Saturday 23 June 2018

காட்சி நோக்காடி Viewfinder By RAYMOND CARVER

காட்சிநோக்காடி VIEWFINDER ஆங்கிலம் : ரேமண்ட் கார்வர் Raymond Carver – தமிழில் ச.ஆறுமுகம்.



ரேமண்ட் கார்வர் Raymond Carver
கைகளில்லாத ஒரு மனிதர், எனது வீட்டின் புகைப்படம் ஒன்றினை என்னிடம் விற்பதற்காக என் வாசலுக்கு வந்தார். குரோமியக் கொக்கிகள் தவிர்த்து, அவர் ஒரு சாதாரணமான ஐம்பது அல்லது அதுமாதிரியான தோற்றமுள்ளவராகவே இருந்தார்.
அவருடைய தேவையினை அவர் சொல்லி முடித்ததும் ”உங்கள் கைகளை எப்படி இழந்தீர்கள்?” என நான் கேட்டேன். “அது வேறு கதை,” என்றார், அவர்.
”உங்களுக்கு இந்தப் படம் வேண்டுமா, வேண்டாமா?”
“உள்ளே வாருங்கள்,” என்றேன், நான். “இப்போதுதான் காபி போட்டேன்.”
கூடவே, பழவகை இனிப்பாக ஜெல்லோவும் இப்போதுதான் செய்து முடித்திருந்தேன். ஆனால் அதை, அந்த மனிதரிடம் சொல்லவில்லை.
உங்கள் கழிவறையை நான் பயன்படுத்தலாமாவெனக் கேட்டார், அந்தக் கையில்லா மனிதர். அவர் குவளையை எப்படிப் பிடிப்பாரென்பதைப் பார்த்துவிடவேண்டுமென்று, நான் நினைத்தேன்.
புகைப்படக்கருவியை அவர் பிடிக்கும் விதத்தை நான் அறிவேன். அது ஒரு பழைய போலராய்டு, பெரிது, கருப்பு. அவரது தோளோடும் முதுகோடும் சேர்த்திணைத்தத் தோல்வாரோடு அந்தப் புகைப்படக்கருவி பிணைக்கப்பட்டிருந்தது.
அதனால் அது, அவரது நெஞ்சுப்பகுதியில் பத்திரமாகத் தொங்கியது. உங்கள் வீட்டின் முன்பான ஓர நடைபாதையில் நின்றுகொண்டு, காட்சி நோக்காடி வழியாக உங்கள் வீட்டினைப் பார்த்து, அவரது கொக்கிகளில் ஒன்றால் புகைப்படக்கருவியின் விசையைத் தட்டி, உங்கள் வீட்டின் படத்தினை எடுத்துவிடுவார். என் வீட்டுச் சாளரம் வழியாக நான் கவனித்துக்கொண்டுதானிருந்தேன், பார்த்துக்கொள்ளுங்கள்.
”கழிவறை எங்கிருக்கிறதெனச் சொன்னீர்கள்?”
‘’ உள்ளேதான், வலதுபக்கம் திரும்புங்கள்.”
வளைந்து, குனிந்து தோள்வார்க்கட்டுக்குள்ளிருந்தும் கழன்றுகொண்ட அவர், நிழற்படக்கருவியை சாய்மெத்தை மீது வைத்துவிட்டு, மேல்சட்டையை நேர்படுத்தி இழுத்துவிட்டுக்கொண்டார்.
”நான் வரும்வரையில் நீங்கள் இதைப் பார்த்துக்கொண்டிருங்கள்.” அவரிடமிருந்த நிழற்படத்தை நான் கையில் எடுத்தேன். சிறு புல்வெளிச் செவ்வகம் ஒன்றுடன் காரோடும் பாதை, கார் ஷெட், முன்புறப்படிகள், புடைப்புச் சாளரம் மற்றும் சமையலறையிலிருந்து நான் கவனித்துக்கொண்டிருந்த சாளரமும் இருந்தது.
அப்படியிருக்கையில் இந்தத் துயர நிழற்படம் எனக்கு எதற்கு?
நான் இன்னும் நெருக்கமாகப் பார்த்தபோது சமையலறைச் சாளரத்தில் என் தலையை, என் தலையையேதான் பார்த்தேன். என்னை அதைப்போலப் பார்த்தபோது அது, என்னைச் சிந்திக்கவைத்தது. ஆம். அது ஒரு மனிதனைச் சிந்திக்கச்செய்கிறதென்பதை என்னால் உங்களுக்குக் கூறமுடியும். கழிவறையில் நீர் ஊற்றப்படுவது எனக்குக் கேட்டது. அவர் ஜிப்பினை மேலிழுத்துக்கொண்டு, சிரித்தவாறே, ஒரு கொக்கி அவரது இடைக்கச்சினைப் பிடித்திருக்க, இன்னொன்றால் காற்சட்டைக்குள் மேற்சட்டையை உட்தள்ளிக்கொண்டே அறைக்கூடத்துக்குள் வந்தார்.
