Wednesday 13 June 2018

சங்க இலக்கியத் துளிகள் - 18 தூங்கல் வங்கம்

சங்க இலக்கியத் துளிகள் - 18
தூங்கல் வங்கம்
 களவுக்காதல் – நெய்தல் திணை – இரங்கல் – பகற்குறி வந்து தலைவியைச் சந்திக்க இயலாமல் திரும்பும் தலைவனுக்குத் தோழி கூறிய கூற்று.
கொண்கனே! தலைவியை வீட்டுக்குள் இற்செறித்து, தாய் அங்கேயே காவல் இருக்கின்றாள். (அதனால்தான் தலைவியால் உன்னைச் சந்திக்க இங்கே வர இயலவில்லை) இதை உனக்குச் சொல்வதற்காகவே பலப்பலவாகப் பூக்கள் பூத்துள்ள இந்தப் பூஞ்சோலையினுள் பகற்பொழுதுக்குரிய குறியிடமாகிய இங்கு வந்தேன்.
கற்களும் கொதிக்கும்படிக் காய்கின்ற வெயிலில் நடக்கும் கால்கள் வெம்பிப் பழுத்துப்போகின்ற பகல்பொழுதில் செல்வமும் அழகும் சிறப்பும் மிகுந்து பொலிவுடன் விளங்குகின்ற பெரிய நகருக்குள் வருகின்ற விருந்தினருக்குப் படைப்பதற்காகப் பொற்றொடி மகளிர் சமைத்த, கொக்குகளின் நகம் ஒத்த சோற்றில் ஒரு பகுதியினை முற்றத்தில் பலியாக வைக்க, அதனை உண்ணுகின்ற, குளிர்ச்சி தோன்றும் கண்களைக்கொண்ட காக்கை நாட்பொழுது மறைகையில், பெரும்பெரும் அங்காடிகளின் அசைகின்ற நிழற்பகுதியில் குவிந்திருக்கும் பசும் இறாலினைக் கவர்ந்துகொண்டு, நங்கூரமிட்டு அசைந்துகொண்டிருக்கும் மரக்கலங்களின் பாய்மரக் கூம்பில் சென்று அமருகின்ற மருங்கூர்ப்பட்டினத்தை ஒத்த அழகினையுடைய தலைவியின் இறுக்கமான அழகிய வளைகள் கழன்று விழுந்துவிடுவது போல் நெகிழ்வதைக்கண்டே தாய் அப்படிச் செய்கிறாள்.
பாடல் :
பல் பூங்கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்பக் கல் காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் 10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே.
நற்றிணை 258, நக்கீரர், நெய்தற் திணை – தோழி தலைவனிடம்சொன்னது
அடிநேர் உரை : பல் பூங்கானல் பகற்குறி மரீஇ – பலப்பலவாகப் பூக்கள் பூத்துள்ள இப் பூஞ்சோலையினுள் பகற்பொழுதுக்கான குறியிடத்துக்கு;
செல்வல் – வந்துள்ளேன்; கொண்க – கடற்கரைத் தலைவனே!; செறித்தனள் யாயே தலைவியை வீட்டுக்குள் இற்செறித்துக் காவலிருப்பது, அவளது தாய்தானே.;
கதிர் கால் வெம்ப க் கல் காய் ஞாயிற்று – வெயிலில் நடக்கும் கால்கள் வெம்பிப் பழுக்குமாறும் கல்லுங்கூடக் கொதிக்கின்ற பகற்பொழுதில்;
திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார் – செல்வமும் அழகும் பெருமையும் மிக்க பெரும் நகருக்கு வருகின்ற விருந்தினருக்கு வழங்குவதற்காக;
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த – பொன்னாலாகிய வளைகளை அணிந்த மகளிர் சமைத்து முற்றத்தில் பலியாக வைத்த;
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி , எல் பட, - கொக்கின் நகம் ஒத்த சோற்றினைப் பெருமளவில் உண்டு, நாட்பொழுது மறைகையில்;
அகல் அங்காடி அசை நிழல் குவித்த – அகன்ற பெரும் அங்காடிகளின் அசைகின்ற நிழற்பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும்;
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை – பசுமையான இறாவினைக் கவர்ந்த குளிர்ந்த கண்களையுடைய காக்கை;
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் – அசைந்தாடிக்கொண்டிருக்கும் கப்பலின் பாய்மரக் கூம்பில் சென்று தங்கும்.
