Showing posts with label இங்கிலாந்து சிறுகதை. Show all posts
Showing posts with label இங்கிலாந்து சிறுகதை. Show all posts

Friday, 7 October 2016

இங்கிலாந்து சிறுகதை - காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் (The Time Sweepers) By Ursula Wills-Jones

காலப்பெருவெளித் துப்புரவாளர்கள்

 The Time – sweepers 

ஆங்கிலம் : உர்சுலா வில்ஸ்-ஜோன்ஸ், இங்கிலாந்து தமிழில் ச.ஆறுமுகம்

உர்சுலா வில்ஸ் ஜோன்ஸ் தென்மேற்கு இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரில் வசிக்கிறார். சிறுகதைகள் நாவல்கள், திரைக்கதைகள் படைக்கிறார்.
***
download (7)
காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் குறித்து உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவர் இழந்துவிட்ட காலத்தையும் வீணாகத் தொலைத்த காலத்தையும் பெருக்கித் தள்ளிச் சுத்தம் செய்பவர்கள் தாம் காலப்பெருவெளித் துப்புரவாளர்கள். நீங்கள் இருப்பூர்தி நிலையத்தில் அமர்ந்திருக்க, உங்கள் இருக்கைப் பலகையைச் சுற்றிச் சுத்தம் செய்துகொண்டிருப்பவரை உங்கள் ஓரக்கண்ணால் பார்த்து காலப்பெருவெளித் துப்புரவாளராக இருப்பாரோ என நீங்களாக எண்ணிக்கொண்டாலும், உங்களால் அவர்களைப் பார்க்கமுடியாது. நீங்கள் அவர்களைப் பார்க்கவேண்டுமென்றால், விளக்குமாறு மற்றும் ஒரு துடைப்பானும் கையுமாக தீவிரச் செயல்முனைப்புடன், நீலநிறத்தில் சிறியதாகத் தோன்றும் மனிதர்களைத் தேடவேண்டும். ஆண்கள் முழு உடைகளையும் பெண்கள் பழைய பாணியிலான முழுக்கைச்சட்டையுடன் தலைக்கு முக்காட்டுத் துணியும் அணிந்திருப்பார்கள்.
எங்கெல்லாம் காலம் தொலைக்கப்படுகிறதோ அல்லது வீணாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் பணியிலிருக்கிறார்கள். எப்போதுமே இருப்பூர்தி நிலையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவர்களின் ஆலோசனை அறைகளெனில் குறைந்தது ஒருவராவதும் இருப்பார்கள். காதலியின் தலைநரைக்கும் காலம் வரையில் கூட திருமணம் செய்வதை முன்மொழியக் காத்திருப்பவருக்கெனத் தனியாக அவரைப் பின்தொடர்ந்து பணிசெய்வதற்காக அவருக்கு மட்டுமேயென காலப்பெருவெளித் துப்புரவாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மலர் மற்றும் மலர்க்கொத்துகள் விற்பனையகமொன்றினைத் தொடங்கிவிட வேண்டுமென்ற கனவுடன் வீடு, நிலம் விற்றல், வாங்கல் முகமைகளில் இரங்கத்தக்க முப்பத்தைந்து ஆண்டுகளைத் தொலைத்த பெண், ஊர்ப்புறத்து காலப்பெருவெளித் துப்புரவாளரைப் பெருமூச்சிடச் செய்து, இருப்பதிலேயே பெரிய குப்பைக்கூடையினை எடுத்துவரச் செய்கிறார்.
அவர்களின் பணி இவ்வளவு இழிவாக இருக்கிறதேயென நீங்களொன்றும் வருத்தப்பட வேண்டாம் : அவர்கள் ஒருபோதும் நோய்ப்படுவதில்லை; தவறான பணியிலிருக்கிறோமேயென அவர்கள் வருத்தப்படுவதில்லை; அவர்கள் ஓய்வுநேரங்களில் என்னசெய்கிறார்களென்று தெரியவில்லையென்ற போதிலும் அவர்களின் பணிநிலைமைகள் சிறப்பாகவே உள்ளன. வங்கி விடுமுறை நாட்களில் அவர்களுக்கும் விடுமுறையென்பதால்தான், அந்த நாட்களில் வழக்கத்தைவிட அதிகமான நேரம் கிடைப்பதாக நமக்குத் தோன்றுகிறது. கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டுகளில், காலப்பெருவெளித் துப்புரவாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்படுகிறது. ஜனவரியில் அவர்கள் பணிக்குத் திரும்புகையில் விடுமுறைநாட்களில் தொலைக்கப்பட்ட மற்றும் வீணாக்கிய காலத்தொகுதிகளைக், குவியல் குவியல்களாக எதிர்கொள்கின்றனர். அவர்கள் எப்போதும்போலான சாதாரண நிலைக்கு மீண்டுவருவதற்கு மூன்று வாரங்களாகிவிடுவதால்தான், எப்போதுமே அவர்களுக்கு ஜனவரி மற்ற மாதங்களைவிட அதிகநாட்களைக்கொண்டு நீண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் நாள்முழுதும் பணிசெய்கின்றபோதிலும், தற்காலப் புத்துலக வாழ்க்கை, வீண்விரயக் காலங்களை பெரும்பெரும் அடர்தொகுதிகளாக வெளித்தள்ளிக்கொண்டிருப்பதால், அவர்களது செயல்பாடுகளைத் தொழில்மயமாக்கி, சாதாரணக் குப்பை அள்ளும் பணியாளர்களைப் போலவே, அழுத்தியமுக்கும் சிறப்புக் கருவிகள் கொண்ட லாரிகள் வாங்கிச் சில இடங்களில் பயன்படுத்தவேண்டியதாகிவிட்டது; அந்த லாரிகளைச் சிறைகள் மற்றும் பல்பொருள் பேரங்காடிக் கூடங்களில் பெரும் அடர்தொகுதிகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். அந்த இரண்டு களங்களில் தாம் வீணாக்கிய காலம் மிகமிகச் சிறந்த அர்ப்பணிப்புள்ள பணியாளர்களையும் விழுங்கி மூழ்கடித்துவிடுவதாக அச்சுறுத்துகிறது.
2
யாராவது ஒரு காலப்பெருவெளித் துப்புரவாளரிடம் பேசிப்பார்த்தீர்களானால், வியப்பான ஒரு விஷயத்தைக் கேள்விப்படுவீர்கள் : மகிழ்ச்சியாக அனுபவித்த நேரம் ஒருபோதும் வீணாக்கிய நேரமாவதில்லை. சோர்வு நிரம்பி வழியும் பெரிய அலுவலகம் ஒன்றைச் சுத்தமாக்கும் காலப்பெருவெளித் துப்புரவாளர், மேஜைக்கு அடியில் விடுமுறைக் குறிப்பேட்டுப் பட்டியலும் கையுமாக வெப்பமண்டலக் கடற்கரைகளின் புகைப்படங்களைத் துருவித் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணின் மேசையருகில் கூட செல்லாமல் நேரடியாகக் கடந்துவிடுவார். அடுத்த மேஜையில் தனது மாமியாரின் நிர்வாணக் கோலத்தைக் கற்பனையாகக் கண்டு வியந்து மகிழ்ந்துகொண்டிருக்கும் மனிதனையும் அவர்கள் ஒதுக்கிக் கடந்துவிட்டு ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டு, நேரத்தை நொந்துகொண்டிருக்கும் இளைஞனின் மேசையில்தான் போய்நிற்பார்கள்.
கூட்டிப் பெருக்கப்பட்ட, இந்த விரயக் காலநேரங்களெல்லாம் எங்கு போய்ச் சேருமென்று உங்களுக்கு வியப்பாகத் தோன்றலாம். பயப்படாதீர்கள், காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் எல்லோருமே தீவிர மீளாக்கச் சுழற்சியாளர்கள்தாம்; அவையனைத்தும் சேகரிக்கப்பட்டு, சிப்பங்களாகப் பெரும் கொள்கலன்களில் அடுக்கப்பட்டு, லிவர்பூல் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கப்பலில் ஏற்றி, இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கே, மும்பைக்கு அருகில் எங்கேயோ இருக்கின்ற ஒரு தூசுபடிந்த தொழிற்பேட்டையில் அவை சுத்தம்செய்யப்பட்டு, வகை, வகையாகத் தரம் பிரிக்கப்படுகின்றன. தோல்வியுற்ற பேச்சுவார்த்தைகள், தவறான கைது மற்றும் சிறைவாசங்கள், உண்மையிலேயே நஞ்சாகிப்போன திருமணங்கள் போன்றவற்றின் மிச்சம்மீதிகளிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட உச்ச அளவிலான நச்சுத்தன்மை மற்றும் நஞ்சாகிப்போன காலம் பயன்பாட்டில் இல்லாத ஒரு இராணுவப் படைத்தளத்தின் அடியிலுள்ள ஒரு குளத்தில் புதைக்கப்படுகின்றன. அங்கே அவை மக்கி, மீண்டும் நல்லனவாக மாறுவதற்கு இரண்டு என்ன மூன்று நூற்றாண்டுகள் கூட ஆகும்.
மீதியுள்ள காலம் – உற்சாகமற்ற அலுவல் கூட்டங்கள், சந்திப்புகள், நிகழாமற்போன சந்திப்புகள், பணித்திட்டங்கள், தாமதமான பேருந்துகள், மற்றும் நாடக அரங்குகளில் மோசமான இரவுகள் போன்றவை சுத்தமாக்கப்பட்டு, மீண்டும் ஒரு கப்பலில் ஏற்றி, சீனாவின் காங்சூவிலுள்ள தொழிற்சாலைப்பொருட்கள் ஏற்றுமதி நடவடிக்கை மையத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கே, அவை அழுத்திச் சீர்செய்யப்பட்டு, மறுவழங்கலுக்காகச் சேமித்துவைக்கப்படுகின்றன. அவற்றில் இருபது விழுக்காடு உலகத்திலேயே உச்ச அளவிலான உற்பத்தி விகிதம் கொண்ட ஏற்றுமதி நடவடிக்கை மையத்தின் ஆலைகளுக்கு நேரடியாகச் செல்கிறது. கால்பங்கு, எந்தப் பேரமுமில்லாமல் சொன்னவிலைக்கு சீன அரசினால் வாங்கப்படுகிறது. மிகமிக அடர்த்தி கூடிய பத்து விழுக்காட்டுப் பொருள் கலிபோர்னியாவிலுள்ள ஒரு தாழ்வெப்பநிலை ஆய்வகத்திற்கு விற்பனையாகிறது. மற்றுமொரு இருபது அல்லது அதைப்போன்றதொரு பகுதி பணக்காரத் தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு, பெரும்பாலும் அழகான இளம்பெண்களை மணந்த மிகவும் வயதான பெரும்பணக்காரர்களுக்கு விற்பனையாகிறது.
எப்படியானாலும், காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் லாபத்திற்காகச் செயற்படுபவர்கள் அல்ல. இவற்றில் கிடைக்கும் பணமெல்லாம் குப்பைப் பைகள், துடைப்பான்கள் உள்ளிட்ட துப்புரவுத் தளவாடங்கள், கப்பல் செலவு மற்றும் அனைத்துச் செலவினங்களுக்குமாகிறது. மீதியாகும் தொகை நல்ல விஷயங்களுக்காகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மிகைப்படியான நேரத்தைப் பெறுபவர்கள் அதற்காக எந்தப் படிவத்தையும் நிரப்பவேண்டியதோ அல்லது நல்கை கோரவேண்டியதோ இல்லை; உதவிபெறுபவர்களே, அவ்வாறு உதவிபெறுகிறோமென்பதை முற்றிலுமாக அறியமாட்டார்கள். இத்தகைய பயனாளிகளில், ருஷ்ய நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான நோவோசிபிர்ஸ்க் –க்கு வெளியே அமைந்துள்ள உதிர்ந்துவிழும் கட்டிடம் ஒன்றில் இயங்கும் ஒரு பொது ஆய்வகத்தில் மலேரியாவுக்கான தடுப்பு மருந்தினைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ளவரும் மிகச் சோர்ந்துபோய், அலங்கோலமாகத் தோற்றமளிக்கும் அறிவியலாளரும் ஒருவர். மற்றொருவர், நைரோபி சேரிப்பகுதி ஒன்றில் பதினேழு குழந்தைகளைப் பெற்ற ஒரு பெண் – அவர் இருபது ஆண்டுகளாக முழுநேர வேசித்தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் ஒருபோதும் நோய்வாய்ப்பட்டதில்லை. மூன்றாம் நபர், கனடா நாட்டின் டொரொன்டோவின் நெருக்கத்தில் இடிபடும் அடுக்ககமொன்றில் குடியிருந்துகொண்டு வீட்டிலிருக்கும் நோய்வாய்ப்பட்ட மனைவிக்கும் குழந்தைகளுக்குமாக அவ்வப்போது பணம் அனுப்பிக்கொண்டு பிற்காலத்தில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்பெனக் கொண்டாடப்படப் போகும் நாவலொன்றினை எழுதிக்கொண்டிருப்பவரான இந்திய வாடகை உந்து ஓட்டுநர்.
3
காலப்பெருவெளித் துப்புரவாளர்களின் தாராளக் கொடையினைப் பெறுபவர்கள் மனிதர்கள் மட்டுமேயல்ல; மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியிலுள்ள திம்புக்டு –விற்கு நாற்பதுமைல் வெளியே மணலில் புதைந்துகிடக்கும் மத்திய கால மசூதி ஒன்றும் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை அல்லது அப்படியான ஒரு கால அளவுக்கு நல்கையைப் பெறுகிறது. கிரீக் மற்றும் அனடோலியன் பகுதிகளுக்கிடையேயுள்ள மத்தியதரைக்கடலின் நீட்சியான ஏஜீயன் கடல் தளத்தின் கீழாக எங்கேயோ ஒரு இடத்தில் ட்ரோஜன் போர்க்கப்பல் ஒன்றும் மண்ணுக்குள் வியக்கத்தக்கவகையில் பாதுகாத்துப் பேணப்படுகிறது. அதுபோலவே மெக்சிகோவிலுள்ள ஒரு கோவிலுக்கும் சிறிது உபரியான காலத்தைக் காலப்பெருவெளித் துப்புரவாளர்கள் வழங்குவதோடு, அயர்லாந்தின் மேற்குக்கடற்கரையின் கால்வே குடாவின் சதுப்புநிலச் சகதிக்குள் இருண்ட காலப் பொக்கிஷங்களின் பெரும்புதையல் ஒன்றைப் பாதுகாத்துப் பேணுகின்றனர்.
அறப்பணிகளுக்கென ஒதுக்கியுள்ள காலத்தில் அவசரகால உதவிக்கென சிறியதும் பெரியதுமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருப்பு வைத்துள்ளனர். அவற்றைப் பாராசூட்டுகள் மூலம் கொண்டுசென்று பெரும் விரக்திகளின்போதும் அமைதிப் பேச்சுகள் மற்றும் போர் மாற்றங்களுக்கு வழிவகை காணவும் எண்ணற்ற தந்தைகளுக்கு மகப்பேற்று அறைகளில் தக்கநேரத்துக்கு உதவுமாறும் இறக்கப்படுகின்றன.
காலப்பெருவெளித் துப்புரவாளர்கள், இயல்பாகவே சுத்தமும் ஒழுங்கும் மிக்க ஒரு தனிவகையினராக இருக்கின்றனர். மனிதர்கள் இந்த விலைமதிப்பற்ற பயன்பொருளைத் தூக்கியெறிவது குறித்துச் சிந்திக்கவேண்டுமென்று அவர்கள் விரும்பினாலும், இது எந்த நேரத்திலும் விரைவிலேயே நிகழுமென்ற எதிர்பார்பில்லாமலும் இருக்கின்றனர்.
இக்கதை சொல்லும் நீதி என எதுவும் இல்லை. நீங்கள் உங்கள் நேரம் எதனையும் தூக்கியெறிவதாக இருந்தால், அதை ஒருவர் அப்புறப்படுத்தவேண்டியிருக்கிறதென்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், அவ்வளவுதான்.
(((()))))))))
http://www.eastoftheweb.com/short-stories/UBooks/Time898.shtml

மலைகள் இணைய இதழ் எண் 105, செப்டம்பர் 2, 2016 இல் வெளியானது.

