Showing posts with label சங்க இலக்கியத் துளிகள். Show all posts
Showing posts with label சங்க இலக்கியத் துளிகள். Show all posts

Thursday, 1 December 2016

சங்க இலக்கியத் துளிகள் - 5 Glimpses of Sangam Poetry

நீ நாட்டின் தலைவனாகக் கிடைத்த வாய்ப்பு அரிய ஒன்றன்றோ!
அன்பும் அருளும் நீக்கித் தீமைகள் செய்வாரோடு இணைந்து நாட்டை நரகமாக்காதே!
ஒரு தாய் தன் மகவைக் காப்பது போல் நாட்டைக் காப்பாயாக!
புறநானூறு 5
எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறல் அருங்குரைத்தே.
---- நரிவெரூஉத்தலையார்.
பொருளுரை: எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!
நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக! கருணையும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உனது நாட்டை ஒரு குழந்தையைப் போன்று பாதுகாத்து அளிப்பாயாக. அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும்.
பதவுரை: எருமை – எருமை மாடு, அன்ன – போல, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகள், பரக்கும் – பரவியிருக்கும், யானை – யானை, முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டை ஆளும் தலைவன், நீயோ – நீ தான், பெரும – பெருமகனே, நீயோர் ஆகலின் – நீ இவ்வாறு இருப்பதால், நின் – உனக்கு, ஒன்று – ஒன்று மொழிவல் – சொல்கிறேன், அருளும் – கருணையும், அன்பும் – அன்பும், நீக்கி – விலக்கி, நீங்கா – நீங்காத, நிரயம் – நரகம், கொள்பவரொடு – இடமாகக் கொள்பவரோடு, ஒன்றாது – சேராமல், காவல் – காக்கும் நாட்டை, குழவி – குழந்தை, கொள்பவரின் – கொண்டிருப்பவராய், ஓம்புமதி – பாதுகாப்பாயாக, அளிதோ தானே – அளிக்கத் தக்கது, அது பெறல் – அத்தகைய காக்கும் வாய்ப்புப் பெறுவது, அருங்குரைத்தே – அரியது ஆகும்

Thursday, 17 November 2016

சங்க இலக்கியத் துளிகள் - 4 Glimpses of Sangam Poetry

சேம்பின் இலையும் யானைக்காதும் 

சேம்பின் இலையை யானைக்காதுக்கு உவமித்தது தமிழின் இலக்கியப் பாரம்பரியம். Caladium செடியினை Elephant Ear Plant என்று அழைப்பதுதான் வழக்கிலுள்ளதாம். படத்திலிருப்பது Caladium.
காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச்
செல்ப என்பவோ, கல்வரை மார்பர் -
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள்இலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.
(பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.)
- கிள்ளிமங்கலம் கிழார். குறுந்தொகை 76. குறிஞ்சித்திணை.
பொருள் :
குளிர்ந்த வாடைக்காற்று, மலைப்பக்கத்தில் உள்ள, சேம்பின் அசைதலை உடைய வளம்பொருந்திய இலையைப் பெரிய களிற்றின் செவியைப் போலத் தோன்றும்படி தடவி அசைக்கும். இத்தகைய மிக்க பனியையுடைய முன்பனிக்காலத்தில் நடுங்குவதற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி கற்களையுடைய மலை போன்ற மார்பினையுடைய தலைவன், காந்தள் வேலியாக வளர்ந்துள்ள, உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு என்னைப் பிரிந்து செல்வார் என்று கூறுகின்றனையோ?
பக்கம் 188 – சங்க இலக்கியம் குறுந்தொகை புத்தகம் – 1 NCBH, Chennai.

சங்க இலக்கியத் துளிகள் - 3 Glimpses of Sangam Poetry

பருவமழை பொழியட்டும்; பட்டி பெருகட்டும்; வாழ்வு சிறக்கட்டும்;
பல்லோர் உவந்த உவகை எல்லோர் நெஞ்சிலும் பரவட்டும்.

நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி, 
பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை,
 பல்லோர் உவந்த உவகை எல்லாம் என்னுள் பெய்தந்தற்றே -
-கபிலர்
அகநானூறு 42ம் பாடலில் 5-11 வரிகள்

பொருள் : கோடைகாலம் நீடித்து நின்ற பசுமையற்ற காலம்; மழையின்மையால் நாட்டில் வறுமை மிகுந்து, கலப்பைகள் யாவும் தொழிலற்று உறங்கிக் கிடந்தன; குன்றுகளைப் போல் தோற்றம் கொண்ட கரைகளை உடைய குளங்களில் வெயில் காய, வறட்சியுற்று, நீர்ப்பறவைகள் அங்கு தங்குதலை விட்டு வெளியேறிவிட்டன. அந்தக் குளங்கள் யாவும் நிறையுமாறு இரவெல்லாம் பெரும்பெயலென மழை பெய்து ஓய்ந்த வைகறைப் பொழுதில் நீர்நிரம்பிய குளங்களைக் கண்ட ஊரவர் உவந்த உவகை எல்லாம் எ்ன் நெஞ்சில் பெய்ததே!
படங்கள் ; எங்கள் கிராமத்து ஏரி மூன்றாவது படத்தில் காணப்படும் படகு உண்மையல்ல; photoshop.

சங்க இலக்கியத் துளிகள் - 1 Glimpses of Sangam Poetry - 1

சங்க இலக்கியத் துளிகள் - 1 Glimpses of Sangam Poetry - 1

கோயில் மலர்களினும் நன்றாம் கானம்; பிடிமிடை களிற்றின் தோன்றும் குன்றம்
                                                          ------******.------------
வாள்வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகை பிணியவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர்வீஅம் சினை தாஅய், எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம;
கண்டிசின் வாழியோ - குறுமகள்! - நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,
பிடிமிடை, களிற்றின் தோன்றும்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே!
- பாலை பாடிய பெருங்கடுங்கோ
அகநானூறு பாடல் எண் 99.
தலைவியைத் தமர் அறியாமல் உடன்போக்கில் அழைத்துச் செல்லும் தலைவன் தலைவிக்குச் சுட்டிக் காட்டும் காட்சிகளைக் கூறும் இப்பாடலின் சுருக்கம் :
அழகிய பெண்ணே, நீ, வாழ்வாயாக!
முள்முருங்கையின் சிவப்பு மலர்களோடு, கோங்கின் மஞ்சள் மலர்களும் காட்டுமல்லியின் வெள்ளைப் பூக்களும், பாதிரி உதிர்த்த மலர்களும் வெ்ண்கடம்பின் பூக்களும் சிதறிப் பரந்து கிடக்கும் கானம், தெய்வம் வழிபடப்படுகின்ற கோயிலில் மணக்கும் பூக்களைவிட நன்றாக உள்ளது; விரும்பத்தக்கதாகவும் இருப்பதைக் காண்பாயாக;
குறுமகளே, உன் தந்தையின் போர்க்களத்தில் பாய்ந்து, பாய்ந்து, தந்தங்கள் சிதைந்த களிறு பெண்யானைகள் சூழ நிற்பது போல் தோன்றுகின்ற குன்றமும் உள்ளதே! அதையும் நீ காண்பாயாக!
மலர்களைச் சிறப்பித்து, இக்கவிதை கூறும் உவம உவமேயங்கள் புகைப்படங்களில் குறிப்புகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இப்பாடலின் சிறப்பு அதன் உளவியல் கூறுதான்!
காதலி குடும்பத்தை விட்டுப் பிரிந்து காதலனுடன் வந்துவிடுகிறாள். அவளது பதற்றத்தைத் தணிக்கும் வகையில் காட்சிகள் மிக அருமையாகச் சுட்டப்படுவது சிறப்பானது.
காட்டுமலர்கள் பற்பல வண்ணங்களில் சிதறிக்கிடப்பது இயற்கை; காதலன் அவற்றிலிருந்து வதங்கிய சிவப்பு, மஞ்சள், வெண்மை எனப் பதற்றத்தைத் தணிப்பதும் உற்சாகமூட்டுவதான வண்ண மலர்களைத் தேர்ந்து சுட்டிக்காட்டுகிறான். அதனுடன் கோயிலையும் தெய்வத்தையும் கூறுவதுடன் கோயில் மலர்களின் மணத்தைவிடவும் காடு சிறந்திருப்பதைக் கூறும்போது அல்லல்படும் மனம் அமைதி கொள்வதும் எண்ணங்களும் நினைவுகளும் வேறுபுறமாகத் திரும்புவதும் இயல்பு.
அடுத்து குன்றம் யானைகளைப் போல் தோன்றுவதாகக் கூறுவதோடு, அதிலும் காதலியின் தந்தையின் பெருமை வெளிப்படும் விதமாக அவரது போர்யானை, பிடிகள் சூழ இருப்பதுபோல என விதந்து கூறும் போது, பெண்ணுக்கு அவளது தந்தை மதித்துப் போற்றப்படுதலைக் கேட்பதாகிறது. அவளது துயரம் மறைந்து மகிழ்ச்சி அரும்புவது திண்ணம்.
உவமைகளிலும் உளவியல் கூறுகள் நிறைந்துள்ளன. பெண்ணின் மதர்த்த எழிலும் அவள் மாட்சிமை மிக்க அணிகளை அணிந்திருப்பதும் அவளது மார்புகளை கோங்கு மலருக்கு ஒப்பிடுவதும் எந்தப் பெண்ணுக்கு மகிழ்வினைத் தராது போய்விடும்.
குன்றுகள் வெள்ளை யானைகளைப் போல் தோற்றமளிப்பதாக எர்னஸ்ட் ஹெமிங்வேயின் Hills like White Elephants என்ற புகழ்பெற்ற கதையிலும் குறிப்பிடப்படுகிறது. அது மட்டுமல்ல; அவ்வாறு குறிப்பிடுவது மகிழ்ச்சிக்கான முனைப்பு என்றும் சுட்டப்படுகிறது.
LikeShow more reactions
Comment