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் – மருங்கூர்ப்பட்டினத்தின் அழகினை ஒத்த தலைவி;
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – இறுக்கமாக அணிந்திருந்த அழகிய வளையல்கள் கழன்றோடுவதுபோல் நெகிழ்ந்தமை கண்டதாலேயே.
அருஞ்சொற்பொருள் :
கால் – கால்கள்; காற்று எனினும் ஒக்கும். வியல் நகர் – நகரம்; பெரிய வீடு எனினும் ஒக்கும். உகிர் – நகம்; நிமிரல் – சோறு; மாந்தி – பெருமளவில் உண்டு; எல் – பகற்பொழுது; பட – மறைய; பச்சிறா – பசுமையான இறா, அப்போதுதான் கடலிலிருந்தும் கொண்டுவந்த இறா; தூங்கல் – அசைதல் ; வங்கம் – கப்பல், மரக்கலம்; கூம்பு – பாய்மரக் கூம்பு ; சேக்கும் – தங்கும், அமரும். நெருங்கு – இறுக்கமாக, நெருக்கமாக; ஏர் – அழகு ; எல்வளை – ஒளிபொருந்திய வளையல்.
கவிதை நயம் :
கொண்க, இற்செறித்தனள் யாயே எனக் கூறுவதன் மூலம் தலைவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவனுக்கு, தலைவனைச் சந்திக்கத் தலைவியால் வரமுடியாத நிலையும் தலைவி, அவளது தாயாலேயே இற்செறிக்கப்பட்டுள்ளாளென்ற முதல் செய்தியினையும், தோழி, அவசர அவசரமாக, தலைவனின் அச்சம் மற்றும் கவலையைத் தீர்க்குமாறு கூறிவிடுகிறாள். அதனைத் தொடர்ந்த செய்தியாக, காலைப் பொசுக்குகின்ற கதிரின் வெம்மையும் கல்லும் கொதிக்கின்ற அளவுக்கான பகற்பொழுது குறித்துக் கூறுகிறாள். இது அவள் தலைவியின் நலம் மற்றும் தலைவனுக்குத் தகவல் தெரிவிக்கும் முக்கியத்துவத்தையும் கருத்தில்கொண்டு கல்லும் காயும் பகல்பொழுதில் கால்கள் வெம்ப நடந்துவந்த சிரமத்தை, தலைவன் மற்றும் தலைவியின் வாழ்க்கை மீதான அக்கறையினை வெளிக்காட்டுவதான முயற்சி. அதனைத் தொடர்ந்து மருங்கூர்ப்பட்டினத்துக்கு வருகின்றவர்களுக்காக விருந்து சமைக்கப்படுவதும் காக்கைக்கு பலிச்சோறு வழங்கப்படுவதும் குறிப்பிடுவதன் மூலம் தமது ஊர்மக்களின் விருந்தோம்பும் உயர் பண்பாட்டினைப் பொற்றொடி மகளிர் தலையாகக் கருதுவதும் காக்கைக்கும் உணவளிக்கின்ற ஈரநெஞ்சத்தினையும் மரபினை மதிக்கும் மாண்பும் உணர்த்தப்படுகிறது. அடுத்த செய்தி மருங்கூர்ப்பட்டினத்தின் பெரும்பெரும் அங்காடிகளும் அவற்றின் நிழற்பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் பச்சிறாக் குவியல்களும் அசைந்தாடிக்கொண்டிருக்கின்ற கப்பல்களும் அந்த நகரத்தின் வணிகம் மற்றும் செல்வநிலையினை உணர்த்துகிறது. அத்தகைய மருங்கூர்ப்பட்டினம் ஒத்த அழகுடையவள் தலைவி எனும் போது விருந்தோம்பலும், உயிர்களுக்கு உணவிடும் கருணைநெஞ்சமும் மரபினை மதிக்கும் மாண்புமுடையவள் தலைவியென அவளது உள்ள அழகும் பண்பாட்டு உயர்வும் கூறப்படுகிறது. தலைவி பெருஞ்செல்வமுள்ள நகரில் பெருஞ்செல்வ வாழ்க்கையினை உடையவளென்பதும் உணர்த்தப்படுகிறது. மருங்கூர்ப்பட்டினத்தின் பேரழகினைக்கொண்ட தலைவி ஏன் இற்செறிக்கப்பட்டாளென்ற கேள்விக்கு பதிலாக, அவளது இறுக்கமான வளைகள் நெகிழ்ந்தமை கண்டு தாய் ஐயமுற்று இற்செறித்தாள் எனக்கூறிவிடுகிறாள். தலைவியின் வளை ஏன் நெகிழவேண்டுமெனில் தலைவனைச் சந்திக்கவியலாமற்போகும் சூழ்நிலை நினைந்தே தலைவன் மீதுள்ள ஏக்கத்தாலேயே வளை நெகிழ்ந்ததென்பது தலைவனுக்கு குறிப்பாக உணர்த்துவதாகிறது. எனவே உள்ள அழகும் உடலழகும் செல்வ உயர்வும் பண்பாட்டு மேன்மையுமிக்க தலைவியை உடனடியாக தலைவன் தமருடன் வந்து வரைந்துகொள்ளவேண்டுமென்பது தலைவனுக்கான உடனடிச் செய்தியாக உணர்த்தப்படுகிறது.
