Tuesday 6 March 2018

சங்க இலக்கியத் துளிகள் - 13

சங்க இலக்கியத் துளிகள் - 13
மெய் புகுவன்ன கைகவர் முயக்கம்
பாலை - கற்பு நிலையில் பிரிவு
தலைவன் பொருள்தேடும் முயற்சியில் தலைவியைப் பிரிந்துசெல்கிறான். அவனது பிரிவால் உடலும் உள்ளமும், வெம்ப, தலைவியின் சிந்தனை, தலைவன் செல்லும் காடு, அதன் வெப்பம், மரம், செடி, கொடி, பூக்கள், நிலம், குளம், வறட்சி, தலைவனின் கைகள், முயக்கம் எனத் தலைவனையே சுற்றிச் சுற்றி, வர, அவன் தன்னையும் உடன் அழைத்துச் சென்றிருக்கலாமேயென நினைந்து, நினைந்து, வெய்துயிர்த்துப் பெரிதும் துன்புறுகின்ற தலைவியைக் கண்டு, அவளது தோழி மனம் வருந்துகின்றாள். தலைவன், தன்னையும் கூடவே அந்தக் காட்டுவழியில் அழைத்துச் சென்றிருக்கலாமேயென்ற தன் ஆற்றாமையைத் தோழியிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் தன்னை ஆற்றிக்கொள்கிறாள் :
நெருப்பெனச் சிவந்த கதிரொளி சுட்டெரிக்கும் வெப்பம் மிகுந்த காடுதான். ஆனாலும் அங்கே இலையுமில்லாமல், மொட்டுமில்லாமல் பூக்கள் மட்டுமே விரிந்திருக்கும் இலவமரங்கள், மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தின் கார்த்திகை விளக்கு வரிசையாக அழகு பொலிய நிற்கும். குளங்களெல்லாம் துகள் பறக்க வளமழிந்த சோலை வழியே நாங்கள் சென்றாலும், நமது புதிய வெண்ணிற மார்க்கச்சைகளை விரித்தாற் போல, மேடுமேடாக மணல் பாய்ந்து கிடக்கும் காட்டாற்றில், `கம்`மென்று மணம் வீசும் பூங்கொத்துகள் பொருந்திய தாழ்ந்த மரக்கிளைகளின் மறைவில் மணற் பூ மஞ்சத்தில், உடலுக்குள் உடல் புகுவது போன்ற கைகவர் முயக்கத்தை அவரும் பெறுவாரன்றோ! அப்படி அவர், அழைத்துச் சென்றிருந்தால், நீரொழுகும் ஒளிப்பூக்களை ஒத்திருக்கும் என் கண்களும் நீரற்ற குளத்துக்குள் நீர் பாய்ச்சும் மதகுகள் போல் நீரை வார்க்காமல் உறங்கியிருக்குமே!
பாடல் :

வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி, 5
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப்
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் 10
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர,
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல ஆகி,
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! 15
தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்'என்பது படச் சொல்லியது.
- அவ்வையார், அகம். 11. பாலை

அருஞ்சொற் பொருள் : - வயங்கு – தானாகவே ஒளிர்கிற, விளங்கித் தெரிகிற; உருப்பு – வெப்பம்; அவிர் – மிகுந்துவிளங்கும்; முகை – மொட்டு; இலவம் – இலவமரம்; கலிகொள் ஆயம் – ஆரவார மகிழ்ச்சி கொண்ட மகளிர் குழாம்; மலிபு தொகுபு எடுத்த – ஏராளமாகத் தொகுத்தடுக்கிய, அம் சுடர் நெடுங்கொடி – அழகிய விளக்குகள் கொண்ட நெடுவரிசையென; பொற்பத் தோன்றி – பொலிவுடன் தோன்றும்; கயம் துகள் ஆகிய பயம்தபு கானம் – நீர்நிலைகளெல்லாம் துகள் பறக்குமாறு பயன்களெல்லாம் அழிந்த காட்டுவழியில்; எம்மொடு கழிந்தனர் ஆயின் – என்னையும் அழைத்துச் சென்றிருந்தால், கம் மென – நறுமணமும் அமைதியும் பொருந்திய; வம்பு விரித்தன்ன – புதிய வெண்ணிற மார்க்கச்சைகளை விரித்தாற் போன்று மேடுமேடாக; பொங்கு மணற் கான் யாற்று – மணல் பாய்ந்துகிடக்கும் காட்டாற்றில்; படுசினை தாழ்ந்த – தாழ்ந்து கிடக்கும் மரக்கிளைகள்; பயில் இணர் எக்கர் – உதிர்த்த பூங்கொத்துகளாலான மணற்பூம்பரப்பில்; மெய் புகுவு அன்ன – உடலுக்குள் உடல் புகுவது போலான; கை கவர் முயக்கம் – கைகள் பிணையும் இன்பத்தினை; அவரும் பெறுகுவர் மன்னே – அவரும் பெறுவாரன்றோ; நயவர – அன்பு மீதூர; நீர்வார் நிகர் மலர் கடுப்ப – ஒளிபொருந்திய, நீரொழுகும் பூக்கள் போன்ற; ஓ மறந்து – மதகுகள் தம்மை மறந்து, மறிந்து பாய்ந்து; அறுகுளம் நிறைக்குந போல – நீரற்ற குளத்தை நிறைப்பது போல; அல்கலும் அழுதல் மேவல ஆகி – பொழுதெல்லாம் அழுவதை நிறுத்தி; பழிதீர் கண்ணும் படுகுவமன்னே – குற்றமற்ற கண்களும் உறக்கம் கொள்ளுமே!

