Saturday 7 April 2018

சங்க இலக்கியத்துளிகள் - 16 - உள்ளின் உள்ளம் வேமே

சங்க இலக்கியத் துளிகள் - 16.
உள்ளின் உள்ளம் வேமே.
களவு – பாலை – உடன்போக்கு – மனைமருட்சி – மகள் தலைவனுடன் உடன்போக்கில் சென்றுவிட்டதை உணர்கின்ற நற்றாய் தன் வீட்டில் இருந்தநிலையிலேயே மனம் அழிந்து வருந்துதல்.
உற்றார், உறவினர், தமர் அறியத் திருமணம் நடக்கவியலாத சூழ்நிலையில் தலைவன் தலைவியை உடன் போக்கில் கொண்டு கழிதலும், தலைவி உடன் செல்லுதலும் அறத்தாறு என்றே தமிழர் வரித்தனர். கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலையான என்பது தொல்காப்பியக் கற்பியல் சூத்திரம். கரணம் என்பது திருமணம்.
தலைவி, தலைவனுடன் உடன்போக்கில் சென்றுவிடுகிறாள். தாயின் துயரத்துக்கு அளவேயில்லை; புலம்பித் தவிக்கும் நற்றாயிடம் அக்கம்பக்கத்தவர்கள், வேறென்ன செய்வது, இந்தத் துயரத்தையும் தாங்கிக்கொண்டுதான் உயிர்வாழ வேண்டுமென ஆறுதல் கூறுகின்றனர். அதைக்கேட்டு அந்த நற்றாய் மொழிவதான கூற்று :
எனக்கிருப்பது ஒரே மகள் தானே; அவளும் போர்த்திற வலிமையுடையவனும் எப்போதும் கூர்மைமிகு வேலினைக் கையில் கொண்டிருப்பவனுமாகிய இளங்காளை ஒருவனுடன் நேற்று பெரும் மலையின் கடத்தற்கரிய காட்டு வழியில் சென்றுவிட்டாள். நடந்தால் கண்ணின் மணியில் தெரிகின்ற பாவை தெருவில் இறங்கி நடைபழகுவதைப் போன்றவளாகிய இயல்பிலேயே அழகிய என் குறுமகள் விளையாடிய, நீலமணியைப் போன்ற அழகிய நொச்சி மரத்தினையும் தெற்றி மரத்தினையும் காணும்போதெல்லாம், அவள் நினைவு வரும். அவளை நினைத்து நினைத்து என் நெஞ்சு வெந்து சாகுமே! என்னைப் போய், இதைத்தாங்கிக் கொள் என அறிவுறுத்தும், அறிவுடைப் பெருமக்களே, இது முடிகிற காரியமா? ,
பாடல் :
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்;
'இனியே, தாங்கு நின் அவலம்' என்றிர்; அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! 5
உள்ளின் உள்ளம் வேமே- உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.
பாடியவர் பெயர் தெரியவில்லை. - நற்றிணை 184.
கூற்று மனை மருட்சி
கூற்றுவிளக்கம் : தலைமகன் தலைமகளைக் கொண்டு தலைக்கழிந்த பின் ஈன்ற தாய் புலம்பினள். அயலகத்து மாதர் அவளைத் தேற்றினர். இஃது அறத்தாறு என்றனர். அவ்வாறு கூறியோரிடம் `அவள் பிரிவை நான் எங்ஙனம் தாங்குவேன், அவள் விளையாடிய இடம் காணும்போதெல்லாம் என் உள்ளம் வேகின்றதே` எனக் கூறியது.
அடி நேர் உரை : ஒரு மகள் உடையேன் மன்னே – எனக்கு ஒரு மகள் தானே இருக்கின்றாள் ( நான் ஒற்றைப் பிள்ளைக் காரியாயிற்றே) ; அவளும் செருமிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு – அவளும் போர்த்திற வலிமையுடன் கூரிய வேற்படையினைத் தாங்கிய இளங்காளையோடு; பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள் – பெருமலையின் கடத்தற்கரிய காட்டுவழியில் நேற்று சென்றனள்; `இனியே, தாங்கு நின் அவலம் என்றீர் – இனிமேல் என்னசெய்ய இயலும், உன் துயரத்தை நீதான் தாங்கிக்கொள்ளவேண்டும் என்கிறீர்கள்; அது மற்று யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடையோரே! – அது எப்படி இயலும்? அறிவுள்ள பெருமக்களே!; உள்ளின் உள்ளம் வேமே – நினைத்தாலே நெஞ்சம் வெந்து போகுமே; உண்கண் மணி வாழ் பாவை நடை கற்றன்ன – கண்ணின் மணியினுள் வாழ்கின்ற பாவை தெருவில் இறங்கி நடை பழகினாற் போன்ற; என் அணி இயற் குறுமகள் ஆடிய – அழகினை இயல்பாகவே உடைய என் இளமகள் விளையாடிய ; மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே. – நீலமணியின் அழகினை ஒத்த கருநொச்சிமரத்தையும் தெற்றி மரத்தையும் காணும் போது.
அருஞ்சொற்பொருள் : செரு – போர்த்திறம்; மொய்ம்பு – வலிமை; அருஞ்சுரம் – கடத்தற்கரிய காட்டு வழி; ஒல்லுமோ – இயலுமோ; உள்ளுதல் – நினைத்தல்; வேம் – வேகும், வெந்துபோகும்; உண்கண் மணி – கண்ணினுள் உள்ள மணி; பாவை – பிம்பம்; அணி – அழகு; இயல் – இயல்பாக; மணி – நீலமணி; ஏர் – அழகு, ஒப்ப எனும் உவம உருபு; தெற்றி – திண்ணை, மேட்டிடம், மாடம், சித்திரக்கூடம், மரவகை.
கவிதை நயம் : இப்பாடலின் நோக்கம் துயரத்தில் புலம்பும் நற்றாயின் துயரத்தினைத் தெளிவுறப் படம் பிடித்து உணர்த்துவதே.
எப்போதுமே தனக்கு நேர்ந்ததை, நிகழ்ந்ததைப் பெரிதுபடுத்திப் பேசுவதென்பது ஒரு சிலரின் இயல்பு. அதிலும் வயது முதிர்ந்த பெண்களின் துயர அரற்றலில் இதனை அதிகம் காணலாம்.
அவர்களுக்கு நிகழ்ந்த நன்மையெனில் அது மிகமிகச் சிறப்பு வாய்ந்ததெனப் பெருமிதம் பொங்கப் பேசுவதும், அவர்களுக்கேற்பட்ட துன்பமென்றால் அதைப் போன்ற துன்பம் உலகில் வேறெவருக்குமே நிகழ்ந்திருக்காது என்பதுபோல அரற்றுவதும் மற்றவரிடம் மேலதிக இரக்கத்தைக் கோருவதான ஒரு உளவியல் செயல்பாடு. இந்த உளவியல் இக்கவிதையில் சிறப்பாக வெளிப்படுகிறது.
நேற்றுத்தான் மகள் உடன் போக்கில் சென்றனள். அதனால் நெருநல் என்ற ஒற்றைச் சொல்லிலேயே தாயின் துயரம் திடீரெனப் பெருந்தீப்பட்டதுபோன்ற ஒன்றென்றும் அதனால் அளவு கடந்ததென்பதும் உணர்த்தப்படுகிறது. எனக்கு ஒரு மகள் தானே இருக்கிறாள். நான் ஒற்றைப் பிள்ளைக் காரியாயிற்றே என்ற தன்னிரக்கப் புலம்பல், என் துயரம் மற்றவர்களைப் போன்றதில்லை; ஒரு பிள்ளை போனாலென்ன அடுத்த பிள்ளை இருக்கிறது எனத் தேற்றிக்கொள்ள வழியேயில்லாத துயரமென்பதை மன்னே என்ற அசைச்சொல்லின் ஏகாரம் உணர்த்திவிடுகிறது.
மகளின் மேல் எந்தக் கோபமும் இல்லை; அவள் மீது எந்தப் பழிச்சொல்லும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தாயின் உள்ளம் மிகவும் கவனமாக இருக்கிறது. அதனாலேயே என் மகள் யாருடன் போயிருக்கிறாள் தெரியுமா? அவன் போர்த் திறமை மிக்க வலிமைவாய்ந்தவன்; அது மட்டுமல்ல எப்போதும் கூரிய வேற்படையைக் கையிலேயே வைத்திருக்கும் இளங்காளை. போர்த்திறம் மிகுந்த வலிமையும் கூரிய வேற்படையும் கொண்ட காளை என்று கூறுவதில் ஒரு பெருமிதம் தொனிக்கிறது.
அதே நேரத்தில் அவன் போர்த்திறமிக்க வலிமையுடைய இளங்காளை என்பதால் அவனோடு போரிட்டு மகளை மீட்கவும் இயலாத அவலநிலை இருப்பதும் வெளிப்படுத்தப்பட்டுவிடுகிறது.
மகள் சென்ற மலை பெருமலை; வழியோ கடத்தற்கரிய காட்டுவழி.
எல்லோரையும் போன்றவளில்லையாம் அவரது மகள்; இயல்பிலேயே அழகினைக் கொண்ட அவள் கண்ணின் மணிக்குள் வாழும் பாவையை ஒத்தவள்; அவள் நடப்பதே தனி அழகு! அந்தப் பாவை நடை பயிலும் சாயலைப் போலவே அவள் நடப்பாள் என அவளும் உயர்வு மிக்கவள் என்கிறாள்.
பொதுவாகவே பெண்கள் பிள்ளை வளர்ப்பு என்றாலே, நான் அவனை என் கண்ணுக்குள் வைத்தல்லவா வளர்த்தேன்` எனக் குறிப்பிடுவது வழக்கம். அந்த வழக்கத்தில், அவள் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறாளே என்ற பேச்சு நினைவில்தான் உண்கண் மணி வாழ் பாவை என்ற சொற்கள் பிறக்கின்றன. பாவையின் சாயலில் நடைகொண்டவள் பெருமலையின் கடத்தற்கரிய காட்டு வழியில் எப்படி நடந்துசெல்வாளோ என்ற துயரத்தையும் உள்ளடக்கியே அவளது மொழிகள் அமைகின்றன.
