Thursday 5 July 2018

சில தருணங்களில் நடைபாதைக்கடைத் தேநீருங்கூட மகுடம் சூட்டிக்கொள்கிறது

சில தருணங்களில் நடைபாதைக் கடைத்தேநீருங்கூடத் தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொள்கின்றது.
2008 ஜூன் மாதத்தில் பணி ஓய்வுபெற்றபோது, எழுத்தாளர் ஜீ.முருகன் கணினி உலகத்தை அறிமுகப்படுத்தினார். அவருடைய ஜீவா தமிழ் செயலி மூலம் கணினியில் தமிழ் அச்சேற்றவும் கற்றுக்கொடுத்தார்.
என் மகனுக்காக வாங்கிய மேசைக் கணினி வீட்டிலேயே இருந்தது. இணையத்தில் கதைகள் தேடுவதும் பதிவிறக்கம் செய்து படிப்பதும் ஜீ.முருகனுடன் பகிர்ந்துகொண்டு, விவாதிப்பதுமாகப் பொழுது கழிந்துகொண்டிருந்தது,
2010 இல் மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் மற்றும் ஜீ.முருகனின் தூண்டுதலில் ஜப்பானிய தேவதைக்கதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அவற்றில் இருகதைகள் `திசை எட்டும்` இதழில் வெளியாகி, அதன் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளில் நியூயார்க்கர், கார்டியன் யூகே, வர்ல்டு லிட்டரேச்சர் டுடே, கிரந்தா, வர்ல்ட் விதௌட் பார்டர்ஸ், ஆப்பிரிக்கன் ரிவ்யூ, போஸ்டன் ரிவ்யூ, கொரியன் லிட்டரேச்சர் டுடே போன்ற உலக இலக்கிய இதழ்களில் வெளியாகியிருந்த 90 சிறுகதைகளுக்கு மேலாக தமிழாக்கம் செய்திருந்தேன். அவை மலைகள் இணைய இதழ், அடவி, திசை எட்டும் இதழ்களில் வெளியாகின. 
 நான் தமிழாக்கிய  முரகாமியின் `யானை காணாமலாகிறது` சிறுகதையினை 2014 ஏப்ரலில் பிரளயன் நாடகமாக்கி, ஓசூரில் நிகழ்த்திக் காட்டினார்.
`திசை எட்டும்` குறிஞ்சிவேலன் அவர்கள் தந்த தகவலின்படி 2014 ஜூன் மாதம், தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு, அதன் அடிப்படையில் ஒப்பந்தப் பணி முறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
சென்னை அண்ணாநகர் (மேற்கு) பகுதியில் மகனுடன் தங்கிக்கொண்டு, பணிநாட்களில் அண்ணாநகர் (மேற்கு) டிப்போ நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் மாநகரப் பேருந்தில் சென்று வந்துகொண்டிருந்தேன்.
தினமும் காலை 8.45 மணிக்குப் புறப்படுகிற தடம் 7 F பேருந்தில் குறித்த நேரத்திற்கு முன்பாகவே வந்து இடம்பிடித்து அமர்ந்துவிடுவேன். அங்கிருந்து பதினான்காவது நிறுத்தமான தலைமைச்செயலக வாயிலில் மிகச்சரியாக 9.40க்குள் கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள். நேராக நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டாவது தளத்துக்கு படிக்கட்டுகள் வழியாகவே ஏறிச்சென்று முதல் ஆளாக அலுவலக அறை திறப்பதற்கு முன்பாகவே போய்ச்சேர்ந்துவிடுவது வழக்கமாக இருந்தது.
20 வயதில் வயிற்றுப்பாட்டுக்காகப் பணி செய்ததை விடவும் 64 வது வயதில் அங்கு பணி செய்தது, மறக்கமுடியாத ஒரு பெருமகிழ் அனுபவம். மெல்ல நகரும் பேருந்திலிருந்து இறங்கிக்கொள்ளுமளவுக்கு இளமை உணர்வும் தன்னம்பிக்கையும் மீளத் துளிர்த்தது.
பேருந்துச் சாளரம் ஓரமான காலைப் பயணமும் கடற்கரைக் காற்றும் தலைமைச் செயலகச் சூழலும் புத்துணர்வு தந்தன. நாமக்கல் மாளிகை அப்போதுதான் புதுப்பிக்கப்பட்டு அனைத்து அறைகளுக்கும் மையக் குளிருட்டூம் எந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. கழிவறைக் கலங்களெல்லாம் புதியனவாக மாற்றப்பட்டு, மிகவும் சுகாதாரமாகப் பராமரிக்கப்பட்டன. இயக்குநரின் நேர்முக உதவியாளர் பணியிடம் காலியாக இருந்ததால், அவரது அறையிலேயே அமர்ந்து அவரது கணினியைப் பயன்படுத்திக்கொள்ளவும் இயக்குநர் எனக்கு அனுமதி தந்திருந்தார்.
