Showing posts with label ருசியச் சிறுகதை. Show all posts
Showing posts with label ருசியச் சிறுகதை. Show all posts

Monday, 23 April 2018

ருசியச் சிறுகதை -2 - அவதூறு A Slander - By Anton Chekhov

அவதூறு  (A Slander)  
ஆண்டன் பாவ்லோவிச் செகாவ்  Anton Pavlovich Chekov (1860 – 1904)
ஆங்கிலம் வழி தமிழில் ச.ஆறுமுகம்

எழுத்துப் பேராசான், ஆசிரியர் செர்கெய் கபிட்டோனிச் அகிநீவ் அவரது மகளை வரலாறு, புவியியல் ஆசிரியருக்கு மணமுடித்துக் கொடுக்கவிருந்தார். மண விழாக் குதூகலக் கொண்டாட்டங்கள் உச்சத்திலிருந்தன.  வரவேற்பு அறையில் ஒரே பாட்டு, நடனம், கும்மாளம்! வாடகைக்கமர்த்தப்பட்டிருந்த மகிழ் மன்றகப் பரிமாறுகைப் பணியாளர்கள் கருநிறப் பட்டாம்பூச்சி ஆடையும் அழுக்கடைந்த வெண்ணிறக் கழுத்துப் பட்டியும் அணிந்து அங்கும் இங்குமாக, அறை, அறையாகப் பறந்து பறந்து கவனத்தை ஈர்த்தனர். ஆரவாரக் கூச்சலும் உரையாடல்களின் உரத்த ஒலிகளும் அளவு மீறித் தொடர்ந்தன. சாய்மெத்தையில் பக்கம்பக்கமாக அமர்ந்திருந்த கணித ஆசிரியரும் பிரெஞ்சு ஆசிரியரும் இளநிலை வரிக் கணக்கீட்டாளரும் உயிரோடு புதைக்கப்பட்டவர்கள் குறித்த நேர்வுகள் பற்றியும் ஆன்மீகம் பற்றிய கருத்துகளையும் விருந்தினர்களுக்கு, ஒருவரையொருவர் மறித்து, வேக வேகமாக உரைத்துக்கொண்டிருந்தனர். அவர்களில் யாரும் ஆன்மீகத்தை நம்பவில்லை; ஆனால், இந்த உலகில் பல நிகழ்வுகள் எப்போதுமே மனித மனத்தையும் கடந்ததாக இருப்பதாக எல்லோரும் ஒப்புக்கொண்டனர். அடுத்த அறையில் இலக்கியப் பேராசான், வழிநடையாகக் கடந்து செல்பவர்களைக்கூடச் சுடுவதற்கான உரிமை படைக்காவலாளுக்கு இருக்கும் நேர்வுகளைப் பற்றிப் பார்வையாளர்களுக்கு விவரித்தவாறிருந்தார். அவரிடம் அகப்பட்டுக் கொண்டவர்கள், நீங்கள் மனக்கண்ணில் காண்பதுபோலவே, விழிபிதுங்க, ஒருவித பீதியில் கேட்டுக்கொண்டிருந்தாலும் அதனை முழுக்க ஏற்றுக்கொள்பவர்களாகவே இருந்தனர். மணவீட்டுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்ட சமூகப் படிநிலையில் கீழிருந்த மனிதர்கள் முற்றத்திலிருந்தவாறே, சாளரங்கள் வழியாக எட்டிப்பார்த்து நின்றனர்.
நடு இரவானதும் வீட்டின் உரிமையாளர், இரவு விருந்துக்கான அனைத்தும் தயாராகிவிட்டனவா எனப் பார்ப்பதற்காகச் சமையலறைக்குச் சென்றார். சமையலறையின் தரைத்தளம் முதல் கூரை வரையிலுமாக, வாத்து  மணமும் உயரவகைப் பெருவாத்து மற்றும் பல்வகைக் கறிமணங்களும் கலந்த புகை மண்டலமாக நிறைந்திருந்தது. இரண்டு மேஜைகளில் குடி வகைகள்,  மெல்லூக்கப் பானங்கள், தேவையான உபகரணங்களுடன் ஒரு கலைத்தன்மை பொருந்திய ஒழுங்கற்ற பரவலாக வைக்கப்பட்டிருந்தன. இடுப்புப் பட்டை சுற்றிய பீப்பாய் போன்றிருந்த சிவந்த முகத்துப்பெண்ணான சமையலர், மார்ஃபா மேஜைகளுக்கிடையே அமளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.
”ஸ்டர்ஜியான் மீனை எனக்குக் காட்டு, மார்ஃபா,” என்றார், அகிநீவ், உள்ளங்கைகளைத் தேய்த்துக்கொண்டும், உதடுகளை நாவால் தடவிக்கொண்டும். ‘’என்ன ஒரு மணம்! முழுச் சமையலையும் நானே சாப்பிட்டுவிடுவேன். வா, ஸ்டர்ஜியானை எனக்குக் காட்டு.”
