Showing posts with label ஒரு சொல் - தமிழ்ச்சொல். Show all posts
Showing posts with label ஒரு சொல் - தமிழ்ச்சொல். Show all posts

Monday, 12 February 2018

ஒரு சொல் - தமிழ்ச்சொல் - நிப்பாரம்.

நிப்பாரம் : 

நாஞ்சில் நாட்டில் வண்டிகளில் பாரம் ஏற்றிக் காளைகளைப் பூட்டும் முன் வண்டிக்காரர் நுகக்காலைத் தூக்கி நிறுத்தி நிப்பாரம் சரியாக இருக்கிறதா என்று கணிப்பார். நிப்பாரம் என்றால் தூக்கி நிறுத்தியதும் அது பின்பக்கமோ முன்பக்கமோ இழுக்காமல் சமநிலையிலிருத்தல். பின்பக்கம் பாரம் அதிகமாயிருந்தால் சிறிது பாரத்தை முன்பக்கம் கொண்டுவருவார்; அதுவே முன்பக்கம் அதிகமாக இருந்தால் பாரத்தில் கொஞ்சத்தை பின்பக்கம் நகர்த்திச் சரிசெய்வார். நிப்பாரம் சரியில்லாவிட்டால் மாடுகளுக்குச் சிரமம். வண்டி குடை சாயும் ஆபத்தும் உண்டு. வில் வண்டியென்றாலும் நிப்பாரம் பார்த்து கோசுப் பெட்டியிலிருப்பவரை பின்பக்கம் போகச் சொல்லவோ, அல்லது பின்பக்கம் இருப்பவரை கோசுப்பெட்டிக்கு வரச்சொல்லவோ செய்து சரிபார்ப்பார்.
நகரப்பேருந்துகளில் நடத்துநர் முன்னே போகச் சொ ன்னபோது,
நடத்துநரிடம் ஏன் நிப்பாரம் சரியாயில்லயோ எனக் கிண்டல் செய்ததும் பின்னாலிருப்பவர் முன்னாலிருப்பவரிடம், நிப்பாரம் சரியில்லையாம்பா, முன்னாலே போ என நகைச்சுவையாகக் கூறியதுமுண்டு.
இந்த நிப்பாரம் என்ற சொல்லை இணைய அகராதிகளில் தேடிப்பார்த்தேன். அப்படி ஒரு சொல் இல்லையென்றே கணினி தெரிவிக்கிறது.
வின்சுலோவின் தமிழ் - ஆங்கில அகராதியில் ``நிப்பரம்`` என்றொரு சொல் உள்ளது. இதற்கு Lightness, Swiftness பாரமின்மை என்றும் Firmness அசைவின்மை என்றும் இரண்டு பொருள் உள்ளதாக க் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாஞ்சில் நாட்டில் புழக்கத்திலிருந்த நிப்பாரம் என்ற சொல் தான் `நிப்பரம்` என உறுதிசெய்துகொள்ளலாம்.
`நிப்பாரம் இல்லாட்டா குடவண்டி சாயுமேடே`
ஜனவரி, 24, 2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது.  விருப்பம் 99, பகிர்வு - 20 பின்னூட்டம் -18

Thursday, 14 January 2016

ஒரு சொல் - தமிழ்ச்சொல் - காசு

ஒரு சொல் கேளீரோ! - தமிழ்க் காசு
தொன்மைத் தமிழ்ச் சொற்கள் உலகப் பன்மொழிகளிலும் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பழந்தமிழ்ப் பாண்டிய மன்னர்கள் சங்க காலத்திலேயே முத்திரைக் காசுகளை உருவாக்கியுள்ளனர்.  ஒன்பதுகாப் பொன்னும் நூறாயிரங் காணமுங் கொடுத்து (பதிற்றுப். 60, பதி.) என்ற தொடரிலுள்ள காணம் என்ற சொல் பொற்காசுகளைக் குறிப்பிடுகிறது. தமிழ் மொழிதான் உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி என்றும் கொண்டாடப்படுகிறது. காசு என்ற தமிழ்ச்சொல் நாணயம், பணம் என்ற பொருளில் பயன்படுவதைப்போலவே சீன மொழியிலும் காசு என்ற சொல் நாணயத்தையே குறிக்கிறது. ஆங்கில மொழியில் பணம் என்பதைக் குறிக்கும் cash என்ற சொல் தமிழ்க் காசிலிருந்து தான் உருவானது. கெய்சே என்ற பிரெஞ்சுச் சொல், இத்தாலிய காசா, லத்தீன் காப்சா என்ற சொற்களும் தமிழ்க் காசிலிருந்தே தோன்றி காசு வைக்கும் பெட்டியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.நாணயத்தைக் குறிக்கும் தமிழ்க் காசேதான் ஆங்கிலத்தில் `காயின்` என்றும் மாறியிருக்கிறது.

