Wednesday, 6 January 2016

ஜப்பானியச் சிறுகதை - வேட்டைக்கத்தி, Hunting Knife ஹாருகி முரகாமி

வேட்டைக்கத்தி Hunting Knife

ஜப்பான் : ஹாருகி முரகாமி Haruki Murakami 

ஆங்கிலம் : பிலிப் கேப்ரியேல் Philip Gabriel

தமிழில் ச.ஆறுமுகம்

images (4)

இரண்டு தெப்பங்களும் கரையோரக் கடலில் இரட்டைத்தீவுகளைப்போல நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. கரையிலிருந்து நீச்சலில் எட்டிவிடும் தூரத்துக்குள்ளேயே, மிகச் சரியாக ஐம்பது கைவீச்சில் ஒன்றும் அதிலிருந்து ஒரு முப்பது வீச்சில் மற்றொன்றுமாக மிதந்தன. பதினான்கு அடி சதுரம் இருக்கும். ஒவ்வொன்றிலும் உலோக ஏணி; தளத்தை மூடி செயற்கைப் புல் விரிப்பு: அந்த இடத்தில் ஆழம் ஒரு பத்துப் பன்னிரண்டு அடி இருக்கும். நீங்கள் மேலிருந்து தெப்பத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலி வழியாக நோக்கினால் அடியாழத்தில் பிணைக்கப்பட்டிருக்கும் காங்கிரீட் நங்கூரத்தைச் சென்றடைய முடியும். அப்படியொரு தெள்ளத் தெளிவான தண்ணீர். நீச்சல் பகுதியைச் சுற்றி ஒரு பவளப் பாறை  படர்ந்து கிடந்தது; அங்கு அலைகள் ஏதும் அநேகமாக இல்லையென்றே கூறலாம். அதனாலேயே தெப்பங்கள் தண்ணீரில் சிறிதாக மட்டும் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தன. தொடர்ந்து நாளும் பொழுதுமாகக் கடும் வெயில் அடிக்கும் அந்த இடத்தில் நங்கூரமிடப்பட்டதில் அவை வெறுப்பாகித் தலைவிதியே என்று மிதப்பது போல் தோன்றியது.
அங்கே நின்று கரையைத் திரும்பிப் பார்ப்பது எனக்குப் பிடித்திருந்தது. நீண்ட வெண்மணல் கரை, சிவப்பான உயிர்காப்புக் கோபுரம், பச்சை வரிசையாகத் தென்னைமரங்கள் என, அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. அது அஞ்சல் அட்டையில் பொறிக்கப்பட்ட படமாகக் கிட்டத்தட்ட முழுமைபெற்ற ஒரு ஓவியமென்றும் சொல்லலாம். வலதுபக்கம் கடற்கரை முடிகின்ற இடத்திலிருந்து கரடுமுரடான பாறைகளின் வரிசையாகத் தொடங்கும் பாதை, நானும் என் மனைவியும் தங்கியிருந்த விடுதிக் குடியிருப்புகளுக்குச் செல்லும். அது ஜூன் மாதக் கடைசி; சுற்றுலாப் பருவத்துக்கு இன்னும் நாட்கள் இருந்தன. அதனாலேயே கடற்கரையிலோ அல்லது விடுதியிலோ பயணிகள் கூட்டம் அதிகமாக இல்லை.
அருகிலேயே அமெரிக்க இராணுவ தளம் ஒன்று  இருந்தது. அதற்குச் செல்லும் வானூர்திகள் பறக்கும் பாதைக்கு வலதுபக்கமாகத் தெப்பங்கள் கிடந்தன. விமானங்கள் கரைக்கு மேலாகத் தோன்றி இரு தெப்பங்களுக்கும் நடுவிலான வெளியை இரண்டாகப் பிளந்து, திடீர்ச் செங்குத்தாகத் தென்னைமரங்களுக்கு மேல் உயர்ந்து பறந்து, பின்னர் மறைந்துபோகும். விமானிகளின் முகத்தில் உணர்ச்சி வெளிப்பாடுகளை நீங்கள் காணுமளவுக்கு அவைத் தாழ்ந்து பறக்கும். தலைக்கு மேலே ஹெலிகாப்டர்கள் திடீர் திடீரெனப் பாய்ந்து போவதைத் தவிர, இப்போதும் கடற்கரை தூங்கிவழிந்துகொண்டு, விடுமுறைக் காலத்தில் தொந்தரவின்றி இருப்பதற்கு மிகப்பொருத்தமான, அமைதியான இடமாக இருந்தது.
குடியிருப்புகள் அனைத்தும் இரட்டை மாடி, வெள்ளைக் கட்டிடங்களாக, ஒவ்வொன்றும் நான்காகப் பிரிக்கப்பட்டு, இரண்டு முதல்தளத்திலும் ,இரண்டு மேல்தளத்திலுமாக இருந்தன. எங்கள் அறை முதல் தளத்தில் பெருங்கடலைப் பார்க்கிற மாதிரியாக இருந்தது. எங்கள் சன்னலை ஒட்டி வெளிப்புறம் வலதுபக்கத்தில் வெள்ளை ப்ளுமேரியா பூமரம். அதற்கப்பால் அழகாகச் செதுக்கப்பட்ட புல்வெளியுடன் கூடிய ஒரு தோட்டம். காலையிலும் இரவின் தொடக்கத்திலும் புல்வெளியில் தண்ணீர் தெளிப்பான்கள் மயக்கக் குரலில் ஒலித்தன. தோட்டம் முடிந்ததும் ஒரு நீச்சல் குளம். அதைத் தாண்டி பெரிய பெரிய மடல்களுடன் பருவகாலக் காற்றுகளில் மெல்லத் தலையசைக்கும் உயரமான தென்னைமரங்களின் வரிசையும் இருந்தது.
நாங்கள் இருந்த அறைக்கு அடுத்த அறையில் அம்மாவும் மகனுமாக அமெரிக்கர்கள் இருவர் தங்கியிருந்தனர். நாங்கள் வருவதற்கு நெடுநாட்களுக்கு முன்பே அவர்கள் அங்கு குடிவந்துவிட்டதாகத் தோன்றியது. அம்மாவுக்கு அறுபது வயதிருக்கலாம். மகன் எங்கள் வயது நெருக்கத்தில், இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது இருக்கும். அவர்கள் இருவரும், நான் இதுவரை பார்த்திருந்த அம்மா,மகன்களை விட  அச்சுஅசலாக ஒரே ஜாடை – ஒரே மாதிரி நீளமாக ஒடுங்கிய முகம், அகன்ற நெற்றி, இறுக்கமாக அமைந்த உதடுகள். அம்மா உயரமாக, நிமிர்ந்த உடம்பு. அவரது நடை, உடை பாவனைகள் எல்லாமே விழிப்பும் சுறுசுறுப்புமாக இருந்தன. மகனும் உயரமாகத்தான் தோன்றினாலும், அவன் சக்கர நாற்காலியிலேயே சிறைப்பட்டிருப்பதால், அதை நீங்கள் உண்மையிலேயே நிச்சயமாகச் சொல்ல முடியாது. அவன் அம்மா எப்போதும் சக்கர நாற்காலியின் பின்னால் அதைத் தள்ளிக்கொண்டே இருப்பதைத்தான் காணமுடிந்தது.
அவர்களின் அறை ஒரு அருங்காட்சியகம்  போல அமைதியாகத் தோன்றியது. சொன்னால் நம்பஇயலாத அளவுக்கு, அவர்கள் மவுனமாக இருந்தார்கள். அவர்கள் அறையிலிருந்து இருமுறை இசையைக் கேட்டிருக்கிறேன் – முதல் முறை ஐந்து கிளாரினெட்டுகளின் இசைக்கோர்ப்பு ஒன்று, இரண்டாவது ஏதோ ஒரு குழுவின் சேர்ந்திசை. அதை என்னால் இன்னதென்று கண்டுகொள்ள முடியவில்லை. ரிச்சர்ட் ஸ்ட்ராஸ் என்பது என் யூகம். அதைத்தவிர வேறு எந்தச் சப்தமும் இல்லை. அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை; குளிரூட்டுக் கருவியைக் கூடப் பயன்படுத்துவதில்லை. பதிலாகக் கடற்காற்றின் குளிர்ந்த தென்றல் உள்ளே வருமாறு அறையின் முன் கதவைத் திறந்தே வைத்திருந்தனர்; ஆனாலும் அவர்கள் பேசிக்கொள்வதை நான் கேட்டதேயில்லை. அவர்களுக்குள் ஏதாவது பேசிக்கொண்டதும் – சிலவேளைகளில் அவர்கள் பேசவேண்டியிருந்தது – கிட்டத்தட்ட ரகசியத்தைப் பரிமாறிக் கொள்வது போலத்தான் இருந்திருக்க வேண்டும். இது என்னையும் என் மனைவியையும் உறுத்தியிருக்க வேண்டும்; அதனால்தான் அறைக்குள் எங்களுக்குள் பேசும்போதும் தாழ்ந்த குரலில் பேசிக்கொள்வதை நாங்கள் உணர்ந்தோம்.