“என்ன, சிந்தனை?” எனக்கேட்டவர், “எல்லாம் சரிதான்!” என்றும் சொன்னார்.
என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே நன்றாகப் போகிறதென்றுதான் நினைக்கிறேன். நான் என்னசெய்கிறேனென்பது எனக்குத் தெரியாமல் போகுமா? எதையும் எதிர்கொள்வோம், அது ஒரு அலுவல் சார்ந்த போட்டி.
அவர் அவரது கவட்டையில் சொரிந்துகொண்டார்.
”காபி இங்கிருக்கிறது” என்றேன்.
”நீங்கள் தனியாகத்தான் வசிக்கிறீர்கள், சரிதானே? என்ற அவர், வசிப்பறைக்குள் நோக்கிவிட்டுத் தலையைக் குலுக்கினார். “கஷ்டம், கஷ்டம்” என்றார்.
அவர் நிழற்படக்கருவியின் அருகில், பெருமூச்சுடன் பின்பக்கம் சாய்வாக அமர்ந்த பின், அவர் தெரிந்துகொண்டதை என்னிடம் சொல்லப்போவதில்லை என்பது போல முறுவலித்தார்.
‘காபியைக் குடியுங்கள், ” என்றேன், நான்.
ஏதாவது பேசவேண்டுமே, என்ன பேசலாமென நான் யோசிக்க முயற்சித்தேன். ”மூன்று பையன்கள், நடைபாதை ஓரக்கல்லில் என் முகவரியைத் தீட்டுவதாகக் கூறி இங்கு வந்து நின்றார்கள். அதற்காக ஒரு டாலர் கேட்டார்கள். உங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதில்லையா, இல்லை, தெரியுமா?”
அது ஒரு தொலைதூரக் காட்சிப்பிடிப்பு. ஆனால், நானும் அவரை அப்படியேதான் பார்த்திருந்தேன்.
அவர் முன்பக்கமாக, முக்கியமாக அவரது கொக்கிகளுக்கிடையில் தம்ளரைச் சமநிலைப்படுத்திக்கொண்டு முற்சாய்ந்தார். அவர் அதனை மேசை மீது வைத்தார்.
“ என் வேலைகளை நானாகவேதான் செய்துகொள்கிறேன்.” என்ற அவர், “எப்போதுமே, இனிமேலும் அப்படித்தான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார்.
“நான் இணக்கமான இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தேன்.” என்றேன். எனக்குத் தலை வலித்தது. அதற்குக் காபி நல்லதில்லையென்று எனக்குத் தெரியும்; ஆனால், சிலசமயம் ஜெல்லோ அதைச் சரிசெய்துவிடும். நான் அந்தப் படத்தைக் கையிலெடுத்தேன்.
“ நான் சமையலறையிலிருந்தேன்.” என்றேன், நான்.
]
“வழக்கமாக நான் பின்பக்கத்தில் தான் இருப்பேன்.”
“அது எல்லா இடத்திலும் அப்படித்தான் நிகழ்கிறது.” என்றார், அவர். “ஆக, அவர்கள் அப்படிக்கப்படியே உங்களை விட்டுப் போய்விட்டார்கள், சரிதானே? இப்போது, நீங்கள் என்னை எடுத்துக்கொள்ளுங்களேன், நான் தனியாகத்தான் பணிசெய்கிறேன். இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? உங்களுக்குப் படம் வேண்டுமா?”
“அதை நான் வாங்கிக்கொள்கிறேன்.” என்றேன், நான்.
நான் எழுந்து தம்ளர்களை எடுத்துக்கொண்டேன்.
“ நிச்சயம் வாங்கிக்கொள்வீர்கள்,” என்றார், அவர். ”நகரமையத்தில் ஒரு அறை வைத்திருக்கிறேன். எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. வெளியே செல்லும் பேருந்து ஒன்றில் ஏறிச் சென்று ஊர்ப்புறங்களில் வேலை முடிந்த பிறகு மற்றொரு நகர்மையத்துக்குப் போகிறேன். நான் சொல்வதைக் கவனிக்கிறீர்களா? ஹூம், ஒரு காலத்தில் எனக்கும் குழந்தைகள் இருந்தனர். எல்லாம் உங்களைப் போலவேதான்.” என்றார், அவர்.
நான் கையில் தம்ளர்களோடு, சாய்மெத்தையில் அவர் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்ததைக் கவனித்து நின்றேன்.
“அவர்கள் எனக்குத் தந்ததுதான் இதுவெல்லாம்.” என்றார், அவர். என்முன் நீண்ட அந்தக் கொக்கிகளைக் கண்கள் விரியப் பார்த்தேன்.
“ காபிக்கு நன்றி. கழிவறை பயன்படுத்த அனுமதித்ததற்கும் நன்றி. எனக்கும் இரக்கமாகத்தானிருக்கிறது. “
அவர் எழுந்து கொக்கிகளைத் தாழ்த்திக்கொண்டார்.
