Tuesday 29 January 2019

மரணத்தின் நிலைஎண் காதலுக்கும் மிகையானது

மரணத்தின் நிலைஎண் காதலுக்கும் மிகையானது. “Death
Constant
Beyond
Love” ஸ்பானியம் : காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் – 
 ஆங்கிலம் : கிரிகோரி ரபாஸா மற்றும் ஜே.எஸ். பெர்ன்ஸ்டீய்ன் – தமிழில் ச.ஆறுமுகம் 



Gabriel
García
Márquez,

செனேட்டர் ஒன்சிமோ சான்ச்செஸ், அவரது வாழ்க்கைக்கான பெண்ணைக் கண்ட போது, அவரது மரணத்திற்கு ஆறுமாதங்களும் பதினொரு நாட்களுமே எஞ்சியிருந்தன. ஒருவித மாயத் தோற்றமுள்ள ஆளுநரின் ரோஜா1 என்ற கிராமத்தில்தான், அவர் அவளைச் சந்தித்தார். இரவில் சரக்குக் கடத்தல் கப்பல்களின் சொர்க்க பூமியாகவும் பகலில் பாலைவனத்திற்குள் உள்வாங்கிய உபயோகமற்ற கடற்கால் போலக் கடலைப்பார்த்தவாறு தோற்றமளிப்பதும் ஒன்றுக்கும் உதவாத நிலமும் திசைகளற்றதுமான அது, அப்படியிருப்பதனாலேயே நல் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய எவராவது ஒருவர் அங்கே வாழ்வாரெனச் சிறிதளவுங்கூட யாருக்குமே, எந்தச் சந்தேகமும் துளிர்த்திருக்கவில்லை.
அதன் பெயர்கூட ஒரு வேடிக்கை தான்; எவ்வாறெனில் அந்தக் கிராமத்தில் அப்போதிருந்த ஒற்றை ரோஜாவுங்கூட, லாரா ஃபாரினாவைச் சந்தித்த அந்த மாலைப்பொழுதில் சான்ச்செஸ் அணிந்திருந்ததுதான்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்போதும் அவர் மேற்கொள்கின்ற வாக்குச் சேகரிப்புப் படலத்தின்போது தவிர்க்க முடியாத நிகழ்வாக அங்கே நிறுத்தவேண்டியதானது. ஊர்வலக் கார்கள் காலையிலேயே அங்கு வந்து சேர்ந்திருந்தன. பின்னர், பொது நிகழ்ச்சியின்போது கூட்டம் திரட்டவும் கோஷங்கள் எழுப்பவுமான வாடகை இந்தியர்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் வந்தன. பதினோரு மணிக்குச் சிறிது முன்னதாக இசைக்குழு, தானாக உயரும் மேடையரங்கம் மற்றும் பரிவாரங்கள் ஏற்றிய ஜீப்புகள், நிர்வாகப் பணியாளர்கள் வசதிக்கான ஸ்ட்ராபெர்ரி சோடா நிற ஊர்தி அனைத்தும் வந்தன. செனேட்டர் ஒன்சிமோ சான்ச்செஸ் குளிர்வசதி மகிழுந்து ஒன்றினுள் தட்பவெப்பமற்றவராக.
வீறமைதியுடனிருந்தாலும், கதவைத்திறந்த உடனேயே `குப்பென` முகத்திலடித்த வெப்பக் காற்றில் அதிர்ந்துபோனதோடு அவரது உயர்வகைப் பட்டுச் சட்டை, நிறமற்ற ஒரு பிசுபிசுப்புத் திரவத்தில் ஊறியது போலாகி, அவருக்கு முன்னெப்போதுமில்லாதபடி வயதாகிவிட்டதான ஒரு உணர்வு ஏற்பட்டது. அவருக்கு உண்மையில் நாற்பத்திரண்டு வயது தான் ஆகியிருந்தது. கூட்டிங்ஙெனில்2 பெருமதிப்புடன் உலோகப் பொறியியல் பட்டம் பெற்றிருந்தார். அத்துடன் ஆர்வமுள்ள வாசிப்பாளராகவுமிருந்தார். அதற்காக விருது ஏதும் பெறவில்லையென்றாலும், லத்தீன் செவ்வியல் இலக்கியங்களை அவற்றின் மோசமான மொழிபெயர்ப்புகள் வழியாக, வாசித்தவராக இருந்தார். ஜெர்மானிய எழிலொளிப் பெண் ஒருவரை மணந்திருந்ததோடு, அவர் மூலம் ஐந்து குழந்தைகளையும் பெற்றிருந்தார். அவர்கள் எல்லோரும் வீட்டில் பெருமகிழ்ச்சியோடுள்ளனர். எப்படியானாலும் அடுத்த கிறித்துமசுக்கு முன் அவர் இறந்துவிடுவாரென ஒரு மூன்று மாதம் முன்பாக அவருக்குச் சொல்லப்படும் வரையில், அவரும் மகிழ்ச்சியாகவே இருந்தார்.