அங்கிருந்த பெஞ்சுகளில் ஒன்றை நோக்கிச் சென்ற மார்ஃபா மிகுந்த கவனத்துடன், எண்ணெய் படிந்த செய்தித்தாள் விரிப்பு ஒன்றினை ஒருபக்கமாகத் தூக்கி உயர்த்திப் பிடித்தாள். செய்தித்தாளின் கீழே எண்ணெய் மசாலாவுக்குள் மூழ்கடிக்கப்பட்ட மிகப் பெரிய ஒரு ஸ்டர்ஜியான் மீது பசுங்கீரைகள், ஆலிவ்கள் மற்றும் காரட்டுச் சீவல்களால் அலங்கரிக்கப்பட்ட மகத்தான ஒரு கறி. அகிநீவ் ஸ்டர்ஜியானை விரிந்த கண்களால் பார்த்து வாய் பிளந்தார். அவரது முகம் ஒளிமிக்கதாகப் பரந்து, அவரது கண்கள் மேல்நோக்கி உயர்ந்தன. அப்படியே கீழ் நோக்கிக் குனிந்த அவரது உதடுகள் மையற்ற சக்கரத்தின் ஒலியொன்றை உமிழ்ந்தன.  ஒரு கணம் அங்கேயே நின்று கைவிரல்களில் சுடக்கொலியினை எழுப்பி மகிழ்ந்து மீண்டும் ஒருமுறை உதடுகளை மடித்துச் சுவைத்துக்கொண்டார்.
”ஆஹ் ஹா! என்னவொரு அன்பான முத்தத்தின் ஒலி …..” ”இளம் மார்ஃபாவே, அங்கே யாரை முத்தமிடுகிறாய்?” அடுத்த அறையிலிருந்துதான் அந்தக் குரல் கேட்டது; கூடவே கதவுநிலையில் கிராப்புத் தலையுடன் நின்றார், உதவி வரவேற்பாளர், வான்கின். “யார் அது? ஆ-ஹ்! …. உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! செர்கெய் கபிட்டோனிச்! நீங்கள் ஒரு அருமையான தாத்தா, இதை நான்  சொல்லியேயாகவேண்டும்!”
“நான் எதையும் முத்தமிடவில்லையே,” என்ற அகிநீவ், குழப்பத்துடன்,  “முட்டாளே, யார் அப்படிச் சொன்னது? நான் வெறுமனே….. உதட்டைச் சப்புக்கொட்டினேன் ….. அது …. மீனைப் பார்த்த…..   ஒரு சந்தோஷத்தின் அடையாளம்.”  என்று விளக்கமும் அளிக்க முயன்றார்.
“அதை அந்தக் கப்பல்காரர்களிடம் போய்ச் சொல்லுங்கள்!” உறுத்து நோக்கும் பார்வை மறைந்து, பற்களைக் கரகரக்கும் கடுப்பான முகமாக மாறியது.
அகிநீவுக்குக் குப்பென்று வியர்த்தது.
“ சனியனைத் தூக்கில் போடவேண்டும்!” என நினைத்த அவர், “இந்த நாய் இப்போது வெளியே போய் அவதூறு கிளப்பும். கழுதை, ஊர் முழுக்க என்னைக் கேவலப்படுத்தும்.”
வரவேற்பு அறைக்குள் மருட்சியுடன் நுழைந்த அகிநீவ், வான்கின் இருக்கிறானாவெனச் சுற்றிலுமாக ஓரப் பார்வை பார்த்தார். வான்கின், பியானோ அருகில் நின்று நகைத்துக்கொண்டிருந்த ஆய்வாளரின் மைத்துனியிடம் எதைப்பற்றியும் துளிகூடக் கவலையில்லாத போக்கில், குனிந்து ஏதோ இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.       
“என்னைப்பற்றித்தான் பேசுகிறான்!” என நினைத்தார், அகிநீவ். “என்னைப்பற்றித்தான், உதைக்கவேண்டும் அவனை! அவள் வேறு அதனை நம்பித்தொலைக்கிறாள்…. சிரிக்கிறாள்! அய்யோ நம்பிவிட்டாள்! கடவுளே, கருணை காட்டுங்கள்! இல்லை, இதை நான் அப்படியே விட்டுவிடமுடியாது. …. .. இது அப்படியே நீடிக்கக்கூடாது… எல்லோரும் நம்புவதைத் தடுக்க ஏதாவது செய்தாக வேண்டும். ….. எல்லோரிடமும் நான் பேசியாக வேண்டும், அவன் ஒரு முட்டாள் என்பதோடு வம்பு பேசுகிறவன் என்பதையும் காட்ட வேண்டும்.”
