Sunday 25 March 2018

அளிசமரம் என்னும் அழிஞ்சில்

அளிசமரம் என்னும் அழிஞ்சில் மரம்
முழுக்க முழுக்க நெல் விவசாயம் மட்டுமே சார்ந்திருந்த எங்கள் கிராமத்திலிருந்த சிறிய வெற்றிலை பாக்குக் கடைகளில் (பெட்டிக்கடைகள்) கூட மாடு அடிக்கும் உழவு கம்புகளும் சாட்டைக்கம்புகளுமாக ஒரு கட்டுக் கம்புகள் எப்போதும் கடை முன்பு சார்த்திவைக்கப்பட்டிருக்கும். சாட்டைக்குத் தேவையான நூல், நரம்பு, குஞ்சம், உழவுகம்புக்குத் தேவையான தார் (சிறிய ஆணி) எல்லாமே கிடைக்கும். உழவு மாடு அடிப்பதற்கு அளிசங் கம்பினைத் தான் தேடுவார்கள். சாட்டைக்குத் துவரங்கம்பு. ஓரளவுக்கு விளைந்த (முற்றிய) அளிசங்கம்பு எருமை மாட்டின் மீது என்ன அடி அடித்தாலுங்கூட, இதர கம்புகளைப் போல் பிளந்து கீறுவதில்லை. அது நார் நாராக உரிவது போலச் சிறுசிறு சிறாய்களாகத்தான் கீறும். அதனால் உழவுகம்புக்குப் பொதுவாக அளிசங்கம்பைத் தான் தேடுவார்கள். மலங்காட்டிலிருந்து தான் கம்பு வெட்டிக் கொண்டுவருவார்கள்.
ஆர்வம் காரணமாக அளிசமரம் குறித்துக் கேட்டபோது தான் எங்கள் ஊர்ப் புதுக்குளத்தங்கரையில் நின்றிருந்த இரண்டு மூன்று அளிசம் புதர்களை அப்பா, காட்டினார். அதன் பிறகு அவற்றைக் கவனிப்பது எனது பழக்கமாக மாறிப்போயிருந்தது. பேருந்து அந்தப் பக்கமாகத்தான் செல்லும். அப்போதும் அந்தப் புதர்களை எட்டிப் பார்ப்பது வழக்கம். ஆனால் அவை மரங்களாக வளரவே இல்லை. கம்பு கொஞ்சம் முற்றினாலே போதும் நறுக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பிறகெங்கே அது வளர்வது. கம்பிலும் முள் இருக்கும் முள்ளைச் செதுக்கியெடுத்த இடம் கணுப் போலத் தெரியும்.
வளர்ந்து வேலைக்கெல்லாம் போனபின்பு, 80, 85களில் அழகியபாண்டிபுரம் கிருஷ்ணன் நம்பியின் `மருமகள் வாக்கு` சிறுகதை படிக்கக் கிடைத்தது.
வெளிப்பார்வைக்கு அன்பாயிருப்பது போல் காட்டிக்கொள்ளும் மாமியாரின் அடக்குமுறைக்குள் மருமகள் யதேச்சையாகவே அடங்கிப் போவது குறித்த ஒரு கதை அது. அப்போது நடக்கின்ற தேர்தலில் பூனைக்கு ஓட்டுப் போடும்படி மாமியார் சொல்லியிருப்பார். மருமகளான ருக்மணிக்கோ கிளிக்குத் தான் ஓட்டுப் போட விருப்பம். கிளி இருக்கும்போது யாராவது பூனைக்கு ஓட்டுப் போடுவார்களோ? என்பது அவள் தனக்குத் தானே கேட்டுக்கொண்ட கேள்வி. கிளி இல்லாமலிருந்தால் பூனைக்குப் போடலாம்தான் என்பது அவள் கருத்து. வாக்குச் சாவடியில் வரிசையில் நிற்கும் போது அங்கு ஒரு மூலையில் நின்ற ஒரு அளிச மரம் அவள் கண்ணில்பட, அப்படியே அவள் சிறுமியாகிவிடுகிறாள். அவளுடைய சொந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இருந்த அளிசமரமும் அதில் அவள் பாவாடையைத் தார் பாய்ச்சிக் கட்டிக்கொண்டு ஏறிப் பழம் பறித்துத் தின்றதும் நினைவுக்கு வரும். அப்படியே பழைய நினைவுகளில் அவள் ஊசலாடிக்கொண்டிருக்கும் போதே வாக்குச் சீட்டு அவள் கையில் கொடுக்கப்படுகிறது. பட்டென்று ஏதோ ஒன்றில் குத்திப் போட்டுவிட்டு வருகிற அவளிடம் உடன் வந்தவர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டாயென்று கேட்கிறார்கள். எங்க மாமியாருக்குத் தான் போட்டேன்` என்கிறாள், அவள். அதுதான் கதை.
