Saturday 10 September 2016

நாடக விமர்சனம் - பிரளயனின் `யானை காணாமலாகிறது ` நாடக விமர்சனம்

யானை காணாமலாகிறது – முரகாமியின் சிறுகதையும் பிரளயனின் நாடகமும் 

(ஹாருகி முரகாமியின் The Elephant Vanishes சிறுகதையினை `யானை காணாமலாகிறது` என்ற பெயரில் நான் தமிழாக்கினேன். இக்கதை மலைகள் இணைய இதழில் வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதனை வாசித்து `விருப்பமானதென` அடையாளமும் இட்டிருந்தனர். 2013 இல் மலைகள் பதிப்பகம் இக்கதையினை `யானை காணாமலாகிறது ` என்ற தொகுப்பு நூலில் சேர்த்து வெளியிட்டது. இதனை வாசித்த சென்னை கலைக்குழு புகழ் பிரளயன் நாடகமாக்கினார். இந்த நாடகம் 19.04.1014 அன்று ஓசூரில் நிகழ்த்தப்பட்டது. தற்போது அதே நாடகம் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெங்களூருவில் இன்று (10 -09 - 2016) நிகழ்த்தப்படுகிறது.)

19.04.2014 அன்று ஓசூர் டி.வி.எஸ் அகடமியில் xi, x. xi மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட `யானை காணாமலாகிறது` நாடகம், ஹாருகி முரகாமியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது,
ஹாருகி முரகாமியின் சிறுகதையில் டோக்கியோ ஊரகத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த உயிரியல் பூங்கா ஒன்று நொடித்துப்போகவும், அதனை மனை விற்பனையாளர் ஒருவர் அந்த நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்காக வாங்குகிறார். மட்டு மீறி வயதான ஒரு கிழட்டு யானையைத்தவிர இதர மிருகங்களுக்கெல்லாம் வெவ்வேறு புகலிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அனுப்பப்பட்டுவிடுகின்றன.
யானையை மட்டும் யாருமே வாங்க முன்வரவில்லை. அவ்வளவு பெரிய மிருகத்தைத் தீர்த்துக்கட்டவும் முடியாது. அதனால் அடுக்குமாடி அமைக்கும் திட்டம் காலதாமதமாகிறது. யானையை நகரமே தத்தெடுக்கலாமென  முடிவுசெய்கிற நிர்வாகம் அடுக்குமாடிக் கட்டிடங்கள் மூலம் நகர்மன்றத்துக்கு வருவாய் பெருகுமென்றும் யானையை நகரமே தத்தெடுத்துக்கொண்டால், நகரத்தின் சிறந்த அடையாளமாக யானையே மாறி, நகரத்துக்கு பெருமதிப்பும் பாராட்டும் கிடைக்குமென்றும் பரப்புரை செய்கிறது, பல்வேறு நலப்பணிகள் நிலுவையிலிருக்கும்போது யானையைத் தத்தெடுப்பதில் உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப் பரப்புரை நிகழ்த்துவதோடு இதில்  மனைமேம்படுத்துநர் நலனோடு மேயரைத் தொடர்புபடுத்தி ஊழல் குற்றச்சாட்டும் சுமத்துகின்றன.  ஆனாலும்  யானையைத் தத்தெடுக்கும் தீர்மானம் நகர்மன்றத்தில் எப்படியோ  நிறைவேறி விடுகிறது. மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்று வெட்டித் தூய்மையாக்கப்பட்டு யானைக் கொட்டாரம் அமைக்கப்படுகிறது. யானைக் கூடாரத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியாக மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த விழாவில் யானை குறித்த ஓவியம் கட்டுரை மற்றும்  பேச்சுப் போட்டிகள் நிகழ்கின்றன. மேயர், நாட்டு நலன் மற்றும் கலைவளம் குறித்து இலக்கியப் பேருரை ஒன்று நிகழ்த்துகிறார். விழா முடிவில் யானைக்கு ஒரு குலை வாழைப்பழம் கொடுக்கின்றனர். யானையும் அதன் பாகன் 85 வயது வட்டனாபேயும் கொட்டாரத்திலேயே