Monday 30 January 2017

குறிஞ்சி நிலக்காட்சி - Tamil Landscape of KURINJI

குறிஞ்சி நிலக்காட்சி

சங்க இலக்கியத்தின் இயற்கை வருணனைகளிலிருந்து உருப்பெறும் குறிஞ்சி நிலக்காட்சி : .

ஆடற் கருவிகள் தூங்கும் காவடி சுமந்து பாணர் கூட்டமொன்று காட்டுவழிச் செல்கிறது. வளம் மிக்க மலைப்பகுதி; வேங்கையும் கோங்கும் ஓங்கி வளர்ந்து சூரியக் கதிர்களைச் சுமந்து நிழல் கொடுக்கின்றன. காந்தளின் மணம் அகிலுடன் கலந்து வீசுகிறது. வெடித்த பழங்களுடன் பலாவும் வாழையும் செழித்து நிற்கின்றன. காற்று மூங்கில் புதரில் நுழைந்து வெளியேறிக் குழலூதுகிறது; மலைவீழ் அருவியின் முழக்கம் முழவு போல் அதிர்கிறது. வண்டுகளின் யாழிசை இமிழொலி; மூங்கில் மேலே தோகை விரிக்கும் மயில் மெல்ல அசைகிறது.
காட்டாற்றில் புதுவெள்ளம் கரைபுரள்கிறது. கடு்ம் பன்றியொன்று நீந்திக் கரைசேர்கிறது. வேடர்களின் கணைக்குத் தப்பிய குரங்கொன்று மூங்கிலை வெடுக்கென்று பிடித்துத் தாவி மறைகிறது. மஞ்சள் பூக்கள் மூடிய பாறைக்கல் தூங்கும் புலி போல் பாதையில் கிடக்கிறது. ஈன்ற கன்றுடன் நகரும் யானைக்கூட்டம்; புதரில் மறைந்து பின் தொடர்கிறது, புலியொன்று. கறையான் புற்றைக் கரடிக்கூட்டம், கார்முகிலெனச் சூழ்ந்து ஈசல் தின்கிறது. புற்றுக்குள் கைவிட்ட கரடியொன்று பாம்பைப் பற்றித் தூக்கியெறிகிறது. பாணர் கூட்டம் இசைத்த முழவும் யாழும் மத்தளமும் புலியின் முழக்கமென்று மயங்கிய யானை பொன்போல் பூத்த வேங்கையை முட்டிச் சிதைக்கிறது. பாறையில் வட்டச் சுனைகள்; தெள்ளிய நீரில் சூரியக் கதிர் பட்டுத் தெறிக்கிறது. கலைமானை அழைக்கும் பிணை தூம்பென்னும் இசைக்கருவி போல் ஒலிக்கிறது. காடு அழித்துக் குறவர் விதைத்த தினை முற்றிய வயல்களில் பரண்களின் மீது சிறுபெண்கள்; கவண்கல் எறியப் பறக்கும் கிளிக்கூட்டம். பாறை இடுக்கிலிருந்து எடுத்த மயிலின் முட்டையைக் குரங்குக் குட்டி வெயிலில் உருட்டி விளையாடுகிறது. யானைத் தந்தம் தூக்கிய தோளுடன் குறவர் இருவர் எதிரே வருகின்றனர். கனிந்த பலா வெடித்துச் சிதறி சுனையில் வீழ்ந்து தேனாக இனிக்கும் நீர் பருகி இளைப்பாறும் பாணர் கூட்டம்.
பக்கமலை உச்சியில் தீப்பந்தம் கொண்டு குறவர் கூட்டம் தேனழிக்கிறது. மெல்ல வழி நடக்க ஊர்ப்பசு ஒன்று காட்டில் மேய்ந்து செங்காந்தள் மகரந்தம் பூசி நிறம் மாறி வருகிறது. ஊருக்குள் தவறிவந்த யானைக் கன்றினைச் சிறு குட்டையில் குளிப்பாட்டும் ஊர்க்குறுமாக்கள்; கூப்பிடு தூரத்தில் வரிசையாகக் கூரை வேய்ந்த சிறு குடில்கள். தாண்டிச் செல்ல தினைவயல் நடுவே ஒரு தனிக்குடில். முன் திண்ணையில் வேடன் மெல்லக் கண்ணயர்ந்திருக்கிறான். கதிரறுத்த தினை வயலில் இணைமான்களின் விளையாட்டு; குடிலின் முன்னே தோல் விரிப்பில் தினை காய்ந்துகொண்டிருக்கிறது. காட்டுக் கோழிகள் ஒன்றிரண்டு தினையைக் கொத்திக்கொண்டிருக்கின்றன. கோழியை விரட்ட வந்த குறத்தி வழியே செல்லும் பாணர் கூட்டத்தை மெல்ல நோக்கிப் பசியாறிச் செல்ல அன்புடன் அழைக்கிறாள்.