” காட்டுங்கள்.” என்றேன், நான். “எவ்வளவென்று காட்டுங்கள். வீட்டையும் என்னையுமாக இன்னும் அதிகப் படமெடுங்கள்.”
“அதெல்லாம் வேலைக்காகாது” என்றார், அந்த மனிதர். “அவர்களெல்லாம் மீண்டும் வரப்போவதில்லை.” அவர் தோல்வாரை மாட்டிக்கொள்வதற்கு, நான் உதவி செய்தேன். “ எதாவது ஒரு விலையைச் சொன்னால் தானே, நான் இதை உங்களுக்குத் தர முடியும்’’ என்றார், அவர். ”ஒரு டாலருக்கு மூன்று.” ”நான் இதற்கும் கீழே குறைத்தால், என்னால் வெளியே போகமுடியாது.” என்றார், அவர்.
நாங்கள் வெளியே சென்றோம். அவர் கருவியின் மூடுகதவினைச் சரிசெய்தார். நான், எங்கே நிற்கவேண்டுமென்று அவர் சொன்ன இடத்திற்கு நாங்கள் இறங்கிச் சென்றோம். நாங்கள் வீட்டைச் சுற்றி நடந்தோம். எல்லாமே முறைப்படியானது தான்.
சிலநேரங்களில் நான் ஓரப்பாதைகளைப் பார்ப்பேன். சிலநேரங்களில் நேருக்கு நேராகப் பார்ப்பேன்.
‘’நல்லது,” என்பார், அவர். “அதுவும் நல்லது,” என, நாங்கள் வீடு முழுவதும் சுற்றிப் பின்பக்கம் வந்து, பின்னர் முன்பக்கம் வந்தபோதும் சொன்னார்.
“இருபது ஆகிவிட்டது. இது போதும்.”
“இல்லை,” என்றேன், நான். “கூரை மேலேயும்,” என்றேன்.
“சேசுவே,” என்றார், அவர். அவர் கட்டிடத்தை மேலும் கீழுமாகக் கண்களாலேயே அளவிட்டார்.
“நிச்சயமாக,” என்றவர், “இப்போதுதான், நீங்களாகப் பேசுகிறீர்கள்.” என்றார்.
‘’மொத்தமாக எல்லாமும். அவர்கள் துடைத்தெடுத்துவிட்டார்கள்.” “ இதைப் பாருங்கள்.” என்ற அந்த மனிதர் மீண்டும் கொக்கிகளை மாட்டினார்.
நான் உள்ளேசென்று நாற்காலி ஒன்றினை எடுத்துவந்து, கார் ஷெட் கூரை அடியில் வைத்தேன். ஆனாலும் அந்த உயரம் போதவில்லை. அதனால் நான் அளிக்கூடை ஒன்றை எடுத்து வந்து நாற்காலியின் மீது வைத்தேன்.
கூரை மீது ஏற அது போதுமானதாக இருந்தது.
மேலே ஏறி நின்று, சுற்றிலும் பார்த்தேன். நான் கையசைத்தேன்; அந்தக் கையில்லாத மனிதர் பதிலுக்குக் கொக்கிகளை அசைத்தார்.
அப்போதுதான் நான் அவற்றைப் பார்த்தேன். சிறுகற்கள். புகைபோக்கிக் கூண்டின் மீது ஒரு கூடு போல அந்தக் கற்குவியல் இருந்தது. உங்களுக்குத்தான் அந்தப் பையன்களைத் தெரியுமே. அவர்கள் கற்களைப் புகைபோக்கிக்குள் வீசுவதாக நினைத்து எப்படி வீசுவார்களென்றும் உங்களுக்குத் தெரியுமே.
”ரெடியா?” எனக்கேட்ட நான் ஒரு கல்லைக் கையிலெடுத்துக்கொண்டு, காட்சி நோக்காடியில் நான் தெரிவதை அவர் சரிப்படுத்தும் வரை அப்படியே நின்றேன்.
“ஓ.கே.” என்றார், அவர்.
நான் கையைப் பின்னுக்கு இழுத்து, “இந்தா வாங்கிக்கோ!” எனக்கத்தி, அந்தப் பொட்ட நாய்க்குப் பிறந்தமகன் மீது எவ்வளவு தூரமாக எறியமுடியுமோ அவ்வளவு தூரத்துக்கு எறிந்தேன்.
”எனக்குத் தெரியாது, நானென்ன, அசையும் படமா பிடிக்கிறேன் ” என அவர் கத்துவது என் காதில் விழுந்தது.
“ திரும்பவும் எடுங்கள்!” எனக்கத்திக்கொண்டே இன்னொரு கல்லை எடுத்தேன். 
மலைகள் இணைய இதழ் 147 ஜீன் 3, 2018 இல் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment