Wednesday 14 December 2016

மாசிடோனிய சிறுகதை - சூதாட்டக் கட்டையின் ஏழாவது பக்கம் - The Seventh Side of the Dice

சூதாட்டக் கட்டையின் ஏழாவது பக்கம் The Seventh Side of the Dice
மாசிடோனியன் : வ்லாடா உரோசெவிக் VLADA UROSEVIC
ஆங்கிலம்  : வில் ஃபிர்த் WILL FIRTH
தமிழில் ச.ஆறுமுகம்

Image result for vlada urosevic

மாசிடோனியாவின் ஸ்கோப்ஜி நகரில் 1934 இல் பிறந்த வ்லாடா உரோசெவிக்  மாசிடோனியன் மொழியின் கவிஞர், உரைநடையாளர், திறனாய்வாளர், கட்டுரையாளர், பதிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் சிரில் மற்றும் மெதோடியஸ் பல்கலைக் கழகத்தில் ஐரோப்பியக் கவிதை வரலாறு கற்பித்தார். 1950 மற்றும் அறுபதுகளில் மாசிடோனிய இலக்கியத்தின் நவீனப் படைப்பாளிகளில் முன்னணி உறுப்பினராகத் திகழ்ந்த உரோசெவிக் பன்னிரண்டு கவிதைத் தொகுதிகள், நான்கு சிறுகதைத் தொகுதிகள், ஐந்து நாவல்கள், திறனாய்வு மற்றும் கட்டுரைத் தொகுதிகள் ஏழு, பயண இலக்கியப் படைப்புகள் இரண்டு, நுண்கலைகள் பற்றி இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார். போதலேர், ரிம்பாவ்ட், அபோலினேர், மிச்சாக்ஸ் பெர்ட்டன் மற்றும் இதர பிரெஞ்சு நவீன கவிஞர்களின் படைப்புகளை பிரெஞ்சு மொழியிலிருந்தும் மாசிடோனியனுக்கு மொழிபெயர்த்துள்ளார். இப்பணிக்காக இவர் Knight of the Order of Arts and Letters ஆக நியமிக்கப்பட்டுப் பின்னர், அதே பணியில் அதிகாரியாக Officer of the same Order பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. இவர் இப்போது ஸ்கோப்ஜியில் வசிக்கிறார். ஐரோப்பாவின் முக்கியமான இலக்கியக்குரலாக மதிக்கப்படுகிறார்.
தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள படைப்பினை சிறுகதைப் படைப்பிலக்கிய விதிகள் அத்தனையையும் மீறுகிற ஒரு உரைநடைக் கவிதை எனலாம்.
*****
நம்மைச் சுற்றிலுமுள்ள இரகசியங்கள்
நம்மைச் சுற்றிலும் நாம் சிறிதுங்கூட அறியாத உயிரினங்கள் எத்தனையோ உள்ளன.
ஸ்கோப்ஜியின் புதிய குடியிருப்பாளராக மாடிகள் மற்றும் தோட்டங்களில்  உலா வருவதும் கோடைக்கால மாலை நேரங்களில் பசுங்கொடிகள் படர்ந்த விளக்குக் கம்பங்களில் தலைகாட்டுகின்றதுமான கெக்கோ எனப்படும் பலநிறம் காட்டும் சிறுவகைப் பல்லி ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? அது இந்தப் பகுதியைச் சேர்ந்ததல்ல; மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து நம் தலைக்கு மேலே சுவர்களில் தொற்றிக்கொண்டு, விளக்கொளிக்கு வரும் கொசுவினங்களை வேட்டையாடி, விருப்பமாக உண்பதோடு, நம்முடைய உரையாடல்களைக் கேட்டுக்கொண்டுமிருக்கிறது. அது எப்படி இங்கு வந்து சேர்ந்தது? சரி, இதற்கு எளிதாகப் பதில் சொல்லிவிடலாம். ஆரஞ்சு அல்லது அத்திப்பழக் கூடைகளில் ஒளிந்து வந்த அது, இங்கே வந்ததும் படுவிவரமாகக் குடியமர்ந்துவிட்டது என்று சொல்லிவிடலாம். ஆனால், அதன் நோக்கம் என்ன?