Thursday 26 January 2017

அயர்லாந்து சிறுகதை - கடிதம் - LETTER - By EVELYN CONLON

கடிதம் ( Letter ) ஆங்கிலம் – ஈவ்லின் கான்லான், அயர்லாந்து Evelyn Conlon – தமிழில் ச. ஆறுமுகம்.

download-10
                                                           ஈவ்லின் கான்லான்
ஈவ்லின் கான்லான்: ஐரிஷ் நாவல்கள் மற்றும் சிறுகதை படைப்பாளரான இவர் டப்ளினில் வசிக்கிறார். நான்கு நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுதிகளும் வெளியாகியுள்ளன. இவரது கதைகள் இத்தாலி, பிரெஞ்சு மற்றும் தமிழிலும் வெளியாகியுள்ளதாக http://evelynconlon.com/ வலைப்பக்கத்தில் குறிப்பு உள்ளது.
ஐரிஷ் பெண்மணியான ஹானரபிள் வயலெட் கிப்சன், அவரது ஐம்பதாவது வயதில் ஏப்ரல் 7, 1926 அன்று ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சுட்டுவிட்டு, தன்னையும் சுட்டுக் கொண்டார். ஆனால் இருவரும் பிழைத்துக்கொண்டனர். மனநோயர் பட்டம் கட்டப்பட்ட வயலெட் இங்கிலாந்தில் நார்த்தாம்ப்டன் மனநோயர் காப்பகத்தில் மீதி வாழ்க்கையைக் கழித்து, 2, மே, 1956 இல் இறந்து போனார். அவரது இறுதி ஊர்வலத்தில் காப்பகத்தினர் மட்டுமே இருந்தனர். வேறு எவருமே கலந்துகொள்ளவில்லையென்ற செய்தியினை `முசோலினியைச் சுட்ட பெண் என்ற வாழ்க்கை வரலாற்று நூலில் ஃபிரான்சஸ் ஸடோனார் சான்டர்ஸ் பதிவு செய்துள்ளார். வயலெட் மட்டும் முசோலினியைச் சுட்டுக் கொல்லும் முயற்சியில் வெற்றிபெற்றிருந்தால் ஐரோப்பாவின் வரலாற்றை, ஏன் உலக வரலாற்றையே மாற்றியவராகப் புகழ்பெற்றிருப்பார். இது தொடர்பான நிகழ்வுகள் அடிப்படையில் புனைகதையாக ஈவ்லின் படைத்துள்ள `கடிதம்` என்ற கதை தற்போது தமிழாக்கம் செய்யப்படுகிறது.
_____________________________________________________________________________________
அன்புள்ள உனக்கு,
நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேனே, தற்போது, கடந்த முப்பது ஆண்டுகளாக நார்த்தாம்ப்டன் மனநோயர் காப்பகத்துக்குள் வலுக்கட்டாயமாக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நான், தோட்டக்காரர் மூலமாக, இதனை எழுதுகிறேன் இது, 1950 இன் முற்பகுதி தானே, ஆம், 1927 லிருந்து நான் இங்கிருக்கிறேன். என்னை முசோலினியைச் சுட்டுக்கொன்ற ஐரிஷ் பெண் எனச் சொல்கிறார்கள்; ஏனென்றால், அது, நான்தான். அதே செயலுக்காக, ஆயிரக்கணக்கில், மேலும் ஆயிரமாயிரமாக, எத்தனையோ பேர் மரணத்தைச் சந்திக்க அனுப்பப்பட்டிருந்தாலும், அதை நிறைவேற்றிய நான் ஒரு பைத்தியமென்று இப்போதும் சொல்கிறார்கள். தொடக்கத்திலேயே அந்தச் சரியான செயலைச் செய்து முடித்ததே எனக்குப் பெருஞ்சுமையாக அமைந்திருக்கிறது.