பொது ஊர்வலத்துக்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போது, அவருக்கென ஒதுக்கியிருந்த வீட்டில் ஒரு மணிநேரம் தனிமையில் ஓய்வுகொள்ள வசதியாக அமையுமாறு பார்த்துக்கொண்டார். உடலை ஏணையில்3 சாய்த்துக்கொள்ளும் முன், அந்தப் பாலைவனம் முழுவதிலும் உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த ரோஜாவைக் கண்ணாடித் தண்ணீர்த் தம்ளருக்குள் மிதக்கவிட்டு, அந்த நாளின் மீதிப்பகுதி முழுவதற்கும் அவருக்கு மீண்டும் மீண்டுமாகப் பரிமாறப்படவிருக்கும் வறுத்த ஆட்டிறைச்சியின் பாகங்களைத் தவிர்ப்பதற்காகவே, அவர் தன்னுடன் எடுத்து வந்திருந்த தானிய உணவினை மதிய உணவாக உண்டுமுடித்து, வலி ஏற்படும் முன்பாகவே நிவாரணம் தருமென மருத்துவர்கள் குறித்துக் கொடுத்த மாத்திரைகள் பலவற்றையும் அந்தந்த நேரத்துக்கு முன்பாகவே விழுங்கிவிட்டிருந்தார். பின்னர் மின்விசிறியை அவரது ஏணைக்கருகாக இழுத்துக்கொண்டு, தூங்கும்போது இறப்பு குறித்த நினைவினை ஏற்படுத்துகிற மனச்சிதறலைக் கட்டுப்படுத்துவதற்கான பெருமுயற்சியாக, அந்த ரோஜாவின் நிழலில் ஒரு பதினைந்து நிமிடத்துக்கு நிர்வாணமாகக் கைகால்களை நீட்டிக் கண்களை மூடிக் கிடந்தார். அவரது மருத்துவர்களைத் தவிர வேறு எவருக்கும் அவரது நேரம் குறிக்கப்பட்டுவிட்டிருந்த விவரம் தெரியாது. அவர், மீதி வாழ்க்கையையும் எந்த மாறுதலுமின்றி அப்படிக்கப்படியே வாழ்ந்து விடுவதென்றும், அந்த ரகசியத்தைத் தனக்குள்ளாகவே புதைத்துக் கொள்வதென்றும் தீர்மானித்திருந்தார்; அது, அவர் வாழ்ந்த வாழ்க்கை பெருமைக்குரியதென்பதால் அல்ல, மிகவும் கேவலமான ஒன்று என்பதால் தான்.
அன்று பிற்பகல் மூன்று மணிக்குப் பொதுமக்கள் முன் தோன்றுகையில் தன் விருப்புறுதிச் செயலாற்றலின் மீது சுய ஆளுமை கொண்டவராக, நன்கு ஓய்வெடுத்துச் சுத்தமான `மொரமொர` லினென் முழுக்காற்சட்டையும் பூப்போட்ட மேற்சட்டையும் அணிந்து வலிநிவாரண மாத்திரைகளால் மீட்டுக்கொண்ட உயிர்ப்புடன் தோன்றினார். மரண நினைப்பின் பாதிப்புகள் ஏற்படுத்தும் மனச்சிதைவுகள் மற்றும் உருச்சிதைவுகள் அவர் நினைத்ததை விட அதிகமாக எதுவுமில்லை. அதனாலேயே, பொதுக்கூட்ட மேடை மீது ஏறுகையில், நல்விருப்பம் தெரிவித்துக் கைகுலுக்க முண்டியடித்தவர்கள் மீது அவருக்குள் அலட்சியமான ஒரு வினோத எண்ணம் உருவானது. தொற்றுநீக்கியச் சிறுசிறு சதுரங்களான சூடுமிக்க வெடியுப்புப் படிகங்களை மிக அரிதாகவே கைகளில் தாங்குகிறச் செருப்பில்லாத இந்தியர்களுக்காக, வேறுநேரங்களில் போல, அவர் எந்த வருத்த உணர்வும் கொள்ளவில்லை. சரமாரிக் கைதட்டல்களைக் கோபம்மிக்க ஒரு ஒற்றைக் கையசைப்பின் மூலம் அமைதிப்படுத்திய அவர், வெப்பத்தைப் பெருமூச்சாக வெளியிட்டுக் கொண்டிருந்த கடல்மீது அசையாது பதித்த பார்வையோடு உடலசைவுகள் ஏதுமின்றி, சொற்பொழிவாற்றத் தொடங்கினார். முன்தீர்மானித்த, அவரது ஆழமான குரலில் அமைதியான நீரோட்டத்தின் ஒழுகுதன்மை இருந்ததென்றாலும், பலமுறை உருப்போட்டுத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துப் பழகிய பேச்சுத்திறன் உண்மையைச் சொல்லுந்தன்மையால் கைவரப்பெற்றதல்ல; மாறாக, மார்க்கஸ் அவ்ரேலியஸின் தீக்கதரிசனங்களின் நான்காவது நூலில், விதிவசத் தத்துவமென அவர் உரைத்துள்ளவற்றுக்கு நேர் எதிர்த்தன்மை கொண்டதாகும்.
