Monday, 25 April 2016

அமெரிக்கச் சிறுகதை - மலைகள், வெள்ளை யானைகளைப் போல. - HILLS LIKE WHITE ELEPHANTS BY ERNEST HEMINGWAY

மலைகள், வெள்ளையானைகளைப் போல. (HILLS LIKE WHITE ELEPHANTS) 

ஆங்கிலம் : எர்னெஸ்ட் ஹெமிங்வே (ERNEST HEMINGWAY )

தமிழில்  ச. ஆறுமுகம்.

download (15)
நோபல் விருதாளரான எர்னஸ்ட் ஹெமிங்வேயின் பல படைப்புகள் ஏற்கெனவேயே தமிழாக்கம் பெற்றிருக்கின்றன. உலகின் தலைசிறந்த சிறுகதையாளர்களில் ஒருவரான அவர் சிறுகதைகள் மிதக்கும் பனிப்பாறைகளைப் போல அமையவேண்டும் என்றார். மிதக்கும் பனிப்பாறைகளில் எட்டில் ஒரு பாகமே வெளியில் தெரிகிறது. மீதிப்பகுதி முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கி வெளியில் தெரிகின்ற பகுதிக்கு அடிப்படையாகிறது. அதுபோலக் கதைகளைப் படைக்கும் கொள்கை மிதக்கும் பனிப்பாறைக் கொள்கை (Iceberg Theory) என அழைக்கப்படுகிறது. பனிப்பாறைக் கொள்கைக்கு மிகச்சிறந்த இலக்கணமாக அவரது Hills like White Elephants மற்றும் A Clean, well-lighted Place என்ற சிறுகதைகள் திகழ்கின்றன. Hills like White Elephants தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
***
எப்ரோ ஆற்றுப் பள்ளத்தாக்கின் குறுக்காக அமைந்துள்ள மலைகள் நீளமாகவும் வெள்ளையாகவும் இருந்தன. இந்தப் பக்கம் நிழலோ மரங்களோ இல்லை. வெயிலில், இரு தண்டவாளப் பாதைகளின் நடுவில் தொடர்வண்டி நிலையம் எழுந்து நின்றது, அதன் பக்கவாட்டினை ஒட்டி, கட்டடத்தின் வெக்கை நிறைந்த நிழலும், மதுவகத்தின் திறந்த வாயிலில் பூச்சிகளைத் தடுக்கத் தொங்கவிடப்பட்டிருந்த மூங்கில் மணிச்சரடுகளாலான திரையும் இருந்தன. அந்த அமெரிக்கனும் அவனுடன் வந்த இளமங்கையும் கட்டடத்திற்கு வெளியே, நிழலில் கிடந்த மேசையில் உட்கார்ந்தனர். வெப்பம் மிகவும் அதிகமாக இருந்தது. பார்சிலோனாவிலிருந்து வரும் விரைவு வண்டி நாற்பது நிமிடங்களில் வரும். அது இந்தச் சந்திப்பு நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று, மாட்ரிட்டுக்குச் செல்லும்.
‘’ என்ன சாப்பிடலாம்?’’ இளமங்கை கேட்டாள். அவள் தொப்பியைக் கழற்றி மேசையின் மீது வைத்திருந்தாள்.
‘’ ஒரே வெக்கை.’’ என்றான், அவன்.
‘’ பியர் சாப்பிடலாம்.’’
‘’டாஸ் செர்வேசாஸ்’’ அவன் திரையை நோக்கிச் சொன்னான்.
‘’பெரியதா?’’ வாயிலில் இருந்து ஒரு பெண் கேட்டாள்.
‘’ஆமாம், இரண்டு பெரியது.’’
