Thursday 2 August 2018

கோப் நகருக்கு ஒரு நடைப்பயணம் ( A Walk to Kobe ) ஹாருகி முரகாமி.

கோப் நகருக்கு ஒரு நடைப்பயணம் A Walk to Kobe ஜப்பானியம் : ஹாருகி முரகாமி Haruki Murakami – ஆங்கிலம் : பிலிப் காப்ரியேல் Philip Gabriel – தமிழில் – . ச.ஆறுமுகம்.



1

கோப் நகரில் நிகழ்ந்த நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழிந்து, மே, 1997 இல் அந்த நகரின் மையத்திலிருக்கும் சான்னோமியாவுக்கு நிஷினோமியாவிலிருந்து ஓய்வான ஒரு தனிமை நடையாகச் செல்லும் எண்ணம் எனக்குள் திடீரென எழுந்தது. அந்த நேரத்தில் நான் வேலைக்காக க்யோட்டோவிலும் அப்படியே தொடர்ந்து நிஷினோமியாவிலும் தங்கவேண்டியதாயிருந்தது. வரைபடத்தில் அங்கிருந்து மேற்குத்திசையில் கோப் நகர், சுமார் பதினைந்து கி.மீ தூரமெனத் தெரிந்தது. அது ஒன்றும் மிக எளிதில் கடக்கக்கூடிய கல்லெறி தூரமாக இல்லையெனினும் துன்புறுத்தக்கூடிய அளவுக்கு நெடுந்தூரமும் இல்லை என்பது மட்டுமின்றி நானும் ஒரு தன்னம்பிக்கைமிக்க நடைப்பயிற்சியாளராக இருந்தேன்.
நான் க்யோட்டோவில் தான் பிறந்தேனென்றாலும் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே என் குடும்பம் நிஷிமோனியாவின் ஊரகப் பகுதியான ஷூகுகாவாவுக்கு இடம்பெயர்ந்திருந்தது. அங்கிருந்தும் அதிகக் காலமாகும் முன்னரே கோப் நகரை ஒட்டியுள்ள ஆஷியாவுக்கு நகர்ந்தோம். அங்குதான் எனது பதின்வயதுப் பருவத்தின் பெரும்பகுதியும் கழிந்தது.
எனது உயர்நிலைப்பள்ளி, நகருக்கு மேலாக இருந்த குன்றுப்பகுதியிலிருந்ததால், நல்ல ஒரு மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்க நினைக்கும்போது, இயல்பாகவே நான் கோப் நகரின் மையப்பகுதி அதிலும் குறிப்பாக சான்னோமியா வட்டத்திற்கே வரவேண்டியிருந்தது. ஒசாகா மற்றும் கோப் நகருக்கு இடையிலான பகுதியைக் குறிப்பிடுகிற ஒரு ஹன்சின்-கான் பையனாகவே மாறிப் போயிருந்தேன். அந்தக் காலத்தில் என்றில்லை, இப்போதுங்கூடத்தான், இளைஞர்கள் வளர்வதற்குச் சிறப்பான ஒரு இடமாக, அதுவே இருக்கிறது. அமைதியான, எவ்விதப் பரபரப்புமற்ற ஒரு விரியத் திறந்த இளைப்பாறுகை உணர்வோடிருந்த அது பெருங்கடல், மலை மற்றும் அருகிலிருந்த ஒரு பெரிய நகரம் ஆகியவற்றாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. நான், இசைநிகழ்ச்சிகளுக்குச் செல்வதையும் பழைய புத்தகக்கடைகளில் மலிவான காகித அட்டைப் பதிப்புகளைத் தேடிப்பிடிப்பதிலும், ஜாஸ் இசைச் சிற்றகங்களில் நேரத்தைச் செலவிடுவதையும், ஆர்ட் தியேட்டர் கில்டு புது அலைப் படங்களைப் பார்த்து மகிழ்வதையும் விரும்பிச்செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு மிகமிகப் பிடித்தமான ஆடை எது? விஏஎன் VAN ஜாக்கெட் என்ற உயர் வட்டக் கழுத்து, முழுக்கைச் சட்டை தான்.
ஆனால், அதன்பின், நான் கல்லூரிப் படிப்புக்காக டோக்கியோவுக்குச் செல்ல நேர்ந்து, திருமணமாகி, வேலைசெய்யவும் தொடங்கியதோடு எப்போதாவது ஒசாகாவுக்கும் கோப் நகருக்கும் இடைப்பட்ட அந்த நீட்டு நிலப்பகுதிக்குப் போய்வந்துகொண்டுதானிருந்தேன். நான் அங்கே சென்றாகவேண்டிய அவசியமும் இருந்ததுதான்; ஆனால் அங்கே செய்யவேண்டியிருந்த வேலையைச் செய்து முடித்ததுமே, அதிவேக புல்லட் தொடரிக்குள் தாவிப் புகுந்து நேராக டோக்கியோ நோக்கித் தலைநீட்டிவிடுவேன். அப்போது எனது வாழ்க்கை பரபரப்பாக இருந்ததோடு, வெளிநாட்டிலும் நெடுநாட்கள் தங்கியிருக்க நேர்ந்தது. அதில் எனக்கேயான சொந்தக் காரணங்களும் பலவாக இருந்தனதாம். சிலர் அவர்களது சொந்த ஊருக்குத் தொடர்ச்சியாகக் காந்தம் போல் ஈர்க்கப்பட்டுப் போவதும் வருவதுமாக இருக்கும் போது, வேறுசிலரோ ஒருபோதும் திரும்பிச் செல்லவே முடியாதென்று நினைக்கலாம். அநேக விஷயங்களிலும் விதிதான் இரண்டு குழுக்களையும் பிரிப்பது போலத் தோன்றினாலும் அந்த நிலத்தின் மீதான உங்கள் உணர்வு எவ்வளவு வலுவான பிடிப்புள்ளதாக இருந்தாலும் அதில் நீங்கள் எதுவுமே செய்துவிட முடியாது. விரும்பியோ விரும்பாமலோ நான் அந்த இரண்டாவது குழுவைச் சேர்ந்தவனாகவே எனக்குத் தோன்றியது.
என்னுடைய பெற்றோர் ஆஷியாவில் பல ஆண்டுகளாக வசித்தவர்கள்; ஆனால், 1995 ஜனவரியில் ஹான்சின் நிலநடுக்கம் தாக்கியதில் அவர்கள் வசித்த வீடு மேற்கொண்டு தங்குவதற்கியலாதபடியாகிவிட்டதால், அவர்கள் உடனடியாக டோக்கியோவுக்குக் குடிபெயர்ந்தனர். அப்படியாக, நான் எனக்குள்ளாகவே சேர்த்து வைத்திருந்த (எனது விலைமதிப்புமிக்க பொக்கிஷங்கள்) நினைவுகளெல்லாம் ஒருபுறமிருக்க, எனக்கும் ஹான்சின் பகுதிக்கும் உண்மையான எந்தத் தொடர்பும் இல்லாமலாயிற்று. வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசினால், அது, மேற்கொண்டும் என்னுடைய சொந்த ஊராக இல்லைதான். ஆனால், அந்த இழப்பின் ஆழத்தினை எனது நினைவுமையம் கழன்று விலகி, மங்கி மறைவதாக உணர்ந்தாலும், எனக்குள் அது கிறீச்சிடுவதை என் செவிகளால் கேட்கிறேன். உலக்கையால் இடிபடுவது போலொரு வலி.
அதுவேதான், அங்கே நான் கண்டுகொள்ள விரும்பியதைக் காண்பதற்கான அக்கறையும் விழிப்புமான தேடலுக்காகவே கால் நடையாக நடந்து செல்லவேண்டுமென என்னைத் தூண்டிய காரணமாக இருக்கலாம். எனது சொந்த ஊருடன் எல்லாத் தொடர்புகளையும் முழுவதுமாகவே இழந்துவிட்டுள்ள எனக்கு, அது இப்போது என்னவாகத் தெரிகிறதென்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேனாகவுமிருக்கலாம். எனது நிழல் அல்லது நிழலின் நிழலுருவத்தில் எவ்வளவு பகுதியினை அங்கு நான் கண்டுகொள்ளப் போகிறேன்?
நான் வளர்ந்த அந்த நகரில் ஹான்சின் நிலநடுக்கத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்ததென்பதை என் கண்களால் உணர விரும்பினேன். நிலநடுக்கத்திற்குப் பின் கோப் நகருக்கு நான் பலமுறை சென்றபோது, அழிபாட்டு மிகுதியினைக் கண்டு அதிர்ந்துபோயிருந்தேன். ஆனால், இப்போது, ஒரு இரண்டாண்டுகளுக்குப் பிறகு, நகரம் ஒருவழியாக எழுந்து, தன்னை நிலைநிறுத்திக்கொண்ட வேளையில், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை – இந்த உச்சபட்ச வன்முறை நகரத்திடமிருந்து எவ்வெவற்றைத் திருடிச் சென்றிருக்கிறது, அதன் சுவடுகளாக எது எதை விட்டுச் சென்றிருக்கிறதென்பதை – என் கண்ணால் காண விரும்பினேன். இப்போதிருக்கிற நானாகிய எனக்கும் அந்த நகருக்கும் ஏதோ ஒரு சிறிதளவு தொடர்பாவது இருந்தேயாகவேண்டுமென நான் நம்பினேன்.
நடப்பதற்கேயான ரப்பர் மெத்தையிட்ட காலணிக்குள் பாதம் புதைத்து, தோளில் முதுகுப்பை ஒன்றும் சிறிய ஒளிப்படக்கருவி ஒன்றுமாக நிஷினோமியா தொடரி நிலையத்தில் இறங்கி, மேற்குநோக்கி ஓய்வாக என் நடையினைத் தொடங்கினேன். நல்ல வெயிலும் கண்கள் கூசுமளவுக்கு ஒளியாகவுமிருந்ததால் நான் குளிர் கண்ணாடி அணிந்திருந்தேன். நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான தெற்கு வாயிலுக்கு அருகிலுள்ள அங்காடிப்பகுதிக்குத் தான் முதலில் வந்தடைந்தேன். தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது, எனது மிதிவண்டியில் பொருட்கள் வாங்குவதற்காக அங்கு வருவது வழக்கமாயிருந்தது. நகர நூலகம் அருகிலேயே இருக்கவே, நேரம் கிடைத்தபோதெல்லாம் நான் அங்குசென்று கையில் கிடைத்த, வயதுவந்த பருவத்தினருக்கான புத்தகங்கள் முழுவதையும் கரைத்துக் குடித்தேன். அங்கே, அருகிலேயே இருந்த ஒரு கைவினைப் பொருட்கள் கடையிலிருந்துதான் நெகிழி மாதிரிகளை வாங்கிக் குவித்திருந்தேன். ஆக, அந்த இடம் எனக்குள் மாபெரும் நினைவுப் பேரலைகளைத் தோற்றுவிப்பதாயிருந்தது.
நான் இங்கே வந்து நீண்ட காலமாகிவிட்டிருந்தது. மேலும் அங்காடிப்பகுதி முன்பிருந்தது தெரியாத அளவுக்கு நிறையவே மாறிப்போயிருந்தது. அந்த மாற்றத்தில் காலத்தினால் ஏற்பட்ட சாதாரண மாற்றம் எவ்வளவென்றும் நிலநடுக்கப் பேரழிவினால் ஏற்பட்டது எவ்வளவென்றும் உண்மையாகவே என்னால் சொல்லமுடியவில்லை. ஆனாலும், நிலநடுக்கம் விட்டுச் சென்ற அழிவின் வடுக்கள் தெளிவாகவே தெரிந்தன. கட்டிடங்கள் நொறுங்கிவிழுந்த இடங்களில், இப்போது ஏகப்பட்ட பற்கள் காணாமற்போன குழிகள் போல அங்கங்கே மனைகள் காலியாகக் கிடக்க, அவற்றுக்கிடையில் ஒரு தொடர்பினை உருவாக்குவதுபோல தொழிற்கூடத் தயாரிப்புகளான, தற்காலிக கட்டிடங்கள் அமைந்திருந்தன. சிமென்ட் தெருக்கள் முழுவதும் அதல பாதாள வெடிப்புகளாகக் கிடந்தன. வேனிற்காலப் புல், பூண்டுகள் காலி நிலங்களைச் சுற்றி வளைத்துப் படர்ந்து வளர்ந்திருந்தன. பயங்கரப் பேரழிவுக்கான தடயங்கள் சுற்றிலும் எல்லாவிடத்திலுமாகப் பரந்து கிடக்க, அப்பகுதி முழுவதும் தொல்லியல் கால எச்சங்கள் போலத் தெரிந்தது. உலகிற்கு அதிகமாகக் காட்டப்பட்டு, நிலநடுக்கத்திற்குப் பின் வேகவேகமாக மறுசீரமைக்கப்பட்ட கோப் நகரத்தின் மையப்பகுதியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, காலி இடங்கள் அவற்றின் மவுனம் நிறைந்த ஆழக்குழிகளுடன் எனக்குள் மிகப் பெரிய சோகத்தையும் மனச்சோர்வினையும் தோற்றுவித்தன. இது, நிஷிமோனியா அங்காடிப் பகுதிக்கு மட்டுமேயான உண்மை நிலை என்பதில்லை; கோப் நகரினைச் சுற்றி இது போல அநேகப் பகுதிகள் இது மாதிரியான காயங்கள் மற்றும் வடுக்களுடன் இருக்கலாம்; ஆனால் அவையனைத்துமே அநேகமாக மறக்கப்பட்டுவிட்டன.
அங்காடிப்பகுதியைத் தாண்டிப் பிரதானத் தெருவின் மறுபக்கமாக எபிசு கோவில் உள்ளது. வளாகத்துக்குள்ளேயே அடர்ந்த காட்டினையுடைய அது, ஒரு மிகப்பெரிய கோவில். நான் சிறு பையனாக இருந்தபோது என் நண்பர்களுடன் விரும்பி விளையாடிய அந்த இடத்தை இப்போது தெரிகிற இடிபாடுகளுடன் காணும்போது தாங்கமுடியாத வலி ஏற்படுகிறது. ஹான்சின் நெடுஞ்சாலையின் பெருங்கல் விளக்குத் தொடர் வரிசையில் பெரும்பாலான கம்பங்களும் அவற்றின் தலைப்பகுதியான விளக்குகளை இழந்துவிட்டன. அவற்றின் தலைகள் கூரியவாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டது போல் தரையில் சிதறிக்கிடந்தன. தலையற்ற கம்பங்கள், ஒரு கனவின் மிச்சம் மீதி போல, எவ்விதப் பயனும் நோக்கமுமற்ற கற்சிலைகளின் வரிசையாக, நீண்ட அமைதியில் உறைந்துபோய் நிற்கின்றன.
நான் சிறுவனாக இருந்தபோது ஷ்ரிம்ப் இறால்கள் பிடிக்கிற (அது ஒரு எளிய தொழில்நுட்பம்: காலிப்புட்டிக்குள் இரையாக நூடுல் மாவினை வைத்து, புட்டியின் கழுத்தில் ஒரு நூல்கயிற்றினைக் கட்டித் தண்ணீருக்குள் அமிழ்த்தும் போது இறால்கள் இரைக்காக புட்டிக்குள் வரும். அதன்பின், நான் புட்டியை இழுத்து எடுத்துக்கொள்வேன்) குளத்தின் குறுக்காக இருந்த கற்பாலம் இடிந்து அதன் இடிபாடுகள் அப்படிக்கப்படியே கிடந்தன. குளத்து நீர் கறுப்படைந்து, சேறாகிக்கிடக்க, காய்ந்த பாறைகளின் மீது குஞ்சு குளுவான் முதல் வயது முதிர்ந்தன வரையிலுமான பல்தரப்பட்ட ஆமைகள் கால்களைப் பரப்பியவாறே வெயில் காய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் மூளைகளுக்குள் நிச்சயமாக, எந்தச் சிந்தனையுமிருந்திருக்காதென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பயங்கரப் பேரழிவுக்கான தடயங்கள் சுற்றிலும் எல்லாவிடத்திலுமாகப் பரந்து கிடக்க, அப்பகுதி முழுவதும் தொல்லியல் கால எச்சங்கள் போலத் தோன்றியது. அந்த அடர் காடுகள் மட்டும் தான் சிறுவயதிலிருந்தே என் நினைவிலிருந்தபடியாக, அப்படியே இருண்டு எந்த மாறுதலுமின்றிக் காலத்தை வென்று நின்றன.
