Thursday 28 June 2018

வேலூரில் ஒரு சதிக்கல்

வேலூரில் ஒரு சதிக்கல்
வேலூர் சத்துவாச்சாரியில் வள்ளலார் பேருந்து நிறுத்தம் அருகில் மெரினா கபே விநாயக முதலியார் நிறுவிய வள்ளலார் நடுநிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளி அமைந்துள்ள தோப்பிலேயே நீத்தார் வழிபாட்டுக்கூடம் ஒன்றும் உள்ளது.  இந்த நீத்தார் வழிபாட்டுக்கூடம் (இறந்தவர்களுக்கு பதினாறாம் நாள் செய்கிற நீர்க்கடன், அலுவல் அல்லது காரியம்) 1959 இல் ஒரு அறச்செயலாக நிறுவப்பட்டுள்ளது. இன்றும் பொதுமக்கள் அந்தக் காரியத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.
பிற்காலத்தில் நடுநிலைப்பள்ளியும் குருகுலம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இவை அமைந்துள்ள தோப்பு பத்துப் பதினைந்து ஏக்கர் பரப்புடையது. மா, புளி, தென்னை, பனை, ஆல், அரசு, இலவம், புங்கு, வேம்பு எனப் பல்வகை மரங்களும் வளர்ந்து அக்குடியிருப்புப் பகுதிக்கு நற்காற்று வழங்கும் தொழிற்சாலையாக உள்ளது. வீட்டு வசதி வாரியம் அமைத்துள்ள பகுதி 3 குடியிருப்புப் பகுதிக்கு இத்தோப்பு உண்மையில் ஒரு Lung Space ஆக விளங்குகிறது.
இப்பகுதியிலேயே குடியிருந்தாலும், பராமரிப்பு குறைவான அத்தோப்புக்குள் சென்று பார்த்ததில்லை. நேற்று தோப்புக்குள் சுற்றிப் பார்த்தபோது முழுவதுமாக வெட்டப்பட்ட அரச மரம் ஒன்றின் அடிமரப்பகுதியை ஒட்டி வளர்ந்த தளிர் மரமாகி அந்த அடிமரம் முழுவதையும் மறைக்கும்படியாக வளர்ந்திருந்ததைப் பார்த்தேன். அம்மரத்தின் அடியிலேயே பாறைக்கல் ஒன்றில் செதுக்கப்பட்ட சிற்பங்களும் இருந்தன. அம்மரமும் கற்பாறைச் சிற்பங்களும் வழிபாட்டுக்குரியவையாக மஞ்சள்
குங்குமத் தீற்றல்களும் உள்ளன.
இதே தோப்பின் உட்புறம் பனைமரம் ஒன்றின் மீது விழுந்து முளைத்த அரசு விதை மரமாகி அதன் வேர்கள் பனை மரம் முழுவதையும் மறைத்திருக்கிறது. இப்போது பார்த்தால் அரசமரத்துக்குள் பனை முளைத்து வளர்ந்துள்ளது போல் தோற்றம் தருகிறது.
மற்றிரு ஆலமரம் அடிமரமே இல்லாமல் விழுதுகளே அடிமரமாகத் தோற்றமளிக்கிறது.
ஆல், அரசு போன்ற மரங்களுக்கு இத்தகைய வளர் இயல்பு உள்ளது. எங்கள் கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது நம்பிகுளத்தின் வடமேற்கு மூலையில் ஒரு அரசங்கன்றும் வேப்பங்கன்றும் நட்டு அதைச் சுற்றி மண்மேடையும் அமைத்தோம். அந்த அரசங்கன்று அடியிலிருந்தே இரண்டாகக் கிளைத்து வளர்ந்தது. இரு கிளைகளும் நன்கு விரிந்து வளரட்டுமென்று இரண்டுக்கும் நடுவில் பெரிய குண்டுக்கல் ஒன்றை நண்பர்கள் வைத்திருந்தனர். ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே இருகிளைகளும் சேர்ந்து அந்தக் கல்லை மூடிவளர்ந்துவிட்டன. இப்போது அந்த மரம் நன்கு பெரியதாகிவிட்டது. அதன் அடிமரத்தினுள் அக்கல் இருக்கிறது. பிற்காலத்தில் அந்த மரத்தின் அடிமரத்தை வெட்டுபவர்களுக்கு மரத்தினுள் கல் இருப்பது பெருத்த வியப்பினை அளிக்கும்.
பொதுமக்கள் நன்மைக்காக அறச்செயல்கள் புரிந்துள்ள தொண்டுள்ளத்தினையும் சுற்றுப்புறத்திலுள்ள மரங்கள் பற்றிய தகவல்களை இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்பதற்காகவுமே இப்பதிவு.
பி.கு. மேலே குறிப்பிட்டுள்ளது போல் அரசமரத்தடியில் இருக்கும் கல் பாறைச் சிற்பம் அல்லவென்றும் அது சதிக்கல் என்றும் தொல்லியல் ஆர்வலரான மனோன்மணி குறிப்பிட்டுள்ளார். அதாவது அக்கல்லில் செதுக்கப்பட்டுள்ள ஆண் இறந்தபோது அவரது மனைவி உடன்கட்டை ஏறியதாகவும் அதனை நினைவுகொண்டு அமைக்கப்பட்ட கல் என்பதாகிறது. இது போன்ற ஒரு கல் எனது சொந்த கிராமமான தாழக்குடியில் நான் மேலே குறிப்பிட்ட அரசமர மேடை அருகில் உள்ளது. அதனை அத்தெரு மக்கள் தீப்பாய்ஞ்ச அம்மன் என்று குறிப்பிடுவர். ஆனால் அதற்கு எவ்வித மரியாதையுமில்லாமல் இருந்தது. பிற்காலத்தில் 1990களில் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் `அடித்தள மக்கள் வரலாறு` என்னும் நூலினை வாசிக்கும்போதுதான் அந்த தீப்பாய்ஞ்சான் சிலை சதிக்கல் என்றும் அப்படி தீப்பாய்ந்தவரின் பெயர் மாணிக்கரசி என்றும் தெரிந்துகொண்டேன். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து அச்சிலை அருகிலேயே பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் விளையாடியிருந்த நான் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆய்வறிஞரின் நூலில் இருந்துதான் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது. அவ்வளவுதான் நமது வரலாற்று உணர்வு.

ஜூன் 26 அன்று முகநூலில் பதியப்பட்டது. விருப்பம் 186 பகிர்வு 24 

No comments:

Post a Comment