Thursday 15 March 2018

காக்கைகள்

காக்கைகள்
இந்த இரு காக்கைகளும் தினமும் காலை 10.00 மணிக்கு என் வீட்டுக்கு எதிர் வீட்டு மாடி பால்கனி கைப்பிடி கம்பியில் வந்து அமர்கின்றன. சில நேரங்களில் ஒன்றை ஒன்று கோதிக்கொள்கின்றன. ஒரு அரை மணி நேரம் கழித்துப் பறந்துவிடுகின்றன.
காலை உணவு முடிந்து ஆசுவாசமாக அமர்ந்து ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளுமோ! அன்பு கொள்ளுதல் ஒவ்வொரு உயிருக்கும் அவசியமான செயல்பாடு என்றுதான் கொள்ளவேண்டும்.
பக்கத்திலேயே என் வீட்டு வேப்ப மரம். அதில் அமர்வதாகத் தெரியவில்லை.
பேத்தியைப் பள்ளியில் விட்டுவிட்டு, வீட்டுவாசலுக்கு வந்ததும் என் பார்வை தானாகவே எதிர் வீட்டுப் பால்கனிக்குத் தாவுகிறது. காக்கை இரண்டும் அமர்ந்திருப்பது வழக்கமாகிவிட்டது.
இரண்டும் அதே காக்கைகள் என்பதை எப்படி உறுதியாகச் சொல்லமுடியுமென்கிறீர்களா? எல்லாமே அனுமானம் தான்.
காக்கை பாடினியார் நினைவும் எழுகிறது. வினை மேற்சென்ற தலைவன் வினை முடிந்து திரும்பி வந்தான். தோழியிடம் `நான் இல்லாத காலத்தை எப்படிக் கழித்தீர்கள் ? தலைவியை எப்படி ஆற்றுவித்தாய் ? எனக் கேட்கிறான். தோழி சொல்கிறாள் :
எல்லாவற்றுக்கும் இந்தக் காக்கை தான் காரணம் தலைவ! அது கரைவதைக் காட்டியே இன்று வந்துவிடுவாய், என்று சொல்லிச் சொல்லி ஆற்றுவித்தேன். அந்தக் காக்கைக்கு திண்தேர் நள்ளியின் காட்டில் மேய்ந்த பல பசுக்களும் தந்த நெய்யோடு தொண்டியில் விளைந்த வெண்ணெல்லில் சமைத்த சாதமும் கலந்து ஏழு கிண்ணங்களில் வைத்து பலிகொடுத்தாலும் கூட நன்றிக்கடன் செலுத்தியதாகாது எனக் கூறுகிறாள்.
பாடல் : குறுந்தொகை 210 - முல்லை.
திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.
விருந்து வரக் கரையும் காக்கையைச் சிறப்பித்துப் பாடியமையால் அந்தப் பெண் கவிஞரான நச்செள்ளையார் `காக்கை பாடினியார் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.
காக்கையில் தொடங்கிய பதிவு காக்கை பாடினியாருக்கு வந்து குறுந்தொகையில் முடிவுறுவது மகிழ்ச்சியாகத் தானிருக்கிறது. வாழ்க காக்கைகள்.
முகநூலில் 14.03 18 அன்று பதிவிடப்பட்டது. விருப்பம் 143 பகிர்வு 13 பின்னூட்டம் 33 

No comments:

Post a Comment