Thursday 23 August 2018

நாட்டார் வழக்காற்றியல்

நாட்டார் வழக்காற்றியல்
நாட்டார் இலக்கியம்
T K Ponnambalam Gomathy பிள்ளையவர்களே! நாட்டார் என்பது ஒரு இனமா? நாட்டார் வழக்காற்றுச் சொல் என்பது என்ன? விளக்குவீர்களா? நெல்லை மாவட்டத்துக்காரனாக இருந்தும் நான் ஏதும் அறிந்திலேன்.
நாட்டார் என்பது ஒரு இனமா?
நாடார் என்ற வகுப்புப் பெயருக்கும் நாட்டாருக்கும் எந்தத் தொடர்புமில்லை. முதலில் இதைத் தெளிவாக்கிக் கொள்கிறோம்.
அடுத்து, தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பட்டியலில் (http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm ) 252 வகுப்புகள் இனம் கண்டு தொகுக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் `நாட்டார்` என்ற பெயரில் எந்த வகுப்பினரும் சுட்டப்படவில்லை.
ஒரு சில மாவட்டங்களில் குயவர், வேளார் குல மக்கள் உடையார் என்றும் இடையர் குல மக்கள் பூவண்டர், மந்திரி, பிள்ளை என்றும் சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிற நடைமுறை இன்றும் வழக்கிலுள்ளது. அது போலச் சில மாவட்டங்களில் செம்படவர், பர்வதராஜ குலத்தார், மீனவர் போன்ற இன மக்களை `நாட்டார்` எனச் சிறப்புப் பெயரிட்டு அழைக்கும் வழக்காறு நடைமுறையிலுள்ளது. வட ஆற்காடு பகுதியில் இந்த நாட்டார்களில் சிலர் நாட்டு வைத்தியம் செய்கின்றனர். எலும்பு முறிவுக்கு நாட்டுமுறையில் மாவுக் கட்டு போடுகின்றனர்.
ஆனால், இந்தச் சிறப்புப் பெயர்களைக்கொண்டு அரசு பட்டியலில் எந்த வகுப்பும் இனம் காணப்படுவதில்லை. எனவே நாட்டார் என்பது ஒரு தனிப்பட்ட இனம் அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்.
நாட்டார் என்ற சொல்லுக்குத் தற்போது கீழ்க்காணும் வகைகளில் பொருள் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
1. வங்க நாட்டார், தமிழ் நாட்டார், அமெரிக்க நாட்டார் என ஒரு நாட்டின் மக்கள்
2. ஒரு குறிப்பிட்ட பகுதி, கிராமம் அல்லது சமுதாய மக்களின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரையும் சேர்த்து ஒரு குழுவாக அழைக்கும் பெயர்.
3. நாட்டாண்மைதாரர்; ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களால் சமுதாயத் தலைமைப் பொறுப்பளிக்கப்படுகிற நபர். ( ஊர் நாட்டாமை)
4. தென்னாற்காடு பகுதியில் விவசாயம் செய்கிற ஒரு வகுப்பினரை `நாட்டார்` என அழைக்கும் வழக்கமுள்ளது.
5. கிராமத்துப் பழக்க வழக்கங்களிலிருந்து மீளாதவர்; நவீன உலகம் மற்றும் வாழ்வுமுறை பற்றி அறியாத, அறிந்துகொள்ளவும் விரும்பாத எளிய மனிதர். (நாட்டுப்புறத்தவர்)
6. உலக இலக்கியத்தில் Folk Lore என ஆங்கிலத்தில் குறிப்பிடும் இலக்கிய வகைமை தமிழில் நாட்டுப்புற இலக்கியம் எனக் குறிக்கப்படுகிறது. இந்த இலக்கியம் நாட்டுப்புற மக்கள் மற்றும் அவர்களின் நீதி உணர்வு, தொழில் மற்றும் வாழ்வு குறித்துப் பேசுகிறது. இந்த நாட்டுப்புற மக்களைத் தமிழ் இலக்கியத்தில் நாட்டார் (Folk) என்ற பெயரில் குறிப்பிடும் வழக்கம் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் தொடங்கி இப்போதும் நடைமுறையிலுள்ளது.