கோவில் மைதானத்தில் இளவேனிற்கால வெயிலில் அமர்ந்து சுற்றுப்புறத்தை மீண்டுமாக நாலாபுறமும் சுற்றி நோக்கி என் கண்ணில் படுவனவற்றோடு உடன்பட்டுச் சிந்திக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். காட்சிப்பரப்பினை எவ்வளவு இயற்கையாக உள்வாங்கி அதனை மனத்தாலும் நினைவாலும் ஒப்புக்கொள்ள இயலுமோ அந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டிருந்தேன். அந்தக்காலத்தில் நான் எப்படியிருந்தேனென நினைவுகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் நினைப்பது போலவே தான் இவையெல்லாம் நீண்டநேரமாக நிகழ்ந்துகொண்டிருந்தன.


நிஷிமோனியாவிலிருந்து சுகுகாவாவுக்கு மெல்ல நகர்ந்தேன். அப்போது மதியமாகியிருக்கவில்லையென்றாலும் சுறுசுறுப்பான நடையினால் எனக்கு வியர்க்கத் தொடங்கும் அளவுக்கு வெயில் கடுமையாகவே இருந்தது. நான் எங்கிருக்கிறேனேனத் தெரிந்துகொள்ள எனக்கு வரைபடமெதுவும் தேவைப்படவில்லைதான்; ஆனால், தனித்தனியான தெருக்களை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இந்தத் தெருக்களின் வழியாக நூற்றுக்கணக்கான முறை போயும் வந்துமிருப்பேன். ஆனாலும் இப்போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. அவற்றை எதனால் என்னால் நினைவுகொள்ள இயலவில்லை? அது புரியாத புதிராகத்தானிருந்தது. அறைகலன்கள் அனைத்தும் மாற்றி வைக்கப்பட்ட வீட்டுக்குள் நுழைந்துவிட்டது போல திக்குத்தெரியாத ஒரு குழப்பத்தை உணர்ந்தேன்.
அதன் காரணத்தை நான் விரைவிலேயே புரிந்துகொண்டேன். வழக்கமாகக் காலியாகக் கிடக்கும் மனைகள் காலியாக இல்லாமலும் தற்போது காலியாகக் கிடக்கும் மனைகள் முன்னர் அப்படி இல்லாமலுமாக – ஒளிப்பட அசலும் நகலும் ஒன்றுக்கொன்று இடம் மாற்றிக்கொண்டதால்தான் அப்படி. அநேக நேர்வுகளிலும் முன்னர் காலிமனைகள் தற்போது குடியிருப்புகளாகவும் மற்றவை வீடுகளாக இருந்து நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டனவுமாக இருந்தன. இந்த முன்னர் மற்றும் பின்னர் பிம்பங்களும் நகரம் எப்படி இருந்ததென எனக்குள்ளிருந்த கற்பனை நினைவுகளுமாகச் சேர்ந்து ஏற்பட்ட ஒரு ஒருங்கிணைந்த விளைவுதான் அது..
சுகுகாவா அருகிலிருந்த நான் வசித்த பழைய வீடு இல்லாமலாகி, அதில் நகர வீடுகளின் வரிசை ஒன்று வந்து அமர்ந்திருந்தது. அதோடு, உயர்நிலைப்பள்ளி அருகிலிருந்த மைதானமும் நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் கட்டிய தற்காலிக வீடுகளால் நிறைந்திருந்தது. இந்தத் தொழிற்கூடத் தயாரிப்புகளான தற்காலிகத் தங்குமிடங்களில் வசிப்பவர்கள் அவர்களது சலவைத்துணிகள் மற்றும் படுக்கை விரிப்புகளை நானும் எனது நண்பர்களும் வழக்கமாக தளப்பந்து விளையாடிய இடத்தில் தொங்கவிட்டு, அது நெருக்கம் மிகுந்த ஒரு அடைக்கப்பட்ட வெளியாகத் தோற்றமளித்தது. கடந்த காலத்தின் சுவடுகளைக் காண என்னாலான மட்டும் முயற்சித்தும், அநேகமாக எதுவுமே அங்கில்லை. ஆற்றில் ஓடும் நீர் முன்பு போலவே தெளிவும் சுத்தமுமாக இப்போதும் பாய்கிறது; ஆனால், ஆற்றின் இருகரைகளும் கான்கிரீட் கொண்டு அழகுறக் கட்டப்பட்டிருந்த தோற்றம் எனக்குள் வித்தியாசமான ஒரு தனியுணர்வினையே தோற்றுவித்தது.
கடலை நோக்கிச் சிறிது நேரம் நடந்த நான் உள்ளூர் சூஷி (பொங்கல் மாதிரியான ஜப்பானிய அரிசிக் கலவை உணவு) கடை ஒன்றில் போய் நின்றேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலாக இருக்கவே, அவர்கள் வழக்கம்போல் ஏற்கெனவே பெறப்பட்ட வெளியிடக் கேட்புகளுக்கு உணவு வழங்குவதில் அவசரமும் பரபரப்புமாக இருந்தனர். வெளியிடத்திற்கு வழங்குவதற்காக உணவினை எடுத்துச் சென்ற இளம் உதவியாளன் நெடுநேரமாகத் திரும்பிவரவில்லை. உரிமையாளருக்கோ தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லவே சரியாக இருந்தது. அது, ஜப்பானில் நீங்கள் எல்லாவிடங்களிலும் காண்கிற மாதிரியான ஒரு காட்சியேதான். பீரை உறிஞ்சி,உறிஞ்சிச் சுவைத்துக்கொண்டும் தொலைக்காட்சியை அரைப்பார்வை பார்த்துக்கொண்டுமாக, நான் கேட்டிருந்த உணவுக்காக, காத்திருந்தேன். ஹையோகோ மாநில ஆளுநர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யாரோ ஒருவருடன் நிலநடுக்கத்துக்குப் பிறகான மறுகட்டுமானப் பணிகள் எவ்வாறு போய்க்கொண்டிருக்கின்றன என்பது பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்.
அவர் என்னதான் பேசினாரென்பதைக் குறிப்பாக இப்போது நினைவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறேன் ஆனால், அவற்றில் ஒரு வார்த்தையைக்கூட என் வாழ்க்கை முழுவதிலுங்கூட நினைவுக்குக்கொண்டுவரமுடியாது போலிருக்கிறது.
நான் சிறுவனாயிருக்கும்போது ஆற்றின் கரைமீது ஏறியதும், பார்வைக்கு எந்தத் தடையுமில்லாமல் கடல், நேருக்கு நேராக என் கண் முன்பாக விரிந்து கிடக்கும். கோடையில் நான் அங்கே நீச்சலுக்குச் செல்வது வழக்கம். நான் பெருங்கடலினை நேசித்ததோடு நீச்சலையும் நேசித்தேன். நான் மீன் பிடிக்கவும் சென்றிருக்கிறேன் என்பதோடு, என் நாயை நாள்தோறும் அங்கே நடைப்பயிற்சிக்கு அழைத்துச்சென்றுமிருக்கிறேன். சிலநேரங்களில் அங்கே எதுவுமே செய்யாமல் வெறுமனே அமர்ந்திருக்க விரும்புவேன். சிலநேரங்களில் இரவில் வீட்டைவிட்டும், கம்பி நீட்டி நண்பர்களுடன் கடலுக்குச் சென்று, ஒதுங்கிய மரக்கட்டைகளைச் சேகரித்துத் தீ வளர்த்ததும் உண்டு. கடலின் வாசத்தை, அதன் நெடுந்தொலைவு முழக்கத்துடன், அது கொண்டுவருகிற எல்லாவற்றையும் நேசித்தேன்.
ஆனால், இப்போது அங்கே கடல் இல்லை. மலைகளை வெட்டி, அனைத்துக் கல், மண் குப்பைகளையும் லாரிகள் மற்றும் கன்வேயர் பெல்ட் மூலம் கொணர்ந்து கொட்டியிருக்கின்றனர். கடலும் மலையும் அருகருகிலிருக்கவே, இப்பகுதி அப்படியான ஒரு கட்டுமானப்பணிக்கு மிகப் பொருத்தமானது. மலைகள் இருந்த இடத்தில் அழகான சிறுசிறு குடியிருப்புக் குழுமங்கள் முளைத்துள்ளதோடு, உரக்குழிகள் இருந்த இடங்களிலும் அழகழகான குடியிருப்புகள் எழுந்துள்ளன.
