Wednesday 29 August 2018

அடையும் கீரையும் - சரிவிகித உணவு

அடையும் கீரையும் - சரிவிகித உணவு.

இன்று காலை சமையலறைக்குள் சென்று பார்த்தபோது, கடலைப்பருப்பும் அரிசியும் தனித்தனிப் பாத்திரங்களில் ஊறவைத்திருந்தது. இன்றைய காலை உணவு `அடை` எனத் தெரிந்துகொண்டேன்.
`அடை` என்றதுமே எனக்கு நினைவுக்கு வருவது, ஏழாம் வகுப்பு படிக்கும்போது அறிவியல் வகுப்பில் சரிவிகித உணவு பற்றி ஆசிரியர் கூறியதுதான். ஆசிரியர் யார் என்பது மறந்துவிட்டது; ஆனால் அவர் கூறிய விஷயம் அன்றிலிருந்து இன்று வரை மண்டைக்குள்ளேயே இருந்துகொண்டிருக்கிறது.
அப்படி அவர் என்ன தான் சொன்னார்?
”அடை என்பது ஒரு சரிவிகித உணவுதான். ஆனால் அதனுடன் ஒரு கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.”
அவர் பாடம் சொல்கிற காலத்தில் அடைக்கு அவியல் சேர்த்துச் சாப்பிட்டதாக எனக்குத் தெரியவரவில்லை. பிற்காலத்தில்தான் சரிவிகித உணவு அறிஞர் யாரோ ஒருவர் அடையோடு அவியலை இணை சேர்த்திருக்கிறார். அடையும் அவியலும் முழுமையான சரிவிகித உணவாகிவிடுகிறது. ஆனால் வீடுகளில் சாதாரணமாக அடை செய்கிற நாளில் அவியல் செய்கிறார்களா எனத் தெரியவில்லை.
எங்கள் வீட்டிலும் எனக்குத் தெரிந்த உறவினர், நண்பர்கள் வீட்டிலும் அடைக்கு அவியல் இல்லை. அநேகமாக சட்னி போன்ற எந்த இணையுமில்லாமல் அடை தனியாகத் தான் சுவைக்கப்பட்டுவருகிறது.
சில குழந்தைகள் அடைக்குச் சீனி (சர்க்கரை) தொட்டு சாப்பிடும். தேங்காய்ச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி போன்றவையும் அடைக்கு சுவையாகத்தான் இருக்கும். அடைக்கு நாரத்தங்காய் தொட்டு சாப்பிடுபவர்களையும் எனக்குத் தெரியும். சிலர் மிளகாய்ப்பொடி, வத்தக்குழம்பு கூடத் தொட்டுச் சாப்பிடுகிறார்கள்.
எனக்கு அடைக்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. நன்கு முறுக வேகவைத்துத் தந்துவிட்டால் போதும். வெறுமனேயே சாப்பிட்டுக்கொள்வேன்.
எங்கள் உறவினர் வீடுகள் அனைத்திலுமே அடை மிகப் பிரபலம். ஒரு நாள் இரவு தங்குகிற மாதிரி போய்விட்டால், அநேகமாக காலையில் அடை தான். விருந்தினருக்கு, மிகுந்த உவப்புடன், சிறப்பான ஒன்றாகப் பரிமாறப்படுகின்ற புகழோடு அது திகழ்கிறது.
ஆனால், ஒவ்வொருவர் வீட்டு அடையும் ஒவ்வொரு சுவையில் இருக்கின்றன. என் மனைவி வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் அடைக்குப் போடுவார்கள். எங்கள் வீட்டு அடை `ப்ளெயின் அடை` தான். கடலைப்பருப்பு, அரிசி ஊறவைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து அரைப்பதோடு சரி. சின்ன வெங்காயம், சிறிது இஞ்சி, சிறிது கறிவேப்பிலையை (பெயரளவுக்கு) கடுகு உளுத்தம்பருப்புடன் தாளித்துக் கொஞ்சம் தேங்காயும் துருவிச் சேர்ப்பதுண்டு. அவ்வளவுதான். வேறு சேர்மானம் இல்லை.
நாஞ்சில் நாட்டில் அடைக்கு மரச்சீனிக் கிழங்கு சேர்த்து அரைப்பதுண்டு. கண்டிப்பாக என்றில்லை. கிடைத்தால் சேர்த்துக்கொள்வது. நெல்லைப்பகுதியில் மரச்சீனி சேர்ப்பதில்லை.
எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் சுரைக்காயைப் பொடியாக அரிந்து வதக்கிச் சேர்க்கின்றனர். சில வீடுகளில் காரட், பீன்ஸ் மட்டும் அங்கங்கே ஒன்றிரண்டு கிடக்குமாறு சேர்க்கின்றனர். முருங்கைக் கீரையை வதக்கிச் சேர்ப்பதுண்டு. முருங்கைக்கீரை சேர்த்த அடைக்கென தனி மணமும் சுவையும் இருக்கிறது.