தொடக்கத்தின் அருகிருந்தே நான் தொடங்குகிறேனே, ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதற்கோ அல்லது மேற்கொள்ளாமலிருக்கவோ, நமது தொடக்கத்தின் எந்தத் துளிக்கூறுகள் நம்மைத் தூண்டின என்பதை அறிவது கடினமென்றபோதிலும், பெரும்பான்மை மக்கள் விஷயத்தில் எப்படியோ, அப்படியே, எந்தத் துளிக்கூறுகள் நம்மை, வெளியில் தெரிகிற பரந்த உலகத்தின் ஒரு பகுதியாக்குகின்றனவோ, பெரும்பாலும் அதே கூறுகள் தாம் உடன்பிறப்புகளை அவர்களுக்குள் ஒன்றுசேர வைப்பதும் அவர்களின் சிறுமதிக் கூடாரத்துக்குள் பின்வாங்கச் செய்வதும்
நான் ஒன்பது வயதாக இருந்தபோது, என் தந்தை அயர்லாந்தின் அதிபராக்கப்பட்டார். அதைப்பற்றிய பேச்சுக்கள் அனைத்தையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். வண்டிகள் இழுபடும் கடகடப்பொலி, இரவிலும் கூட குதிரைகள் வெளியே இழுக்கப்படும் முடிவில்லாத சப்தங்களும் என் நினைவிலெழுகின்றன. அப்போது வீட்டில் பையன்கள் தாம் அதிக முக்கியத்துவம் பெற்றார்கள் என்பதோடு நாங்கள் செய்ததைவிடவும்கூடக் குறைவாகவே சிறுமிகளிடம் எதிர்பார்க்கப்பட்டதென, ஆனால் ஏகப்பட்ட ஆடை அணிகளுடன் அழகுபடுத்தப்பட்டதாக நினைக்கிறேன்; நானொன்றும் தேவைக்கதிகமான முக்கியத்துவத்தை அதற்கு அளிக்கவில்லையென்றாலும், வேறெதுவும் செய்யத் தோன்றாமல் அதன் போக்கிலேயே போனேன். வீட்டிலேயே நாங்கள் பள்ளிப் பாடங்களைக் கற்றோம். என் அண்ணன், தம்பிகள் போரில், தேவைப்பட்டால் ஆங்கிலம் பேசப்படாத பகுதியிலும்கூட, சண்டையிடுவதற்காக அவர்களுக்காகவே கற்றுக்கொடுக்கப்பட்ட மொழிகளைக் குறிப்பாக நான் விரும்பினேன். பௌலான்-சர்-மெர் நகரில் தங்கியிருந்த காலம் முழுவதும் பட்டைதீட்டப்பட்ட என்னுடைய பிரெஞ்சு இப்போதும் மேலானதாக இருக்க, என்னுடைய இத்தாலியனோ, அது ஒரு காதலாகவே இருக்கிறது. இப்போதும், இத்தாலியர்களே மிகச் சிறந்த கவிதைகளைக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில புத்தகங்களும் இருப்பதை நான் கண்டுபிடிக்கும் வரையில் – அவற்றில் சில வில்லீயிடம் கிடைத்தவை – எதைப்படிக்கச் சொன்னார்களோ, அதையே நாங்கள் படித்தோம். வில்லீ, ஹார்ரி, எல்சீ, எட்வர்டு, விக்டர், ஃபிரான்சஸ், கான்ஸ்டன்ஸ் என்ற என்னுடைய ஏழு உடன்பிறப்புக்களில், இப்போது மூன்று பேர் மீது மட்டுமே உண்மையிலேயே எனக்கு அக்கறை என்பதையும் அது இப்போது மிக மோசமாகாமலுள்ளது என்பதையும் நான் உங்களிடம் சொல்லித்தானாக வேண்டும். நான் அக்கறை கொண்ட மூவரில் இரண்டு பேர் இப்போது இறந்துவிட்டனர்.
என்னுடைய வளர்ப்பு விவரத்துக்குத் திரும்பவும் வருவதென்றால், என்னுடைய வாசிப்புக்கு அப்பாலும், என்னால் முடிகின்ற அளவுக்குச் சிறப்பாகவே, அநேகமாகப் பொருத்தமாகவே செய்தேன். பெண்கள் வாக்களிப்பு குறித்த உரையாடலை, எப்போதாவது – அதுபற்றிய குறிப்புகளை நான் வாசித்த சிலவேளைகளில் – நான் தொடங்குவதுதான்; அது ஒருவேளை எப்போதாவது நிகழ்வுக்கு வந்தால், அதனை எப்படிச் செயல்படுத்த வேண்டுமென்பதை எங்களுக்குச் சொல்கின்ற விருப்பம் அவருக்குள் தோன்றுவதை என் தந்தை அறிந்திருந்தார்தான். நான் அதைப்பற்றிக் குறிப்பிட்ட போதெல்லாம், தூக்கிவாரிப் போட்டது மாதிரியாக என்னைப் பார்ப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். `நடந்ததெல்லாம் போதும்` எனச் சொல்லும்போதும், அவர், அதே பார்வையைப் பார்த்தார். அந்த வார்த்தைகளில் நான் கடுமையை உணர்ந்தேன். அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின் அந்த நாள் வந்தபோது, நான் எனது சகோதரியிடம் ஒருமுறையாவது மார்க்கச்சையினை அணியாமலிருக்குமாறு கூறியது என் நினைவுக்கு வருகிறது. “ எதோ, சுவர்க்கத்தின் புண்ணியத்தில் வாக்களிக்கப் போகிறோம்` என அவளிடம் நான் கூறிய போது, வழக்கமாக அப்பா எப்படிப் பார்ப்பாரோ, அதே போன்று அவளும் என்னைப் பார்த்தாள்.
ரோம் நகரத்தின் அழகுக்கு மாறாக, அதன் ஓவியங்கள், காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டு, நீலவானம் நோக்கிப் பென்சில் போல ஒல்லியாக எழுந்தோங்கும் மரங்கள், தாராளமாகப் பரந்து விரிந்த நிழற்சாலைகள், ஒளிமிகுந்த கதிர் மறையும் காட்சிகளுக்கெல்லாம் மாறாகச் சீழ்பிடித்த அவலமொன்று அந்த மனிதன் முசோலினி மற்றும் அவனது தொண்டர்களினால் பெருங்கேட்டு நச்சாகிக்கொண்டிருந்தது. அவன் ஆட்சி அதிகாரத்தைத் தன்னகங்காரப் பிடிக்குள் அழுத்தி, இத்தாலியை அழித்துக்கொண்டிருந்தான். வரைபடத்தை அதன் முழு அளவுக்கு விரித்துப பிரச்சினைகளை அதன் அடிவேர் வரை ஆராய்ந்த எங்களைப் போன்றவர்களால் அதைத் தெரிந்துகொள்ளமுடிந்தது. கண்முன் தெரிகிற கொடுங்கோலன் மற்றும் அவனது தொண்டர்களின் செய்கைகள், வன்முறைகளாகவும் பெருந்தீமையாகவும் மாறவே, நான் செயலில் இறங்கத் தீர்மானித்தேன். சில நேரங்களில் அறிவார்ந்த தேர்வான செயலில் இறங்குவதொன்றைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லையெனத் தெரிந்துகொள்ளப் போதுமான ஒரு வயதில் நான் அப்போதிருந்தேன். என்னுடைய விதியையும் முசோலினியின் விதியையும் நேருக்கு நேராக, ஒரே மூச்சுக் காற்றில் நிறுத்துவதற்காக என்னை நானே தயார்படுத்திக்கொண்டேன்.
நான் முசோலினியைச் சுட்டுக்கொன்றபோது, என் வயது ஐம்பது; அதைச் செய்வதற்கு அது ஒரு நல்ல வயது என்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான், என் குடும்பத்தை நிலைகுலையச் செய்ய உண்மையிலேயே விரும்பியிருக்கவில்லையானாலும், என் குடும்பத்தை மகிழ்ச்சியில் வைத்திருக்கவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக, நான் அதைச் செய்யாமலுமிருக்க முடியாது.
ஒப்பம், வயலெட் கிப்சன்.
Source:
http://www.theletterspage.ac.uk/documents/archive/individual-letters-archive/evelyn-conlon-letter.pdf  


சங்க இலக்கியத் துளிகள் - 7 Glimpses of Sangam Poetry

மா வாராதே; மா வாராதே;
எல்லார் மாவும் வந்தன; எம் இல்,
புல் உளைக் குடுமிப் புதல்வர்த் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே -
இருபேர் யாற்ற ஒரு பெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே?
- எருமை வெளியனார், புறநானூறு 273 ஆம் பாடல்
பொருள் : குதிரை வரவில்லையே! குதிரை வரவில்லையே! எல்லோர் குதிரைகளும் வந்துவிட்டனவே! குதிரைக் குடுமி போன்ற குடுமியுடைய என் புதல்வனை எனக்குத் தந்த அவன் தந்தை ஏறிச்சென்ற குதிரை இன்னும் வரவில்லையே! இரண்டு பெரிய ஆறுகள் கூடும் ஒரு பெரிய சங்கமத்தைக் குறுக்கே நின்று தடுக்கும் பெரிய மரம் சாய்ந்து வீழ்ந்தாற்போல அவனைச் சுமந்துசென்ற போர்க்குதிரையும் வீழ்ந்துவிட்டதோ?
போருக்குச் சென்ற கணவன் வீடு திரும்பவில்லை; அவன் குதிரையாவது வீடு வந்து சேருமே, அதுவும் வரவில்லையே, ஒரு வேளை அது போரில் வீழ்ந்து மடிந்திருக்குமோ என்று அரற்றி, அலைப்புறும் பெண்மனம் நம் நெஞ்சில் படிகிறது. கூடவே அந்தக் குதிரையின் உருவம்! அந்த வீரன் என்னவானானோ என நாம் தடுமாறுகிறோம்.
குதிரையின் மறம் பாடும் இப்பாடல் அதில் ஏறிச்சென்ற வீரனையும் நினைக்கச்செய்கிறது.

சங்க இலக்கியத் துளிகள் - 6 Glimpses of Sangam Poetry

சங்க இலக்கியத் துளிகள் - 6
பகையரசனின் படைகள் கோட்டைச் சுவரைத் தாக்குவதற்கு அணிவகுத்து நிற்கின்றன. அரணைக் காப்பதற்காகப் படை வீரர்களை அழைக்கும் முரசு அறைந்து அறிவிக்கப்பட்டும்விட்டது. அதன் தொடர்ச்சியாக, காவல் படை வீரர்கள் போருக்கு உரிய காஞ்சிப் பூவினைச் சூடுமாறு பூக்கோட்பறையினை யானை மீது அமர்ந்திருக்கும் மேலோன் முழக்குகிறான். போருக்கழைத்த முதல் பறையினைக் கேட்டபோதே போருக்குப் புறப்படாத வீரர்கள் பூக்கோட்பறை அறிவிக்கும் வரையில் தாமதமாகிவிட்டதேயென கழிவிரக்கம் கொள்கின்றனர். அந்த நேரத்தில் வழக்கமாகப் பூவிற்க வருகின்ற பெண், ஆண்கள் போருக்குப் புறப்பட்டுவிட்டதால் தனித்துறையும் மகளிர் பூ வாங்கமாட்டார்களென வாடிய முகத்துடன் பிற மனைகளைத் தேடிச் செல்கிறாள். அவளது நிலை இரங்கத்தக்கதேயெனப் படைவீரர் மனையுறை மகளிர் இரக்கம் கொள்கின்றனர். இந்தச் சூழலைக் கூறும் புறநானூற்றுப் பாடல் :
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேரெழில் இழந்து வினையெனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ –
அளியல் தானே, பூவிலைப் பெண்டே!
- நொச்சி நிலக்கிழார் புறநானூறு, 293.
திணை : காஞ்சி; துறை : பூக்கோட் காஞ்சி
காஞ்சி : தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த பகையரசனை நாட்டு வேந்தன் காஞ்சிப் பூச் சூடித் தன் இடத்தைக் காத்தல் காஞ்சியாகும்.
பூக்கோட் காஞ்சி : போர் செய்தற்குரிய அடையாளமாகப் போர்ப்பூவைக் கொள்ளுதலைக் கூறுவது பூக்கோட்காஞ்சியாகும்.
உரை : குத்துக்கோலுக்கு அஞ்சாத யானை மேலமர்ந்த வள்ளுவன், அரணைச் சூழ்ந்து நின்ற பகைவரோடு போர்செய்தற்பொருட்டுப் பூக்கொள்ளுமாறு ஏவுதலைச் செய்யும் தண்ணுமைப் பறையை முழக்குவான். போர்ப்பறை கேட்டவுடனேயே புறப்படாமல் பூக்கோட்பறை அறையப்படும்வரைத் தாமதித்து நிற்பவர்கள் நாணமில்லாத வீரரே ஆவர். ஆதலால் தனித்துறையும் மனைமகளிர் இனிப் பூக்கொள்ளாரெனக் கருதி எம்மினும் பொலிவிழந்து தோன்றும் பூவிற்கும் பெண்டு, பிற மகளிர் வாழும் மனைகளுக்குச் ( போர்க்கு ஆகாரென விலக்கப்பட்ட பார்ப்பார், நோயுற்றோர், மகப்பேறு அற்றோர் போன்றோர் மனைகள்) செல்கின்றாள் போலும். அவள் இரங்கத் தக்கவளே.
பொருள் நயம் : தம் வீட்டு ஆண்களைப் போருக்கு அனுப்பிவிட்டு, அதுகுறித்துத் துயரம் கொள்வதும், போரில் தன் கணவனின் நிலை என்னாகுமோ எனப் பதறுவதும், தமிழ்க்குலப் பெண்களுக்கு இழுக்காம். அவர்கள் எழில் குன்றி நின்றாலும் தம்நிலைக்கு இரங்காமல், பிறர்நிலை கண்டு இரங்குவதாகப் பாடல் இயற்றியுள்ளமை ஓர்ந்துணர்ந்து இன்புறத்தக்கதே.
 நாணுடை மாக்கள், பூவிலைப் பெண்டு போன்ற அற்புதச் சொற்கோவைகள் உணர்த்தும் பொருளும் கவிதை அழகினை மேம்படச் செய்வதினை உணரலாம்.

