Sunday 25 March 2018

மரக்கழச்சி என்னும் கழற்சிக்காய்.

மரக்கழச்சி என்னும் கழற்சிக்காய்
நாஞ்சில் நாட்டு கிராமங்களில் அநேகமாக அனைத்து வீடுகளிலும் பெண்களுக்கான கழச்சி விளையாட்டுக்காக மரக்கழச்சி விதைகள் ஏழு இருக்கும். பெண்பிள்ளைகள் அதை வைத்துக்கொண்டு கழச்சி விளையாடுவது மிகச் சாதாரணமான காட்சியாக இருக்கும். மரக் கழச்சிக்குப் பதிலாக உருண்டையான கற்களைப் பயன்படுத்துவதுமுண்டு.
இந்தக் கழச்சி விளையாட்டு சங்க இலக்கியத்தில் `கழங்கு` எனக் குறிக்கப்படுகிறது. இந்த விளையாட்டுக்கான கழங்குகள் பொன்னால் செய்யப்பட்ட தாகவும் இருந்திருக்கின்றன எனக் குறிப்புகள் உள்ளன. முத்துக்களைக் கொண்டு கழங்காடியதாகவும் பாடல்களில் பாடியுள்ளனர். மரத்தைக் குடைந்து செய்த கழங்குகளும் இருந்துள்ளன. நாம் அவற்றைப் பார்த்ததில்லை.
கழங்கு விளையாட்டு பற்றிய சங்க காலச் செய்திகள்
கருவூரை அடுத்திருக்கும் ஆன்பொருநை (அமராவதி) ஆற்று மணலில் மகளிர் பொன் செய் கழங்கினால் தெற்றி விளையாடி மகிழ்ந்தனர். புறம்.36
நீர்ப்பெயற்று (தற்போதய மகாபலிபுரம்) என்பது ஒரு துறைமுகப் பட்டினம். அப்பட்டினத்து மாடங்களில் பந்து விளையாடிய மகளிர் மணல்வெளிக்கு வந்து கழங்கு ஆடினர். பெரும்பாணாற்றுப்படை - 331 -335
பாண்டிய நாட்டில் கடற்கரை மணலில் மகளிர் முத்துகளைக் கழங்காகப் பயன்படுத்தி, கூச்சலிட்டுக் கும்மாளம் போட்டுக்கொண்டு கழங்கு ஆடினர். சிலம்பு 27 - 245
கழங்கு முத்தின் அளவினதாக இருக்கும். அகம். 126 - 12 மற்றும் 173 - 15.
மரத்தைக் குடைந்து கழங்குக்காய்கள் செய்யப்படுவது உண்டு. அகம் 135 - 9
கழங்காடும்போது கழங்குக் காய்கள் மழையோடு இறங்கும் பனிக்கட்டி போல் இறங்கும். அகம் 334 - 8
பந்தும் கழங்கும் மகளிர் விரும்பியாடும் விளையாட்டுகள்.அகம் - 17, 49, 66, ஐங்குறுநூறு 377, பரிபாடல் 10 - 107
கழங்கு ஆயத்தோடு (தோழியர் கூட்டத்தோடு) விளையாடப்படும். அகம் 66, 17 - 2
கழங்காடும் திறமையில் காதல் அரும்புவதும் உண்டு. அகம் 66
கூரை வீட்டின் முன்புறம் ஈந்துப்புதர் ஓரத்தில் அமர்ந்துகொண்டு மகளிர் கழங்கு ஆடினர். நற்றிணை 79
செல்வச் சிறுமியர் கழங்காடுவர். போரின்போது கழங்காடு களம் அழிக்கப்படும். பதிற்றுப்பத்து 15 - 5
வேட்டுவர் தம் தெய்வம் கொற்றவைக்குப் படையல் செய்யும்போது கிளி, மயில் ஆகியவற்றுடன் தம் விளையாட்டுப் பொருள்களான பந்து, கழங்கு போன்றவற்றையும் சேர்த்துப் படையல் செய்தனர். சிலம்பு 12 - 1-35
கழங்கு கொண்டு நிமித்தம் கணிப்பதும் இருந்திருக்கிறது. (ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து)
மரக்கழச்சி விதைகள் அடர் சாம்பல் நிறத்தில் உருண்டையாகப் பார்ப்பதற்கு மிக அழகாகவே தோன்றும். தெரியாத நபரென்றால் நிச்சயமாக அது ஒரு விதை என நம்பமாட்டார். அவை உண்மையிலேயே தாவர விதைகள் தாமெனப் புரிந்தபோது ஏற்பட்ட வியப்பு இன்னும்கூட எனக்குத் தீர்ந்தபாடில்லைதான்.
இளங்கடைச் சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் தாழம் புதர்க் கூட்டம் ஒன்றையடுத்துச் செழித்துப் படர்ந்து வளர்ந்திருந்த மரக்கழச்சிச் செடியைப் பார்த்து, அதில் காய்கள் இல்லாமலிருந்ததைக் கண்டு வருத்தப் பட்டிருக்கிறேன். அப்படிச் செடியிலிருந்து மரக்கழச்சி விதைகளை நேரடியாகப் பறிக்க முடியாமற்போன ஏக்கம் இன்னும் கூட இருந்துகொண்டுதானிருக்கிறது.
மிதிவண்டி ஓட்டப் படித்தபின், ஒருமுறை எப்படியோ மிதிவண்டி இருக்கைக்கிடையில் விதைக் கொட்டையிலொன்று மாட்டி இலேசாகக் கசங்கி, வீங்கிவிட்ட து. அதற்குச் செய்த மருத்துவம் - மரக்கழச்சி இலைகளைப் பறித்துவந்து பெண்குழந்தையின் சிறுநீர் சேர்த்தரைத்து அடிபட்ட விதையில் பற்றுப் போட்டதுதான். மூன்றே நாட்களில் குணம் கிடைத்தது.
விளையாடும் போதோ, மிதிவண்டி ஓட்டும் போதோ, மாட்டு வண்டி போன்றவற்றிலிருந்து இறங்குவது அல்லது துள்ளி ஏறி உட்காரும்போதோ விதைக் கொட்டைகள் நசுங்கி வீங்கிவிடுவதுண்டு. அதற்கெல்லாம் கிராமத்து வைத்தியம் மரக்கழச்சி இலையும் பெண்குழந்தையின் சிறுநீரும் தான்.
மரக்கழச்சி இலை சரிதான். அதைப் பெண்குழந்தை சிறுநீரோடு சேர்த்துத்தான் அரைக்கவேண்டுமா, சாதாரணமாகத் தண்ணீர் ஊற்றி அரைத்தால் போதாதா என்ற கேள்வி எனக்குள் இப்போது எழுகிறது தான். ஆனால் அந்தக் காலத்தில் அப்படித்தான் அரைத்தார்கள்.
இந்த மரக்கழச்சி என்பதுதான் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கழற்சிக் காய், கழச்சிக் காய் எனப்படுகிறது. இதன் ஆங்கிலப்பெயர் caesalpinia bonduc என்பது. Fever nut என்றொரு பெயரும் உள்ளது. தமிழ் மருத்துவத்தில் மரக்கழச்சி விதைகளின் பயன் குறித்து வாசித்தால் இதுவும் ஒரு சர்வரோக நிவாரணி எனத் தெரியவருகிறது.

No comments:

Post a Comment