Thursday 19 May 2016

அமெரிக்கச் சிறுகதை - நல்ல வெளிச்சமுள்ள, தூய்மையான ஒரு இடம் (A Clean, Well-Lighted Place) ஆங்கிலம் : எர்னஸ்ட் ஹெமிங்வே (ERNEST HEMINGWAY)


நல்ல வெளிச்சமுள்ள, தூய்மையான ஒரு இடம் (A Clean, Well-Lighted Place) 

ஆங்கிலம் : எர்னஸ்ட் ஹெமிங்வே (ERNEST HEMINGWAY)

 தமிழில் ச.ஆறுமுகம்

download (8)
அப்போதே இரவு மிகவும் பிந்திவிட்டிருந்தது. மின்விளக்குக்கு நேர் எதிரில் மர இலைகளின் நிழலில் உட்கார்ந்திருந்த ஒரு வயதான கிழவரைத் தவிர மற்ற எல்லோரும் சிற்றுணவகத்தை விட்டுச் சென்றிருந்தனர். பகல் நேரத்தில் தெரு முழுதும் தூசியாகப் பறந்தது; ஆனால், இரவுப் பனியில் தூசியெல்லாம் அடங்கியிருந்தது. அந்த வயதான கிழவருக்குக் காது கேட்காதென்பதாலும், இரவு அமைதியாக இருப்பதன் மாறுபாட்டை அவர் உணர்ந்ததாலும் அந்தப் பிந்திய நேரத்திலும், அவர் அங்கே உட்கார்ந்திருக்க விரும்பினார். உள்ளேயிருந்த பரிமாறும் பணியாட்கள் இரண்டு பேருக்கும் அந்தக் கிழவர் கொஞ்சம் போதையாகியிருந்தது தெரிந்தது. நல்ல வாடிக்கையாளரான அவர் அதிகம் போதையேறினால், பணம் கொடுக்காமலேயே போய்விடுவாரென்பதும் அவர்களுக்குத் தெரியுமென்பதால் அவர்மீது ஒரு கண்வைத்துக் கவனித்திருந்தனர்.
‘’கடந்த வாரம் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார்,’’ என்றான், பரிமாறும் பணியாள் ஒருவன்.
‘’ஏன்?’’
‘’அவருக்கு விரக்தி, நம்பிக்கையிழந்துபோன நிலை.’’
‘’எதைப்பற்றி?’’
‘’எதைப்பற்றியுமில்லை.’’
‘’எதைப்பற்றியுமில்லையென்று உனக்கு எப்படித் தெரியும்?’’
’’அவரிடம் நிறையப் பணம் இருக்கிறது.’’
அவர்கள் இருவரும் உணவக வாயிலுக்கு அருகில் சுவரை ஒட்டியிருந்த மேசையில் அமர்ந்து, காற்றில் இலேசாக அசைந்த மர இலைகளின் நிழலில் அமர்ந்திருந்த கிழவரைத் தவிர மற்ற மேசைகளெல்லாம் காலியாகக் கிடந்த மாடியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தெருவில் இளநங்கை ஒருவளும் படைவீரன் ஒருவனும் நடந்து சென்றனர். தெருவிளக்கின் வெளிச்சம் அவனது தோள்பட்டைப் பித்தளை எண்கள் மீது விழுந்து ஒளிர்ந்தது. அந்தப் பெண் தலைக்கு மூடாக்கு எதுவும் அணியாமல் அவன் அருகாகவே விரைந்தாள்.
‘’ காவலர்கள் அவனைப் பிடித்துக்கொள்வார்கள்,’’ என்றான், பணியாட்களில் ஒருவன்.
‘’ அவன் நினைத்தது கிடைத்துவிட்டால், இதுவெல்லாம் அவனுக்கு ஒரு விஷயமாகுமா?’’
‘’அவன் இப்போது இந்தத் தெருவைவிட்டுப் போய்விட்டாலே நல்லது. காவலர்கள் அவனைப் பிடித்துவிடுவார்கள்; ஐந்து நிமிடத்துக்கு முன்னால் தான் இப்படிப் போனார்கள்.’’
நிழலில் அமர்ந்திருந்த கிழவர் கண்ணாடிக் கோப்பையைச் சிறு வட்டத்தட்டில் தேய்த்தார். இளம் பணியாள் அவரிடம் போனான்.
