Thursday 23 August 2018

சங்க இலக்கியத்துளிகள் - 20 வேலும் பெருந்தகைமை உடைத்தே.

சங்க இலக்கியத் துளிகள் – 20
வேலும் பெருந்தகைமை உடைத்தே.
இன்றைய இந்துக்கடவுள்கள் அனைத்துமே வல்லாயுதங்களைக் கையில் கொண்டுள்ளன. தமிழர் பண்பாட்டில் இன்றும் வீரநிலைக் காலப் போராயுதங்கள் வழிபாட்டுக்குரியவையாகக் கருதப்படுகின்றன. நாட்டார் தெய்வங்களின் சன்னதியில் வாள், அரிவாள், வெட்டுக்கத்தி, சூலாயுதம், வல்லயம், கதை (குண்டாந்தடி) போன்ற படைக்கருவிகளும் சார்த்தி வைக்கப்பட்டு, வணங்கப்படுகின்றன.
நாட்டார் தெய்வங்களுக்கான கொடைவிழா நாட்களில் அந்தப் போராயுதங்களையும் ஊர்வலமாக மேளதாளத்துடன் எடுத்துச் சென்று நீராட்டி, மங்கலக் குறிகளிட்டு, மாலைகள் அணிவித்து, எலுமிச்சம்பழம் செருகி பயபக்தியுடன் வீரத்தை வெளிக்காட்டுவதான நடையுடன் ஊர் முழுவதற்கும் வலம் வந்து, கோவிலில் கொண்டு வந்து வைத்துச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
வழிபாடுகள் முடிந்தபின் எட்டாம் நாள் கொடை நிறைவடைந்த பின் அந்த ஆயுதங்களை எடுத்து அவற்றுக்குத் துணி உறையிட்டு, தீட்டுப்படாத இடத்தில் பராமரித்து வருவதும் வழக்கமாக இருக்கிறது.
வீரநிலைக் காலத்தில் வேல் ஒன்று மங்கல மகளிரால் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஊர் மடுவில் நீராட்டப்பட்டு, மாலையிட்டு மீண்டும் ஊர்வலமாக எடுத்துவரப்படும் காட்சியினை புற நானூற்றுப் பாடல் ஒன்று சுட்டுகிறது.
பாடல் : புறநானூறு - 332
பாடியவர்: விரியூர் கிழார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
பிறர்வேல் போலா தாகி, இவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;
இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டி, 5
இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்,
தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. 10
பொருள் :
இவ்வூர் வீரனின் வேல் பிற வீரர்களுடைய வேல் போலல்லாமல் பெருந்தகுதி உடையதாகும்.
அதனுடைய கரிய இருபுறமும் புழுதி படிந்து, சிறுகுடிலின் கூரையில் கிடப்பதும் உண்டு.
நன்மை சான்ற மகளிரால் மாலை சூட்டப்பெற்று, இனிய குரலால் பாட்டிசைக்கப்பெற்று, உறை கழிந்த யாழின் இசை ஒலிக்க, தெளிந்த நீர் மடுவில் நீராட்டப்பெற்று, பகைநிலம் ஆளும் மன்னர் யாவரும் அஞ்சி நடுங்குமாறு தெருக்கள் அனைத்திலுமாக எடுத்துவருதலும் உண்டு.
பெரிய கடல் போன்ற படையையுடைய பேரரசர்களின் பெரிய களிற்றின் முகத்திலும் அவ்வேல் தப்பாமல் பாயும்.
வேலின் புகழ் பாடுவதன் வழி, அந்த வீரனின் போர்த்திறனைப் பாடுவதாகிறது.
விளக்கம். பகை இல்லாக் காலங்களில் போர் வேலுக்கு வேலையில்லை. அது தூசு படியக் கூரையில் செருகப்பட்டிருக்கும்.
பகை மூண்டு போர் எதிர்பார்க்கப்படும் காலங்களில் நீராட்டப்பட்டு, மாலையிட்டு காணும் பகை நடுங்குமாறு ஊர்வலமாகத் திரிதரும்.
போரின் போதோ அந்த வேல் பெரும் யானையின் முகத்தில் தப்பாது புகும். களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனென்பதால் வேல் களிறு முகத்தில் எறியப்பட்டுக் களிற்றினைச் சாய்ப்பதாகப் பாடப்படுகிறது.
வீரநிலைக் காலத்தில் போருக்குச் செல்லும் போதும், போரில் வென்ற பின்பும் போராயுதங்களுக்கு மாலையிட்டுச் சிறப்பித்துள்ளனர்.
போருக்கு முன்னர் அவ்வாறான ஊர்வலமாக எடுத்துச் செல்வதென்பது பகைவரை அச்சுறுத்துவதான ஒரு செயலாகவும் விளங்கியுள்ளது.
போரில் விழுப்புண் பெற்று இறந்தோருக்கு நடுகல் அமைத்து, பீலியும் பூவும் சூட்டி, பலி கொடுத்து கள் படைத்து, வழிபட்டும் வந்துள்ளனர்.
புறம். 335 பாடலில்
ஒன்னாத் தெவ்வர் முன்நின்று விலங்கி, ஒளிறுஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்ததென, கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல்லே. எனக் குறிப்பிடப்படுகிறது.
அஃதாவது நடுகல்லுக்கு மட்டுமே வழிபாடு. இது தவிரப் பரவும் கடவுள் இல்லை. எனவே தமிழ்ப் பண்பாட்டில் நடுகல்லே கடவுளாக வணங்கப்பட்டிருப்பதும் இதர கடவுள்கள் வணங்கிப் பரவும் வழக்கம் இல்லையென்பதுமாகிறது.
அந்த நடுகல் முன்பாக வழிபாட்டுக்காக நட்டு வைத்த வேலும் அதன் கண் சார்த்திய கேடயமும் போர்முனையைப் போன்ற அச்சந் தருவதாக இருந்ததென அகம்.131 இல் குறிப்பிடப்படுகிறது. .
இந்த வழக்காறே பிற்காலத்தில் நாட்டார் தெய்வ வழிபாடுகளாக மாறி போராயுத வழிபாடாக இன்றும் தொடர்கிறது

No comments:

Post a Comment