தலைவன் தலைவியைத் திருமணம் செய்தேயாக வேண்டுமென்பது தோழியின் நோக்கம். அந்த நோக்கத்திற்கேற்ப சமுதாயப் பண்பாட்டை பெருமைபட எடுத்துரைத்து, நகரின் செல்வம் மற்றும் வணிகப்பெருமையைக் கூறி, தலைவியின் உள்ள அழகும் பண்பாட்டுச் சிறப்பினையும் உணர்த்துகின்ற உளவியல் பாங்கினை உன்னி உணர்ந்து மகிழ்தற்குரியது.
இக்கவிதையில் நாம் அறியக்கிடக்கும் செய்திகள்
1. அலரென்று எதுவும் தெரியவராமலேயே,மகளின் வளை நெகிழ்ந்ததைக் கண்டதுமே தாய் ஐயுற்று இற்செறிக்கின்ற, தாயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
2. மருங்கூர்ப்பட்டினத்தில் கோடைகால வெய்யில் கல்லும் கொதித்துக் கால்கள் வெம்புமளவுக்கு இருந்துள்ளது.
3. வருவிருந்தோம்பலுக்காகப் பொற்றொடி மகளிர் கொக்கு உகிர் நிமிரல் (உயர் ரக அரிசி) சமைத்தனர்.
4. தம் வீட்டு முற்றத்தில் காக்கைகளுக்கு பலிச்சோறு படைத்தனர்.
5. மருங்கூர்ப்பட்டினத்தில் பெரும்பெரும் அங்காடிகள் இருந்தன.
6. பெரும் அங்காடிகளின் கட்டிட நிழல்களில், கடலில் பிடித்து வந்த இறா மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
7. மருங்கூர்ப்பட்டினத்துக் கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நின்றன.
8. மருங்கூர்ப்பட்டினம் ஒரு பெருவணிகத்தலம்; சிறந்த துறைமுகமுமாக விளங்கியது.
மருங்கூர்ப்பட்டினம் குறித்து தீக்கதிரில் வெளிவந்துள்ள கட்டுரை :
பாண்டியனின் துறைமுகப் பட்டினமான மருங்கூர்பட்டினம் சோழனின் காவிரிப்பூம்பட்டினத்தினை ஒத்ததாக அமைந்திருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகப் பகுதியானது மருகூர்ப்பாக்கம் என்றும் நகர்ப்பகுதி பட்டினப்பாக்கம் என்றும் இருகூறாகப் பிரிந்திருந்தது போன்றே மருங்கூர்ப் பாக்கத் துறைமுகமும் ஊணூர், மருங்கூர் பட்டினம் எனஇரு கூறாகப் பிரிந்திருந்தது. மேலும்காவிரிப்பூம்பட்டினத்தின் பட்டினப்பாக்கமானது மதிலையும் அகழியையும் கொண்டுஅமைந்திருந்தது போன்று ஊணூரையும் மதில் சூழ்ந்திருந்தது. பிற்காலப் பாண்டியர்களின் பல்வேறு ஆட்சிக் காலத்தில் கிழக்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்கள் பல உருவான நிலையில் தொன்மையான மருங்கூர் பட்டினம், கொற்கை, தொண்டி முதலானவை செல்வாக்கிழந்தன. குலோத்துங்க சோழப் பட்டினம், அம்மப் பட்டினம், ஆவுடையார் பட்டினம், பவித்ர மாணிக்கப்பட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம், நானாதேசிப் பட்டினம், மேன்தோன்றிப் பட்டினம், பெரியப் பட்டினம், நினைத்ததை முடித்தான் பட்டினம், குலசேகரப் பட்டினம், மானவீரப் பட்டினம், காயல் பட்டினம், சோணாடு கொண்டான் பட்டினம், வென்றுமுடி சூடிய சுந்தரபாண்டியன் பட்டினம், வீரபாண்டியன் பட்டினம் முதலான பட்டினங்கள் பிற்காலத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்திருந்த பாண்டிய அரசர்களின் பட்டினங்களாக அறியப்படுவனவாகும்.