தங்குகின்றனர். யானைக் கொட்டாரம் அமைந்துள்ள பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் உண்டு மிகுதியாகிப் போன எச்சில்  உணவு யானைக்கு அளிக்கப்படுகிறது. யானையைப் பார்த்து ஓவியம் வரைவது அப்பகுதிப் பள்ளிகளில் ஒரு கட்டாய வகுப்பாகவே ஆகிவிடுகிறது. பொதுமக்களும் யானையை வந்து பார்ப்பது ஒரு பொழுதுபோக்காக மாறுகிறது. சிறிது காலம் கழித்து ஒருநாள் யானை காணாமற்போய் விட்டதாகச் செய்தி வெளியாகிறது. பாகன் என்னவானாரென்றும் தெரியவில்லை. யானையின் கால் சங்கிலி கட்டுத்தறியோடு பூட்டியது பூட்டியவாறே  கிடக்கிறது. கொட்டாரத்தின் வாயிற் கதவுகளும் பூட்டியே உள்ளன. இரு பூட்டுகளின் சாவிகளும், ஒன்று மாவட்ட காவல் அலுவலகத்திலும், மற்றொன்று மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திலுமாக வைத்தது வைத்தபடியே பாதுகாப்பாக இருக்கின்றன.  அந்தப் பகுதியின் மண், குழைவு மிக்கதாக இருந்தாலும் யானையின் காலடித்தடங்கள் எங்குமே பதிவாகவில்லை. ஆனாலும் யானையைக் காணவில்லை. எப்படியும் யானையைக் கண்டுபிடித்து விடுவதாகச் சொல்லி அரசு நிர்வாகம், காவல்துறை, தேசிய தற்காப்புப் படை அனைத்தையும் முடுக்கிவிடுகிறது. ஊடகங்கள் நிலைமையைப் பரபரப்பாக்கிக் காட்டுகின்றன. பொதுமக்கள் அச்சமும் பீதியும் கொள்வதாக, குழந்தைகளை வெளியில் விளையாட தாய்மார்கள் அனுப்ப மறுப்பதாக தொலைக்காட்சிச் செய்திகள் வெளியாகின்றன. இதில் சம்பந்தப்பட்டுள்ள நாட்டுத் துரோகிகளும் நாசகாரக் கும்பல்களும் அம்பலப்படுத்தப்படுவார்களென மேயர் பேட்டியளிக்கிறார். சில மாதங்கள் கழிய, பரபரப்பான அனைத்தும் போலவே யானைக் கதையும் மறக்கப்பட்டுவிடுகிறது.
இப்படியான நிலையில் நவீன சமையலறைக் கலங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றுபவரும் இச்சிறுகதையின் கதைசொல்லும் பாத்திரமுமான இளைஞன் அலுவலக வேலையாக ஒரு பெண்ணைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்பெண்ணை மது அருந்தகத்துக்கு அழைத்துச் சென்று ஒருவரையொருவர் விரும்புகின்ற வகையில் உரையாடும்போது,  சமையலறையின் பழைய பொருட்கள் தற்போதைய சூழலோடு ஒருங்கமைவு கொள்ளாத போது  காணாமற்போகின்றன என விவரிக்கிறான். அதைத் தொடர்ந்த உரையாடல் காணாமற்போன  யானையின் கதைக்கு மாறுகிறது. அவள் கதையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளாதவளாக, வீட்டுப் பூனை ஒன்று காணாமற் போனதைப்பற்றிக் குறிப்பிடுகிறாள். கதைசொல்லும் இளைஞன் யானை மீதான ஆர்வத்தில் பல நாட்களிலும் மாலை நேரங்களில் யானையை கொட்டாரத்தின் பின்பக்கத்திலிருந்த மலை மீதேறிக் கவனித்து வந்ததாகவும் யானைக்கும் பாகனுக்குமிடையே மிகப் பண்பட்ட உறவு நிலவியதாகவும் யானை மட்டும் சிறுத்துக்கொண்டே போனதாகவும், பாகன் உருப்பெருக்கமடைந்தது போலவும் தெரிவிக்கிறான். அப்படியென்றால் யானை தினமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுத்து தன்னைத் தானே இரும்பு வளையத்திலிருந்து விடுவித்துக்கொண்டு, வாயிற் கதவுகளின் கம்பி வழியே தப்பிச் சென்றுவிட்டதென்கிறீர்களாவெனக் கேட்கிறாள். அப்படித் திட்டவட்டமான பதில் எதுவும் சொல்லாத இளைஞன்  யானை தன்னைத் தானே காணாமலாக்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றமேற்படும்படியாகப் பதிலளிக்கிறான்.