மகள் விளையாடிய மரத்தடியும் அந்த மேட்டுநிலமுங்கூட தனிச் சிறப்பும் உயர்வும் கொண்டவை என்பதை உணர்த்தவே மணி ஏர் நொச்சியும் தெற்றியும்.
இப்பாடலுக்கு உரை கண்ட பலரும் மணி ஏர் நொச்சி என்பதற்கு நீலமணி போன்ற பூக்களைக் கொண்ட நொச்சி என்றும் தெற்றி என்பதற்கு திண்ணை என்றும் பொருள்கொண்டுள்ளனர். தெற்றி என்பதற்கு திண்ணை என்ற பொருளும் உண்டெனினும் மேட்டிடமும் மேட்டு நிலமும் மேடும் ஒரு வகை மரமும் தெற்றி என்றுதான் அழைக்கப்பட்டுவந்திருக்கிறது.
அகநானூறு 259 ஆம் பாடலின் `` தெற்றி உலறினும், வயலை வாடினும், நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்” என்ற அடியின் அடிப்படையில் தெற்றி என்பது உலறுமெனக்கொண்டால் திண்ணை பொருந்தவில்லை. உலறுமென்பதற்குப் பொலிவிழத்தல் என்றொரு பொருளுமுள்ளது. நிலமும் மரமும் பொலிவிழப்பதுண்டு. எனவே இந்த நேர்வில் தெற்றிக்கு மேட்டு நிலமென்றோ, மரமென்றோ பொருள் கொள்வதே பொருத்தம்.
நொச்சி கருநிறக் கிளைகளும் நீலநிறப் பூக்களும், பசிய இலைகளுமாக மொத்த மரமுமே மணி மிளிற்றும் பசிய நீலமும் கருமையும் கலந்த நிறத்துடன் அழகும் கொண்டது; இங்கே மணி போன்ற பூக்கள் என வருவிக்கவேண்டிய தேவை எழவில்லை.
நொச்சி பத்துப் பதினைந்து அடிக்கு மேல் உயரமாக வளருவதில்லை; அதன் அடிமரம், கிளைகள், பூக்கள், இலைகள் அனைத்துமே உருவில் சிறியவை; மெல்லியல்பு கொண்டவை. நொச்சியைவிடவும் அடர்ந்த, தண்ணிய நிழல் கொடுக்கும் மரங்கள் பலவுமிருக்க, கவிஞர் நொச்சியைத் தேர்ந்தெடுத்து, மணி ஏர் நொச்சி என இக்கவிதையில் குறிப்பிடுவதற்கு, சங்க காலத் தமிழர் வாழ்க்கையில் நொச்சி அத்தகையதொரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
புறத்திணையில் நொச்சியென ஒரு தனித்திணை உள்ளது. நொச்சியைத் தொடலையாக, தழையாடையாக மகளிர் அணிந்துள்ளனர். அரண் காக்கும் போரின் போது வீரர்கள் தலையில் நொச்சிக் கண்ணி அணிவர். நொச்சியைப் `போதுவிரிப் பன்மரத்துள் காதல் நன்மரம் நீ!` என்கிறார் மோசிசாத்தனார். (புறம் 272.)
நொச்சிக்கு ஆங்கிலத்தில் `கற்பு மரம்` Chaste tree என்ற பெயருமுள்ளது. சங்க காலத்தின் இணைக்காலத்தில் கிரேக்க நாட்டு கன்னித்தெய்வம் ஹெஸ்டியா வுடன் இணைக்கப்பட்டு புனித மரமாகக் கருதப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் நோக்கினால் இக்கவிதையில் நொச்சி `மணி ஏர் நொச்சி` எனக் குறிப்பிடப்படுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
பாவை நடந்தாற் போல் நடக்கும் அழகு மகள் ஆடி, ஓடி விளையாடிய அழகினையும் மறக்கமுடியுமா? நொச்சியையும் தெற்றியையும் காணும்போதெல்லாம் அவள் நினைவுதானே வரும். அதை நினைக்க, நினைக்க உள்ளம் வேகுமே, அறிவுடைப் பெருமக்களே, எனக்கேட்கும்போது, நீங்கள் தெரியாமல் பேசுகிறீர்கள் என்ற குத்தலும் தொனிக்கிறது.
இப்பாடலில் ஓசை நயமும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு மகள், செருமிகு, பெருமலை, அருஞ்சுரம், மணிவாழ், அணி இயல், மணி ஏர் என எதுகைச் சொற்களும் உள்ளின் உள்ளம், உண்கண் என மோனை அமைவதையும் உன்னி ஓர்ந்து மகிழ்க.
சங்க அகப்பாடல்கள் வெறுமே கற்பனைக் காதலைப் பேசுவதில்லை. வாழ்க்கையோடு தொடர்புடைய மானுட உளவியலையும் காட்சிப்படுத்துவதைப் புரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment