Friday, 12 August 2016

தாய்லாந்து சிறுகதை - வாடகை மகிழுந்துகள், 2006 - Taxis, 2006 By Chartvut Bunyarak

வாடகை மகிழுந்துகள் 2006 - Taxis 2006
தாய்லாந்து மொழி : சார்ட்வுட் பன்யாரக் Chartvut Bunyarak
ஆங்கிலம் : திப்பாவுட் ராக்மே Tippavut Rakmaew
தமிழில் ச.ஆறுமுகம்


`நான் முழுமையான நேர்மையுடன் சாட்சியமளிப்பதாக மரகத புத்தர் மற்றும் அனைத்து இறைப்பொருட்கள் மீதும் ஆணையிட்டு, இந்த நீதிமன்றத்தில் உறுதியேற்கிறேன். நான் ஏதேனும் பொய்யான புகார் அளித்தால், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் பெருந்துன்பம் இடியாக வந்து இறங்கவும் நீதிமன்றத்திற்கு நான் உண்மையைச் சொல்வேனாகில், நானும் எனது குடும்பமும் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்ற வளர்ச்சியால் ஆசீர்வதிக்கப்படவும் …… `
நான் அர்ணானைச் சந்தித்தது அதுவே முதல் முறையாக இருந்தது. மிகக் கடுமையானதாக இல்லாத இந்த வழக்கில் அவர்தான் பிரதிவாதி; அவரது வாதங்களை விளக்குவதற்கான வழக்குரைஞராக நீதிமன்றம் என்னை நியமித்துள்ளது. எல்லாவற்றையும் கருதிப்பார்த்தால், இந்த வழக்கு நகைப்புக்கிடமளிப்பதாகவே உள்ளது. அவர் தவறு செய்ததாகச் சொல்வது சரியாக இருக்காது; ஆனால், அவர் தவறுக்கு அப்பாற்பட்டிருந்தாரென்பதும் சரியாக இருக்கவியலாது.  இதுதான் நிகழ்ந்தது :
கடந்த மார்ச்சு மாத நடுவில் அர்ணான் ஒரு வாடகை மகிழுந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து, அது, புகாருக்கு இடமாகி, கடைசியில் இருவரும் காவல்நிலையத்துக்குச் செல்லவேண்டியதாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அடிதடிப் பரிமாற்றம் நிகழ்ந்து, இரத்தமும் சிந்தவே, குற்றவழக்கு பதியப்பட்டது. அர்ணானை இறக்கவேண்டிய இடத்தில் இறக்கியதும், அவர் உள்ளங்கை அளவிற்கான கல் ஒன்றை எடுத்து மகிழுந்து மீது வேண்டுமென்றே எறிந்ததாக, வாடகை உந்து ஓட்டுநர் புகார் தெரிவித்துள்ளார்.
” நான் இறங்கவேண்டிய இடத்திலா? மிகக் கேடுகெட்ட உளறல்! பாதித்தூரம் கூடப் போயிருக்கமாட்டோம், அதற்குள் அந்த வேசிமகன் என்னைச் சாணி அல்லது மலம் போன்ற ஏதோ ஒன்றைத் தூக்கியெறிவது போல மகிழுந்திலிருந்து வெளியே தூக்கியெறிந்துவிட்டான்.”
“அவர் எதனால் உங்களைத் தூக்கியெறிந்தார்? அந்த அளவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” - நான் கேட்டேன்.
‘’நான் ஒன்றும் செய்யவில்லை. நான் சத்தியம் கூடச் செய்கிறேன் – அந்தக் கடவுள் புத்தர் மேல் சாட்சியாக. நான் அவனை ஏதாவது செய்ய நினைத்திருந்தாலோ, அல்லது செய்திருந்தாலோ, அதைப்பற்றி புகாரில் சொல்லியிருப்பானே, அப்படி எதுவும் சொல்லவில்லையே. தயவுசெய்து என்னை நம்புங்கள். போகவேண்டிய இடத்துக்குப் பாதி தூரம் இருக்கும்போதே மகிழுந்திலிருந்தும் தூக்கியெறியப்படுவதற்கு யாராவது விரும்புவார்களா? அதுவும் தொடர்ச்சியாக இரண்டு முறை! இது நியாயமாகவா இருக்கிறது?”
‘’என்ன! இரண்டாவது முறை மகிழுந்திலிருந்து தூக்கியெறியப்பட்டீர்களா? என்ன சொல்கிறீர்கள்?”      
“அதுதான் முழு உண்மை!” என்று சொல்லி மேசை மீது அர்ணான் பலமாக அறைந்தார்.
“என்னதான் நடந்தது?”
“வழக்கமாக நான் வாடகை மகிழுந்தில் செல்லும்போது, நல்லபடியாக உற்சாக மனநிலையில் ஓட்டுநருடன்  பேச்சுக் கொடுக்கவே விரும்புவேன். ஆனால் அன்றைக்கு நான் பேசுகிறபடி இல்லை. நல்ல பல்வலி, அதனால் வாயை மூடிக்கொண்டு, என் வேதனையில் கன்னத்தைப் பிடித்தவாறு அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அந்த அமைதி – ஒரு பத்து நிமிடம் இருக்கும் – அதுதான் அவனுக்கு எரிச்சலாக இருந்ததோ என்னவோ, திடீரென்று “பிரதமர் தாக்சின் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
“அப்போது பார்த்து எனது அலைபேசி `பீப்` ஒலித்துச் செய்தி ஒன்று  வந்திருப்பதைத் தெரிவித்தது. அதனால் நான் அதனைப் பார்க்க, அந்தச் செய்தி என்னுடைய சிறிய தங்கையிடமிருந்து வந்ததாகத் தெரிந்தது.  அவள், பாருங்கள், எனக்கு அடிக்கடி விதவிதமான, புதுப்புது அழைப்பொலிகளை அனுப்பிக்கொண்டேயிருப்பாள். எனக்கு இந்த தொழில்நுட்பமெல்லாம் ஒன்றும் தெரியாது. அழைப்பு வந்தால் பதில் சொல்வது அல்லது யாரையும் பேசுவதற்கு அழைப்பது, அதுவே நமக்குப் பெரிய விஷயம். அவ்வளவுதான் நம்மால் முடிந்தது. அவள் சொல்வாள், என் அலைபேசி மிகமிகத் தற்காலப் புதுமை வகையைச் சேர்ந்ததென்றும் அந்தவகையில் அது மிக நல்லதென்றும், அதில் அப்படிச் செய்யலாம் இப்படிச் செய்யலாம் என்றதோடு, அவளுடையதை என்னிடம் தந்து இதை மாற்றிக்கொள்ளலாமென்றுகூடச் சொன்னாள். நான்தான் ஒத்துக்கொள்ளவில்லை; விஷயம் என்னவென்றால் எனக்கு அவள் சொல்வது எதையும் விளங்கிக்கொள்ள இயலவில்லை என்பதுதான். அன்றைக்குப் பார்த்து, நான் வழக்கமாக அழுத்துகிற பொத்தானென நினைத்து, அது வருகின்ற  அழைப்புகளைத் தெரிவிக்கும் ஒலியை மாற்றியமைப்பதற்கானதென்ற விவரம் தெரியாமலே, ஏதோ ஒரு பொத்தானை அழுத்தித் தொலைக்க, அது எனது கெட்டநேரத்தை இன்னும் மோசமானதாக்கிவிட்டது.”
“அப்படி என்ன ஆனது?”
“ நான் அலைபேசியைக் கையாளுகையில் ஓட்டுநரைப் பார்த்து,  ”மன்னித்துக்கொள்ளுங்கள், ஏதோ சொல்லிக்கொண்டிருந்தீர்களே?” என்றேன். அதற்கு, அவன், “ஹஹ்ஹஹ்ஹா, பெரிதாக ஒன்றுமில்லை, அய்யா. பிரதமர் தாக்சின் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.” என்றான். நான் சொன்னேன், “அவருக்கென்ன, நன்றாக இருப்பாரென்றுதான்   நினைக்கிறேன். குறிப்பாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களென்று எனக்குத் தெரியவில்லை.” “நல்லது,” என்ற ஓட்டுநர், “லேட்டஸ்டாக, அவருடைய ஷின் கார்ப் பங்குகள் அனைத்தையும் சிங்கப்பூரிலுள்ள டெமாசெக் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார் என்கிறார்கள்,” என்றான்.
”ஓ, ஆமாமா, அப்படித்தான்,” என்றேன் நான். “ ஏழாயிரத்து முன்னூறு கோடி, அதுவும் ஒரு பாட் (ரூ.1.92)கூட வரி கொடுக்காமல்,” என்றேன், நான்.
அர்ணான் பேசுவதை நிறுத்தினார். சுற்றிலுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, விசாரணை அறையின் அழுக்கடைந்த வெற்றுச் சுவர்களை வெறித்த அவர், எங்களுக்கிடையே கிடந்த மேசை மீதிருந்த கீறல், கிறுக்கல்களை வெறித்தார்.
“அது என்னுடைய முட்டாள் தனம் தான், பாருங்கள், அந்த ஆளின் முகம் மாறத் தொடங்கியிருந்ததை, நான் கவனித்திருக்கவில்லை. அவன் எதுவும் பேசாமலேயிருக்க, நான் பேசிக்கொண்டேயிருந்திருக்கிறேன்.  எதோ நேரம் போகட்டுமேயென்றுதான் பேசிக்கொண்டிருந்தேனே தவிர அப்படியொன்றும்    எனக்கு அதில் பெரிய அளவுக்கு அக்கறை கிடையாது. ”தேசத்தின் பொதுச் சொத்துக்களை விற்பது முற்றிலும் சரியில்லை என்றுதான் நான் சொல்வேன். அதிலும், அவர் வரியே செலுத்தவில்லை, ஒரு பாட் (1.92ரூ ) கூடச் செலுத்தவில்லை, சொன்னால் நம்புவீர்களா? இது பெரிய மர்மமாக இருக்கிறதில்லையா, உங்களையும் என்னையும் மாதிரி மாதச் சம்பளம் வந்ததும் வரவுக்கும் செலவுக்கும் எட்டாமல் கையைச் சுரண்டிக்கொண்டிருக்கிறோம்; அரசாங்கம் என்னவோ அதற்கும் இதற்குமென்று உதவத்தான் செய்கிறது. வருமான வரி, தொழில் வரி, சமூகநல வரி ஏன், அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு அழவேண்டியிருக்கிறது, இல்லையா? ஆனால், பிரதமர் மாதிரியான ஆள் அந்தமாதிரி காரியம் செய்வதென்பது நியாயமே இல்லையென்பேன்.” அப்போதுதான் `ம்`, ஹூம் என அந்த வேசிமகன் ஓங்கி உதைத்தான்.
”எங்கே உதைத்தார்?” 
“வேறெங்கே, பிரேக் கட்டையில்தான்; இடது ஓரமாகத் திருப்பி பிரேக்கினை ஓங்கி உதைக்கவே, நான் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே பறந்துபோய் விழுந்திருப்பேன். வேறு டாக்சி பிடித்துக்கொள்ளென்று வேறு அந்த வேசிமகன் குரைத்தான்; எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.  பேந்தப் பேந்த விழித்தேன்.”
“அப்புறம் நீங்கள் என்ன செய்தீர்கள்?”
”நான் வேறென்ன செய்ய முடியும்? இறங்கித் தொலைத்தேன். ஆனால் திகைத்துப்போனேன், உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்வேன், நான் என்ன தவறு செய்தேனென்று என்னையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.”