இந்தக்கதை அரசியல் நிர்வாக, அதிகார வர்க்கத்தினரின் அறிவிப்புகள், அரசியல் உரைகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது யானை தன்னைத் தானே காணாமலாக்கிக் கொள்வது போன்ற நிகழ்வுகள்தாம் நடக்குமெனத் தெரிவிப்பதன் வாயிலாகக் கடுமையான எள்ளலை நிகழ்த்திக் காட்டுகிறது. இக்கதையை எந்த நாட்டு அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளோடு பொருத்திப் பார்த்தாலும் அந்த அதிகார வர்க்கத்தின் ஊழலைத் தோலுரித்துக் காட்டும் வேலையைச் செய்கிறது. இங்கே யானை காணாமலாவது என்ற குறியீட்டின் வாயிலாக அரசியல் நிர்வாகத்தின் சுயநோக்குத் தன்மையும் அது குறித்து சரியான புரிதல் இல்லாததும் அக்கறையற்றதுமான மக்கள் நிலையும்  உணர்த்தப்படுகிறது.         
 பிரளயனின் முயற்சி, இந்தச் சிறுகதையை நாடகமாக்கிக் காட்டுவதோடு,  வளர்ச்சி என்ற பெயரில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதும் இயற்கைவளம் சுரண்டப்படுவதும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அபாயங்களும், அதன் விளைவாக காட்டுயிர்கள் அவற்றின் வாழிடங்களை இழந்து தவிப்பதையும், மனிதர்களின் குடியிருப்புக்குள் வரவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதையும் இதனால் ஏற்படும் மனிதன் X காட்டுயிர் மோதல்களையும் பற்றி சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.     
முதல் காட்சியாக, இயற்கையோடியைந்த யானைகளின் வாழ்க்கையும் அவற்றின் இருப்பிடமான காடுகள் அழிக்கப்படுவதும் பணி செய்வதற்காக யானைகள் பிடிக்கப்பட்டு கொடூரமான முறையில் பழக்கப்படுத்தப்படுவதையும், அந்த நடைமுறையில் சில யானைகள் பரிதாபமாக உயிரிழப்பதும், யானைகளின் வாழ்வு மற்றும் இயற்கை மீதான மனிதனின் வன்முறையினையும் மனதில் உறைக்கும் வண்ணம் யானைகள் குறித்த காணொலிக்காட்சிகள் அமைந்தன. அதன் தொடர்ச்சியாக, முரகாமியின் கதை அறிமுகப்படுத்தப்பட்டு அதன் விபங்களும் நடித்துக் காட்டப்படுகின்றன.
உயிரியல் பூங்கா, மனை விற்பனையாளருக்கு விற்கப்பட்டது தெரியாமலே பள்ளிச் சிறுவர்களை மிருகக்காட்சிச் சாலைக்கு அழைத்து வரும் ஆசிரியை, மாணவர்களுக்கு இது சிங்கம் இருந்த இடம், இது புலி இருந்த இடம் எனக் காட்டி வரும்போது, எதிர்காலத்தில் பூமியில் இது போன்ற நிலைதான் ஏற்படுமென்பதை உணர்த்தப்படுகிறது.
யானையைத் தத்தெடுக்கும் தீர்மானம் குறித்து நகரமன்றத்தில் விவாதம் நடப்பதை நமது சட்டமியற்றும் அமைப்புகள் செயலாற்றும் விதத்திலேயே   காட்சிப்படுத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக யானையைத் தத்தெடுக்கும் விழாவுக்கு பிரதமர் வானூர்தியில் வருவதும் வானூர்தியை வானத்தில் கண்டதுமே எல்லோரும் நிலத்தில் குப்புறப் படுத்து மரியாதை செய்வதும் விழாவில் காவல்துறை உயர் அலுவலர்களின் நடத்தை மற்றும் செயல்பாடுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. 
