி அனுதாபியென, அவன் நினைத்திருக்கலாம்.
எங்கள் செய்கையிலிருந்து இந்த ஊர் ஒரு பாடம் படித்திருக்கவேண்டுமே.” என்றான், அவன்.
ஆமாம்,” என்றேன், நான், வியர்த்துக் கறுத்திருந்த அவனது கழுத்தின் அடிப்பக்கமாக முடிச்சினை இறுக்கிக்கொண்டே.
‘’அது நல்ல, செமைய்ய்யாகக் காட்டிய காட்சி, ஹூம்?”
‘’ரொம்ப நன்றாக இருந்தது.” என்றவாறே குறுமுடிக்குஞ்சத்திற்காகத் திரும்பினேன்.
அந்த மனிதன் சோர்வின் சிறு வெளிப்பாடாகக் கண்களைச் சிறிது மூடி, சோப்பு நுரையின் மென்குளிர் சுகத்துக்காகக் காத்திருந்தான். அவனை இவ்வளவு அருகாக நான் பார்த்ததேயில்லை. தொங்கவிடப்பட்டிருந்த நான்கு போராளிகளையும் காண, மொத்த ஊரையும் பள்ளி மைதானத்தில் வரிசையாக நிற்குமாறு அவன் ஆணையிட்ட நாளில், அவன் முகத்தை நேருக்கு நேராக ஒரு கணம் பார்த்தேன். ஆனால், சிதைக்கப்பட்ட உடல்களின் காட்சி, இதற்கெல்லாம் ஆணையிட்ட மனிதனின் முகத்திற்கப்பால் என்னை விலக்கியது; அதே முகம் இப்போது என் இரண்டு கைகளுக்குள்ளும் அகப்படுகிறது.
அது விரும்பத்தகாத ஒரு முகமாக இல்லை; அவனது வயதினைச் சிறிது அதிகமாகக் காட்டினாலும் அந்தத் தாடி அவன் முகத்துக்கு முழுப் பொருத்தமில்லாமலும் இல்லை. அவன் பெயர் டோரெஸ்காப்டன் டோரெஸ். மிகுந்த கற்பனைத் திறனுள்ளவன், ஏனெனில் போராளிகளை நிர்வாணமாக்கித் தொங்கவிட்டதோடு, அவர்களின் உடல்களைத் துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக்கும் எண்ணம் யாருக்கு வரும்?
நுரையின் முதல் படிவினை அவன் முகத்தில் தேய்க்கத் தொடங்கினேன். கண்களைத் திறக்காமலேயே, அவன் தொடர்ந்தான், “எந்தச் சிக்கலுமில்லாமல் அப்படியே போய்த் தூங்கிவிடுவேன், ஆனால் பிற்பகலுக்கென நிறைய வேலை இருக்கிறது.”
நுரையிடுவதை நிறுத்திவிட்டு, ஆர்வமற்ற பாவனையில், ”மரணதண்டனை நிறைவேற்றும் துப்பாக்கிப் படை அணிவகுப்பா?” எனக் கேட்டேன்.
அதுமாதிரிதான், ஆனால், அவ்வளவு வேகமாக இல்லை, கொஞ்சம் தாமதமாகிற ஒன்று.”
அவன் தாடியில் நுரையிடும் வேலையைத் தொடர்ந்தேன். என் கைகள் மீண்டும் நடுங்கத் தொடங்கின. அந்த மனிதன் அதை உணரும் நிலையில் இல்லை; அது எனக்கு நல்லதுதான். ஆனாலும் அவன் வராமல் இருந்திருக்கக்கூடாதா என்றுதான் நினைத்தேன். அவன் உள்ளே நுழைந்ததை எங்கள் எதிரெதிர் கும்பல்கள் பலரும் பார்த்துத்தானிருப்பார்கள். அதுவுமில்லாமல், ஒருவனின் வீட்டுக்குள்ளேயே எதிரி வந்துவிடுவதென்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.
அந்தத் தாடியினை வேறெந்தத் தாடியையும் போல கவனமாகவும் மென்மையாகவும், எந்தவொரு வாடிக்கையாளரையும் போல எந்தவொரு மயிர்க்காலிலும் நுண்துளை ஏற்பட்டு அதிலிருந்து ஒரு துளி இரத்தமும் முகிழ்த்துவிடாதபடி சிரத்தையெடுத்து மழிப்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். சிறுசிறு குறுமுடித் திட்டுகளும் கத்திக்குத் தப்பிவிடாதபடி கவனமாயிருக்கவேண்டும். அவரது முகத்தை என் கையின் பின்புறத்தால் தடவி, எந்தவொரு முடியும் தட்டுப்படாத வகையில் அவரது தோல் சுத்தமாகவும் மென்மையாகவும், நலம் பெறுமாறும் செய்யவேண்டும். ஆம், நான் ஒரு ரகசியப் போராளி, ஆனால் மனச்சான்றுடைய முடிதிருத்தும் தொழிலாளியாகவுமிருப்பதோடு, என் தொழிலுக்குத் தேவைப்படும் நுண்திறனுமுடையவனென்பதில் பெருமிதம் கொண்டவனாகவும் இருக்கிறேன்.