அவரது அசையாத நம்பிக்கைகளுக்கு மாறாக, “நாம் இங்கே இயற்கையோடு போரிட்டுத் தோற்கடிப்பதற்காகக் கூடியிருக்கிறோம்.” எனத் தொடங்கிய அவர் “நமது சொந்த நாட்டிலேயே இனிமேலும் நாம் எடுப்பார் கைப்பிள்ளைகளாக, தண்ணீருக்கும் வழியற்ற மோசமான நிலையில் கடவுளும் கைவிட்ட அனாதைகளாக, நம் சொந்த மண்ணிலேயே நாடு கடத்தப்பட்டவர்களாக, அகதிகளாக இருக்கப்போவதில்லை. நாம் வேறு மாதிரியானவர்கள், பெருமக்களே, நாம் மேன்மைக்குரியவர்கள்; மகிழ்ச்சியான மக்கள்.” எனச் சொல்லி இடைநிறுத்தினார்.
அவருடைய சர்க்கஸ் வேலைகள் எல்லாவற்றிலும் ஒரேவிதமான பாவனை உத்தி இருந்தது. அவர் பேசப்பேச, இடையிடையே அவருடைய சேவகர்கள் காகிதப் பறவைகளைக் கொத்தாக அள்ளி வானவெளியில் வீச, அந்தச் செயற்கைப் பொருட்கள் உயிர் பெற்று மேடைத் தூண்களிடையே பறந்து கடலுக்குச் சென்றன. அந்தச் சமயத்தில் வேறு சிலர் பார வண்டிகளிலிருந்து கம்பளக் கூரை விரிப்புகள் மற்றும் அவற்றைத் தாங்கும் முட்டுக்கழிகளை உருவி மைதானத்தின் பின்புறமாக, அந்த வெடியுப்பு மண்ணில் நட்டு, இப்படியாக கண்ணாடிச் சாளரங்களுடன் கூடிய உண்மையான சிவப்புச் செங்கற்கட்டு வீடுகளென நம்பும்படியாக அட்டை முகப்புகளை உருவாக்கி, அதன் மூலமாக உண்மையான துன்ப வாழ்க்கைக் குடிசைகள் கண்ணில் படாதவாறு மறைத்துவிட்டனர்.
செனேட்டர், அவரது ஏமாற்று நாடகத்தினை அதிக நேரம் நீட்டிப்பதற்காக இரண்டு இலத்தீன் மேற்கோள்களைக் கூறி அவரது நீண்ட சொற்பொழிவினை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.
மழைபெய்விக்க எந்திரம், மேசை விலங்கு4களைப் பிரசவிக்கும் நகர்கருவி, வெடியுப்பு மண்ணிலும் காய்கறித் தாவரங்கள் மற்றும் சாளரத் தொட்டிகளில் கொத்தாகப் பல்வண்ண பான்சிகளையும் வளர்க்க விதவிதமான மகிழ்ச்சித் தைலங்கள் அனைத்தும் வழங்குவதாக உறுதியளித்தார். அவரது கற்பனை உலகம் கட்டிமுடிக்கப்பட்டதைக் கண்டதும், அவர் அதைநோக்கிக் கைநீட்டிச் சுட்டிக்காட்டினார். “ இப்படித்தான் நமது எதிர் காலம் இப்படித்தானிருக்கும், பெருமக்களே” என அவர் உரத்துக் கூவினார். ”பாருங்கள்! இப்படித்தான்!”
மக்கள் திரும்பிப் பார்த்தனர். வீடுகளின் பின்னால் தெரிவதாக அமைக்கப்பட்டிருந்த வண்ணத்தாள் கடற்கரை, அந்தச் செயற்கை நகரத்தின் மிக உயரமான வீட்டிற்கும் உயரத்தில் தெரிந்தது. இடம் விட்டு இடமாகக் கொண்டுசெல்லப்பட்டு, பல்வேறு இடங்களில் கண்ணைக் கவர்வதாக அமைக்கப்பட்டிருந்த அந்த அட்டை நகரம் ஒவ்வாத காலநிலையால் அரிக்கப்பட்டிருந்ததையும், அது இப்போது ஆளுநரின் ரோஜா கிராமத்தைப் போலவே தூசியும் தும்புமாக அழுக்கடைந்து கெட்டிருந்ததை செனேட்டர் மட்டுமே கவனித்தார்.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக நெல்சன் ஃபாரினா செனேட்டரை வரவேற்கப் போகாமலிருந்தான். முதல் மனைவியைப் பிடித்திழுத்து நான்காக வெட்டித்தள்ளிய அதே மருந்தாளுநக் கரங்களால் கட்டிக்கொண்ட இழைக்கப்படாத பலகை வீட்டின் தண்மைமிகுந்த வேனில் முகப்பு ஏணையில் நண்பகல் தூக்கத்தின் மிச்சமீதியாகப் புரண்டுகொண்டிருந்த அவன், செனேட்டரின் பேச்சினைக் கேட்டான்.
பேய்த்தீவிலிருந்து தப்பிவந்த அவன், ஏதுமறியாத மாக்கா5ப் பெருங்கிளிகள் ஏற்றப்பட்டிருந்த கப்பலில், பாரமாரிபோவில் கண்டுபிடித்து, அவள் மூலம் ஒரு மகளையும் பெற்றுக்கொண்ட, கடவுள் மற்றும் மதப் பழக்க வழக்கங்களில் அசட்டையான, அழகானக் கறுப்பினப் பெண்ணுடன், ஆளுநரின் ரோஜாவில் வந்திறங்கினான். பின்னர் சில காலத்திலேயே, அந்தப்பெண் இயற்கையான காரணங்களால் இறந்துவிட, அவள் முன்னவளைப் போல் துண்டு,துண்டுகளாகிக் காலிஃபிளவர் தோட்டத்துக்கு உரமாக்கப்படாமல், முழுமையாக, உள்ளூர்க் கல்லறைத் தோட்டத்தில் அவளது டச்சுப் பெயருடனேயே புதைக்கப்பட்டாள். அம்மாவின் நிறம் மற்றும் உருவ அழகோடு அப்பாவின் விரிந்த மஞ்சள் நிறக் கண்களையும் மகள் பெற்றிருக்க, உலகத்திலேயே மிகமிக அழகு மிக்க பெண் ஒருத்தியை வளர்த்துக்கொண்டிருப்பதாக, அவன் கற்பனையில் மிதக்க, அது வசதியான ஒரு நல்ல காரணமாக அமைந்தது.
செனேட்டர் சான்ச்செஸின் முதல் வாக்குச் சேகரிப்புப் பரப்புரையின் போது, அவரைச் சந்தித்ததிலிருந்தே, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வசதியாகப் போலி அடையாள அட்டை ஒன்றினைப் பெற உதவுமாறு நெல்சன் ஃபாரினா, அவரைக் கேட்டுக்கொண்டிருந்தான். செனேட்டர் மிகுந்த நட்பும் நயமுமாக, ஆனால் உறுதியாக மறுத்துவிட்டார். ஆனாலும் நெல்சன் ஃபாரினா விட்டுவிடாமல் பல ஆண்டுகளாகவும் அவரைச் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் அவனது கோரிக்கையை வெவ்வேறு காரணங்களுடன் முன்வைத்துக்கொண்டேதானிருந்தான். ஆனால், இம்முறை அவன், கொதிக்கும் குடிசைக்குள் உயிரோடு அவியுமாறு சபிக்கப்பட்ட கடற்கொள்ளைக்கார ஏணையில் படுத்துக்கிடந்தான்.
அதிலும் கடைசிக் கைதட்டல்களை, அவன் கேட்டு, வேலிப்பலகைகளுக்கும் மேலாகத் தலையை உயர்த்திப் பார்க்கையில், ஏமாற்று நகரத்தின் பின்பக்கத்தை, கட்டடங்களுக்கான முட்டுக்கழிகள், மரச் சட்டங்கள், மறைவாக அமர்ந்து கடற்கரைத் தாளினை அசைத்து அசைத்து முன்தள்ளிக்கொண்டிருந்த வித்தைக்காரர்களைக் கண்டான். அவன் வெறுப்பேதுமில்லாமலேயே காறித் துப்பினான்.
“அடடா” ”இப்படித்தான் கறுப்பர்களின் அரசியல்” என பிரெஞ்சு மொழியில் கூறிக்கொண்டான்.
சொற்பொழிவுக்குப் பிறகு, வழக்கம்போல் செனேட்டர், இசைக்குழு மற்றும் மேடைப் பரிவாரங்களோடு கிராமத்துத் தெருக்கள் ஊடாக ஊர்வலமாக நடந்துவருகையில், அவரவர் பிரச்னைகளை அவரிடம் கூறுவதற்காக, மக்கள் அவரை. முற்றுகையிட்டனர். செனேட்டர் அவர்கள் கூறுவதைத் இன்முகத்துடன் நல்லபடியாகக் கேட்டதோடு, பெரிய அளவிலான எந்த உதவியும் செய்யாமலேயே அவர்கள் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த ஏதாவது ஒரு வழியை எப்போதுமே கண்டுகொண்டார். ஆறு குழந்தைகளுடன் குடிசையின் கூரை மேல் ஏறி நின்ற ஒரு பெண் அத்தனைக் கூச்சல் மற்றும் வாணவேடிக்கைகளுக்கு நடுவிலும் அவள் சொல்வதைக் கேட்குமாறு கவனம் ஈர்த்தாள்.
”நானொன்றும் பெரிதாகக் கேட்கவில்லை, செனேட்டர்!” எனத் தொடங்கிய அவள், “தூக்கில் தொங்கியவன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டுவர, ஒரு கழுதை வேண்டும், அவ்வளவுதான்!” என முடித்தாள்.
ஒல்லிக்குச்சிகளான ஆறு குழந்தைகள் மீதும் கண்களை ஓடவிட்ட செனேட்டர், ‘உன் வீட்டுக்காரனுக்கு என்னாச்சு?” எனக் கேட்டார்.
”அரூபாத் தீவுக்கு அதிர்ஷ்டத்தைத் தேடிப் போனான், அவன்,” எனக் கேலியாகச் சொன்ன, அவள், “ அவன், அங்கே என்ன பார்த்தான் என்றால், வாயெல்லாம் வைரம் பதித்த பற்கள் கொண்ட ஒரு வெளிநாட்டுப் பெண்ணைத் தான்.”
அதைக் கேட்டதும் குபீரென ஒரு சிரிப்பு அலை எழுந்தது.
”சரி,” என அழுத்தமாகச் சொன்ன செனேட்டர், உடனடித் தீர்வாக, “நீ கேட்ட கழுதை உனக்குக் கிடைக்கும்.” என்றார்.
சிறிது நேரத்திலேயே அவரது உதவியாளர் ஒருவர் நல்ல உடற்கட்டுள்ள கழுதை ஒன்றை அந்தப் பெண்ணின் வீட்டுக்குக் கொண்டுவந்து நிறுத்தினார். அந்தக் கழுதை, செனேட்டரின் கொடை என்பதை எவரும் மறந்துவிட முடியாதபடி, அதன் பிட்டத்தில் அழியாத மையினால் பரப்புரை கோஷம் ஒன்று எழுதியிருந்தது. அந்தக் குறுகிய தெருவில் அவர் நடந்துசென்ற தூரம் முழுவதிலும் அவரது தாராளத்தைக் காட்டும் வேறு சில சிறுசிறு உதவிகளைச் செய்தார்; செனேட்டரின் நடைவலத்தைக் காண்பதற்கு ஏதுவாக, படுக்கையை இழுத்து வாசலுக்கருகே கிடத்தியிருந்த நோயாளி மனிதரின் வாயில் சிறிதளவு மருந்தினைக்கூட செனேட்டர் ஊற்றினார். கடைசி மூலையில், நெல்சன் ஃபாரினா அவரது ஏணைக்குள்ளிருந்து சாம்பல் படிந்தது போல் வெளுத்துச் சிடுசிடுத்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை, வேலிப் பலகைகள் ஊடாகக் கண்டதும் செனேட்டர், அவராகவே அவனிடம் நலம் விசாரித்தார்; ஆனால், அவர் குரலில் நெருக்கம், நட்பு ஏதுமில்லை.
“ஹலோ, எப்படி இருக்கிறீர்கள்?”
நெல்சன் ஃபாரினா, ஏணையில் புரண்டு, அவனது சோகத் தோற்றத்தினை மேலுமாக வெளிப்படுத்தினான். ”உனக்குத் தெரியாததா என் கதை,” எனப் பிரெஞ்சில் கூறினான்.
நலம் விசாரிப்பினைக் கேட்ட அவனது மகள் வாசலுக்கு வந்தாள்; மலிவான, நிறம் மங்கி வெளிறிப்போன ஒரு குவாஜிரோ6 இந்திய ஆடை சுற்றியிருந்த அவள் தலையில் அழகுக்காக வண்ண வண்ண அம்புகள் செருகி, வெயில் பாதுகாப்பாக முகச்சாயம் பூசியிருந்தது; ஆனால், அப்படியான கோர நிலையிலும் இந்த உலகத்தில் அவளைப் போல் அழகாக வேறெந்தப் பெண்ணும் இருக்கமுடியாதென்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாகத் தானிருந்தாள்.
செனேட்டர் வாய்பிளந்தார். “அய்யோ, நான் செத்தேன்!” என, வியப்புப் பெருமூச்சிட்டார். “கடவுள் அற்புதத்திலும் அற்புதங்களை விளைவிக்கிறார்!”
அன்று இரவு நெல்சன் ஃபாரினா அவனது மகளை மிகமிக அழகான ஆடை அணிவித்து அவளை, செனேட்டரிடம் அனுப்பினான். செனேட்டர் தங்கியிருந்த வீட்டின் முன் தூக்க மயக்கத்திலும் வெக்கை தாங்காமல் தள்ளாடிக் கொண்டிருந்த துப்பாக்கி தாங்கிய இரு காவலர்களும் முன் கூடத்திலிருந்த ஒரே நாற்காலியில் அமர்ந்து காத்திருக்கச் சொன்னார்கள்.
செனேட்டர், அவரது சொற்பொழிவின் போது வெளியிட்ட விஷயங்களை மீண்டும் காய்ச்சி ஊற்றுவதற்காக ரோஜாவூரின் முக்கிய நபர்களை அழைத்து வந்து அவர்களோடு அடுத்த அறையில் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் எல்லோரும் அந்தப் பாலைவனத்தின் மற்ற கிராமங்களில் அவர் சந்தித்த நபர்களைப் போலவே தோன்றியதில், செனேட்டரே அலுத்துச் சலித்து, சுற்றிச்சுற்றி முடிவற்று நீண்ட அந்த இரவு நாடகத்தில் சோர்ந்துபோனார். அவரது சட்டை வியர்வையில் ஊறி நனைந்துவிட, அதை அந்த அறையின் அதிகமான வெக்கையில் ஒரு மாட்டு ஈயைப் போல கிர்,கிர்ரென்று சத்தமிட்டுக்கொண்டிருந்த மின்விசிறியின் சூடான காற்று மூலம் அவர் உடம்போடேயே உலர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
“நாம் என்னமோ, காகிதப்பறவைகளைச் சாப்பிடமுடியாதுதான்.” என்றார், அவர். ” உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் அந்த நாளில் இந்த வெள்ளாட்டுப் புழுக்கைக்குவியல் மீது மரங்களும் பூக்களும் இருக்கும். அந்த நாளில் நீர் ஊற்றுகள் முழுவதும் புழுபூச்சிகளுக்குப் பதிலாக வரால் மீன்கள் துள்ளும். அன்று நீங்களோ, நானோ இங்கே செய்வதற்கு எந்த வேலையுமே இருக்கப்போவதில்லை. இப்போது நான் தெளிவாக, விளக்கிவிட்டேனா?”
யாருமே பதில் பேசவில்லை. பேசிக்கொண்டிருக்கும்போதே, செனேட்டர் நாட்காட்டியிலிருந்து ஒரு தாளைக் கிழித்து, அதைத் தன் கைகளாலேயே காகிதப் பட்டாம் பூச்சியாக அழகுபடுத்தினார். எந்த இலக்கும் இல்லாமல் அதை மின்விசிறிக் காற்றில் எறிய, அந்தப் பட்டாம் பூச்சி அறை முழுவதுமாகச் சுற்றிப் பின்னர் பாதி திறந்த கதவின் இடைவெளி வழியாக வெளியே சென்றது. மரண நினைவின் காரணமான ஓரளவு கட்டுப்பாட்டுடன், செனேட்டர் பேசிக்கொண்டே போனார்.
“அதனால், நான் உங்களுக்கு மீண்டும் மீண்டுமாகச் சொல்ல வேண்டியதில்லை; ஏனென்றால் உங்களுக்கே நன்றாகத் தெரியும்; நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதென்பது என்னைவிடவும் உங்களுக்குத் தான் லாபம். ஏனென்றால், இந்தக் கெட்டுக்கிடைத் தண்ணீரும் இந்திய வியர்வையுமாக நான் சலித்துப் போனேன். ஆனால் நீங்களோ அதைக் கொண்டு சம்பாதிக்கிறீர்கள். அந்த சம்பாத்தியத்தில் தானே வாழ்க்கையே ஓட்டுகிறீர்கள்.”
காகிதப் பட்டாம் பூச்சி வெளியே வந்ததை லாரா ஃபாரினா பார்த்தாள். அவள் மட்டுமே பார்த்தாள்; அந்த முன்கூடத்திலிருந்த இரண்டு காவலர்களும் துப்பாக்கியை அணைத்தவாறே படிக்கட்டுகளில் அமர்ந்து தூங்கினர். ஒருசில பல்டிகளுக்குப் பின் அந்தப் பெரியக் கல்லச்சுப் பட்டாம்பூச்சி முழுவதுமாக விரியத் திறந்து சுவரில் தட்டையாக அமர்ந்ததோடு அங்கேயே ஒட்டிக்கொண்டது. லாரா ஃபாரினா அதை நகத்தால் கிளப்பி எடுக்க முயற்சித்தாள். அடுத்த அறையில் எழுந்த கைதட்டல் ஒலியால் விழித்த காவலரில் ஒருவர் அவளது வீண் முயற்சியைக் கவனித்தார்.
“அது வராது. அது சுவரில் தீட்டிய வண்ணம்.” என்றார்.
கூட்டம் முடிந்து ஆட்கள் அறையைவிட்டு வெளியே வரத் தொடங்கியதும் அவள் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள். அறையின் வாசலில் தாழ்ப்பாள் மீது கைவைத்தவாறு நின்ற செனேட்டர், கூடம் காலியான போது தான் லாரா நிற்பதைக் கவனித்தார்.
“இங்கே என்ன செய்கிறாய்?”
“அப்பா சொல்லச் சொன்னாங்க.” எனப் பிரெஞ்சில் கூறினாள்.
செனேட்டர் புரிந்துகொண்டார். தூங்கிக்கொண்டிருந்த காவலர்களைக் கூர்ந்து பார்த்தாதுவிட்டுப் பின்னர், லாராவைக் கூர்ந்து நோக்கினார். அவளது அசாதாரணமான அழகு அவரது வலியை விடவும் அதிகமாக நினைப்பிலேறித் துன்புறுத்தவே, மரணம் தான் அவருக்கான முடிவை எடுக்கிறதெனத் தீர்மானித்தார்.
அவளிடம், “உள்ளே வா,” என்றார்.
லாரா ஃபாரினா அறையின் வாயிற்படிக்கு வந்து நின்றதும் அப்படியே பேச்சிழந்து சிலையாகிப் போனாள் : ஆயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் காற்றில் மிதந்து பட்டாம் பூச்சிகளாகச் சிறகடித்தன. செனேட்டர் மின்விசிறியை நிறுத்தியதும், காற்றில்லாமல் அந்தத் தாள்கள் அப்படிக்கப்படியே அறைகலன்களின் மீது வீழ்ந்து படிந்தன.
“பார்த்தாயா” எனச் சிரித்துக்கொண்டே, “ மலம் கூடப் பறக்கும்.” என்றார்.
லாரா ஃபாரினா அங்கிருந்த பள்ளிப்பையன் ஸ்டூல் மீது உட்கார்ந்தாள். அவள் மேனி வழவழப்பாக, ஆனால் திடமாக, கச்சா எண்ணெய் போல அதன் அடர்த்தியோடு அதே நிறத்திலிருந்தது. அவள் தலைமுடி இளம் பெண் குதிரையின் பிடரி மயிர் போலவும் அவளது பெரிய கண்கள் ஒளியை மிஞ்சும் பளபளப்புடனுமிருந்தன. செனேட்டர் அவள் பார்வையின் வழியே பயணித்துக் கடைசியில் அது ரோஜாவின் மீது படிந்திருப்பதைக் கண்டார். அந்த ரோஜா வெடியுப்பினால் வதங்கிப்போயிருந்தது.
“அது ரோஜா” என்றார், அவர். .
“ஆம்.” என்றவள், ஒருவித மருட்சியுடன், “ரியோஹாச்சா7 வில் அவை எப்படியிருக்குமெனப் படித்திருக்கிறேன்.”
இராணுவக் கட்டில் ஒன்றில் அமர்ந்த செனேட்டர், ரோஜாக்களைப் பற்றிப் பேசிக்கொண்டே அவரது சட்டைப் பொத்தான்களைக் கழற்றினார். அவரது மார்புக்குள் இதயம் இருக்கும் இடத்தின் மேலாக கோர்செய்ர்8 இதயம் துளைக்கும் அன்பு ஒன்று பச்சைகுத்தியிருந்தது. வியர்வையில் நனைந்த சட்டையைத் தரையிலெறிந்த அவர் லாராவிடம் அவரது புதையரணக் காலணிகளைக் கழற்ற உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
அவள் கட்டிலைப் பார்த்தவாறு குனிந்தாள். சிந்தனையிலிருந்து மீளாமலேயே, அவளைக் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்த அவர், அவள் காலணிக்கயிறுகளை அவிழ்க்கும்போது அவற்றில் எந்த ஒன்று அந்த மோதலில் அவக்கேட்டில் போய் முடியப் போகிறதோ என எண்ணினார்.
“நீ இப்போதும் ஒரு குழந்தைதான், “ என்றார், அவர்.
’’நீங்கள் நம்பவில்லையா?” என்ற அவள், ஏப்ரலில் எனக்கு பத்தொன்பது வந்துவிடும்.” என்றாள்.
செனேட்டர் ஆர்வமானார்.
”என்ன தேதி?”
“பதினொன்று.” என்றாள், அவள்.
செனேட்டர் சிறிது நல்லதாக உணர்ந்தார். `நம் இரண்டுபேருமே மேஷம்` என்றவர், சிரித்துக்கொண்டே, “அது தனிமையின் ராசி.” என்றார்.
லாரா அதில் கவனம் செலுத்தவில்லை; என்னவெனில் அவளுக்கு அந்தக் காலணிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. செனேட்டருக்கு, அவருடைய பிரச்னையாக, லாராவை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏனெனில் அவருக்கு இதுபோலத் திடீர் காதல் விவகாரங்களெல்லாம் பழக்கமில்லை. அதுவுமில்லாமல் தற்போது கையிலிருப்பதன் தொடக்கம் வெறுப்பில் தோன்றியதென்பது அவருக்குப் புரிந்தது. சிந்திப்பதற்குச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாமென்றே, லாரா ஃபாரினாவைத் தன் கால் முட்டுகளுக்கிடையே இறுக்கமாகப் பிடித்து, அவளது இடுப்பினை அணைத்து, அப்படியே கட்டிலின் மீது மல்லாக்கச் சாய்ந்தார். அப்போதுதான் அவள் அவளது சட்டைக்குக் கீழே எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருந்தாளென்பதை உணர்ந்தார். அவளது உடல் காட்டு விலங்கின் முரட்டு வாசமொன்றை வெளிப்படுத்தியது; ஆனால், அவளது இதயம் பயத்தில் படபடக்க, அவளது மேனி கண்ணாடி வியர்வையால் நசநசத்தது.
“ என்னை யாருமே காதலிப்பதில்லை.” என அவர் பெருமூச்சிட்டார்.
லாரா ஃபாரினா ஏதோ சொல்ல முயன்றாள், ஆனால் வெறுமே மூச்சுவிட மட்டுமே அவளால் முடிந்தது. அவளுக்கு உதவுவதாக, அவர் அவளைத் தன் அருகாகச் சாய்த்துக்கிடத்திவிட்டு, விளக்கினை அணைக்க, அந்த அறை ரோஜாவின் நிழலுக்குள் மூழ்கியது. அவள் விதியின் கரங்களில் தன்னை ஒப்புக்கொடுத்தாள். செனேட்டர் அவளை, அவளது உடலுக்குள்ளாகவே தேட, அவரது கரங்களால் மெல்லத் தடவி, அதனை வெறுமே தொட்டார்; ஆனால், அவள் எந்த இடத்தில் கிடைப்பாளென அவர் எதிர்பார்த்தாரோ, அங்கே வழியை அடைத்துக்கொண்டு இரும்பு போல ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.
“அதற்குள்ளே போய், நீ என்ன வைத்திருக்கிறாய்?’ய எனக் கேட்டார், அவர்.
”பட்டைப் பூட்டு.” என்றாள், அவள்.
”என்ன எழவு!” எனக் கோபமாகக் கேட்டவர், அதற்கான பதிலை அவரே நன்கறிவாரென்றாலும், மீண்டும் கேட்டார், “ சாவி எங்கே?”
லாரா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
‘’அப்பா தான் வைத்திருக்கிறார்.” என அவள் பதில் சொன்னாள். “ அவரது நிலைமையைச் சரிசெய்வதாக எழுத்து மூலமான உறுதிமொழி ஒன்றை அவரது ஆட்களில் ஒருவரிடம் கொடுத்தனுப்பி, சாவியைப் பெற்றுக்கொள்ளுமாறு உங்களிடம் சொல்லச் சொன்னார்.”
செனேட்டர் அதிகப் பதட்டமானார். “தேவடியாத் தவளைப்பயல்,” என வெறுப்பின் உச்சத்தில் முணுமுணுத்தார். பின்னர் தன்னைச் சிறிது தளர்த்திக்கொள்வதற்காக கண்களை மூடிய அவர் இருளுக்குள்ளாகவே தனக்குள் மூழ்கினார். நினைவு வைத்துக்கொள், அவர் எண்ணிப்பார்த்தார், நீயோ அல்லது யாராக இருந்தாலும் மரணமடைவதற்கு நேரம் காலமில்லை, உன்பெயர் கூடத் தெரியாமல் போவதற்கும் நேரம், காலம் இல்லை.
நடுக்கம் குறையட்டுமெனக் காத்திருந்தார்.
பின்னர் அவர், “ எனக்கு, ஒரு விஷயம் சொல்லு. என்னைப்பற்றி என்ன கேள்விப்பட்டிருக்கிறாய்?” என்றார்.
”கடவுள் மேல் சத்தியமான உண்மையா, உங்களுக்கு வேண்டும்?”
”ஆம். கடவுள் மேல் சத்தியமான உண்மை.”
“நல்லது,” என நிறுத்திய லாரா ஃபாரினா, பின்னர், “ நீங்கள் மற்றவர்களை விட மிக மோசமானவர்; ஏனென்றால் நீங்கள் வேறுமாதிரி ஆள்.” எனக் கூறினாள்.
செனேட்டர் ஒன்றும் குழம்பிவிடவில்லை. நீண்ட நேரம் கண் மூடி அமைதியாக இருந்த அவர், கண்விழித்தபோது, அவரது பழைய இயல்புகள் அனைத்தும் மீளக் கைவரப்பெற்றவராகத் தோன்றினார்.
’ஆஹ், எப்படியான ஒரு இழவு,” அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அவளிடம், “ பொட்ட நாய்க்குப் பிறந்த உன் அப்பனிடம், அவன் நிலைமையை, நான் சரியாக்குவேனென்று போய்ச் சொல்.” என்றார்.
”வேண்டுமானால், நானே போய்ச் சாவியை வாங்கி வரட்டுமா?” என்றாள், லாரா ஃபாரினா.
செனேட்டர் அவளைக் கைகளில் பற்றினார்.
”சாவியை மறந்து, என்னுடன் சிறிது நேரம் தூங்கு. தனிமையிலிருக்கும்போது யாராவது ஒருவர் உடனிருந்தால் நல்லது.” என்றார், அவர்.
பின்னர், அவள் ரோஜாவை விட்டுக் கண்களை அகற்றாமலேயே அவரது தலையை அவளது தோளில் சார்த்திப் பிடித்தாள். செனேட்டர் அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு, அவளது காட்டு விலங்கு அக்குளில் முகம் புதைத்துத், திகிலுக்குள் மூழ்கினார். ஆறு மாதங்கள், பதினொரு நாட்களுக்குப் பின் அதே நிலையில் லாரா ஃபாரினாவுடனான தொடர்பு குறித்த பொதுவிவகார ஊழலினால் பெயர்கெட்டு, மதிப்பிழந்து, இறுதியில் சாகும்போது அவள் இல்லாமல் சாகிறோமே என்ற வெறியில் அவர் செத்துப் போனார்.
***
குறிப்புகள்
ஆளுநரின் ரோஜா – Rosal del Virrey – கிராமத்தின் பெயர்
கூட்டிங்ஙென் – Gootingen, ஜெர்மனியில் 1737 இல் தோற்றுவிக்கப்பட்ட புகழ்பெற்ற ஆய்வுப் பல்கலைக்கழகம்.
ஏணை – hammock, உறங்குவதற்காக அமைக்கும் தொட்டில் அமைப்பு.
மேசை விலங்குகள் – Table animals for playing. விளையாட்டுக்கான பொம்மை விலங்குகள்.
மாக்கா – Macaws கிளி வகையில் பல்நிறப் பெருங்கிளிகள்
குவாஜிரா – Guajira வெனிசுலா – கொலம்பிய எல்லையிலுள்ள தீபகற்பம் குவாஜிரா தீபகற்பம் எனவும் அப்பகுதியின் வாயூ பூர்வகுடிகள் குவாஜிரா இந்தியரென்றும் அழைக்கப்படுகின்றனர்.
ரியோஹாச்சா – Riohacha கொலம்பியாவில், ராஞ்சீரியா நதி கரீபியன் கடலில் கலக்கும் முகத்துவாரத்திலுள்ள நகரம்.
கோர்செய்ர் – Corsair கலிபோர்னியக் கணினி நிறுவனம்.

மலைகள் 161 ஆம் இதழ் நாள் 03,01.2019 இல் வெளியிடப்பட்டது. 

 .

No comments:

Post a Comment