அளிசம் பழங்கள் அவ்வளவு சுவையானவையென்று ருக்மணி சொன்னதைப் படித்ததிலிருந்து எனக்கு அந்தப் பழங்கள் மீது ஒரு விருப்பம் ஏற்பட்டது. ஆனால் என்ன கொடுமையென்றால் அதற்கு முன்பு நான் அளிசமரத்தையோ, அளிசம் பழங்களையோ பார்த்திருக்கவில்லை. அன்றிலிருந்து அளிச மரம் மாதிரி தெரிகிற மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைவிலிருந்த புதுக்குளத்து அளிசம் புதரோடு ஒப்பிட்டு இது அளிச மரமில்லையென உறுதிப்படுத்துவது பழக்கமாகியிருந்தது. பெண்ணாடம், இறையூர் கிராமத்தில் எனது சகலை வீட்டுக்குப் போயிருந்த போது சுமாராக ஒரு பத்தடி உயரத்தில் அளிச மரமொன்றைப் பார்த்தேன். அங்கிருந்த யாருக்கும் அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. அந்த மரத்திலும் பூ, காய், பழம் ஏதுமில்லை. ஆனால் எனக்கு அது அளிசமரந்தானென்று உறுதியான ஒரு எண்ணம் ஏற்பட்டது. அதன் பின்னரும் பேருந்துகளில் செல்லும் போது ஒன்றிரண்டு மரங்கள் (ஆரணி – சேத்துப்பட்டு சாலையில்) தென்பட்டதாக நினைவிருக்கிறது.
கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று வழக்கமாக நான் காலைநடை செல்லும் பாதையை மாற்றி செங்காநத்தம் மலைக்குச் செல்லும் பாதையில் சென்றபோது மலையடிவாரத்துக்கும் முன்பாக மாந்தோப்பு வேலி ஒன்றில் அடுத்தடுத்து நின்ற இரண்டு மரங்களைப் பார்த்தேன். உடனேயே இவை அளிச மரங்கள் தாமென எனக்குள் தோன்றினாலும் உறுதிப்படுத்திக்கொள்ளலாமேயேன அந்தப்பாதையில் வந்த ஓரிருவரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் வேலைக்காகவில்லை. இரண்டு புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டேன்.
இணையத்தில் அளிச மரம், அளிசம் பழம் என்றெல்லாம் தட்டிப் பார்த்தால் அது போல் எதுவுமில்லையென்றது. ஏதோ ஒரு நினைவு, அது எப்படி எனக்குள் ஏற்பட்டதென்றுதான் எனக்குப் புதிராக இருக்கிறது. அழிஞ்சில் எனத் தட்டிப் பார்த்தால் நான் தேடியது கிடைத்துவிட்டது. இதன் பழத்தைச் சாப்பிட்டிருப்பதாக குழந்தை செல்வா என்பவரின் பக்கத்தில் படத்துடன் குறிப்புகள் இருந்தன.
அழிஞ்சில் என்ற இந்த மரத்தின் வேர், பட்டை, விதைகள் இலை அனைத்துமே மருத்துவ குணமுடையவை என்கிறார்கள், பாம்புக்கடிக்குங்கூட இது மருந்து என்கிறார்கள். தொழு நோய்க்கும், சகல தோல் நோய்களுக்கும் இது மருந்தாகிறதென்கின்றனர். எப்படியானாலும் மருத்துவர் ஆலோசனையின்றிச் சாப்பிடுவது சரியல்ல.
அழிஞ்சிலின் ஆங்கிலப் பெயர் Alangium Salviifolium. மலையாளத்தில் இதன் பெயர் அலஞ்சி என்றும் அதிலிருந்துதான் ஆங்கிலப் பெயர் ஏற்பட்டதென்றும் குறிப்பிடுகிறார்கள். அங்கோலா என வடமொழியில் குறிப்பிடப்படுவதால் மருத்துவத் தமிழில் இதற்கு அங்கோலம் என்றொரு பெயரும் உள்ளது.
இப்போதும் அழிஞ்சில் பழத்தை நேரில் பார்க்கவில்லை. செங்கா நத்தம் செல்லும் சாலையிலுள்ள மரத்தை அவ்வப்போது கவனித்துப் பார்த்து வருவதாகத் தீர்மானித்திருக்கிறேன்.
அழிஞ்சில் மரம் குறித்து சங்க இலக்கியப் பதிவு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. என்னிடமிருக்கும் பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களிலுள்ள அருஞ்சொற் பொருள் அகர நிரல்களில் அழிஞ்சில் என்ற சொல்லோ, அளிசு, அளிசம் என்ற சொற்களோ காணப் பெறவில்லை.
அளிசம் பழத்தை மூக்குச்சளிப்பழம், ஒட்டுப் பழம் என்றும் அழைப்பதாகச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இதன் பொருத்தப் பாடும் உறுதியாகத் தெரியவில்லை.
அளிசம் பழம் குறித்த இலக்கியப் பதிவு கிருஷ்ணன் நம்பியின் சிறுகதை ஒன்றாகத் தான் இருக்குமென நினைக்கிறேன்.
அழகியபாண்டிபுரம், கடுக்கரை, குறத்தியறை, காட்டுப் புதூர், பூதப்பாண்டி போன்ற ஊர்களிலிருப்போருக்கு (மேற்குமலைத் தொடர் அவர்களுக்குப் பக்கம்.) அளிசம் பழம் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அந்த நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டால் எல்லோருக்கும் பயனாகும் . நன்றி.
ச.ஆறுமுகம்.
முகநூல் பதிவு  23.03.2018 விருப்பம் 68, பகிர்வு 13 , பின்னூட்டம் 20