‘’உங்களுக்கு என்ன வேண்டும்?’’
கிழவர் அவனை ஏறிட்டுப் பார்த்தார்; ‘’இன்னொரு பிராந்தி’’ என்றார்.
‘’நீங்கள் போதையாகிவிடுவீர்கள்,’’ என்றான், பணியாள். கிழவர் அவனை ஏறிட்டுப் பார்த்தார். பணியாள் விலகிச் சென்றான்.
‘’இரவு முழுவதும் இருந்து கழுத்தறுக்கப் போகிறான், கிழவன்,’’ என்றான், சக பணியாளிடம். ‘’இப்போதே நான் தூங்கித்தான் விழுகிறேன். மூன்று மணிக்கு முன்னால் நான் படுக்கைக்குப் போக முடியவே போவதில்லை. அந்த ஆள் கடந்த வாரமே செத்துத் தொலைத்திருக்கலாம்.’’
பணியாள் பிராந்திப் புட்டியையும், உணவகத்தின் உட்பக்கமாக இருந்த வழங்குமிடத்திலிருந்து இன்னொரு சிறு வட்டத்தட்டினையும் எடுத்துக் கொண்டு கிழவரின் மேசைக்கு விரைந்தான். வட்டத்தட்டினை வைத்துவிட்டு பிராந்தியைக் கண்ணாடிக் கோப்பை நிரம்பும்வரை ஊற்றினான்.
‘’போன வாரமே செத்துத் தொலைந்திருக்கவேண்டியதுதானே,’’ என்றான், அந்தக் காது கேளாத மனிதரிடம். கிழவர் ஒற்றை விரலை அசைத்துக் காட்டி ‘’இன்னும் கொஞ்சம்,’’ என்றார். கண்ணாடிக் கோப்பை நிரம்பிப் பக்கவாட்டில் வழிந்து அடுக்கியிருந்த வட்டத்தட்டுகளின் மேலாக முதலாவதாக இருந்த தட்டில் சென்று சேருமளவுக்கு பணியாள், பிராந்தியை ஊற்றினான். ‘’நன்றி’’ என்றார், கிழவர். பணியாள் புட்டியை மீண்டும் உணவகத்துக்குள் எடுத்துச் சென்றான். மீண்டும் மேசையில் போய் சக பணியாளுடன் அமர்ந்தான்.
‘’இப்போது அவன் நல்ல போதை,’’ என்றான், அவன்.
‘’எல்லா இரவிலும் அவர் போதைதான்.’’
‘’அவன் எதற்காகத் தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தான்?’’
‘’எனக்கு எப்படித் தெரியும்?’’
‘’அதை அவன் எப்படித்தான் செய்தான்?’’
‘’கயிறு மாட்டிக்கொண்டு தொங்கினார்.’’
‘’கயிற்றை அறுத்துக் காப்பாற்றியது யார்?’’
‘’அவரது உடன்பிறந்தார் மகள்.’’
‘’அவள் ஏன் அப்படிச் செய்தாள்?’’
‘’அவருடைய ஆன்மாவுக்காகத் தான்.’’
‘’அவனிடம் எவ்வளவு இருக்கும்?’’
‘’நிறைய வைத்திருக்கிறார்.’’
‘’அவனுக்குக் கண்டிப்பாக ஒரு எண்பது வயது இருக்கும்.’’
‘’எப்படியானாலும் அவருக்கு எண்பது வயது என்றுதான் நானும் சொல்லியாகவேண்டும்.’’
‘’அவன் வீட்டுக்குப் போய்த் தொலையவேண்டும். மூன்று மணிக்கு முன்னால் நான் படுத்ததேயில்லை. படுக்கப் போவதற்கு என்ன மாதிரியான ஒரு நேரம் அது?’’
‘’அவருக்குப் பிடித்திருக்கிறது. அதனால் இங்கேயே இருக்கிறார்.’’
‘’அவன் தனியாள். நான் தனியாள் கிடையாது. படுக்கையில் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் ஒரு மனைவி இருக்கிறாள்.’’
‘அவருக்கும் மனைவி இருந்தாள், ஒரு காலத்தில்.’’
‘’இப்போது அவனுக்கு மனைவி இருந்தாலும் அது அவனுக்கு நன்றாக இருக்கப்போவதில்லை.’’