நாட்டார் வழக்காறு
கிராம மக்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக்கங்களையும் படைப்புகளையும் குறித்த இலக்கியம் நாட்டுப்புறவியல் இலக்கியம் என வகுக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புறவியல் என்னும்போது இலக்கியம் மட்டுமில்லாமல் நாட்டுப்புற மக்கள் சார்ந்த வரலாறு, எழுத்து மொழி, பேச்சுமொழி, பண்பாடு, நம்பிக்கைகள், இன வரைவியல் என அனைத்தையும் சுட்டுவதாக அமைவதால் `நாட்டுப்புறவியல்` என்பதனைக் குறிப்பிடுவதற்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வறிஞர் நா.வானமாமலை (ஆராய்ச்சி இதழ்) அவர்கள் பயன்படுத்திய சொல் 'நாட்டார் வழக்காறு' என்பதாகும்.
அதே வழியில் அறிஞர் தே. லூர்து (பாளையங் கோட்டை தூய சவேரியார் கல்லூரி, நாட்டுப்புறவியல் துறை) அவர்களும் நாட்டுப்புறவியல் என்பதற்கு 'நாட்டார் வழக்காறு' என்ற சொல்லையே பயன்படுத்தத் தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வித்துறை ஆய்வியலில் `நாட்டார் வழக்காறு` பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல்லாகிவிட்டது.
நாட்டார் இலக்கியத்தின் தனித்தன்மைகளாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்
1. வாய்மொழியாகப் பரவுவது
2. மரபு சார்ந்தது.
3. படைப்பாளர் என எவரையும் சுட்ட இயலாத தன்மை
4. பாடுபவர் அல்லது கதை சொல்பவர் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்றவாறு கொண்டு கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளும் தன்மை.
5. ஒரே படைப்பு பலவாகத் திரிபடையும் தன்மை.
நாட்டார் பாடல்களாக, தாலாட்டுப்பாடல்கள், குழந்தைப்பாடல்கள், காதல் பாடல்கள், தொழில் பாடல்கள், விழாப் பாடல்கள், பக்திப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் போன்றவை அமைகின்றன.
நாட்டார் கதைப்பாடல்களாக, கட்டபொம்மு கதை, வெள்ளையத்தேவன் கதை, தேசிங்கு ராஜன் கதை, முத்துப்பட்டன் கதை, காத்தவராயன் கதை, சுடலைமாடன் கதை, சித்ரபுத்ர நயினார் கதை, இரவிக்குட்டிப்பிள்ளை கதை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
நாட்டார் கதைகளாக மாற்றாந்தாய்க் கொடுமை, வாரிசு உரிமையுள்ள இளவரசன் கொடுமைக்குள்ளாகித் துன்புற்று கடைசியில் அரசனாவது, விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை, செத்தும் கெடுத்த கணக்கன் கதை, நேர்மையான விறகுவெட்டிக்கு மூன்று கோடரிகள் கிடைத்த கதை, திருமணத்திற்கு அப்பாலும் உறவு கொண்ட அரசி தண்டிக்கப்பட்ட கதை, திருடன் அரசனான கதை, ஐவர் ராசா கதை, எட்டு வீட்டுப் பிள்ளைமார் கதை, நல்லதங்காள் கதை போன்ற கதைகளோடு பழையனூர் நீலி, அஞ்சாலமூட்டு இசக்கி, எனப் பல்வேறு பேய்க்கதைகளும் அந்தந்த மண் வாசனையோடு உலவுவதைக் குறிப்பிடலாம்.
