Monday 12 November 2018

காட்டுயானைகளுடன் பழந்தமிழர் வாழ்க்கை

காட்டு யானைகளுடன் பழந்தமிழர் வாழ்க்கை.
யானைபற்றிய குறிப்புகளை, அவற்றின் பழக்க வழக்கங்கள், உறுப்பு நலன்களென சங்கக் கவிதைகள் பலவற்றிலும் காணுகிறோம். போர் யானைகளைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
காட்டு யானைகள் மத்தியில் பழந்தமிழரின் வாழ்க்கை எப்படியிருந்ததென்றும் யானைகளுக்கும் அன்றைய மனிதர்களுக்குமான உறவினைப் புரிந்துகொள்ளவும் ஏதுவான தரவுகளைத் தேடித் தொகுத்ததில் பழந்தமிழர் குடியிருப்புகள் யானைகளின் வாழிடத்திலேயே அமைந்திருந்ததும் காட்டுயானைகளைத் தந்தத்திற்காக வேட்டையாடிய குறிப்புக்கள் உள்ளனவென்ற போதிலும் இணக்கமான உறவு நிலவியதற்கான பதிவுகள் உள்ளமையும் தெரிய வருகின்றன.
ஊர் மன்றத்தில் விளவுக்கனிமரம் ஒன்று நிற்கிறது. அதன் பழம் ஒன்று அருகிலிருக்கும் வீட்டு முற்றத்தில் விழுகிறது. அங்கிருக்கும் எயிற்றியின் மகனும் காட்டின் பெரிய பெண்யானையின் சிறு கன்றும் அதனை ஓடிவந்து எடுக்கின்றனர். (புறம் 181) அப்படியெனில் அந்த யானைக்கன்று ஊர்நடுவே எவ்வித அச்சமும் இன்றித் திரிகிறது. மக்களும் நடமாட விட்டுள்ளனர். பெண்யானையும் தன் கன்றுக்கு எவ்வித அபாயத்தையும் முன்னுணராமல் கன்றினைக் குடியிருப்புக்குள் நடமாடுவதை அனுமதித்துள்ளது என்பதை நம்மால் உணரமுடிகிறது. எனவே யானையும் மனிதனும் மோதல் எதுவுமில்லாமல் வாழ்ந்திருக்கிறார்களென்பதற்கு இத்தரவு சான்றாக அமைகிறது.
நற்றிணைத் தலைவன் ஒருவன் பொருள் தேடிச் செல்ல நினைக்கிறான். இதனை உணர்ந்த தோழி, முன்னர் களவுக்காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத் தலைவனுக்கு நினைவுபடுத்துகிறாள். காட்டுவழியில் தலைவியை அழைத்து வந்த தலைவன், தலைவியின் வழிநடை வருத்தம் தணிப்பதற்காகப் பெரிய அடிமரத்தையுடைய ஒரு ஓமை மரத்தின் புள்ளிகள் நிறைந்த நிழலில் தலைவியோடு தங்குகிறான். அந்த நேரத்தில் அங்கு வருகிற மிகப்பெரிய தந்தங்களையுடைய ஒற்றை யானை, அவர்களுக்கு எவ்விதத் துன்பத்தையும் இழைக்காமல், அதன் இயல்பானபோக்கில் சென்று குழையை ஒடித்து உண்ணுகையில், திடீரென ஏதோ நினைத்துக்கொண்டதுபோல் அதன் புள்ளிகள் நிறைந்த பெரிய துதிக்கையைச் சுருட்டி உயர்த்திப் பிளிற, பெண்யானை அந்தக் காடு முழுதும் எதிரொலிக்குமாறு புலம்பிப் பிளிறியதை நினைவுகொள்வீராக எனக் கூறுகிறாள். (நற். 318) இந்தத் தரவில் தனியாகத் திரிகின்ற மிகப்பெரிய கொம்பன் யானை அதன் வழியில் மனிதர்களைக் கண்ணுற்றபோதும் எவ்விதத் துன்பமும் இழைக்காது அதன் போக்கிலேயே சென்று வழக்கமான இடத்தில் குழையைப் பறித்து உண்கிறது. யானையும் மனிதர்களும் எவ்வித மோதலுமின்றி வாழ்ந்திருக்கிறார்களென்பதற்கு இப்பதிவே சான்றாக விளங்குகிறது.
வேட்டுவச் சிற்றூர் ஒன்றில் அதனை அடுத்த கிணற்றிலிருந்து ஆநிரைகளுக்காக எடுத்து வைத்திருக்கும் தெளிந்த நீர்ப்பத்தர் இருக்கிறது. அதனை மூடியிருக்கும் விற்பொறியை முறித்துத் திறக்கின்ற களிறு, கன்றுக்கும் பிடிக்கும் நீரூட்டிப் பின் செல்கிறது. நற். 92.