மொழிபெயர்ப்புத் துறையில் பணியாற்றிய உதவி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள், இயக்குநரைப் பார்க்கவரும் முக்கியப் பிரமுகர்கள் எல்லோருமே மிகுந்த மதிப்பு, மரியாதை, நட்புடன் பழகினர். மொழிபெயர்ப்பாளர் சின்னத்தம்பி முருகேசனும் என்னைப்போலவே ஒப்பந்தப் பணியில் சேர்ந்திருந்தார். அவர் மற்றும் நண்பர்களுமாக இயக்குநருடன் இலக்கியம், ஆட்சியியல், சமூகம் மற்றும் மொழி குறித்து கருத்துக்கள் பகிர்வதும் விவாதிப்பதுமாக, பணியும் பணி இடைவேளையும் எந்நேரமும் அறிவுபூர்வமான ஒரு தளத்தில் இயங்குவதான சூழல் என் வாழ்க்கையில் அந்தக் காலகட்டத்தில் மட்டுமே அமைந்தது.
5.45க்குப் பணி முடியும். உடனேயே கிளம்பி தலைமைச் செயலக வாயிலுக்கு வந்தால் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் புறப்படத் தயாராக அணிவகுத்து நிற்கும். அண்ணாநகர் மேற்கு செல்கிற 7 எஃப், 15 டி மட்டுமல்லாமல் திருமங்கலம் வழி செல்கிற 7 எம், 7 இ, போன்ற பேருந்துகளும் நிற்கும். எது முதலில் நிற்கிறதோ அதில் ஏறிக்கொள்வது எனது வழக்கமாக இருந்தது.
மிகச் சரியாக ஆறு மணிக்குக் கோட்டையின் தேசியக் கொடியை இறக்குவார்கள். அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் அனைத்துப் பேருந்துகளும் நிற்கும். கொடி இறக்கி முடித்ததும் அனைத்துப் பேருந்துகளும் நகரத் தொடங்கும். வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு போல இதுவும் ஒரு ஆர்வமூட்டும் காட்சிதான்.
அதைத் தொடர்ந்த வீடு திரும்பும் பயணத்தின் போது எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மனச் சோர்வு அளிப்பதாகத்தான் இருந்தது. பேருந்துகளில் கூட்டம் மிகமிக அதிகமாகிக் கசகசவென வியர்க்கும். சாளரம் வழியாக வேடிக்கை பார்ப்பதும் மக்கள் நடவடிக்கைகளைக் கவனிப்பதும் அதன் தொடர்ச்சியாகச் சிந்தனையைச் செலுத்துவதுமாக, என்னதான் உற்சாகப்படுத்திக்கொள்ள முனைந்தாலும் எரிச்சலாகத்தானிருந்தது. காலையில் 45 அல்லது 50 நிமிடப் பயணம் மாலையில் 90 நிமிடங்களுக்கும் மேலாகிப் பேருந்தினை விட்டு இறங்குவதற்கு எப்படியும் 7.30 ஆகிவிடும்.
பேருந்திலிருந்து காலை இறங்கித் தலைமைச் செயலகத்துக்குச் செல்லும் போதும் மாலை கொடி இறக்கத்திற்காகப் பேருந்தினுள் காத்திருக்கும்போதும் மாநகரப் பேருந்து `செக்கர்` ஒருவர் எப்போதும் கண்ணில் படுவார். காலையில் ஒவ்வொரு பேருந்தும் வந்தவுடன் அதன் எண்களைக்குறித்துக் கொள்வதையும் அந்த ஓட்டுநரிடம் வேறு தடப் பேருந்துகளைப் பற்றி விசாரிப்பதையும் கவனித்திருக்கிறேன்.. மாலையில் தலைமைச் செயலக வாயிலிலிருந்து கிளம்ப வேண்டிய எல்லாத் தடங்களுக்கான பேருந்துகளும் வந்துவிட்டனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதும் தலைமை நிலையத்துக்கு அவ்வப்போது தொலைபேசியில் `குறிப்பிட்ட எண்கள் வரவில்லையே என்றெல்லாம் விசாரிப்பதையும் காத்திருக்கும் பயணிகளிடம் குறிப்பிட்ட எண் பேருந்து எப்போது வரும் அல்லது வராது, வேறு எந்தப் பேருந்தில் செல்லலாமென்ற விவரம் தெரிவிப்பதையும் பார்த்து, அவரது பணியினைச் சிறப்பாக நிறைவேற்றும் நேர்மை மற்றும் துடிப்பு எனக்கு மிகவும் சிறப்பானதெனத் தோன்றியது. அவர் அந்தச் சூழலை அழகுபடுத்துவதாக நினைத்துக்கொள்வேன்.
ஒரு நாள் காலையில் இறங்கிச் செல்லும்போது, அவருக்கு ஒரு வணக்கம் சொல்லி, மிகச்சிறப்பாகப் பணியாற்றுகிறீர்களெனப் பாராட்டி, அவரோடு கைகுலுக்குவதற்காக என் கைகளை நீட்டினேன்.
அவரது கை குலுக்கலில் வியப்பும் நெகிழ்வும் தெரிந்தது. இணையான ஒரு நட்புக்குரலில் எங்கு, என்ன பணி என்ற விவரம் கேட்க, மொழிபெயர்ப்புத் துறைக்குள் பணிசெய்வதாகத் தெரிவித்துவிட்டு, மேற்கொண்டு அவரது பணிக்கு இடைஞ்சலின்றி அங்கிருந்தும் நகர்ந்தேன்.
பிற்பட்ட நாட்களிலும் காலையில் மாலையில் கண்ணில்படும் போதெல்லாம் ஒரு வணக்கம், முகமலர்ச்சி, கை உயர்த்தல். பேருந்தினுள் நான் உட்கார்ந்திருந்தாலும் கூட வெளிப்புறமாக அருகில் வந்து மகிழ்ச்சியோடு வணக்கம் சொல்வது அவரது வழக்கம். வேறு எதுவும் பேசிக்கொள்வதற்கான தேவை ஏற்படவில்லை.
ஆறு, ஏழு மாதங்களுக்குப் பின்னால் ஒரு நாள், பேருந்தில் ஏறுவதற்கிருந்த என்னிடம் அவர், இன்று அடுத்த பேருந்தில் செல்லலாம், கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்` என்றார். 6.30 பேருந்தும் புறப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பிராட்வே சென்றுதான் அண்ணாநகர் மேற்கு செல்லும் பேருந்து பிடிக்க வேண்டும். அப்படி, இப்படியென்று அவரது பணி முடிய 7.00 மணி ஆகிவிட்டது. அதன் பிறகு வந்த அவர் ஏதோ ஒரு பேருந்தைக்காட்டி ஏறிக்கொள்ளச் சொன்னார். அவர் படிக்கட்டிலேயேதான் நின்று வந்தார்.
பிராட்வேயில் இறங்கியதும் அய்யா, ஒரு தேநீர் சாப்பிடலாமா, என்னோடு இன்று தேநீர் சாப்பிடுங்களேன்` என்றார். அடப்பாவி மனுஷா, இதற்காகவா என்னை ஒரு மணி நேரம் காக்கவைத்தாய் என நினைத்துக்கொண்டு, அதை வெளிக்காட்டாமல் உற்சாகமாகச் சாப்பிடலாமே என்றேன்.
எதிரிலிருந்த பிளாட்பாரம் கடையில் `இரண்டு டீ` என்றார். கடைக்காரர் நீட்டிய கண்ணாடித்தம்ளரை வாங்கி என்னிடம் தந்தார். மிகச் சாதாரணமான ஒரு தேநீர். குடிப்பதற்குச் சரியான சூட்டுடனிருந்தது என்பதைத்தவிரச் சிறப்பாகச் சொல்லுமளவுக்கு எந்தச் சுவையுமில்லை.
பின்னர் அவர், அவரது சொந்த ஊர் ஆரணிப்பக்கம் தேவிகாபுரமென்றும் ஊரில் இரண்டு, இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளதென்றும் மகளை இராணுவத்தில் பணி புரிபவருக்குக் கட்டிக்கொடுத்திருப்பதாகவும், இராணுவத்தினர் பற்றியும் அவரது மகனுக்கும் திருமணமாகி செட்டிலாகிவிட்டதாகவும் பட்டும்படாமலும் மிகச் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். நான் கிளம்பட்டுமா, நாளை பேசிக்கொள்ளலாமே என்றேன்.
அந்த நேரத்தில் 7 எஃப் வரவே நான் பேருந்தில் ஏறுவதற்காகப் படிக்கட்டுக் கம்பியைப் பிடிக்கும்போது, அவர் நான் இன்றோடு ரிடயராகிறேன்,. நாளையிலிருந்து பணிக்கு வரமாட்டேன் என்றார்.
எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பேருந்தில் ஏறாமல் அவரது கையைப் பிடித்தேன். அவர் நிதானமாக நான் இதற்கு மேல் அலுவலகம் சென்று பணி ஓய்வு ஆணை பெறவேண்டும். நீங்கள் இதிலேயே செல்லுங்கள் எனச் சொல்லி அந்தப் பேருந்திலேயே என்னை ஏற்றி அனுப்பினார்.
அவரது பெயர் என்னவென்று தெரியாது, என் பெயரும் அவருக்குத் தெரிந்திருக்காது. நாங்கள் பெயர்களைக் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. பிராட்வேயின் அந்தத் தேநீரை நான் எப்படி மறக்கமுடியும்?
என்னைப் போலவே அவரும் எப்போதாவது எங்கள் நட்பினைப்பற்றி நினைத்துக்கொள்வாரென்றுதான் நினைக்கிறேன். வாழ்க்கையின் சில தருணங்கள் தமக்குத் தாமே மகுடம் சூட்டிக்கொள்கின்றன.
முகநூல் பதிவு ஜூன் 30, விருப்பம் 188, பகிர்வு 31, பின்னூட்டம் 56

No comments:

Post a Comment