”அதனால், பின்னர் நீங்கள் வேறு ஒரு வாடகை மகிழுந்தினைக் கூப்பிட்டீர்கள்; அதுதான் இந்த வழக்கு சம்பந்தப்பட்டது, இல்லையா?”
” ஆம். ஆனால் நானாக எதையும் ஆரம்பிக்கவில்லை. அவன்தான் ஆரம்பித்தான்.”
“அப்படியென்றால் இம்முறை என்ன நடந்தது?” சொல்லுங்கள்.” அர்ணானின் உடல்மொழியை நான் கவனித்தேன். எதற்காக அவர் விசாரணைக் கூண்டில் நிற்கவேண்டுமென்று திகைத்து நிற்கும் தோற்றத்திலேயே அப்போதும் அவர் நின்றிருந்தார்.
“கேட்பிஷ் பாண்ட் டெம்பிள் பள்ளியில், கிராமத்தின் முன்னாள் சாரணத் தலைவர் என்ற பெருமிதத்தோடு நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன், இந்தக் காலத்தில், அதுவும் என் வயதில் அரசியலால் நடுத்தெருவில் நிற்கும் மனிதனாக என்னைத் தவிர இன்னொருவனை நீங்கள் கண்டுபிடிக்கமுடியாது.     நான் ஒருபோதும் யார் பிரதமராக வேண்டுமென்றோ, எந்தக் கட்சி ஆட்சி அமைக்கவேண்டுமென்றோ, அரசியலை யார் சீர்திருத்தவேண்டுமென்றோ அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியெழுதவேண்டுமென்றோ கூக்குரல் எழுப்பியது கிடையாது. நாசமாப் போகட்டும், நான் இரட்டைப் பேச்சு பேசுபவனல்ல. தேர்தலை அவர்கள் இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ நடத்தித் தொலைக்கட்டும். அவர்கள் என்னைப் பிடிப்பதற்கு வழியே கிடையாது; ஏனென்றால் இந்தப் பிறவியில் என் ஆயுள் முழுவதிலும் ஒரு முறைகூட ஓட்டுப் போட்டதில்லை. நான் ஏன் போடவேண்டும்? நீங்கள் எப்படி ஓட்டுப் போடுகிறீர்கள் என்பது ஒரு விஷயமே இல்லை. ஒவ்வொரு முறையும்  நாட்டை ஆள்கிறோமென்ற போர்வையில் குட்டையில் புரளும் ஏமாற்றுக் கூட்டம் ஒன்றைத்தான் நாம் பார்க்கவேண்டியிக்கிறது. இது முழுக்க முழுக்கக் காலவிரயம் தவிர வேறு எதுவுமில்லை. இதிலிருந்து விலகி நிற்பதுதான் நல்லது. அரசாங்கமென்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டுமா என்ன? எனக்குப் புரியவில்லை. எத்தனையோ பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக எப்போதும் இப்படியேதான் இருந்துவருகிறது. நான் சொல்வது சரியா இல்லையா?”
“பிறகு என்ன நடந்தது?` எனக்கேட்டுவிட்டு, ”சுருக்கமாக ஒன்றிரண்டு வார்த்தைகளில் சொல்லுங்கள். எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன.” என்றேன், நான்.
“ஒன்றும் நடக்கவில்லை. உண்மையாகத்தான், ஒன்றும் நடக்கவில்லை.” என்றார், அவர். ஒரு நொடி கடந்ததும், முதலில் மெல்லப் பேசத் தொடங்கிப் பின்னர் விரைவாகவும் குரலை உயர்த்தியும், உரக்கச் சொன்னார்: “அவன் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு நான் வெறுமேதான்  உட்கார்ந்திருந்தேன். நீங்களே பாருங்கள், அவன்தான் ஒரு பைத்தியம் மாதிரி எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தான்; கதவு ஓரமான எனது மூலையில், நான் அமைதியாக , வாயை மூடிக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தேன். அவன் பேசியதற்கு நான் உச் கொட்டக்கூட இல்லை;  என்னை அமைதியாக இருக்கவிட்டால் போதுமென்றுதான் நான் இருந்தேனென்பதை அந்த ஒன்றே தெளிவாகக் காட்டும். ஆனால், அந்த வேசிமகன் இது, அது என்று எல்லாவற்றையும் பேசி என்னை வலைக்குள் இழுக்க முயற்சித்தான். ஆனால், கடைசியில், அது அவன் எதைப்பேசவேண்டுமென்று அரிப்பெடுத்து அலைந்தானோ, அதிலேயே, அந்த விஷயத்துக்கே வந்து சேர்ந்தது. 
‘திரு. தாக்சின் அப்படி, இப்படி, எல்லாவகையிலும்  நல்லவர்தான்; இந்த ப் பொதுவெளித் தலைவர்கள் தான் சரியில்லை; எல்லோரும் பார்க்கிறார்கள், தாக்சின் பணக்காரராக இருக்கிறார், அதனால் அவர்களுக்குப் பொறாமை, அவர்களின் தொண்டர்களும் அவர்களைப் போலத்தான், முட்டாள்கள்; ஜனநாயக விதிமுறைகளை எப்படி மதிக்க வேண்டுமென்று தெரிந்தால்தானே, இந்த நாட்டில் என்ன சட்டமா இல்லை, கழிசடைகள்.’
“அது மட்டுமில்லை, அந்த வக்காளி, வார்த்தைக்கொரு முறை, சரிங்களா, மிஸ்டர், சரிங்களா மிஸ்டர் என்று சொல்லிக்கொண்டிருந்தான். மடப்பயல்! அதனால்தான் நான் இங்கு வந்து நின்று தொலையவேண்டியிருக்கிறது!
