Wednesday 2 January 2019

இரண்டாம் புலிகேசி தோற்றோடிய மணிமங்கலம் போர்க்களமும் தர்மேசுவரர் திருக்கோயிலும்

இரண்டாம் புலிகேசி தோற்றோடிய மணிமங்கலப் போர்க்களமும் ஸ்ரீ தர்மேசுவரர் திருக்கோயிலும்
நேற்றுக்கு முந்தைய நாள், நிச்சய தாம்பூல நிகழ்ச்சி ஒன்றுக்காக வண்டலூருக்குக் குடும்பத்தோடு மகிழுந்தில் புறப்பட்டோம்.
வேலூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் தாண்டி, மணிமங்கலத்தில் வண்டலூருக்கான பாதையில் திரும்பியதும் ஒரு நூறு அடி தூரத்தில் சாலையின் இடது பக்கத்தில் `ஸ்ரீதர்மேஸ்வரர் கோயில், Archaeological Survey of India, Chennai Circle` என்ற பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. ஆனால் கோயில் எதுவும் தெரியவில்லை.
இப்பாதையில் ஏற்கெனவேயே நான்கைந்து முறை வந்து போயிருந்தும் இப்பெயர்ப்பலகை இப்போதுதான் கண்ணில்படுகிறது. தொல்லியல் பாதுகாப்புத் துறைக் கோயில் என்பதால் பார்த்துவிடவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது.
அதற்குள் வண்டி சிறிது தூரம் சென்றுவிட்ட போதிலும் நிறுத்தித் திரும்பி வந்து பார்த்தபோது, பெயர்ப் பலகையை ஒட்டி இடது புறமாகக் கோயிலுக்குச் செல்லும் பாதையும் முள்கம்பி வேலியிட்ட வளாகமும் தெரிந்தது. வேலி அடைப்பின் முன்பக்க வாயில் இரும்புக் கிராதி அருகாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இருவரிடம் கோயில் எதுங்க எனக் கேட்கவும், வேலை நடந்துகொண்டிருக்கிறது…, சரி நீங்கள் போய்ப் பாருங்கள் எனச் சொல்லிவிட்டு மீண்டும் அவர்களுக்குள் பேசத் தொடங்கிவிட்டனர்.
வளாகத்தினுள்ளே ஆலமரம் போல் பரந்து படர்ந்த அழகிய ஒரு அரசமரம் வரவேற்றது. வளாகத்தினுள் சிமென்ட் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் ஒற்றை மாடக் கோபுரம் ஓலைக் கிடுகுகளால் மறைக்கப்பட்டிருந்தது. கோபுரத்தின் மீது தான் ஆட்கள் வேலைசெய்துகொண்டிருந்தனர்.
கோவில் நுழைவாயிலுக்கு வலது புறமாக குளம் ஒன்று அமைந்துள்ளது. இக்குளத்திற்குப் படிக்கட்டுகள் ஏதுமில்லை. குளமும் கோயில் வளாகத்தைச் சேர்ந்ததென்பதை குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி தெரிவித்தது.
குளத்தின் முன்பகுதி முழுவதும் ஆம்பல் படர்ந்திருக்க மீதிப்பகுதி பகுதி முழுவதையும் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்த சம்பங்கோரை மறைத்துநின்றது. குளத்தை அடுத்து வயல்வெளிகள். கோவில் புனரமைப்புப் பணி முடிந்த பின்னர் நீர் நிறைந்த இக்குளத்தையும் செப்பனிடுவார்களென எனக்குள்ளாகவே ஒரு நம்பிக்கை எண்ணம் துளிர்த்ததோடு, செப்பனிட்ட குளமும் புனரமைத்த கோயிலுமாக அவ்வளாகம் என் மனக்கண்ணுள் எழுந்தது.
குளம் மற்றும் அழகிய வயல்வெளிகளும் அங்கிருந்தே தெரிந்த வண்டலூர் மலையின் தோற்றத்தையும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டு, கோவிலின் உள் வளாகத்தினுள் சென்றபோது, நன்கமைக்கப்பட்ட அழகிய பூந்தோட்டம் கண்ணைக்கவர்ந்தது.
இளஞ்சிவப்பில் தங்கரளி, மஞ்சள் நிறத்தில் செம்பருத்தி, மகிழம்பூ அளவுக்குச் சிறியதாக ஒரு மரமல்லி என வியப்பளிக்கும் வகைகளில் மலர்ச்செடிகளுடன் நன்கு பராமரிக்கப்படுகிறது. இன்னும் பல செடிகள் நான் அறியாத வகைகளாக இருக்கின்றன.