‘’அப்படிச் சொல்லமுடியாது, நீ. மனைவியோடு அவர் நன்றாக இருப்பாராக இருக்கலாம். அவரது உடன்பிறந்தார் மகள் அவரைப் பார்த்துக்கொள்கிறாள். அவள் தான் அவரைக் கீழே இறக்கிக் காப்பாற்றினாளென்று நீதான் சொன்னாய்.’’
‘’எனக்குத் தெரியும்.’’ ‘’அந்தக் கிழட்டு வயதுக்கு நான் இருக்கக்கூடாது. கிழடு என்பதே ஒரு அசிங்கம்தான்.’’
‘’ எல்லோரும் , எப்போதும் அப்படியென்று சொல்லமுடியாது. இந்தக் கிழவர் சுத்தமாக இருக்கிறார். இப்போதுங்கூட, இந்தப் போதையிலும் சிந்தாமல் குடிக்கிறார், அவரைப் பாரேன்.’’
‘’நான் அவனைப் பார்க்கமாட்டேன். எனக்கு வேண்டவும் வேண்டாம். அந்த மனிதன் வீட்டுக்குப் போய்த் தொலைந்தால், அதுவே எனக்குப் போதும். வேலை செய்பவர்களைப்பற்றி அவன் சிறிதுகூட நினைத்தும் பார்ப்பதில்லை.’’
கிழவர் அவரது கண்ணாடிக்கோப்பையிலிருந்தும் கண்களை உயர்த்தி நேர் எதிரில் பார்த்துப் பின் பரிமாறும் பணியாட்களைப் பார்த்தார்.
அவரது கண்ணாடிக்கோப்பையைச் சுட்டிக்கொண்டே. ‘’இன்னுமொரு பிராந்தி’’ என்றார், கிழவர். வீட்டுக்குச் செல்லத் துடித்துக்கொண்டிருந்த பணியாள் அங்கு வந்தான்.
‘’முடிந்துவிட்டது.’’ என்றான், அவன். குடிகாரர்களிடம் அல்லது வெளிநாட்டுக்காரர்களிடம் பேசும்போது மந்தமான மனிதர்கள் இலக்கணப் பேச்சை விட்டுவிடுவார்களே, அதுபோல அவன் பேசினான். ‘’இன்று இரவுக்கு அவ்வளவுதான். இதற்குமேல் கிடையாது. இப்போது முடித்துக்கொள்.’’
‘’இன்னொன்று,’’ என்றார், கிழவர்.
‘’கிடைக்காது. முடிந்துவிட்டது.’’ மேசை விளிம்பினை ஒரு துண்டினால் துடைத்த பணியாள் தலையை அசைத்து மறுத்தான்.
கிழவர் எழுந்து நின்று, வட்டத்தட்டுகளை மெதுவாக எண்ணிப்பார்த்த பின்னர், தோல் காசுப்பை ஒன்றினைச் சட்டைப்பையிலிருந்து எடுத்து, மதுவுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, அரை பெசெட்டோவை அன்பளிப்பாக மேசையில் வைத்தார். கிழவர் கீழே இறங்கித் தெருவுக்குச் செல்வதை, மிகவும் வயதான கிழவரான அவர் நிதானமின்றி, ஆனால் கண்ணியத்துடன் செல்வதை அந்தப் பணியாள் கவனித்துக்கொண்டிருந்தான்.
“நீ ஏன், அவரை இன்னும் உட்கார்ந்து, குடிக்கவிடாமல், செய்துவிட்டாய்?” என அவசரமில்லாத பணியாள் கேட்டான். உருளைக்கதவுகளை அவர்கள் இழுத்துப் பூட்டிக்கொண்டிருந்தனர். “இன்னும் இரண்டரை கூட ஆகவில்லை.”
“நான் வீட்டுக்குப் போய்த் தூங்கவேண்டும்.”
“ஒரு மணி நேரத்தில் என்னவாகி விடும்?”
“அது அவனைவிட எனக்கு அதிகம்.”
“ஒரு மணி நேரம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.”
“நீயும் ஒரு கிழவன் போலவே பேசுகிறாய். அவன் ஒரு புட்டியை வாங்கிக்கொண்டு போய் வீட்டில் குடிக்கவேண்டியதுதானே?”
“அது இது மாதிரி இருக்காது.”