Friday, 15 January 2016

இங்கிலாந்து சிறுகதை - உறுத்து நோக்கல் (THE STARE - BY DORIS LESSING)

 உறுத்து நோக்கல் (THE STARE - BY DORIS LESSING)

ஆங்கிலம் : டோரிஸ் லெஸ்ஸிங்

தமிழில் ச. ஆறுமுகம் 

download (9)
(தனது 87 ம் வயதில் புனைவிலக்கியத்துக்காக 2007ம் ஆண்டில் நோபல் விருது பெற்ற டோரிஸ் மே லெஸ்ஸிங் இங்கிலாந்து நாட்டின் நாவலாசிரியர், கவிஞர், நாடகப் படைப்பாளர், தன்வரலாற்றாசிரியர், சிறுகதைப் புனைவாளராகக் கொண்டாடப்படுபவர். 1950ல் வெளியான `புல் பாடிக்கொண்டிருக்கிறது` நாவல் முதல் 2008ல் வெளியான `ஆல்ஃப்ரெட்டும் எமிலியும்` நாவல் உட்பட 28 நாவல்கள், நூற்றுக்கணக்கான கவிதைகள், நினைவுக்குறிப்புகள், சிறுகதைகள் படைத்தவர்.  மிகவும் முதிய வயதில் (87) நோபல் விருது பெற்றவர் இவரே. விருது வழங்கியபோது சுவீடிஷ் கழகம் இவரை ‘’ பிளவுபட்ட பண்பாட்டு நாகரீகத்தை ஐயுறவுக் கோட்பாட்டுடன் நெருப்புக்கண் கொண்டு தொலைநோக்குப் பார்வையில் பரிசீலனைக்கு உட்படுத்திப் பெண்ணின அனுபவங்களைக் காப்பியமாக்கியவர்’’ எனப் புகழ்ந்து குறிப்பிட்டது.
 டைம் இதழ் தயாரித்த 1945 முதல் 2008 ம் ஆண்டு வரையிலான மிகச் சிறந்த 50 பிரித்தானிய எழுத்தாளர்களின் பட்டியலில் டோரிஸ் லெஸ்ஸிங் ஐந்தாவதாக இடம் பிடித்துள்ளார். அவரது 94 ஆம் வயதில் கடந்த 17. 11. 2013 அன்று மறைந்தார்.     


 

‘’அவனையே பார்’’ என்கிறாள், ஹெலன்.

‘’நான் எதுவும் சொல்லாமல், அவனை விடாமல் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். சரி, அப்புறம், அவன் என்னதான் செய்வான்?’’ என்கிற மேரி, ஹெலனிடம் ஏதோ ஒன்று அல்லது பல ரகசியம் புதைந்திருப்பதாக நினைத்து அடிக்கடி செய்வதுபோல அவளை அண்ணாந்து நோக்குகிறாள்.

‘’அப்புறமென்ன,  அவன் சரணாகதிதான்,’’ எனச்சொல்லிச் சிரிக்கிறாள், ஹெலன்.  அந்தச் சிரிப்பு எப்போதும் போல மேரியைச் சிறைப்பிடிக்கிறது. இம்முறை அது அவளுக்குள்ளேயே புகுந்து தாக்கியதுபோலிருக்கிறது. ஹெலன் வேறு ஏதோ ருசிகரமான ஒன்றை நினைவுகொள்வதைப்போலத் தோன்றுகிறது. ஏனென்றால், அவள் சிரித்துக்கொண்டேயிருக்கிறாள்.

ஹெலன், டாம் என்ற ஆங்கிலேயக் குடிமகனின் கிரேக்க மனைவி. நாக்சோஸ் நகரிலுள்ள உணவுவிடுதியில் பரிமாறும் பெண்ணாக, அவள் ஏதோ அவனுக்காகவும் அயல்நாட்டுப் பயணிகளுக்காகவும் பெருமளவில் தொண்டு செய்வதுபோலப் பரிசாரகப் பணி செய்துகொண்டிருந்தபோதுதான் அவன், அவளைப் பார்த்துக் காதல்கொண்டு, அவளைத் தன்னோடு இங்கிலாந்துக்கு வருமாறு செய்துவிட்டான். இங்கிலாந்து அவளுக்கு முழுதுமாக அயல்நாடென்று கூறிவிடமுடியாது. ஏனென்றால், காம்டென் நகரின் பரந்த கிரேக்க மற்றும் சைப்ரியாட் சமூகத்தில் அவளுக்கு உறவினர்கள் இருந்ததோடு, ஒரு கோடையில்  அவர்களைச் சந்திப்பதற்காக அவள் இங்கு வந்துமிருக்கிறாள். மேரி, திமித்ரியாஸின் ஆங்கிலேய மனைவி. அவள் ஒரு விடுமுறையின் போது ஆன்ட்ரோஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டியகத்தில் தோழியுடன் கடலைப் பார்த்து வியந்து கொண்டிருந்தபோது, அங்கு பரிமாறும் பணியாளான திமித்ரியாஸ் அவள் மீது காதல்கொண்டான். அவனுக்கும் லண்டனில் உறவினர்கள் இருந்தனர். அவன் இப்போது அர்கோனாட்ஸ் என்ற கிரேக்க உணவுவிடுதியில் பரிமாறும் பணியாளாக இருக்கிறான். விரைவிலேயே அவனது சொந்த உணவகத்தைத் திறக்கவிருக்கிறான். அவன் அந்த உணவகத்திற்கு `திமித்ரீஸ்` எனப் பெயரிடுவான். ஏனென்றால், மேரி, அவனை திமித்ரி என்றுதான் அழைக்கிறாள். அவர்கள் இருவரும் ஹெலனின் டாமுக்குச் சொந்தமான மளிகைக்கடையின் மேல்தளத்திலுள்ள இரண்டு அறைகளில்தான் குடியிருக்கிறார்கள்.

அந்த இருபெண்களும் காலைநேரங்களில், நட்பாக அளவளாவிப் பேசுவது அல்லது ஏதாவது பொருட்கள் வாங்கக் கடைகளுக்குச் செல்வதெனச் சேர்ந்தேயிருக்கிறார்கள். இப்போது ஹெலனுக்கு ஒரு குழந்தையிருக்கிறது. அதனால், அவர்கள் கைக்குழந்தைத் தள்ளுவண்டியை ஏதாவது ஒரு நிழலில் நிறுத்திவிட்டு, அருகிலுள்ள பெஞ்சு ஒன்றில் அமர்வதற்காக பிரிம்ரோஸ் குன்றுக்குச் செல்கிறார்கள். அங்கே வேறு கிரேக்க மற்றும் சைப்ரியாட் இல்லத்தரசிகளும் வருகிறார்கள். சிலநேரங்களில் எல்லோருமாகச் சேர்ந்து அது, ஒரு பெண்கள் சமூகமாகமாகவே மாறிவிடுகிறது. ஆனால் அங்கே எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகச் சிறப்பான தோழிகளாக ஹெலனும் மேரியுமே கருதப்பட்டனர்.

சில மாலைகளில் ஏதாவது ஒரு அருந்தகத்திலோ, சிற்றுண்டியகத்திலோ, அல்லது உணவுவிடுதியிலோ இந்த இரண்டு இணைகளுமாகச் சேர்ந்து நால்வராகிவிடுகிறார்கள். மேரி, வாழ்க்கையில் எப்போதுமே சரியான தேர்வினை மேற்கொண்டதாக, இதுபோன்ற மாலை நேரங்களில் தனக்குத் தானே மெச்சிப் பாராட்டிக் கொள்வதுண்டு. அதனால்தானே சலிப்புதரும் க்ரோய்டோனிலிருந்து இங்கே எளிதில் சிரிக்கிற, பாடத் தொடங்குகிற, மேஜைகளிலேயே கூட உடனடியாக நடனமாடி மாலையை மகிழ்ச்சியாக முடிக்கிற மனிதர்களோடு இருக்கமுடிகிறது. அதனால்தான் அவளுடைய அம்மா,அப்பா எவ்வளவோ சொல்லியும் அவள் கிரீசுக்குச் செல்லமுடியாதென திமித்ரியாஸிடம் மறுத்துச் சொல்லிவிட்டாள்.