“ஆனாலும், சொல்லப்போனால் எல்லாம் ஓரளவுக்கு நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்களில் நான் இறங்கவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்து, இறங்கி, அவனும் நானும் பிரிந்திருப்போம்; அதோடு அடுத்த பிறவியிலோ, ஒருவேளை அன்று மாலையிலோ மீண்டும் சந்தித்திருப்போம், சரியா? ஆனால், அதுமட்டும் நடக்காமலிருந்தால். ஆனால், அதுமட்டும்….”
“ஆனால், அதுமட்டும், என்ன?”
“ஆனால், அது, எனது அலைபேசி மட்டும் ஒலிக்கத் தொடங்காமல் இருந்திருந்தால்.”
“அலைபேசி ஒலித்து என்ன கெடுதல் வந்துவிடும்? எனக்குப் புரியவில்லை.”
‘அது வேறு எதையாவது ஒலித்திருந்தால் எல்லாம் சரியாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அது ஒலிக்கவில்லை – கூச்சல் போட்டது.”
“என்ன கூச்சல்?”
”தாஆஆஆஆஆக்சின் கெட் அவுட்! தாஆஆஆஆஆக்சின் கெட் அவுட்! தாஆஆஆஆஆக்சின் கெட் அவுட்! ஹேய்!”

புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழ் இதழ் எண் 46 ஜூலை, 2016 இல் வெளியாகியுள்ளது.Thursday, 11 August 2016

என் கவிதைகள் - கருணை

கருணை

காலொடிந்த ஆட்டினைத்                                                                                                             தோளில் சுமந்த                                                                                                                             புத்தனின் கருணை                                                                                           வீணாகிவிடவில்லை.                                                                                                       இப்போதும் நாங்கள்                                                                                                         மாடுகளை லாரிகளில்தான் அனுப்புகிறோம்.                                                   கேரளாவுக்கு.

கணையாழி இதழில் வெளியானது.

Thursday, 4 August 2016

ஜப்பானியச் சிறுகதை - ஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டு - The Year of Spaghetti year by Haruki Murakami

ஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டு – THE YEAR OF SPAGHETTI 

ஜப்பான் : ஹாருகி முரகாமி HARUKI MURUKAMI ஆங்கிலம் : பிலிப் காப்ரியேல் PHILIP GABRIEL 

 தமிழில்  ச. ஆறுமுகம்

ஸ்பகேட்டி
ஸ்பகேட்டி
1971 – அதுதான் ஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டாக இருந்தது. 1971 இல் நான் உயிர் வாழ்வதற்காக ஸ்பகேட்டி இடியாப்பம் சமைத்தேன் என்பதோடு, ஸ்பகேட்டி இடியாப்பம் சமைப்பதற்காகவே வாழ்ந்தேன் என்றும்தான் கூறவேண்டும். அலுமினியப் பானையிலிருந்து உயர்ந்தெழும் ஆவி எனது பெருமித மகிழ்ச்சியாகவும் நீண்ட கைப்பிடியுடன் கூடிய குழம்புச் சட்டியில் குமிழியிட்டுக் கொதிக்கும் தக்காளி சுவைச்சாறு எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த நம்பிக்கையாகவும் திகழ்ந்தது.
சமையல் பாத்திர சிறப்புக் கடை ஒன்றுக்குச் சென்று கிச்சன் டைமர் எனப்படும் சமைப்பான் ஒன்றும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ஒன்றைக் குளிப்பாட்டுவதற்குப் போதுமான அளவிலிருந்த பெரியதொரு அலுமினிய சமையல் பானையும் வாங்கிவிட்டுப் பின் வெளிநாட்டவர்களுக்கெனத் தனிச்சிறப்புபெற்ற பல்பொருள் அங்காடிகளில் சுற்றியலைந்து தாளிப்புக்குத் தேவைப்படுவனவும் வாயில் நுழையாத பெயர்கள் கொண்ட பல்வேறு நறுமணப் பொருட்களும் வாங்கினேன். புத்தகக்கடையில் பாஸ்தா சமையல் புத்தகம் ஒன்றினைத் தேடியெடுத்துக்கொண்டபின், டஜன் கணக்கில் தக்காளிகளும் வாங்கினேன். என்னால் வாங்க முடிகிற அளவுக்கு ஸ்பகேட்டியின் அத்தனை வகைகளையும் வாங்கியதோடு மனிதகுலம் அறிந்த அத்தனைவகை சுவைச்சாறுகளையும் வாங்கித் திளைத்தேன். வெள்ளைப் பூண்டு, வெங்காயத்தின் கண்ணுக்குத் தெரியாத மீச்சிறு துகள்களும், ஆலிவ் எண்ணெய்த் துளிகளும் காற்றில் கலந்து மிதந்து, மனதுக்கிசைந்த மணமாகப் படலமாகித் தவழ்ந்து எனது சின்னஞ்சிறிய அடுக்ககக் குடியிருப்பின் அனைத்து மூலை மற்றும் இடுக்குகளிலும் ஊடுருவி, அடித்தரை, மேற்கூரை, சுவர்கள், எனது துணிமணிகள், எனது புத்தகங்கள், எனது வரிப்பந்து மட்டை, எனக்கு வந்த பழைய கடிதங்களின் மூட்டை என அனைத்துக்குள்ளும் புகுந்து நிறைந்திருந்தது. மொத்தத்தில், அது பண்டைப் பழங்காலத்து ரோமன் கால்வாயின் மணமாக இருந்தது.
இது ஸ்பகேட்டி ஆண்டான கி.பி.1971- இல் நிகழ்ந்த ஒரு கதையென்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
பொதுவான ஒரு விதியாக, நானே ஸ்பகேட்டியைச் சமைத்து, அதை வேறு யாருமின்றித் தனியாகவே சாப்பிட்டுவந்தேன். ஸ்பகேட்டி, அப்படித் தனித்துச் சாப்பிடும்போதுதான் அதிகமாகச் சுவைத்து மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு உணவுவகையென என்னை நானே அமைதிப்படுத்தியிருந்தேன். நான் ஏன் அப்படி நினைத்தேனென்பதற்கு என்னால் எந்த விளக்கமும் சொல்லிவிட முடியாதுதான். ஆனால், அது அப்படித்தானிருந்தது.