ஒவ்வொரு ஊருக்கும் தலபுராணம் என்ற பெயரில் கதைகள் உள்ளன. இவை தவிர அவ்வப் பகுதியிலுள்ள மலை, குன்று, திடல், பாறை, களம், குளம் போன்றவற்றுக்கெல்லாம் பெயர்க் காரணங்கள், அவை உருவான விதம் எனப் பற்பல கதைகள் உள்ளன. இவை அனைத்தும் ஏழைக்கு உதவ மறுக்கும் கருமித்தனம், பொறாமை போன்ற ஒரு சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள் வியப்புக்குரியவை.
மழை வரவில்லையெனில் ஊர் முழுவதற்குமாகப் பாயாசம் வைத்து, கரையடி சாஸ்தாவுக்குப் படைத்து வழிபட்டால் பாயாசம் விளம்பித் தீருமுன்னே மழை வருமென எங்கள் கிராமத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.
முன்னாள் முகவை மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், முஷ்டக் குரிச்சி என்ற கிராமத்தில் நான் 1973, 74, 75 என மூன்றாண்டுகள் தங்கிப் பணியாற்ற நேர்ந்தது. மழை இன்றி வறட்சி நீண்டபோது அரிச்சந்திரன் நாடகம் நடத்தினால் மழை பெய்யுமென்ற நம்பிக்கையில், அக்கிராமத்தினர் ஓர் இரவு முழுவதும் விடிய விடிய அரிச்சந்திரன் மயான காண்டம் நடத்தினர். மனிதர்கள் உள்ளம் உருகி வடிக்கும் கண்ணீர் நிலத்தில் விழுந்தால் வானமும் கண்ணீர் சிந்துமென்ற அவர்கள் நம்பிக்கைக்கேற்றாற்போல் சிறிது தூறல் விழத்தான் செய்தது. ஆனால் அந்த ஆண்டு வறட்சி மிகப் பெரிய அளவில் நீடித்து கிராமத்து மக்களில் பலரும் பஞ்சம் பிழைக்க வேற்றூருக்குப் போயினர்.
மற்றொரு கிராமத்தில் கொடும்பாவி கட்டி இழுக்கும்போது, அதிக வட்டி வாங்குபவர் வீட்டுமுன் நின்று மாரடித்து கொடும்பாவியைத் திட்டித் தீர்த்தனர். அது போன்ற பாவங்கள் நடைபெறுவதால் தான் மழை பெய்யவில்லையென்றும். அத்தகைய பாவத்தைச் செய்தவர்கள் கொடும்பாவியைப் பார்த்து, பாவத்தை உணர்ந்து திருந்துவரென்றும் அதனால் மழை பெய்யுமென்பதும் ஒரு நம்பிக்கை.
இப்படியாக நம்பிக்கைகளுக்கு அளவேயில்லை. ஆனால் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாகச் சில விதிகள் இருக்கத்தான் செய்கின்றன.
விடுகதைகள், பழமொழிகள், சொலவடைகள் அனைத்தும் நாட்டார் வழக்காற்றுக்கு உட்பட்டவையே.
நாட்டார் கலைகளாக தப்பாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், தேவராட்டம், ஆலியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பொம்மலாட்டம் எனப் பலவும் உள்ளன. தெருக்கூத்து, பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, கணியான் கூத்து போன்றனவும் வழக்காற்றுக்குள் அடங்குகின்றன.
நாட்டார் தெய்வங்கள்
ஒவ்வொரு குடும்பமும் சமூகமும் அது அதற்கெனத் தனித்தனி வழிபாட்டுமுறைகள் கொண்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் சில குடும்பங்களில் மணமாகாமலே இறந்துவிட்ட பெண்குழந்தைகள் நினைவாக குறிப்பிட்ட நாளில் சேலை வைத்தும் அது போன்ற ஆண் குழந்தைகளுக்கு வேட்டி வைத்தும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனைக் `கன்னி வழிபாடு` என்கின்றனர்.