பிரசவ வேதனையில் துடிக்கும் பெண்ணைச் சுமந்துகொண்டு பழங்குடியினர் மருத்துவ மனைக்குச் செல்கையில் அவர்களின் வழக்கமான பாதைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வேறு பாதையில் போக முயற்சிப்பதும் அப்பாதையும் தனியார் வசமாகி அடைக்கப்படுவதையும் நிகழ்த்திக்காட்டி யானைகளின் வாழிடம் அழிக்கப்படும்போது, அவை நடமாடும் பாதை மறிக்கப்படும்போது, யானைகளுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தம், அவற்றின் நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற மாற்றமனைத்தையும் பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்ற கலைத்திறனைப் பாராட்டாமலிருக்க முடியாது.
பழங்குடி மக்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஏதோ ஒரு இழப்புத் தொகையைப் பெற்றுக்கொண்டு காட்டைவிட்டு வெளியேறலாம். ஆனால், காட்டுயிர்கள் எங்கே போகுமென்ற கேள்வியை பழங்குடித்தலைவன் கேட்கும்போது விடைகூறத் தெரியாமல் நம் அனைவரையுமே தலைகுனிய வைக்கிற சூழ்நிலையை நாடகம் அருமையாக நிகழ்த்தியிருக்கிறது. பழங்குடித்தலைவனின் இக்கேள்வியைத் தொடர்ந்து அடுத்த காட்சியாக பெங்களூர் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் முப்பதுக்கும் மேற்பட்ட யானைகள் திசைதேடி அலைகிற காணொளிப்பதிவினைத் திரையிட்டது பார்வையாளனிடத்தில் மிகப்பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதென்றே சொல்லமுடியும். மேலும் மையக்கதையிலிருந்து எந்த இடத்திலும் விலகாமல் நாம் வாழும் சமூகத்திற்கும் நமது சூழலுக்கும் ஏற்றவாறு நாடகத்தினை வளர்த்தெடுத்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒருவிஷயமாகும். 
முரகாமியின் கதையின் சாரத்தை எள்ளளவும் குறைவுபடாமல் காட்சிப்படுத்தும் போதே அதற்கு இணையாக  சுற்றுச் சூழல், காட்டுயிர்கள் என எடுத்துக்கொண்ட பிரச்னைகளின் உண்மைநிலை, அவற்றில் செயற்படும் அரசியல், லாப வேட்கைச் சுயநலம் அனைத்தையும் பிரளயனால் எவ்விதச் சலிப்பும் ஏற்படுத்தாமல் நிகழ்த்திக் காட்டிவிட முடிகிறது.
மனிதர்களாகிய நாம் காட்டுயிர்களைக் கொன்றுவிட்டு, அவற்றின் சமாதி மீதுதான் வாழ்கிறோம் என்பதை அர்த்தப்படுத்துவதற்காக, பொம்மை யானை ஒன்றின் உறுப்புகளை அங்கங்கே பிய்த்துப் போட்டுவிட்டு, பின்னர் நாடகக் கலைஞர்கள் அனைவரும் அந்த மயானத்தில் அமர்ந்திருக்கிற காட்சியை நிகழ்த்திய போது, உண்மையில் ஆழிப்பேரலை நிகழ்ந்து மனித உயிர்கள் சடலங்களாகப் புதைக்கப்படுவதைக் கண்ட போது ஏற்பட்டதொரு சோகமும் கையறு நிலையும், இக்குற்றத்தில் நமக்கும் பங்கிருப்பதான குற்றவுணர்வும் தலைதூக்கியது.
உப கதை, பாரி படுகளம், வஞ்சியர் காண்டம் என நமது இலக்கியங்களை மறு வாசிப்பாக, அவற்றில் மறைந்திருக்கும் செய்திகளை வெளிப்படுத்தி, நிகழ்த்திக் காட்டியிருக்கிற பிரளயன், தற்போது முரகாமியின் கதையை நேர்பட, முரகாமியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்கு ஒரு செயல்விளக்கமாக இந்த நாடகத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்றே கூறவேண்டும்.