நான், எனது ஸ்பகேட்டியை எப்போதுமே லெட்டூஸ் கீரையும் வெள்ளரிப் பிஞ்சும் கலந்த ஒரு சாலட் மற்றும் கறுப்புத் தேநீருடனேயே அருந்தினேன். அவையிரண்டும் குறைவுபடாமல் அதிகமிருக்குமாறு பார்த்துக்கொள்வேன். மேசையின் மீது எல்லாவற்றையும் கொண்டுவந்து அழகாக ஒழுங்குபடுத்தி அமைத்தபின், ஓய்வாக நாளிதழை வாசித்துக்கொண்டே, எனது உணவினைச் சுவைத்து மகிழ்வேன். ஞாயிறு முதல் சனி முடிய ஏழு நாட்களும் ஸ்பகேட்டி நாட்களாகவே ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன. ஒவ்வொரு புதிய ஞாயிறு அன்றும் புத்தம் புதியதொரு ஸ்பகேட்டி வாரம் முகிழ்த்தது.
ஸ்பகேட்டி தட்டுடன் அமர்கிற ஒவ்வொரு முறையும் – அதிலும் குறிப்பாக மழைபெய்கின்ற பிற்பகல்களில் – என் வீட்டு வாசற்கதவை யாரோ ஒருவர் தட்டப்போகிறாரென்ற தனித்த ஒரு உணர்வு எப்போதுமே எனக்குள் எழுந்துகொண்டிருந்தது. அப்படி வரப்போவதாக என் கற்பனையில் வந்தவர்கள் ஒவ்வொரு முறையும் வேறுவேறு நபர்களாக இருந்தனர். சிலவேளைகளில் அது ஒரு வேற்றாளாக இருந்தது; சிலவேளைகளில் எனக்குத் தெரிந்தவராக இருந்தார். ஒருமுறை உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் மணநோக்கு உறவுகொண்டிருந்த ஒரு மெலிந்த கால்களுள்ளவளாக இருந்தாள். பின்னுமொரு முறை, அது நானாகவே, ஒருசில ஆண்டுகளுக்கு முந்திய நானாகவே என்னைப் பார்க்க வந்திருந்தேன். பிறகொரு முறை வந்தது வேறுயாருமில்லை; ஜெனிஃபர் ஜோன்ஸை அணைத்தவாறு வில்லியம் ஹோல்டெனேதான்.
வில்லியம் ஹோல்டென்?
அவர்களில் ஒருவர்கூட என்னுடைய அடுக்ககக் குடியிருப்புக்குள் நுழைய முற்பட்டதேயில்லை; கதவைத் தட்டாமல் வெளிவாசலிலேயே, நினைவுச் சிதறல்கள் போல வந்து உலவிவிட்டுப் பின்னர் நழுவிச் சென்றனர்.
@
வசந்தம், கோடை மற்றும் இலையுதிர்காலங்களில் நான் ஸ்பகேட்டி சமைத்தேன்; ஸ்பகேட்டி சமைப்பதென்பது ஏதோ ஒரு பழிவாங்கும் செய்கையென்பதுபோலச் சமைத்தேன். வஞ்சிக்கப்பட்டுத் தனிமையில் தவிக்கும் ஒரு பெண் அவளுடைய பழைய காதல் கடிதங்களைக் கணப்படுப்பில் ஒவ்வொன்றாக நெருப்பிலிடுவதுபோல, ஸ்பகேட்டியை ஒவ்வொரு கைப்பிடியாக, ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து, பானைக்குள் போட்டுக்கொண்டிருந்தேன்.
காலத்தின் பெருங்கால்களில் மிதிபட்டு நசுங்கிய நிழல்களைப் பாத்திரத்திலிட்டு, ஜெர்மன் ஷெப்பர்டு உருவத்துக்குத் திரட்டி, கொதிக்கும் நீருக்குள் விட்டெறிந்து,, அதன் மீது உப்பினைத் தூவித் தெளிப்பேன். பின்னர் கையில் மிகப்பெரும் உணவுக்கோல்களுடன் பானையே கண்ணாக, சமைப்பானில் `டிங்` அவலக்குரல் கேட்கும்வரையில் அங்கேயே நின்றுகொண்டிருப்பேன்.
ஸ்பகேட்டி இழைகள் தந்திரம்நிறைந்த ஒரு வஞ்சனைக்கொத்தாகச் சேர்ந்திருப்பவை. அவற்றை என் பார்வையிலிருந்தும் விட்டுவிடக்கூடாது; நான் மட்டும் இலேசாக முதுகைக்காட்டித் திரும்பினேனோ, அவ்வளவுதான், பானையின் விளிம்பைத் தாண்டிக் குதித்து, இரவின் மையிருளில் மறைந்துபோகும். பலப்பல வண்ணங்களில் வந்து சேரும் வண்ணத்துப் பூச்சிகளைக் காலத்தின் முழுமைக்குள் விழுங்கி ஏப்பமிடக் காத்திருக்கும் வெப்பமண்டலக் காடுகளைப் போல குதித்து விழும் இழைகளை வழிப்பறிசெய்ய இருள் அமைதியாகக் காத்துக்கிடக்கிறது.