  
சங்ககால பாண்டியர் வெளியிட்ட செம்பு முத்திரைக் காசுகள்


கி.மு.3-2ஆம் நூற்றாண்டென மதிக்கப்பெறும் பெருவழுதி நாணயம் செப்புக்காசு



ஒரு சொல் - தமிழ்ச்சொல் - கறி - Curry

கறி ஒரு சொல் - கறி
 கறுப்பாக இருப்பதாலும் உருண்டையாக இருப்பதாலும் கறகற என உடைவதாலும் சங்க காலத்தில் கறி என்ற சொல் மிளகுக்குப் பெயராகிப் பின்னர் கறியிட்ட இறைச்சிக்கும் கறி என்றே பயன்பட்டுப் பிற்காலத்தில் மிளகு பயன்படுத்திச் செய்யப்பட்ட இறைச்சி, மீன், காய்கள், இலைகள், பூக்கள், தண்டுகள், கிழங்குகள் போன்றவற்றாலான, குழம்பு, கூட்டு, பொரியல், அவியல் பச்சடி போன்ற துணை உணவு வகைகளுக்கும் பொதுப்பெயராகப் புழங்கி வருகிறது. கறித்தேங்காய், கறிச்சக்கை, (கறிப்பலா) கறிமாங்காய், கறி மீன், கறிவேப்பிலை, கறிகாய், கறிமசாலை, கறி உப்பு, (உணவுக்குப் பயனாகும் உப்பு) எனக் கறி வைக்கப் பயன்படும் பொருட்களைக் குறிக்கவும் முன்னொட்டானது. உப்பிட்ட கறி, புளிக்கறி, புளியிலாக்கறி, கீரைக்கறி, மீன்கறி, இறைச்சிக்கறி என கறியில் சேர்க்கப்பட்டுள்ள முக்கியப் பொருளைப் பின்னொட்டாக நின்று உணர்த்துவதாயிற்று. மீன் மாமிசம் போன்ற உணவு வகைகளுக்கு மச்சக்கறி என்றும் தாவர வகை உணவுவகைகளுக்கு மரக்கறி என்றும் வழங்குவதாயிற்று. கறியின் ருசியிலும் மணத்திலும் மயங்கிப் போன ஆங்கிலேயர் கறியை விட்டுவிட மனமின்றி curry ஆக்கி ஃபிஷ்கறி, மட்டன்கறி, சிக்கன்கறி என்றே அழைக்கின்றனர்