இப்போது எனக்கு டோக்கியோ அருகிலுள்ள கனகாவா மாநிலத்தின் கடற்கரை நகரமொன்றில் ஒரு சொந்த வீடு உள்ளது. டோக்கியோவிற்கும் அதற்குமாகப் போய்வந்து பயணித்துக்கொண்டிருக்கிறேன். கெடுவாய்ப்போ அல்லது மிகக் கெடுவாய்ப்போ, நான் சொல்லியே ஆகவேண்டும், இந்த கடல்புர நகரம் எனது சொந்த ஊரினை, எனது சொந்த ஊரினைவிடவும் அதிகமாக நினைக்கச்செய்கிறது. அப்பகுதியில் பசுமை மலைகள் மற்றும் ஒரு அற்புதமான நீச்சல் கடற்கரை அமைந்திருக்கிறது. இவற்றை என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக என்னுள் பத்திரப்படுத்திவைக்க விரும்புகிறேன். ஏனென்றால் இயற்கை நிலக்காட்சியை ஒரு முறை இழந்துவிட்டால், அது முற்றும் இழந்ததுதான். மனிதர்களால் ஏற்படுத்தப்படும் வன்முறை மட்டும் ஒருமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலுங்கூட, மறுபடியும் அதனைச் சரிசெய்துவிடமுடியாது.
ஆற்றின் கரைகளைத் தாண்டி, கோரோய்ன் கடற்கரை விடுதியாக இருந்த பகுதி மேற்கூரையிடப்பட்ட வசதியான ஒரு நீர்நிலை அல்லது குளமாக அமைக்கப்படுவதற்காக மேடுறுத்தப்பட்டிருந்தது. நீர்ப்பலகையாளர்கள் காற்றோடு நீர்ப்பாய்ச்சலில் செல்ல அவர்களால் முடிந்த அளவுக்கு முயன்றுகொண்டிருந்தனர். மேற்கில் ஆஷியா கடற்கரையாக இருந்த பகுதியில் உயரமாக எழுந்த அடுக்ககக் குடியிருப்புக் கட்டிடங்கள் எண்ணற்ற, பெரும்பெரும் ஒற்றைப் பெருங்கற்பாறை வரிசைகளாக நிற்கின்றன. கடற்கரையில் பெரும்பெரும் வேகன் கார்கள் மற்றும் சிறு வேன்களில் வந்திருந்த சில குடும்பங்கள் வெளியிடங்களில் சமைத்துக் கொதிக்கக் கொதிக்கச் சாப்பிடுவதற்கான எரிவாயுக் குடுவை பொருத்திய அடுப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அப்படியான வெளிவட்டாரச் செயல்பாடுகள். அவர்கள் இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகளை அடுப்பில் வாட்டி வதக்கிக்கொண்டிருக்க, அதிலெழுந்த வெண்புகைத் திரள் பெரும் தீப்பந்தம் ஒன்று வானத்தை நோக்கி எரிவதுபோலப் பெருத்த அமைதியோடு அந்த மகிழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை மாலையில் எழுந்துகொண்டிருந்தது.
வானத்தில் ஒரு துளி மேகத்தைக்கூடக் காணமுடியவில்லை. அது ஒரு மிகச் சரியான மே மாதக் காட்சி. காங்கிரீட் கரை மீது உறைந்த சிலையாக, வழக்கமான, உண்மையான கடலை நினைத்துக்கொண்டு எல்லாவற்றையும் கண்ணால், பார்த்துக்கொண்டு, மெதுமெதுவாக, அமைதியாகக் காற்றுப் போகும் ரப்பர் சக்கரம், அதன் உண்மை இருப்புணர்வினை இழந்துகொண்டிருப்பது போல் அமர்ந்திருந்தேன்.
இந்த அமைதியான காட்சியின் மத்தியில் வன்முறையின் சுவடுகள் புலப்படுவதை மறுக்க முடியாது. அப்படித்தான், அது எனக்குத் தோன்றியது. அந்த வன்முறை இயல்புகளின் ஒரு பகுதி நேரடியாக நமது பாதங்களின் கீழ் மறைந்திருக்க, மறுபகுதி நமக்குள்ளாகவே மறைந்துள்ளது. ஒன்று மற்றதன் உருவகமாக இருக்கிறது. அல்லது அவை ஒன்றுக்கொன்று இடம் மாறிக்கொள்பவை எனலாம். அங்கேயே படுத்துத் தூக்கத்தில் ஒரே கனவினைக் காணும் ஓரிணை விலங்குகள்.
சிற்றாறு ஒன்றினைக் குறுக்காகக் கடந்து, ஆஷியாவுக்குள் சென்றேன். எனது பழைய இளநிலை உயர்பள்ளியை, நான் வசித்த வீட்டினை, விரைந்து கடந்து ஆஷியா தொடரி நிலையத்துக்கு வந்தேன். அங்கிருந்த ஒரு சுவரொட்டி விளம்பரம் அன்றைய தினமே பிற்பகல் இரண்டு மணிக்கு ஒசாகாவிலுள்ள கோஷீன் மைதானத்தில் ஹான்சின் புலிகள் மற்றும் யாகல்ட் குருவிகள் தளப்பந்தாட்டக் குழுக்களுக்கிடையே ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கவிருப்பதாக அறிவித்தது. அதைப் பார்த்ததும் அங்கு போகவேண்டுமென்ற தீவிரம் எனக்குள் ஏற்பட்டது. சட்டெனத் திட்டங்களை மாற்றித் தொடரிக்குள் குதித்தேறிப் புகுந்தேன். போட்டி அப்போதுதான் தொடங்கியிருக்கும், ஆகவே நான் இப்போது அங்கு சென்றால், மூன்றாவது இன்னிங்ஸ் தொடக்கத்துக்குள் அங்கு போய்ச் சேர்ந்துவிடலாமென நான் எண்ணிக்கொண்டேன். நடையினை மறுநாள் மீண்டும் தொடங்கிக்கொள்ளலாம்.
கோஷீன் அரங்கம், நான் சிறுவனாக இருந்தபோதிருந்ததைவிடச் சிறிது மாறியிருந்தது. காலக் கோளாறில் தடுமாறி விழுந்தது போல், அந்தச் சூழலுக்கு நான் வேற்றாள் போன்ற ஒரு வலுவான ஏக்கவுணர்வினை – சொற்றொடரில் ஒரு தலைகீழ் மாற்றமென்பதை, ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் – உணர்ந்தேன். அங்கே மாறியிருந்த ஒரே விஷயம் புள்ளிகள் நிறைந்த சுங்கடி ஆடையணிந்து, கால்ப்பிஸ் என்னும் மோர்ப் புட்டிகளைத் தோளில் சுமந்து கூவி விற்கும் விற்பனையாளர்கள் இல்லாததும் (அது, மேற்கொண்டு இவ்வுலகத்தில் கால்ப்பிஸ் அருந்துகிறவர்கள் அதிகம் இல்லை எனச் சொல்வதுபோலத் தோற்றமளிக்கிறது) அரங்கத்தின் வெளியே ஸ்கோர்ப் பலகை மின்னியல் அறிவிப்பாகியிருப்பதும் (அதுவும் பகலில் மங்கலாகி சரியாகத் தெரிவது கடினமாக இருக்கிறது)தான். ஆனால் விளையாட்டுக்களத்தின் அழுக்குப்படிந்த தோற்றம் முன்பு போல அப்படியே, புல்லின் பசுமை நிறம் போல மாறாதிருக்க. ஹான்சின் ரசிகர்களும் எப்போதும் போலவே புகழ்பெற்ற தீவிரத்துடனிருந்தனர். நில நடுக்கங்கள், புரட்சிகள், போர் மற்றும் நூற்றாண்டுகள் வரலாம், போகலாம்; ஆனால், ஹான்சின் ரசிகர்கள் நிரந்தரமானவர்கள்.