பொழிப்புரை :
வானத்தில் நகர்கின்ற சுடரொளி மண்டலத்துக் கதிர், நெருப்பெனச் சிவக்கக் காட்டில் வெப்பம் மிகுந்திருக்கும். ஆனாலும், அங்கே, இலைகளும் இல்லாமல் மொட்டுகளும் இல்லாமல் பூத்திருக்கிற இலவமரங்கள், ஆரவார மகிழ்ச்சிகொண்ட மகளிர், ஏராளமான விளக்குகளைத் தொகுத்தடுக்கிய அழகாகச் சுடர்கின்ற நெடுவரிசையென அழகுறத் தோன்றும். வழியிலுள்ள குளங்களோ துகள் பறக்குமாறு பயன்களெல்லாம் அழிந்த காட்டு வழியில் என்னை அழைத்துச் சென்றிருந்தால், அங்கே நறுமண அமைதி பொலிந்திருப்பதும், வெண்ணிறப் புதிய மார்க்கச்சையினை விரித்ததுபோல் மேடு,மேடாக, மணல் பரந்து கிடக்கும் காட்டாற்றில் மரக்கிளைகள் தாழ்ந்து, பூங்கொத்துகள் நெருக்கமாகச் சிதறிக்கிடக்கும் மணற்பூம்பரப்பில், உடலுக்குள் உடல் புகுகின்ற முயக்கத்திற்கொப்பாக, இருவர் கைகளும் அன்பு மீதூரப் பிணைந்துகொள்ளும் இன்பத்தினை, அவரும் பெற்றிருப்பாரன்றோ! நீர் ஒழுகும் ஒளிபொருந்திய மலர் போன்ற என் குற்றமற்ற கண்கள், வறண்ட குளத்திற்குத் தன்னை மறந்து நீரினைப் பாய்ச்சி நிறைக்கின்ற மதகுகள் போலப் பொழுதெல்லாம் அழுவதை விலக்கி உறக்கம் கொள்ளும். (ஆனாலும் என்ன, என்னையும் அழைத்துச் செல்லாமல் விட்டுவிட்டார். அவர் வரும்வரையில் ஆற்றியிருப்பேன்.)
கவிதை நயம் :
தலைவியின் உள்ளம் வெந்து கிடப்பதற்கொப்பவே காட்டிலும் அனல் வீசிக் கிடப்பதை, நெருப்பெனச் சிவந்து வெப்பம் வீசுவதை, உருப்பு அவிர் அம் காடு எனச் சுட்டுகிறது.
அந்த வெம்மைக்குள்ளும் கருகிவிடாமல், தலைவிக்குள் துடிக்கும் இதயம் போலவே இலையுமில்லாமல், மொட்டுமில்லாமல் விரிந்திருக்கும் மலர்களைக் கொண்ட இலவமரங்கள், மகிழ்ச்சிமிக்க மகளிர் ஆரவாரம் பொங்க ஏற்றிய விளக்குகளின் நெடுவரிசை போல் அழகுறத் தோன்றுகின்றன. அதைப் போலவே அவளுக்குள்ளும் அழகு பொலிந்துகிடக்கிறது.
கயம் நீரற்றுத் துகளாகிப் பயன்களை இழந்து கிடக்கும் கானம் போலவே தலைவன் இல்லாமல் தலைவியின் பொழுதுகளும் பயனற்றுக் கழிகின்றன.
அத்தகைய காட்டுவழியெனினும் ஓய்வுகொண்டு, மறுபடியும் செலவினை மேற்கொள்வதற்கான இடமும் உள்ளதை, உடலுக்குள் உடல் புகுவது போன்ற கைகவர் முயக்கத்தை இருவரும் பெறுவதற்கு வழி இருந்தும் பயன்கொள்ள இயலாமற்போனதேயென்ற ஏக்கம் வெளிப்பட, அவர் தன்னையும் அழைத்துச் சென்றிருக்கக் கூடாதா என வெய்துயிர்ப்பதான துயரம் வெளிப்படையாக உணர்த்தப்படுகிறது.
நீரொழுகும் ஒளிமலர் - நீர்மல்க ஒளி வீசும் கண்களுக்கு உருவுவமமாக ஒப்பாவதும், நீரற்ற குளத்துக்குப் பாயும் மதகு போல் அத்தனை வேகமாகவும் அதிகமாகவும் நீர் வார்க்கின்ற தலைவியின் கண்களுக்கு அற்புதமான வினையுவமமாவதும் உன்னி உணர்ந்து மகிழத் தக்கதன்றோ.

அவ்வையாரின் இக்கவிதையில் நாம் அறிந்துகொள்ளக் கிடக்கும் செய்திகள்.

1. கோடையில் கானம் பயனிழந்து கிடக்கின்ற நிலையிலும் இலவமரங்கள் இலையுமில்லாமல் மொக்குமில்லாமல் சிவந்த பூக்களை மட்டும் தாங்கி நிற்கும்.
2. பெண்கள் ஏராளமான விளக்குகள் அடுக்கி கார்த்திகைத் திருநாள் கொண்டாடும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment