Monday, 12 February 2018

ஒரு சொல் - தமிழ்ச்சொல் - நிப்பாரம்.

நிப்பாரம் : 

நாஞ்சில் நாட்டில் வண்டிகளில் பாரம் ஏற்றிக் காளைகளைப் பூட்டும் முன் வண்டிக்காரர் நுகக்காலைத் தூக்கி நிறுத்தி நிப்பாரம் சரியாக இருக்கிறதா என்று கணிப்பார். நிப்பாரம் என்றால் தூக்கி நிறுத்தியதும் அது பின்பக்கமோ முன்பக்கமோ இழுக்காமல் சமநிலையிலிருத்தல். பின்பக்கம் பாரம் அதிகமாயிருந்தால் சிறிது பாரத்தை முன்பக்கம் கொண்டுவருவார்; அதுவே முன்பக்கம் அதிகமாக இருந்தால் பாரத்தில் கொஞ்சத்தை பின்பக்கம் நகர்த்திச் சரிசெய்வார். நிப்பாரம் சரியில்லாவிட்டால் மாடுகளுக்குச் சிரமம். வண்டி குடை சாயும் ஆபத்தும் உண்டு. வில் வண்டியென்றாலும் நிப்பாரம் பார்த்து கோசுப் பெட்டியிலிருப்பவரை பின்பக்கம் போகச் சொல்லவோ, அல்லது பின்பக்கம் இருப்பவரை கோசுப்பெட்டிக்கு வரச்சொல்லவோ செய்து சரிபார்ப்பார்.
நகரப்பேருந்துகளில் நடத்துநர் முன்னே போகச் சொ ன்னபோது,
நடத்துநரிடம் ஏன் நிப்பாரம் சரியாயில்லயோ எனக் கிண்டல் செய்ததும் பின்னாலிருப்பவர் முன்னாலிருப்பவரிடம், நிப்பாரம் சரியில்லையாம்பா, முன்னாலே போ என நகைச்சுவையாகக் கூறியதுமுண்டு.
இந்த நிப்பாரம் என்ற சொல்லை இணைய அகராதிகளில் தேடிப்பார்த்தேன். அப்படி ஒரு சொல் இல்லையென்றே கணினி தெரிவிக்கிறது.
வின்சுலோவின் தமிழ் - ஆங்கில அகராதியில் ``நிப்பரம்`` என்றொரு சொல் உள்ளது. இதற்கு Lightness, Swiftness பாரமின்மை என்றும் Firmness அசைவின்மை என்றும் இரண்டு பொருள் உள்ளதாக க் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாஞ்சில் நாட்டில் புழக்கத்திலிருந்த நிப்பாரம் என்ற சொல் தான் `நிப்பரம்` என உறுதிசெய்துகொள்ளலாம்.
`நிப்பாரம் இல்லாட்டா குடவண்டி சாயுமேடே`
ஜனவரி, 24, 2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது.  விருப்பம் 99, பகிர்வு - 20 பின்னூட்டம் -18

No comments:

Post a Comment