அந்தப் பெண் இரண்டு கண்ணாடிக்கோப்பைகளில் பியரும் இரண்டு ஈரம் உறிஞ்சும் தகடுகளும் கொண்டுவந்தாள். தகடுகளை மேசை மீது வைத்து அவற்றின் மேலாக பியர் கோப்பைகளை வைத்துவிட்டு, அந்த மனிதனையும் இளமங்கையையும் பார்த்தாள். அந்த இளமங்கை மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வெயிலில், மலைகள் வெள்ளையாகத் தெரிந்தன. நிலப்பரப்பு பழுப்பாகவும் வறண்டும் இருந்தது.
‘’அவை வெள்ளை யானைகளைப் போலத் தெரிகின்றன.’’ என்றாள், அவள்.
‘’நான் அப்படி எதையும் பார்த்ததேயில்லை.’’ அந்த மனிதன் பியரைக் குடித்தான்.
‘’இல்லை, நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.’’
‘’நான் பார்த்துமிருக்கலாமே. பார்த்திருக்கமாட்டேனென்று நீ சொல்வதாலேயே, எது ஒன்றும் நிரூபணமாகிவிடாது.’’ என்றான், அந்த மனிதன்.
இளமங்கை மணித்திரையைப் பார்த்தாள். ‘’அதில் வண்ணம் தீட்டி, என்னவோ வரைந்திருக்கிறார்களே, அது என்ன?’’
‘’ஏனிஸ் டெல் டோரா. அது ஒரு மதுபானம்.’’
‘’நாமும் அதைக் குடித்துப் பார்க்கலாமா?’’
‘’இங்கே கவனியுங்கள்’’ என்று அந்த மனிதன் திரை ஊடாகக் கொஞ்சம் சத்தமாக அழைத்தான். மதுவகத்துக்குள்ளிருந்து அந்தப் பெண் வெளியே வந்தாள். ‘’நான்கு ரியால்கள்.’’
‘’எங்களுக்கு இரண்டு ஏனிஸ் டெல் டோரா வேண்டும்.’’
‘’தண்ணீர் கலந்தா?’’
‘’உனக்குத் தண்ணீர் கலந்து வேண்டுமா?’’
‘’எனக்குத் தெரியாதே, தண்ணீர் சேர்த்தால் நன்றாக இருக்குமா?’’ என்றாள், இளமங்கை.
‘’அதெல்லாம் சரிதான்.’’
‘’உங்களுக்குத் தண்ணீரோடு வேண்டும். ம்?’’ எனக் கேட்டாள், அந்தப் பெண்.
‘’ஆமாம், தண்ணீரோடு தான்.’’
‘’இது அதிமதுரம் போலவே இருக்கிறது.’’ என்றபடியே இளமங்கை கோப்பையைக் கீழே வைத்தாள்.
‘’எல்லாமே அப்படித்தான்.’’
‘’ஆமாம்,’’ என்ற அவள், ‘’எல்லாமே அதிமதுரம் போலத்தான் ருசிக்கிறது. அதிலும் நீண்ட காலம் காத்திருந்த எல்லாமே தான், அப்சிந்தே1 போல.’’
‘’ஓ, போதும். அதோடு விட்டுவிடு.’’
‘’நீங்கள் தானே ஆரம்பித்தீர்கள்! நான் வியப்புநிலையில் திளைத்திருந்தேன். எனக்கு அருமையான நேரமாக இருந்தது.’’ என்றாள், இளமங்கை.
‘’நல்லது. நம் நேரத்தை நல்லபடியாகக் கழிக்கலாமே!’’
‘’ அது சரி. நான் அதற்குத்தானே முயற்சி செய்தேன். மலைகள் வெள்ளை யானைகளைப் போல இருக்கிறதென்று சொன்னேனே, அது மகிழ்ச்சிக்கான முனைப்பில்லையா?’’
‘’அது, மகிழ்ச்சிக்கான முனைப்புதான்.’’
‘’இந்தப் புதுவகை மதுவைக் குடித்துப்பார்க்கலாமென்றேன். அதைத்தானே நாம் செய்கிறோம், இல்லையா – சுற்றுமுற்றும் வேடிக்கை பார்ப்பதும் புதிய மதுவகைகளை அருந்திப்பார்ப்பதும்?’’
‘’ நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.’’
இளமங்கை எதிரில் தெரிந்த மலைகளை நோக்கிப் பார்வையைச் செலுத்தினாள்.
‘’இவை அழகான மலைகள்,’’ என்றாள் அவள். ‘’உண்மையில் அவை வெள்ளை யானைகளைப் போல இல்லை, மரங்களின் ஊடாகத் தெரியும் அவற்றின் மேனி நிறத்தைத்தான் நான் சொன்னேன்.’’
‘’நாம் இன்னும் கொஞ்சம் மது அருந்தலாமோ?’’
‘’சரி.’’
இளம் வெப்பக் காற்று மணித்திரையை அசைத்து, மேசைப்பக்கமாகத் தள்ளியது.
‘’பியர் குளிர்ச்சியாக, நன்றாக இருக்கிறது.’’ என்றான், அவன்.
‘’அருமையாக இருக்கிறது.’’ என்றாள், இளநங்கை.
‘’அது உண்மையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மிகவும் எளிமையான ஒரு அறுவைசிகிச்சைதான், ஜிக்2. சொல்லப்போனால், அதில் அறுவைமுறையே இல்லை.’’ என்றான், அந்த மனிதன்.
அந்த இளமங்கை மேசையின் கால்கள் பதிந்திருந்த தரையைப் பார்த்தவாறிருந்தாள்.
‘’ நீ அதையெல்லாம் ஒன்றும் பெரிதாக நினைக்கமாட்டாயென்று எனக்குத் தெரியும் ஜிக். உண்மையில் அது ஒன்றுமேயில்லைதான். இலேசாகக் காற்றை உள்ளே செலுத்துவது, அவ்வளவுதான்.’’
இளமங்கை எதுவும் சொல்லவில்லை.
‘’நான் உன் கூடவே வந்து, முழுநேரமும் உன்கூடவே இருப்பேன். கொஞ்சம் காற்றை உள்ளே செலுத்துவார்கள், அவ்வளவுதான். அதன்பிறகு, எல்லாமே சரியாகி, முற்று முழுக்க இயல்பானதாக ஆகிவிடும்.’’
‘’அதற்கப்புறம், நாம் என்ன செய்வோம்?’’
‘’அதற்கப்புறம் நாம் நன்றாகிவிடுவோம். முதலில் எப்படி இருந்தோமோ, அப்படியே ஆகிவிடுவோம்.’’
‘’ எது உங்களை அப்படி நினைக்கச் சொல்கிறது?’’
‘’அந்த ஒன்று மட்டும் தான் நம்மைக் குதறுகிறது. அந்த ஒரே விஷயம் தான் நமது மகிழ்ச்சியை இல்லாமல் செய்துவிட்டது.’’
இளமங்கை மணித்திரையைச் சிறிது பார்த்துவிட்டுப் பின் கையை நீட்டி, மணிச்சரடுகளில் இரண்டினை மட்டும் கையில் பிடித்தாள்.
‘’அப்படியென்றால், அது நடந்து முடிந்தபிறகு, எல்லாம் சரியாகி, நாம் மகிழ்ச்சியாக இருப்போமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்.’’
‘’நாம் மகிழ்ச்சியோடிருப்போமென்பது எனக்கு நன்றாகத் தெரியும். நீ பயப்பட வேண்டியதேயில்லை. அதைச் செய்தவர்கள் நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன்.’’
‘’நானும்தான் பார்த்திருக்கிறேன். அதற்கப்புறம் அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் தான்.’’
‘’நல்லது,’’ என்ற அவன், ‘’உனக்கு வேண்டாமென்றால், வேண்டாம். உனக்கு வேண்டாமென்கிறபோது, உன்னை அதைச்செய்யவைக்கமாட்டேன். ஆனால், எனக்குத் தெரியும், அது முழுவதுமாக, மிகமிக எளிமையானது.’’
‘’அப்படியானால், நான் அதைச் செய்துகொள்ளவேண்டுமென்று நீ உண்மையாகத்தான் சொல்கிறாயா?’’
‘’செய்யவேண்டிய மிகச் சிறந்த காரியம் அதுதானென்று நினைக்கிறேன். ஆனால், உனக்கு அது உண்மையாகவே வேண்டாமென்றால், நீ அதைச் செய்துகொள்ளென்று நான் சொல்லவில்லை.’’
‘’அப்படியென்றால், நான் அதைச்செய்துகொண்டால், மகிழ்ச்சியாகிவிடுவாயா, எல்லாமே முன்பு மாதிரியே ஆகிவிடுமா, நீ என்னைக் காதலிக்கத் தொடங்கிவிடுவாயா?’’
‘’இப்போதும் நான் உன்னைக் காதலிக்கத்தான் செய்கிறேன். நான் உன்னைக் காதலிக்கிறேனென்பது உனக்குத் தெரியும்.’’
‘’எனக்குத் தெரியும். ஆனால், நான் அதைச் செய்தால், எல்லாமே முன்புபோல இனியதாக மாறிவிடுமா? ஏதோ ஒன்று, வெள்ளையானை போல இருப்பதாக, நான் சொன்னால், அது உனக்குப் பிடித்துவிடுமா?’’
‘’ அது எனக்குப் பிடிக்கும். இப்போதும் பிடிக்கத்தான் செய்கிறது, ஆனால், அதைப்பற்றி நினைத்துப் பார்க்கத்தான் முடியவில்லை. கவலைப்படும்போது, எனக்கு எப்படி ஆகிவிடுகிறதென்று உனக்குத் தெரியும்தானே.’’
‘’நான் அதைச் செய்துவிட்டால், நீ அப்புறம் ஒருபோதும் கவலைப்படவே மாட்டாயா?’’
‘’நான் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டேன்; ஏனென்றால், அது அந்தளவுக்கு, முழுமையாக எளிமையானது.’’
‘’அப்படியென்றால் நான் அதைச் செய்துகொள்கிறேன். ஏனென்றால், நான் எப்போதுமே என்னைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.’’
‘’என்ன அர்த்தத்தில் இப்படிச் சொல்கிறாய்?’’
‘’நான் என்னைப்பற்றி எந்த அக்கறையும் கொள்வதில்லை.’’
‘’நல்லது, எனக்கு உன் மீது அக்கறை இருக்கிறது.’’
‘’ஓ, ஆமாம். ஆனால், நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதனாலொன்றுமில்லை, நான் அதைச் செய்துவிடுகிறேன். அதன்பிறகு எல்லாமே நல்லதாகிவிடும்.’’
‘’நீ அந்தவகையில் நினைப்பதானால், நீ அதைச் செய்யவேண்டுமென்று நான் சொல்லமாட்டேன்.’’
இளமங்கை எழுந்து, தொடர்வண்டிநிலையத்தின் கடைசி முனை வரை நடந்தாள். எதிரில் அந்தப்பக்கமாகத் தானியவயல்களும் எப்ரோ ஆற்றின் கரை முழுதும் மரங்களும் இருந்தன. ஆற்றுக்கும் அப்பால், வெகுதூரத்தில் மலைகள் தெரிந்தன. மேகநிழல் ஒன்று வயல்வெளியில் ஊர்ந்து சென்றது. அவள் மரங்களின் ஊடாக ஆற்றினைப் பார்த்தாள்.
‘’இதையெல்லாம் நாமே வைத்துக்கொள்ள முடியும்.’’ என்றாள், அவள். ‘’ஏன், எதுவொன்றையும் நாம் வைத்துக்கொள்ளமுடியும்தான்; நாம்தான் ஒவ்வொரு நாளும் அதை மேலும் மேலும் முடியாததாக்குகிறோம்.’’
‘’என்ன சொன்னாய்?’’
‘’எதுவொன்றையும் நம்மால் வைத்துக்கொள்ளமுடியும் என்றேன்.’’
‘’எதுவொன்றையும் நாம் வைத்துக்கொள்ளலாம்.’’
‘’இல்லை, நம்மால் முடியாது.’’
‘’இந்த உலகம் மொத்தத்தையுமே நாம் வைத்துக்கொள்ளலாம்.’’
‘’இல்லை, நம்மால் முடியாது.’’
‘’நாம் எங்கே வேண்டுமானாலும் போகலாம்.’’
‘’இல்லை, நம்மால் முடியாது. இதற்கு மேல், அது நம்முடையதில்லை.’’
‘’அது நம்முடையதுதான்.’’
‘’இல்லை, அப்படியில்லை. அதை நம்மிடமிருந்து, வெளியே எடுத்துவிட்டார்களென்றால், திரும்பக் கிடைக்கவே கிடைக்காது.’’
‘’ ஆனால், அதை இன்னும் வெளியே எடுக்கவேயில்லையே.’’
‘ நாம் கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாமே.’’
‘’இப்படி, நிழலுக்கு வா,’’ என்ற அவன் ‘’நீ அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம், அப்படி நினைக்கவும் கூடாது..’’ என்றான்.
‘’நான் எந்த மாதிரியும் நினைக்கவில்லை. எனக்கும் விஷயம் தெரிகிறது, அவ்வளவுதான்.’’ என்றாள், அவள்.
‘’நீ விரும்பாத எந்த ஒன்றையும் நீ செய்யவேண்டுமென்று நானும் நினைக்கவில்லை.’’
‘’அது எனக்கும் நல்லதில்லைதான்.’’ என்ற அவள், ‘’அது எனக்குத் தெரியும். இன்னொரு பியர் குடிக்கலாமா?’’ என்றும் கேட்டாள்.
‘’சரி. ஆனால், நீ புரிந்துகொள்ளவேண்டியது …..’’
‘’எனக்குப் புரிகிறது.’’ என்ற அவள், ‘’ இப்படியே பேசிக்கொண்டிருப்பதை நம்மால் நிறுத்தமுடியாதா?’’ எனக் கேட்டாள்.
அவர்கள் மேசைக்கு வந்து அமர்ந்தார்கள். இளநங்கை, எதிரில் தெரிந்த பள்ளத்தாக்கின் வறண்ட பகுதியைப் பார்க்கத் தொடங்கினாள்; அந்த மனிதன் அவளையும் மேசையையும் மாறிமாறிப் பார்க்கத் தொடங்கினான்.
‘’நீ இதில் புரிந்துகொள்ளவேண்டியது, நீயாக விரும்பாத எந்த ஒன்றையும் நீ செய்யவேண்டுமென்று நான் சொல்லவில்லை என்பதைத்தான்.’’ என்ற அவன், ‘’அது எந்த ஒருவகையிலாவது உனக்கு வேண்டியதாகுமானால் அதை ஏற்றுக்கொண்டு, அதன் வழியிலேயே போக முழுமனதோடு சம்மதிக்கிறேன்.’’ என்றான்.
‘’அது எந்த ஒருவகையிலும் உங்களுக்கு வேண்டியதாகாதா? நாம் அதனுடன் அப்படியே இருக்கலாம்.’’
‘’ வேண்டியதாகிறதுதான். ஆனால் எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் வேண்டியதில்லை. வேறு எந்த ஒருவரும் எனக்கு வேண்டியதில்லை. அது மட்டுமில்லை, எனக்குத் தெரியும், அது முற்றுமுழுவதுமாக எளிமையானது.’’
‘’ஆமாம், உங்களுக்கு நிரம்பத் தெரியும், அது முற்றுமுழுவதுமாக எளிமையானது.’’
‘’நீ அப்படிப் பேசுவதெல்லாம் சரிதான், ஆனால் அது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.’’
‘’இப்போது எனக்காக ஒன்று செய்வீர்களா?’’
‘’ உனக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன்.’’
‘’தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து இந்தப் பேச்சை நிறுத்துகிறீர்களா?’’
அவன் எதுவும் சொல்லவில்லை; ஆனால், தொடர்வண்டி நிலையச் சுவரின் மீது சாய்த்துவைக்கப்பட்டிருந்த பைகளையே பார்த்தவாறிருந்தான். அவற்றின் மீது, அவர்கள் இரவுகளைச் செலவழித்த விடுதிகளின் முத்திரைவில்லைகள் ஒட்டியிருந்தன.
‘’ ஆனால், ஒரு விஷயம், நீ அதைச் செய்துதானாக வேண்டுமென்று எனக்கில்லை. அது எப்படியானாலும் ஆகட்டும், அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை.’’ என்றான், அவன்.
‘’நான் இப்போது கத்திவிடப்போகிறேன்.’’ என்றாள், இளநங்கை.
‘’ மதுவகப் பெண் பியர் நிரம்பிய இரண்டு கண்ணாடிக் கோப்பைகளுடன் திரைச்சரடுகளின் ஊடாக வந்து, அவற்றை ஏற்கெனவே ஈரமாகியிருந்த தகடுகளின் மீது வைத்தாள். ‘’தொடர்வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடும்.’’ என்றாள், அவள்.
‘’அவள் என்ன சொன்னாள்?’’ எனக் கேட்டாள், இளமங்கை.
‘’இன்னும் ஐந்து நிமிடத்தில் தொடர்வண்டி வந்துவிடுமென்கிறாள்.’’
இளமங்கை அந்தப் பெண்ணைப் பார்த்து, நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்முகத்துடன் புன்னகை பூத்தாள்.
‘’பைகளையெல்லாம் நிலையத்தின் அந்தப் பக்கமாகக் கொண்டுபோய் வைத்துவிடுவதுதான் நல்லது.’’ என்றான், அவன். அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
‘’அப்படியானால் சரி. வைத்துவிட்டு வாருங்கள். பியரைக் குடித்து முடித்துவிடலாம்.’’
அவன் இரண்டு கனத்த பைகளையும் தூக்கிக்கொண்டு, நிலையத்தைச் சுற்றி நடந்து அடுத்த தண்டவாளப்பாதைக்குப் போனான். அவன் தண்டவாளப் பாதையில் நெடுகி நோக்கிய போதும் தொடர்வண்டி கண்களுக்குத் தெரியவில்லை. திரும்பிவரும்போது, தொடர்வண்டிக்காகக் காத்திருந்தவர்கள் மது அருந்திக்கொண்டிருந்த கூடத்துக்குள்ளாக நுழைந்து நடந்தான். மதுவகத்தில் ஒரு ஏனிஸ் வாங்கி அருந்திமுடித்துச் சுற்றிலுமிருந்த மனிதர்களைப் பார்த்தான். அவர்கள் எல்லோரும் தொடர்வண்டிக்காகவே காத்துக்கொண்டிருந்தார்கள். மணித்திரையைத் தள்ளிக்கொண்டு, அதனூடாக வெளியே வந்தான். அவள் மேசையிலேயே அமர்ந்திருந்தாள்; அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
‘’இப்போது கொஞ்சம் நன்றாக இருக்குமே?’’ என்று கேட்டான், அவன்.
‘’நான் நன்றாகவே இருக்கிறேன்.’’ என்றவள், ‘’என்னிடம் எந்தக் கோளாறும் கிடையாது. நான் நன்றாகவே இருக்கிறேன்.’’ என்றாள்.
அப்சிந்தே1 – பச்சை நிறத்திலிருக்கும் கடுமையான ஒரு மதுவகை, தமிழில் எட்டித் தேறல் எனப்படுகிறது.
jig 2 – (jĭg) n. Offensive Slang Used as a disparaging term for a black person. – கறுப்பின மனிதனைக்குறிப்பிடும் தரக்குறைவான சொல் [Probably shortening of jigaboo.]
••••••••••
மலைகள் இணையிதழ் எண் 95 ஏப்ரல், 3, 2016 ல் வெளியானது.

No comments:

Post a Comment