இன்று மேரி வீட்டுக்குப் பரபரப்பும் பரவசமுமாகச் சென்று கண்ணாடி முன் அமர்ந்து ஆராய்கிறாள். அவள் அதுபோல அடிக்கடி செய்வதுண்டு. நன்கு உருண்டு, அழகாகச் சிவந்த கன்னம், கறுத்துச் சுருளும் கேசம், மிகச் சரியான இடங்களில் செல்வச் சிறுகுழிகளுமாக, அவள் அழகாக இருக்கிறாள். திமித்ரி, கூட அவளை ‘என் சின்னக் கறுப்புத் திராட்சையே’ என்றுதான் அழைக்கிறான். ஆனால், அவளது கண்கள் சாம்பல் நிறம். அவளுக்கு மட்டும் அந்தக் குளுமை தவழும் ஆங்கிலேயக் கண்கள் இல்லையென்றால், அவளை கிரேக்க இரத்தமென்றுதான் நம்பியிருப்பேனென அவன் சொல்கிறான். அவனுடைய கறுப்புக் கண்கள் எளிதில் கனன்று  தீப்பிழம்பாகிப் பழிதீர்ப்பவை. நறுமணச் சிறு புட்டிகள், உதட்டுச் சாயக் குச்சிகள், கண்மைச் சிமிழ்களுக்கிடையே முன்கை மூட்டுகளை ஊன்றி முற்சாய்ந்து, பல்வேறு முக பாவனைத் தோற்றங்களில் மேரி முயன்று பார்த்தாள். அவள் புன்னகையற்ற, இமைமூடாத உறுத்து நோக்கும் பார்வையொன்றைப் பதிக்க, அது, அவளையே பயமுறுத்துவதாக இருக்கின்றது. அவள், ஹெலன் முகத்தின் உறுத்தும் பார்வையைக் காண்பதற்காகக் கண்களை மூடுகிறாள். ஆனால் தோல்வியடைகிறாள். ஏனென்றால் ஹெலன் சிரிக்கமட்டுமே செய்கிறாள். மேரி ஹெலனை நினைத்து வியக்கிறாள். அப்படிச் சொல்வது மிகமிகக் குறைத்து இலேசாக்கிச் சொல்வதுதான். ஒருநாள் திமித்ரி ஏதோ சொன்னானென்று, மேரி ஒரு நூலகத்துக்குச் சென்று `குழந்தைகளுக்கான கிரேக்க புராணங்கள்` என்ற புத்தகத்தில்,  ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஹெலன் என்ற ஒரு பேரழகி இருந்ததாகவும், அவளுக்காக ஆண்கள் ஒரு பெரிய யுத்தமே தொடங்கினார்களென்றும் படித்தாள். கிரீசில் பெற்றோர்கள் அவர்களின் சிறு பெண்குழந்தைகளை, சர்வ சாதாரணமாக பெற்றி, ஜோன் என்பதுபோல ஹெலன் என்றுதான் அழைக்கிறார்களாம். மேரிமாதா கடவுளின் அன்னையாயிற்றேயென ஹெலன், மேரிக்குச் சொன்னாள். ஆனால், மேரி, மதத்திற்குள்ளெல்லாம் புகுந்து உண்மையிலேயே அவ்வளவாகப் பார்ப்பதில்லையென்றாள்.          

 அது சரி, ஹெலனின் அமைதியான கண்கொட்டாப் பார்வையென்கிற யோசனையை திமித்ரியாஸின் மீது பரிசோதித்துப் பார்க்கவேண்டுமென்று மேரிக்கு ஏன் தோன்றிற்று? அதுதான் பிரச்சினை. மேரிக்கு, வாழ்க்கைமீது மட்டுமல்லாமல், தன்மீதுமேகூட  நிறைவற்ற, குடைந்துகொண்டிருக்கிற ஒரு அதிருப்தி. அது அவளது கணவனுக்கு எதிராக, ஒரு குற்றச்சாட்டு போல மாறுகிறது. அவள் இப்படி ஏன் நினைக்க வேண்டுமெனத் தனக்குத் தானே வினவிக்கொள்கிறாள். இருந்தாலும், தான் நினைப்பதையே சார்ந்திருப்பதென முடிவுசெய்கிறாள். திமித்ரிக்குத் திருப்தியில்லை. அவன் குடும்பத்தை உடனடியாகத் தொடங்கவேண்டுமென்கிறான். அதிலும் நண்பர்கள் டாமும் ஹெலனும் குழந்தையோடிருப்பதைப் பார்த்து, இப்போதே குழந்தை வேண்டுமென்கிறான். ஆனால், மேரியோ, ‘’ முடியாது, குழந்தைக்கு இப்போது என்ன அவசரம்? கொஞ்சம் பொறுக்கலாம்.’’ என்கிறாள். அவள் உண்மையிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாளா? அதுவும் விரைவில். ஆனால், அவள், தன் அழகு பறிபோய்விடுமோவெனப் பயப்படுகிறாள். அவள் தினந்தோறும் கவனிக்கிற பெண்களுக்கு அப்படித்தானேயாகிறதென அவள் நினைக்கிறாள். அந்தப் பெண்களுக்குக் குழந்தை இருக்கிறது….. நல்லது, நான் அப்படியெல்லாம் இருக்கப்போவதில்லை. ஆனால், ஹெலன் அப்படியா ஆகியிருக்கிறாள்? இல்லைதானே! அவள் அச்சு அசலாக, அப்படியே  இருக்கிறாளே! அந்தக் குழந்தை ஏதோ ஆகாயத்திலிருந்து வந்தது போல, யாரோ அவளை நோக்கித் தூக்கியெறிந்த பரிசினை அவள் `கேட்ச்` பிடித்துக்கொண்டது போல அல்லவா இருக்கிறது! மேரி மாத்திரை சாப்பிடுகிறாள். அதற்கு மட்டும் அவள்   மறப்பதேயில்லை. ‘’ ஒருநாளைக்கு இதுகளையெல்லாம் தூக்கிக் குப்பைத் தொட்டிக்குள் எறிகிறேனா, இல்லையா, பார்!’’ என்கிற மாதிரி, திமித்ரி என்னென்னவோ சொல்கிறான். அந்த நேரங்களில் அவனுடைய குரல் கரகரத்து, முரட்டுத்தனமாகி எரித்துவிடுவதுபோல் கண்கள் கனலும் கணங்கள் அவளைத் திகிலடையச் செய்வதோடு முன்காலத்து நாட்களையும் நினைவூட்டுகிறது.

அவள் ஹெலனிடம், ‘’ டாம், இப்போதும் உன்னிடம் முன்னைப் போல, அப்படியே  இருக்கிறாரா?’’ என்று கேட்கிறாள். ஹெலன் உடனேயே புரிந்துகொண்டு, களிமண்ணைக்கூட மேலானதென்றாக்கிவிடுகிற மேரியால் புரிந்துகொள்ளமுடியாத, மயக்குகின்ற வாழ்க்கை ரகசியம் ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதை ஒப்புக்கொள்வது போல, ஒரு சிரிப்புடன் ‘’ என்ன இருந்தாலும், அவர் ஒரு ஆங்கிலேயராயிற்றே, இல்லையா? நாங்கள் முதன்முதலில் தொடங்கியபோது எப்படியிருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறார்.’’  என்றாள். அவள் திறந்த மனதோடு மேரியிடம் சில கேள்விகளைக் கேட்க, அது சாமர்த்தியமற்ற செயலென  மேரி  நினைத்துக் கொண்டிருக்கும்போது, ‘’ சில விஷயங்களை நீ புரிந்து கொள்வதில்லை, மேரி. கிரேக்கத்து ஆண்கள் காதல் விளையாட்டில்  உணர்ச்சிகளைக் கொட்டித் திக்குமுக்காடச் செய்பவர்கள். அவர்கள் தாராளமாக முத்தமழை பொழிவார்கள். அதோடு நிறையப் பரிசளிப்பவர்கள். ஆனால், திருமணமாகிவிட்டால், நீ அவர்களுக்கு வெறும் மனைவியாகிவிடுகிறாயே.’’ என்கிறாள், ஹெலன்.

கோடையில் மேரி ஆண்ட்ராசிலிருந்தபோது, திமித்ரியாஸ் மலர்கள், நறுமண சோப்புகள், சாக்லேட்டுகளைக் கொண்டுவந்து குவித்தான். அதோடு அவள் அழகாயிருப்பதாகச் சொன்னான். அவளைப்போல வேறு எந்த ஒன்றையும் அவன் கண்டதேயில்லையென்றான். அவளை நிலவொளியில் முத்தமிட்டான்; அதிலும் ஒரு இரவில் அவள் கைகளை முத்தங்களாலேயே மூடி நிறைத்தது மட்டுமல்லால் கொதிக்கின்ற கண்ணீராலும் கழுவினான். அதுவே அவள் வாழ்க்கையில் நிகழ்ந்த அல்லது நிகழவிருக்கிற எல்லாவற்றையும்விட அற்புதமானதென அப்போதே மேரிக்குத் தெரிந்தது. அதுதான் இப்படியாகிவிட்டதேயென அவள் அமைதியைக் குலைத்தது. திமித்ரியாஸ் அப்போது எப்படி, என்னவாக இருந்தான்? அவன் இப்படியாவானென யார் கண்டது – என்றே அவள் உள்ளுக்குள் மறுகினாள். அவன் தூங்கும் போது,  அவனைப் பார்த்துக்கொண்டே, இது ஏன் இப்படியானதென  நினைத்தாள். ஆனாலும், மூன்று வருடங்களுக்கு முன் அந்தக் கோடையில் அவன் எப்படி நடந்துகொண்டானென்று அடிக்கடி நினைப்பாள். இப்போது அவன் எந்த ஒரு ஆங்கிலேயனையும் போல, டாமைப் போல, விவேகமானவனாகிவிட்டான். டாம் ஹெலனை முன்புபோல் காதலிக்கவில்லையென மேரி நினைத்து விடாமலிருப்பதற்காகவே,  டாம் படுக்கை விளையாட்டை மிகவும் விரும்புவது அதிர்ஷ்டமானதென ஹெலன் சொல்லிச் சிரித்தாலும், அவளும் டாமை நினைத்துப் பெருமூச்சு கொள்வதாகவே மேரி நினைத்தாள்.

இது எல்லோருக்கும் நடக்கிற கதைதானே என நினைத்த மேரி, ஹெலன் ஏன் டாமின் காதலை ஒப்புக்கொண்டாளென வியந்தாள். அவன் நன்றாக, எல்லாம் சரியாக இருக்கிறான்; பார்வைக்கும் மோசமான தோற்றமில்லை. அவன் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறான் என்கிறாள், ஹெலன். ஆனால், நிச்சயமாக அவளும் ஏதோ ஒரு கட்டத்தில் டாம் சலிப்பூட்டுவதாக நினைத்திருப்பாள்?

ஆனால், திமித்ரி இப்போதும் மேரியைக் காதலிக்கிறானா?

அன்று இரவு, அவன் படுக்கையில் அவளை நோக்கி உருண்டு திரும்பியபோது, அவள், ‘’ இல்லை, நான் அதை விரும்பும் நிலையில் இல்லை.’’ என ஹெலன்  கேலி, கிண்டலாகப் பேசுவது போன்ற குரலில் முயற்சித்துச் சொன்னாள். ஆனால், அவள் அதில் வெற்றி பெறவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். அவள் அதற்கு முன்பு, எப்போதுமே ` வேண்டாம் ` எனச் சொன்னதில்லை; அவள் படுக்கை விளையாட்டை விரும்பவும் செய்தாள். அவள் என்னவோ மணவிலக்கு கேட்டுவிட்டது போல, அவன் ஆச்சரியப்பட்டுப்போனான். உனக்கு என்னவாகி விட்டதென அவன் கேட்டான். அவன் என்ன கேட்டிருக்கவேண்டுமென்றால், ‘’ நான் என்ன தவறு செய்தேன்?’’ என்றுதான்.  அவன் ஒருவேளை அப்படிக் கேட்டிருந்தாலுங்கூட அதற்கு என்ன பதில்சொல்வதென அவள் தெரிந்திருக்க வில்லையென்றாலும் அவன் அப்படித்தான் கேட்டிருக்க வேண்டும். அவள் அவனுக்கு முதுகைக் காட்டித் திரும்பிப் படுத்துக்கொண்டாள். அப்படிச் செய்வது அவளை எந்தளவுக்குத் துன்புறுத்துமோ அதே அளவுக்கு அவனையும் துன்பங்கொள்ளச்செய்யுமெனத் தெரிந்தும் அவள் அப்படித்தான் செய்தாள். அவளது தோள்களின் மீது அவனது குழம்பிப்போன, காயம்பட்ட பார்வையை அவளால் உணரமுடிந்தது. அவன் எதையோ முணுமுணுத்தான்; அது அவள் காதுகளில் விழவில்லையென்பதே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவனும் அவளைப் போலவே விழித்துக்கொண்டுதான் படுத்திருந்தான்; ஆனால் இருவருமே தூங்குவது போன்ற நடிப்பிலிருந்தனர்.

அடுத்த நாள் காலையில் அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு அவளை நோக்கிக் குற்றம் சுமத்தும் பார்வைக்கணைகளை வீசிக் கொண்டேயிருந்தான். அது நிகழ்ந்த அன்று சனிக்கிழமை. அன்று இரவு இரண்டு இணைகளுமாக ஒரு அருந்தகத் தோட்டத்துக்குச் சென்று மது அருந்தினர். பின்னர், அவர்கள், திமித்ரி பரிமாறும் பணியாளாகப் பணிபுரிகிற விடுதிக்கே இரவு உணவுக்குச் சென்றனர். ஆனால், அன்று அவனுக்கு இரவு ஓய்வு. குடும்பச் செலவுக்குத் தேவைப்படும் சிறிய அளவு பணத்துக்காகச் சில வேளைகளில் அந்த விடுதியில் பரிமாறுபவர்களாகப் பெண்கள் பணிபுரிந்தனர். எல்லோருக்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. அவர்கள் கையசைத்தனர்; அல்லது வாழ்த்துச் சொல்லினர்; அல்லது அருகில் வந்து தள்ளுவண்டியில் தூங்கும் குழந்தையைப் பார்த்து முகமலர்ந்து, மெச்சிப் புகழ்ந்து பாராட்டினர். டாமின் தோளில் ஹெலன் எப்படித் தோய்ந்து, தொங்குகிறாளெனப் பார்த்துக் கொண்டிருந்த மேரி, அவர்கள் இருவரும் வீடுபோய்ச் சேர்ந்த நிமிடத்திலேயே காதல்விளையாட்டைத் தொடங்கிவிடுவார்களென நினைத்தாள்.

திமித்ரியாசும் மேரியும் வீட்டுக்குச் சென்றதும் அவன், ‘’இன்று இரவுக்கு நீ அதை விரும்பாத நிலையில் இருக்கமாட்டாயென நினைக்கிறேன்.’’ என்றான். அந்தக் கிண்டலை அவன் விகாரமான வசையாகச் சொல்லவே, ‘’ இருப்பேன் அல்லது இருக்கமாட்டேன்’’ என அவள் அலட்டிக்கொள்ள வசதியாக அமைந்தது. ஆனாலும், படுக்கைக்கு வந்ததுமே அவள் தனக்குத்தானே ஏதும் குற்றம்சொல்லிப் புலம்ப முயற்சிக்காதபடி அவன், அவள் மீது பாய்ந்தான். ஆனால், அவள் அதை விரும்பாத உணர்வில் இருப்பதாகச் சொல்வதனால் பயனொன்றுமில்லையென இருவருக்குமே நன்கு தெரிந்திருந்தும் அவள் அதைத்தான் சொன்னாள். பிற்பாடு அவன், ‘’ எனக்கு எப்போதுதான் குழந்தை பெற்றுத் தரப்போகிறாய்?’’ எனக் கேட்கும்போது அவள் எப்போதுமே பயப்படுவதும் உணர்ச்சிவசப்படுவதுமாகிய ஒரு காரியத்தை, அவன் செய்துகொண்டிருந்தான்: அவள் கைகளிலிருந்த திருமண மோதிரத்தை, அவன் எங்கே கழற்றியெறிந்துவிடுவானோ என அவள் பயப்படுகின்ற அளவுக்குத் திருகித் திருகிச் சுழற்றிக்கொண்டிருந்தான். இதற்கு முன்பு ஒருபோதும் அவன் இந்த அளவுக்குப் பொறுமையிழக்கின்ற மாதிரி அவள் நடந்துகொண்டதில்லையென்று அவளுக்குத் தெரிந்திருந்த போதிலும் ‘’பார்க்கலாம்.’’ என்றுதான் அவள் பதில் சொன்னாள். அடுத்த கணம், தான் வன்புணர்வுக்கு ஆளாகிக் கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருந்ததை அவள் கண்டாள். அதற்கு வேறு வார்த்தை அல்லது மாற்று ஏதும் இல்லை. அவள் அண்மையில் பாலுறவுகளிலிருந்தும் நழுவிச் சென்றிருந்ததால், அந்தப் புணர்வில் சிலிர்த்து முழுதுமாக உருகிக் கரைந்துபோயிருந்ததை அறியாமல், அவள் காதில் ‘’ பொட்டை நாயே, எனக்குக் குழந்தை வேண்டும். இப்போதே! பத்தாண்டுக்குப் பிறகல்ல!’’ என்று மட்டும் அவன் கரகரக்காமலிருந்திருந்தால்,  ‘’ சரி,   ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’’ என எளிதில்  கூறியிருப்பாள்.

அடுத்த நாள் காலை உணவின்போது அவள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவனும் அதைக் கவனிக்கவில்லை. அவன் அவனுடைய டோஸ்ட், பழப்பாகு மற்றும் காப்பியில் கண்ணாக இருந்தான். பதினோரு மணி வரையிலும் அவன் விடுதிக்குச் செல்ல வேண்டியதில்லை. இதுதான் அந்த நாளின் அவர்களுக்கான மிகச் சிறந்த நேரம்; அவன் பணிக்குச் செல்வதற்கு முந்தைய மணிப் பொழுது. அவர்கள் பேசுவார்கள்; அப்படிப் பேசாமலிருந்தாலும் செய்தித்தாள் வாசிப்பார்கள்; சில நேரங்களில் மீண்டும் படுக்கைக்குச் செல்வார்கள். குழந்தை பிறந்தபிறகு காலை நேரங்கள் மீண்டும் இதுபோல இருக்கப்போவதில்லை. இதை அவள் அவனிடம் கூற, அவன் சொன்னான், ‘’ சரி. அதனாலென்ன?’’ அவன் இப்படிச் சொன்னது, அவன் அவளைக் காதலிக்கவில்லையென நினைக்கச் செய்தது. காலை உணவு முடியும் வரைக்கும் அவன் அவளது மவுனத்தை உணரவில்லை என்பதல்ல இதன் பொருள். அவன் தலையைத் தூக்கி அவளைக் கடுமையாக நீண்டநேரம் நோக்கியபோது, அவள் பதிலுக்குத் திருப்பி இதமற்று நோக்கினாள். பின்னர், அவள் அதை அப்படியே, முன்பு கண்ணாடியில் பழகியதுபோல இமைக்காமல் அவனை உறுத்துவதைப் போல் நோக்குவதைத் தொடர்ந்தாள். ‘’என்ன இழவு?’’ என்று அவன் கேட்டான். ‘’ என்ன…..?’’ அவள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவன் முன்னே அமர்ந்து அப்படியே அவனை உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அது அவனை வெறிகொள்ளச் செய்ததைக்  கண்டு, உள்ளுக்குள் பரவசம் கொண்டு சிலிர்த்தாள். அவள் எதை நினைத்து என்ன செய்து கொண்டிருக்கிறாளென அவன் வியந்து, குற்றம் சொல்லிக் கேட்டதற்கும் அவள் ஒரு வார்த்தைகூடப் பதில் சொல்லாதபோது, அவன் ‘’ பொட்ட நாயே!’’ எனக் கத்திவிட்டு வேலைக்குப் போய்ச் சேர்ந்தான்.

ஒரு அருந்தகத்தின் வெளியில், இதமான வெயிலில், தள்ளுவண்டிக் குழந்தை நடுவிலிருக்க, மேரி, ஹெலனோடு சென்று அமர்ந்தாள். உண்மையில் நானொன்றும் குழந்தை பற்றிப் பெரிதாக எண்ணவில்லையென அவள் நினைத்துக்கொண்டாள். மாத்திரை சாப்பிடுவதை விட்டுவிடப்போகிறேன்; என்னதான் ஆகிறதென்று பார்த்துவிடலாமே! ஆனால், இதை திமித்ரிக்குச்  சொல்லப் போவதில்லை. குழந்தைக்காக என்று சொல்லி, நான் ஒன்றும்  விட்டுக்கொடுக்கப்போவதில்லை.

‘’நீங்கள் எவ்வளவு நேரத்துக்கு அப்படியிருப்பீர்கள்? ‘’ அவள் மிக இயல்பாகத் தெரியவேண்டுமென முயற்சித்துக் கேட்டாள். ஆனால், ஹெலன் உடனேயே புரிந்துகொண்டு, ‘’ ஓ, அது ரொம்ப நேரத்துக்கில்லை – எவ்வளவு நேரம் என்னால் முடியுமென்று பார்ப்பேன். ஏனென்றால் நான் விட்டுக்கொடுக்க விரும்புவேன். அதனால் அதனைத் தொடர்வதில்லை.’’

எல்லாவற்றையும் ஹெலன் எப்படி, இப்படி மிக எளிமையானதாக எடுத்துக் கொள்கிறாள்? எதுவானாலும் ஒன்றுமேயில்லையென்பதுபோல் ஏதோ ஒரு வேடிக்கைப் பேச்சு போலப் பேசுகிறாள். எனக்கு ஏன் அப்படி எளிய ஒன்றாகத் தெரியவில்லை? மேரி அமைதியாக, ஹெலனின் நீண்டு மெலிந்த இளம்பழுப்புநிறக் கால்கள், மெலிந்த இளம்பழுப்புக் கைகள், அந்தக் கறுப்பு உடை அவள் மீது பொருந்தும்  அழகு, தோள்களில் தளர்வாகத் தொங்கிப் பளபளக்கும் கறுப்புக் கேசம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே கனக்கும் இதயத்தோடு எண்ணிப்பார்க்கிறாள். அந்த உடை என்மீதென்றால் ஒரு குப்பலாகத் தெரியும் …. குழந்தை சிணுங்கத் தொடங்கியது. ஹெலன், எந்தச் சிக்கலுமில்லாமல், குழந்தையைத் தூக்கி, அணைத்து இயல்பான பார்வையில் ஏதோ ஒரு கிரேக்க மழலைப் பாட்டினை அவளுடைய ஆழ்ந்த கவர்ச்சிக்குரலில் பாடுகிறாள். குழந்தை அழுகையை நிறுத்தியது. அதன் மென்மையான சிறிய தலை மேரியின் அருகில் ஒருசில அங்குல தூரத்திற்குள்ளேயே இருந்தது. மென்மையும் இனிமையும் இதயத்துக்கு நெருக்கமுமான குழந்தை மணம், அவளை அழவேண்டும்போலச் செய்தது. ‘’ஓ, இல்லை, நான் அழக்கூடாது, ஓ, இல்லை’’ யென அவள் நினைக்க – ஹெலன் மிக இயல்பாக, அணைத்திருந்த குழந்தையை அவளிடம் நீட்டி, ‘’ நான் கழிவறைக்குச் செல்கிறேன்.’’ என்றதோடு,  கறுப்பு லினன் அவளைச் சுற்றி அசைய  ஓரடி கூட எடுத்து வைத்துவிட்டாள்.

எங்கள் குழந்தைக்கு, திமித்ரி கிரேக்கப் பாடல்களைப் பாடுவானென எண்ணுகிறேனென மேரி நினைத்துப்பார்த்தாள். ஹெலனும் திமித்ரியாசும் `கிரீக்`கில் பேசிக்கொள்ளும்போது மேரி கவனித்திருக்கிறாள். கபாப், தரமசால், ரெட்சினா போன்றவற்றையல்ல அவள் பேசுவது, அவையெல்லாம் இங்கே, லண்டனிலேயே கிடைக்கின்றன; ஆனால், அந்த ஆழ்நீலக் கடல் மீதான வெயில், வெதுவெதுப்பான பாறைகள், ஆலிவ் மரங்கள், பாடல்கள்! அந்த இரண்டு கிரேக்கர்களும் பேசிக்கொள்ளும்போது, டாமும் மேரியும் – இருவருக்குமே ஒரு சில கிரீக் வார்த்தைகளைத் தவிர வேறு ஏதும் புரியாது – அவர்கள் இருவரும் மணம் செய்துகொண்டிருக்கும் இந்த இருநபர்களும் சிலவேளைகளில் அவர்களுக்கும் அந்நியர்களோவெனச் சிறு புன்னகையைப் பரிமாறிக் கொள்வார்கள்.

வழக்கம்போலத் தாமதமாக, திமித்ரியாஸ் நடுஇரவும் தாண்டி வீட்டுக்கு வந்தபோது, மேரி அவனிடம் பேசவில்லை. ஆனால் படுக்கையில் உட்கார்ந்து, அவன் அறைக்குள் தட்டுத்தடுமாறி, திட்டிக்கொண்டே அவனது உடைகளைக் கழற்றியெறிந்து, பின்னர் படுக்கையில் விழுந்து அவளுக்கு முதுகைக்காட்டித் திரும்பிப் படுக்கும்வரை அவனையே உறுத்துப் பார்த்தாள். பின்னாலிருந்து அவனை இரண்டு கைகளாலும் சுற்றி வளைத்து, எப்போதும் அவன் விரும்பிச் செய்யச்சொல்கிறபடி, அவன் காதைக் கரம்பிப் பின் முத்தமிட்டு, அவன் கழுத்தைக் கௌவிக் கடிக்க விரும்பினாள். முதல்முறையாக அவள் அப்படிச் செய்தபோது, அது ஒரு வேலியைத் தாண்டி இருட்டுக்குள் குதிப்பதாக இருந்தது. அது ஏனென்றால், அதுவரையிலும் இல்லாத ஒரு செயலாக – அவள் எப்போதுமே `சரி` என்று சொல்பவளாக இருக்கவே விரும்பினாள் -  அவளாக முன்முயற்சி யெடுத்திருந்தாள். ஆனால், அதன் தொடர்ச்சியாக ஒரு புயல்வேகப் புணர்ச்சி நடந்தேறியது. ஆனால், அது எப்போதுமே அப்படித்தான் நடக்குமென்பதில்லை:  ஒருமுறை, எல்லாவற்றுக்கும் நான் `ஆமாம்` போடுவேனென்று நீ நினைத்துக் கொள்ளும்படி நான் விட்டுவிடப் போவதில்லை, என்றான், அவன். அது குத்தல் பேச்சு என அவள் நினைத்தாள். அவன் ஒரு கரடுமுரடான, சண்டைப் பேர்வழியென நீங்கள் நினைக்கலாம்; ஆனால், அதையே எளிதில் உணர்ச்சிவசப்படுகிற, தொட்டாற்சிணுங்குகிற அவனுடைய மென்னயப் போக்கு என அவள் கண்டு, வியக்கவும் செய்தாள். சாதாரணமான ஒரு அணைப்பினை, தழுவிக் கொள்ளுதலை எதிர்பார்க்கிற அவள், பாலுறவுக்கு ஆசைப்படுகிறாளோவென அவன் நினைத்துவிடக்கூடாதென அவள் வெட்கப்படவோ அச்சங்கொள்ளவோ செய்யலாமென அவனுக்குத் தோன்றியதால், அவளாகவே ஒரு முடிவுக்கு வரட்டுமென அவன் அசையாதிருந்தான்.  ஹெலனின் சிறுசிறு தொடுகைகள் மற்றும் வருடல்கள், டாமின் முகத்தில் வியப்பு மற்றும்  ஆர்வம் விளைவிப்பதை மேரி கண்டிருக்கிறாள். அதையே – ஹெலனைப் பார்த்திராவிட்டால் அப்படியான ஒன்றைப்பற்றி அவள் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டாள் – திமித்ரியிடம்  முயற்சிக்க நினைத்தாள், அவ்வளவுதான். இப்போது அவள் திமித்ரியின் அருகில் விறைப்புடன் படுத்திருக்கையில், ஒருநாள் இரவு கணவனைச் சுற்றிக் கைகளைப் போட்டுக்கொண்டு காலைவரையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது; அடுத்தநாள் இரவிலோ அவனைக் கைகளால் தொடக்கூட முடியாமல்போகிறது; பிறகெங்கே முத்தமிடுவதும், கவ்விக்கடிப்பதுமென நினைக்கிறாள்.

இரவு முழுவதற்கும் அமைதியாகவே இருந்தாள்; அடுத்த நாள் காலை வரையிலும்கூட அவள் தூங்கவேயில்லை. காலை உணவின்போதும் அமைதியாக இருந்தாள். ஆனால், இப்போது அவள் பயந்திருந்தாள். அவள், அமைதியாகக் கண்கொட்டாமல் அவனையே பார்த்திருக்க, அவள் விழிகளைப் பார்ப்பதைத் தவிர்த்த அவன் சிலமுறை அவளை நோக்கியபோது, அவன் கண்களில் அச்சம், கோபத்தோடு என்னவென்று புரியாத வியப்புமிருந்தது. ஆனால், அவளின் அதிருப்தி கண்டு வெருண்டுபோன அவனையே குற்றம் சொல்வதுபோல்,  அவன் மீது மட்டுமல்லாமல் எதிலுமே திருப்தியில்லாத அவள் நிலை, ஒவ்வொரு நிமிடமும் அவன் பயத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. அவளது செய்கை அதற்கு அப்படி எரியூட்டிக்கொண்டிருந்தது. அவன் இன்னும் நல்லதாகச் சீர்கொள்ள வேண்டும்.    அவள் கைகளில் முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்து, வருத்தம் சொல்லியிருக்கவேண்டும்.

அன்று இரவு அவன் உணவகத்திலிருந்து வந்தபோது, தூங்கிவிட்டது போலக் மிகக்கவனமாகக் காட்டிக்கொண்டாள். தூங்கும்போது ஒருவேளை அவன் முத்தமிடலாம் - அவள் தூங்கும்போது, பலமுறை அப்படிச் செய்பவன்தான் - அவள் அவனைக் கைகளால் சுற்றிக்கட்டித் தன்னிடம் இழுத்துக்கொள்வாள். ஆனால்,  அன்று அவன் முத்தமிடவேயில்லை.

மறுநாள் காலை உணவின்போது, அங்கே உட்கார்ந்திருந்த அவளது வெறிக்கும் முகம் ஒரு ரேடாரின் வட்டவடிவ அலைவாங்கியைப் போல  அறை முழுதும் அவன் பின்னாலேயே செல்வதை அவளால் உணர முடிந்தது. ஆனாலும், அவன் அவள் மீது பார்வையைத் திருப்பவேயில்லை. அவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வதாக அவள் நினைத்தாள். என் முகத்தில் ஒரு புன்சிரிப்பு இல்லையென்பதற்காக, நான் பேசவில்லை யென்பதற்காகவா இப்படி? – ஆனால், நான் உள்ளுக்குள் அப்படியேதானே இருக்கிறேன், இல்லையா, என்ன? அதற்கிடையில் அவன் தடுமாறி எது எதையோ கீழே விழத் தள்ளினான்.  அவள் ஏதோ ஒரு சாபத்தை அவன் மீது ஏவிவிட்டதைப்போல அவன் தோன்றினான். அவன் காப்பியைக் குடிக்காமலே வீட்டைவிட்டுச் சரேலென வெளியேறினான். மறுநாள் காலையில் அவன் விழிக்கும் முன்பாகவே அவள் விழித்து, அது எந்தமுறையில் நடக்குமென்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாளோ, அப்படி அது நடக்கவிடாமல், படுக்கையை விட்டும் நழுவவிருக்கும்போது, அவன் படுக்கையிலிருந்தும் எழுந்து நிமிர்ந்து உட்கார, அவள் அந்த அன்னத்தூவி மெத்தையின் ஓரத்தில் அமர்ந்த அவனையே நோக்கி வெறிக்குமாறு தன்முகத்தை நேர்செய்து கொண்டிருந்தாள். அவன் ஏதோ திகில் கனவு கண்டதுபோல் கூச்சலிட்டுப் பின் தேம்பத் தொடங்கினான், ‘’ நீ ஒரு குரூரமான பெண், மேரி. நீ ஒரு கொடூரமான, மிகக் கடுமையான பெண்.’’ அன்று இரவில் அவன் பெருமூச்சும் முனகலுமாகப் புரண்டுகொண்டிருந்தவன், திடீரென கிரீக் மொழியில் கத்தினான். அது ஏதோ சாபமிடுவதுபோலத் தோன்றியது. அவள் பயந்துவிட்டாள். அவன் அவளைக் கொன்றுவிடுவான். இல்லை, அப்படி அவள் நினைத்தாள். பின்னர், இல்லை, அவளொன்றும் மன நடுக்கத்தின் அருகில்கூட இல்லை. ஆனால் `இதற்கு நான் முடிவு கட்டுவேன்` எனத் தீர்மானித்தாள். அதுவே போதுமானது. ஆனால், அதை அவளால் நிறுத்த முடியவில்லை. எதற்கும் மசியாத, குற்றம் சுமத்தும் வெறித்த பார்வை அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டது. சரி, நான் நல்லதை நினைத்துத்தானே இப்படித்  தொடங்கினேன், அப்புறமென்ன? என அவள் நினைத்தாள்.