அகிநீவ் தலையைப் பிய்த்துக்கொண்டதோடு பெருத்த தர்மசங்கடத்தில் தவித்து, பிரெஞ்சு ஆசிரியரிடம் சென்றார்.
”இரவு உணவு வேலை எப்படியாகயிருக்கிறதென்று பார்ப்பதற்காக, இப்போதுதான் சமையலறைக்குப் போயிருந்தேன்,” என அந்த பிரெஞ்சுக்காரரிடம் தொடங்கிய அவர், “ எனக்குத் தெரியும் உங்களுக்கு மீன் என்றால், கொள்ளைப் பிரியமாயிற்றே. எனது அன்பான நண்பரே, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு ஸ்டர்ஜியான் சமைத்திருக்கிறோம்! ஒன்றரை கஜம் அதாவது நாலரை அடி நீளம்! ஹ,ஹ,ஹா! அப்புறம் …… ….. கொஞ்சம் மறந்துவிட்டேன் … …. சமையலறையில் அந்த ஸ்டர்ஜியானை வைத்து … …  ஒரு சின்ன சம்பவம் … இப்போதுதான் இரவு உணவுப் பதார்த்தங்களைப் பார்ப்பதற்காகச் சமையலறைக்குப் போய்வந்தேன். ஸ்டர்ஜியானைப் பார்த்து ஆசையோடு என் உதடுகளை மடித்துச் சப்புக்கொட்டினேன்…… …. என்னவொரு சுவாரசியமான மணம்., ஆஹா. அந்த மிகச்சரியான தருணத்தில், அந்த முட்டாள் வான்கின் உள்ளே வந்து சொல்கிறான் …… “ஹ, ஹ, ஹா! ஆ, நீங்கள் இங்கே முத்தமிட்டுக்கொண்டிருக்கிறீர்களா?” சமையலர், மார்ஃபாவை முத்தமிடுவது! எப்படியான ஒரு கற்பனை பாருங்கள், அடி முட்டாள்! அவளுக்கு ஏற்கெனவே ஒரு, சரியான ஒரு கோர முகம், எல்லாப் பிராணி முகங்களையும் ஒன்றாகச் சேர்த்துச் செய்த மாதிரி, அந்தப் பெண்ணைப் போய் முத்தமிடுவதாம், என்ன பேச்சுப் பேசுகிறான் பாருங்கள்! மக்கு மீன்!”
“யார் அந்த மக்கு மீன்?” எனக் கேட்டுக்கொண்டே வந்தார் கணித ஆசிரியர்.
“ஏன், அவன்தான் …. வான்கின்! நான் சமையலறைக்குப் போயிருந்தேனா … .. ”
அப்படியே அவர் வான்கின் கதையைச் சொன்னார். “ ….. மக்கு மீன், என்னைப் பொங்கப் பொங்கச் சிரிக்கவைத்துவிட்டான்! என்னைக் கேட்டால் சொல்வேன், ஒரு நாயைக் கூட முத்தமிட்டாலும் முத்தமிடுவேன், ஆனால் மார்ஃபாவைப் போய்,” என்றார் அகிநீவ். அவர் சுற்றிலும் பார்த்தார்; இளநிலை வரிக் கணக்கீட்டாளர் மிகச்சரியாக அவரின் பின்னால்தான் நின்றார்.
”வான்கினைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம், “ என்றார். “மக்கு மீன், அவன் தான்! அவன் சமையலறைக்குள் வந்தானா, மார்ஃபாவின் பின்னால் நான் நிற்பதைப் பார்த்தானா, முட்டாள்தனமாகக் கதை கட்டத் தொடங்கிவிட்டான்.  “நீங்கள் ஏன் முத்தமிட்டீர்கள்?” எனக் கேட்கிறான். ஒரு துளி அதிகமாகத்தான் அவன் குடித்திருக்கவேண்டும். `மார்ஃபாவை விட நான் வான்கோழியின் பின்புறத்தைக் கூட முத்தமிட்டிருப்பேன்,` என்றேன், நான். “அதுமட்டுமில்லை, முட்டாளே, எனக்கென்று ஒரு மனைவி இருக்கிறாள், “ என்றேன். உண்மையிலேயே அவன் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டான்!”
“யார் உங்களை ஆச்சரியப்படுத்தியது?” எனக் கேட்டவாறே, பள்ளியில் மதநூல் கற்பிக்கும் பாதிரியார், அகிநீவிடம் வந்தார்.
“வான்கின். நான் சமையலறையில் நின்றுகொண்டிருந்தேனா, அதுதான், ஸ்டர்ஜியானைப் பார்த்துக்கொண்டு … … “
இப்படியே தான் போய்க்கொண்டிருந்தது. அரைமணி நேரம் போல ஆகியிருக்கும் ஸ்டர்ஜியான் – வான்கின் சம்பவத்தைப் பற்றி விருந்தினர் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
“இப்போது சொல்லட்டும் அவன்!” எனக் கறுவிக்கொண்டார், அகிநீவ், உள்ளங்கைகளை உரசித் தேய்த்துக்கொண்டே. “சொல்லட்டும் அவன்! கதையை அவன் சொல்லத் தொடங்கும் முன்பாகவே எல்லோரும் அவன் மூஞ்சியில் அடித்த மாதிரியில், “போதும், முட்டாளே, உன் அடாவடி முட்டாள் தனம், அதைப்பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும்!” என்பார்கள்.
அத்துடன் அகிநீவ் `அப்பாடா` என ஆசுவாசமாகி, அந்த மகிழ்ச்சியிலேயே எத்தனையோ அதிகமான நான்கு கோப்பைகள் குடித்தார். இளம் மணமக்களை அவர்களின் அறைக்கு அனுப்பிவைத்துவிட்டு, அவர் படுக்கையில் போய் விழுந்து ஒரு பச்சைக்குழந்தையைப் போல உறங்கி, மறுநாள் காலை அந்த ஸ்டர்ஜியான் சம்பவத்தை நினைத்துப்பார்க்கக்கூட மறந்துவிட்டார். ஆனால்,   பரிதாபம்! மனிதன் ஏதோ ஒன்றினை நினைக்கிறான்; ஆனால்,  கடவுள் வேறு மாதிரி அல்லவா நினைக்கிறான்! ஒரு கெட்ட நாக்கு அதன் கெட்ட வேலையைச் செய்திருக்க, அகிநீவின் தந்திரமோ பலிக்கவில்லை. ஒரு வாரம் தான் கழிந்திருக்கும் – குறிப்பாகச் சொல்வதென்றால், புதன் கிழமை மூன்றாம் பாடவேளைக்குப் பின், ஆசிரியர் அறை நடுவில் நின்று, அகிநீவ், வைஸ்கின் என்ற மாணவனின் தீய மனப்போக்குகள் பற்றி விளக்கிக்கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியர் நேராக அவரிடம் வந்து தனியாக அழைத்துக்கொண்டு போய், “இங்கே பாருங்கள், செர்கெய் கபிட்டோனிச், “முதலில் என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும் … … … இது என் வேலையில்லை; ஆனால், எப்படியும் நான் உங்களுக்குப் புரியவைத்தேயாகவேண்டும்… … … அது என் கடமை. பாருங்கள், நீங்கள் அந்த, … .. அந்தச் சமையலரோடு .. .. காதல் களியாட்டமாடுவதாக வதந்திகள் வருகின்றன. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, ஆனால் அவளை உரசுவீர்களோ, முத்தமிடுவீர்களோ … … அது உங்கள் விருப்பம், ஆனால், அதை தயவுசெய்து, எல்லோருக்கும் தெரியும்படி செய்யாதீர்கள். உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்! நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதை மறந்துவிடாதீர்கள்.”              
அகிநீவ் குளிரில் விரைத்தது போலாகி உணர்வற்ற நிலைக்கு ஆளானார். தேன் கூட்டின் மொத்த ஈக்களிடமும் கொட்டு வாங்கிய ஒரு மனிதன் போல், கொதிநீரில் வெந்துபோன ஒரு மனிதனைப்போல அவர் வீட்டுக்கு நடந்துசென்றார். அவ்வாறாக அவர் நடந்துசெல்கையில் தார்ச்சட்டியைத் தலையில் கவிழ்த்துக் கறைப்பட்டுக்கொண்டது போல் மொத்த நகரமும் அவரையே பார்ப்பது போல அவருக்குத் தோன்றியது. வீட்டில்  புதியதான பிரச்சினை ஒன்று அவருக்காகக் காத்திருந்தது.    
”எப்போதும் போல சாப்பாட்டை விழுங்கித் தொலைக்கவேண்டியதுதானே, இன்றைக்கு என்ன ஆயிற்று?” என, உணவு மேஜையில் கேட்டாள், மனைவி. “ஏன் கிறக்கமாக இருக்கிறீர்கள்? உங்கள் காதல் களியாட்ட நினைப்போ? உங்கள் மார்ஃபா மீதான ஏக்கமோ? எனக்கு எல்லாம் தெரியும், முரட்டு மனிதனே! என்னுடைய உயிர்த் தோழிகள் என் கண்களைத் திறந்துவிட்டார்கள்! நீ – நீ - நீ! .. .. ..ஒரு காட்டுமிராண்டி !”
முகத்திலேயே அறைந்தாள், அவள். மேஜையிலிருந்து எழுந்த அவர், காலுக்குக் கீழாக பூமி நழுவிவிட்டது போலாகி, கோட்டும் தொப்பியும் மறந்து, வான்கின் வீட்டை நோக்கிப் புறப்பட்டார். அவனை அவன் வீட்டிலேயே பிடித்துவிட்டார்.