நினைவை விட்டு நீங்காத கதைமாந்தர் - 4 - அவன் காட்டை வென்றான்.

நினைவை விட்டு நீங்காத கதை மாந்தர் – 4
இன்றைய (2.1.2017) தமிழ் இந்துவில் `அவன் காட்டை வென்றான்` தெலுங்கு நாவலின் தமிழாக்கத்தினை வாசித்த அனுபவத்தை தோப்பில் மீரான் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
தீண்டாத வசந்தம், ஸ்பார்ட்டகஸ் போன்ற முக்கியப் படைப்புகளைத் தமிழுக்குக் கொணர்ந்த ஏ.ஜி. எத்திராஜுலு அவர்களின் மொழிபெயர்ப்பில் அந்த நாவலை ஒரே மூச்சில் படித்த நினைவு மீண்டும் எழுகிறது.
முதல் நாளில் கள் மட்டுமே குடித்து வயிற்றை நிரப்பியிருந்த அவன் காலையில் எழுந்ததும் தான் கவனித்தான், அவனது பன்றிகளில் சினைப் பன்றி ஒன்றினைக் காணவில்லை. பன்றிகள் குட்டி ஈனும் பருவத்தில் வசதியான, பாதுகாப்பான இடம் தேடி பக்கத்துக் காட்டுக்குள் சென்றுவிடுவது அவனுக்குத் தெரியும். அப்படிச் செல்லும் பன்றி, காட்டுக்குள் பகை மிருகங்களின் தாக்குதலில், அவற்றுக்கு இரையாகிவிடுகிற, அல்லது வேற்று மனிதர்களால் வேட்டையாடப்பட்டுவிடும் அபாயமும் உண்டு. அதனாலேயே, அவன் பன்றியைத் தேடிக் காட்டுக்குள் செல்கிறான். எங்கு தேடியும் பன்றி அவன் கண்ணுக்குத் தட்டுப்படவேயில்லை.
அவன் அலைகின்ற, அடர்ந்த காடு, அவற்றின் மிருகங்கள், பெரும் வெறி கொண்டு பள்ளங்களில் குதித்துச் சாகும் எருமையினங்கள் என அவனுக்குத் தெரிந்த, மற்றும் அவனது காட்டு அனுபவங்கள் அவனுக்குள் நினைவுகளாகச் சிந்தனைகளாகக் குமிழியிடுகின்றன. எங்கு தேடியும் அவனது பன்றி கிடைக்கவில்லை. இரவுப் பொழுது நெருங்குகிறது. வயிற்றுப் பசிக்காக முயல் ஒன்றைப் பிடித்துச் சுட்டுத் தின்றுவிட்டு, மீதியை மறுநாளுக்காகத் தலைமுண்டில் கட்டித் தோளில் தொங்கவிட்டுக் காட்டுக்குள் அலைகிறான். இரவெல்லாம் காட்டுக்குள்ளேயே தங்கியிருக்கிறான்.
மறுநாள் ஒரு நீர்க்குட்டையில் பன்றிகளின் கழுத்தில் கட்டும் மணிக் கயிறு ஒன்று மிதப்பதைக் கண்டு, அது அவனது பன்றியுடையதோ எனப் பதறுகிறான். கோல் கொண்டு பலவாறு முயன்று அந்தக் கயிற்றை இழுத்துப் பார்த்தபோதுதான் அது வேறு பன்றியுடையதென்று தெரிந்து ஆசுவாசம் கொள்கிறான்.