உணவு விடுதியில் அல்லது முன் கூடத்தில் அல்லது தோட்ட நடைபாதைகளில் ஒன்றில் நாங்கள் அம்மாவையும் மகனையும் அடிக்கடி எதிர்கொண்டோம். ஹோட்டல் சுகமான, இதமான இடமாக, ஆனால், சிறியதாக இருந்தது. அதனால்தான் நாம் விரும்புகிறோமோ இல்லையோ, மற்றவர் வழிகளின் குறுக்காக நாம் செல்ல வேண்டியிருக்கிறதென நான் யூகித்தேன். நாங்கள் கடந்து செல்லும்போது ஒருவரையொருவர் பார்த்துத் தலையசைத்துக் கொண்டோம். அம்மாவும் மகனும் தலையசைத்து முகமன் கூறுவது வேறுவேறு மாதிரி இருந்தது. அம்மா அழுத்தமாக, நேருக்கு நேராக, உடன்பாடாகத் தலையசைத்தார்கள்; மகனோ வெறுமனே தலையைச் சாய்த்தார். இரண்டு வேறுபட்ட தலையசைப்புகளும் ஒரே விஷயத்தைத்தான் தெரிவித்தன. இரண்டு முகமன்களும் அங்கேயே தொடங்கி அங்கேயே முடிந்துவிடுகின்றன. அதற்கு மேல் எதுவுமில்லை. நாங்கள் அவர்களோடு பேச முயற்சித்ததே இல்லை. நானும் என் மனைவியும் எங்களுக்குள் பேசிக்கொள்ள — எங்களுக்கு வீடு கிடைத்ததும் புதிய அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு மாறிச் செல்வதா? இல்லையா? எங்களுக்கான வேலைகள் குறித்து என்ன செய்ய வேண்டும்? குழந்தைகள் பெற்றுக்கொள்வதா? இல்லையா? – எனத் தலைக்கு மேல் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. அது எங்களுடைய இருபதுகளின் இறுதியில் கடைசி கோடைப் பருவமாக இருந்தது.
காலை உணவு முடிந்ததும், அம்மாவும் மகனும் எப்போதும் முன் கூடத்தில் அமர்ந்து செய்தித்தாள்களை, இருவரும் ஒரே மாதிரியாக முதல் பக்கத்திலிருந்து பக்கம் பக்கமாக மேலிருந்து கீழ் வரை ஒரு வரி விடாமல், எல்லாவற்றையும் முழுதாகப் படிக்க யார் அதிக நேரம் எடுக்கிறார்கள் என இருவரும் கடுமையான போட்டி வைத்துக்கொண்டது போலப் படித்தனர். சில நாட்களில் அது செய்தித்தாட்களாக இருக்காது; கனத்த அட்டை கொண்ட தடிமனான புத்தகங்களாக இருக்கும். அவர்கள் அம்மாவும் மகனும் என்பதை விட ஒருவருக்கொருவர் மிக நீண்ட காலமாகவே சலிப்படைந்துபோன முதிய தம்பதியர் போலிருந்தனர்.
ஒவ்வொரு நாள் காலையும் பத்து மணிக்கு  நானும் என் மனைவியும் கடற்கரையில்  ஓய்வெடுக்க ஒரு நடை செல்வோம். நாங்கள் வெப்பத்தடுப்பு ஆடைகளைச் சுற்றிக்கொண்டு, எங்கள் பாய்களை மணலில் விரித்துப் பரப்புவோம். என் மனைவி, ‘’ காற்றோடு போனது’’ என்ற காகித அட்டைப் புத்தகத்துக்குள் உழுதுகொண்டிருக்கையில் நான் வாக்மேனில் ஸ்டோன்ஸ் அல்லது மார்வின் கயே கேட்பேன். அந்த நூலிலிருந்து வாழ்க்கை பற்றி அதிகம் கற்றுக்கொண்டதாக, அவள் பெருமை கொண்டாடினாள். நான் அதைப் படித்ததே இல்லை; அதனால் அவள் எந்த அர்த்தத்தில் சொல்கிறாளென எனக்கு எந்தச் சிந்தனையும் இல்லை. தினமும் கதிரவன் ஊருக்குள்ளிருந்து முகிழ்த்து வருவான்; தெப்பங்களுக்கு நடுவேயான பாதையைக் கண்டுபிடித்து மெல்லப் பரந்து – ஹெலிகாப்டர்களுக்கு எதிரான திசையில் – கடந்து, பின் தொடுவானத்தின் அடியில் மிக மிக நிதானமாக மூழ்கிப் போவான்.
ஒவ்வொரு நாளும் பிற்பகலில் சரியாக இரண்டு மணிக்கு, அம்மாவும் மகனும் கடற்கரையில் தோன்றுவார்கள். அம்மா எப்போதும் கோடுகள், பூக்கள் இல்லாத மென்மை நிற உடையும் வெள்ளை நிறத்தில் அகன்ற விளிம்புள்ள நார்த் தொப்பியும் அணிந்திருப்பார்கள். மகன் தொப்பி அணிந்ததே இல்லை; பதிலாகக் குளிர் கண்ணாடியும் ஹவாய் சட்டையும் பருத்தித்துணியில் காற்சட்டையுமாக இருந்தான். அவர்கள் தென்னைமரங்களின் அடியில் நிழலில் அமர்வார்கள்; தென்றல் அவர்களைச் சுற்றிச் சலசலத்துக் கொண்டிருக்கும்; அவர்கள் உண்மையாகவே எதுவும் செய்யாமல் கடலை வெறித்துக் கொண்டிருப்பார்கள். அம்மா கடற்கரை மடிப்பு நாற்காலியில் அமர்வார்கள்; ஆனால் மகன் சக்கர நாற்காலியை விட்டு எழுந்ததே இல்லை. அடிக்கடி நிழலுக்காகத் தள்ளி உட்கார்வார்கள், அவ்வளவுதான். அம்மா ஒரு வெள்ளிச் சுடுநீர்க் குடுவை வைத்திருப்பார்கள்; எப்போதாவது அதிலிருந்து ஏதாவது ஒரு பானத்தை காகிதக் கிண்ணத்தில் ஊற்றிக்கொள்வார்கள், அல்லது கரகரப்பான உப்பு பிஸ்கட்டைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.
சில நாட்களில்  அவர்கள் அரை மணி நேரத்திலேயே  கிளம்பி விடுவார்கள்; மற்ற நாட்களில் மூன்று மணி வரை  உட்கார்ந்திருப்பார்கள். நான் நீந்தும்போது அவர்கள் என்னைக் கவனிப்பதாய் எனக்குத் தோன்றும் .தெப்பங்களிலிருந்து தென்னைமரங்களின் வரிசைக்கான தூரம் மிக அதிகமானது; அதனால் அப்படி நான் கற்பனை செய்திருக்கவும் கூடும். அல்லது ஒருவேளை நான் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவன் என்பதால் அப்படி நினைத்திருக்கலாம், ஆனால் நான் ஏதாவதொரு தெப்பத்தில் தொற்றி, உந்தி, ஏறியபோதெல்லாம் அவர்களின் கண்கள் நான் இருக்கும் திசையையே நோக்குவதாக எனக்குள் ஒரு உணர்வு. சில வேளைகளில் வெள்ளிச் சுடுநீர்க் குடுவை, வெய்யில் ஒளியில் ஒரு கத்தியைப் போல் பளிச்சென்று மின்னும்.
எந்தத் திட்டமும் இல்லாத நாளொன்று மற்றொன்றிலிருந்தும் வேறுபடுத்திக் கூற எதுவுமின்றி அதற்கு முந்தைய நாளினைத் தொடர்ந்து கழிந்தது. நீங்கள் வரிசையின் ஒழுங்கைக் கூட மாற்றிக்கொள்ளலாம். யாரும் கவனிக்கப்போவதில்லை. கதிரவன் கிழக்கில் உதித்தான்; மேற்கில் மறைந்தான். ஆலிவ் பச்சை ஹெலிகாப்டர்கள் தாழ்ந்து உறுமிப் பறந்தன. நான் காலன் கணக்கில் பீர் விழுங்கி, என் இதயம் திருப்தி கொள்ளும் வரை போதும் போதுமென்கிற அளவுக்கு நீந்தினேன்.
ஹோட்டல் வாசத்தின்  கடைசி முழுநாளின் பிற்பகலில், நான் கடைசிகடைசியான நீச்சலுக்காக வெளியே புறப்பட்டேன். என் மனைவி மதியத் தூக்கத்தில் இருந்தாள்; அதனால் கடற்கரைக்கு நான் மட்டும் தனியாகக் கிளம்பினேன். அன்று சனிக்கிழமை. வழக்கத்துக்கு அதிகமாகவே ஆட்கள் இருந்தார்கள்.  ஒட்ட வெட்டிய முடியும் பச்சை குத்திய முழங்கைகளுமாக, வெயிலில் நிறம் மாறிக் கறுத்த இளம் படைவீரர்கள் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் கடலின் விளிம்பில் தண்ணீரை வாரி, வாரி அடித்துக்கொண்டும் மணல் வீடுகள் கட்டிக்கொண்டும் பெரிய அலைகள் ஒவ்வொன்றுக்கும் மகிழ்ச்சியில் உரக்கக் கத்திக் குதித்துக்கொண்டும் இருந்தனர். ஆனால், கடலுக்குள் அநேகமாக யாருமே இல்லை. தெப்பங்கள் காலியாகக் கிடந்தன. வானம் மேகங்களற்று இருந்தது. தலைக்கு மேலே வெயில்; மணலோ கொதித்தது. மணி இரண்டு தாண்டிவிட்டது. ஆனால், அப்போதும் கூட அம்மாவும் மகனும் அங்கு வந்திருக்கவில்லை.
நான் மார்பளவு தண்ணீர் வரை கடலுக்குள் நடந்தேன். பின் இடதுதெப்பத்தை நோக்கி நீச்சலில் தவழ்ந்தேன். தண்ணீரின் எதிர்ப்பினை என் கைகளால் சோதித்து உணர்ந்தவாறே, மெதுவான கைவீச்சுகளை எண்ணிக்கையிட்டுக்கொண்டே நீந்தினேன். தண்ணீர் குளிர்ந்திருந்தது. அதை வெயில் காய்ந்த என் உடலுக்கு இதமாக உணர்ந்தேன். தெள்ளத் தெளிவாக இருந்த அந்த நீரில் வானத்தில் பறந்து செல்லும் ஒரு பறவையைப்போல என் நிழலைத் தண்ணீருக்கடியில் மணலில் பார்க்க முடிந்தது. நீந்திக்கொண்டே. நாற்பது கைவீச்சுகளை நான் எண்ணி முடித்து, மேலே நோக்கினேன். மிகச்சரியாக என் முன்னால் தெப்பம் இருந்தது. பின்னர் சரியாகப் பத்தே பத்து வீச்சு ஆனதும் எனது இடது கை தெப்பத்தின் பக்கவாட்டில் தொட்டது. நான் அங்கேயே ஒரு நிமிடம் மூச்சு வாங்கி, நின்றேன். பின்னர் ஏணியைப் பற்றிப்பிடித்துக்கொண்டு தளத்துக்கு ஊர்ந்தேன்.