சங்ககால மருங்கூர் பட்டினத்தின் மேற்கே ‘ஊணூர்’ என்ற ஊர் அமைந்திருந்தது. இவ்வூர் மதிலை அரணாகக் கொண்டிருந்தது என்பதை அகம். 227 ஆம் பாடல் குறிப்பிடுகின்றது. பாடல் வரிகள்(18-20) வருமாறு: “கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர் / விழுநிதிதுஞ்சும் வீறுபெறு திருநகர் / இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம்” . இனி ஊணூரின் அமைப்பினையும் அதன் தன்மைகளையும் பின்வரும்படி சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம் : – இவ்வூரானது கடல் அலைகள் எப்பொழுதும் வந்து மோதும் பகுதியினை உடையது. – நெல்வளம் மிக்க வயல்களை உடைய ஊர்களைக் கொண்டிருந்தது. மேலும், குளிர்ச்சிப் பொருந்திய சாய்க்கானம் என்னும் பகுதியில் நெடிய கதிர்களைக் கொண்ட நெல்வயல்கள் பல இருந்தன. – இறால் மற்றும் பிற மீன் இனங்களைப் பிடிக்கும் பகுதியாக கடற்கரைப்பகுதி அமைந்திருந்தது. – இவ்வூர் பகுதியில் கடற் சோலை என்ற பகுதி அமைந்திருந்தது. – கடல் பரப்பின் மணல் மேடான பகுதியில் நாவாய்கள் இடம் அறிந்து செல்ல ஒளிபொருந்திய விளக்கு (கலங்கரை விளக்கம்) அமைக்கப் பட்டிருந்தது. (அகம். 255)- இப்பகுதியில் உள்ள கடல் அலைகளுக் கிடையில் புலால் நாற்றம் வீசியபடி இருக்கும். – வெண்ணெல் இப்பகுதியில் சிறப்பாக விளைந்திருந்தன. – நெல், தேன் எடுத்து உண்பவர்களான குயவர் சேரி ஒரு பக்கமும் சிறு சிறு மீன்களைப் பிடித்து உண்ணும் மக்கள் வாழும் பாண்சேரி ஒரு பக்கமும் என ஊணூர் அமைந்திருந்தது. (புறம் . 348)- நீர் துறையில் உள்ள மரங்களில் யானைகள் கட்டப்பட்டிருந்ததால் அம்மரங்களின் வேர்கள் வெளியே தெரிந்தன. – இவ்வூரில் உள்ள மரநிழலில் பெரிய பெரிய தேர்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ‘தழும்பன்’ என்ற அரசனே ஊணூரினை ஆட்சி செய்தான் என்பதை சங்கப் பாடல்கள் (நற். 300, புறம் 348, அகம். 227) பதிவு செய்கின்றன. யானை மிதித்த காரணத்தால் ‘வழுதுணங்காய்’ போன்ற தழும்பினை இவன் பெற்றான். இதனாலேயே இவன் ‘தழும்பன்’ அல்லது ‘வழுதுணைத் தழும்பன்’ என அழைக்கப்பட்டான்.
