Sunday 1 April 2018

சங்க இலக்கியத் துளிகள் - 15. புணரி பொருத பூமணல்.

சங்க இலக்கியத் துளிகள் - 15
புணரி பொருத பூமணல்
களவுக்காதல் – நெய்தல் - தலைவனும் தலைவியும் இரவுக்குறி நிர்ணயித்துப் புணர்ந்து பிரிய, ஊருக்குள் அலர் மிகுகிறது; எனவே காவல் மிகுதியாகிறது. காவல் மிகுந்ததால் ஏற்கெனவே நிர்ணயித்த குறியிடத்திற்கு தலைவி வரமுடியாமல், இரவுக்குறி தவறிப்போகிறது. காவல் மிகுதியாவதால் மேற்கொண்டு களவுப் புணர்ச்சிக்கு வழியில்லை; தலைவி வருந்தி உடல் மெலிகிறாள். தலைவன், தலைவியைக் காண, மறைவாக வந்து நிற்பதைத் தோழி காண்கிறாள். ஆனாலும் அவனைக் காணாதது போல, அவன் காதில் விழுமாறு, தலைவியிடம் கூறுகிறாள்.
“அவர் குறிப்பிட்ட இரவுக்குறி தவறிப்போனதென்று, சூடாத பூமாலை போல வாடி, உடல் மெலிகிறாய்; அயலாரின் பழிச்சொல் கேட்டு, அவர் இனிமேல் நிச்சயமாக நம்மிடம் வரமாட்டாரென நினைக்கின்ற எதிர்மறை எண்ணத்தை நெஞ்சிற்குள் புகவிடாமல் தொலைத்து ஒழிப்பாயாக; அங்கே பார்! அலைகள் வந்து மோதி, மோதிப் பூமணல் அடர்ந்து சேர்ந்திருக்கும் கடற்கரையில், தலைவனின் தேர்க்காலில் நண்டுகள் பட்டுவிடாமல் பாதுகாப்புடன், கடிவாள வாரினைப் பிடித்துத் தேர்ப் பாகன் செலுத்தப் போதுமான அளவுக்கு கடற்கரைச் சோலைக்குள்ளும் நிலவொளி பரந்து விரிகிறது.
பாடல் :
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிகமாள, நின் நெஞ்சத்தானே; 5
புணரி பொருத பூ மணல் அடைகரை,
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.
- – உலோச்சனார், நற்றிணை 11.