அங்கே யாரோ ஒருவர், மிகை எடையுள்ள இளம்பொன்வண்ணப் பெண்மணி, ஒருவர் ஏற்கெனவேயே இருந்ததைக் கண்டு வியப்படைந்தேன். கரையிலிருந்து புறப்படும்போது தெப்பத்தில் யாரும் இருந்ததை நான் பார்க்கவில்லை; எனவே, நான் அதை நோக்கி நீந்தியபோதுதான் அவர் அங்கே வந்திருக்க வேண்டும். அந்தப் பெண், படபடக்கும் சிவப்பில், வயல்களில் பூச்சி மருந்து தெளித்திருப்பதை எச்சரிப்பதற்காக ஜப்பானிய விவசாயிகள் பறக்கவிடும் கொடிகளின் நிறத்தில், ஒரு மிகச்சிறிய பிகினி ஆடை அணிந்து தரையைப் பார்த்தவாறு குப்புறப் படுத்திருந்தார். அவர் மிக அதிகமாக, மிகையாகத் தடித்திருந்தார். அதனாலேயே அவரது சிறிய நீச்சல் உடை இன்னும் சிறிதாகத் தோற்றமளித்தது. அவர் மிக அண்மையில் தான் வந்திருப்பது போல் தோன்றியது. அவரது உடல் இன்னும் வெளுப்பாகவே, இருந்தது; வெயிலில் நிறம் மாறிய அடையாளம் சிறிதும் இல்லை.
அவர் ஒரு  கணம் ஏறிட்டு நோக்கிவிட்டுப் பின்னர், கண்களை மீண்டும் மூடிக்கொண்டார். நான் தெப்பத்தில் எதிர்த்திசை எல்லையில் அமர்ந்து, கால்களைத் தண்ணீருக்குள் அளைந்தவாறு, கரையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மாவும் மகனும் அவர்களின் தென்னை மரங்களுக்குக் கீழே இப்போதும் காணப்படவில்லை. வேறெங்கும் கூட அவர்கள் இல்லை. நான் அவர்களைத் தவறவிட்டிருக்க வாய்ப்பில்லை: கதிரின் ஒளியில் பளபளக்கும் உலோகச் சக்கர நாற்காலி என் பார்வையில் படாமல் தப்பிவிடாது. நான் கைவிடப்பட்டதான மனச்சோர்வை உணர்ந்தேன். அவர்கள் இல்லாதது, ஓவியக்காட்சியில் ஏதோ ஒன்று தவறிப்போனதான உணர்வு. ஒருவேளை அவர்கள் விடுதியில் கணக்கு முடித்துவிட்டு, எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே – அது எங்கேயிருந்தாலும் – திரும்பிச் சென்றிருக்கலாம். ஆனால், நான் அவர்களை விடுதியின் உணவுக்கூடத்தில் கடைசியாகப் பார்த்தபோது, அவர்கள் புறப்பட்டுச் செல்லத் தயாராகிக்கொண்டிருப்பதான எண்ணம் எனக்குத் தோன்றியிருக்கவில்லை. எப்போதும் போல, தினசரி வழக்கமாக, அவர்கள் நிதானமாகச் சாப்பிட்டு முடித்துப் பின்னர் காப்பியை அமைதியாக அருந்தி முடித்திருந்தனர்.
நான் அந்தப் பொன்னிறப் பெண்ணைப் போலவே  முகம் தரையில் கவிழப் படுத்துக் கிடந்து, பத்து நிமிடம் போல வெயிலில் காய்ந்து, சிற்றலைகள் தெப்பத்தின் மீது மோதிச் சிதறி எழுப்பும் சப்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என் காது மடல்களிலிருந்த தண்ணீர்த் துளிகள் கடும் வெயிலில் வெதுவெதுப்பாயின.
தெப்பத்தின் மறுமுனையிலிருந்து, அந்தப்பெண், ‘’ பையா, வெய்யில் அதிகமாகத்தான் இருக்கிறது’’ என்றார்.  அவரது குரல் கணீரென்று ஒலிப்பதாகச் சாக்கரின் துகள் போன்று இனிப்பதாக இருந்தது.
‘நிச்சயமாக, அப்படித்தான்.’’ என்று நான் பதிலளித்தேன்.
‘’ இப்போது  நேரம் என்ன இருக்கும்? உங்களுக்குத் தெரியுமா?’’
‘’ என்னிடம் கைக்கடிகாரம் இல்லை. ஆனால் இரண்டு-முப்பது தாண்டியிருக்கும்; இரண்டு-நாற்பது கூட இருக்கலாம்.’’
‘’மெய்யாகவா?’’, அவர் நம்பிக்கொண்டிருந்த நேரம் அதுவாக இல்லை என்பது போல, பெருமூச்சுக்கு நெருக்கமான ஒன்றை வெளியிட்டார். ஒருவேளை, நேரம் பற்றி அவருக்கு எந்தவகையான அக்கறையும் இல்லாமல் இருக்கலாம்.
அவர் எழுந்து  உட்கார்ந்தார். உணவுப்பண்டத்தில் ஈக்களைப்போல, அவர்மீது மொத்தமாக வியர்வை முத்துக்கள் பூத்திருந்தன. கொழுப்பின் தசைமடிப்புகள் அவர் காதுகளுக்குக் கீழிருந்தே தொடங்கி, தோள்களுக்கு மெல்லச் சாய்வாக இறங்கிப் பின் அவரது உருண்டு திரண்ட கைகளுக்கு ஒன்றாக ஒரே தொடர்ச்சியாக இறங்கியது. தசை மடிப்புகளுக்குள் அவரது மணிக்கட்டுகளும் கணுக்கால்களும் கூட மறைந்துவிட்டது போல் தோன்றின. என்னால் அவரை மிக்கேலின் டயர் மனிதனோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.   
அந்தப் பெண் அவ்வளவு கனமாகப் பெருத்திருந்த போதிலும், அவர் ஆரோக்கியமற்றிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பார்வைக்கும் அவர் அவ்வளவு மோசமாகத் தெரியவில்லை. அவரது எலும்புகளைச் சுற்றிலும் கொஞ்சம் அதிகமான தசைகளைக் கொண்டிருக்கிறார், அவ்வளவுதான். அவர் முப்பதுகளின் கடைசியில் இருப்பாரென நான் யூகித்துக்கொண்டேன்.
‘’நன்கு நிறம்  மாறியிருக்கிறீர்களே, இங்கே  கொஞ்ச நாட்களாகவே இருக்கிறீர்கள் போலிருக்கிறது.’’ என்றார், அவர்.
‘’ ஒன்பது நாட்கள்.’’
‘’ என்னவொரு ஆச்சரியமான மாற்றம்,’’ என்றார், அவர். நான் பதில் சொல்வதற்குப் பதிலாக இருமித் தொண்டையைச் சரிசெய்துகொண்டேன். நான் இருமியதில் என் காதுகளுக்குள் தங்கியிருந்த தண்ணீர் குடுகுடுத்தது.
‘’ நான் இராணுவ ஹோட்டலில் தங்கியிருக்கிறேன்.’’ என்றார், அவர்.
எனக்கு அந்த இடம் தெரியும். கடற்கரைச்  சாலைக்குக் கொஞ்சம் கீழேதான் அது.
‘’ என்  சகோதரன் ஒரு கடற்படை  அதிகாரி. அவன்தான் என்னை இங்கு வருமாறு அழைத்தான். கடற்படை அவ்வளவு மோசமில்லை, உங்களுக்குத் தெரியுமா? சரிய்ய்யான சம்பளம். இங்கே தளத்திலேயே நீங்கள் விரும்புவதையெல்லாம் அவர்கள் பெற்றுவிடுகிறார்கள். கூடவே இந்த விடுதியைப் போன்ற சலுகைகள். நான் கல்லூரியிலிருந்தபோது, அது வேற மாதிரியிருந்தது. அது வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்த காலம். பணியிலிருக்கும் இராணுவத்தினரைக் குடும்பத்தில் ஒருவராகக் கொண்டிருப்பதென்பது, அப்போது,  ஒருவகையான சங்கடம். நீங்கள் சுற்றிச்சுற்றி ஒளிந்து மறைந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அதன்பிறகு, உலகம் உண்மையில் எவ்வளவோ மாறிவிட்டது.
நான் எந்தக் குறிப்புமில்லாமல் தலையாட்டினேன்.
‘’ என்  முன்னாள் கணவருங்கூட கப்பற்படையிலேயே இருந்தார்,’’ அவர் சொல்லிக்கொண்டே போனார். ‘’ஒரு போர் விமானி. அவர் இரண்டு வருடங்களாக வியட்நாமுக்கான பயணத்திலேயே இருந்தார். பின்னர் யுனைட்டெட் நிறுவனத்தில் விமானி ஆனார். நான் அப்போது யுனைட்டெட்டில் பணிப்பெண்ணாக இருந்தேன். அப்படித்தான் நாங்கள் சந்தித்தோம். எந்த வருடம் திருமணம் செய்துகொண்டோமென்று நினைவுபடுத்திப் பார்க்கிறேன். ம்ம்ம்…… ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எழுபதோ என்னமோ, எப்படியோ ஆறு வருடங்களுக்கு முன்னதாக, அதெல்லாம் நடக்கிற கதைதானே.
‘’ அதில் என்ன இருக்கிறது?’
‘’ உங்களுக்குத்தான் தெரியுமே – வான்வழிப் பணியாளர்களுக்கு நேரங்காலமில்லாத வேலை. அதனால் அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் மாற்றிமாற்றி உறவுகொள்ள முயல்கிறார்கள். வேலை நேரம், வாழ்க்கை முறை எல்லாமே ஒரு கட்டுக்குள் வராத ஒழுங்கற்றதுதான். இருந்தாலும் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நான் வேலையை விட்டுவிட்டேன். பிறகு அவர் வேறொரு பணிப்பெண்ணைச் சேர்த்துக்கொண்டார்; கடைசியில் அவளை மணந்து என்னிடமிருந்து விலகிவிட்டார். இதுவும் கூட எப்போதும் நடப்பதுதான்’’.
நான் பேச்சை மாற்ற முயன்றேன். ‘’ இப்போது எங்கு வசிக்கிறீர்கள்?’’
‘’லாஸ் ஏஞ்செல்ஸ்’’  என்று சொல்லிவிட்டுக் கேட்டார், ‘’அங்கே எப்போதாவது போயிருக்கிறீர்களா?’’
‘’ இல்லை,’’ என்றேன், நான்.
‘’ நான் அங்கேதான்  பிறந்தேன். பிறகு என் அப்பாவை  உப்பு ஏரி நகருக்கு (Salt Lake City) மாற்றிவிட்டார்கள். நீங்கள் அங்கு எப்போதாவது போயிருக்கிறீர்களா?’’
‘’இல்லை.’’
‘’ நான் அங்கே  போகச் சொல்ல மாட்டேன்.’’ என்று தலையை அசைத்துக்கொண்டே  சொன்னார். அவர் முகத்திலிருந்த வியர்வையை உள்ளங்கையால் துடைத்துக்கொண்டார்.
அவர் ஒரு  பணிப்பெண்ணாக இருந்தார்  என்பதே ஒரு ஆச்சரியம் தான். மல்யுத்த வீராங்கனைகளாகக்கூட விளங்கக்கூடிய, நல்ல உடற்கட்டுள்ள ஏராளமான பணிப்பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் சிலருக்குப் பருத்துக் கனத்த தசைகளுடன்கூடிய கைகளும் மேல் உதடுகள் தடித்துக் கீழிறங்கி இருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இவரைப் போலத் தடிமனாக ஒருவரை எப்போதுமே பார்த்ததில்லை. பணிப்பெண்கள் எவ்வளவு பருத்திருந்தாலும் யுனைட்டெட் கவலைப்படவில்லை போலும். அல்லது இவர் அந்தப் பணியிலிருக்கும்போது இவ்வளவு தடித்திருக்கவில்லையாக இருக்கவேண்டும்.
நான் கடற்கரையைச்  சல்லடையிட்டுப் பார்த்தேன். அம்மாவும் மகனும் பற்றி எந்த அடையாளமும் அதுவரை இல்லை. படைவீர்ர்கள் அப்போதும் கைப்பந்தைச் சுற்றிச்சுற்றி அடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். உயிர்க்காப்பாளர் அவரது கோபுரத்தில் நின்று அவருடைய பெரிய உருப்பெருக்கிக் கண்ணாடி வழியாக எதையோ, கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். கிரேக்கத் துன்பியல் நாடகத்தில் கெட்ட செய்தியை எடுத்து வரும் தூதர்களைப் போல இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் கரைக்கப்பால் தோன்றித் தலைக்குமேலாக இடியாகத் தடதடத்து நிலப்பகுதிக்குள் சென்று மறைந்தன. அந்தப் பச்சை இயந்திரங்கள் தூரத்தில் மறைவதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
‘’ மேலே இருந்து  பார்ப்பதற்கு, ஒரு மிக  நல்ல நேரத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருப்பதாகத் தெரியுமென்று நான் பந்தயம் கூடக் கட்டுவேன்.’’ என்ற அந்தப் பெண் சொன்னார். ‘’ இந்தத் தெப்பத்தின் மீது படுத்து வெயில் காய்வதானால், உலகத்தைப் பற்றி எந்தக் கவலையுமில்லை.’’
‘’ நீங்கள்  சொல்வது சரியாகத்தான் இருக்கும்.’’
‘’ நீங்கள் மேலே உயரத்தில் இருந்து பார்த்தால், அநேகமாக எல்லாமே அழகாகத் தெரியும்.’’ என்றார், அவர். மீண்டும் உருண்டு, குப்புறப் படுத்துக் கண்களை மூடிக்கொண்டார்.
நேரம் அமைதியாகக் கழிந்தது. புறப்படுவதற்கு இதுதான் சரியான சமயமென்று உணர்ந்து எழுந்து நின்றேன். நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறதென அவரிடம் கூறிவிட்டு, நீருக்குள் பாய்ந்து நீந்தினேன். பாதித்தூரம் சென்றதும் திரும்பி, தெப்பத்தைப் பார்த்தவாறு, நிலைநீச்சலில் நின்றேன்.  என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவர் கையசைத்தார். நானும் பதிலுக்கு மெதுவாகக் கையசைத்தேன். தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒரு டால்பினைப் போல அவர் தெரிந்தார். அவருக்கு மட்டும் துடுப்புகள் இருந்ததோ., அவ்வளவுதான், கடலுக்குள் திரும்பவும் பாய்ந்து விடுவார்.
என்னுடைய  அறையில், ஒரு தூக்கம் போட்டேன்., பிறகு மாலை வந்தது; நாங்கள் வழக்கம்போல உணவுக் கூடத்துக்குச் சென்று இரவு விருந்து உண்டோம். அம்மாவும் மகனும் அங்கு இல்லை. அங்கிருந்து நாங்கள் எங்கள் அறைக்குத் திரும்பி வரும்போது அவர்கள் அறைக்கதவு மூடியிருந்தது. கதவிலிருந்த சிறிய பனிமூட்டக் கண்ணாடித் தகடு வழியாக வெளிச்சம் ஊடுருவிக் கசிந்தது; என்றாலும் அறைக்குள்ளே ஆட்கள் இருந்தார்களா என்று என்னால் சொல்ல முடியாது.
‘’ அவர்கள் கடற்கரையிலும் இல்லை; சாப்பாட்டு அறையிலும் இல்லை; ஒருவேளை கணக்கு முடித்துப் போயிருப்பார்களோ என்று ஆச்சரியமாக இருக்கிறது.’’ என்றேன், எனது மனைவியிடம்.
‘’ எல்லோரும்  அப்போதைக்கப்போது கணக்கு முடித்துப் போய்க்கொண்டேதான் இருப்பார்கள்,’’ என்றவள்  ‘’ நீங்கள் இப்போது போல் என்றென்றைக்கும் இங்கேயே இருந்துவிட முடியாது.’’ என்றும் சொன்னாள்.
‘’ நானும் அப்படித்தான் நினைக்கிறேன்,’’ நான் ஒப்புக்கொண்டேன், ஆனாலும் திருப்தியாகவில்லை. அந்த அம்மாவையும் மகனையும் எங்கேயும் பார்க்க முடியவில்லை என்பது மட்டுமல்ல; இங்கேயும் கூட முடியவில்லையே என்பதுதான்.
நாங்கள் மூட்டை கட்ட ஆரம்பித்தோம். எங்கள் பெட்டிகளை நிரப்பி மூடிப் படுக்கையின் அடியில் தள்ளினோம். அறை சட்டென்று வெறிச்சோடி, இதமற்றுக் குளிர்வதாக, அந்நியப்பட்டுத் தோன்றியது. எங்கள் விடுமுறை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நான் கண்விழித்து, படுக்கைக்கு அருகில் மேஜை மேலிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். அப்போது நேரம்  ஒன்று-இருபதாக இருந்தது. என் நெஞ்சுக்கூட்டுக்குள் இதயம் பயங்கரமாகத் துடித்தது. படுக்கையிலிருந்து நழுவித் தரைவிரிப்புக்கு இறங்கிக் கால்களை மடக்கிச் சம்மணமிட்டு அமர்ந்து, கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சிழுத்துச் சுவாசித்தேன். பின் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு தோள்களைத் தளர்த்தினேன். நிமிர்ந்து உட்கார்ந்து நேராகப் பார்த்து அதிலேயே கவனம் செலுத்த முயன்றேன். ஐந்தாறு முறை அதுபோலத் திருப்பித் திருப்பிச் செய்தபிறகுதான் ஒருவழியாக அமைதியாகினேன். அளவுக்கு அதிகமாக நீந்தியதால் அல்லது நெடு நேரம் வெயிலில் கிடந்ததால் தான் இப்படி ஆகியிருக்குமென்று நானாக ஒரு முடிவுக்கு வந்தேன். எழுந்து நின்று அறையைச் சுற்றிலும் நோக்கினேன். எங்கள் இரு பெட்டிகளும் பாய்வதற்குப் பதுங்கும் திருட்டு மிருகங்கள் போலப் படுக்கை அடியில் பதுங்கிக் கிடந்தன. திடீரென எனக்கு நினைவு வந்தது – நாளைக்கு, எப்படியும் இதற்குமேல் நாம் இங்கே இருக்கப்போவதில்லை.
சன்னல் வழியாக உள்நுழைந்து பிரகாசித்த வெளிறிய நிலவொளியில், என் மனைவி நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவள் என்னவோ இறந்து விட்டது போல, சுவாசத்தின் மெல்லிய ஒலியைக்கூட என்னால் கேட்கமுடியவில்லை. சில நேரங்களில் அவள் அப்படித்தான் தூங்குகிறாள். எங்களுக்குத் திருமணமான புதிதில், அடிக்கடி, இது என்னைக் கிலிகொள்ள வைத்தது. அவள் இறந்துவிட்டது போலவே நான் நினைத்தேன். ஆனால், அது ஒன்றுமில்லை, அமைதியான, அயர்ந்த உறக்கம், அவ்வளவுதான். வியர்வையில் நனைந்திருந்த தொளதொள பைஜாமாவைக் கழற்றிவிட்டு, நன்கு உலர்ந்து சுத்தமான சட்டையும் அரைக்காற் சட்டையும் அணிந்துகொண்டேன். மேஜை மேலிருந்த வைல்டு டர்க்கியின் ஒரு சிறு புட்டியை எடுத்து பாக்கெட்டில் மறைவாகச் செருகிக்கொண்டு கதவை மெல்லச் சத்தமில்லாமல் திறந்து வெளியே வந்தேன். இரவுக்காற்று குளிராக, சுற்றிலுமிருந்த செடிகொடிகளின் ஈரமான வாசத்தைச் சுமந்திருந்தது. முழு நிலவு, பூமியை பகலில் காணக் கிடைக்காத ஒரு புதுமை வண்ணத்தில் மூழ்கடித்துச் சீராட்டிக்கொண்டிருந்தது., அது, பிணம் போலக் களையிழந்து சாரமற்றுப்போனதெனப் பலவற்றைக் கழித்துவிட்டுச் சிலவற்றை மட்டும் அவற்றின் உண்மையான தோற்றத்தை விட அதிக அழகாக, வண்ணமயமாக்கிக் காட்டுவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட சிறப்பான ஒரு வண்ண வடிகட்டி மூலம் பார்ப்பது போல இருந்தது.
எனக்குத்  தூக்கம் போயே போய்விட்டது. தூக்கம் இருந்த இடம் தெரியாமல் அற்றுப் போகவே, தெள்ளத் தெளிந்த விழிப்புடன் என் மனம் கவனம் குவிப்பதாக இருந்தது. அமைதி கோலோச்சியது. காற்று, பூச்சிகள், வண்டுகள், இரவுப் பறவைகள், எந்தச் சப்தமும் இல்லை. அலைகளின் வெகுதூரத்து ஓசையைக்கூட நான் கூர்ந்து, கவனிக்கும்போது மட்டும், மெலியதாகக் கேட்க முடிந்தது. நான் அந்தக் குடியிருப்பை மெல்ல ஒரு வட்டம் அடித்துப் பின் புற்களின் நடுவாகத் திரும்பி நடந்தேன். வட்டவடிவில் இருந்த புல்வெளி, நிலவொளியில் பனி மூடிய குளம் போலத் தோன்றியது. பனியை உடைத்துவிடக் கூடாதென்று நான் மிக மெதுவாக அடியெடுத்து நடந்தேன். புல்வெளி தாண்டியதும் ஒரு ஒடுக்கமான கற் படிக்கட்டு. அதன் உச்சி முடிவில், ஒரு பருவகால அடிப்படைக் கருத்தில், அழகுபடுத்தப்பட்ட ஒரு மதுக்கூடம். இரவு விருந்துக்கு முன் ஒவ்வொரு மாலையிலும், இந்த மதுக்கூடத்தில் நான் வோட்கா-டானிக் அருந்துவேன். இருந்தாலும், இவ்வளவு பிந்திய இரவில், கூடம் மூடியிருந்தது. உருளைக் கதவுகள் இறக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேஜைக்குமான சூரியக்குடைகள் மடிக்கப்பட்டு, கனவுகாணும் டெரோடக்டைல்களைப் போல அழகாகத் தோன்றின.
அந்தச் சக்கர நாற்காலி இளைஞன் அங்கிருந்தான். அவன் ஒரு கைமூட்டினை மேஜையின் மேல் வைத்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலவொளியில் தூரத்திலிருந்து பார்க்கும்போது, அவனுடைய உலோகச் சக்கர நாற்காலி, இரவுகளின் ஆழமான இருண்ட நேரங்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட ஏதோ ஒரு துல்லியமான கருவி போலத் தோற்றமளித்தது. நான் அவனை ஏற்கெனவே பார்த்திருந்த ஆரஞ்சு ஹவாய் சட்டையும் வெள்ளைப் பருத்தித்துணியில் முழுக்காற்சட்டையும் அணிந்திருந்தான். அவன் பெருங்கடலையே வெறித்தபடி, அசையாமல், அப்படியே உட்கார்ந்திருந்தான்.
நான் அங்கே  இருப்பதை அவனுக்கு அடையாளம் காட்டித் தெரிவிக்க வேண்டுமா எனத் தயங்கிச் சிறிது நின்றேன். ஆனால், என்ன செய்வதென்று நான் ஒரு முடிவுக்கு வரும் முன்பாகவே அவன் என் வரவை உணர்ந்து, பின்னால் திரும்பினான். என்னைப் பார்த்ததும் வழக்கமான குறைந்த தலையசைப்பைக் காட்டினான்.
‘’ மாலை வணக்கம்.’’ என்றேன், நான்.
பதிலுக்கு, அவன் மெல்லிய குரலில், ‘’ மாலை வணக்கம்,’’ என்றான். அவன் பேசுவதை, நான் கேட்பது இதுவே  முதல் முறை. அவனது குரல்  இலேசாகத் தூக்கத்தில் ஒலிப்பதுபோல், ஆனால், மற்றபடி மிகச் சரியான, நூறு விழுக்காடு வழக்கமானதாக இருந்தது. அதிகச் சப்தமாகவும் இல்லை; நிரம்ப மெலிதாகவும் இல்லை.
‘’ நடு இரவு உலாவா?’’ அவன் கேட்டான்.
‘’என்னால் தூங்க முடியவில்லை.’’ என்றேன், நான்.
அவன் என்னை  மேலிருந்து கீழாக, உச்சி முதல் பாதம் வரை நோக்கினான். ஒரு மெல்லிய புன்னகை அவன் உதடுகளில் முகிழ்த்தது. ‘’ அதே, அதுதான் இங்கேயும்.’’ என்றான் .’’ உங்களுக்கு விருப்பமிருந்தால், உட்காருங்கள்.’’ என்றும் அழைத்தான்.
நான் ஒரு  நிமிடம் தயங்கி நின்றேன். பின், அவன் மேஜைக்குச் சென்று, பிளாஸ்டிக் நாற்காலிகளில் ஒன்றை இழுத்து, அவனுக்கு எதிரில் உட்கார்ந்தேன். அவன் பார்த்துக்கொண்டிருந்த திசையைப் பார்க்கவே நானும் திரும்பினேன். கரையின் முடிவில் பாதியாக அறுக்கப்பட்ட மஃபின் ரொட்டிகளைப் போலக் கிடந்த நொறுங்கிய பாறைகள் மீது அலைகள் ஒரு ஒழுங்கான நேரஇடைவெளியில் விட்டுவிட்டு மோதிச் சிதறிக்கொண்டிருந்தன. அதென்னவோ, அடிக்கோல் இட்டு அளந்தது போல, ஒரே அமைப்புடன் கருணை தவழும் இனிய சிற்றலைகள்! அதற்கும் அப்பால் காண்பதற்கு எதுவுமே இல்லை.
‘’ இன்று  உங்களைக் கடற்கரையில் கூடக்  காணவில்லை.’’ என்றேன், நான்.
‘’ நாள் முழுதும் அறைக்குள்ளேயே ஓய்வெடுத்தேன்.’’  என்று பதிலளித்த அந்த இளைஞன், ‘’ என் அம்மா சிறிது உடல்நலமில்லாமல் இருந்தார்கள்.’’ என்றும் சொன்னான்.
‘’இதைக் கேட்க  எனக்குச் சங்கடமாக இருக்கிறது.’’ என்றேன், நான்.
‘’ அது….., உடம்புக்கு ஒன்றுமில்லை; இதெல்லாம் அதிகமும், உணர்ச்சிவயப்படுவதால்தான். அது…..,  நரம்புக் குலைவு.’’ வலதுகையின் நடுவிரலால் அவன் கன்னத்தைத் தேய்த்துக்கொண்டான். இரவின் வெகுவாகப் பிந்திய இந்த நேரத்தில் கூட சவரத்துக்குப் பின் தோன்றும் சிறிய அடிக்கட்டைகளின் எந்தச் சுவடுமின்றி அவன் கன்னங்கள் பளிங்குப் பீங்கான் போல வழுவழுப்பாகத் தோன்றின. ‘’ இப்போது அம்மா சரியாகிவிட்டார். நல்ல ஆழ்ந்த உறக்கம். இது என் கால் மாதிரி இல்லை. ஒரு இராத்திரிக்கு நன்கு தூங்கிவிட்டால் போதும், அவர் முன்னைவிட நன்றாகி விடுவார். முழுவதுமாகக் குணம் என்றோ அல்லது வேறு மாதிரியோ இல்லை; ஆனால், குறைந்த பட்சம் அவருடைய அன்றாட வழக்கமான நிலைக்கு மீண்டுவிடலாம். விடியும்போது காலையில் முற்றிலும் குணமாகியிருப்பார்.’’
அவன் ஒரு  முப்பது நொடி அமைதியாக இருந்தான், அது ஒரு நிமிடமாகக் கூட  இருக்கலாம். மேஜையின் கீழ் ஒன்றின் மேல் ஒன்றாகப் பெருக்கலிட்டிருந்த என் கால்களைப் பிரித்து அகட்டி, இதுதான் புறப்பட்டுச் செல்ல சரியான தருணமோ எனப் பரபரத்தேன். அது என்னவோ, உரையாடலின் நடுவே, வந்தனம் சொல்லிப் பிரிவதற்குச் சரியான கணத்தை நிச்சயிப்பதையே அச்சாகக் கொண்டு என் வாழ்க்கை முழுதும் சுழல்வதைப் போலிருந்தது. ஆனால், நான் நல்ல ஒரு வாய்ப்பை இழந்துவிட்டேன்; நான் போவதாகச் சொல்ல வாய்திறக்கவிருந்த நேரத்தில் அவன் பேச்சைத் தொடங்கிவிட்டான்.
‘’ நரம்புக் குலைவுகளில் எத்தனையோ வகைகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒரே காரணம் தான் என்றாலும், வேறுவேறுவகைப்பட்ட லட்சக்கணக்கான அறிகுறிகள் தெரிகின்றன. அது ஒரு நில அதிர்வு போல – வெடிக்கும் சக்தி என்னவோ ஒன்றுதான், ஆனால், அது எப்படி நிகழ்கிறது என்பதைப் பொறுத்து, விளைவுகள் மாறுபடுகின்றன. ஒரு அதிர்வில் ஒரு தீவு மூழ்குகிறது; இன்னொன்றில் புத்தம் புதிதாக ஒன்று முகிழ்க்கிறது.’’
அவன் கொட்டாவி விட்டான். நீளமான, ஆனால் சாதாரண வகைதான்; எப்படிப் பார்த்தாலும், அது நளினமானதுதான். ‘’ மன்னித்துக்கொள்ளுங்கள்,’’ என்றான். அவன் சக்தியை எல்லாம் இழந்தவனாகக் கண்கள் ஒளிமங்கித் தோன்றினான். இப்போதேகூட, எந்த நிமிடமும் தூங்கிவிடுவான் போல இருந்தது. நான் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அப்போதுதான் நான் அதை அணிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். மணிக்கட்டில் அதைக் கட்டுமிடத்தில் தோலில் வெள்ளையாக ஒரு வார்த்தடம் மட்டுமே இருந்தது.
‘’என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். பார்ப்பதற்குத் தூக்கக்கலக்கத்தில் இருப்பதாகத் தோன்றுவேன். ஆனால் அப்படி இல்லை. இரவில் எனக்கு நான்கு மணிநேரம் போதுமானது; வழக்கமாக, எனக்குப் பொழுது விடிவதற்கு முன்புதான், தூக்கம் வரும். அதனால்தான் இரவின் இந்த நேரங்களில் நான் அநேகமாக இங்கிருக்கிறேன், சும்மா, உட்கார்ந்துகொண்டு.’’
அவன் மேஜை மேலிருந்த சின்ஸானோ (Cinzano – Italian brand of vermouth which is made of grapewine) சாம்பல் கிண்ணத்தை எடுத்து அது என்னவோ கிடைக்காத ஒரு பொருள் போலச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மீண்டும் அதே இடத்திலேயே வைத்தான்.
‘’நரம்புக் குலைவு ஏற்படும்போதெல்லாம் அம்மாவின் முகம் இடது பக்கம் முழுதுமாக உறைந்துவிடுகிறது. கண்ணையோ வாயையோ அவரால் அசைக்க முடியாது. முகத்தின் அந்தப்பக்கத்தை நீங்கள் பார்த்தால், ஒரு கீறல் விழுந்த கிண்ணத்தைப் போல இருக்கும். அது ஊழ்வினையோ, செய்வினையோ, ஆனால் அது ஒன்றும் உயிருக்கு ஆபத்தானதோ அல்லது வேறுமாதிரியோ அல்ல. ஒரு இரவு முழுமையான தூக்கம், அவ்வளவுதான், நன்றாகிவிடலாம்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்றோ, அல்லது எப்படி நடந்துகொள்வதென்றோ  எனக்குத் தெரியவில்லை. அதனால் நான் எந்த அர்த்தமும் தொனிக்காத ஒரு தலையசைப்பைப் பெயரளவுக்குச் செய்தேன். கீறல் விழுந்த கிண்ணம்?
‘’ இதைப்பற்றி நான் சொன்னதாக அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள், சரியா? அவருடைய நிலை பற்றி யார் பேசுவதையும் அவர் விரும்புவதில்லை. அது அவருக்கு வெறுப்பானது.’’
‘’நிச்சயமாக,’’ என்றேன், நான். ‘’ தவிரவும், நாளைக்கு நாங்கள் கிளம்புகிறோம். அதனால் உங்கள் அம்மாவோடு  பேசுகிற வாய்ப்பு கிடைப்பது  சந்தேகந்தான்.’’
‘’அய்யோ, இது ரொம்பமோசம்,’’ என்றான். உண்மையான வருத்தத்தோடுதான், அவன் அதைச் சொன்னான்.
‘’அப்படித்தான், ஆனால், நான் வேலைக்குப் போகவேண்டுமே, அப்படியிருக்கும்போது நான் வேறென்ன செய்ய முடியும்?’ என்றேன்.
‘’நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’
‘’டோக்கியோ’’
‘’டோக்கியோ’’ என்று அவன் திரும்பச் சொன்னான். கண்களைச் சுருக்கிக்கொண்டு மீண்டும் பெருங்கடலை நோக்கினான். மிகக் கூர்மையாகப் பார்த்தால், தொடுவானத்துக்கும் அப்பால் டோக்கியோவின் வெளிச்சத்தை அவன் கண்டுவிடமுடியும் என்பதுபோல அவன் பார்வை இருந்தது.
‘’இங்கே நீங்கள் இன்னும் நீண்ட நாட்களுக்கு இருப்பீர்களா?’’ என்று கேட்டேன், நான்.
‘’அதைச் சொல்வது மிகக் கடினம்’’ விரல்களால் சக்கரநாற்காலியின் கைப்பிடியைத் திருகிக்கொண்டே அவன் சொன்னான். ‘’இன்னும் ஒரு மாதம், இரண்டு மாதங்களாகவும் இருக்கலாம். அது வேறு சில விஷயங்களைப் பொறுத்தது. என் சகோதரியின் கணவர் இந்த விடுதியில் பங்குகள் வாங்கியிருக்கிறார். அதனால் நாங்கள் இங்கே எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளலாம். என் தந்தை க்ளீவ்லாந்தில் ஓடுகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று நடத்துகிறார். ஆனால் என் மைத்துனர் அதை முழுவதுமாக எடுத்துக்கொண்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும். எனக்கு அவரை அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஆனால் நான் சொல்கிறேன், நீங்கள் உங்கள் குடும்பத்தைத் தேர்வுசெய்ய முடியாது. முடியுமா? எனக்குத் தெரியாது. ஒருவேளை நான் சொல்கிற அளவுக்கு அவர் பயங்கரமாக இல்லாமலிருக்கலாம். ஆனால், என்னைப்போல ஆரோக்கியமற்றவர்கள் கொஞ்சம் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகிவிடுகிறார்கள்.’’ அவன் சட்டைப்பையிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து, மெதுவாக, ஊறு ஏற்பட்டுவிடாதபடி மூக்கைச் சிந்தித் துடைத்துவிட்டு மீண்டும் பைக்குள் வைத்துக்கொண்டான்.       ‘’எப்படியோ, பல நிறுவனங்களின் பங்குகளுக்கு அவர் உரிமையாளர். நிறைய முதலீட்டுச் சொத்துகளும் இருக்கின்றன. நல்ல புத்தி கூர்மை, என் அப்பாவைப் போலவே. அதனால், நாங்களெல்லாம் – நான் என்   குடும்பத்தினரைச் சொல்கிறேன் – இரண்டு விதமாகப் பிரிந்திருக்கிறோம்: உடல் திடமானவர்கள் ஒரு புறம். உடல்நலமற்றவர்கள் ஒரு புறம், இயங்குபவர்கள், இயக்கமற்றவர்கள் என்று. திடமானவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக ஓடுகள் தயாரித்துக்கொண்டு, சொத்து சேர்த்துக்கொண்டு, வரி ஏய்ப்பு செய்துகொண்டு – நான் சொன்னேனென்று யாரிடமும் சொல்லிவிடாதீர்கள், சரியா? – நோயாளிகளையும் கவனித்துக்கொள்கிறார்கள். அது ஒரு ஒழுங்கமைவான வேலைப் பிரிவினை.’’
அவன் பேசுவதைச்  சிறிது நிறுத்தி, ஆழப் பெருமூச்சு ஒன்றை இழுத்தான். மேஜை விளிம்பில் கொஞ்ச நேரம் விரல் நகங்களால் தாளமிட்டான். அவன் மீண்டும் தொடங்கட்டுமென நான் அமைதியாகக் காத்திருந்தேன்.
‘’எங்களுக்கான எல்லாவற்றையும் அவர்களே முடிவுசெய்கிறார்கள். ஒரு மாதம் இங்கே தங்குங்கள், ஒரு மாதம் அங்கே தங்குங்கள் என்பார்கள். நாங்கள் மழையைப் போல, அம்மாவையும் என்னையுந்தான் சொல்கிறேன். நாங்கள், ஒரு மாதம் இங்கே, அடுத்து நீங்கள் பாருங்கள், வேறெங்காவது விழுந்து கிடப்போம்.’’
அலைகள் பாறைகளைத் தாலாட்டி, வெள்ளைநுரைகளைக் கொட்டிச் சென்றன. நுரைகள் மறையவும் புதிய அலைகள் தோன்றின. தொடர்ந்த இந்த அலகிலா விளையாட்டை நான் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். பாறைகளின் மீது ஒழுங்கற்ற நிழல்களைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது நிலவு.
‘’என்னதான் இது ஒரு வேலைப்பங்கீடு என்றாலும், நானும் அம்மாவும் எங்கள் பங்குக்கு ஏதாவது செய்யவேண்டியிருக்கிறதே. இது ஒரு இரட்டை வழிப் பாதை. அதை விவரிப்பது கடினம்தான் என்றாலும் அவர்களின் மிகைச்செயலை நாங்கள் எதுவுமே செய்யாமலிருந்து ஈடுகட்டுகிறோம். அது ரெய்சான் டி யெட்ரே.(Raison d`etre – It is a French word meaning Reason of being/ Reason to be – ஒரு உயிரியின் இருப்புக்கான /  இயக்கத்துக்கான காரணம் அல்லது நியாயம் ) நான் என்ன சொல்லவருகிறேனென்று உங்களுக்குத் தெரிகிறதா?
‘’ ஆங், அந்த மாதிரி, என்று பதிலளித்தேன். ஆனால் முழுவதுமாகப் புரிந்துகொண்டேனென்று சொல்ல முடியாது.
அவன் அமைதியாகச் சிரித்தான். ‘’ குடும்பம் ஒருமாதிரிப் புதிரான சூழல்.’’ என்றான். ‘’குடும்பம் அதன் வளையத்திற்குள்ளேயே இருக்கவேண்டியிருக்கிறது. இல்லையெனில் அந்த அமைப்பு இயங்காது. அந்தப் புரிதலில்தான் என்னுடைய உபயோகமற்ற இந்தக் கால்களை ஒரு அடிப்படையாக முன்வைத்து என் குடும்பம் அதைச் சுற்றியே ஓடுகிறது. விஷயங்கள் சுழல்வதற்கு என் இறந்த கால்களே அச்சுமையம்.’’
அவன் மறுபடியும் மேஜை விளிம்பில் தட்டத் தொடங்கினான். எரிச்சலில் அல்ல; விரல்களை அசைத்துக்கொண்டே அமைதியாக, அவனுடைய சொந்தக் காலவெளிக்குள் மனக்கண்ணில் விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்கிறான்.
‘’ செயல்பாட்டுத்தடை என்பது இன்னும் அதிகமான செயல்படாமைக்கும், மிகைச்செயல் இன்னும் அதிகமான மிகைச்செயலுக்கும் உந்துவதாக அமைவது இந்த அமைப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று.  உருவாக்க முயன்றுகொண்டிருந்த இசைநாடகம் ஒன்று கிட்டிவராத போது, டெபஸ்ஸி இப்படிச் சொன்னார்: ` நான் ஒன்றுமற்றதற்காக – rien – அது உருவாக்கும் வெற்றிடத்திற்காக என் நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தேன்.` என்னுடைய வேலையும் அந்த – rien – அதாவது வெற்றிடத்தை ஏற்படுத்துவதுதான்.’’
தூக்கமின்றி அவதிப்படும் இன்சோம்னிய அமைதியில் அவன் மீண்டும் மூழ்கினான். அவன் மனம் மட்டும் தூரப் பிரதேசங்களில், ஒருவேளை அவனுக்குள்ளிருக்கும் வெற்றிடத்தில் அலைந்துகொண்டிருக்கலாம். ஒருவழியாகக் கடைசியில், அவன் கவனம் நிகழ்காலத்தின் நடப்புக்கு – ஒழுங்கமைத் தடத்தின் எந்தப்புள்ளியிலிருந்து சில டிகிரிகள் விலகிச் சென்றானோ, அதே இடத்துக்கு – மறுபடியும் திரும்பியது. நான் என் கன்னங்களைத் தேய்க்க முயற்சித்தேன். அடிக்கட்டைகளின் சொரசொரப்பு நேரம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறதென உணர்த்தியது. சட்டைப்பையிலிருந்த என்னுடைய சிறு விஸ்கிப் புட்டியை எடுத்து மேஜை மீது நிற்கவைத்தேன்.
‘’கொஞ்சம் மது அருந்த விரும்புவீர்களா? ம்.. எனக்குச் சிக்கல் என்னவென்றால், என்னிடம் கோப்பை அல்லது கிண்ணம் ஏதுமில்லை.’’
மறுப்பதன் அடையாளமாக அவன் தலையை அசைத்தான். ‘’நன்றி, நான் குடிப்பதில்லை. அப்படி நான் குடிப்பவனாக இருந்தாலும், இந்த நேரத்தில் எப்படி நடந்து கொண்டிருப்பேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. எதுவானாலும் எனக்கு வேண்டாம். ஆனால், ஒன்று, மற்றவர்கள் அதிலும் என் விருந்தினர் குடிப்பதைப் பற்றி, நான் எப்போதுமே ஒன்றும் நினைப்பதில்லை.’’
நான் போத்தலைத்  திருப்பிக் கையிலெடுத்துத் திறந்து விஸ்கி என் தொண்டைக்குள் மெதுவாக இறங்குமாறு அண்ணாந்து சாய்த்தேன். மணத்தோடு இதமான வெப்பத்தை அனுபவிக்க, நான் என் கண்களை மூடினேன். அவன் மேஜைக்கப்பாலிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘’ இது  ஒரு புதுமையான கேள்வியாகத்தான்  இருக்கும்.’’ என்ற அவன், ‘’உங்களுக்குக் கத்திகளைப் பற்றி ஏதாவது தெரியுமா?’’ என்று கேட்டான்.
‘’கத்தியா?’’
‘’ கத்திதான். இந்த, வேட்டைக்கத்தி என்பார்களே, அது மாதிரி.’’
வெளி முகாம்களின்  போது நான் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறேன், ஆனால் அவைகளைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாதென்று அவனிடம்  சொன்னேன். அது அவனுக்கு ஏமாற்றமாக  இருந்திருக்கும்போலத் தோன்றியது. ஆனால், அப்படியொன்றும் அதிகமாக இல்லை.
‘’அதைப் பற்றி  ஒன்றும் நினைக்காதீர்கள்?’’ என்றான். சும்மாதான், என்னிடம் ஒரு கத்தி இருக்கிறது. அதை உங்களிடம் காண்பிக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. ஒரு மாதத்துத்கு முன்பு ஒரு பட்டியலைப் பார்த்து இதை வாங்கினேன். ஆனால் கத்திகளைப் பற்றி ஆனா ஆவன்னா கூட எனக்குத் தெரியாது. இது நல்லதுதானா? அல்லது காசைக் கரியாக்கிவிட்டேனா? என்று எனக்குத் தெரியவில்லை. அதனால்தான், யாராவது இதைப் பார்த்து அவர்கள் நினைப்பதை நான் தெரிந்துகொள்ளவேண்டுமென்று ஒரு நப்பாசை. நீங்கள் ஒன்றும் நினைக்கமாட்டீர்கள், இல்லையா?’’
‘’ ஆமாமாம். எனக்கு ஒன்றும் இல்லை,’’ என்றேன். நான்.
அவன் சட்டைப்பைக்குள்ளிருந்து, எச்சரிக்கையோடு, மெதுவாக உருவியெடுத்து, ஐந்தங்குல நீளமுள்ள  அதை மேஜை மேல் வைத்தான். அது அழகான வளைவுகளோடிருந்தது.
‘’நீங்கள் கவலைப்படாதீர்கள். நானொன்றும் இதை வைத்து யாரையும் குத்திக்கொல்லவோ அல்லது நானே குத்திக்கொண்டு சாகவோ திட்டம் தீட்டிக் கொண்டிருக்கவில்லை. ஏதோ ஒருநாள்,  நல்ல கூரான கத்தி ஒன்று வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு விருப்பம், சும்மாத்தான், தோன்றியது. அது ஏனென்று எனக்கு இப்போது நினைவில்லை. எப்படியாவது ஒரு கத்தி வாங்கிவிடவேண்டும், அவ்வளவுதான். அதனால்தான், நான் சில பல பட்டியல்களைப் பார்த்து ஒன்றைக் குறிப்பிட்டுத் தகவல் கொடுத்தேன். நான் எப்போதும் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டிருப்பது, யாருக்குமே, ஏன், என் அம்மாவுக்குக்கூடத் தெரியாது. அது தெரிந்த ஒரே ஆள் நீங்கள் மட்டும்தான்.’’
‘’நானும்  நாளை டோக்யோவுக்குக் கிளம்புகிறேன்.’’
‘’அது சரி.’’ என்ற அவன் மெல்லப் புன்னகைத்தான். கத்தியை எடுத்து, ஒரு நிமிடம் உள்ளங்கையில் வைத்திருந்து, அது என்னவோ ரொம்ப ரொம்ப உயர்வானது போல எடை பார்த்துவிட்டு, மேஜைக்கு மேலாக நீட்டி அதை என்னிடம் தந்தான்.  நல்ல கனமும் உறுதியுமாக அந்தக் கத்தி வியக்கத்தக்கபடி இருந்தது. அது, ஏதோ ஒரு உயிருள்ள ஜீவனை, அதன் விருப்பத்துக்கிணங்க நான் கையில் வைத்திருப்பது போல இருந்தது. பித்தளைக் கைப்பிடிக்குள் மரப் பிடிமானம் செருகப் பட்டிருந்தது. கத்தி இத்தனை நேரம் அவன் சட்டைப்பைக்குள்ளேயே இருந்தும் அதன் உலோகம் குளிர்ந்தே இருந்தது.
‘’ ம், ம். சும்மா, தைரியமாகத் திறவுங்கள்.’’
கைப்பிடியின்  மேலுச்சியிலிருந்த தடத்தில் நான் அழுத்தியதும் கனத்த கத்திப்பகுதி சடக்கென்று வெளிநீட்டியது. முழுவதுமாக நீண்ட அது மூன்றங்குல நீளம் இருக்கும். கத்தி திறந்த வாக்கில் இன்னும் அதிகக் கனமாகத் தெரிந்தது. அது எடை அழுத்தம் காரணமாக அல்ல; அதன் அமைப்பு என் உள்ளங்கையில்  அப்படியொரு கனகச்சிதமாகப் பொருந்தியிருந்ததுதான். நான் அதைப் பல தடவைகள் மேலும் கீழுமாக, இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமாகச் சுற்றிச் சுழற்றிப்பார்த்தேன். சுழற்றுகையில் இருப்பு தவறி என் கையிலிருந்து விழுந்து விடாமல் தடுக்க ஒன்றும் இறுக்கிப் பிடிக்க வேண்டியிருக்கவில்லை. நான் விசையோடு சுழற்றிய போது உருக்காலான கத்திப்பகுதி ஒரு வட்ட வில்லை வெட்டியெடுத்தது.
‘’ஏற்கெனவே சொன்ன மாதிரி, எனக்குக் கத்திகள் பற்றி அதிகமாகத் தெரியாது, ஆனால் இது ஒரு அற்புதமான கத்தி. இதை வைத்திருக்கும்போது அப்படியொரு பெருமித உணர்வு தோன்றுவதை உணர முடிகிறது’’. என்றேன், நான்.
‘’ஆனால் இது  வேட்டைக் கத்திக்கு ரொம்பச்  சிறியதில்லையா?’’
‘’எனக்குத்  தெரியாது. நீங்கள் எதற்குப் பயன்படுத்துகிறீர்களோ அதைப் பொறுத்துதான் அது அமையுமென்று நான் எண்ணுகிறேன்.’’ என்றேன், நான்.
‘’ ஆமாம், அது உண்மையானது தான்.’’ என்ற அவன், தனக்குத்தானே சமாதானப்பட்டுக்கொள்வது போல பலமுறை தலையாட்டினான்.
நான் கத்தியைப் பிடிக்குள் மடித்து அவனிடம் திருப்பிக் கொடுத்தேன். அவன் அதை மீண்டும் பிரித்துக் கையில் வைத்துத் திறமையாகச் சுழற்றினான். பின்னர் துப்பாக்கியில் பார்ப்பதுபோல ஒரு கண்ணை மூடி, கத்தியை நேராக முழுநிலவை நோக்கி நீட்டிக் குறிபார்த்தான். நிலவொளி கத்தியில் பட்டு எதிரொளித்து     அவன் முகத்தின் ஒரு பக்கத்தில் மின்னிக் காட்டியது.
‘’நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்துதர முடியுமாவென்று யோசிக்கிறேன்’’. என்ற அவன் ‘’இதைக் கொண்டு நீங்கள் எதையாவது வெட்ட முடியுமா?’’ என்று கேட்டான்.
‘’எதையாவது  வெட்ட வேண்டுமா? எது மாதிரி?’’
‘’ எதுவானாலும். இதைச் சுற்றி என்ன கிடைத்தாலும் சரி. சும்மா எதையாவது நீங்கள் வெட்டுங்கள் எனச் சொல்கிறேன். நான்தான் இந்த நாற்காலியோடு கிடக்கிறேனே, அதனால் என் கைக்குக் கிடைக்கிற மாதிரி எதுவுமில்லை. எனக்காக நீங்கள் எதையாவது வெட்டிக் காட்டினால், எனக்கு மெய்யாலும் மகிழ்ச்சி.
மறுப்பதற்கான  எந்தக் காரணத்தையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாததால் நான் கத்தியை எடுத்து அருகிலிருந்த தென்னையின் அடிமரப்பகுதியில் பலமுறை குத்தி, குறுக்காகச் சீவி மேல்தோலை நறுக்கி  எடுத்தேன். பின்னர் நீச்சல் குளத்தின் அருகில் கிடந்த மலுக்கு மெத்துப் பலகைகளில் (Styrofoam kickboards) ஒன்றை எடுத்து நீட்டு வாக்கில் பாதியாகச் சீவி எறிந்தேன். கத்தி நான் நினைத்ததைவிடவும் கூர்மையாக இருந்தது.
‘’இந்தக் கத்தி மிக அருமையானது.’’ என்றேன், நான்.
‘’இது முழுக்க முழுக்கக் கைவேலைப்பாடு.’’ என்ற அந்த இளைஞன் சொன்னான், ‘’ விலையும்கூட ரொம்ப அதிகம்.’’
நான் அவன் செய்ததைப் போலவே நிலவை நோக்கிக் கத்தியை நீட்டிக்  குறி பார்த்துக் கூர்மையாக நோக்கினேன். வெளிச்சத்தில், அது  பூமியின் மேற்பகுதியிலிருந்து அப்போதுதான் முறிந்து விழுந்த ஒரு பயங்கரமான செடியின் தண்டுப்பகுதி போலத் தோன்றியது. ஒன்றுமில்லாததையும் மிகையையும் இணைக்கும் ஏதோ ஒன்று.
‘’இன்னும் எதையாவது வெட்டுங்கள்.’’ அவன் தூண்டினான்.
என் கைகளில் அகப்பட்டவற்றை, தரையில் உதிர்ந்து கிடந்த தேங்காய்கள், குரும்பைகள், வெப்பமண்டலத் தாவரம் ஒன்றின் அடர்ந்து தழைத்திருந்த இலைகள், மதுக்கூட வாயிலில் வைத்திருந்த பட்டியல் பலகை என எல்லாவற்றையும் வெட்டிச் சீவினேன். கடற்கரையில் ஒதுங்கிக்கிடந்த மரத்துண்டுகளையுங்கூட அரிந்து தள்ளினேன். வெட்டுவதற்கு எதுவும் கிடைக்காத போது, மெதுவான அசைவில் தொடங்கி, பின்னர் வெளிப்படையாகவே டாய் ச்சீ செய்வதைப் போல இரவுக்காற்றினூடே அமைதியாக வெட்டினேன். என் வழியின் குறுக்கே எதுவும் இல்லை. இரவு ஆழ்ந்த அமைதியில் கிடந்தது. காலம் இணக்கமாக, இசைவாக இருந்தது. முழுநிலவின் தண்ணொளி வேறு, அந்த அமைதியோடும் இசைவோடும் இணைந்துகொண்டது.
அப்படியாக நான் காற்றைக் கிழித்துக் கொண்டிருந்த போது, யுனைட்டெட் ஏர்லைன்ஸின் முன்னாள் பெண்-பணியாளரான அந்தத் தடிமனான பெண்ணைத் திடீரென நினைத்தேன். அவரது வெளிறிய, உப்பிய தசை, உருவமற்று, மூடுபனியைப்போல என்னைச் சுற்றிச் சூழ்ந்திருப்பதை என்னால் காணமுடிந்தது. அந்த மூடுபனிக்குள் தெப்பங்கள், கடல், வானம், ஹெலிகாப்டர்கள், விமானிகள் என எல்லாமே இருந்தன. நான் அவற்றை இரண்டு துண்டுகளாக வெட்டித்தள்ள முயன்றேன். ஆனால், உருக்காட்சி அகன்று எல்லாமே என் கத்திமுனைக்கு எட்டாத தொலைவில் தள்ளி நின்றன. இது ஒரு பொய்த்தோற்றமா? அல்லது நான்தான் பொய்த்தோற்றமா? அது ஒரு விஷயமாக இல்லாமலிருக்கலாம் தான். வருகின்ற அடுத்த நாளில் நான் இங்கே இருக்கப்போவதில்லை.
சக்கர நாற்காலி இளைஞன், ‘’சில நேரங்களில் இப்படி ஒரு கனவைக் காண்கிறேன்,’’ என்றான். ஏதோ, மலைக்குகைத் துளையிலிருந்து எழுவதைப் போல, அவன் குரலில் வழக்கமற்ற ஒரு எதிரொலி கேட்டது. ‘’என் தலைக்குள் நினைவுகள் அமிழ்ந்திருக்கும் மென்பகுதிக்குள் ஒரு கூர்மையான கத்தி குத்திப் புதைந்து கிடக்கிறது.. அது உள்ளே மிக ஆழமாகப் புகுந்திருக்கிறது. அதனால் எனக்கு எந்த வலியும் இல்லை. அல்லது அது என்னை வீழ்த்திவிடவில்லை. அது அங்கே குத்தியிருக்கிறது, அவ்வளவுதான். நான், அதை ஒருபுறமாக நின்று வேறு யாருக்கோ நிகழ்வதைக் கவனிப்பதைப் போலப் பார்க்கமுடிகிறது. அதை யாராவது இழுத்தெடுத்துவிட்டால் பரவாயில்லையே என்று எண்ணுகிறேன். ஆனால், அது என் தலைக்குள் குத்திக் கிடப்பது யாருக்கும் தெரியாது. அதை நானே ஒரே இழுப்பாக இழுத்துப் போட்டுவிட நினைக்கிறேன். ஆனால், என் கையைத் தலைக்குள் என்னால் நுழைக்க முடியவில்லை. இதுதான் விந்தைக்குள்ளும் விந்தை. என் தலைக்குள் என்னாலேயே குத்திக்கொள்ள முடிகிறது. ஆனால் அதை இழுக்கலாமென்றால் என் கைக்கு எட்டமாட்டேன் என்கிறது. அதோடு எல்லாமே மறையத் தொடங்குகிறது. நானுங்கூட வெளிறி மங்கத் தொடங்குகிறேன். ஆனால் கத்தி மட்டும் இருக்கிறது. கத்தி மட்டும் எப்போதும் அங்கேயே இருக்கிறது. முடியும்வரையில்கூட. கடற்கரையில் கிடக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் ஏதோ ஒரு பிராணியின் எலும்பைப் போல. இப்படியானதுதான் நான் கண்ட கனவு.’’

டெரோடக்டைல் – Pterodactyl – ராட்சதப் பறக்கும் பல்லிகள்.
Hunting Knife : வேட்டைக்கத்தி  என அழைக்கப்பட்டாலும்  இது வேட்டைக்குப் பயன்படுவதல்ல. வேட்டை முடிந்தபின் கொல்லப்பட்ட  பிராணியின் தோல் உரிக்கவும்  மாமிசத்தை வெட்டவும் பயன்படுத்தக்கூடியது.  வேட்டையில் பிராணிகளைக்  கொல்லப் பயன்படுவது வேட்டைக்  குத்துவாள். இது ஆங்கிலத்தில் Hunting Daggers எனப்படுவது. இக்கதையில் இளைஞன் கையிலிருந்த கத்தி தமிழில் பேனாக்கத்தி என்றழைக்கப்படும் Pocket Knife.

தமிழாக்கம் : ச. ஆறுமுகம்.
நன்றி : http://web.archive.org/web/20031122030156/http://newyorker.com/p…  என்ற வலைத்தளத்திலிருந்து HUNTING KNIFE என்ற இக்கதையின் ஆங்கிலப் பிரதி பதிவிறக்கம் செய்து பெறப்பட்டது.
மலைகள் இணைய இதழ் ஏப்ரல் 18 இதழ் 24, 2013 லும் வெளியிடப்பட்டது.



நன்றி ஆதி பதிப்பகம் மற்றும்  நண்பர் தில்லை முரளி


No comments:

Post a Comment