அம்குடிச் சீறூர் ஒன்றிலும் கோவலர் ஆநிரைக்காக தரிசுநிலத்தில் கற்களை உடைத்து நல்ல ஊற்றுக் கண்ணுடைய கூவல் (கிணறு) தோண்டுகின்றனர். கன்றுடன் கூடிய பிடியையும் அழைத்துக்கொண்டு களிறு ஒன்று அக்கிணற்றுக்கு நீரருந்த வருகிறது. (அகம் 321)
மற்றொரு தரவில் இரண்டு யானைகள் குளவித் தண்கயம் கலங்குமாறு ஒன்றையொன்று தீண்டி விளையாடி, சோலை வாழையை வேண்டுமென்ற அளவுக்குத் தின்று, பின் அதை வெறுத்து, அருகிலுள்ள வேரல்வேலிச் சிறுகுடி அலறும்படியாகச் செங்காற் பலவின் இனிய பழங்களைப் பறித்துத் தின்கின்றன. (நற்.232) இத்தரவிலிருந்து வேரல் வேலிச் சிறுகுடியின் அருகிலேயே யானைகள் கயத்தில் விளையாடி, சோலைவாழையைத் தின்றுவிட்டு பலாத் தோட்டத்துக்குள் நுழைந்து பலாப்பழங்களைப் பறித்துத் தின்கின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
குறுந்தொகைத் தலைவன் ஒருவன் இரவில் வந்து தலைவியின் வீட்டுக் கதவைத் திறக்க யானை முயல்வது போல் முயன்றதாகவும் அதனைக் கேட்டுத் தலைவி எழ முயற்சிக்கும் போதெல்லாம் தாய், தன் மகள் யானையின் முயறல் ஒலி கேட்டு அஞ்சுவதாக நினைத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டதால் தலைவனைச் சந்திக்க, இரவுக்குறிக்குச் செல்ல இயலாமலாயிற்றென குறுந்தொகைப் பாடல் 244 குறிப்பிடுகிறது. இத்தரவு மூலம் காட்டு யானைகள் இரவில் குடியிருப்புக்குள் வந்து வீடுகளைத் திறக்க முயல்வதென்பது இயல்பான ஒரு நிகழ்வு என்றும் அதைக் கண்டு பெண்களுங்கூட அஞ்சுவதில்லையென்பதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
முழந்தாள் நீண்ட, பெரிய பெண்யானையின் சிறிய தலையை உடைய கன்று, கள் நிறைந்த பாக்கத்துக் குறச் சிறுவர்களோடு மீண்டும் மீண்டுமாக வந்துச் சுழல ஓடி விளையாடியதாகவும் அப்படி விளையாடிய கன்றே வளர்ந்து பெரிய யானையாகி, அவர்களின் தினைப்புனத்தை மேய்வதாகவும் குறிப்பு உள்ளது. குறு. 294.
வெண்ணெல் தின்ற யானை சந்தனக்காடு நிறைந்த மலைப்பக்கத்தில் தங்குவதையும் ( நற். 7) பச்சிலை மரத்தை இழுத்துத் தள்ளிச் சேற்றில் ஆடி ஆசினிப்பலாவை ஒடித்த யானையையும் (நற். 51) காண்கிறோம்.
களிறு, பாந்தட் பெரும்பாம்பின் வாய்ப்பட்டதென பிடி கதறுவதையும் ( நற்.14), ஆண்யானையைப் புலி கொன்றதென இயக்கமற்றுத் தன் கன்றினை அணைத்தவாறு நிற்கும் பிடியின் சோகத்தையும் (நற். 47) கவிஞர்கள் பதிவு செய்துள்ளதைக் கண்ணுறுகையில் காட்டு யானைகளின் வாழ்க்கையை பழந்தமிழர்கள் அருகிருந்து கண்டுணர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
மற்றொரு பாடலில் முல்லை ஆயர்கள் அவர்களது மந்தையைக் காட்டினுள் மேய்த்து மாலை வீட்டுக்கு வந்தபோதுதான் மந்தையோடு யானைக் கன்று ஒன்றும் வந்துவிட்டதைத் தெரிந்து, அதனை மந்தையிலேயே பாதுகாத்து மறுநாள் கொண்டுபோய் அதன் தாய் யானையோடு சேர்த்துவிடுகின்றனர்.
நீர்வேட்கை மிகுந்த பெண்யானை மலைப்பக்கம் செல்கிறது. அவ்வாறு செல்ல இயலாத யானைக்கன்று ஆன்கன்றுகளோடு சேரிப்பெண்கள் துணுக்குறும்படியாக ஊருக்குள் வருகிறது. நற். 171.
யானை தாக்கவந்தாலும் சூல்மகள் கூட அஞ்சமாட்டாளென்றும் ஒரு பதிவு உள்ளது. பெரும் பாணாற்றுப்படை 135 - 137.
புலி, களிற்றொடு பொரும்போதுகூடக் குறக் குறு மாக்கள் அஞ்சாமல் துறுகல் மீது ஏறி நின்று பறை முழக்குவர். நற். 104 - 1 - 6.
களிறு ஒன்று பெரிய புலி ஒன்றினை அதன் குகைக்கே சென்று கொம்புகளால் குத்திக் கொல்கிறது, அதனால் செம்மறுப்பட்ட கொம்புகளைச் சாரலிலுள்ள அருவியில் கழுவிய பின்னும் அங்கேயே நிற்கிறது. அதனால் இரவில் தலைவியைச் சந்திக்க வரவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறான். நற்.151 - 2 - 5. அந்தப் பகுதியில் நிற்கும் யானையைப் பார்த்த தோழி, அந்த வழியில் தலைவனை இரவில் வராதே எனக் கூறுவதிலிருந்து, பகல் எனில் யானையைக் கண்டு ஒதுங்கிக் கொள்ள இயலும், இரவெனில் யானை கண்ணுக்குத் தென்படுவது அரிது, மேலும் அந்த யானை புலியோடு போரிட்ட ஆவேசம் தீராமலுள்ளது. எனவே அந்த யானையை வழியில் எதிர்கொள்வது அபாயகரமானது என்பது பெறப்படுகிறது. எனவே பழங்காலத் தமிழர் யானைகளின் போக்கு அறிந்து செல்லும் திறத்துடனிருந்தனர் என்பதை உணரலாம்.
மொத்தத்தில் எல்லாவற்றையும் ஆய்ந்து நோக்கும்போது, இக்காலத்தில் நாம், பசுக்கள் எருதுகள், கோயில் மாடுகள் போன்றவற்றோடு சேர்ந்து வாழ்வது போலவே அவர்களும் காட்டு யானைகளோடு சேர்ந்து வாழ்ந்திருக்கவேண்டுமென்பதும் பாய்ந்தோடி வரும் காளையைக் கண்டதும் நாம் சிறிது ஒதுங்கிக்கொள்வதுபோல் யானைகள் எதிர்ப்படும்போது சிறிது ஒதுங்கி வழிவிட்டுப் பின் தொடர்ந்து அவர்கள் வழியில் சென்றிருக்க வேண்டுமென்பதையும் அவதானிக்க முடிகிறது.
இக்காலத்தில் தாம் யானைகளின் வழித்தடத்தை நாம் ஆக்கிரமிக்க, அவை நம் நகருக்குள் புக, நமக்கும் அவற்றுக்குமான மோதல் போக்கு தொடர்கிறது.
தரவுகள்
வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை,
தண்ணறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தினவாடு பெருங்காட்டே. நற். 7 நல்வெள்ளியார்
இனம்சால் வயக்களிறு பாந்தட்பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல்
நெடுவரை விடரகத்து இயம்பும். நற். 14. மாமூலனார்.
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்
பயநிரைக்கு எடுத்த மணிநீர்ப்பத்தர்,
புன்தலை மடப்பிடி, கன்றொடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும் கொல்களிறு. நற். 92.
பாடியவர் பெயர் தெரியவில்லை.
படுமணி இனநிரை உணீய கோவலர்
விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல்
கன்றுடை மடப்பிடி களிறொடு தடவரும்
புன்தலை மன்றத்து அம்குடிச் சீறூர். அகம். 321. கயமனார்.
பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்
பைதலம் குழவி தழீஇ, ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும். நற். 47 நல்வெள்ளியார்.
பெருந்தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ்சேறு ஆடிய நுதல, கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்தது – நற். 51. பேராலவாயர்
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்
குளவித் தண்கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முனைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
செங்காற் பலவின் தீம்பழம் மிசையும் நற். 232 முதுவெங் கண்ணனார்.
நினைத்தலும் நினைதிரோ – ஐய! அன்று நாம்
பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனமாக
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக்கொண்ட ஓங்குமருப்பு யானை
பொறிபடு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ், விடரகம் சிலம்ப,
புன்தலை மடப்பிடி புலம்பிய குரலே?
– பாலை பாடிய பெருங்கோ. நற்.318
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உரவுக்களிறு போல் வந்து இரவுக்கதவு முயறல்
கேளேம் அல்லேம்! கேட்டனெம் – பெரும!
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட்டாங்கு, யாம்
உயங்குதொறும் முயங்கும் அறனில் யாயே!
குறு. 244. கண்ணனார்
முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறிஇறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,
முன்நாள் இனியது ஆகி, பின்நாள்
அவர் தினைப்புனம் மேய்ந்தாங்கு,
பகை ஆகின்று, அவர் நகைவிளையாட்டே.
குறு. 394 குறிஇறையார்.
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
நிலம் செல, செல்லாக் கயந்தலைக் குழவி
நேரிஅம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன்கன்றொடு புகுதும். நற். 171 - 1 -5
--- பாடியவர் பெயர் தெரியவில்லை
யானை தாக்கினும் அரவு மேற்செலினும்,
நீல்நிற விசும்பின் வல்ஏறு சிலைப்பினும்,
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை. பெரும்பாண். 135 - 137. கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
பூம்பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றை
தேம்கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்
குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது
பைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும். நற்.104 - 1-6
பேரி சாத்தனார்.
கொல்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச் செம்மறுக் கொண்ட வெண்கோடு யானை
கல்மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்கதில்ல
--- நற்.151 - 2 - 5. இளநாகனார்.

No comments:

Post a Comment