Monday 30 January 2017

குறிஞ்சி நிலக்காட்சி - Tamil Landscape of KURINJI

குறிஞ்சி நிலக்காட்சி

சங்க இலக்கியத்தின் இயற்கை வருணனைகளிலிருந்து உருப்பெறும் குறிஞ்சி நிலக்காட்சி : .

ஆடற் கருவிகள் தூங்கும் காவடி சுமந்து பாணர் கூட்டமொன்று காட்டுவழிச் செல்கிறது. வளம் மிக்க மலைப்பகுதி; வேங்கையும் கோங்கும் ஓங்கி வளர்ந்து சூரியக் கதிர்களைச் சுமந்து நிழல் கொடுக்கின்றன. காந்தளின் மணம் அகிலுடன் கலந்து வீசுகிறது. வெடித்த பழங்களுடன் பலாவும் வாழையும் செழித்து நிற்கின்றன. காற்று மூங்கில் புதரில் நுழைந்து வெளியேறிக் குழலூதுகிறது; மலைவீழ் அருவியின் முழக்கம் முழவு போல் அதிர்கிறது. வண்டுகளின் யாழிசை இமிழொலி; மூங்கில் மேலே தோகை விரிக்கும் மயில் மெல்ல அசைகிறது.
காட்டாற்றில் புதுவெள்ளம் கரைபுரள்கிறது. கடு்ம் பன்றியொன்று நீந்திக் கரைசேர்கிறது. வேடர்களின் கணைக்குத் தப்பிய குரங்கொன்று மூங்கிலை வெடுக்கென்று பிடித்துத் தாவி மறைகிறது. மஞ்சள் பூக்கள் மூடிய பாறைக்கல் தூங்கும் புலி போல் பாதையில் கிடக்கிறது. ஈன்ற கன்றுடன் நகரும் யானைக்கூட்டம்; புதரில் மறைந்து பின் தொடர்கிறது, புலியொன்று. கறையான் புற்றைக் கரடிக்கூட்டம், கார்முகிலெனச் சூழ்ந்து ஈசல் தின்கிறது. புற்றுக்குள் கைவிட்ட கரடியொன்று பாம்பைப் பற்றித் தூக்கியெறிகிறது. பாணர் கூட்டம் இசைத்த முழவும் யாழும் மத்தளமும் புலியின் முழக்கமென்று மயங்கிய யானை பொன்போல் பூத்த வேங்கையை முட்டிச் சிதைக்கிறது. பாறையில் வட்டச் சுனைகள்; தெள்ளிய நீரில் சூரியக் கதிர் பட்டுத் தெறிக்கிறது. கலைமானை அழைக்கும் பிணை தூம்பென்னும் இசைக்கருவி போல் ஒலிக்கிறது. காடு அழித்துக் குறவர் விதைத்த தினை முற்றிய வயல்களில் பரண்களின் மீது சிறுபெண்கள்; கவண்கல் எறியப் பறக்கும் கிளிக்கூட்டம். பாறை இடுக்கிலிருந்து எடுத்த மயிலின் முட்டையைக் குரங்குக் குட்டி வெயிலில் உருட்டி விளையாடுகிறது. யானைத் தந்தம் தூக்கிய தோளுடன் குறவர் இருவர் எதிரே வருகின்றனர். கனிந்த பலா வெடித்துச் சிதறி சுனையில் வீழ்ந்து தேனாக இனிக்கும் நீர் பருகி இளைப்பாறும் பாணர் கூட்டம்.
பக்கமலை உச்சியில் தீப்பந்தம் கொண்டு குறவர் கூட்டம் தேனழிக்கிறது. மெல்ல வழி நடக்க ஊர்ப்பசு ஒன்று காட்டில் மேய்ந்து செங்காந்தள் மகரந்தம் பூசி நிறம் மாறி வருகிறது. ஊருக்குள் தவறிவந்த யானைக் கன்றினைச் சிறு குட்டையில் குளிப்பாட்டும் ஊர்க்குறுமாக்கள்; கூப்பிடு தூரத்தில் வரிசையாகக் கூரை வேய்ந்த சிறு குடில்கள். தாண்டிச் செல்ல தினைவயல் நடுவே ஒரு தனிக்குடில். முன் திண்ணையில் வேடன் மெல்லக் கண்ணயர்ந்திருக்கிறான். கதிரறுத்த தினை வயலில் இணைமான்களின் விளையாட்டு; குடிலின் முன்னே தோல் விரிப்பில் தினை காய்ந்துகொண்டிருக்கிறது. காட்டுக் கோழிகள் ஒன்றிரண்டு தினையைக் கொத்திக்கொண்டிருக்கின்றன. கோழியை விரட்ட வந்த குறத்தி வழியே செல்லும் பாணர் கூட்டத்தை மெல்ல நோக்கிப் பசியாறிச் செல்ல அன்புடன் அழைக்கிறாள்.

No comments:

Post a Comment