“ஆமாம், இருக்காதுதான்.” ஒத்துக்கொண்டான், மனைவியுள்ள பணியாள். அவன் நியாயமற்றவனாக இல்லை; அவசரத்தில் இருந்தான்; அவ்வளவுதான்.
”அப்புறம், நீ? வழக்கமான நேரத்துக்கு முன்பாகவே வீட்டுக்குச் செல்கிறாயே, உனக்குப் பயமாக இல்லையா?”
“என்னை அவமானப்படுத்தப் பார்க்கிறாயா?”
”அட இல்லையப்பா, சும்மா கேலியாகத்தான்.”
”இல்லை.” அவசரத்திலிருந்த பணியாள் உலோக உருளைக் கதவுகளை இழுத்து மூடி முடித்து எழுந்தவாறே சொன்னான். “எனக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது. தன்னம்பிக்கையென்றாலே நான்தான்.”
”உனக்கு இளமை, தன்னம்பிக்கையோடு ஒரு வேலையும் இருக்கிறது. உனக்கு எல்லாமே இருக்கிறது.” என்றான் வயதான பணியாள்.
“சரி, உனக்கு மட்டும் என்ன குறை?”
“எல்லாம் தான்; ஆனால், வேலை.”
”எனக்கு இருக்கிற எல்லாமே உனக்கும் இருக்கிறது.”
“இல்லை, எனக்குத் தன்னம்பிக்கை இருந்ததேயில்லை. நான் இப்போது இளமையாகவும் இல்லை.”
“வா, வா. முட்டாள்தனமாகப் பேசுவதை விட்டுவிட்டு முதலில் பூட்டைப் போடு.”
“சிற்றுணவகத்தில் மிகப் பிந்தியநேரத்திலும் தங்கியிருக்க விரும்புபவர்களைச் சேர்ந்தவன், நான்.” என்றான், வயதான பணியாள். “படுக்கைக்குப் போக விரும்பாதவர்களோடு சேர்ந்தவன். இரவுக்கு ஒரு விளக்கு தேவைப்படுபவர்களோடு சேர்ந்தவன்.”
“நான் வீட்டுக்குப் போய்த் தூங்கவேண்டும்.”
”நாம் இருவரும் வெவ்வேறு ரகம்.” என்றான், வயதான பணியாள். அவன் இப்போது வீட்டுக்குச் செல்வதற்கான உடையிலிருந்தான். “இளமையும் தன்னம்பிக்கையும் மிக அழகான விஷயங்களேயென்றாலும் அது மட்டுமேயல்ல பிரச்னை. ஒவ்வொரு நாள் இரவிலும் கபேயை மூடுவதற்கு நான் ஏன் சுணங்குகிறேனென்றால், கபே தேவைப்படுபவர்கள் யாராவது இருப்பார்கள் என்பதுதான்.”
“அட என்னப்பா, அதுதான், இரவு முழுவதற்கும் போட்காஸ் (மதுக்கடைகள்) திறந்திருக்கின்றனவே.”
“உனக்குப் புரியவில்லை. இது தூய்மையும் மகிழ்ச்சியானதுமான ஒரு கபே. நல்ல வெளிச்சமுள்ளது. வெளிச்சம் மிகவும் நன்றாக இருக்கிறது. அதுவும் இல்லாமல், அங்கங்கே இலைகளின் நிழல் வேறு விழுகிறது.”
“நல்லிரவு,” என்றான், இளம் பணியாள்.