இந்த நாடகத்தில் மொத்தம் தொண்ணூறு மாணவர்கள் நடித்தனர். அனைவரும் அவரவர் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களைச் சிறப்பாக, தொழில் நடிகர்களைவிடத் திறமையாகச் செய்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். இந்த நாடகத்தில் நடித்த மாணவர்கள் மட்டுமல்லாது, பார்த்து ரசித்த அனைவருக்குமே சுற்றுச் சூழல் குறித்த புதிய விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.
பிரளயனின் இந்த நாடகம் செய்தி விளக்க நாடகம் ஒன்றைச் சிறந்த கலைப்படைப்பாகவும் மிளிரச் செய்யமுடியும் என்பதற்கு நல்லதொரு காட்டாக அமைந்தது.
ச. ஆறுமுகம்
அலைபேசி 9442944347
arumughompillai@gmail.com                
            

      இக்கட்டுரை இருபகுதிகளாக `யானை காணாமலாகிறது நாடகத்தை முன்வைத்து` என்ற தலைப்பில் தீக்கதிர் நாளிதழில் 26.05.2014 மற்றும் 02.06.2014 இதழ்களில் தொடர்ச்சியாக வெளியானது.
http://theekkathir.in/2014/06/02/

Friday 2 September 2016

எபிரேயச் சிறுகதை - ஒரு பந்தயம் A Bet By ETGAR KERET

ஒரு பந்தயம் A Bet
எபிரேயம் : எட்கர் கெரெட் Etgar Keret
ஆங்கிலம் : மிரியம் ஷ்லேசிங்கர் Miriam Shlesinger
தமிழில் ச.ஆறுமுகம்
Image result for etgar keret
எட்கர் கெரெட், இஸ்ரேல்


பெண் படைவீரரைக் கொலைசெய்த அரபிக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததென்ற செய்தியை ஒளிபரப்பியதால் பலதரப்பட்ட மக்களும் அது குறித்து விவாதிப்பதற்காக தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்ததாகவும் அதனால் அன்றைய மாலைச்செய்தி இரவு பத்தரை வரையிலும் தொடர்ந்ததாகவும், அதனால் `மூன்லைட்` நிகழ்ச்சியை ஒளிபரப்பமுடியவில்லையென்றும் தொலைக்காட்சியில் அறிவித்தனர். அதனால் அப்பா மிகவும் எரிச்சலடைந்தார்; என் நல்வளர்ச்சிக்காக, அவர் புகைக்கக்கூடாதென்றபோதிலும் அவருடைய நாற்றம் பிடிக்கும் புகைக்குழாயைப் பற்றவைத்தார். அவர், என் அம்மாவிடம் அவளும் அவளைப் போன்ற பைத்தியக்காரர்களும்,  வலதுசாரிகளுக்கு வாக்களித்ததால்தான் பாரசீகர்களெல்லாம் எங்கிருந்து முளைத்தார்களோ, அந்த ஈரானைப்போல நாடு மாறிப்போனதெனக் கூச்சல் போட்டார். இதற்கு நாம் பெரும் விலை கொடுக்கவேண்டியிருக்குமென்பது மட்டுமில்லை; இது நமது அறநெறி சார்ந்த மனத்திண்மையை எவ்வளவு தூரம் பாதித்துவிட்டிருக்கிறது – இந்த வார்த்தை நிச்சயமாக எனக்குப் புரியவில்லை – அமெரிக்கர்கள் இதை அவ்வளவு எளிதில் விட்டுவிடவும் போவதில்லை  என்றார்.