பார்மிஜியானா பாலாடைக் கட்டி சேர்த்த ஸ்பகேட்டி
நெபோலெட்டனா தக்காளிச் சுவைச்சாறு சேர்த்த ஸ்பகேட்டி
கார்ட்டோக்சியா தக்காளி மசாலாப் பொதியுடனான ஸ்பகேட்டி
பூண்டு, மிளகாய், பார்சிலிக்கீரை வதக்கிச் சேர்த்த ஸ்பகேட்டி
பாலாடைக்கட்டி, கறுப்பு மிளகு, மாட்டிறைச்சி, முட்டை சேர்த்த ஸ்பகேட்டி
மணிலா கிளாம் சிப்பி, கறுப்பு மஸ்ஸெல் எனும் ஊமச்சி நத்தை, பூண்டு, துளசிவகைக் கீரை ஒன்று, சான் மர்சானோ என்ற தக்காளி சுவைச்சாறு சேர்த்த ஸ்பகேட்டி
அப்புறம் இருக்கவே இருக்கிறது, மீந்துபோய்க் குளிர்பெட்டியில் அடங்கிக் கிடக்கும் பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிய, இரக்கத்திற்குரிய, பெயரற்ற எனது ஸ்பகேட்டி.
ஆவியில் பிறந்த ஸ்பகேட்டி இழைகள் 1971 இன் காலமென்னும்நதியில் அடித்துச் செல்லப்பட்டு மறைந்துவிட்டன.
அவை எல்லாவற்றுக்குமாக நான் துக்கம் கொண்டாடுகிறேன் – 1971 ஆம் ஆண்டின் அனைத்து ஸ்பகேட்டிகளுக்கும்.
@
முரகாமி
ஜப்பான் எழுத்தாளர்
மூன்று இருபதுக்குத் தொலைபேசி ஒலித்தபோது, நான், டட்டாமி வைக்கோல் பாயில் மேற்கூரையைப் பார்த்துக்கொண்டு கைகால்கள் பரப்பியநிலையில் அம்போவெனப் படுத்துக் கிடந்தேன். நான் கிடந்த இடத்தில் குளிர்காலச் சூரியன் வெயில்திட்டு ஒன்றைப் பரப்பியிருந்தது. 1971 டிசம்பரின் ஒளிவட்டத்தினுள் நான் மரணமுற்ற ஒரு ஈயாக, வெறுமனே விழுந்துகிடந்தேன்.
முதலில் தொலைபேசிதான் ஒலிக்கிறதென நான் உணரவில்லை. ஏதோ முன்பின் அறியாத நினைவலை ஒன்று காற்றின் அடுக்குகளுக்குள் தயங்கித் தயங்கி மறைவதாகவே அது, தோன்றியது. பின்னர் அது உருக்கொள்ளத் தொடங்கியதாகத் தோன்றி, முடிவில், அது தொலைபேசி ஒலியேதானென்று உறைத்தது. நூறு விழுக்காட்டு உண்மையான காற்றில் நூறு விழுக்காட்டு தொலைபேசியொலியாகவே அது இருந்தது. அப்போதும் கைகால் பரப்பிக் கிடந்தநிலையிலேயே, நகர்ந்து தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுத்துத் தொலைத்தேன்.
எதிர் முனையிலிருந்தது, ஒரு பெண். நான்கு முப்பதுக்கெல்லாம் முற்றாக மறைந்துவிடுமளவுக்கு, அல்லது, நினைவில் பதிகிற அளவுக்குச் தனித்துத்தெரிகிற ஏதொன்றுமில்லாத ஒரு பெண். அவள், எனது நண்பனொருவனின் முன்னாள் பெண்தோழி. ஏதோ ஒன்று அவர்களை – அவனையும் அந்தத் தனித்துத் தெரிகிற ஏதொன்றுமில்லாத பெண்ணையும் இணைசேர்த்துப் பின்னர், வேறு ஏதோ ஒன்று அவர்கள் பிரிந்துசெல்வதற்கான வழிவகுத்தது. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், முதலில் அவர்கள் இருவரும் இணைசேர்ந்ததில் என்னுடைய பங்கும் இருந்தது.
“உங்களைச் சிரமப்படுத்துவதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது,” என்ற அவள் ”அவர் இப்போது எங்கிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டாள்.
இணைப்புச் சுருள் வழியே, அதன் மொத்த நீளத்திற்கும் கண்களை ஓடவிட்ட நான், தொலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தேன். இணைப்புச் சுருள் தொலைபேசியுடன் உறுதியாக இணைக்கப்பட்டேதானிருந்தது. நிலைமையைச் சமாளிக்க வெற்றான ஏதோ ஒன்றைப் பதிலாகச் சொன்னேன். அந்தப் பெண்ணின் குரலில் அவலமான ஏதோ ஒன்று இருந்தது; அது எப்படிப்பட்ட துயரமாக இருந்தாலும் நான் அதில் ஈடுபட்டுக்கொள்ளக்கூடாதென எனக்குத் தெரிந்தது.
“அவர் எங்கிருக்கிறாரென்று யாருமே சொல்லமாட்டேனென்கிறார்கள்,” மிகுந்த வருத்தம் தொனிக்கிற, விரக்தியான ஒரு குரலில் அவள் சொன்னாள். எதுவும் தெரியாத மாதிரி எல்லோருமே நடிக்கிறார்கள். நான் அவருக்குத் தெரிவிக்கவேண்டிய முக்கியமான விஷயமொன்று இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன், தயவுசெய்து அவர் எங்கிருக்கிறாரென்று சொல்லுங்கள். நான் சத்தியமாகச் சொல்கிறேன், உங்களை இழுத்துவிட மாட்டேன். தயவுசெய்து சொல்லுங்கள், அவர் எங்கிருக்கிறார்?”
“உண்மையாகவே சொல்கிறேன், எனக்குத் தெரியாது.” என்றேன், நான். “அவனைப் பார்த்து நிரம்பக் காலம் ஆகிவிட்டது.” ஆனால், எனது குரல் என்னுடையது போலவே இல்லை. அவனை நீண்ட நெடுங்காலமாகப் பார்க்கவில்லையென நான் உண்மையைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்; என்றாலும் இன்னொரு பகுதி – அவனது முகவரியும் தொலைபேசி எண்ணும் எனக்குத் தெரியும்தான். நான் பொய் சொல்லும்போதெல்லாம் என் குரலுக்கு ஏதாவது நேர்ந்துவிடுகிறது.
மறுமுனையில் அவளிடம் எதிர்வினை ஏதுமில்லை.
தொலைபேசி ஒரு பெருந்தூணளவுக்கான பனிக்கட்டியாகக் குளிர்ந்தது.
பின்னர், ஜே.ஜி.பல்லார்டின் அறிவியல் புனைவுலகத்துக்குள் நான் புகுந்துவிட்டது போல, என்னைச்சுற்றிலுமிருந்த பொருட்கள் அனைத்தும் பனித்தூண்களாக மாறின.
“உண்மையிலேயே எனக்குத் தெரியாது,” என மீண்டும் சொன்னேன். ”அவன் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் நிரம்ப நாட்களுக்கு முன்பே சென்றுவிட்டான்.“
அவள் சிரித்தாள். “ நான் பேசுவதற்கு இடைவெளி விடுங்கள். அந்த அளவுக்கு அந்த ஆளுக்குத் திறமை கிடையாது. எந்தக் காரியம் செய்தாலும் அலப்பறை எழுப்பும் ஒரு ஆளைப்பற்றித்தாம் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.”
அவள் சரியாகத்தான் சொன்னாள். அந்த ஆள் கொஞ்சம் மங்கிய பல்புதான்.
ஆனால், அவன் எங்கிருக்கிறானென்று, நான் அவளுக்குச் சொல்வதாக இல்லை. அப்படிச் சொன்னேனென்றால், அடுத்த நிமிடமே தொலைபேசியில் அவனிடம் போதும் போதுமென்கிற அளவுக்கு வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டியிருக்கும். ஏற்கெனவேயே பிறர் விவகாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறேன். பின்பக்கத் தோட்டத்தில் குழிதோண்டி அதில் புதைக்கவேண்டிய எல்லாவற்றையும் ஏற்கெனவே புதைத்துவிட்டேன். அதை யாராலும் மீண்டும் தோண்டியெடுத்துவிடமுடியாது.
“எனக்கு வருத்தமாகத் தானிருக்கிறது.” என்றேன்.
“உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை, இல்லையா?” என்றாள், அவள், திடீரென்று.
என்ன பதில் சொல்வதென்று எனக்கு எதுவும் தோன்றவில்லை. குறிப்பாக, நான் அவளை வெறுக்கவும் இல்லைதான். அவளைப்பற்றி எனக்கு எந்தவிதமான எண்ணப்பதிவும் இல்லையென்பதுதான் உண்மை. ஒருவரைப்பற்றி எந்தவிதமான கருத்துப்பதிவும் இல்லாதபொழுதில் அவரைப்பற்றி மோசமான அபிப்பிராயம் கொள்வது கடினமான காரியமாயிற்றே.
“எனக்கு வருத்தமாகத்தானிருக்கிறது.” என்றேன், மீண்டும். “ஆனால், நான் இப்போது ஸ்பகேட்டி சமைத்துக்கொண்டிருக்கிறேன்.” என்றும் சொன்னேன்.
”என்னது?”
’’நான் ஸ்பகேட்டி சமைத்துக்கொண்டிருக்கிறேன் என்றேன்.” நான் பொய்தான் கூறினேன். நான் ஏன் அப்படிச் சொன்னேனென்று எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், அந்தப் பொய் ஏற்கெனவேயே எனது உண்மையான ஒரு பகுதியாக—அதாவது குறைந்தபட்சம் அந்தக்கணத்திலிருந்தே அது ஒரு பொய்யல்லவென்று எனக்குத் தோன்றத் தொடங்கியது.
தண்ணீர் ஊற்றியிருந்த ஒரு கற்பனைப் பானையை கற்பனையான ஒரு அடுப்பின் மீது வைத்து, கற்பனையான ஒரு தீக்குச்சியால் பற்றவைத்தேன்.
”சரி, அதனாலென்ன?” கேட்டாள், அவள்.
கற்பனையில் கொதித்துக்கொண்டிருந்த கற்பனையான பானைக்குள் கற்பனையாக நான் உப்பினைத் தூவி, கற்பனையான ஸ்பகேட்டியை ஒரு கைப்பிடியளவு எடுத்து பானைக்குள் போட்டுவிட்டு, கற்பனையான சமைப்பானின் நேரங்காட்டியை பன்னிரண்டு நிமிடங்களுக்கு எனச் சீரமைத்தேன்.
‘’அதனாலென்னவென்றால், என்னால் பேசமுடியாது. ஸ்பகேட்டி கெட்டியாகி ஒட்ட்டிக்கொள்ளும்.” என்றேன்.
அவள் பதிலெதுவும் சொல்லவில்லை.
“எனக்கு இதில் உண்மையாகவே வருத்தம் தான், ஆனால் ஸ்பகேட்டி சமைப்பதென்பது கவனமாகவும் நுட்பமாகவும் செய்யவேண்டிய ஒரு காரியம்.”
அந்தப் பெண் அமைதியாக இருந்தாள். என் கையிலிருந்த தொலைபேசி மீண்டும் உறையத் தொடங்கியது.
“அதனால் தான் சொல்கிறேன், நீங்கள் என்னை அப்புறமாகக் கூப்பிடமுடியுமா?” அவசர அவசரமாக நான் கேட்டேன்.
”ஏனென்றால், நீங்கள் ஸ்பகேட்டி சமையலில் இருக்கிறீர்கள், அப்படித்தானே?” என அவள் கேட்டாள்.
“ஹ்ஹூம், ஆமாம்.”
“ அதை நீங்கள் வேறு யாருக்காவது சமைக்கிறீர்களா? அல்லது நீங்கள் மட்டுமே சாப்பிடப் போகிறீர்களா?”
“நானேதான் சாப்பிடுவேன்,” என்றேன், நான்.
அவள் நீண்டதொரு பெருமூச்சு எடுத்துப் பின் மெல்ல மெல்ல வெளியேற்றினாள். ‘உங்களுக்கு இந்த விவரம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை; ஆனால், நான் உண்மையிலேயே பிரச்சினையில் இருக்கிறேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை.”
“உங்களுக்கு உதவமுடியாமலிருப்பதில் எனக்கு வருத்தம்தான்.” என்றேன், நான்.
“இதில் கொஞ்சம் பணமும் மாட்டிக்கொண்டிருக்கிறது.”
‘’அப்படியா?”
“ அவர் என்னிடம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவேண்டும். நான் கொடுத்திருக்கக்கூடாதுதான். ஆனால் கொடுக்கவேண்டியதாகிவிட்டது.”
நான் ஒரு நிமிடம் மவுனமாக இருந்தேன். என் சிந்தனைகள் ஸ்பகேட்டியையே சுற்றிவந்தன. ‘’எனக்கு வருத்தமாகத்தானிருக்கிறது. ஆனால், ஸ்பகேட்டி கொதித்துக்கொண்டிருக்கிறது. அதனால் ……”
அவள் வெற்றாகச் சிரித்தாள். ”குட்பை, உங்கள் ஸ்பகேட்டிக்கு எனது மகிழ்ச்சியான வாழ்த்தினைச் சொல்லுங்கள். அது சரியான பக்குவத்தில் வந்துவிடுமென நம்புகிறேன்.”
“பை” என்றேன், நான்.
தொலைபேசியை நான் துண்டித்துக் கீழே வைத்தபோது, தரையிலிருந்த ஒளிவட்டம் ஒன்று அல்லது இரண்டு அங்குலத்திற்கு நகர்ந்திருந்தது. நான் ஒளிவட்டத்துக்குள் மீண்டும் படுத்து, கூரையை வெறித்துப் பார்ப்பதைத் தொடர்ந்தேன்.
@
ஒருபோதுமே வேகாமல் நிரந்தரமாக முடிவற்றுக் கொதிக்கும் ஸ்பகேட்டியைப் பற்றி நினைப்பது துயரமான விஷயந்தான்.
அந்தப் பெண்ணுக்கு எதுவுமே தெரிவிக்காமலிருந்துவிட்டோமேயென்று, நான், இப்போது கொஞ்சம் வருத்தப்படுகிறேன். அதை நான் தெரிவித்திருக்கலாம்தான். நான் சொல்வது, அவளுடைய முன்னாள் தோழன் ஒரு வெற்றுவேட்டு – கலைத்திறனுள்ளவன் போன்ற பாவனையில் வாய்வீச்சு என்னவோ பெரிதுதான், ஆனால் யாருமே அவனை நம்பவில்லை. அவளிடம் உண்மையிலேயே பணத்தை உருவிப் பறித்துவிட்டது போலவே அவள் பேசினாள்; அது எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருக்கட்டுமே, ஒருவரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டுமில்லையா?
அப்புறம், அந்தப் பெண்ணுக்கு என்ன நிகழ்ந்திருக்குமோவென்று நான் நினைப்பதுண்டு – அதிலும் குறிப்பாக ஆவி பறக்கும் ஸ்பகேட்டி தட்டின் முன் அமரும்போதெல்லாம் இந்த நினைவு என் மனத்தில் வந்து குதிக்கிறது. அவள் தொலைபேசியை வைத்தபின், நான்கரைமணி நிழலில் கரைந்துபோய், நிரந்தரமாக மறைந்துவிட்டாளா? அந்தக் குற்றத்தில் எனக்கும் பங்கு இருக்கிறதா?
இருப்பினும், நீங்கள், என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த நேரத்தில் நான் எவர் விவகாரத்திலும் ஈடுபட்டுக்கொள்ள விரும்பவில்லை. அதனால்தான், நான் எனக்காக ஸ்பகேட்டியை, ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு படுத்துக் கொள்ளும் அளவுக்கான பெரிய பானையில் சமைத்துக்கொண்டேயிருந்தேன்.
@
இத்தாலிய வயல்களில் தரம் செமோலினா, தங்கநிறக் கோதுமை அசைந்துகொண்டிருக்கிறது.
1971 இல் இத்தாலியர்கள் உண்மையில் தனிமையைத்தான் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தார்களென அவர்களுக்குத் தெரியவந்தால், எவ்வளவு வியப்படைவார்களென்பதை நீங்கள் கற்பனைசெய்யமுடிகிறதா?
••••
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
ஸ்பகேட்டி Spaghetti – இத்தாலிய உணவு வகைகளில் ஒன்று
ஜெர்மன் ஷெப்பர்டு German Shepherd – அயல் நாட்டின நாய் வகைகளில் ஒன்று
பார்மிஜியானா – இத்தாலிய பாலாடைக்கட்டி
நெபோலெட்டனா – இத்தாலிய தக்காளி சுவைச்சாறு – Sauce
கார்ட்டோக்சியா – மசாலாப் பொருட்களைத் நீர்புகாத்தாளில் சுற்றிச் சமைக்கும் ஒரு இத்தாலியப் பக்குவம்
டட்டாமி – Tatami – வைக்கோலில் தயாரிக்கும் ஜப்பானியப் பாய்
தரம் செமோலினா – Durum Semolina – கோதுமை வகைகளில் ஒன்று
(((((((())))))))))))))
(இக்கதை 21.11. 2005 நியூயார்க்கர் இதழில் வெளியானது .)
இத்தமிழாக்கம் மலைகள் இணைய இதழ் எண் 102 நாள் 17.07.2016 இல் வெளியானது.