Wednesday, 13 January 2016

ஒரு சொல் – தமிழ்ச்சொல் - கயிறு


ஒரு சொல் – தமிழ்ச்சொல் - கயிறு
தழை ஆடைகளை இடுப்பில் கட்டிக்கொள்ளத் தேவையான கொடி வகைகளைக் கையால் இறுக்கிக்கட்டியதால் கை+இறு – கையிறு – கயிறு என அழைக்கத்தொடங்கி, நாளடைவில் இறுக்கிக் கட்டப் பயன்படுகிற எல்லாவற்றுக்குமே கயிறு எனப் பொதுப்பெயர் ஏற்பட்டது. அதைத் தயாரிக்கப் பயனாகிய மூலப் பொருளின் அடிப்படையில் தென்னை நார்க் கயிறு, தென்னங்கயிறு, பனங்கயிறு, தாழங்கயிறு, கற்றாழைக் கயிறு, நூல் கயிறு, சணல் கயிறு, துணிக்கயிறு, ரப்பர் கயிறு, நெகிழிக்கயிறு எனப் புழக்கத்தில் வர, கலப்பைக் காலின் நுனியை நுகத்தில் கட்டப் பயனாகும் கயிறு மாட்டின் தொடைப்பகுதி வார்களால் தயாரிக்கப்பட்டதால் தொடைக்கயிறு என்றும் அழைக்கப்படுகிறது. பயன்பாட்டு அடிப்படையில் ஊஞ்சல் கயிறு, தொட்டில் கயிறு, பிடித்து ஏறப் பயன்படும் பிடிகயிறு, வாளிக்கயிறு, இறைவட்டிக் கயிறு, கப்பிக் கயிறு, தூண்டில் கயிறு, தூக்கிலிடுவதால் தூக்குக்கயிறு, மாடுகளை நுகத்தில் பூட்டுவதால் பூட்டாங்கயிறு, சுருக்குப் போட்டுப் பிடிப்பதால் சுருக்குக் கயிறு, தாலியைக் கோர்த்தணிவதால் தாலிக்கயிறு, இடுப்பில் அணியும் இடுப்புக் கயிறு, அரைஞாண்கயிறு, என அழைக்கப்படுகிறது.  மாட்டின் கழுத்தில் கட்டும் கழுத்துக்கயிறு, மூக்கில் பூறிக் கட்டும் மூக்கணாங்கயிறு, கொம்புகளைச் சுற்றிக் கட்டும் கொம்புக்கயிறு, மூன்றையும் இணைத்துக் கையில் பிடித்து மாட்டின் தலையை இழுத்துக் கட்டுப்படுத்துவதால் தலைக்கயிறு  எனக் கயிற்றின் புழக்கம் ஏராளம். கயிறே மூலப் பொருளாகும் கயிற்றுக் கட்டில், கயிற்று மெத்தை, கயிற்றுத் தொட்டில், கயிற்றுப் பாலம், கயிற்று ஏணி, காற்று, கருப்பு அண்டாமல் தடுக்கும் காப்புக்கயிறு, மந்திரித்துக் கட்டும் மந்திரக்கயிறு என கயிறு பயன்படும் இடங்களும் ஏராளம். கயிறு இழுத்தல், கயிறு துள்ளல் என்ற விளையாட்டுகளும் தச்சுத் தொழில் மற்றும் கட்டுமானத் தொழில்களில் கயிறு கொண்டு கோடுபோடுவதைக் கயிறடித்தல் என்பதும் வழக்கமாகிவிட்டது. கயிறா அரவா எனத் தெரியாத மயக்கநிலைக்குக் கயிற்றரவு ஆயிற்று. புதுமைப்பித்தனின் `கயிற்றரவு` ஒரு அற்புதச் சிறுகதை. இத்தனையும் போக, எமன் கையில் பாசக்கயிறு என்றும் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படியான இந்தத் தமிழ்க் கயிற்றினை பேச்சு வழக்கில் `கயறு` என்றும் `கயர்` என்றும் ஒலிப்பாருமுண்டு.
தமிழில் தோன்றிப் பிரிந்த மலையாளம் `கயறு` என்ற வரிவடிவத்தையும் `கயர்` என்ற ஒலிவடிவத்தையும் தமிழிலிருந்து தக்கவைத்துக்கொண்டது. தேங்காய் மட்டைகளை உரித்து எடுத்த கூந்தலில் கயறு தயாரிக்கப்படுவதைக் கண்ட ஆங்கிலேயர் மலையாளத் தென்னங் கயிறுகளைக் `காயர்` என ஒலித்து, அதை `coir` என வரிவடிவமாக்கி, coir industry, coir mat, coir brush, coir rope, coir எனப் பயன்படுத்துகின்றனர். 

coir rope


                                                                   
  coir mat

  கயிற்றுப் பாலம் - Rope Bridge - Ireland 






Tuesday, 12 January 2016

ஒரு சொல் - தமிழ்ச்சொல் - இட்லி


ஒரு சொல் - இட்லி
`உழுந்து தலைப்பெய்து கொழுங்களி மிதவை பெருஞ்சோறு` - உடையாத அரிசியையும் முழு உழுந்தையும் ஒன்றாகக் கலந்து  உழுந்தஞ்சோறு, உழுந்தங்கஞ்சி சமைத்து விருந்து படைப்பது சங்க காலத் திருமணங்களில் பழக்கமாக இருந்துள்ளது. பிற்காலத்தில் சமையல் கலைகளில் மாற்றம் பெறப்பெற, அரிசி மாவையும் உழுந்து மாவையும் கலந்து, புளிக்கவைத்து, தட்டில் `இட்டு` நீராவியில் `அவி`க்கும் `இட்டவி` மச்சபுராணத்தில் இட்டலியாகிப் பின்னர் நவீனத் தமிழில் `இட்லி`யாகி பேச்சுத் தமிழிலும் இட்லி என்றே  நிலைத்துவிட்டது. அதற்குத் துணையாக சாம்பார், சட்னி, மிளகாய்ப்பொடி என விதவிதமாகத் துணை வகைகளும் பெருகிப்போயின. மிகப் பழங்காலத்தில் இட்லி தயாரிப்பதற்கான நீராவிப் பாத்திரம், இட்லித்தட்டு எல்லாமே மண் பாண்டமாகவே இருந்து, பின்னர் செம்பு, பித்தளை, அலுமினியம், எவர்சில்வர், இண்டாலியம் என படிப்படியாக மாறி இப்போது குக்கர் ஆகிவிட்டது. இட்லி குட்டுவம், இட்லி குண்டான், இட்லித்தட்டு மீது விரிக்கும் இட்லித்துணி எல்லாம் இப்போது இல்லை. இட்லிக்கு மாவு ஆட்டும் ஆட்டுரல் அல்லது ஆட்டுக்கல் இப்போது மிக்சி, கிரைண்டர் ஆகிப்போனது. ஆனாலும் இட்லி வடை, சாம்பார், தோசை என்ற தமிழர் உணவில் குறிப்பாக இட்லி, அதன், மல்லிகைப் பூவின் நிறத்தோடு, மென்மையும் கொண்டமையால், எளிமையான ருசிக்கும் தன்மையால், எளிதில் செரிக்கும் தன்மையால் உண்டவர் எல்லோரையும் கவர்ந்தது. அது பிடித்துப்போக, தென்னிந்திய உணவாகிப் பின்னர் அனைத்திந்திய அளவில், உலக அளவில் காலை உணவுக்கு அருமையான உணவென்ற பெயரையும் பெற்றது. தமிழ்ப் பண்டிதர் சிலர் இட்லியை ஆங்கிலத்தில் steamed cake என்றும் தோசையை  roasted cake என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பரிந்துரை செய்ய,  ஆங்கிலேயரோ, ‘’அப்படியெல்லாம் வேண்டாம், idli, vada, dosa, sambar என்ற தமிழ்ப் பெயர்களே போதும்` எனக்கூறி, ஆங்கிலத்திலும் அப்படியே பயன்பட்டுவருகிறது.     






ஒரு சொல் - தமிழ்ச்சொல் - முத்து

ஒரு சொல் – முத்து
இற்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னர், பாண்டிய நாட்டு நெய்தல் தமிழர், கண்டெடுத்துப் பெயர் சூட்டிய முத்து உயிரிப்பொருளில் முகிழ்த்ததாக, முற்றாக முதிர்ந்து, மேற்கொண்டு முதிர்வதற்கில்லாததாக, முழுமையிலும் முழுமையாக ஒன்றுசேர்ந்து, உருண்டு, இறுகி, அழகியதாக, உறுதி மிக்கதாக, ஒளி மிக்கதாக, வழவழப்பு மேனியதாக, மதிப்பு மிக்கதாக, கிடைத்தற்கரியதாக, மேற்கொண்டு செப்பம் செய்யத் தேவையில்லாததாக, உடனடிப் பயன்கொள்ளத் தக்கதாகத் தெற்றென விளங்கித் தெரிவதாக இருந்தது. வெண்முத்து, கருமுத்து, பச்சைமுத்து, நல்முத்து, ஆணிமுத்து என முத்துவகை அறிந்த தமிழர் தேடிச் சேர்த்த கொற்கை முத்துக்கள் உலகெங்கும் மணிமுடிகளில், வெண்கொற்றக் குடைகளில் இடம் பிடித்தன. தமிழர் முத்து மண்டபம் கட்டினர்; முத்துப் பந்தல் அமைத்தனர்; முத்துப் பல்லக்கும் செய்தனர். முத்துக் கடுக்கன், முத்துத் தோடு, முத்துப் புல்லாக்கு, முத்து மாலை, முத்துச் சரம், முத்து வளையல் என அணிகலன்கள் ஆயிரமாயிரம் சமைத்தனர். ஆமணக்கினை முத்துச்செடி, முத்துக்கொட்டை என்று அழைத்தனர். தாவர விதைகளில் புளியமுத்து, வேப்பமுத்து, குன்னிமுத்து, ஆமணக்கு முத்து, மூங்கில் முத்து ஆகியவற்றை மட்டும்  முத்தாகக் குறித்தனர். முத்துச்சம்பா, முத்துச்சோளம் என்றும் தானிய முத்துக்களைச் செவ்வனே சுட்டிக் காட்டினர். எருது, மான் முதலியவற்றிற் பிறந்த கோரோசனையும் முத்துக்களாகப் பரிணமித்தன. முத்துப்பற்களை முத்து முத்தான பல்வரிசை என்றனர். சிந்தனை முத்து, சொல் முத்து, கவிதை முத்து எனக் கருத்தில் முகிழ்க்கும் முத்துக்களைக் குறித்தனர். தமிழை முத்து முத்தாக எழுதப் பழக்கினர். மழைத்துளி, பனித்துளியும் முத்துக்களாகின.  உழைப்பில் மட்டுமே வியர்வை முத்துக்கள் அரும்புவதை. கருணை நெஞ்சின் மாசற்ற அன்பில், கண்ணீர்  முத்துக்கள் முகிழ்ப்பதைக் கண்டு சொல்லினர். கடலில் மூழ்கி முத்தெடுப்பதால், முத்துக்குளித்தல் என்றனர். ஆருயிர் அன்பின் அழகிய வெளிப்பாட்டினை முத்தம் என்றே அழைத்தனர். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! மாற்றுச் சொல்வாரும் உளரோ?


 212 இயற்கை முத்துக்கள் பதித்த மணிமுடி. (பதினெட்டாம் நூற்றாண்டு)



கறுப்பு முத்து





ஒரு சொல் - தமிழ்ச்சொல் - மா

ஒரு சொல் – மா


தமிழில் `மா`  ஓரெழுத்து ஒரு மொழியாகவும் பிற எழுத்துக்களுடன் இணைந்து மாமன், மாமி, மானம், மாரி, மாடு, மான், மாமை, மாலை, மாதம், மாடம், மாடி, மாண்பு, மாட்சிமை, மாணவன், மாதர், மாந்தர், மாப்பு, மாருதம், மாணிக்கம், மாளிகை எனப் பல தனிமொழிகளை ஏற்படுத்தியும் செயற்படுகிறது. சிறப்பு, உயர்வு, பெருமை, மாட்சிமை, தலைமைசாலும் தகைமை, போன்றவை விளங்க, மாமனிதர், மாமணி, மாமன்னர், மாமேதை, மாசாத்தன், மாநாய்கன், மாமேனி, மாமுனி, மாமழை, மாமயில், மாங்குயில், மாக்குரல், மாக்கடல், மாப்பொன், மாயிருள், மாவிளம், மாவிளக்கு,  மாவீரம், மாநகர், மாமலை, என அடைமொழியாகவும் மாபேர் மனிதர், மாபேருலகு, மாபெருங்கலை, மாபெரும் ஊர்வலம் மா+இருங்கூந்தல் = மாயிருங்கூந்தல், மா+இருஞ்சோலை = மாயிருஞ்சோலை, மா+தண்ணிழல் = மாந்தண்ணிழல், என அடைமொழித் தொடராகவும் செயற்படுகிறது. மா என்பது விலங்குகளுக்கான பொதுப்பெயர் என்ற போதிலும் அரிமா, கலைமா, பாய்மா, கைமா எனக்குறிப்பிடும்போது, அந்தந்த விலங்குகளின் சிறப்பு தோன்ற நிற்பதையும் மருதமா என்னும் போது மிகப்பெரிய மருத மரம் என்றும் பொருள்விளங்க நிற்பதையும் காணுகிறோம்.  எனவே தமிழில் மா எனப்படுவது மிகச்சிறப்பானதைக் குறிப்பிடுவதென்பது தெரியவரும். இத்தன்மைய ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட மரம் மாமரம் என அழைக்கப்படுகிறதென்றால் அதன் பெருமை விரித்துரைக்காமலே விளங்கும். 60 அடி விட்டம் கொண்ட வட்டக்குடையொத்துத் தழைத்துப் பரவி,  100 – 130 அடி உயரத்துக்கு வளர்ந்து, 15 – 35 செ.மீ நீளமும் 6 – 16 செ.மீ அகலமும் கொண்ட கருஞ்சிவப்புத் தளிர் இலைகள் வளர வளர, பசுமை மாறாப் பச்சையாகி, ஆண்டுக்கு 2000 – 2500 சுவைமிக்க பழங்கள் தருகின்ற    பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் காய்க்குந் திறனோடு நீடித்து நின்று, பிஞ்சு, காய், பழம் அனைத்துமே உண்ணத்தக்கதாய், மேசை, நாற்காலி போன்ற அறைகலன்கள், யாழ் வகை இசைக்கருவிகள் தளப்பலகை, மெல்லொட்டுப் பலகை எனப் பல்வகைப் பயன்பாட்டுக்கு மூலப்பொருள் தருகின்ற மரத்தை மாமரமென்று குறித்துள்ளனர். மாந்தளிர், மாம்பூ, மாவடு, மாம்பிஞ்சு, மாங்காய், மாம்பழம், புளிமா, தேமா, மாங்கொட்டை, மாங்கிளை, மாங்குழை, மாம்பட்டை, மாம்பால் என்றும் வழங்குதல் தமிழின் வழக்காறு. தமிழின் மாம்பழமும், மாங்காயும் மலையாளத்தில் மாம்பழம், மாங்கா என்றும் கன்னடத்தில் `மாவின`, மாவு என்றும் தெலுங்கில் மாமிடி என்றும் வடமொழியில் `ஆம்` (आम) என்றும், சீனத்தில் மாங்குயோ என்றும் கொரிய மொழியில் மாங்க்கோ என்றும் ஜப்பானிய மொழியில் மாங்கோ என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மாங்காய் மலையாளத்தில் மாங்கா ஆகி, போர்த்துக்கீசிய மொழியில் மாங்கா என்றே அழைக்கப்பட்டு, ஆங்கிலத்தில் மாங்கோ என ஆகியிருக்கிறது. முதல் ஐரோப்பிய மொழிப்பதிவாக ஒரு இத்தாலிய வணிக ஒப்பந்தத்தில் மாங்கா (manga) 1500களில் பதிவாகிய  போதும் ஆங்கிலத்தில் மாங்கோ எனத் திரிந்திருக்கிறது. இப்படியாக மாங்காய் மாங்கோ ஆகி அதுவே மரத்துக்கும், காய்க்கும் இலைக்கும் ஆகிவிட்டது. தமிழில் மரத்துக்கான பெயரிலிருந்து அதன் இலை, பூ, காய், பழம் எனப் பெயர் உருவாகியிருக்க, பிற மொழிகளிலோ, மாங்காயின் பெயராலேயே அதன் மரம், பழம், பூ, காய், இலை என அழைக்கப்படுகிறது. அமெரிக்க ஆங்கிலத்தில் ஊறுகாய் போடுவது (To pickle)  என்ற வினைச் சொல்லிலும் மாங்கோ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.