அடுத்த நாள் வகுப்பில் இதைப்பற்றிப் பேசினார்கள். ஒருவரைத் தூக்கில் போடும்போது அவரது குறி பாலுறவுப்படங்களில் போலக் கடுமையாக விரைத்துக்கொள்ளுமென்றான், சியான் ஷெமெஷ். அதனால் எங்கள் வகுப்பு ஆசிரியை சில்லா, அவனை வகுப்பறையிலிருந்தும் வெளியே துரத்திவிட்டு, மரணதண்டனைத் தீர்ப்பு குறித்த அபிப்பிராயங்கள் என்று வரும்போது, அவையனைத்தும் ஒருங்குசேரும்போது, வாதங்கள் ஒட்டியோ அல்லது எதிராகவோ, எதுவானாலும், அந்த வாதங்கள் எவ்வளவுதான் நல்லவையென்றபோதிலும், அவையெல்லாமே உண்மையில் அவரவர் இதயத்துக்குள் தான் இருக்கின்றன, என்று சொன்னாள். அதைத்தொடர்ந்து, மூன்றாம் ஆண்டாக  அதே வகுப்பில் இருக்கும் மக்கு சாச்சி, சிரித்துத்தொலைத்தது மட்டுமில்லாமல் ஆமாமாம், எல்லாமே அரபிகளின் இதயத்துக்குள்தாம் இருக்கின்றன, ஆனால், அவர்களது கழுத்தில் கயிற்றை மாட்டித் தூக்கில் போடும்போது எப்படியானாலும் அவர்களின் இதயம் துடிப்பதை நிறுத்திவிடுமென்று சொல்லவே, சில்லா அவனையும் வகுப்புக்கு வெளியே துரத்தினாள். அதன் பிறகு, இனிமேலும் இதுபோன்ற வெட்டிப்பேச்சை அவள் அனுமதிக்கப்போவதில்லையென்றும் வழக்கமான பாடங்களை மட்டுமே நடத்தப்போவதாகவும் சொல்லிவிட்டு, டன் கணக்கில் வீட்டுப்பாடத்தை எங்கள் தலையில் சுமத்திப் பழிதீர்த்துக்கொண்டாள்.
பள்ளிக்கூடம் முடிந்தபின், ஒருவரைத் தூக்கில்போட்டு, அவர் இறப்பது, மூச்சுமுட்டியா அல்லது கழுத்து முறிவதாலா எனப் பெரிய பையன்கள் மத்தியில் மிகப்பெரிய வாதம் நிகழ்ந்தது. பின்னர், அவர்கள் சாக்லேட் பால் புட்டிகளைப் பந்தயமாக வைத்து, ஒரு பூனையைப் பிடித்து கூடைப்பந்துக்கம்பத்தின் இரும்புவளையத்தில்  மாட்டி, தூக்கில் போட, பூனை கடுமையாக அலறி அலறிக் கடைசியில், அதன் கழுத்து உண்மையிலேயே முறிந்துபோனது. ஆனால் மிக்கி, சாக்லேட் பாலுக்கான விலையைக் கொடுக்கவில்லை. அதற்கு அவன், கபி வேண்டுமென்றே கயிற்றை மிகக் கடுமையாக இழுத்துவிட்டானென்றும், இன்னுமொரு பூனையைப் பிடித்துத் தூக்கில்போட்டு, யாருமே தொடாமல் பார்க்கவேண்டுமென்றான். அவன் மட்டமான ஒரு கழுதையென்று எல்லோருக்கும் தெரியுமென்பதால், அவனை வற்புறுத்திப் பணத்தைக் கொடுக்கச்செய்தனர். நிஸ்ஸிமும் ஜிவ்வும் சியான் ஷெமெஷைப் பிடித்து மண்டையில் குட்டி, நன்றாகக் கொடுக்கவேண்டுமென்றனர்; ஏனென்றால், பூனையின் குறி விரைத்துப் பெரிதாகவேயில்லையே, அதனால் அவன் ஒரு  புழுகுணிப்பயல். அந்தவழியாக வந்துகொண்டிருந்த, பள்ளிக்கூடத்திலேயே மிக அழகானவளாக இருக்கக்கூடிய மிச்சல் எங்களைப்பார்த்து, நீங்களெல்லாம் வெறுக்கத்தக்கவர்களென்றும் மிருகங்களைப் போன்றவர்களென்றும் சொன்னாள். நான் ஒரு ஓரமாகச்சென்று வாந்தியெடுத்தேன்; ஆனால், அதற்குக் காரணம் அவளல்ல.   



மலைகள் இணைய இதழ் எண் 104 ஆகஸ்ட் 18, 2016 இல் வெளியானது.