ஹான்சின் வெற்றி 1 – 0 ஆக இருக்க, விளையாட்டு, கவாஜிரி மற்றும் டகாட்சு இருவருக்கிடையிலான பிட்சர் தனிப்போட்டியாக மாறிப்போனது. ஒற்றை ஓட்ட வித்தியாசமென்பது பரபரப்பான போட்டியாக இருக்குமென நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அது அப்படியில்லாதது மட்டுமல்ல, எந்தவிதமான கற்பனை நீட்சிக்கும் இடமில்லாததாக இருந்தது. ஏதாவது ஒன்றைச் சொல்வதென்றால், சிறப்பு எதுவுமில்லாத ஒரு போட்டியாக இருந்தது. இன்னும் வெட்டவெளிச்சமாக்கிச் சொல்வதென்றால், பார்ப்பதற்குத் தகுதியில்லாத ஒரு போட்டி, அவ்வளவுதான். அதுவும் அரங்கத்திலிருந்தும் தூரமான இருக்கைகளில் அமர்ந்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்குச் சொல்லவேண்டியதேயில்லை. வெயில் கடுமையாகக் கடுமையாக, அகோரமாகத் தாகமெடுத்தது. என்னிடம் குளிர்ந்த பீர்கேன்கள் சில இருக்கவே, நீங்கள் கணிப்பதுபோலவே, அந்தத் திறந்தவெளி இருக்கையிலேயே கண்ணயர்ந்து விட்டேன். விழித்துப் பார்த்தபோது எதுவும் புரியாமல் பரக்கப் பரக்க விழித்தேன். (இதென்ன எழவு? எங்கிருக்கிறேனென்று வியந்துகொண்டேன்) பேரொளி விளக்கு வெளிச்சத்திலேற்பட்ட நிழல்கள் என் திசையை நோக்கி, என்னைத் தொட்டுவிடுவதாக நீண்டிருந்தன.

3
கோப் நகரில் ஒரு சிறிய ஓட்டலில் அறையெடுத்து நுழைந்துகொண்டேன். அங்கு வந்திருந்தவர்கள் பலரும் குழுக்களாக வந்திருந்த இளம் பெண்களாக இருந்தனர். நான் சொல்கிற மாதிரியான ஓட்டல் எதுவென நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்களென நினைக்கிறேன். மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்து கூட்டமில்லாத நேரத்துத் தொடரியைப் பிடித்து ஆஷியாகவா நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து எனது சிறுநடைப் பயணத்தை மறுபடியுமாகத் தொடங்கினேன். அதற்கு முந்தின நாள் போலில்லாமல், வானம் மேகங்களால் மூடப்பட்டு, காற்று கொஞ்சம் குளிராக இருந்தது. செய்தித் தாளின் வானிலை அறிக்கை, பிற்பகலில் கண்டிப்பாக மழைபெய்யுமென தன்னம்பிக்கையோடு முன்கணித்திருந்தது. ( அவர்கள் சரியாகத்தான் சொல்லியிருந்தார்கள். மாலையில் நான் முழுவதுமாக நனைந்துவிட்டிருந்தேன்.)
சன்னோமியா தொடரி நிலையத்தில் நான் வாங்கிய காலைச்செய்தித் தாளில் சூமா நியூ டவுன்( மலையைச் செதுக்கி வீழ்த்தி அமைக்கப்பட்ட இதுவும் ஒரு புது இடமென நினைக்கிறேன். நான் அதைப்பற்றிக் கேள்விப்படவேயில்லை) பகுதியில் இரண்டு இளஞ்சிறுமிகள் மீது நடத்தப்பட்டிருந்த வன்முறை குறித்து முழுவிவரம் இருந்தது. அவர்களில் ஒருத்தி இறந்துவிட்டாள். காவல் துறையினர் இதனை எப்போதாவது நடக்கின்ற ஒரு தாக்குதலென்றும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லையென்றும் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுடன் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மிகவும் பயந்துபோயிருக்கின்றனர். இது கோப் நகரில் நடந்த பதினொரு வயதுச் சிறுவன் ஜன் ஹேஸ் பயங்கரக் கொலைக்கும் முந்தியது. எந்தவகையில் பார்த்தாலும், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் மிகப் பயங்கரமானதும் கொடூரமானதும் அர்த்தமற்ற செயலுமாகும். நான் செய்தித்தாள்களை எப்போதாவது தான் படிப்பதால் எனக்கு இந்தத் தாக்குதல் பற்றிக்கூடத் தெரிந்திருக்கவில்லை.
உண்மை விவரம் புரிந்துகொள்வதாக இன்னும் ஆழமாக அந்தச் செய்தி வரைவின் சொற்றொடர்களுக்கிடையிலாகக் கிடைத்த வழக்கம் மீறிய அடிக்குரலினையும் உணர்ந்ததை இப்போது நினைவுகொள்கிறேன். எனக்குள் சட்டென்று தோன்றிய எண்ணத்தில் செய்தித்தாளை மடித்துவைத்தேன். வாரப் பணிநாள் ஒன்றின் மத்தியில் தான் மட்டுமாகச் சுற்றித் திரியும் ஒரு மனிதன் மிகவும் சந்தேகத்திற்குரியவனாகத் தோன்றுதல் இயல்புதானே. புதுப்பிக்கப்பட்ட வன்முறையின் இந்த நிழல் இங்கே என்னை அந்நியனாக நான் உணர்ந்த உணர்வுக்கு அடிக்கோடிடுவதாக இருந்தது. தனக்குத் தொடர்பில்லாத இடத்தில் நுழைந்துவிட்ட வேண்டாத விருந்தாளியாகத்தான் நானிருந்தேன்.
மலையடிவாரத்தில் தண்டவாளப் பாதைக்கு இணையாகச் செல்லும் பாதையில் நடந்த நான் மேற்கில் எனது வழியில் சிறிது பிரிந்து சென்று முப்பது நிமிடங்களில் ஆஷியாவுக்குள் நுழைந்துவிட்டேன். அது, வடக்கிலிருந்து தெற்காக நீளுகின்ற ஒரு அகலம் குறைந்த நகரம். கிழக்காகவோ, மேற்காகவோ நடந்தால் விரைவிலேயே நீங்கள் நகரத்துக்கு வெளியே வந்துவிடுவீர்கள். சாலையின் இரு பக்கமும் இங்கும் நிலநடுக்கத்துக்குப் பின்னர், காலியாக விடப்பட்ட மனைகள் மற்றும் ஒரு பக்கமாகத் திரும்பியிருந்த குடியிருப்பு வீடுகள் காலிசெய்யப்பட்டும் கிடந்தன.
ஹன்சின்- கான் பகுதியின் அடி மண் டோக்கியோவைப் போலில்லாமல் வேறுபட்டிருக்கிறது. அது ஒரு மணற்பாங்கான மலைப்பகுதி. அதனாலேயே நிலம் மென்மையானதாகவும் வெண்மையானதாகவுமிருக்கிறது. அதனாலேயே காலி மனைகள் அதிகமும் அப்படிக்கப்படியே விடப்பட்டுள்ளன. அந்தப் பகுதி கோடைகாலப் பசுமைக் களைப்பூண்டுகளால் நிறைந்து கண்ணுக்குத் தெரிகிற முரணோடிருந்தது. எனக்கு நெருக்கமான ஒருவரின் உடலில் அறுவைசிகிச்சையால் ஏற்பட்ட பெரிய நீண்ட தழும்போடு அதனை ஒப்புமைப்படுத்திக் காட்சிப்படுத்தவே, அக்காட்சி என் உடம்புக்குள் கத்தியால் குத்தியது போல் வலியேற்படுத்தியது. காலத்தோடு அல்லது நிலத்தோடு இணைந்ததாக இல்லை, அந்த வலி.
இயல்பாகவே அங்கு களைகள் மூடிய காலி மனைகள் அதிகமாகவே இருந்தன. பல கட்டுமானத் தளங்களையும் நான் கண்டேன் தான். இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்துக்குள்ளாகவே அங்கே புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளின் வரிசைகள் நிறையவே அதிகமாகி, அந்த இடத்தை என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி மாறிவிடுமென நினைத்துக்கொண்டேன். புத்தம் புதிய கூரைத் தள ஓடுகள் வெயிலின் காலை ஒளியில் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன. அப்புறமென்ன, அங்கிருந்த நிலக் காட்சிக்கும் ஒரு மனிதனாக எனக்குமிடையில் பொதுவாக எதுவுமே இருக்கப் போவதில்லை. (அநேகமாக எதுவுமிருக்காது). எங்களுக்கிடையில் (அநேகமாக) வலுக்கட்டாயப் பிளவு ஒன்றினை வெளிப்படுத்தி, நில நடுக்கம் என்ற பெயரில் ஒரு மாபெரும் பேரழிவுக் கருவி நிற்கிறது. நான் வானத்தை அண்ணாந்து நோக்கி, மெல்லிய மேகமூட்டத்துடன் கூடிய காலைக் காற்றினை உள்ளிழுத்து வெளியிட்டுவிட்டு, என்னை இப்படியான ஒரு மனிதனாக உருவாக்கிய இந்த மண்ணைப் பற்றியும் இந்த மண் உருவாக்கிய மனிதனைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். நம்மால் கட்டுப்படுத்த முடியாத பல்வகைப்பட்ட விஷயங்கள் தாம் எத்தனையெத்தனை, ஹூம்.
அடுத்த நிலையமான ஒகமோட்டோ நிலையத்துக்குப் போனதும் ஒரு காபியகத்தில் – எப்படிப்பட்டதாகயிருந்தாலும் பரவாயில்லை – நின்று, அவர்களின் காலை உணவில் ஒரு செட் கொண்டுவருமாறு சொல்லவேண்டுமென நினைத்தேன். அன்று காலையிலிருந்தே எதனையும் நான் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனால், அப்போது எந்த காபிக்கடையும் திறந்திருக்கவுமில்லை. அது ஒரு நகரம் மாதிரியான, அந்த வகைப்பட்ட ஊரல்லவென்று நான் நினைத்துக்கொண்டேன். வேறுவழியில்லாமல் சாலை ஓரமாகத் தென்பட்ட லாசன்ஸ் கடையில் கலோரிமேட் எனர்ஜி பார் ஒன்றை வாங்கி, பூங்கா ஒன்றின் நீளிருக்கை ஒன்றில் அமர்ந்து, அமைதியாகத் தின்று முடித்து ஒரு கேன் காபியை விழுங்கி, அதனைக் கீழே இறக்கினேன். அந்தப் பயணத்தில் அதுவரையில் நான் கண்டவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்வதில் அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டேன். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு எமிங்வேயின் கதிரும் உதித்தது நாவலின் காகித அட்டைப் பதிப்பினை எனது பையிலிருந்தும் உருவி, விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கினேன். உயர்நிலைப்பள்ளியிலிருக்கும் போது அந்த நாவலை வாசித்திருக்கிறேன்தான், ஓட்டல் படுக்கையிலிருக்கும்போது எதேச்சையாக எடுத்து வாசிக்கத் தொடங்கிய நான் கதைக்குள் முழுவதுமாக என்னை இழந்துவிட்டேன். அது எப்படிப்பட்ட ஒரு மிகச் சிறந்த நாவலென்பதை அதுவரையில் எப்படி நான் உணராமற் போனேனென்பது எனக்கு இப்போதும் வியப்பாகத்தான் இருக்கிறது. அந்தப் புரிதலுணர்வு வித்தியாசமான ஒரு உணர்ச்சியைத் தோற்றுவித்தது. என் மனம் அப்போது வேறெங்கோ அலைந்திருக்கவேண்டுமென இப்போது நினைக்கிறேன்.
அடுத்த நிலையமான மைக்கேஜிலும் காலை உணவுச் சேவை எதுவும் காணப்படாததால் நான் அமைதியாக தொடரிப்பாதை வழியாகவே களைப்பும் ஆவி பறக்கும் ஸ்ட்ராங் காபி மற்றும் வெண்ணெய் தடவி வாட்டப்பட்ட கனத்த ரொட்டித் துண்டுகளின் கனவுமாக நடையைத் தொடர்ந்தேன். முன்பு போலவே கணக்கற்ற காலி மனைகளையும் கட்டுமானத் தளங்களையும் நான் கடந்தேன். என் பக்கமாக வழுக்கிச் சென்ற பல மெர்சிடெஸ் பென்ஸ் இ கிளாஸ் சேடன்கள் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கோ தொடரி நிலையத்துக்கோ செல்வதாக நானாகவே கற்பனை செய்துகொண்டேன். அந்த மகிழுந்துகளில் எந்தவொரு சிறு கறையோ அல்லது கீறலோ இல்லை. சின்னங்களில் எந்தப் பொருளுமில்லாதது போலவே காலத்தின் நகர்வுக்கும் எந்த நோக்கமும் இல்லை. எல்லாவற்றுக்குமே நிலநடுக்கத்துடன் அல்லது வன்முறையுடனும் எந்தத் தொடர்புமில்லை. அநேகமாக அப்படித்தான்.
ரோக்கோ தொடரிநிலையம் முன்பாக மீச்சிறு சலுகை ஒன்றினை எடுத்துக்கொண்டு, மெக்டொனால்டு விற்பனையகத்துக்குள் நுழைந்து முட்டை மெக்மஃபின் செட் ஒன்று ( 360 யென்) கொண்டுவருமாறு சொல்லி, கடல் உறுமுவதைப் போல என் வயிற்றுக்குள் ஊளையிட்டுக்கொண்டிருந்த பசியை ஒருவழியாகச் சாந்தப்படுத்த முடிந்தது. முப்பது நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்வதெனத் தீர்மானித்தேன். அப்போது காலை மணி ஒன்பதாக இருந்தது. 9.00 மணிக்கு மெக்டொனால்டுக்குள் நுழைந்த நான் மிகப்பெரிய கற்பனையும் உண்மையுமான மெக்டொனால்டு சாம்ராஜ்யத்துக்குள் ஈர்க்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். அல்லது தன்னுணர்விழந்த ஒரு பெருநிலையின் பகுதியாகிவிட்டிருந்தேன். ஆனால், உண்மையாகவே என்னைச் சுற்றியிருந்த எல்லாமே எனது சொந்த தனி ஆளுமை இயல்புதான். நல்லதற்கோ அல்லது கெட்டதற்கோ அந்தத் தனிநபருணர்வு, தற்காலிகமாகவேனும் செல்வதற்கு வேற்றிடம் எதுவுமில்லாதிருந்தது.
அவ்வளவு தூரத்தை நான் சமாளித்துக் கடந்து வந்திருந்தேன்; அதனாலேயே எனது பழைய உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லும் ஏற்றப்பாதையில் ஏறிவிடுவதெனத் தீர்மானித்தேன். என் நெற்றியில் மெல்லிய வியர்வைப்படலமொன்று துளிர்த்தது. பள்ளி நாட்களில் நான் எப்போதுமே முழுவதுமாக நிறைந்த பேருந்தில் தான் பள்ளிக்கு வந்தேன். ஆனால், இப்போது அதே சாலையில் எனது சொந்த வியர்வையில் நடக்கிறேன். மலைச் சரிவுகளை வெட்டிச் சரித்து உருவாக்கிய பரந்த விளையாட்டு மைதானத்தில் மாணவிகள் அவர்களது உடற்பயிற்சி வகுப்பின் பகுதியாக கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சுற்றிலுமாக, எப்போதாவது கேட்கும் மாணவிகளின் கூக்குரல் ஒலியைத் தவிர வேறு நிலச் சப்தம் ஏதுமின்றி அமைதி நிலவியது. அது அப்படியொரு முழுமையான உறைநிலை போன்றிருக்கவே, நான் செல்லக்கூடாத ஏதோ ஒரு வெளிக்குள் தடுக்கி விழுந்துவிட்டதாக உணர்ந்தேன். ஏன் அப்படியான ஒரு முழு அமைதி?