எதிரில் தெரிந்த சதுரக் கற்கோயில் தெற்குமுகமாக அமைந்துள்ளது. இதன் கதவு பூட்டப்பட்டிருந்தது. இக்கோயிலின் திருச்சுற்றுப்பாதையும் சிமென்ட் பாவப்பட்டுள்ளது.
நந்தி ஒன்றும் பலிபீடம் ஒன்றும் இக்கோவிலைப் பார்த்த மாதிரியில்லாமல் எதிர்ச் சுவற்றைப் பார்த்தவாறு மேற்கு முகமாக அமைக்கப்பட்டிருந்தன. இரண்டும் துணியால் போர்த்திச் சுற்றி கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது. கயிற்றை அவிழ்த்துப் பார்க்க ஆவல்தான்; இருந்தாலும் கோபுர மாடத்தின் மீது பணிசெய்பவர்கள் சத்தம் போடுவார்களோ என ஒரு பயமும் எழுந்ததால் ஆவல் தானாகவே அடங்கிப்போயிற்று.
நந்திக்கு இடது புறமாக சுவாமி கோவிலுக்குள் நுழையும் பாதை அமைந்த முக மண்டபம். கதவு திறந்தேயிருந்தது. முக மண்டபத்திலிருந்து மகாமண்டபத்திற்குக் கற் படிக்கட்டுகள் உள்ளன.
மகாமண்டபம் வடக்கு தெற்காக அமைந்துள்ளது. மகாமண்டபத்திலிருந்து இறங்குவதற்கு எதிர்த்திசையில் (மேற்கு) படிக்கட்டுகள் உள்ளன. இக்கோயிலின் வெளிச்சுற்று என்பது மூன்று புறம் சுற்றி வந்து, பின் மகாமண்டபத்தில் ஏறிக் கீழே இறங்கும்போது தான் நிறைவடைகிறது. இது போன்ற அமைப்பிலான ஒரு கோயிலை இப்போதுதான் பார்க்கிறேன்.
மகாமண்டபத்திலிருந்து அர்த்த மண்டபம் மற்றும் கருவறைக்குள் நுழையும் வாசல் கதவும் பூட்டப்பட்டிருந்தது.
வெளிப்புறமாக திருச்சுற்றுப் பாதையில் சுற்றி வந்தபோது சுவரில் பிள்ளையார், தட்சிணா மூர்த்தி, (தெற்குச் சுவர்) மகாவிஷ்ணு (மேற்குச்சுவர்) துர்க்கை, பிரமன், சண்டிகேசுவரர் (வடக்குச் சுவர்) சிலைகளும் துணியால் மூடப்பட்டுள்ளன.
கிழக்குச் சுவரில் 12 கண் கற்காலதர் (சன்னல்) அமைந்துள்ளது. இக்காலதரின் மேல் ஏறிப் பார்த்தால் கருவறை லிங்கம் தெரியுமென நினைக்கிறேன். ஆனால் ஏறிப்பார்ப்பதற்கான வசதி இல்லை.
இக்கோவில் சிவலிங்கம் மட்டும் அமைக்கப்பட்டதாக இருந்து பிற்காலத்தில்தான் அம்மன் சன்னதிக்கென தனிக் கோயில் மற்றும் நந்தி, பலிபீடம் அனைத்தும் அமைக்கப்பட்டிருக்கலாமென்பதைக் கண்கூடாக உணரமுடிகிறது.
சிவன் கோயிலின் திருச்சுற்றுச் சுவரில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளும் பிற்காலச் சேர்க்கைகளாக இருக்கலாம்.
கோவிலுக்கு வெளியே அரசமரத்தடியில் நாகர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று முகம் பார்க்கும் புடைப்புச் சிற்பத்தின் நடுவில் சிவலிங்கம் அழகாக உள்ளது.
அமைதியான வளாகம். குழந்தைகள் ஓடி விளையாட, குடும்பத்தோடு அமர்ந்து இயற்கையின் அழகில், அமைதியில் கரைந்து மகிழலாம். ஆனால், அதற்கான நேரம் இல்லாமலிருந்ததால் உடனேயே புறப்பட்டுவிட்டோம்.
இந்த மைதானத்தில் இரண்டரையடித் தூண் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. சிவன் கோவில் சுற்றுச் சுவரிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
புனரமைப்புப் பணி முடிந்த பிறகு இன்னொரு முறை குடும்பத்தோடும் நண்பர்களோடும் வரவேண்டுமென்ற தீர்க்கமான எண்ணத்தோடு புறப்பட்டுச் சென்றோம்.
அன்று இரவு வீட்டுக்கு வந்த பின் மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில் என இணையத்தில் தேடிப் பார்த்தால் ஏகப்பட்ட தகவல்களுடன் எண்ணற்ற ஒளிப்படங்கள் குவிந்து கிடக்கின்றன.