எடுத்த எடுப்பிலேயே, “ஏண்டா, அயோக்கியப்பயலே!” என்றவர், “இந்த ஊர் முழுவதும், என்மீது சேற்றை வாரி இறைத்திருக்கிறாயே, ஏண்டா இப்படி? என் மீது இந்த அவதூற்றினைக்  கிளப்பிவிட்டிருக்கிறாயே, ஏன்?” எனப் பொரிந்தார்.   
“என்ன அவதூறு? எதைப்பற்றிப் பேசுகிறீர்கள்?”
“மார்ஃபாவை நான் முத்தமிட்டதாக யார் வதந்தி கிளப்பியது? நீதானே? சொல்லுடா, நீதானே அது, திருட்டுப் பயலே?”
வான்கின் பேந்தப் பேந்த விழித்தான். அவனுடைய மறுமொழியின் ஒவ்வொரு முனையும் வெட்டி முறிக்கப்பட, புனிதச் சிற்பத்தை நோக்கி விழிகளை உயர்த்திய அவன், “உங்களைப் பற்றி நான் ஒரு வார்த்தை பேசியிருந்தாலும், கடவுள் என்னைத் தண்டிக்கட்டும்! என் கண்களைக் குருடாக்கட்டும்! என்னைத் தூக்கி வெளியே எறியட்டும் ! வீடு வாசல் இல்லாமல்  தெருத் தெருவாக அலைய வைக்கட்டும்! காலராவை விடவும் மோசமான நீக்கம்பு என்னைப் பீடிக்கட்டும்!” என்று சத்தியம் செய்தான்.
வான்கினின் வாய்மையில் எந்த ஐயுறவுக்கும் இடமில்லை. அந்த அவதூறினைக் கிளப்பியது அவனல்ல என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.
“அப்படியானால் யார், அது யார்?” மனதுக்குள் யார் யாரையெல்லாமோ நினைத்து, மார்பில் அடித்துக்கொண்டு அகிநீவ் கலங்கித்தவித்தார். “அப்படியென்றால் யார்?” 
Source :  http://www.classicshorts.com/bib.html#slander 

அடவி சிற்றிதழில் வெளியானது.

Sunday, 2 July 2017

ருசியச் சிறுகதை - பெருந்தலைக் காதல் - மாக்சிம் கார்க்கி - Fat Faced Passion

பெருந்தலைக் காதல் ( FAT FACED PASSION ) 

ருஷ்ய மொழி : மாக்சிம் கார்க்கி MAXIM GORKY  ஆங்கிலம் வழி தமிழில் ச.ஆறுமுகம்



Image result for maxim gorky



அது, கோடைகாலப் புழுக்கமான இரவு. குடிகாரப் பெண் ஒருத்தி சேற்றுக் குட்டைக்குள் முழங்கால் மூழ்க, இறங்கி நின்று விரசப்பாடல் ஒன்றின் இராகத்துக்கு உடலசைத்து ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்தவழியே வருகிற அந்நியன், இருபத்தொரு வயது லியோனிட், அந்தப்பெண் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கிவிடுவாளோவெனப் பயந்து, அவளைக் குட்டையைவிட்டு வெளியே இழுக்கிறான். அவளோ, அந்த அந்நியனை முறைத்து விரட்டி, உதவி,உதவியெனக் கூச்சலிட்டு, மீண்டும் குட்டைக்குள் செல்ல விரைகிறாள். இரவுக் காவலன் அங்கு வந்து, அந்தப் பெண் உள்ளூர் மாஷா தான் எனக் கண்டுகொள்கிறான். கால்கள் ஊனமுற்ற ஒரு மகனிருக்கிற அவள் தினமும், ஒருநாள் இரவு கூடத் தவறாமல் இப்படித்தான் பிரச்சினை செய்கிறாள். இருவருமாகச் சேர்ந்து அவளை வீட்டில்கொண்டுபோய்ச் சேர்த்துவிடலாமென லியோனிட் யோசனை சொல்கிறான். அவனுக்கு விருப்பமானால், அவன் அப்படிச் செய்துகொள்ளலாமென்றும், ஆனால், அதற்குமுன் அவள் முகத்தை ஒருமுறை பார்த்துவிடுமாறும் அறிவுரை சொல்லிவிட்டு, அந்த இரவுக்காவலன் இடத்தை விட்டகன்று செல்கிறான்.