மிகவும் குறைவான ஒளியுடன் தூக்கக் கலக்கத்திலிருந்த கோப் துறைமுகத்தை நோக்கிப் பார்த்ததோடு, கடந்த காலத்தின் எதிரொலி எதையாவது கேட்டுவிடலாமென்ற நம்பிக்கையில் கவனமாகக் காது கொடுத்தும் நான் எதையுமே பெற்றுவிடவில்லை. வெறுமனே மவுனத்தின் குரல்!. அவ்வளவுதான். ஆனால், நீங்கள் என்னதான் செய்துவிட முடியும்? முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றைப் பற்றியல்லவா நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக! என்னால் நிச்சயமாகச் சொல்வதற்கு ஒரு விஷயமிருக்கிறது : வயதாக, வயதாக மனிதன் தனிமையாகிறான். இது எல்லோருக்குமான உண்மை. ஆனால், அது தவறானதாக இருக்காது. நான் என்ன சொல்கிறேனென்றால், நம்முடைய வாழ்க்கை என்பது நம்மைத் தனிமைக்குப் பழக்கப்படுத்த உதவுவதற்கான தொடரான ஒரு படிநிலைகளைத் தவிர வேறொன்றுமில்லையென்கிறேன். அப்படியானதாக இருக்கும்போது புகார் சொல்வதற்கோ குறைப்பட்டுக்கொள்வதற்கோ எந்தக் காரணமும் இல்லை. அது மட்டுமில்லாமல் நாம் யாரிடம் போய், எந்த வகையில் புகார் சொல்ல முடியும்? அல்லது குறைப்பட்டுக்கொள்ள முடியும்?
4
நான் எழுந்து, உயர்நிலைப் பள்ளியிலிருந்து வெளியே வந்து அந்த நீண்ட சரிவில் ஆர்வமற்ற ஒரு உணர்வோடு கீழே இறங்கத் தொடங்கினேன். நான் சிறிது களைப்புற்றிருந்தேன். நான் புல்லெட் தொடரிகள் மட்டுமே நிற்கும் ஷின் கோப் நிலையத்திற்கு, இடையில் எங்கும் நிற்காமல் எனது நடையைத் தொடர்ந்தேன். அங்கிருந்து எனது இலக்கான சன்னோமியாவுக்கு ஒரே மூச்சில் போய் இறங்கிவிடலாம்.
எனக்குக் கூடுதல் நேரம் கிடைக்கவே, முழுமையான ஒரு ஆர்வத்தில் தொடரி நிலையத்திற்கு அருகில் புதிதாகத் திறக்கப்பட்டிருந்த மாபெரும் வகை ஓட்டலான புதிய கோப் ஓரியண்ட் ஓட்டலுக்குள் சென்றேன். கபே முன்புற இருக்கைப் பகுதியிலிருந்த சாய்மெத்தையில் சாய்ந்து அமர்ந்து, கடைசியில், அந்த நாளில் நான் விரும்பிய முதல் தரக் காபி ஒன்று கிடைக்கப்பெற்றேன். என்னுடைய முதுகுப் பையைத் தாழ்த்தி, எனது குளிர் கண்ணாடியைக் கழற்றி, ஆழ்மூச்சு எடுத்து என் கால்களுக்கு ஒரு ஓய்வினை அளித்தேன்.
அங்கிருந்த வசதிகளை நான் பயன்படுத்தும் தேவை எழுந்திருப்பதாக எனக்குத் தோன்றவே, காலையில் ஓட்டலிலிருந்து வந்தபின்பு முதல் முறையாக அப்போதுதான் போய் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வந்தேன். பின்னர் நான் சாய்ந்து அமர்ந்து, மீண்டுமொரு காபி கொண்டுவருமாறு சொல்லிவிட்டுச் சுற்றிலுமாக ஒரு நோட்டமிட்டேன். ஓட்டல், துறைமுகம் அருகிலிருந்த பழைய கோப் ஓரியண்டல் ஓட்டலின் (நிலநடுக்கத்தினால் மூடப்பட்ட, அருமையான இதம் மிகுந்த ஒரு ஓட்டல்) உலகங்களோடும் அதற்கப்பாற்பட்டும் பயங்கரமாகப் பெரிதும் பரந்த வெளியோடிருந்தது. இந்தப் புதிய ஓட்டலைப் பரந்த வெளியுடையதென அழைப்பதைக்காட்டிலும் பாலைவனம் மாதிரியானதெனக் கூறுவதுதான் உண்மைக்கு மிக அருகிலானதாக இருக்கும். அது போதுமான பிணங்கள் இல்லாத பிரமிடு போன்ற வகையானது. நான் வெறுமனே விளையாட்டுக்காகச் சொல்லவில்லை; நான் தங்க விரும்பாத இடமாக அது இருந்தது.
ஒரு சில மாதங்களுக்குப் பின்னர், அந்த அதே லவுஞ்சில் யகூசா தொடர்பான துப்பாக்கிச்சூடு நடந்து இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அதுபோல் அந்த இடத்தில் ஏதாவதொன்று நடக்குமென்று எனக்குத் தெரிந்துகொள்வதற்கு எந்த வழியுமில்லைதான் என்றபோதிலும் மீண்டும் ஒருமுறை காலம் எங்களைப் பிரித்த இடைவெளிக்குப் பின் அதைக்கடந்துசெல்லுதல் நிகழ்ந்தபோதும் வன்முறையின் நிழல் ஒன்று படிந்தது.. நீங்கள் அதைத் தற்செயல் எனக்கூறினாலும், அது இயற்கைக்குப் புறம்பான ஒன்றாக எனக்குத் தோன்றியது. அது கடந்தகாலம், நிகழ்காலம்மற்றும் எதிர்காலமென எல்லாமே முன்னும் பின்னுமாக மின்னி ஒருங்கிணைந்து என் மீதாகக் கடந்துசென்றன.
எதனால் நாம் அப்படியான ஒரு கட்டவிழ்த்துவிடப்பட்ட, தொடர் வன்முறைக்கு இலக்காக்கப்படுகிறோம்? இந்தச் சிறு நடைப்பயணத்திற்கு நான்கு மாதங்களுக்குப் பின்னர், என் மேசையில் அமர்ந்து இந்த வார்த்தைகளை எழுதும்போது வியந்துகொள்வதைத்தவிர என்னால் வேறெதுவும் செய்ய இயலவில்லை. கோப் பகுதியைச் சிறிது அப்பால் தள்ளிவைத்துவிட்டாலுங்கூட, வன்முறையின் ஒரு நடவடிக்கை நமக்கு விதிக்கப்பட்டதென்பது போல ( உண்மை நடப்பிலோ அல்லது உருவகமாகவோ) ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வதாக உணர்கிறேன். இதற்கு ஏதாவதொரு வகைப்பட்ட தலைமுறைத் தவிர்ப்பு முறைகள் ஏதும் இருக்கின்றனவா?
நான் அமெரிக்காவில் வசித்துக்கொண்டிருந்தபோது ஹான்சின் நிலநடுக்கம் தாக்கியது. அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பின், டோக்கியோ சுரங்க வழியில் சாரின் விஷவாயுத் தாக்குதல் நிகழ்ந்தது. நான் இதனை ஒரு சம்பவங்களின் தொடராகத் தெரிவதாகவே பார்த்தேன். அந்தக் கோடையில் நான் ஜப்பானுக்குத் திரும்பியதும் சாரின் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களைப் பேட்டி காணத் தொடங்கினேன். ஒரு ஆண்டுக்குப் பின் நான் Underground அண்டர் கிரவுண்ட் வெளியிட்டேன். அந்தப் புத்தகத்தில் நான் எதைத் தேடினேன், எதைப்பற்றி எழுத விரும்பினேனென்றால் – நான் உண்மையிலேயே எதைப்பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினேனோ அதனை, நமக்குள்ளேயே ஒளிந்திருக்கிற நமது சமூகத்தின் வன்முறையினைப் பற்றித்தான். உள்மறைந்திருக்கிற சாத்தியக்கூறாக நிறைந்துள்ள வன்முறையினைப் பற்றியும் வன்முறை வடிவமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிற அந்தச் சாத்தியக்கூறு பற்றியும், அது உள்ளிருக்கிறதென்பதை மறக்க முயலுகிற நம் எல்லோரையும் பற்றியும் தான். அதனாலேயே, நான், தாக்கியவர்களை அல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை நேர்காணல் காணத் தேர்ந்தெடுத்தேன்.