ராஜீவ்காந்தி இறந்த போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான் தேர்தல் பிரிவு உதவியாளர். அன்றைய நாளில் ஓட்டல்கள் அனைத்தும் அடைத்திருந்ததால் தேர்தல் துணை ஆட்சியரை காலை உணவுக்கு எங்கள் வீட்டுக் கு வாருங்கள் என்று அழைத்திருந்தேன். அவரும் மகிழ்ச்சியோடு `சரி, வருகிறேன், வெங்காயம் பூண்டு மட்டும் சேர்க்காத சைவ உணவு` என்றார். வெங்காயம் சேர்க்காமல் அடை சுட்டுக் கொடுத்தபோது, `இது நன்றாக இருக்கிறது. கூட இரண்டு மிளகும் சீரகமும் வறுத்து இட்டால் மிகவும் சுவையாக இருக்குமேயென்றதும் அப்படி வறுத்துச் சேர்த்து அடை சுட்டு அவருக்கு அளித்து மகிழ்ந்தோம். மிளகு சீரகம் வறுத்துப் போடுகிற அடைக்கும் தனிச் சுவை உண்டென அன்று தெரிந்துகொண்டோம்.
நான் சிறுவனாக இருந்த போது ஒருநாள் காலையில் வீட்டுக்கு அழுக்குத் துணி வாங்க வந்த பெண் சலவைத்தொழிலாளிக்கு, அம்மா, இரண்டு அடையைச் சூடாகக் கொடுத்தாள். சாப்பிட்டுவிட்டு, கொச்சிக்காரங்க வீட்டில் இந்த அடை மீது ஒரு முட்டை ஊற்றிக் கொடுத்தாங்கம்மா. அது இன்னும் நல்லா இருந்தது, என்றார்.
அன்றிலிருந்து இன்றுவரை அடை மீது முட்டை எப்படியிருக்குமென எண்ணியெண்ணிப் பார்க்கிறேன்.
காலையில் அடை என்றதும், பழைய அறிவியல் ஆசிரியரின் அறிவுரையை மனதில்கொண்டு ஏதாவது ஒரு கீரை சேர்த்து முழுமையான சரிவிகித உணவாக்கி விடலாமேயென பின்புறத் தோட்டம் சென்ற போது பெங்களூர் பசலிதான் கண்ணில் பட்டது. இந்த பெங்களூர் பசலியை `கொரியன் ஜின் செங்` என்று சக்தி சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். சில இணையதளங்களும் குறிப்பிடுகின்றன.
இக்கீரையினை தலைச்சுமைக் கீரைவிற்கும் பெண்களும் இங்கு கொண்டுவருகின்றனர். அம்மா இருக்கும் போது இதை வாங்கிக் கூட்டு செய்வார்கள். அவர்கள் வளர்த்த இக்கீரை தான் இப்போதும் வளருகிறது.
ஒரு மேசைக்கரண்டி சிறுபருப்பும் கீரையும் வேகவைத்து அரைத் தேக்கரண்டி மஞ்சள்தூள், அரைத் தேக்கரண்டி மிளகாய்த்தூள் உப்பு, கொஞ்சம் தேங்காய், அரைக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொதிக்கவைத்து, கடுகு உளுத்தம்பருப்பு, சின்ன வெங்காயம் தாளித்து ஊற்றி கூட்டு செய்தேன்.
அடையோடு சேர்த்துச் சாப்பிட்டேன். அடையும் கீரைக் கூட்டும். மிகப் பிரமாதம் என்றெல்லாம் இல்லை. சாப்பிடலாம். அவ்வளவுதான். சரிவிகித உணவு சாப்பிட்ட நிறைவு இருக்கிறதல்லவா.
இந்தக் கீரையின் மருத்துவ குணம் பற்றி வெகுவாகச் சொல்கிறார்கள். ஆனால் பரவலாக உண்ணப்படுவதாகத் தெரியவில்லை. 

1 comment:

  1. பல recipe variations சொல்லியிருக்கிரீர்கள். நினைத்துப் பார்க்கும்போது நாவூறுகிறது. எங்கள் வீட்டில் தோல் சீவிய பச்சை சுரைக்காயை மாவுடன் அரத்து சிறிது சுரைக்காயை மெல்லியதாக சிறு சிறு துண்டுகளாக அரைத்த மாவில் இட்டு அடை உற்றுவார்கள் அம்மா. எங்கள் வீட்டில் அடைக்கு ஊற்ற கண்டிப்பாக சம அளவில் எடுத்துக்கொண்ட தேங்காய் எண்ணெயும் நல்லண்ணெயும் கலந்த எண்ணெய் தான்

    ReplyDelete