சவரக்கத்தியை எடுத்து அதனுடைய இரு பாதுகாப்புக்கரங்களையும் இழுத்து, கத்திப்பகுதியை வெளிப்பட எடுத்து, கீழ்நோக்கி இறங்கும் கிருதாக்களில் ஒன்றிலிருந்து என் வேலையைத் தொடங்கினேன். கத்தி அழகாகப் படிந்து வேலைசெய்தது. அவனது தாடி விறைப்பாகவும் கடினமாகவும், அதிக நீளமில்லாமல், ஆனால் தடிமனாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தோல் வெளிப்பட்டது. கத்தி அதன் வழக்கமான சத்தத்துடன் மெல்ல வழுக்கி இறங்க, இறங்க, மழித்தமுடியும் உலர்கின்ற சோப்பு நுரையுமாகக் கலந்த பசை கத்தி ஓரமாகச் சேர்ந்துகொண்டே வந்தது.
அதை வழித்தெறிவதற்காக ஒரு கணம் தாமதித்த நான் கத்தியை மீண்டும் தீட்டுவதற்காகத் தேய்ப்புத்தோலைக் கையிலெடுத்தேன்; ஏனெனில் வேலையைத் துப்புரவாகச் செய்து முடிக்கிற ஒரு முடிதிருத்தும் கலைஞன் நான். கண்களை மூடியேயிருந்த அந்த மனிதன், இப்போது கண்களைத் திறந்து, போர்த்திய துணிக்குள்ளிருந்து ஒரு கையை வெளியே நீட்டி சோப்பு நீக்கப்பட்ட பகுதியைத் தடவிக்கொண்டே, ”இன்று மாலை ஆறு மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வா.” என்றான்.
அன்றைக்கு மாதிரியான அதே விஷயம்தானா?” பதறிப்போய்க் கேட்டேன்.
அதைவிடவும் சிறப்பாக இருக்கும்,” என்றான், அவன்.
‘’ என்ன செய்வதாகத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?”
இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியவில்லை; ஆனால் நாங்கள் வேடிக்கை விளையாட்டின் உச்சத்துக்கே போவோம்.” மீண்டும் அவன் பின்பக்கமாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். கத்தியை உயர்த்தியபடி அவனை நெருங்கினேன்.
அவர்கள் எல்லோரையும் தண்டிக்கப் போகிறீர்களா?” அச்சத்துடனேயேதான் கேட்டேன்.
எல்லோரையும் தான்
அவன் முகத்தில் சோப்பு உலர்ந்துகொண்டிருந்தது. நான் வேகமாகச் செய்து முடிக்க வேண்டும். கண்ணாடியில் தெரிந்த தெருவை உற்றுப் பார்த்தேன். அது எப்போதும் போலவே இருந்தது; மளிகைக்கடையில் இரண்டு மூன்று வாடிக்கையாளர்கள். பின் மணியைப் பார்த்தேன்; 2.20. பிற்பகல்.
கத்தி அதன் கீழ்நோக்கிய மழிப்பினைத் தொடங்கியது. இப்போது அடுத்த பக்கக் கிருதா வழியாகக் கீழிறங்கியது. தடித்த நீலநிறத் தாடி. யாராவது கவிஞர் அல்லது மதகுருவைப் போல அவன் அதை வளர்த்திருக்கவேண்டும். அது அவனுக்கு நன்கு பொருத்தமாகவே இருந்தது. அநேகம் பேருக்கு அவனைக் கண்டுகொள்ள முடியாது. அவனுக்கு அது நல்லதுதானே என்று நினைத்துக்கொண்டே, அவனது முன்கழுத்துப் பகுதியை இன்னும் மென்மையாகக் கையாள முயற்சித்தேன்.
அங்கேதான், கத்தியைத் திறமையாகப் பயன்படுத்தவேண்டும்; அங்கே முடி மென்மையாக இருந்தாலும் சுருள், சுருள்களாக அடர்ந்திருந்தது. சுருள் தாடி. மயிர்க்கால்களில் ஒன்று திறந்துகொள்ள, இரத்தத்துளி ஒரு முத்துப் போல முகிழ்த்துவிடலாம்; ஆனால் வாடிக்கையாளருக்கு அப்படி நிகழவே நிகழாமல் பார்த்துக்கொள்வதில்தான் நல்ல ஒரு முடிதிருத்தும் கலைஞன் பெருமிதம் கொள்கிறான்.
எங்களில் எத்தனை பேரைச் சுடுவதற்கு அவன் ஆணையிட்டிருக்கிறான்? எங்களில் எத்தனை பேரைச் சிதைப்பதற்கு அவன் ஆணையிட்டிருக்கிறான்? அதைப்பற்றி நினைக்காமலிருப்பதே நல்லது. நான் அவனுக்கு எதிரானவனென்று டோரெசுக்குத் தெரியாது. அவன் அதை அறியமாட்டான்; அதன் பின்னாலுள்ள எதனையும் அவன் அறியமாட்டான். அது மிக மிகச் சிலருக்கே தெரிந்த ரகசியம், நகருக்குள் டோரெஸ் என்ன செய்கிறான், போராளி வேட்டைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவன் என்னென்ன திட்டமிடுகிறான் என்பவற்றையெல்லாம் மிகத் துல்லியமாகப் போராளிகளுக்குத் தெரிவிப்பது நான்தான்.
என் கைக்குள்ளேயே வந்த அவன், எந்தச் சேதாரமும் இல்லாமல், உயிரோடு நலமாக, அதுவும் மழித்த முகத்துடன் திரும்பிச் செல்வதை நான் எப்படி நியாயப்படுத்தி என்ன விளக்கம் அளிக்கமுடியும்? இயலவே இயலாத ஒன்று.
தாடி முழுவதும் அநேகமாக அகற்றப்பட்டுவிட்டது. அவன் உள்ளே வந்தபோதிருந்த வயதில் சில ஆண்டுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, இளமையாகிவிட்டதாகத் தோன்றினான். முடிதிருத்தகம் செல்லும் எல்லா ஆண்களுக்கும் வழக்கமாக இப்படித்தான் நிகழுமென்று, நான் நினைக்கிறேன். டோரெஸ் புத்துயிர் பெற்றிருக்கிறான்புத்துயிர் பெற்றானா? எப்படியென்று கேட்டால், எப்போதும் நான் சொல்லிக்கொள்வது போல், நகரத்திலேயே நான் ஒரு சிறந்த முடிதிருத்தும் கலைஞன் என்பதால்தான்.
சே! வெய்யில் எவ்வளவு கொதிக்கிறது? என்னைப் போலவே டோரசுக்கும் வியர்த்துக் கொட்டும்; ஆனால், அவன் ஒரு அமைதியான மனிதன்; பிடிபட்டவர்களை இன்று மாலை என்னசெய்யலாமென்று கூட இன்னும் நினைத்துப்பார்க்காதவன். ஆனால், அதற்கு மாறாக நானோ, கையில் கத்தியை வைத்துக்கொண்டு, அவன் முகத்தில் மேலும் கீழுமாக மழித்துக்கொண்டு, சிந்திக்கக்கூட முடியவில்லை.
என்னிடம் வந்தான் பார்! ஒழியட்டும், அவன்! நான் ஒரு போராளி, கொலைகாரனல்ல. ஹூம், அவனைக் கொல்வதுதான் எத்தனை எளிதானது; அதற்குத் தகுதியானவனும் கூட; சரிதானா? இல்லை! என்ன இழவு சனியன்! யாரோ ஒரு பிற மனிதனைக் கொலைகாரனாக்கித் தியாகம்செய்யச் சொல்லும் தகுதி எவருக்கும் இல்லை. அதனால் நீ பெறப்போகும் பயன்தான் என்ன? எதுவுமில்லை. அடுத்தவர்கள், வருவார்கள்; இன்னும் அடுத்தவர்கள், முதலில் வந்தவர்கள் அடுத்து வந்தவர்களைக் கொல்வார்கள், அப்படியே, அடுத்தடுத்துஅப்படியே அது, எல்லாமே இரத்தப் பெருங்கடலாகச் சங்கமிக்கும் வரை போய்க்கொண்டேயிருக்கும்.
இந்தத் தொண்டைக்குழியை, மூச்சுக்குழலை, `ஜிப், `ஜிப்` என இப்படி அறுத்துவிடலாம்தான்! அவன் தடுப்பதற்கு நான் நேரமே கொடுக்கப் போவதில்லை, அவன் கண்களை மூடியேயிருப்பதால், பளிச், பளிச்சென மின்னும் கத்தியையோ அல்லது என் கண்களையோ பார்க்கப்போவதில்லை. ஆனால், நானோ உண்மையான கொலைகாரனைப் போல நடுங்குகிறேன். அவன் கழுத்திலிருந்து பெருகும் இரத்தம் துணிக்கு மேலாகக் குமிழியிட்டு, நாற்காலி மீது, என் கைகளில், தரையில் எங்கும் இரத்த மயமாகும். நான் கதவைச் சார்த்த வேண்டும். இளஞ்சூடான இரத்தம் தடுக்கவியலாதபடித் தொடர்ந்து அங்குலம், அங்குலமாகப் பரவித் தரையில் அழிக்க முடியாத, சிவப்புச் சிற்றோடையாகித் தெருவரையிலும் போய்விடும்.
எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது, அழுத்தமாக ஒரே இறுக்கு, ஆழமான ஒரே வெட்டு, வலியே இல்லாமல் கச்சிதமாக முடிந்துவிடும். அவன் துடித்துவிட மாட்டான். ஆனால், அவன் உடலை, பிணத்தை என்ன செய்வது? எங்கே கொண்டுபோய் ஒழித்துவைப்பது? எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நான் தப்பி ஓடி, எங்காவது தலைமறைவாகித் தஞ்சம் புகவேண்டும். ”கொலைகாரன், காப்டன் டோரசைக் கொலைசெய்தவன். முகம் மழிக்கும்போது தொண்டைக்குழியை அறுத்துவிட்டான்கோழை.”
அப்புறம் இன்னொரு பக்கம், “நம் எல்லோருக்குமாகப் பழிதீர்த்தவன். மறக்கவே கூடாத பெயர். அவன் தான் நகர முடிதிருத்துபவன். அவன் நமது கொள்கைக்காரனென்று யாருக்கும் தெரியாது.”
கொலைகாரனா, அல்லது தியாக வீரனா? என் விதி இந்தக் கத்தியின் கூரான விளிம்பில் அமர்ந்திருக்கிறது. என் கையை இன்னும் கொஞ்சமாக, சிறிது திருப்பி, கத்தியைக் கொஞ்சம் அழுத்தி அப்படியே இறக்கிவிட முடியும். பட்டுப் போல, இரப்பர் போல மேல்தோல் பிளவுபட்டு வழிவிடும். மனித மேல்தோலைவிடவும் மென்மையானது வேறெதுவுமில்லை; அதுவும் எப்போதும் இரத்தம் வெளிப்படத் தயாராக இருக்கும்.
ஆனால், நான் ஒரு கொலைகாரனாக விரும்பவில்லை. நீ இங்கே ஒரு முக மழிப்புக்காக வந்தாய். நானும் என் பணியை நன்மதிப்புடன் செய்கிறேன். ……… என் கைகளில் இரத்தம் வேண்டவே வேண்டாம்; வெறும் நுரை, அவ்வளவுதான். நீ மரண தண்டனை நிறைவேற்றுபவன். நான் வெறும் முடிதிருத்தும் தொழிலாளி. சமூகப் படிநிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கேயான இடம் இருக்கிறது.
இப்போது அவன் தாடி சுத்தமாக மழிக்கப்பட்டு, நாடி வழுவழுப்பாகிவிட்டது. அந்த மானிடன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்ணாடியில் உற்றுப் பார்த்தான். கன்னத்தில் உள்ளங்கைகளைத் தேய்த்து, புத்தம் புதியதைப் போல புது மலர்ச்சியை உணர்ந்தான்.
நன்றிஎன்றான், அவன். அவனது இடுப்புக்கச்சு, கைத்துப்பாக்கி, தொப்பிக்காகக் கொக்கியில் மாட்டியிருந்த இடத்திற்குச் சென்றான். என் முகம் வெளிறியிருக்கவேண்டும்; என் சட்டை நனைந்துவிட்டது. கச்சின் கொளுவிகளைச் சரிசெய்து மாட்டி முடித்துவிட்டு, டோரெஸ் துப்பாக்கியை அதன் உறைக்குள் இட்டு இழுத்து நேர்படுத்தியதும் தன்னிச்சையாகத் தலைமுடியைப் பணியத் தடவிவிட்டு, தொப்பியை அணிந்துகொண்டான். அவனுடைய காற்சட்டைப் பைக்குள்ளிருந்து நாணயங்களை வெளியே எடுத்த அவன், நேராக வாயிலை நோக்கி நடந்தான்.
வாயிலில் ஒரு கணம் நின்ற அவன், ”நீ என்னைக் கொன்றுவிடுவாய் என்றார்கள். அதைத் தெரிந்துகொள்ளத்தான் வந்தேன். ஆனால், கொல்வது ஒன்றும் எளிதானதில்லை. நான் சொல்வதை நீ உறுதியாக எடுத்துக்கொள்ளலாம்.” என்றதோடு, அப்படியே திரும்பி, நடந்து சென்றான்.
•••
(இக்கதையின் ஆங்கிலப் பிரதி, நொய்டா, மேப்பிள் பிரஸ் 2009 இல் வெளியிட்டுள்ள `சமகால லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்` நூலிலுள்ளது.)
மலைகள் இணைய இதழ் ஜூன் 3, 2017 இல் வெளியானது.