குலதெய்வங்கள் குறித்து ஒவ்வொரு குடும்பமும் வெவ்வேறு கதைகள் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் காவல் தெய்வங்கள் மற்றும் அம்மன் அங்கு குடிகொண்டதற்கான கதைகள் இருக்கின்றன. மாடு வாங்கி வரும்போது திருடர்களிடமிருந்து காப்பாற்றிய பெண்ணுக்கு கோவில் கட்டி வழிபட, அது அக்குடும்பத்தினரோடு ஊருக்கும் பொதுவான கோவிலாகியிருக்கிறது.
எங்கள் தாய்வழி மூதாதைகளில் ஒருவர் விவசாயக் கிணறு தோண்டினார்; தண்ணீர் கிடைக்கவில்லை. நிமித்திகன் நரபலி கொடுத்தால் தண்ணீர் கிடைக்குமென்கிறான். கிணறு தோண்டும் கூலி வேலைக்கு வந்த கன்னி கழியாத சிறுவனைப் பலியிட்ட பின் தண்ணீர் கிடைத்தது. பலிகொடுத்த குடும்பத்தினரை அந்த உயிர் ஆட்டிப்படைக்கப் பின்னாளில் அந்த உயிருக்குத் தன் நிலத்தில் ஒரு பீடம் அமைத்துக்கொடுத்து வணங்கத் தொடங்கினர். பலி கொடுக்கப்பட்டவன் தாழ்த்தப்பட்ட வகுப்பினன். பலி கொடுத்தவர்களோ ஆதிக்க சாதியினர். இப்படியாக சின்னத்தம்பி என்ற தாழ்த்தப்பட்ட குலச்சாமி ஆதிக்க குலத்தினரின் கடவுளானது.
இப்படியாக எண்ணற்ற வழக்காறுகள், வழிமுறைகளில் தெய்வ வழிபாடுகள் தோன்றியிருக்கின்றன. இந்தச் சிறு தெய்வ வழிபாட்டுக்கும் அரசாண்ட சைவம், வைணவம் போன்ற பெருந்தெய்வ வழிபாட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
ஆனால், பிற்காலத்தில் இந்தச் சிறுதெய்வங்களையும் பெருமதங்கள் உள்வாங்கிக்கொண்டு அச்சிறு தெய்வங்களை மேல்நிலைத் தெய்வங்களாக்கியிருக்கின்றன. இதனை மேல்நிலையாக்கம் (Sanscritization) என்கின்றனர்.
அவ்வாறின்றி நீர்த்துப்போன வழிபாடுகளும் உள்ளன.
கிராமக் கோவில்கள், நாட்டார் தெய்வங்கள் தோன்றிய கதைகளைத் திரட்டித் தொகுத்தால் பல்வேறு தியாகங்கள், இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் வெளிவரும்.
நாட்டார் கைத்தொழில்கள் பல நலிவடைந்து காணாமற்போய் புதிய தொழில்கள் தோன்றியிருக்கின்றன.
எனவே நாட்டார் வழக்காறு என்பது நாட்டுப்புற வாழ்வினைக் கட்டமைக்கின்ற இயங்கியல் விதிகளின் வரலாற்று வழிமுறை எனப் பொருள்படுவதைத் தெரிந்துகொள்ளலாம்.
பின்குறிப்பு :
1. இப் பதிவினை முழுமையான ஒரு கட்டுரையாகக் குறிப்பிட இயலாது. நாட்டார் வழக்காறு என்றதும் மனதில் தோன்றிய கருத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
2. நாட்டார் வழக்காற்றில் பல்வேறு தரவுகளைத் திரட்டிப் பதிப்பித்தும் ஆய்வுகள் மேற்கொண்டும் பல நூல்களை வெளியிட்ட அறிஞர் நா. வானமாமலை அவர்களின் நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இந்நூல்கள் அனைத்தும் தமிழ் இணையக் கழகத்தின் http://www.tamilvu.org/library/libindex.htm இணையதளத்தில் உருப்பட வடிவில் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பயன்பெற்றுக் கொள்ள இயலும்.
3. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர் சங்கம் கலை இரவுகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நாட்டார் பாடல்கள் மற்றும் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.
நன்றி.
ச.ஆறுமுகம்.

No comments:

Post a Comment