மீண்டும் மாஷாவைத் தண்ணீரிலிருந்து இழுத்துக்கொணர்ந்த லியோனிட் இம்முறை அவளது முகத்தைப் பார்க்கிறான் – தழும்புகள் நிறைந்து, விகாரமாகச் சிதைந்த ஒரு முகம். லியோனிட் அவளை, அவளுடைய தூய்மையற்ற அடித்தளக் குடியிருப்பில்லத்துக்கு அழைத்துச் செல்கிறான். அவர்கள் உள்ளே நுழையும்போது, மாஷாவின் 12 வயது மகன், அவன் பெயரும் லியோனிட்தான், லயாங்கா எனச் சுருக்கமாக அழைக்கப்படுபவன் விளக்கினை ஏற்றுகிறான். மாஷா, அப்படியே படுக்கையில் விழுந்து, ஆழ்ந்து உறங்கத் தொடங்குகிறாள். லியோனிட் அவளது ஈர உடையைக் களைந்து சூட்டடுப்பின் மீது காயப் போடுகிறான். அவன் அங்கேயே தங்கி, மாஷாவுடன் படுத்துக்கொள்ளப் போகிறானாவென, லயாங்கா கேட்கிறான். ………. அப்படித்தான் எல்லோரும் செய்வதாகச் சொல்கிறான், சிறுவன், லயாங்கா.
அவனுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பினை மறுதளித்த லியோனிட், கால்கள் இழந்த சிறுவனுடன் பேசுவதற்காக அமர்கிறான். சிறுவன் மகிழ்ச்சியோடு அவனது உயிரினச் சேகரிப்புகளைக் காட்டுகிறான்: சிறுசிறு பெட்டிகளில் ஈ, கரப்பான், பூச்சிகள், வண்டுகள்; பல்வகைப் பண்பியல்புகளையும் அவற்றின் மீது ஏற்றி, அதற்கேற்ப அவற்றுக்குப் பெயர்களையும் சூட்டியுள்ளான். ஒரு இராணுவத்தான் போல் தற்புகழும் அனிசிம் என்ற பெயரில் ஒரு கரப்பான், ஒன்றுக்கும் உதவாத ஒரு உண்மையான கழிசடை `அதிகார வர்க்கத்தினன்` (பியூரோகிரட்) என்ற பெயரில் ஒரு ஈ, எதற்குமே பயனில்லாத, வெட்கங்கெட்ட ஒரு குடிகார `நிலப்பிரபு` என மற்றொரு கரப்பான். விட்டில் மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் தாம் அங்கே இல்லை. அது துரதிர்ஷ்டம் தான்.
நெஞ்சு நிமிர்ந்த ஒரு புன்னகை முகத்தோடு, அவனது அம்மா ஒரு மாபெரும் ஆளுமை என்கிறான், லயாங்கா. கொஞ்சம் அதிகக் குடி அவ்வளவுதான், என்றும் சொல்கிறான்.
லியோனிட் ஒரு திருடன் போலிருப்பதாக லயாங்கா நினைக்கிறான்; ஆனால், அவன் ஒரு க்வாஸ் மது விற்கும் பணியாளன்தானென்பதைப் பின்னர் கண்டுகொள்கிறான். அந்தச் சிறுவனை லியோனிடுக்கு மிகவும் பிடித்துவிட, அவன் கண்டிப்பாக மீண்டும் வந்து பார்ப்பதாகச் சிறுவனுக்கு உறுதி கூறுகிறான். சிறுவன் அவனிடம், கொஞ்சம் க்வாஸும் அவனது பூச்சிகளுக்காகக் கொஞ்சம் பெட்டிகளும் கொண்டுவருமாறு கேட்கிறான்.
வீட்டுக்குத் திரும்பியபின், லியோனிட் ஒரு கடைக்குச் சென்று, அழகும் நேர்த்தியும் கொண்ட சில பெட்டிகளை வாங்குகிறான். அவன் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள சிறுவர்களிடம் பூச்சிகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்துவரச் சொல்கிறான். பின்னர், பூச்சிகள், பெட்டிகள், அப்பங்களுடன் வட்டரொட்டிகளையும் எடுத்துக்கொண்டு லயாங்காவிடம் செல்கிறான். பரிசுப் பொருட்களைக் கண்டதும் வியப்பில் அதிர்ந்துபோகிற லயாங்கா, அந்தப் பெட்டிகளைத் தொடும் முன்பு கைகளைக் கழுவிவிடச் சொல்கிறான். மாஷா, மகனைக் கட்டிப்பிடித்துச் செல்லம் கொஞ்சுகிறாள். புதுவரவுப் பூச்சிகளில் ஒன்று, பெண் தோழிகளைப் பிந்திய இரவுகளில் சந்திப்பதற்காகச் சாளரங்களில் ஏறுவதற்கு வசதியாகக் கயிற்று ஏணி செய்யுமாறு மாஷாவைக் கூலிக்கமர்த்திய துறவியைப் போலவே இருப்பதாக, லயாங்கா, அவளிடம் சொல்கிறான். தேநீர்ப் பானையை அடுப்பில் ஏற்றுமாறும் சொல்கிறான். சர்க்கரை வாங்கிவருமாறு மாஷாவிடம் லியோனிட் காசு கொடுக்கிறான். புறப்பட்டுச் செல்கிற மாஷாவிடம், லயாங்கா, அவனது அடித்தளச் சாளரத்தை, வெளி உலகத்தைப் பார்க்க வசதியாக, அப்படியே சுத்தம் செய்துவிடுமாறு சொல்கிறான்.