என் பக்கத்துவீட்டுக்காரரான மின்பணியாளர் ஒருவர் என்னிடம், நம்முடைய வீட்டுக் கூரை மோட்டு எலிகள் இப்போதெல்லாம் குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு மிகுந்த அறிவுத்திறன் பெற்றுவிட்டதாகச் சொல்கிறார் :  மின்கம்பிகளின் நெகிழி உறையைக் கரம்பிக் கறித்தெறிகின்ற அவை உயிரைக் கொல்லும் அளவுக்கான மின்சக்தி செல்லுகின்ற கம்பிகளைத் தொடுவதேயில்லை – எந்த ஆபத்தும் விளைவிக்காத ஜீரோ ஃபேஸ் கம்பிகளை மட்டுமே கறிக்கின்றன. எந்தக் கம்பியில் மின்சக்தி இருக்கிறது, அதன் காப்புக்கவச உறையைக் கடிக்கலாமா கூடாதா என்பதை எலிகள் எப்படித் தெரிந்துகொள்கின்றன? பொதுவாக மின்சக்தியைப் பற்றி அவை என்னதாம் நினைக்கின்றன? நம்முடைய மின் பகிர்மானச் சிக்கல்கள் குறித்து அவை எந்த அளவுக்கு தெரிந்துவைத்துள்ளன? அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒருவேளை அவற்றிடம் தீர்வுகள் இருக்கலாமோ?
அவ்வளவு எதற்கு? இன்னும் கீழ்மட்டத்தில், அடிப்படை நிலையில் நம்முடைய வீடுகளில் காணப்படும் ஈக்களை எடுத்துக்கொள்ளுங்களேன். அவை எல்லாமே ஒரு கட்டாய நடத்தை அல்லது நடைமுறைச் சிக்கலில் அவதிப்படுகின்றன. அவற்றில் ஒரு பெரிய அளவுக்கான விழுக்காட்டில்      (மிகவும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் 87%) பால்குடி மாறாப் பன்றிக்குட்டிப் பொரிப்பு, அதிலும் அடுப்பிலிருந்து அப்போதுதான் இறக்கிவைக்கப்படுவதில் கசியும் சுவைமிக்க சாற்றின் மீது அமர்வதற்காகத் தலைகீழ்ப்பாய்ச்சலுக்குத் தயாராகும் முன் அவற்றின் முன்கால்கள் இரண்டையும் உரசிக்கொள்வதை ஒரு பழக்கமாகவே கொண்டிருக்கின்றன. முதல் பார்வையிலேயே அப்படி முடிவெடுப்பதற்கான முகாந்திரம் எதுவும் தென்படாத நிலையிலும், அவை ஏன் அப்படியான அசைவுகளைச் செய்கின்றன? ஒருவேளை இது, வரையறுக்கப்பட்ட உணவு குறித்த நமது நரம்புசார் பதற்ற எதிர்வினை போன்றதோ? வழங்கப்படுகின்ற உணவு மீதான அதிருப்தியோ? அல்லது கவர்ச்சியீர்ப்புக்கு இரையாகிப்போன குற்ற உணர்வோ? இந்தப் புதிரை அறிவியல் நமக்காகக் கருணைகூர்ந்து,  விடுவிக்குமா?      
ஆனால், என்னைப்பொறுத்தவரை, இதிலுள்ள முக்கியக் கேள்வியாவது : இந்த உயிரிகள் நம்முடைய அன்றாடச் செயல்பாடுகள், நமது நடத்தை மற்றும் நமது வாழ்க்கைமுறை குறித்து இதுவரைக் கவனித்திருப்பது என்ன? நமது தவறுகளைத் திருத்துவதற்கு அவை தீட்டும் திட்டம்தான் என்ன?
படைப்பு முதல்வர் DEMIURGE (பிரம்மா)
அந்த மனிதர் ஒவ்வொருநாளும் கீழிறங்கிக் கடற்கரைக்கு வருகிறார்.  அவரது நாணல் பாயினை விரித்து அதன் மீது உட்கார்ந்து, சூழ்நிலைகளைக் கூர்ந்து கவனிக்கிறார். இரவில் அலைகள் பெரிய அளவிலான கற்கள் சிலவற்றைக் கொண்டுவந்து மணல்மேட்டில் சேர்த்திருந்தன; அவர் சிறிது சாய்ந்த நிலையில் கைகளை நீட்டி, அவற்றை மீண்டும் கடலுக்குள் தள்ளிவிடுகிறார். சுற்றிலுமாகப் பார்த்ததில், கடற்கரைக்குச் சிறிது பின்னால் காடாக மண்டிக்கிடந்த மஞ்சள் பூச்செடிகளின் மேலாக நீட்டிக்கொண்டிருந்த ஒற்றைக் கிளையால் மனம் உளைந்த அவர், உடனேயே  தழைவெட்டும் கத்தரிக்கோல் ஒன்றை உருவாக்கிக் கிளையைப் பலமுறை கத்தரித்துச் சிறுசிறு துண்டுகளாக்கி, அவருடைய துணிப்பைக்குள் போட்டுக்கொள்கிறார். அவரால் எந்தக் குளறுபடியையும் பொறுத்துக்கொள்ள முடியாது; அனைத்தும் அதனதன் இடத்திலேயே இருக்கவேண்டும்.
சிலநேரங்களில் அவருக்குள்ளும் ஐயப்பாடுகள் தோன்றிவிடுகின்றன: கரையில் ஒதுங்கிக்கிடந்த கடற்பாசிக்குவியல் உண்மையிலேயே அந்தப்பகுதிக்குரிய தனித்தன்மைக்கு அழகுசேர்க்கிறதா? தீர்மானித்து முடிந்தவுடன், வேலையில் இறங்கிவிடுகிறார். இங்கும் அங்குமாக ஒரு சில அசைவுகள்: ஆம், இப்போதுதான் நன்றாக இருக்கிறது, அவர் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்கிறார்.
பக்கத்துக் குன்றின் உச்சியில், அந்த மரங்களின் பின்னணியில் முள்முள்ளாகக் கிளைத்திருக்கும் புற்குவியல் அடர்ந்த பசிய திடல்கள் அருமையாக இருக்குமேயென அவர் நினைக்கிறார்; உடனேயே புற்கள் தோன்றிவிடுகின்றன. மணற்பாங்கான குன்றுச் சரிவுக்கு இறங்கிவரும் சிறுபாதை அந்த முட்புதர்களைச் சுற்றவேண்டியதில்லாமலிருந்தால்,    மலைத்தொடர்களின்  பின்னணியில் எழுகின்ற காட்சியில் ஒருங்கிணைந்து நிச்சயமாக இனிமைசேர்க்கும்; உடனேயே முட்புதர்கள் மறைந்துவிடுகின்றன.
ஓவியனின் கைவண்ணக் கடைசித் தீட்டல் போல முடிவாக, அவருக்குள், கடற்கரை முடிகின்ற இடத்தில் மோதக உருண்டைகள், ஜாங்கிரி போன்ற சுருள்கள் (அதுவும் ஆப்ரிகாட் பழக்கூழ் நிரப்பியவை) விற்கும் ஒரு பெட்டிக்கடை இருந்தால் நன்றாக விற்குமேயென்ற ஒரு எண்ணம் இலேசாகத் தலைதூக்கியது. ஆனால், அந்தக்கடை தோன்றிய உடனேயே, குழந்தைகள்  இனிப்பு வாங்கக் காசு கேட்டுப் பெரியவர்களைச் சுற்றிவந்து நச்சரிக்க, அவர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு, நிலப்பரப்பிலிருந்தும் அந்தக் கடையைத் துடைத்தெறிந்துவிடுகிறார் – அது சரியாக, நன்கு திட்டமிடப்படாத ஒன்று.
அவ்வப்போது, அடிக்கொருதரம், அவர் கடலுக்குள் ஒரு பாறையைத் தூக்கி வீசி, மூழ்கச்செய்து சிறிது தூரத்துக்கப்பால் மீண்டும் தோன்றச் செய்கிறார். சில நேரங்களில் அவர், யாரும் பார்க்காத நேரங்களில் ஒரே இடத்தில் இரண்டு பாறைகள் தோன்றச் செய்கிறார். அங்கே, அவரது எண்ணங்களின்படி நிறைவேறிக்கொண்டிருக்கும் மாற்றங்கள் கடற்கரைக்கு வரும் எந்தப் பார்வையாளர் கண்ணிலும் படாமலிருப்பதே நல்லது. அவர்கள், அவரை ஒரு அதீதச் சூழலியலாளரென்றோ, மறதிமிக்க அழகியல் கோட்பாட்டாளரென்றோதான் நினைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனால், அவர் முக்கியமானவர்; அதி முக்கியமானவர்.
அவர் செய்த மாற்றங்கள் அனைத்தும் நல்லவையென்று அவருக்குத் தோன்றிய பின்பே, ஓய்வுகொள்வதற்காக, அவரது நாணல் பாயில் படுக்கிறார். முழுவதுமாகப் பரிணமித்து, அனைத்துமாகக் கூடி உருவாகும் பரிபூரண முழுமைக்கு  இந்த உலகம் முற்றிலும் தகுதியானதே; அதற்காகச் சிலவேளைகளில் சிறிது கூடுதல் முயற்சியைச் செலவிட்டு, முதலீடுசெய்வதும் தக்க பெறுமானம் மிக்கதே.
மேகங்களைத் திசைதிருப்புபவர்
எனது பணி என்னவோ சிறிதளவும் கூட வழக்கமற்ற ஒன்றுதான்:  நான் மேகங்களைத் திசைதிருப்புகிற ஒருவன்.
மலைமுகடுகளின் மேலாகப் பெருத்த உருவில் தோன்றி அச்சுறுத்தும் மேகமொன்று அதன் நீர்ச்சுமையைச் சமவெளிகளில் கொட்டித்தீர்க்காமல், திடீரெனத் திசையை மாற்றிக்கொள்வது ஏனென்பது உங்களில் பலரும் அறியாத ஒன்று. பாருங்களேன், சட்டென்று அது அப்படித் திசை மாறிவிட்டதென நீங்கள் வியந்துகொண்டிருப்பீர்கள்; அங்கே, அப்படியே ஏரிக்கரை மீது, சிறிது தூரத்திலேயே ஒருவன் உட்கார்ந்து,  ஏதோ ஆராய்ச்சிசெய்வது போல வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே, அவன்தான் அந்த மாற்றத்திற்குக் காரணமென உங்களுக்குத் தெரிவதில்லை.
அவனை, ஏதோ வானம் பார்க்கிற ஆளென்று, நீங்கள் மிகச் சாதாரணமாக  எண்ணிக்கொள்கிறீர்கள்; ஆனால், உண்மையிலேயே மிகமிகக் கடுமையாக அதிலேயே ஆழ்ந்து, அமிழ்ந்துபோகிற அந்த ஆள் நானேதான். நான் தான் மேகங்கள் செல்லும் பாதையினை மாற்றுகிறேன்; அப்படி மாற்றுவதொன்றும் எளிதல்ல; அதற்குக் குறிப்பிட்ட சில ஆற்றல் தேவையென்பது வெளிப்படையாகத் தெரிகிற ஒன்றுதானே!
முயற்சியின் திறமென்பது கையிலிருக்கும் வேலையைப் பொறுத்தது:  மேகங்கள், மேலும் மேலுமாக, அடுக்கடுக்காக, மீண்டும்மீண்டுமாக மேகங்கள். கீற்று வகை மேகங்கள் எளிதானவை – வகுப்பறைக் கரும்பலகையின் சுண்ணக்கட்டிக் கிறுக்கல்களை வகுப்பின் அணிமுதல்வன் ஈரமான மென்பஞ்சுத்துண்டால் அழிப்பதுபோல வானத்திலிருந்தும் துடைத்தெறிந்துவிடலாம். உச்சியில் முகிழ்த்துப் பருக்கும் பசுவெண்பூக்கோசு போலவும் அடிமட்டத்தில் ஈரமான அழுக்குக் கந்தைகள் போலவும் தோன்றும் திரள் கார்முகிலெனில் மிகமிகக் கடினம். நீங்கள் அவற்றை விரட்டச் சிலவேளைகளில் உண்மையிலேயே அதிக ஆற்றலைப் பயன்படுத்தவேண்டியிருக்கும். அவை எளிதில் அசைந்துகொடுப்பவையல்ல; ஆனால் நானும் எளிதில் விட்டுவிடுபவன் இல்லையே! அவை எவ்வளவுக்கெவ்வளவு அடம்பிடிக்கின்றதாக இருந்தாலும், முடிவில் நான் அவற்றைக் கலைத்து மலைகளுக்கும் அப்பால் செல்லுமாறு விரட்டிவிடுவேன்.