மூன்றாம் நாள் காலையில் ஒரு புதர் மறைவில் அவனது பன்றியைக் கண்டுவிடுகிறான். அருகிருந்த மரத்தின் மீது ஏறிப் பார்க்கிறான்; குட்டிகளை ஈன்றிருக்கிறது. அவனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எந்த மனிதனும் அல்லது எந்த உயிரும் குட்டிகளின் அருகில் செல்வதை பன்றிகள் விரும்புவதில்லை; மூர்க்கமாகத் தாக்கும் என்பது அவனுக்குத் தெரியும். தாயையும் குட்டிகளையும் வீட்டுக்கு எப்படிக் கொண்டுசெல்வதென்ற ஒரே திகைப்பு தான் அவனுக்குள்.
மரத்திலிருந்து சுற்றிலும் கவனித்தபோதுதான் புதர் மறைவுகளில் ஆங்காங்கே நெருப்புக் கண்களைக் காண்கிறான். ஆம். குட்டிகளைக் கவருவதற்காக எண்ணற்ற நாய், நரிகள் காத்துக் கிடக்கின்றன. திடீரெனத் தன் கையிலிருந்த ஈட்டியை எறிகிறான். தாய்ப்பன்றி பெரும் ஓலத்துடன் வீழ்ந்தது. அங்கேயே கொடிகளால் கூடை ஒன்றை முடைந்து, செடிகொடிகளைப் பறித்துப் போட்டு மெத்தையாக்கி அத்தனை குட்டிகளையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி விரைகிறான்.
இக்கட்டான அந்தக் கணத்தில் முடிவெடுக்கும் திறம் இருக்கிறது, பாருங்கள், எதைத் தேடி வந்தானோ, ஆசையோடும் அன்போடும் வளர்த்தானோ, அந்த உயிரையே கொல்லும் முடிவெடுக்கிறானே, அந்தச் சந்தர்ப்பம், எப்படியும் தாயும் குட்டிகளும் நாய் நரிகளிடமிருந்து தப்பிக்கப்போவதில்லை. குட்டிகளையாவது காப்பாற்றும் வாய்ப்பிருப்பதை உணர்ந்து தாயை அவனே கொன்று குட்டிகளைக் காப்பாற்றிக் கொண்டு ஓடுகிறான். இந்த இடம் எனக்கு Decision Making, Options எனப் பல நிர்வாகச் சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றது.
கதை மீண்டும் தொடர்ந்தது. பருந்துகள் அவனது குட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கிச்சென்று விடுகின்றன. அவன் வீட்டுக்குப் போய்க் கூடையைக் கீழே இறக்கும்போது உயிருள்ள குட்டிகள் எதுவும் அதில்   இல்லையென நாவல் முடிந்ததாக நினைவு.
அந்தக் குட்டிகள் காப்பாற்றப்பட்டுவிட்டதான சித்திரத்தை எனக்குள் நானே புனைந்துகொண்டிருக்கிறேன். .