அவள் சென்ற பின்னர், அவனது அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடல்களில் ஒன்றைப் பாடத் தொடங்குகிறான், லயாங்கா; இருந்தாலும், வெளியே ஒரு ஆர்மோனியத் தெருப்பாடகன் பாடும் சத்தத்தைக் கேட்டு, பாடுவதை நிறுத்துகிறான். சாளரம் வழியாகப் பார்ப்பதற்காக, அவனைத் தூக்கிக் காட்டுமாறு லியோனிடைக் கேட்கிறான். லியோனிட் அப்படியே செய்கிறான். அக்கம்பக்கத்தினர் சிலர், அந்த ஆர்மோனியத் தெருப்பாடகனை அங்கிருந்து துரத்துகின்ற வரையில், அவன் இசைப்பதைப் பார்த்தும் இசையினைக் கேட்டும் பரவசமாகிறான், லயாங்கா.
பின்னர், லயாங்கா, அவனுக்கு ஏற்படும் திகில் கனவுகளைப் பற்றி லியோனிட்டிடம் சொல்கிறான். ஒரு முறை அவன் தலைகீழாக வளரும் ஒரு மரத்தைக் கனவுகண்டான்; வேறொரு நாள் நாய் ஒன்று அவனது அம்மாவின் குடலைக் கடித்துத் தின்று, தின்று வெளியே துப்பியது. ஆனாலும், அவனொன்றும் அந்தத் திகில் கனவுகளால் பயந்துவிடவில்லை, என்கிறான், அவன்.
லியோனிட் கொண்டுவந்த மிட்டாய்களில் ஒன்றைத் தின்றுமுடித்த அவன், தாளினைக் கவனமாகத் தடவி, அழுத்திச் சமப்படுத்துகிறான். அவனது ஒரே தோழியான தண்ணீர் சுமக்கும் கட்காவுக்கு ஏதேனும் அழகுப்பொருள் செய்வதற்கு, அவன் அதை உபயோகப்படுத்திக்கொள்வான். கண்ணாடித் துண்டுகள், மண்பாண்டம் மற்றும் அட்டைத் தாள் துண்டுகள் போன்ற அழகான பொருட்களை மட்டுமே அவள் விரும்புகிறாள்.
பின்னர் லயாங்கா, “ கரப்பான் பூச்சி ஒன்றுக்குப் போதிய அளவுக்குத் தீனி கொடுத்தால் ஒரு குதிரை அளவுக்குப் பெரியதாக வளருமா?” எனக் கேட்கிறான். அந்தச் சிறுவன் அதனை நம்புவதைப் பார்த்து, லியோனிட் `ஆம்` என்கிறான். லயாங்காவுக்கு மகிழ்ச்சி; அவனது அம்மா இந்தப் பேச்சினைக் கேட்டு நகைப்பதாகக் கூறுகிறான். ஈக்களை நாய்கள் அளவுக்கும் கரப்பான்களை குதிரைகள் அளவுக்கும் பெரியனவாக வளரச்செய்வதாகக் கனவுகாண்கிறான். அந்தக் கரப்பான்களை செங்கல் இழுக்கப் பயன்படுத்த முடியும்; அதற்கான கட்டுக்கயிறுகளாக அவற்றின் உணர்கொம்புகள் பயன்படும். அப்படியான இராக்கதக் கரப்பான்களை விற்று அந்தப் பணத்தை, லயாங்கா, அவனது அம்மாவுக்காக திறந்த வெளியில் ஒரு வீடு வாங்குவதற்குப் பயன்படுத்தமுடியும்.
லியோனிட் எப்போதாவது திறந்த வயல்வெளிக்குச் சென்றிருக்கிறானாவென சிறுவன் கேட்க, அவன், வயல்களையும் சமவெளிகளையும் விவரிப்பதைக் கண்ணிமைக்காமல், ஆர்வத்துடன் கேட்கிறான். திறந்த ஒரு வெளியினை அவன் பார்க்க விரும்புவதாகவும், அப்படி எப்போதாவது அங்கு செல்ல நேர்ந்தால், அவனுடைய உயிரினச் சேகரிப்புகளையும் எடுத்துச் சென்று, வயலில் விட்டுவிடுவானென்றும் கூறுகிறான்.