கூற்று : காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம் : காவல் மிகுதியாலே தலைவனைக் கூடப் பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி, நீ வருந்தாதே, நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவரெனக் கூறுவாள் போன்று, காவல் மிகுதியால் இரவுக்குறி பிறழ்ந்தும், அதனாலே தலைவி படும் துன்பமும் சிறைப் புறத்திருக்கும் தலைவன் கேட்குமாறு கூறி வரைவொடு புகுமாறு வற்புறுத்துவது.
அடி நேர்ப் பொருள் : அவர்செய் குறி பிழைப்ப – அவர் குறித்த இரவுக்குறி தவறிப்போனதென்று; பெய்யாது வைகிய கோதை போல – அணியாமல் வீணாகும் பூமாலை போல; மெய் சாயினை – உடல் வதங்கி வாடுகிறாயே; உள்ளி நொதுமலர் நேர்பு உரை – அயலாரின் பழிச்சொல்லை நினைத்து; தெள்ளிதின் வாரார் என்னும் புலவி – அவர் இனிமேல் நம்மிடம் நிச்சயமாக வரமாட்டாரென நினைக்கின்ற எதிர்மறை வெறுப்பினை; உட்கொளல் ஒழிகமாள நின் நெஞ்சத்தானே – உன் நெஞ்சத்தால் நினைப்பதைக்கூட விட்டுத் தொலைப்பாயாக; புணரி பொருத பூமணல் அடைகரை – அலை வந்து மோதி, மோதிப் பூமணல் அடர்த்தியாகச் சேர்ந்த கடற்கரையில்; ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நண்டுகள் தேர்ச் சக்கரத்தில் படாதவாறு; வலவன் வள்பு ஆய்ந்து ஊர – தேர்ப்பாகன் கடிவாள வாரினைப் பிடித்துக் கவனமாகச் செலுத்தத் தேவையான அளவுக்கு; நிலவு விரிந்தன்றால் கானலானே - கடற்கரைச் சோலைக்குள்ளும் நிலவொளி பரந்திருப்பதைக் காண்பாயாக!
பொழிப்புரை :
அவர் குறித்த இரவுக்குறி தவறிப்போனதென்று, அணியாமல் வீணாகும் பூமாலை போல, உடல் வதங்கி வாடுகிறாயே; அயலாரின் பழிச்சொல்லை நினைத்து, அவர் இனிமேல் நம்மிடம் நிச்சயமாக வரமாட்டாரென நினைக்கின்ற எதிர்மறை வெறுப்பினை, உன் நெஞ்சத்தால் நினைப்பதைக்கூட விட்டுத் தொலைப்பாயாக; அலை வந்து மோதி, மோதிப் பூமணல் அடர்த்தியாகச் சேர்ந்த கடற்கரையில், நண்டுகள் தேர்ச் சக்கரத்தில் பட்டுவிடாதவாறு, தேர்ப்பாகன் கடிவாள வாரினைப் பிடித்துக் கவனமாகச் செலுத்தத் தேவையான அளவுக்குக் கடற்கரைச் சோலைக்குள்ளும் நிலவொளி பரந்திருப்பதைக் காண்பாயாக!
அருஞ்சொற்பொருள் : பெய் – அணிதல், பெய்யாது – அணியாமல்; வைகு – கழிதல், வற்றுதல், வதங்குதல், வைகிய – வீணாகிப் போன கோதை – பூமாலை; சாய் – சாய்தல், தளர்தல், வருந்துதல், மெலிதல், வற்றுதல், அழிதல்; பிழை - பிழைத்தல், பலிக்காமலாகுதல், தவறிப்போதல்; உள் – உள்ளம், உள்ளுதல், நினைத்தல்; நொதுமலர் – அயலார்; நேர்பு – எழுதல், நிகழ்தல்; புலவி – ஊடல், வெறுப்பு (எதிர்மறை எண்ணம்); புணரி – கடல், அலை; ஆழி – தேர்க்கால், சக்கரம்; அலவன் நண்டு; வலவன் – தேர்ப்பாகன், தேர் வல்லவன்; வள் – கடிவாளம், வார்; கானல் – கடற்கரைச் சோலை.
கவிதை நயம் :
தலைவன் குறித்த இடத்திற்குச் செல்லமுடியாதவாறு காவல் மிகுந்துவிட்டதால் தலைவி தலைவனைச் சென்று சந்திக்க முடியவில்லை. அதனால் உடல் மெலிந்து மனம் வாடிப் பெரும் குழப்பத்திலிருக்கிறாள். ஊர் பேசும் அலரை நினைத்து, தலைவன் மேற்கொண்டு வராமல் நின்றுவிட்டால், தன் வாழ்க்கை என்னாகுமென அஞ்சிப் பதறுகிறாள். அந்தப் பதற்றத்தைத் தலைவனுக்கு அறிவிப்பதற்காகவே, `இரவுக்குறி தவறிப்போனதென்று சூடாத மாலை போல வாடி உடல் மெலியும்’ தகவலோடு `நொதுமலர் நேர்பு உரை உள்ளி தெள்ளிதின் வாராரெனும் புலவி உட்கொளல் ஒழிகமாள நெஞ்சத்தானே` எனத் தெரிவிப்பதால் தலைவன் இனிமேல் வரமாட்டானோ என தலைவி நினைப்பதும் தலைவனுக்கு உணர்த்தப்பட்டுவிடுகிறது. அதனைத் தொடர்ந்து கடற்கரையில் நண்டுகள் மீது தேர்க்கால் ஏறிவிடாதபடி தேரைச் செலுத்துவதற்கான நிலவொளி பரந்துவிரிகிறதென்பதன் மூலம் இரண்டு விவரங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. ஒன்று தலைவன், காதலியைச் சந்திக்க விரையும் ஆவல்மிக்க பயணத்தின்போதுகூட நான்கறிவேயுள்ள நண்டுகளுக்குக்கூடத் துன்பம் நேர்ந்துவிடக்கூடாதென நிலவொளி விரிந்தபின்னர் வருகின்ற கருணைமிக்கவன்; எனவே கலங்காதே உன்னைக் கைவிடமாட்டாரெனத் தலைவிக்கு உணர்த்துவது. இரண்டு, தலைவன் குறியிடத்திற்கு வந்துநின்றாலும், நிலவொளி மிகுந்திருப்பதாலும் காவல் மிகுதியாலும் தலைவியால் அவனைச் சந்திக்க இயலாமலிருப்பதால் மேற்கொண்டும் காலம் நீடிக்காமல் உடனேயே வரைவு மேற்கொள்ளத் தமருடன் வருவாயாக என்பதும் உணர்த்தப்பட்டுவிடுகிறது.
தலைவனே, நாங்கள் அறிவோம், நீ நண்டுகள் கூட துன்பமுறக்கூடாதென நினைக்கும் கருணைப்பண்பு மிக்கவன். அதனால் நீ வரைவுடன் வருவாயென நாங்கள் நம்புகிறோமென தலைவனின் மக்கட்பண்பு தூண்டப்படுகிறது.
எதிர்மறை எண்ணத்தை நெஞ்சத்தாலும் நினைக்காதேயென உறுதிபடக் கூறுமொழிகள் தலைவனின் உள்ளத்தில் எளிய நெஞ்சமுள்ள இவர்களின் நம்பிக்கை சிதையுமாறு எந்த எண்ணத்தையும் தன்னுள்ளத்தும் கொள்ளக்கூடாதென்ற உறுதியை மேற்கொள்ளச் செய்யுமல்லவா!
புணரி பொருத பூமணல் அடைகரை சுட்டப்படுவதன் மூலம் அனைத்துமே அழகும் மென்மையும் மிக்கதென்றும் அதேநேரத்தில் உறுதியானதென்றும் உணர்த்தப்படுவதோடு இருள் மறைந்து நிலவொளி விரிந்து பரவுவதாகக் குறிப்பிடுவதன் மூலம் நன்னம்பிக்கை ஊட்டப்படுகிறது.
போர்க்குணம் மிக்கவனாகவும், போரில் விழுப்புண் பெற்று மடிவதையே பெருமகிழ்வாகக் கொள்ளும் வாழ்க்கையெனினும், போர்க்களத்தைத் தவிர மற்ற வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்திலும் பிற உயிர்களுக்கு இடையூறு நேராவண்ணம் வாழவேண்டுமென்பது அந்நாளைய உயர் பண்பாடென்றும் இக்கவிதை உணர்த்துவதை உன்னி மகிழ்வோம்.
முழுக்க, முழுக்க நேர்முகச் சிந்தனையுடனான நன்னம்பிக்கை மொழிகளைத் தேர்ந்து இக்கவிதை படைக்கப்பட்டுள்ளதை உணரும் போது வாசக உள்ளத்திலும் அதே நல்லுணர்வுகளோடு மகிழ்வும் மேலெழும்.

No comments:

Post a Comment