Thursday 26 January 2017

சங்க இலக்கியத் துளிகள் - 6 Glimpses of Sangam Poetry

சங்க இலக்கியத் துளிகள் - 6
பகையரசனின் படைகள் கோட்டைச் சுவரைத் தாக்குவதற்கு அணிவகுத்து நிற்கின்றன. அரணைக் காப்பதற்காகப் படை வீரர்களை அழைக்கும் முரசு அறைந்து அறிவிக்கப்பட்டும்விட்டது. அதன் தொடர்ச்சியாக, காவல் படை வீரர்கள் போருக்கு உரிய காஞ்சிப் பூவினைச் சூடுமாறு பூக்கோட்பறையினை யானை மீது அமர்ந்திருக்கும் மேலோன் முழக்குகிறான். போருக்கழைத்த முதல் பறையினைக் கேட்டபோதே போருக்குப் புறப்படாத வீரர்கள் பூக்கோட்பறை அறிவிக்கும் வரையில் தாமதமாகிவிட்டதேயென கழிவிரக்கம் கொள்கின்றனர். அந்த நேரத்தில் வழக்கமாகப் பூவிற்க வருகின்ற பெண், ஆண்கள் போருக்குப் புறப்பட்டுவிட்டதால் தனித்துறையும் மகளிர் பூ வாங்கமாட்டார்களென வாடிய முகத்துடன் பிற மனைகளைத் தேடிச் செல்கிறாள். அவளது நிலை இரங்கத்தக்கதேயெனப் படைவீரர் மனையுறை மகளிர் இரக்கம் கொள்கின்றனர். இந்தச் சூழலைக் கூறும் புறநானூற்றுப் பாடல் :
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேரெழில் இழந்து வினையெனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ –
அளியல் தானே, பூவிலைப் பெண்டே!
- நொச்சி நிலக்கிழார் புறநானூறு, 293.
திணை : காஞ்சி; துறை : பூக்கோட் காஞ்சி
காஞ்சி : தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த பகையரசனை நாட்டு வேந்தன் காஞ்சிப் பூச் சூடித் தன் இடத்தைக் காத்தல் காஞ்சியாகும்.
பூக்கோட் காஞ்சி : போர் செய்தற்குரிய அடையாளமாகப் போர்ப்பூவைக் கொள்ளுதலைக் கூறுவது பூக்கோட்காஞ்சியாகும்.
உரை : குத்துக்கோலுக்கு அஞ்சாத யானை மேலமர்ந்த வள்ளுவன், அரணைச் சூழ்ந்து நின்ற பகைவரோடு போர்செய்தற்பொருட்டுப் பூக்கொள்ளுமாறு ஏவுதலைச் செய்யும் தண்ணுமைப் பறையை முழக்குவான். போர்ப்பறை கேட்டவுடனேயே புறப்படாமல் பூக்கோட்பறை அறையப்படும்வரைத் தாமதித்து நிற்பவர்கள் நாணமில்லாத வீரரே ஆவர். ஆதலால் தனித்துறையும் மனைமகளிர் இனிப் பூக்கொள்ளாரெனக் கருதி எம்மினும் பொலிவிழந்து தோன்றும் பூவிற்கும் பெண்டு, பிற மகளிர் வாழும் மனைகளுக்குச் ( போர்க்கு ஆகாரென விலக்கப்பட்ட பார்ப்பார், நோயுற்றோர், மகப்பேறு அற்றோர் போன்றோர் மனைகள்) செல்கின்றாள் போலும். அவள் இரங்கத் தக்கவளே.
பொருள் நயம் : தம் வீட்டு ஆண்களைப் போருக்கு அனுப்பிவிட்டு, அதுகுறித்துத் துயரம் கொள்வதும், போரில் தன் கணவனின் நிலை என்னாகுமோ எனப் பதறுவதும், தமிழ்க்குலப் பெண்களுக்கு இழுக்காம். அவர்கள் எழில் குன்றி நின்றாலும் தம்நிலைக்கு இரங்காமல், பிறர்நிலை கண்டு இரங்குவதாகப் பாடல் இயற்றியுள்ளமை ஓர்ந்துணர்ந்து இன்புறத்தக்கதே.
 நாணுடை மாக்கள், பூவிலைப் பெண்டு போன்ற அற்புதச் சொற்கோவைகள் உணர்த்தும் பொருளும் கவிதை அழகினை மேம்படச் செய்வதினை உணரலாம்.

No comments:

Post a Comment