Saturday 17 March 2018

முருக்கு என்னும் முள் முருங்கை

முருக்கு என்ற முள்முருங்கை
எங்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள முள் முருங்கை மரம் ஒன்று இப்போது இலைகளை முழுதுமாக உதிர்த்துவிட்டுப் புலி நகங்களை ஒத்த சிவப்புப் பூக்களை ஏந்தி நிற்கிறது. பலமுறை அதன் பக்கமாகச் சென்றிருந்தாலும் இன்று மாலையில் தான் `அடடா, இது முள்முருங்கையாச்சே` என உறைத்தது.
இந்த முள்முருங்கையைக் கல்யாண முருங்கை என்றும் அழைப்பதுண்டு. எங்கள் ஊருக்குள் காட்டுப்புதூர் ஆச்சியின் வீட்டை ஒட்டிய அறுத்தடிப்புக் களம் முழுவதையும் நிறைத்துக்கொண்டு ஒரு மரம் நின்றிருந்தது. உபயோகமே இல்லாத இந்த மரத்தை எதற்கு வளர்க்கிறார்கள் என்று அப்போது நினைத்துக்கொள்வேன்.
ஒரு மாமரம் புளியமரமென்றால் காய் பறிக்கலாம். பூவரசு, உயிலை, வாராச்சி, மஞ்சணத்தி மரங்களென்றால் குழை அரக்கிப் பிசானத்தில் உரமாகப் பயன்படுத்தலாம். ஒரு பயனுமில்லாமல் இவ்வளவு இடத்தை அடைத்து வளர்கிற ஒரு மரம் எதற்கென்பது அந்தக் காலத்து அறியாத வயதில் என் நினைப்பு.
அந்தப் பாம்படம் போட்டிருந்த ஆச்சி அத்தனை பெரிய வீட்டில் தனியாகத்தான் இருந்தார்கள். கழுத்திலும் கூடத் தங்கச் செயின் போட்டிருப்பார்கள். வீட்டிலிருந்து களத்துக்கு இறங்கும் நடையில் நின்றுகொண்டு, சிலசமயம் படியில் அமர்ந்து அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு அந்த மரத்தின் மீது அவ்வளவு பிரியம் இருந்திருக்க வேண்டுமென்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அந்தத் தள்ளாத வயதுப் பாட்டியுங்கூட ஒருநாள் அந்த வீட்டிலேயே கொலைசெய்யப்பட்டுக் கிடந்தாள்.
வீட்டு வேலைக்காரப் பெண், எதிர்த்த வீடு, பக்கத்து வீட்டுக்காரர் எனப் பலர் காவல் துறை விசாரணையில் அல்லல்பட்டார்கள். ஆனாலும் மர்மம் விளங்கியபாடாக இல்லை. ஆகிவிட்டது, ஐம்பது, அறுபது வருடங்கள். மனிதர்கள் தாம் சிலநேரங்களில் எவ்வளவு கொடியவர்களாக நடந்துவிடுகிறார்கள்,
அதைப் போலவே இன்னொரு பாம்படப் பாட்டியும் அதற்கும் முன்னால் கொலைசெய்யப்பட்டிருந்தாள். இப்போதும் தனியாக வசிக்கும் வயதான, பாட்டி தாத்தாக்கள் கொலைகள் தொடரத்தான் செய்கின்றன. அந்தத் தகவல்களைக் கேள்விப்படும்போது மனம் பதறுகிறோம். வாழ்க்கையில் இது போன்ற மரணங்களை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்துவிட முடியவில்லை. அவை நம் ஆழ்மனதுக்குள் போய்த் தங்கிவிடுகின்றன.
அப்படியான கொலைகாரர்களை விடவும் கொடியவர்களல்லவா, பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள்! அவர்களிலும் கொடியவர்கள், அவர்களுக்கு மறைவாகத் துணைபோகும் அதிகாரவர்க்கத்தினர்.
முள் முருங்கை விதையைச் சூட்டுக்காயென்போம். அது நல்ல செம்பழுப்பில் புளியங்கொட்டையைப் போல உறுதியாக இருக்கும். அதை சிமென்ட் தரையிலோ, கரடுமுரடான கல்லிலோ உரசி தொடையில் வைத்து அமுக்கினால் தொடை பொத்துப்போகும். அவ்வளவு சூடு.
காம்பு ஒன்றுக்கு மும்மூன்று இலைகள் கொண்டது. ஒவ்வொரு இலையும் வேலின் உருவத்தை ஒத்திருக்கும். இந்த இலைகளை வளர்ப்பு முயல்களுக்கு உணவாகக் கொடுப்பதுண்டு. அவை இந்த இலைகளை விரும்பி உண்ணும் எனக் கூறுவர்.