மரக்கழச்சி என்னும் கழற்சிக்காய்.

மரக்கழச்சி என்னும் கழற்சிக்காய்
நாஞ்சில் நாட்டு கிராமங்களில் அநேகமாக அனைத்து வீடுகளிலும் பெண்களுக்கான கழச்சி விளையாட்டுக்காக மரக்கழச்சி விதைகள் ஏழு இருக்கும். பெண்பிள்ளைகள் அதை வைத்துக்கொண்டு கழச்சி விளையாடுவது மிகச் சாதாரணமான காட்சியாக இருக்கும். மரக் கழச்சிக்குப் பதிலாக உருண்டையான கற்களைப் பயன்படுத்துவதுமுண்டு.
இந்தக் கழச்சி விளையாட்டு சங்க இலக்கியத்தில் `கழங்கு` எனக் குறிக்கப்படுகிறது. இந்த விளையாட்டுக்கான கழங்குகள் பொன்னால் செய்யப்பட்ட தாகவும் இருந்திருக்கின்றன எனக் குறிப்புகள் உள்ளன. முத்துக்களைக் கொண்டு கழங்காடியதாகவும் பாடல்களில் பாடியுள்ளனர். மரத்தைக் குடைந்து செய்த கழங்குகளும் இருந்துள்ளன. நாம் அவற்றைப் பார்த்ததில்லை.
கழங்கு விளையாட்டு பற்றிய சங்க காலச் செய்திகள்
கருவூரை அடுத்திருக்கும் ஆன்பொருநை (அமராவதி) ஆற்று மணலில் மகளிர் பொன் செய் கழங்கினால் தெற்றி விளையாடி மகிழ்ந்தனர். புறம்.36
நீர்ப்பெயற்று (தற்போதய மகாபலிபுரம்) என்பது ஒரு துறைமுகப் பட்டினம். அப்பட்டினத்து மாடங்களில் பந்து விளையாடிய மகளிர் மணல்வெளிக்கு வந்து கழங்கு ஆடினர். பெரும்பாணாற்றுப்படை - 331 -335
பாண்டிய நாட்டில் கடற்கரை மணலில் மகளிர் முத்துகளைக் கழங்காகப் பயன்படுத்தி, கூச்சலிட்டுக் கும்மாளம் போட்டுக்கொண்டு கழங்கு ஆடினர். சிலம்பு 27 - 245
கழங்கு முத்தின் அளவினதாக இருக்கும். அகம். 126 - 12 மற்றும் 173 - 15.
மரத்தைக் குடைந்து கழங்குக்காய்கள் செய்யப்படுவது உண்டு. அகம் 135 - 9
கழங்காடும்போது கழங்குக் காய்கள் மழையோடு இறங்கும் பனிக்கட்டி போல் இறங்கும். அகம் 334 - 8
பந்தும் கழங்கும் மகளிர் விரும்பியாடும் விளையாட்டுகள்.அகம் - 17, 49, 66, ஐங்குறுநூறு 377, பரிபாடல் 10 - 107
கழங்கு ஆயத்தோடு (தோழியர் கூட்டத்தோடு) விளையாடப்படும். அகம் 66, 17 - 2
கழங்காடும் திறமையில் காதல் அரும்புவதும் உண்டு. அகம் 66
கூரை வீட்டின் முன்புறம் ஈந்துப்புதர் ஓரத்தில் அமர்ந்துகொண்டு மகளிர் கழங்கு ஆடினர். நற்றிணை 79
செல்வச் சிறுமியர் கழங்காடுவர். போரின்போது கழங்காடு களம் அழிக்கப்படும். பதிற்றுப்பத்து 15 - 5
வேட்டுவர் தம் தெய்வம் கொற்றவைக்குப் படையல் செய்யும்போது கிளி, மயில் ஆகியவற்றுடன் தம் விளையாட்டுப் பொருள்களான பந்து, கழங்கு போன்றவற்றையும் சேர்த்துப் படையல் செய்தனர். சிலம்பு 12 - 1-35
கழங்கு கொண்டு நிமித்தம் கணிப்பதும் இருந்திருக்கிறது. (ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து)
மரக்கழச்சி விதைகள் அடர் சாம்பல் நிறத்தில் உருண்டையாகப் பார்ப்பதற்கு மிக அழகாகவே தோன்றும். தெரியாத நபரென்றால் நிச்சயமாக அது ஒரு விதை என நம்பமாட்டார். அவை உண்மையிலேயே தாவர விதைகள் தாமெனப் புரிந்தபோது ஏற்பட்ட வியப்பு இன்னும்கூட எனக்குத் தீர்ந்தபாடில்லைதான்.
இளங்கடைச் சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் தாழம் புதர்க் கூட்டம் ஒன்றையடுத்துச் செழித்துப் படர்ந்து வளர்ந்திருந்த மரக்கழச்சிச் செடியைப் பார்த்து, அதில் காய்கள் இல்லாமலிருந்ததைக் கண்டு வருத்தப் பட்டிருக்கிறேன். அப்படிச் செடியிலிருந்து மரக்கழச்சி விதைகளை நேரடியாகப் பறிக்க முடியாமற்போன ஏக்கம் இன்னும் கூட இருந்துகொண்டுதானிருக்கிறது.
மிதிவண்டி ஓட்டப் படித்தபின், ஒருமுறை எப்படியோ மிதிவண்டி இருக்கைக்கிடையில் விதைக் கொட்டையிலொன்று மாட்டி இலேசாகக் கசங்கி, வீங்கிவிட்ட து. அதற்குச் செய்த மருத்துவம் - மரக்கழச்சி இலைகளைப் பறித்துவந்து பெண்குழந்தையின் சிறுநீர் சேர்த்தரைத்து அடிபட்ட விதையில் பற்றுப் போட்டதுதான். மூன்றே நாட்களில் குணம் கிடைத்தது.
விளையாடும் போதோ, மிதிவண்டி ஓட்டும் போதோ, மாட்டு வண்டி போன்றவற்றிலிருந்து இறங்குவது அல்லது துள்ளி ஏறி உட்காரும்போதோ விதைக் கொட்டைகள் நசுங்கி வீங்கிவிடுவதுண்டு. அதற்கெல்லாம் கிராமத்து வைத்தியம் மரக்கழச்சி இலையும் பெண்குழந்தையின் சிறுநீரும் தான்.
மரக்கழச்சி இலை சரிதான். அதைப் பெண்குழந்தை சிறுநீரோடு சேர்த்துத்தான் அரைக்கவேண்டுமா, சாதாரணமாகத் தண்ணீர் ஊற்றி அரைத்தால் போதாதா என்ற கேள்வி எனக்குள் இப்போது எழுகிறது தான். ஆனால் அந்தக் காலத்தில் அப்படித்தான் அரைத்தார்கள்.
இந்த மரக்கழச்சி என்பதுதான் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கழற்சிக் காய், கழச்சிக் காய் எனப்படுகிறது. இதன் ஆங்கிலப்பெயர் caesalpinia bonduc என்பது. Fever nut என்றொரு பெயரும் உள்ளது. தமிழ் மருத்துவத்தில் மரக்கழச்சி விதைகளின் பயன் குறித்து வாசித்தால் இதுவும் ஒரு சர்வரோக நிவாரணி எனத் தெரியவருகிறது.

Saturday 17 March 2018

முருக்கு என்னும் முள் முருங்கை

முருக்கு என்ற முள்முருங்கை
எங்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள முள் முருங்கை மரம் ஒன்று இப்போது இலைகளை முழுதுமாக உதிர்த்துவிட்டுப் புலி நகங்களை ஒத்த சிவப்புப் பூக்களை ஏந்தி நிற்கிறது. பலமுறை அதன் பக்கமாகச் சென்றிருந்தாலும் இன்று மாலையில் தான் `அடடா, இது முள்முருங்கையாச்சே` என உறைத்தது.
இந்த முள்முருங்கையைக் கல்யாண முருங்கை என்றும் அழைப்பதுண்டு. எங்கள் ஊருக்குள் காட்டுப்புதூர் ஆச்சியின் வீட்டை ஒட்டிய அறுத்தடிப்புக் களம் முழுவதையும் நிறைத்துக்கொண்டு ஒரு மரம் நின்றிருந்தது. உபயோகமே இல்லாத இந்த மரத்தை எதற்கு வளர்க்கிறார்கள் என்று அப்போது நினைத்துக்கொள்வேன்.
ஒரு மாமரம் புளியமரமென்றால் காய் பறிக்கலாம். பூவரசு, உயிலை, வாராச்சி, மஞ்சணத்தி மரங்களென்றால் குழை அரக்கிப் பிசானத்தில் உரமாகப் பயன்படுத்தலாம். ஒரு பயனுமில்லாமல் இவ்வளவு இடத்தை அடைத்து வளர்கிற ஒரு மரம் எதற்கென்பது அந்தக் காலத்து அறியாத வயதில் என் நினைப்பு.
அந்தப் பாம்படம் போட்டிருந்த ஆச்சி அத்தனை பெரிய வீட்டில் தனியாகத்தான் இருந்தார்கள். கழுத்திலும் கூடத் தங்கச் செயின் போட்டிருப்பார்கள். வீட்டிலிருந்து களத்துக்கு இறங்கும் நடையில் நின்றுகொண்டு, சிலசமயம் படியில் அமர்ந்து அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு அந்த மரத்தின் மீது அவ்வளவு பிரியம் இருந்திருக்க வேண்டுமென்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அந்தத் தள்ளாத வயதுப் பாட்டியுங்கூட ஒருநாள் அந்த வீட்டிலேயே கொலைசெய்யப்பட்டுக் கிடந்தாள்.
வீட்டு வேலைக்காரப் பெண், எதிர்த்த வீடு, பக்கத்து வீட்டுக்காரர் எனப் பலர் காவல் துறை விசாரணையில் அல்லல்பட்டார்கள். ஆனாலும் மர்மம் விளங்கியபாடாக இல்லை. ஆகிவிட்டது, ஐம்பது, அறுபது வருடங்கள். மனிதர்கள் தாம் சிலநேரங்களில் எவ்வளவு கொடியவர்களாக நடந்துவிடுகிறார்கள்,
அதைப் போலவே இன்னொரு பாம்படப் பாட்டியும் அதற்கும் முன்னால் கொலைசெய்யப்பட்டிருந்தாள். இப்போதும் தனியாக வசிக்கும் வயதான, பாட்டி தாத்தாக்கள் கொலைகள் தொடரத்தான் செய்கின்றன. அந்தத் தகவல்களைக் கேள்விப்படும்போது மனம் பதறுகிறோம். வாழ்க்கையில் இது போன்ற மரணங்களை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்துவிட முடியவில்லை. அவை நம் ஆழ்மனதுக்குள் போய்த் தங்கிவிடுகின்றன.
அப்படியான கொலைகாரர்களை விடவும் கொடியவர்களல்லவா, பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள்! அவர்களிலும் கொடியவர்கள், அவர்களுக்கு மறைவாகத் துணைபோகும் அதிகாரவர்க்கத்தினர்.
முள் முருங்கை விதையைச் சூட்டுக்காயென்போம். அது நல்ல செம்பழுப்பில் புளியங்கொட்டையைப் போல உறுதியாக இருக்கும். அதை சிமென்ட் தரையிலோ, கரடுமுரடான கல்லிலோ உரசி தொடையில் வைத்து அமுக்கினால் தொடை பொத்துப்போகும். அவ்வளவு சூடு.
காம்பு ஒன்றுக்கு மும்மூன்று இலைகள் கொண்டது. ஒவ்வொரு இலையும் வேலின் உருவத்தை ஒத்திருக்கும். இந்த இலைகளை வளர்ப்பு முயல்களுக்கு உணவாகக் கொடுப்பதுண்டு. அவை இந்த இலைகளை விரும்பி உண்ணும் எனக் கூறுவர்.
சுடலைமாடன் கோவிலுக்கு ஆடு நேர்ந்து வளர்ப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்த முருகண்ணன், ஆட்டுக் கிடாய்க்கு நான்கு மரக் குழைகளைத் தான் அதிகமும் வைப்பார். 1. வாகை, 2. பூலாத்தி, 3. கொடுக்காப்புளி. 4. முள்முருங்கை. தோதகத்திக் குழை மிகவும் நல்லது; ஆனால் அதைப் பறிக்க மலைக்கல்லவா போகவேண்டுமென்பார்.
கடலோடும் கட்டுமரத்துக்கு இதன் அடிமரம் மிகவும் உகந்ததென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்த மரத்துக்கும் பல மருத்துவ குணங்கள் இருப்பதாகத் தமிழர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் இலைகள் கருப்பைச் சிக்கல்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுவதால் தான் இது கல்யாண முருங்கை என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்குறியின் முன்பகுதியில் தோன்றும் வெடிப்பு, புண் போன்றவற்றுக்கு இந்த மரத்தின் இலை பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு குறிப்பு உள்ளது.
இம்மரம் பற்றி சங்க இலக்கியக் காலத்திலும் தமிழர் நன்கு தெரிந்திருந்தனர். சங்க இலக்கியத்தில் கவிர் (பதிற். 11- 21) எனவும் முருக்கு எனவும், இம்மரம் குறிப்பிடப்படுகிறது. பலாசு, புரசு மரங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை.
முருக்கின் தாழ்ந்த கிளைகளிலுள்ள அழகிய நெருப்பு உதிர்ந்து அடர்ந்து பரந்துகிடக்கும் அடைகரைகளைக் கொண்ட பொய்கை என்பதை (பதிற். 23- 20) `முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறள் அடைகரை~ எனப் பதிற்றுப் பத்தின் 23 ஆம் பாடலிலுள்ள 20 ஆம் அடி குறிக்கிறது. முருக்கம் பூவை அழகிய நெருப்பென்றே குறிப்பிட்டிருப்பதை உன்னி உணர்ந்து மகிழ்க.
முருக்கு (நற். 73 – 1 (செம்முருக்கமரம்) வேனில் முருக்கின் விளை துணர் அன்ன மாணா விரல் வல் வாய்ப் பேய் என்னும் அடியில் பேயின் விரல்கள் முருக்கின் நெற்றுப் போல இருந்ததாகக் கூறப்படுகிறது.. முருக்கின் நெற்று கரிய நிறத்தில் முண்டு முண்டாக நான்கு அல்லது ஐந்து விதைகளுடன் வளைந்து கூரிய முனையுடன் இருப்பது. அதனால் பேயின் விரல்களுக்கு முள்முருங்கை நெற்று மிகச் சிறந்த உருவுவமம்
புறம். (169 – 10,11) `இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் பெருமரக்கம்பம் போல பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே.’ இளம் போர்வீரர்கள் அம்பு எய்து பயிற்சி பெறுவதற்கான இலக்காக முருக்கின் பெருமரக் கம்பத்தை நிறுத்தியிருக்கின்றனர் என்றும் அந்த இலக்கு உறுதியாக, அழிக்கமுடியாததாக இருந்துள்ளதென்றும் தெரிய வருகிறது. 
கலித்தொகை 33 இன் 3,4 அடிகளில் ” மணிபுரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல, பிணிவிடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக” பளிங்கு மணியை ஒக்கும் கண்ணாடிக்குள்ளே பவழம் அழுத்தப்பட்டுத் தோன்றினாற்போல  அழகிய குளங்களிலே அரும்பவிழ்ந்த முருக்கினது இதழ்கள் காம்பினின்றும் கழன்று வீழ்ந்து கிடந்தன எனக் குறிக்கப்படுகிறது. முருக்குன் பூக்கள் குளத்தில் விழுந்து கிடந்த தோற்றம் பளிங்கினுள் அழுத்தப்பட்ட பவழம் போன்றிருந்ததாம். குளத்து நீர் பளிங்குக் கண்ணாடிக்கும் முருக்கம் பூ பவளத்துக்குமாக உருவுமம். 

முள்முருங்கைக்கும் நமக்கும் எப்பேர்ப்பட்டதொரு உறவு இருந்திருக்கிறதென்று நினைத்துப் பார்க்கையில் பெரு மகிழ்வு ஏற்படத்தான் செய்கிறது.
- ச.ஆறுமுகம்
முகநூலில் 16.03 18 அன்று பதிவு. பகிர்வு 14, விருப்பம் 111, 

Thursday 15 March 2018

காக்கைகள்

காக்கைகள்
இந்த இரு காக்கைகளும் தினமும் காலை 10.00 மணிக்கு என் வீட்டுக்கு எதிர் வீட்டு மாடி பால்கனி கைப்பிடி கம்பியில் வந்து அமர்கின்றன. சில நேரங்களில் ஒன்றை ஒன்று கோதிக்கொள்கின்றன. ஒரு அரை மணி நேரம் கழித்துப் பறந்துவிடுகின்றன.
காலை உணவு முடிந்து ஆசுவாசமாக அமர்ந்து ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளுமோ! அன்பு கொள்ளுதல் ஒவ்வொரு உயிருக்கும் அவசியமான செயல்பாடு என்றுதான் கொள்ளவேண்டும்.
பக்கத்திலேயே என் வீட்டு வேப்ப மரம். அதில் அமர்வதாகத் தெரியவில்லை.
பேத்தியைப் பள்ளியில் விட்டுவிட்டு, வீட்டுவாசலுக்கு வந்ததும் என் பார்வை தானாகவே எதிர் வீட்டுப் பால்கனிக்குத் தாவுகிறது. காக்கை இரண்டும் அமர்ந்திருப்பது வழக்கமாகிவிட்டது.
இரண்டும் அதே காக்கைகள் என்பதை எப்படி உறுதியாகச் சொல்லமுடியுமென்கிறீர்களா? எல்லாமே அனுமானம் தான்.
காக்கை பாடினியார் நினைவும் எழுகிறது. வினை மேற்சென்ற தலைவன் வினை முடிந்து திரும்பி வந்தான். தோழியிடம் `நான் இல்லாத காலத்தை எப்படிக் கழித்தீர்கள் ? தலைவியை எப்படி ஆற்றுவித்தாய் ? எனக் கேட்கிறான். தோழி சொல்கிறாள் :
எல்லாவற்றுக்கும் இந்தக் காக்கை தான் காரணம் தலைவ! அது கரைவதைக் காட்டியே இன்று வந்துவிடுவாய், என்று சொல்லிச் சொல்லி ஆற்றுவித்தேன். அந்தக் காக்கைக்கு திண்தேர் நள்ளியின் காட்டில் மேய்ந்த பல பசுக்களும் தந்த நெய்யோடு தொண்டியில் விளைந்த வெண்ணெல்லில் சமைத்த சாதமும் கலந்து ஏழு கிண்ணங்களில் வைத்து பலிகொடுத்தாலும் கூட நன்றிக்கடன் செலுத்தியதாகாது எனக் கூறுகிறாள்.
பாடல் : குறுந்தொகை 210 - முல்லை.
திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.
விருந்து வரக் கரையும் காக்கையைச் சிறப்பித்துப் பாடியமையால் அந்தப் பெண் கவிஞரான நச்செள்ளையார் `காக்கை பாடினியார் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.
காக்கையில் தொடங்கிய பதிவு காக்கை பாடினியாருக்கு வந்து குறுந்தொகையில் முடிவுறுவது மகிழ்ச்சியாகத் தானிருக்கிறது. வாழ்க காக்கைகள்.
முகநூலில் 14.03 18 அன்று பதிவிடப்பட்டது. விருப்பம் 143 பகிர்வு 13 பின்னூட்டம் 33 

Tuesday 13 March 2018

ஆவாரம் பூ

ஆவாரம் பூ
எனது பித்தப்பையில் கற்கள் (Gall bladder stones) இருப்பதாகவும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றவேண்டுமெனவும் சி.எம். சி. மருத்துவமனையில் தெரிவித்தனர். அதனை அறிந்த என்னுடன் பணியாற்றிய நண்பர் திரு. டி. சுப்பிரமணி அவர்கள் அவருக்குத் தெரிந்த, பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சையின்றிக் குணப்படுத்தக் கூடிய இந்திய மருத்துவ முறைகள் அனைத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால், அவை எல்லாவற்றையும் தொடர்ந்து மேற்கொள்வதற்கான பொறுமை எனக்கு இல்லாமற் போனதால் ஒரு மூன்று மாதங்கள் கடந்து அறுவைசிகிச்சை மூலம் அகற்றிக் கொண்டேன். அதன் பின்னர் வயிறு, கல்லீரல் சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் இல்லை.
அந்த நேரத்தில் திரு. சுப்பிரமணி அவர்கள் எனக்காக ஆவாரம் பூ பறித்துவரச் செய்து இரண்டு மூன்று முறை கொணர்ந்து தந்து பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிடச் சொன்னார். அவர் மீதான நம்பிக்கை மற்றும் இவ்வளவு தூரம் வீடு தேடி வந்து உதவும் அன்புக்குக் கட்டுப்பட்டு ஆவாரம் பூவை பருப்பு சேர்த்து கூட்டாகச் சாப்பிட்டேன். அப்படி ஒன்றும் சுவையாக இல்லை. சாப்பிட முடியாத அளவுக்கு எந்தக்கூறும் இல்லை. என்றாலும் வேலூர் மார்க்கெட்டில், இப்போது உழவர் சந்தையில் ஆவாரம் பூவைக் காணும்போதெல்லாம் வாங்கிவந்து சமைத்து உண்பது பழகிவிட்டது.
இப்போது இந்தப் பதிவுக்காக ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள் பற்றித் தேடிய போது ஆவாரைச் செடியின் ஆங்கிலப் பெயர் Cassia Auriculata என்றும் இது இந்திய மருத்துவத்தில் நீரிழிவு, கண் (வெண்படலம்) தொல்லைகள், வாதம், தோல்நோய்கள், உடல் நாற்றம், மூச்சுக்குழாய் அழற்சி, தொழுநோய், கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுவதாகவும், அதனால் ஆவாரம் பூவின் சாறிலுள்ள வேதியியல் கூறுகளைக் கண்டறிய பெரும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் தெரிந்துகொள்ளமுடிந்தது. ஆவாரம் பூவில் தங்கத்தின் சாரம் இருப்பதாகவும் அதைத் தொடர்ச்சியாக உட்கொண்டால் உடல் பொன் நிறம் பெறுமென்றும் ஆவாரம் பூ நாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டும் இயல்புள்ளதால் இன்சுலின் மற்றும் சுரப்பிகளைத் தூண்டி நீரிழிவைக் குறைக்குமென்றும், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் தொல்லைகளைக் குறைக்குமென்றும் இந்திய மருத்துவத்தில் நம்பப்படுவதாகவும் தெரியவருகிறது.https://innovareacademics.in/…/ij…/article/viewFile/1785/994 என்ற இணைய முகவரியிலுள்ள சர்வதேச ஆராய்ச்சி முடிவினைப் படிக்கும்போது ஆவாரம் பூவில் Flavonoids +++ Tannins ++ Terpenoids ++ Alkaloids ++ Carbohydrates ++ Steroids ++ Coumarins + Phenols +++ Saponins + Glycosides Kellerkillani Test ++ வேதிக்கூறுகள் உள்ளனவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
ஆவாரம் பூ கூட்டு
ஆவாரம் பூவின் இதழ்களை மட்டும் பிரித்துச் சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும். வாணலியில் தண்ணீர் ஊற்றி ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்பினை வேகவைக்கவும். பருப்பு வேகும்போதே அதில் அரை தேக்கரண்டி, மஞ்சள் பொடி, அரை தேக்கரண்டி மிளகாய்ப் பொடி, அரை தேக்கரண்டி சீரகப்பொடி, ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பருப்பு ஓரளவுக்கு வெந்து மலரும் பருவத்தில் சுத்தம் செய்து வைத்திருக்கும் பூவினைச் சேர்த்து ஐந்து நிமிடத்தில் இறக்கிக் கொள்ளலாம். கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கும் போது ஒரு முழு வெங்காயத்தையும் அரிந்துபோட்டு வதக்கி அதிலேயே பருப்புக் கூட்டினையும் சேர்த்துக் கிளறி இறக்கிய பின்பு கொத்து மல்லித்தழை சிறிது கிள்ள்ளிப் போட்டுப் பரிமாறலாம்.
சுவையாகவே இருக்கும். நாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டுவதும், கல்லீரலை வலுப்படுத்துவதும், தோல் நோய் போக்குவதுமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன என உறுதிப்படும் போது ஆவாரம் பூவைச் சாப்பிடுவது பயனுள்ளது என்று நம்புகிறேன்.

எனக்குப் பழக்கமில்லை; மாட்டேன் என்பவர்கள் பற்றி நாம் என்ன கூறமுடியும் ?
முகநூலில் 11.03.18 அன்று 
பதிவிடப்பட்டது. 
விருப்பம் 113 பகிர்வு 131. பின்னூட்டம் 30

Sunday 11 March 2018

இனியும் வேண்டாமிந்தப் புளித்துப்போன சொற்கள் - No More Cliche

Octavio Paz

 No More Clichés - Poem by Octavio Paz

இனியும் வேண்டாமிந்தப் புளித்துப்போன சொற்கள்

அழகுமுகம்                                                                 சூரியனுக்கு இதழ் விரிக்கும் டெய்சி போலவே விரிந்து திறக்கிறது.                  நீயும் அப்படியே,                                                                     உன்முகம் திறக்கிறாய் எனக்கு, நான் பக்கத்தை மாற்றுவது போல.

கவர்ந்திழுக்கும்புன்னகை                                                              எந்தவொரு மனிதராகட்டுமே, உன் காலடியில்தான்                                    ஓ, இதழொன்றின் அழகு

எத்தனை கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன, உனக்கு?                                 எத்தனை தாந்தேக்கள் எழுதிவிட்டனர் உனக்கு, பியூட்ரைஸ்?                            துன்புறுத்தும் உனது மாயைக்கு                                                 மிகைக்கற்பனையை நீ விதைக்க
ஆனால், இன்று நான் மேலுமொரு புளித்த சொல்லை உருவாக்கி                  உனக்கு இந்தக் கவிதையை எழுதமாட்டேன்.                                    இல்லை, இனிமேலுமொரு புளித்த சொல் இல்லை.

ஒப்பனைத் தோற்றத்திலன்றி,                                                  இன்முகத்தில்,                                                                  அறிவுத்திறத்தில்,                                                                      ஒழுக்கப் பண்பினில்                                                           அழகினைக்கொண்ட பெண்களுக்கே இக்கவிதை அர்ப்பணம்.
இக்கவிதைஉங்களுக்கானது,                                                            
தினமும் சொல்வதற்கான புதிய கதையொன்றுடன் கண்விழிக்கும்       ஷெஹ்ராஜேடைப் போன்ற பெண்களுக்கானது                               
போருக்கான நம்பிக்கையை உருவாக்கும்                                               புதிய மாற்றத்தினைப் பாடுவதான ஒரு கதை :                                          ஒன்றிணைந்த மாமிசங்களின் காதலுக்கான போர்                          புதுநாளொன்று உசுப்பியெழுப்பிய கட்டிலடங்கா உணர்ச்சிகளின் போர்          புறக்கணிக்கப்பட்ட உரிமைகளின் போர்                                          அல்லது மேலுமொரு ஒற்றையிரவு ஜீவிதத்திற்கேயான போர்கள் 
ஆம். வலியின் உலகத்தில் வசிக்கும் பெண்களே, உங்களுக்குத்தான்                நாளும் குறையும் அண்டவெளியின் ஒளிநட்சத்திரமே, உனக்குத்தான்,    ஆயிரக்கணக்கான போர்களின் போராட்ட மங்கையே, உனக்குத்தான்,                     என் இதயத்தின் தோழியே, உனக்குத்தான்
இப்பொழுதிலிருந்து, இதழொன்றுக்காக என் தலை கீழ்நோக்கப்போவதில்லை     அதைவிட, 
இரவினையும் அதன் ஒளிமிகுந்த நட்சத்திரங்களையும் அண்ணாந்து பார்க்கும்.    அதனாலேயே, இனிமேலும் புளித்த சொற்கள் இல்லை.   
 Octavio Paz

 No More Clichés - Poem by Octavio Paz

No More Cliches    
  
Beautiful face
That like a daisy opens its petals to the sun
So do you
Open your face to me as I turn the page.
Enchanting smile
Any man would be under your spell,
Oh, beauty of a magazine.
How many poems have been written to you?
How many Dantes have written to you, Beatrice?
To your obsessive illusion
To you manufacture fantasy.
But today I won't make one more Cliché
And write this poem to you.
No, no more clichés.
This poem is dedicated to those women
Whose beauty is in their charm,
In their intelligence,
In their character,
Not on their fabricated looks.
This poem is to you women,
That like a Shahrazade wake up
Everyday with a new story to tell,
A story that sings for change
That hopes for battles:
Battles for the love of the united flesh
Battles for passions aroused by a new day
Battle for the neglected rights
Or just battles to survive one more night.
Yes, to you women in a world of pain
To you, bright star in this ever-spending universe
To you, fighter of a thousand-and-one fights
To you, friend of my heart.
From now on, my head won't look down to a magazine
Rather, it will contemplate the night
And its bright stars,
And so, no more clichés.
- Octavio Paz.

Thursday 8 March 2018

பேரகத்தி

பேரகத்தி
ஒருமுறை எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு தலையில் சொட்டை சொட்டையாக இரண்டு மூன்று இடங்களில் முடிகொட்டிவிட்டது. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த அவரை நண்பர் ஒருவர் சித்த மருத்துவர் ஒருவரிடம் அனுப்பினார். அவரோ மிக எளிதாக உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அகத்தி இலை போலவே வளர்ந்து கிடக்கும் பேரகத்தி இலையில் நான்கைந்தினை உப்போடு சேர்த்துக் கசக்கி அப்படியே சொட்டையில் தேய்த்துவிட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள் பார்க்கலாமென்றார். பேரகத்தி இலையை உப்போடு சேர்த்து சொட்டையில் தேய்க்க மூன்றாவது நாளே முடி முளைக்கத் தொடங்கியது. மீண்டும் அந்த மருத்துவரைப் பாரக்கப்போகவில்லை. மிகப் பெரிய மன உளைச்சல் பைசா செலவில்லாமல் தீர்ந்து முடிந்தது. அதன் பிறகு முடி கொட்டுவதும் நின்று விட்டது.
அந்த மருத்துவர் சொன்ன பிறகுதான் இதன் பெயர் பேரகத்தி எனத் தெரிய வந்தது. அது வரையிலும் ஏதோ காட்டுச் செடி என்றுதான் நினைத்திருந்தேன். உங்கள் பகுதியிலும் இந்தப் பேரகத்தி செழித்து வளரலாம்.
அகத்தி போலிருப்பதால் பேரகத்தி எனப் பெயரிட்டிருக்கிறார்கள் போலும். இது மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து இங்கு வந்த்தென்பதால் சீமையகத்தி என்றும் அழைக்கப்படுகிறது.
இதைப் போல் சிற்றகத்தி என்ற ஒரு மரத்தைச் சில வீடுகளில் வளர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். அதன் பூக்கள் கருநீலத்திலிருக்கும். அந்தப் பூக்களை தலைக்குத் தேய்க்கும் தேங்காயெண்ணெய்க்குள் போட்டு வைத்திருப்பார்கள்.
சிற்றகத்தி இலைகளைப் பறித்து, உரலில் இட்டுச் சாறு பிழிந்து, அந்தச் சாற்றை தேங்காயெண்ணெஞோடு சேர்த்து காய்ச்சி, தினமும் தலைக்குத் தேய்க்கும் எண்ணெயாகப் பயன்படுத்துவதையும் பார்த்திருக்கிறேன்.
சாதாரணமாக நாம் சமையலுக்குப் பயன்படுத்துவதும் மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துவதும் தனி வகை.

இது தவிர மணிலா அகத்தி என்றொரு பசுந்தாள் உர வகையும் இருக்கிறது. 

(முகநூல் பதிவு 21.02.2018) விருப்பம் - 131, பகிர்வு 110 பின்னூட்டம் 32.