அப்படிச் செய்வது, சிலவேளைகளில், அறுவடைக்குத் தயாராக இருக்கும் கோதுமைப் பயிர்கள் நிலைகுலைந்து, தரையோடுதரையாகச் சாய்ந்து படுத்துவிடாமல் காப்பாற்றிவிடுகிறது. வேறுசிலவேளைகளில் ஏரிக்கரையில் மக்களின் மகிழ்ச்சி மிக்க கொண்டாட்ட நாளினைக் கெடுத்துவிடாதபடி நான் மழையைத் தடுக்கின்றேன்; அதுமட்டுமல்லாமல் எப்போதாவது ஒருநேரத்தில் தொழில்வழியல்லாத, ஆனால் பேரார்வம் குன்றாமல் ஒளிப்படமெடுக்கும் ஒருவருக்கு (அவர் அறியாத நிலையிலேயே!) நான் உதவுகின்றேன்; அப்படியில்லாமலிருந்திருந்தால், அந்த ஒளிப்படம், வானத்தில் அந்த அற்புத மேகம் இல்லாமல் தேவதாரு மரங்களும் வெற்றுப் பாறைகளுமாக மட்டுமே ஒட்டுப்படம்போல் தெரிந்திருக்கும். அந்த மேகத்தை நகர்த்திவைத்தது, நான்தானே!
ஆனால், இது வெறுமே மனம் மற்றும் உடல் வலிமையைச் செயற்படுத்துவது மட்டுமேயல்ல; நான் சில அடிப்படைக் கருவிகளையும் பயன்படுத்துகிறேன். என்னிடம் மிகவும் உரத்து ஒலிக்கும் ஊதல் ஒன்றும்  வண்ணக்கொடி கட்டிய கம்புகள் இரண்டும் இருக்கின்றன. ஒன்று மஞ்சள் கொடி, இன்னொன்று கறுப்புப்பட்டைகள் இட்ட பச்சை. இவற்றைக் கொண்டுதான் காற்றின் திசையினையும் வலிமையினையும் நான் நிர்ணயித்து, அந்த அடிப்படையில் மேகங்களுடன் போராடுகிறேன். இதைச் செய்யும்போது, நான் எனது ஊதலைப் பலமாக ஊதுகிறேன் – நீங்கள் நம்புகிறீர்களோ, இல்லையோ, அது என் வேலைக்கு உதவுகிறது.
நான் வேலைசெய்வதைப் பார்க்கின்றவர்கள் என்னிடம் ஏதோ கோளாறு இருப்பதாக நினைக்கின்றார்கள். ஆனால், அவர்களின் அபிப்பிராயம் பற்றி எனக்குக் கவலை ஏதுமில்லை: எனக்குத் தெரியும், என் பணி பயனுள்ளது; நான் பயன்மிக்கவன்.
கூழாங்கல் பொறுக்குபவர்
புலர்காலையில் கடலின் கரைக்குச் செல்கிற பெண் ஒருத்தி, உடனடியாகவே, கூழாங்கல் ஒன்றால் ஈர்க்கப்படுகிறாள்.  உருவம், நிறம் மற்றும் வண்ணக் கலைவடிவத்துக்காகவே அவள் அதை எடுக்கிறாள். அங்கே பால்வண்ணத்தின் மென்னிறத்தில் பளிங்கின் ஒளிபுகும் மாசறு தன்மையினைக் காட்சிப்படுத்தும் வெண்ணிறக்கற்களோடு மரகதப்பச்சைப் பட்டைகளினூடாக வீறுமிக்கக் கறுப்புக் கோடுகள் மாறிமாறித் தோற்றமளிக்கும் கற்கள் காணக்கிடக்கின்றன; சில கற்களோ மதிக்கத்தகுந்த சாம்பல் வண்ணம்; ஆனால் அதேநேரத்தில் சிறுத்தைப்புள்ளிகளின் வடிவத்தில் அடர்நீலப்புள்ளிகள் சிதறித் தெரிகின்றன; இளஞ்சிவப்பு, ஆரஞ்சு மற்றும் கருநீலங்களும் இருக்கின்றன; சிலகற்கள், அவற்றுக்குப் பெருமிதத் தோற்றத்தை அளிக்கும் முத்திரை மோதிர அடையாள வடிவத்தை, அவற்றின் தந்தநிற மேனியில் ஆரஞ்சும் பழுப்பும் கலந்த சிவப்பு வண்ணத்தில் பெற்றிருக்கின்றன; மற்றவையோ, அமைதிப் பிரார்த்தனையின் விடாப்பிடியான உள்நோக்கிய ஏகாந்தப் பார்வையில் அவற்றின் உள்ளமைக் கனிமத்தை நோக்கிக்கொண்டு, பிதுங்கித்தெரியும் ஒற்றைப்பெருவிழியினை  அடர்கறுப்பில் பெற்றிருக்கின்றன; வேறுசிலவோ, பல்லூழிகளுக்கு முன்பாகவே உருகிப்போன பாறைக்குழம்புக்குள் மாறிமாறித் துடித்துக்கொண்டிருந்த இடையறாப் புவியியல் தன்னியக்கமொன்றின் ரகசிய எழுத்துக்கலையால் போர்த்தப்பட்டிருக்கின்றன. அலைகளோடு, ஈரம் மற்றும் தடங்கலையும் மீறி, அவை கதிரொளியில் எதிரொளித்து, மின்னுகின்றன. இரவு முடிகின்ற இறுதித்தருணங்களில், கடலின் விளிம்பில், அலைகள் கொண்டுசேர்த்திருந்த அவற்றை, அவள் முடிவற்று நீளும் ஈர மணல்படுகையிலிருந்தும் ஒவ்வொன்றாகப் பொறுக்கிச் சேர்க்கிறாள். அவை குடிபோதைக்கொள்ளையர்கள் திருடிக்கொணர்ந்து, ஓட்டமெடுக்கும் முன் பங்கு பிரிப்பதில் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் கொல்லும்முன்பாகக் கருவூலப்பெட்டியிலிருந்தும் சிதறிய விலைமதிப்பற்ற கண்கவர் செல்வங்களாக ஒளிவீசிக்கிடக்கின்றன.
சேகரித்த அவள், அவளது மின்னும் கற்களிலிருந்தும் மணலைக் கழுவித் துடைத்துப் பேராவலோடு வைக்கோல் நார்ப்பையினுள் போட்டுக்கொள்கிறாள்.
மாலையில் உணவகத் தங்கும் அறைக்குத் திரும்பிய அவள், செய்தித்தாள் ஒன்றினைப்பரப்பி, பையைக்கவிழ்த்து, வேறு நிறங்கள் ஏதுமற்ற சாம்பல்நிறக் கற்குவியலொன்றினை எடுத்துவைக்கிறாள். அந்தக் கற்களுக்கு மந்திர ஆற்றலளித்து மாயவித்தை நிகழ்த்திக்கொண்டிருந்த கடல்நீரின் ஈரம் அகன்றதும், பகல் முழுதும் அவள் சேகரித்த வண்ணக்கலைப்பொருட்கள் ஒன்றுமற்றவையாகத் தெரிந்தன. மதிப்பிழந்துபோன அந்த இழிந்த செல்வங்களின் முன்பாக, ஒருகணம் திகைத்து நிற்கின்ற அவள், பின்னர், கடும் சப்தத்துடன் அவற்றைக் குப்பைக்கூடைக்குள் போய் விழுமாறு எறிகிறாள்.
சிறிதுநேரம் சென்றபின், உணவகப் பொது ஓய்வுக்கூடத்தில் அவள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போது, உலகப் பொருளாதாரச் சிக்கல் மற்றும் பங்குகளின் விலைச்சரிவு பற்றிய செய்தியைக் கேட்டு, அவள்  முகத்தில் இழிவுதோன்றும் பூடகப் புன்னகை ஒன்று முகிழ்க்கிறது. அதன் காரணம் என்னவென அவள் அறிவாள்.


PP 145 to 149 of BEST EUROPEAN FICTION 2014, DALKEY ARCHIVE PRESS CHAMBAIGN / LONDON / DUBLIN    

அடவி அக்டோபர் 2016 இதழில் வெளியானது.

No comments:

Post a Comment