சுடலைமாடன் கோவிலுக்கு ஆடு நேர்ந்து வளர்ப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்த முருகண்ணன், ஆட்டுக் கிடாய்க்கு நான்கு மரக் குழைகளைத் தான் அதிகமும் வைப்பார். 1. வாகை, 2. பூலாத்தி, 3. கொடுக்காப்புளி. 4. முள்முருங்கை. தோதகத்திக் குழை மிகவும் நல்லது; ஆனால் அதைப் பறிக்க மலைக்கல்லவா போகவேண்டுமென்பார்.
கடலோடும் கட்டுமரத்துக்கு இதன் அடிமரம் மிகவும் உகந்ததென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்த மரத்துக்கும் பல மருத்துவ குணங்கள் இருப்பதாகத் தமிழர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் இலைகள் கருப்பைச் சிக்கல்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுவதால் தான் இது கல்யாண முருங்கை என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்குறியின் முன்பகுதியில் தோன்றும் வெடிப்பு, புண் போன்றவற்றுக்கு இந்த மரத்தின் இலை பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு குறிப்பு உள்ளது.
இம்மரம் பற்றி சங்க இலக்கியக் காலத்திலும் தமிழர் நன்கு தெரிந்திருந்தனர். சங்க இலக்கியத்தில் கவிர் (பதிற். 11- 21) எனவும் முருக்கு எனவும், இம்மரம் குறிப்பிடப்படுகிறது. பலாசு, புரசு மரங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை.
முருக்கின் தாழ்ந்த கிளைகளிலுள்ள அழகிய நெருப்பு உதிர்ந்து அடர்ந்து பரந்துகிடக்கும் அடைகரைகளைக் கொண்ட பொய்கை என்பதை (பதிற். 23- 20) `முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறள் அடைகரை~ எனப் பதிற்றுப் பத்தின் 23 ஆம் பாடலிலுள்ள 20 ஆம் அடி குறிக்கிறது. முருக்கம் பூவை அழகிய நெருப்பென்றே குறிப்பிட்டிருப்பதை உன்னி உணர்ந்து மகிழ்க.
முருக்கு (நற். 73 – 1 (செம்முருக்கமரம்) வேனில் முருக்கின் விளை துணர் அன்ன மாணா விரல் வல் வாய்ப் பேய் என்னும் அடியில் பேயின் விரல்கள் முருக்கின் நெற்றுப் போல இருந்ததாகக் கூறப்படுகிறது.. முருக்கின் நெற்று கரிய நிறத்தில் முண்டு முண்டாக நான்கு அல்லது ஐந்து விதைகளுடன் வளைந்து கூரிய முனையுடன் இருப்பது. அதனால் பேயின் விரல்களுக்கு முள்முருங்கை நெற்று மிகச் சிறந்த உருவுவமம்
புறம். (169 – 10,11) `இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் பெருமரக்கம்பம் போல பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே.’ இளம் போர்வீரர்கள் அம்பு எய்து பயிற்சி பெறுவதற்கான இலக்காக முருக்கின் பெருமரக் கம்பத்தை நிறுத்தியிருக்கின்றனர் என்றும் அந்த இலக்கு உறுதியாக, அழிக்கமுடியாததாக இருந்துள்ளதென்றும் தெரிய வருகிறது. 
கலித்தொகை 33 இன் 3,4 அடிகளில் ” மணிபுரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல, பிணிவிடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக” பளிங்கு மணியை ஒக்கும் கண்ணாடிக்குள்ளே பவழம் அழுத்தப்பட்டுத் தோன்றினாற்போல  அழகிய குளங்களிலே அரும்பவிழ்ந்த முருக்கினது இதழ்கள் காம்பினின்றும் கழன்று வீழ்ந்து கிடந்தன எனக் குறிக்கப்படுகிறது. முருக்குன் பூக்கள் குளத்தில் விழுந்து கிடந்த தோற்றம் பளிங்கினுள் அழுத்தப்பட்ட பவழம் போன்றிருந்ததாம். குளத்து நீர் பளிங்குக் கண்ணாடிக்கும் முருக்கம் பூ பவளத்துக்குமாக உருவுமம். 

முள்முருங்கைக்கும் நமக்கும் எப்பேர்ப்பட்டதொரு உறவு இருந்திருக்கிறதென்று நினைத்துப் பார்க்கையில் பெரு மகிழ்வு ஏற்படத்தான் செய்கிறது.
- ச.ஆறுமுகம்
முகநூலில் 16.03 18 அன்று பதிவு. பகிர்வு 14, விருப்பம் 111, 

No comments:

Post a Comment