காஞ்சியை நோக்கிப் படையெடுத்து வந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை நரசிம்ம பல்லவன் தோற்கடித்து தொடர்ந்துசென்று வாதாபியில் அவனைக் கொன்றதாக நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம்.
இப் போர்த்தகவல் கூரம் தாமிரச் செப்பேடுகளில் “புலிகேசியின் முதுகாகிய தகட்டில் நரசிம்மன் வெற்றி என்பதைப் பொறித்தான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.640 இல் நடந்த இந்தப் போர் நிகழ்ந்த இடம் இந்த மணிமங்கலம் தான் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்கியின் சிவகாமியின் சபதம் நாவல் இந்தப் போரை விவரிக்கும். சிவகாமி, நரசிம்ம பல்லவன், பரஞ்சோதி, ஆயனர், நாக நந்தி என்னும் பாத்திரங்களையும் சிவகாமியின் கிளியையும் மறக்கமுடியுமா என்ன?
அந்த நாவலில் இந்த தர்மேசுவரர் கோவில் பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா எனத் தெரியவில்லை.
அதற்கும் முன்பாக மகேந்திரவர்மனுக்கும் புலிகேசிக்கும் போர் நடந்து அதில் மகேந்திரன் தோற்றதாகக் கூறப்படும் புள்ளலூர் போர் நடந்த இடம் இப்போது அந்தக் கிராமம் பொள்ளிலூர் என அழைக்கப்படுவதாகவும் தெரியவருகிறது.
மணிமங்கலம் கிராமத்தில் கிடைத்த வெற்றி மிகப் பெரிதாகக் கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். அதனால் தான் வழிவழியாக வந்த பல்லவர், சோழர், பாண்டியர் மற்றும் நாயக்க மன்னர்களும் இக் கிராமத்தில் கீழ்க்கண்ட கோயில்களை அமைத்துப் பராமரித்துள்ளனர்.
1. தர்மேசுவரர் கோவில்
2. இராஜகோபாலர் கோவில் இக்கோவிலின் நாயகரான விஷ்ணு வலக்கையில் சங்குடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். பொதுவாக சங்கு விஷ்ணுவின் இடக்கையிலும் ஆழி வலக்கையிலும் இருக்கும்.
3. கைலாசநாதர் கோவில்
4. வரதராஜப்பெருமாள் கோவில்.
இக்கோயில்களில் சோழ மன்னா்களின் கல்வெட்டுகள் 27 ம் பாண்டிய மன்னா்களின் கல்வெட்டுகள் 5ம் விஜயநகர மற்றும் நாயக்கா் காலக் கல்வெட்டுகள் 10ம் எந்த மன்னா் காலத்தைய கல்வெட்டு என்று தெரியாத ஒரு கல்வெட்டும் ஆக மொத்தம் 43 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டுகளில் தர்மேசுவரர் ஆலயம் தம்மீச்சுவர உடையார் கோயில் எனக் குறிப்பிடப்படுகிறது.
இக்கிராமம் ஒவ்வொரு ஆட்சியாளர்களின் காலத்திலும் பெயர் மாற்றப்பட்டுள்ளதும் கல்வெட்டுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கிராம சிகாமணி சதுர்வேதி மங்கலம், (இராசராசன் காலம்), மணிமங்கலமான இராச சூளாமணிச் சதுர்வேதி மங்கலம் (மூன்றாம் இராசாதி ராசன் கல்வெட்டு) என இக்கிராமம் பெயரிடப்பட்டுள்ளது.
இக் கோயில் குலோத்துங்க சோழனாலும் அம்மன் சன்னதி பாண்டிய மன்னனாலும் முகமண்டபம் விஜயநகர அரசராலும் கட்டுவிக்கப்பெற்றதெனக் குறிப்புகள் இருந்தாலும் தலபுராணத்தில் வேறொரு கதை கூறப்பட்டுள்ளது.
பல்லவ மன்னன் ஒருவன் சிவன்கோவில் கட்டவேண்டுமென்றும், எங்கு கட்டுவதெனத் தெரியாமல் திண்டாடிய காலத்தில் அவனிடம் தானம் பெற வந்த அடியவர் ஒருவரிடம், அரசன் என்ன தானம் வேண்டுமெனக் கேட்டதாகவும் அந்த அடியவர் இந்த இடத்தைச் சுட்டி, இதில் ஒரு கோயில் அமைத்து அதனைத் தனக்குத் தானமாக அளிக்குமாறு வேண்டியதாகவும் அரசன் திகைத்து நின்றபோது அடியவர் மறைந்து இறைவன் காட்சியளித்ததாகவும், அரசன் அந்த இடத்தில் கோவில் அமைத்து தம்மீச்சுவர உடையார் எனப் பெயர் சூட்டியதாக வாழ்மொழிக் கதை.
எதிர்வரவிருக்கும் போரில் அரசன் வெற்றிபெற வேண்டுமெனச் சில வீரர்கள் தம் தலையையே இக்கோவிலுக்குக் காணிக்கையாக்கியதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இத்தலத்து இறைவனை வணங்குவதால் அதர்மத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென்றும் நம்புகின்றனர்.
அம்மனுக்கு முழுநிலா நாளில் சந்தனக் காப்பு நடைபெறுவதாகவும் அன்று பழங்கள், மலர்களால் `நிறைமணிக் காட்சி` நடைபெறுவதாகவும் அதனைக் காண்போர் வறுமையிலிருந்தும் விடுபடுவர் என்ற நம்பிக்கையும் உள்ளதாகத் தெரிகிறது.
இக்கோவிலில் சதுர் வேதங்கள் நான்கும் விநாயகரை வணங்கியதால் இங்கு சதுர்வேத விநாயகர் சிலைகள் நான்கு உள்ளதென்றும் குறிப்பிடப்படுகிறது.
இங்குள்ள சண்டிகேசுவரர் சிலையும் சடைமுடியுடன் மாறுபாடாக உள்ளதெனத் தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள கல் நந்தியைத் தட்டிப் பார்த்தால் வெண்கல ஒலி எழும்புவதாகக் குறித்துள்ளனர். ஆஹா, இது முன்பே தெரிந்திருந்தால் தட்டிப் பார்த்திருக்கலாமே!
தொல்பொருள் துறை, இக்கோவிலை வெகு சிறப்பாகப் பராமரிக்கும் திறம் பாராட்டுக்குரியது.
இந்த வரலாற்றுப் புகழ் மணிமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 20கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. தாம்பரத்திலிருந்து வருவதெனில் முடிச்சூர் வழியில் பத்து கி.மீ தூரமே.
குடும்பத்துடன், குழந்தை குட்டிகளுடன் சிற்றுலாவாக வந்து இந்த கிராமத்து அழகினையும் அமைதியினையும் பருகுவதுடன் வரலாற்று உணர்வையும் புதுப்பித்துக் கொள்ள இயலும். இங்குள்ள நான்கு கோயில்களையும் கல்வெட்டுகளையும் காணமுடியும்.
பார்வை :
1. வை.சுந்தரேச வாண்டையார், 30 கல்வெட்டுகள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. 1958.
2. https://tamilnadu-favtourism.blogspot.com/…/kailasanathar-t…
3. https://tamilnadu-favtourism.blogspot.com/…/dharmeshvarar-t…

2 comments:

  1. If you're trying hard to lose kilograms then you certainly have to jump on this totally brand new custom keto plan.

    To produce this service, licensed nutritionists, personal trainers, and top chefs have united to develop keto meal plans that are useful, convenient, price-efficient, and delicious.

    Since their launch in January 2019, thousands of people have already completely transformed their figure and well-being with the benefits a great keto plan can offer.

    Speaking of benefits; in this link, you'll discover eight scientifically-certified ones given by the keto plan.

    ReplyDelete
  2. நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி ...
    Thirukadaiyur Temple 60th Marriage

    ReplyDelete