“நல்லிரவு,” என்றான், மற்றவன். மின்விளக்கை நிறுத்திவிட்டு, உரையாடலைத் தொடர்ந்து, தனக்குத்தானே பேசிக்கொள்ளத் தொடங்கிய அவன், வெளிச்சம் முக்கியமானதுதான்; இருந்தாலும் இடம் தூய்மையாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கவேண்டியதும் அவசியம். உங்களுக்கு இசை தேவையில்லை. நிச்சயமாக இசை தேவையில்லை. இந்த மாதிரி நேரத்தில் எல்லாமே, எல்லாமே தான் இருந்தாலும் ஒரு மதுவகத்தின் வாயிலில் நீங்கள் கண்ணியத்துடன் நிற்கமுடியுமா? அவன் எதற்குப் பயப்படுகிறான்? அது அச்சமுமில்லை, திகிலுமில்லை; அது, ஒரு ஒன்றுமில்லாததென்று அவனுக்கு நன்றாகத் தெரியும்தான், அது மொத்தத்திலுமே ஒரு ஒன்றுமில்லாத விஷயம், ஏன், மனிதனேகூட ஒன்றுமில்லாத விஷயம்தான். வெளிச்சம் தேவை, அவ்வளவுதான், அதோடு கொஞ்சம் சுத்தமும் ஒரு ஒழுங்கும் வேண்டும். சிலர் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்றாலும் அதை உணர்வதேயில்லை; ஆனால் அவனுக்குத் தெரியும். இது எல்லாமே மொத்தத்தில் எதுவுமே இல்லை, ஏனென்றால், ஒன்றுமில்லைக்குள் ஒன்றுமில்லை. எதுவுமில்லாத எங்கள் ஏதுமில்லாமையே, ஏதுமில்லாமைக்குள்ளிருப்பதைப் போலவே எதுவுமில்லாமலிருக்கும், எதுவுமில்லாமையே தங்கள் நாமமாகவும் தங்கள் ராஜ்யமாகவுமிருக்கட்டும். இந்த ஒன்றுமில்லாமையை, எங்கள் அன்றாட ஒன்றுமில்லாமையையும் ஒன்றுமில்லாத எங்களின் ஒன்றுமில்லாமையை, எங்கள் ஒன்றுமில்லாமையை நாங்கள் ஒன்றுமில்லாமலாக்குவது போலவும் ஒன்றுமில்லாமை எங்களை ஒன்றுமில்லாதவர்களாக்குவது போலின்றி எங்களுக்கு அளியுங்கள்; ஆனால், ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களுக்கு அளியுங்கள்; எதுவுமேயில்லாத ஒன்றுமில்லாமை. ஒன்றுமில்லாமை, முழுக்க முழுக்க ஒன்றுமில்லாமை, தங்களோடிருக்கும் ஒன்றுமில்லாமை வாழ்க! அவன் ஒளிரும் நீராவி அழுத்தக் காபி எந்திரத்துடனுள்ள ஒரு மதுவகத்தின் முன்னால் போய் நின்றான்.
“உனக்கு என்ன வேண்டும்?” எனக்கேட்ட மதுவக ஆள் பின்பக்கமாகத் திரும்பிப்பார்த்தான்.
“ஒன்றுமில்லை.”
“சரிதான், இன்னொரு பைத்தியம்,” எனச் சொல்லிவிட்டுத் திரும்பிக்கொண்டான், மதுவக ஆள்.
“சிறிய தம்ளர் ஒன்று.” என்றான், பணியாள்.
மதுவக ஆள் ஊற்றிக்கொடுத்தான்.
“வெளிச்சம் மிகவும் பளிச்சென்று, மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆனால், மதுவகம் அந்த அளவுக்குப் பளபளப்பாக இல்லையே,” என்றான், பணியாள்.
மதுவக ஆள், அவனை ஏறிட்டுப் பார்த்தான்; ஆனால், பதிலெதுவும் சொல்லவில்லை. பேசுகிற நேரமா அது, ஏற்கெனவேயே மிகவும் பிந்திய இரவாகிவிட்டது.
“உனக்கு இன்னொரு தம்ளர் வேண்டும், ம்?” எனக் கேட்டான், மதுவக ஆள்.
“இல்லை, வேண்டாம், நன்றி,” என்றுவிட்டு, வெளியே வந்தான், பணியாள். மதுவகங்களையும் மதுக்கடைகளையும் அவன் வெறுத்தான். அதுவே, ஒரு நல்ல வெளிச்சமுள்ள தூய்மையான சிற்றுணவக(கபே)மென்றால் விஷயமே வேறாக இருக்கும். மேற்கொண்டு எதைப்பற்றியும் சிந்திக்காமல் அவன், இப்போது, அவனுடைய வீட்டிலுள்ள அவனது அறைக்குப் போவான். அவனது படுக்கையில் விழுந்து, கடைசியில், வெயில் வந்தபிறகு நல்ல, பகல்வெளிச்சத்தில் தூங்குவான். இதுவெல்லாம், என்ன, தூக்கம் பிடிக்காத இன்சோம்னியாவாக இருக்குமென அவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். நிறையப் பேருக்கு அது இருக்கலாமாகயிருக்கும்.
••••••••
மலைகள் இணைய இதழ் எண் 96, ஏப்ரல் 18ல் வெளியானது.

No comments:

Post a Comment