Friday 27 July 2018

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த மண்பாண்டங்கள் (அபுனைவு 29)

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகின்ற மண்பாண்டங்கள்.
அடுப்பு முதற்கொண்டு இட்லி குட்டுவம், தோசைக்கல், சமையல் கருவிகள், பாத்திரங்கள் அனைத்துமே மண்பாண்டங்களாக இருந்த காலம் ஒன்று இருந்தது. ஒன்றிரண்டாக ஈயம் பூசிய பித்தளை, செம்புப் பாத்திரங்கள், இருப்புச் சட்டி எனத் தொடங்கி, ஈயம், அலுமினியம், எவர்சில்வர், இந்தாலியம், பீங்கான் எனப் பயணித்து மீண்டும் மட்பாண்டங்கள் நோக்கித் திரும்பும் காலமும் வந்திருக்கிறது.
70, 80 களிலேயே தமிழ்நாட்டு மத்தியதர வர்க்கச் சமையலறைகளிலிருந்து மட்பாண்டங்கள் வெளியேற்றப்பட்டுவிட்டன.
இப்போது காலை நடையின்போது புறநகர்ப்பகுதியின் நடைமேடையில் மட்பாண்டங்களைக் கடைவிரித்திருந்ததைப் பார்த்ததும் எங்கள் ஊரின் மண்பாண்டப் பெருமித நினைவுகள் துளிர்த்தன.
தாழக்குடியில் 50க்கும் மேற்பட்ட வேளார் குடும்பங்கள் மட்பாண்டத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். எங்கள் கிராமத்தின் புலியூர்க்குறிச்சி குளத்தின் மண் மட்பாண்டம் செய்வதற்கேற்ற உயர் தரத்திலிருந்தது. மட்பாண்டம் செய்பவர் குடும்பங்கள் அனைத்தும் புத்தனாற்றங்கரையை ஒட்டி ஊரின் கிழக்குப்பகுதியில் மேடான இடத்திலிருந்தது. குடியிருப்பின் பக்கத்திலேயே சூளை அமைத்திருப்பார்கள். எப்போதும் குறைந்தது மூன்று சூளைகளாவது புகைந்து கொண்டிருக்கும். சூளை மேட்டை சுள்ளைமேடு எனச் சொல்வது பேச்சுவழக்கு. சுள்ளை மேட்டில் ஒரு சுடலைமாடன் கோவிலும் உண்டு.
அந்தத்தெருவுக்குள் சென்றால் ஆண்கள் சக்கரத்தில் பானைகள் செய்வதும் பெண்கள் ஈரப்பானைகளைத் தட்டிக் காயவைப்பதுமாயிருப்பார்கள் பானைகளைத் தட்டி வனையும் ஒலி டப் டப் எனக் கேட்டுக்கொண்டேயிருக்கும். வீடுகளின் முன்புறம் காவிக்கட்டி கரைத்து வைத்திருக்கும் பானையும், குழைப்பதற்கு வேண்டிய மண்ணுமாக இருக்கும். எந்த வீட்டுக்குச் சென்று பார்த்தாலும் வீடுகள், அறைகள், வெளிகள் அனைத்தும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
என்னுடன் படித்த ஐயப்ப வேளாரின் வீட்டுக்கும் பிற்காலத்தில் நண்பனும் தோழனுமான வன்னியப் பெருமாளின் வீட்டுக்கும் செல்வதுண்டு.
வன்னியப் பெருமாள் பி.எஸ்சி. முடித்துவிட்டு பகல் முழுதும் மண்பாண்டம் செய்யும் வேலையிலிருப்பான். இரவானதும் எங்களோடு அரசியல், நாட்டு நடப்பு விவாதிப்பதற்காக வந்துவிடுவான். பிற்காலத்தில் இரயில்வேயில் உதவி நிலைய அதிகாரியாகப் பொறுப்பேற்று கரீம் நகர் சென்றார். இப்போது ஓய்வுபெற்றிருப்பார்.
மட்பாண்டத் தொழிலாளர் கூட்டுறவு சங்கமும் இருந்தது. எங்கள் ஊரில் தயாரான மட்பாண்டங்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி திருவனந்தபுரம் கொண்டுபோய் விற்று வந்தனர். அவ்வளவுக்கு கடுமையாகவும் ஓய்வின்றி உழைத்தும் அந்தத் தொழில் செய்து செல்வநிலையில் யாரும் உயர்ந்ததாகத் தெரியவில்லை.
நடை முடிந்து திரும்பிவரும்போது மட்பாண்டம் விற்பவரிடம் பேச்சுக்கொடுத்தேன். அருகிலேயே வேலூர் - சென்னை நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ள பூட்டுத் தாக்கு கிராமமென்றும். அதற்கு எதிர்த்தாற் போலவே அன்னை மீரா கல்லூரி பின்புறமுள்ள குட்டையிலிருந்து மண் எடுத்து பாண்டங்கள் செய்வதாகவும் தெரிவித்தார்.
இப்போது வியாபாரம் கொஞ்சம் பரவாயில்லை என்கிறார். வாணலி மாதிரியான சீஞ்சட்டி ஒன்றை எடுத்துத் தட்டிப் பார்த்தேன். ணங், ணங் என்று நல்ல சத்தம். மிகச் சரியான வேக்காடு. விலை கேட்டேன். 70 ரூ என்றார். குறையாதா என்றதும் 60 கொடுங்களென்றார். கொடுத்து வாங்கிக்கொண்டேன்.
அந்தச் சட்டியில் இன்று தீயல் செய்து பார்க்கப் போகிறேன். இன்னொரு நாள் அவியல் செய்து பார்க்கவேண்டும்.
மண்சட்டியைப் பார்த்ததும் என் மனைவி, இது எதுக்கு வாங்கிவந்தீர்கள் என வினவியதற்கு, அவியல், தீயல் செய்து பார்ப்போம். சரிப்படவில்லையெனில் மாடியில் பறவைகளுக்குத் தண்ணீர் ஊற்றிவைப்பதற்குப் பயன்படுமென்றுதான் வாங்கி வந்ததாகச் சொல்லிச் சமாளித்தேன்.
முகநூல் பதிவு 20.07.2018 விருப்பம் 178, பகிர்வு 59

No comments:

Post a Comment