நிஷிமோனியாவிலிருந்து கோப் நகருக்கு நான் அமைதியாக நடந்த இரு நாட்களிலும் இந்தச் சிந்தனைகளே என் மூளைக்குள் சுழன்றுகொண்டிருந்தன. நிலநடுக்கத்தின் நிழலினூடாகவே எனது பாதையை வகுத்துக்கொண்ட நான் எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டிருந்தேன் : சுரங்க வழியில் நிகழ்ந்த சாரின் விஷவாயுத் தாக்குதல் முழுவதுமாக எதைப்பற்றியது? அதே நேரம் சாரின் விஷவாயுத் தாக்குதலின் நிழல்களினூடாக நான் என்னை இழுத்துச் சென்றபோது, நான் வியந்துகொண்டேன் : ஹான்சின் நிலநடுக்கம் என்பது என்ன? அந்த இரண்டு நிகழ்வுகளும் என்னைப் பொறுத்தவரையில் தனித்தனியானதல்ல; ஒன்றினைப் பற்றி ஆய்வுசெய்வது இன்னொன்றினை வெளிப்படுத்த உதவக்கூடும். இது ஒரே நேரத்திலான உடலியல் மற்றும் உளவியல் சிக்கல். மறுதலையாகச் சொல்வதெனில் உளவியலே உடலியல். அவை இரண்டினையும் இணைக்கின்ற இணைப்புச் சந்தியினை நானே உருவாக்கிக்கொள்ளவேண்டியுமிருந்தது.
இதோடு இன்னும் அதிகமான சிக்கல் நிறைந்த மற்றொரு கேள்வியையும் இணைத்துக்கொள்ள முடியும்: இது குறித்து நான் என்ன செய்ய இயலும்?
சொல்வதற்கு வருத்தமாக உள்ளது, இந்தக் கேள்விகளுக்கு இன்னும் நான் ஒரு தெளிவான தர்க்கபூர்வமான பதிலினைக் கண்டுபிடிக்கவில்லை. என்னால் எந்த ஒரு இறுதியான முடிவுக்கும் வர இயலவில்லை. இந்தக் கருத்துமுனையில் நான் செய்யக்கூடியதெல்லாம் என்னுடைய நிச்சயமற்ற உரைநடை மூலம், எனது சிந்தனைகள் ( என் பார்வையும் கால்களும்) என்னை வழிநடத்திச்செல்லுகிற உண்மையான பாதையில் ஒரு எதிரிடைக்கலமாகச் சேவைசெய்ய இயலும். நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, நான், எனது கால்களை, எனது உடலை, படிப்படியாக, நின்றும் நிதானித்தும் செய்கிற உடலியல் நடைமுறை மூலம் மட்டுமே முன்னேறுகிற வகையைச் சேர்ந்தவனாக இருக்கிறேன். இது அதிக காலம் பிடிக்கிற ஒன்று. மிக அதிகமாகவே காலம் பிடிக்கும். அது மிகமிகத் தாமதமாகிவிடாதென்றும் நான் வெறுமனே நம்பிக்கைகொள்கிறேன்.
இறுதியில் நான் சன்னோமியாவுக்குத் திரும்பி வந்து சேர்ந்தேன். இதற்கிடையில் என் உடலில் நாற்றம் பிடிக்கத் தொடங்கிவிட்டது. உங்கள் காலை நடையைவிடக் கொஞ்சம் அதிகத் தூரம் அவ்வளவுதான். ஓட்டல் அறையில் வெந்நீர்க்குளியல் எடுத்துக்கொண்டேன். என் தலைமுடியைக் கழுவி முடித்து, குளிர்பெட்டியிலிருந்து குளிர்ந்த மினரல் நீர்ப்புட்டி ஒன்றை எடுத்து அதிலிருந்த நீரை விழுங்கினேன். எனது பையிலிருந்து புதிய ஆடைகளை எடுத்து மாற்றிக்கொண்டேன். கடற்படை நீல போலோ சட்டை, நீலப் பருத்தி மேற்கோட்டு மற்றும் பெய்கு சினோஸ். என் கால்கள் சிறிது வீக்கம் கொண்டிருந்தாலும் நான் அதுபற்றிச் செய்துகொள்வதற்கு எதுவும் இல்லை. என் தலைக்குள் தீர்வாகாமல் இருண்டு கிடக்கும் தெளிவற்ற கேள்விகளை வெளித்தள்ள இயலாமலிருப்பது போன்றது தான் அது.
நான் செய்வதற்கான காரியமெனக் குறிப்பாக எதுவும் இல்லாததால், என் கண்ணில் பட்ட டாம் க்ரூய்ஸ் நடித்த ஒரு திரைப்படத்திற்குச் சென்றேன். அது ஒன்றும் அவ்வளவு நன்றாகப் போன படமல்லவென்றாலும் மிக மோசமானதாகவும் இல்லை. நான் நேரத்தைக் கடத்துவதாக ஓய்வாக உட்கார்ந்திருந்தேன். என் வாழ்க்கையின் இரண்டு மணி நேரம் இப்படியாக நல்லபடியாகவுமில்லாமல் மோசமாகவுமில்லாமல் கடந்தது. மாலை வரும்போது நான் திரையரங்கினை விட்டு வெளிவந்து, மலையை நோக்கி ஒரு சிறிய உணவுவிடுதிக்கு நடந்தேன். கவுண்டரில் அமர்ந்து கடலுணவு பிட்சாவும் ஒரு திரா பீரும் கொண்டுவரச் சொன்னேன். நான் ஒருவன் தான் தனக்குத் தானே பரிமாறிக்கொள்ளும் வாடிக்கையாளனாக இருந்தேன். ஒருவேளை அது எனது கற்பனையாகவுமிருக்கலாம்; ஆனால் அங்கிருந்த எல்லோருமே மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் தோன்றியது. இணையர்கள் நிறைவோடிருப்பதாகத் தோன்ற, ஆண்களும் பெண்களுமாக ஒரு குழுவினர் உரக்கக் கூவிச் சிரித்தனர். சில நாட்கள் அப்படித்தான் நிகழும்.
அவர்கள் எனக்கு அளித்த கடலுணவு பிட்சாவில் `நீங்கள் உண்டு மகிழவிருக்கும் இந்த பிட்சா எங்கள் உணவுவிடுதியால் தயாரிக்கப்பட்ட 958,816 ஆவது பிட்சா` என அறிவிக்கின்ற ஒரு துண்டுச் சீட்டும் இணைக்கப்பட்டிருந்தது. எனக்கு அந்த 958,816 ஐப் புரிந்துகொள்ள இயலவில்லை. அதிலிருந்து நான் என்ன மாதிரியான தகவல் தெரிந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.
நான் இளைஞனாக இருந்தபோது எனது பெண் தோழியோடு இங்கு வந்து சில குளிர்ந்த பீர்களை விழுங்கியதோடு இது மாதிரி எண்கள் குறித்த துண்டுச் சீட்டு கோர்த்த, புத்தம் புதிதாகத் தயாரித்த பிட்சாக்களையும் உண்டிருக்கிறேன். நாங்கள் எங்கள் எதிர்காலம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். அப்போது நாங்கள் செய்துகொண்ட உறுதிகளில் ஒன்றுகூட உண்மையாகவில்லை. ஆனால், அது நீண்ட நெடு, நெடுங்காலத்துக்கு முன். அது இங்கே கடல் இருந்த காலம். அது இங்கே மலைகள் இருந்த காலம்.
அதற்காக இப்போது கடலும் மலைகளும் இங்கில்லை என்பதல்ல. அவை இருக்கத்தான் செய்கின்றன. நான் சொல்வது வேறு கடல், வேறு மலைகள். இப்போது இங்கிருப்பவற்றிலிருந்தும் வேறுபட்டவை. என்னுடைய இரண்டாவது பீரை உறிஞ்சிக்கொண்டே, எனது காகித அட்டைப் பிரதியான `கதிரும் எழுகிறது` நூலை எடுத்துத் திறந்து நான் விட்ட இடத்தைக் கண்டுபிடித்துத் தொடர்ந்தேன். இழந்துபோன ஒரு தலைமுறையின் இழந்த கதை. அவர்களது உலகத்துக்குள் விரைவாகவே ஈர்க்கப்பட்டேன்.
அந்த உணவுவிடுதியைவிட்டு நான் கிளம்பும்போது முன் கணித்தபடியே மழை பெய்து நான் நனைந்தேன். முழுவதுமாக நனைந்து எலும்புகளுங்கூட ஊறிப்போயின. ஆனால், இந்த இடத்தில் ஒரு குடை வாங்குவதென்பது பெரும் பிரச்னையே.
மலைகள் இணைய இதழ் 150 ஜூலை 18 இல் வெளியானது. 

No comments:

Post a Comment