நினைவைவிட்டு நீங்காத கதைமாந்தர் – 3
கேரளத்தின் குட்ட நாட்டில் வசிக்கும் இளைஞன் விவசாயத் தொழிலாளி கோரன், வயல்வேலைகளில் கெட்டிக்காரியான சிருதையைத் திருமணம் செய்ய விரும்புகிறான். அவனது நண்பன் சாத்தனுக்கும் சிருதையைக் கலியாணம் கட்டிக்கொள்ளத்தான் ஆசை. அன்றைய கால கட்டத்தில் கோரனின் சாதி வழக்கப்படி, பெண் வீட்டார் கோரும் தொகையைக் கொடுத்தால்தான் பெண் கொடுப்பார்கள். சிருதையின் தகப்பன் கேட்கும் பணம் கொடுப்பதற்காக கோரன் நிலக்கிழார் ஒருவரிடம் பண்ணையடிமையாகச் சேர்ந்து, அவரிடம் பெறும் முன்பணத்தைக் கொடுத்து சிருதையைத் திருமணம் செய்கிறான். சிருதையும் ஏற்கெனவே பண்ணையடிமைதான். திருமணத்திற்காக சிருதையின் நிலக்கிழாருக்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
கோரனும் அவனது மனைவி சிருதையும் வசிக்கும் பகுதியில் புஞ்சை விவசாயமென்பது நமது புஞ்சை விவசாயமல்ல. கழிமுக நிலங்களில் ஆளுயர வரப்புகளை ஏற்படுத்தி தண்ணீர் முழுவதையும் இறைத்து வெளியேற்றி, அதன் பின் அந்தச் சேற்று நிலங்களில் நெல் பயிரிடுவது. மிகமிகக் கடினமான உடலுழைப்பினைக் கோருவது. அந்த நிலங்களில் முதலைகளும் வாழ்வதுண்டு. அந்த நிலங்களில் குடிசைகள் கட்டி வசிக்கும் விவசாயத் தொழிலாளர் குடியிருப்புகளுக்குள் முதலைகள் புகுந்த நிகழ்வுகளும் உண்டு. இப்படிக் கடுமையான வாழ்க்கைச் சூழலில் சிக்கியிருக்கும் பண்ணையடிமைகள் நிலக்கிழார்களால் பொருளாதார அடிப்படையில் சுரண்டப்படுவதுமட்டுமல்லாமல், நிலக்கிழார் குடும்பத்தினரின் பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகவேண்டியிருந்தது.
கோரனின் மனைவிக்கும் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. பண்ணையாரின் மகனைக் கோரன் கொலைசெய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அவன் சிறைக்குச் செல்லும் முன் கர்ப்பிணி சிருதையை சாத்தன் கையில் கொடுத்துக் காப்பாற்றுமாறு வேண்டுகிறான். சிருதை சாத்தனின் பராமரிப்பில் அவன் தங்கையைப் போல் ஒரு ஆண் மகவினையும் பெற்றெடுக்கிறாள். நிலக் கிழார்களின் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து தொழிலாளிகள் சங்கம் அமைத்துப் போராட முயற்சிக்கிறார்கள்.
விவசாயத் தொழிலாளர் சங்கப் பேரணியின் ஊர்வலத்தில் `உழுபவனுக்கே நிலம்` போன்ற புரட்சி முழக்கங்கள் முத்திரை வாசகங்களாகக் கேட்கத் தொடங்கின என நாவல் முடியும்.
நாவலில் வயல் அறுவடைக் காட்சி ஒன்று. அறுவடை வயலில் நெல் அரிகளைத் தலைச்சுமட்டுக் கட்டுகளாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். கட்டுக் கட்டுபவர்களின் பின்னாலேயே வயலில் விடுபட்டுச் சிதறிக்கிடக்கும் ஒன்றிரண்டு அரிகளைப் பொறுக்கும் சிறுவர் சிறுமிகளைக் கோரன் சிறிதும் ஈவிரக்கமில்லாதவன் போல விரட்டியடிக்கிறான். இதனைக் கண்டு அவனது சக தொழிலாளர்களே அவனுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன? பண்ணை கூட இப்படி விரட்டமாட்டார் போலிருக்கிறது. பண்ணையின் மீது அவ்வளவு விசுவாசமா எனக் கிண்டல் செய்கின்றனர். சிலர் உள்ளுக்குள் பொருமுகின்றனர். அது, நில உரிமையாளனுக்கு ஏற்படுகிற ஒரு ஆவேசநிலை. விளைச்சலைச் சிந்தாமல் சிதறாமல் களத்தில் கொண்டுசேர்க்க முனையும்போது ஏற்படுகிற பதற்றம். சிதறிய கதிர்களைப் பொறுக்கும் சாக்கில் சிறுவர், சிறுமிகள் சிலநேரங்களில் அரிகளிலும் கைவைத்துவிடுவதுண்டு. இதையே களத்துமேட்டில் நெல்மணிகளைப் பிரித்து மூட்டைகளாகக் கட்டும் முன்பு மடியேந்தி வருவோர்க்கு எல்லாம் மனநிறைவோடு முறத்தில் கொட்டிக் கொடுப்பான், அதே ஆள். அது நில உரிமையாளனுக்குப் பொருந்தும். கோரனோ பண்ணையடிமை. அவனுக்குப் பண்ணையோடு தீர்க்க வேண்டிய கணக்குகள் எத்தனையோ இருக்கின்றன. எந்த நேரத்திலும் பண்ணைக்கு எதிராகக் கிளர்ந்தெழத் துடித்துக் கொண்டிருப்பவனிடமும் இந்தப் பணி ஆவேசம் ஏற்படுவதைத் தகழி அருமையாகச் சித்திரித்திருப்பார். சிறந்த உழைப்பாளி, அது தனக்கு உரிமைப்பட்ட நிலமாக இல்லாவிட்டாலும் தனது உழைப்பின் பலன் திருட்டுப் போகாமல் காத்துக் கொள்ளும் பதற்றம். தனது பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டிய ஈடுபாட்டு அக்கறையும் இதில் இணைந்துகொள்கிறது. இதுபோன்ற நிலையினை மனிதர்கள் கூட்டாகப் பணிசெய்கிற இடங்களில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வைப் பணியிலிருப்பவர்களிடமும் ஏற்படுவதைக் காணலாம்.
உழைப்பு வாழ்க்கையின் அற்புத கணங்களை தகழி போன்ற படைப்புத் திறமிக்கவர்களின் எழுத்தில் மட்டுமே தரிசிக்க முடிகிறது.
கதை சொல்லலைவிடவும், குட்டநாட்டின் புஞ்சை விவசாயம் குறித்தும் நிலப்பிரபுக்களின் சுரண்டல், அடக்குமுறை மற்றும் அதனை எதிர்த்து விவசாயிகள் சங்கம் அமைத்துப் போராடுவது குறித்தும் பதிவு செய்வதற்கென்றே, எழுதப்பட்டுள்ள நாவல் என்பதனை வாசிக்கும்போதே தெளிவாக உணரமுடியும்.
கோரனும் சிருதையும் சாத்தனும் வாழ்வது ஞானபீடம் தகழி சிவசங்கரப்பிள்ளையின் `இரண்டிடங்கழி` என்ற மலையாள நாவலில். இந்த அற்புத நாவல் ஆங்கிலத்தில் Two measures எனவும் தமிழில் `இரண்டு படி` எனவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இடங்கழி என்பது 1957 இல் மெட்ரிக் அளவைமுறை அமுலுக்கு வருவதற்கு முன்னர் குட்டநாட்டில் புழங்கிவந்த முகத்தலளவை முறையில் ஒரு படி என்பதைக் குறிக்கும். இரண்டு படி, சாகித்ய அகாடமியின் வெளியீடு.

Show more reaComments