தழும்பன் குறித்து ‘தூங்கல் ஓரியார்’ என்ற புலவர் பாடியுள்ள பாடல் கிடைக்கவில்லை. இனி மருங்கூர் பட்டினத்தின் அமைப்பினைப் பார்ப்போம். ஊணூரினை அடுத்து அமைந்திருந்த மருங்கூர் பட்டினம் பெரும்செல்வ வளம் நிறைந்த பகுதியாக இருந்தது. பொலிவாக இப்பட்டினம் தோன்றும். மேலும் இப்பட்டினத்தில் உப்பு விளையும் வயல்கள் பல இருந்தன. இரவில் ஒளி வீசும் கடைத்தெருக்கள் இருந்தன. அத்தெருக்களில் எப்பொழுதும் ஆரவாரம் எழுந்தபடி இருக்கும். (அகம். 227) பட்டினத்தில் உள்ள கடைகளில் குவித்து வைத்திருந்த இறால்களை காகங்கள் கவர்ந்து சென்று துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாவாய்களின் பாய்மரக் கம்பத்தில் அமர்ந்திருக்கும் என (நற்றிணை 258 ஆம் பாடல்) குறிப்பிடுகின்றது. இவ்வாறாக மருங்கூர் பட்டினம், ஊணூர் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் ‘தழும்பன்’ ஆட்சிப் பரப்பில் அவை எவ்வாறு சிறந்து விளங்கின என்பதை விவரிக்கின்றன. மருங்கூர் பட்டினத்தின் வர்த்தகம் அதுசார்ந்து கிடைத்த பொருள்வளம் தழும்பன் அரசனை செல்வந்தனாக மாற்றியிருந்தது. இதன் பொருட்டு அவன் தன்னைப் பாடிவரும் புலவர்களுக்குக் குறைவின்றி பெரும் பொருட்களை வழங்கியதால் அவன் புகழ் தமிழகம் முழுவதும் பரவியிருந்தது எனஅகம். 227 ஆம் பாடலில் குறிப்பு உள்ளது. மதுரைக்காஞ்சியில் பாண்டியன்நெடுஞ்செழியனின் கடற்கரைப்பட்டினமான ‘நெல்லூர்’ குறிப்பிடப்படுகின்றது. மருங்கூர் பட்டினமும், ஊணூரும் சேர்ந்துதான் ‘நெல்லூர்’ என பிற்காலத்தில் பெயர்பெற்றிருக்க வேண்டும் என மயிலைசீனி. வேங்கடசாமி தனது ஆய்வின் வழி நிறுவுகின்றார். ஊணூர் பகுதியில் நெல் அதிகமாக விளையும் என சங்க இலக்கியம் குறிப்பிடுவதை நாம் முன்பே பார்த்தோம். காலப்போக்கில் இவ்வூர் நெல்லூர் எனப் பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்நெல்லூர் ‘சாலியூர்’ எனவும் குறிக்கப்பட்டது. தாலமி குறிப்பிடும் ‘சாலூர்’ என்பது இவ்வூரையே குறிப்பதாகும், என்ற முறையில் மயிலை சீனி. வேங்கடசாமி தனது ஆய்வு முடிவுகளை முன்வைத்தார். இனி ‘மதுரைக்காஞ்சி’ மருங்கூர் பட்டினம் குறித்து கூறும் பகுதியினைப் பார்ப்போம்.
‘தொடுவானமும் கடலும் ஒன்றாக அமைந்த அச்சம் தருகின்ற பெரிய கடலிலேஅலைகளைக் கிழித்துக் கொண்டு காற்றின்உதவியினால் இக்கரையை அடைவதற்குப் பாய்களை விரித்துக் கொண்டு வந்த பெரிய நாவாய்கள், இந்தத் துறைமுகத்தில் கூட்டமாக வந்து தங்கியிருந்தன. நாவாய்களில் இருந்து பண்டங்களை இறக்குமதி செய்த போது முரசு முழங்கிற்று. கப்பல்கள் துறைமுகத்தில் தங்கியிருந்த காட்சியானது வெள்ளத்தை முற்றுகை செய்யும் மலைபோலத் தோன்றும். இத்தகைய துறைமுகத்தோடு ஆழ்ந்த கடலாகிய அகழியையும் உடைய நெல்லூரை வென்று கைக்கொண்ட உயர்ந்த வெற்றியுடைய வேந்தன் பாண்டியன். (மதுரைக்காஞ்சி. 75-88 )இவ்வாறாக மருங்கூர்பட்டினம் தழும்பன் என்ற அரசனின் ஆட்சியின் கீழும்,பிற்காலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனால் வெற்றி பெறப்பட்டு அவன் ஆட்சியின் கீழும் இருந்ததை மதுரைக்காஞ்சியின் வழி அறியலாம். பரணர், நக்கீரர், மதுரை மருதன் இளநாகனார் ஆகியோரால் ‘தழும்பனும்’ அவன் ஊர்களும் பாடப்பட்டுள்ள நிலையில்மாங்குடி மருதனார் பாண்டியனையும் மருங்கூரையும் சேர்த்துப் பதிவு செய்துள்ளது சங்கப் பாடல்களுக்கு இடையில் உள்ள கால இடைவெளியைக் காட்டுகின்றது. மருங்கூர் என்ற பெயரில் தமிழத்தில் சிலஊர்கள் இன்றும் உள்ள நிலையில் தொண்டிக்கு மேல் உள்ள மருங்கூர் பட்டினமே சங்க இலக்கியம் குறிப்பிடும் மருங்கூர் பட்டினமாகும். ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி இப்பட்டினத்தை வரைபடத்தில் குறிப்பிடும்பொழுது வைகை ஆற்றுக்கும் தாமிரபரணி ஆற்றுக்கும் இடையில்குறிப்பிடுகின்றார். இது பொருத்தமற்றதாகவே உள்ளது. இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘பாம்பாறு’ கடலில் கலக்கும் பகுதியிலேயே இம்மருங்கூர் பட்டினம் அமைந்துள்ளதைப் பார்க்கலாம். மேலும் இப்பட்டினத்தை ஒட்டி ‘அலையாத்திக் காடுகள்’ உள்ள பகுதி அமைந்துள்ளது. சிதம்பரம் அருகில் அமைந்துள்ள பிச்சாவரம் காடுகளைப் போன்று பரந்த அளவில் அல்லாமல் சிறிய அளவிலே அவை இங்குள்ளதைக் காணலாம். சங்கப் பாடலில் குறிக்கப்படும் (அகம். 220) ‘கடல் சோலை’ என்ற பகுதியை அலையாத்திக் காடுகள் உள்ள பகுதியோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவ்வாறு ஒப்பிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென தொல்லியல் ஆய்வாளர் ர. பூங்குன்றன் அவர்களும் விளக்கினார்.
‘தூங்கல் ஓரியார்’ என்ற புலவர் தழும்பன் என்ற அரசனைப் பாடியுள்ள நிலையில்இன்றைய மருங்கூர் பட்டினத்தில் அமைந்துள்ள ஓரியூர், ஓரூர் என்ற ஊர்களின் பெயர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது ‘ஓரியார்’ என்பதுடன் ஒத்துப்போவதை அறியலாம். மேலும் இன்றைய மருங்கூர் பட்டினம் மதுரையின் நேர் கிழக்கே கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளதையும் மதுரை மருதன் இளநாகனார் இதனை சிறப்பாக பதிவு செய்துள்ளதையும் பார்க்கலாம்.. மேலும் அவர் (அகம். 255 அம் பாடலில்) மருங்கூர் பட்டினப் பகுதியை பெயர் குறிப்பிடாமல் குறிப்பால் உணர்த்திப் பதிவு செய்துள்ளது அப்பகுதிக்கும் அவருக்குமான நெருக்கத்தையே காட்டுகின்றது. மாறாக, இராமநாதபுரத்தில் அமைந்துள்ள ‘அழகன்குளம்’ துறைமுகப்பகுதிதான் பண்டைய மருங்கூர் பட்டினம் என ஆய்வாளர் சம்பகலட்சுமி குறிப்பிடுவது பொருத்தமற்றது என தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். இன்றைய ‘அழகன்குளம்’ பகுதி சங்க இலக்கியத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பது குறித்த பதிவுகள் இல்லை. மாறாக இப்பகுதியில் நடைபெற்ற அகழாய்வு முடிவுகளில் இப்பட்டினம் பலநாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததைக் காட்டுவதுடன் மட்டுமல்லாமல் அங்கு கிடைக்கப் பெற்ற பானையோடுகளின் காலம் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன் என்பதையும் காட்டுகின்றன. இந்நிலையில் இவ்வளவு தொன்மையான பட்டினம் மருங்கூராகத்தான் இருக்கும் என்று ஆய்வாளர்கள் சிலர்தம் கருத்தினை முன்வைப்பது வலுவற்றதாகவே உள்ளது.
மேலும் இப்பகுதி சங்ககாலத்தில் எவ்வாறு குறிப்பிடப்பட்டது என்றும், மாறாக அது குறித்த பாடல்கள் பிற்காலத்தில் கிடைக்காமல் மறைந்து போனதா? என்பதெல்லாம் ஆய்வுக்குரிய ஒன்றுதான்.இவ்வாறாக நாம் முன்பு பார்த்த முடிவுகளின் அடிப்படையில் இன்றைய இராமநாதபுரம் பகுதியில் உள்ள ‘பாசிப்பட்டின’த்திற்கு மேல் அமைந்துள்ள மருங்கூர் பட்டினமே சங்ககால துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.
PREVIOUS ARTICLE

No comments:

Post a Comment