மாஷா, சர்க்கரை மற்றும் வோட்காவுடன் வீடு திரும்புகிறாள். அம்மா, அவனது சாளரத்தைத் தூய்மைப்படுத்தாதபோது மட்டும் அவனுக்கு அம்மா மீது கிறுக்குத்தனமான கோபம் ஏற்படுகிறதென்கிறான், லயாங்கா. தேநீர் வழங்கப்படுகிறது. லயாங்கா பெரியவனாக வளரும்போது, அம்மா, அவனுக்கு ஒரு வண்டி செய்து தருவாளென்றும் அதில் சென்று அவன் நகருக்குள் பிச்சையெடுப்பானென்றும் அவன் சொல்கிறான். அதோடு, அவன் ஒரு திறந்த வெளி வயலையும் பார்ப்பானாம். திறந்த வயல் என்னமோ சொர்க்கமாக இருக்குமென்று அவன் கற்பனைசெய்வதாகச் சொல்லிச் சொல்லி, அம்மா சிரிக்கிறாள். அங்கே, தொல்லைகொடுக்கும் இராணுவத்தான்களோடு குடிகார உழவர்களையும் சிறைமுகாம்களையும் அவன் காணவேண்டியிருக்குமென்று அம்மா நினைவூட்டுகிறாள். அவர்களும் குழந்தைகளாகிவிட்டதைப் போலவே இது குறித்த விவாதத்தில் ஈடுபட்டனர்.
லயாங்கா நன்கு களைத்துவிட்டிருந்தான்; இருந்தாலும், லியோனிட் அவனைவிட்டுப் போய்விடுவானென்ற பயத்தினால் தூங்க விரும்பவில்லை. அவனைத் தங்கச்செய்வதாக மாஷா வாக்குறுதி கொடுக்கிறாள். தூங்கிவிழும் முன்பு, லயாங்கா, அம்மாவிடம், அவள் லியோனிடைத் திருமணம்செய்ய வேண்டுமென்கிறான்…. அவன் நல்லவன், அவளை அடிக்க மட்டுமே செய்கிற மற்றவர்களைப் போல் இல்லை.
சிறுவன் ஆழ்ந்து தூங்கியதும், வாழ்க்கையில் அவளுக்கான ஒரே ஆறுதல் லயாங்கா தானென்றும் அவனை நினைத்து அவள் ரொம்பவே பெருமைப்படுவதாகவும் மாஷா, லியோனிட்டிடம் கூறுகிறாள். அவனுடைய தந்தை, அவள் பணிப்பெண்ணாக வேலை பார்த்த பழைய நோட்டரி என்றும் கூறுகிறாள்.
அந்த நாளினை லயாங்காவுக்கான விடுமுறை நாளாகச் செய்ததற்காக, மாஷா, லியோனிட்டுக்கு நன்றி சொல்கிறாள். அவளது கையினை, அவனது மூட்டின் மீது வைத்துக்கொண்டு, அவனுக்குத் திருப்பிச் செலுத்த விரும்புவதாக அவள் பரிவுடன் சொல்கிறாள். லியோனிட் அந்த வாய்ப்பினை மறுதளிக்க, அவன் விரும்பினால் அவள் தனது முகத்தைக் கூட மூடிக்கொள்வதாகக் கூறுகிறாள். அப்போது தான், லயாங்கா தூக்கத்தில் ஏதோ முணுமுணுக்கிறான். மாஷா அன்பு மேலிட, மகனருகில் செல்கிறாள். அமைதியாக அங்கிருந்து கிளம்பிய லியோனிட் அடித்தளச் சாளரத்தைக் கடக்கும்போது, மாஷா அவளது மகனுக்காகப் பாடும் வித்தியாசமான ஒரு தாலாட்டு அவன் காதில் விழுகிறது.
பெருந்தலைக் காதல்கள் எழுந்துவருகின்றன
வரும்போதே பேரழிவைக் கொண்டுவருகின்றன
அவை பேரழிவைக் கொண்டுவருகின்றன
உன் இதயத்தை, அவை, சுக்குநூறாக்கும்!
ஓ, துரதிர்ஷ்டமே, ஓ, துரதிர்ஷ்டமே,
நாங்கள் எங்கே போய் ஒளிந்துகொள்வது, எங்கே?
துக்கத்தில் எழுகின்ற ஓலத்தைத் தடுக்க, பல்லைக் கடித்துக்கொண்டு அவன் விரைந்தோடுகிறான்.
*****
இத்தமிழாக்கம், நொய்டா, மாப்பிள் பிரஸ் பிரைவேட் லிட், தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷிய சிறுகதைகள், 2017 தொகுப்பிலுள்ள Fat Faced Passion ஆங்கிலப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது.
மலைகள் இணைய இதழ் எண் 124 நாள் ஜூன், 18, 2017 இல் வெளியானது.