நாட்கள் கடந்தன. ஒருநாள் மாலை நான்குபேரும் ஒன்றாக இருக்கும்போது,  திமித்ரியை, தான் பொருட்படுத்தாமலிருப்பதையும், அவன் அவள் பார்வையைத் தவிர்க்க, என்னென்ன முடியுமோ அத்தனையையும் செய்து கொண்டிருப்பதையும் யாரும் கவனிக்கமாட்டார்களென மேரி நினைத்தாள். ஆனால், எல்லாவற்றையும் ஹெலன் கண்டுகொண்டாள்.

அடுத்த நாள் மேரி, ‘’ எவ்வளவு நாட்கள்தான் நீங்கள் அதைத் தொடர்ந்து  செய்வீர்கள்?’’   என ஹெலனிடம் கேட்டாள்.

‘’ ஒரு பகற்பொழுதுக்கும் மேலாக நான் ஒரு போதும் அதைத் தொடர்வதில்லை. நல்லது, நான் அவரை நேசிக்கிறேனில்லையா?’’  பிடி கொடுக்காமல் பேசித் தவிர்க்க முயற்சிப்பது போல அவள் குரல் ஒலித்தது.

மேரி அந்தச் சிகிச்சையைத் தொடங்கி, இப்போது மூன்று வாரங்களாகி விட்டன. அவள் கலவரப்பட்டுப் போனாள்; வெளியே எங்கும் செல்வதில்லை; ஆனால், உட்கார்ந்து அழுதுகொண்டேயிருந்தாள். பின்னர் அமைதியாக உட்கார்ந்து வெறித்துக்கொண்டிருந்தாள்; திமித்ரியைப் பார்த்து அல்ல; அவன் எங்கே அங்கிருக்கிறான்? சுவரைப்பார்த்துத்தான் வெறித்துக்கொண்டிருந்தாள். என்ன நடக்கிறதென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அது பயங்கரமாக இருந்தது. அவள் கணவனை இழந்துவிட்டாளா? அவன் மிகவும் பின்னிரவு ஆகாமல் வீட்டுக்கு வருவதில்லை. ஏனென்றால்  பொழுதுக்கும் குடித்துக் கொண்டேயிருந்தான். அவன் வீட்டுக்குள் சுழன்று தடுமாறியபோது அவள்மீது வசைமாரி பொழிந்துகொண்டிருந்தான் – கிரீக்கில். பின்னர் ஒரு நாள் இரவில் வீட்டுக்கு வரவேயில்லை.

‘’ உனக்கும் திமித்ரிக்கும் என்னதான் நடக்கிறது?’’ தெருவில் பார்த்த மேரியிடம் கேட்டான், டாம். ‘’ உங்களுக்குள் என்ன சண்டையா?’’

‘’ அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே.’’ எனப் புன்னகையோடு மேரி  சொன்னாள். ஆனால் உள்ளுக்குள், அவள் வாழ்க்கை பொடிப்பொடியாகச்  சிதறிப் பாழாகிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

அன்று இரவு படுக்கையில் அவளது குடிமயக்கக் கணவன் மீது கைகளைச் சுற்றிப் பின்பக்கமாக ஒன்றி அணைத்து, முகர்ந்து சொன்னாள், ‘’ வா, திமித்ரி, சண்டை வேண்டாம்.’’ ‘’ எங்கேயாவது, நரகத்தில் போய்விழு,  சனியனே!’’ என்று அவன் கத்திச் சத்தமாகத் தேம்பித்தேம்பி அழுதான். அதுவே அவளை வெறுப்புகொள்ளச் செய்தது. பின்னர் திடீரென்று அப்படியே விழுந்து உறங்கிப்போனான். காலையில் அவள் படுக்கையிலிருந்தும் முன்னமே எழுந்து காலைக்கான உணவைத் தயாரித்து மேஜையில் வைத்தாள். அவன் குளியலறையிலிருந்தே வெளியே செல்லுவதற்கான உடையணிந்து வந்தான். அவன் தலை தெரிந்த உடனேயே, வாசலிலேயே மறித்து, ‘’ உனக்காக அற்புதமான உணவு தயாரித்திருக்கிறேன்’’ என்றாள்.

அதைக் கேட்டதும் அவன் சிரித்தான், ஆனால், அது குரைப்பதைப் போலிருந்தது. அவளைப் பார்த்து ஒருவிரலைக் கிண்டலாக அசைத்து, ‘’ அட,  பேசுகிறாயே! உனக்குத்தான் என்னைக் கண்டதும் வார்த்தைகளெல்லாம் எங்கேயோ போய் முடங்கிக்கொள்ளுமே, வாயை மூடு, நான் எதையும் கேட்கத் தயாரில்லை.’’ என்றான். அத்தோடு வெளியேறினான்.

ஹெலனைத் தேடிப் போனாள், மேரி. இல்லத்தரசிகளும் குழந்தைகளுமாகக் குழுமியிருந்தவர்களின் நடுவில் குழந்தையும் கையுமாக அவள் அமர்ந்திருந்தாள். அவர்கள் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் குதியும் கும்மாளமுமாக மெல்லோட்டமோடிக்கொண்டிருந்தார்கள். அது ஹெலன் தானா? அவளுக்கென்ன உடம்பு சரியில்லையா? அல்லது வேறெதுவுமா? அவள் மெலிந்திருப்பதாகத் தோன்றினாள். பாலூட்டுகிற மார்பு மொத்தையாக, ஏன், அசிங்கமாகக்கூடத்தான் தெரிகிறது. ஹெலனைப் பார்த்தபடி நின்று அவள் நினைத்துக்கொண்டிருக்க, ஆனால், உண்மையில் ஹெலன் அப்படியொன்றும் தெரியவில்லை. இப்போதெல்லாம் திமித்ரி வீங்கிச் சிவந்த குடிகார முகத்துடன் அசிங்கமாகப் பருத்துவிட்ட மனிதனாகத் தெரிவதாக ஹெலன் நினைத்தாள். மேரி அந்தக் கூட்டத்தோடு சேர்வதற்காகச் சென்றாள். ஆனால், ஹெலன் பெஞ்சில் அவளுக்கு இடம் கொடுக்கச் சிறிதும் நகராமலிருப்பதைக் கண்டாள். மேரி நெருக்கித் தள்ளி இடம் பிடித்தாள். தீர்மானமாக அவளிருந்ததைக் கண்ட பெண்கள், ஒவ்வொருவராக அவர்களின் கைக்குழந்தைத் தள்ளுவண்டி மற்றும் தள்ளு நாற்காலிகளைத் தள்ளிக்கொண்டு அகன்று சென்றனர்.

இப்போது மேரி, அவளின் முழுக்கதையையும் ஹெலனுக்குச் சொன்னாள். அவள் ஒரு பைத்தியக்காரியைப் போலப் பேசுவதை அவளே உணர்ந்தாள். ஹெலன் கைக்குழந்தைத் தொட்டில் வண்டியை முன்தள்ளுவதும் பின்னுக்கிழுப்பதுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். அவள் அதை ஒருபக்கமாகத் தள்ளிவிட்டு மேலும் கீழுமாகத் தூக்கி ஆட்டுவதும், பின் தன்னை நோக்கிப் பின்னிழுத்து நீண்ட நேரச் சிந்தனைக் கணங்களுக்கு ஆட்டிஅசைப்பதும், பின் மறுபடியும் முன்னுக்குத் தள்ளுவதுமாக இருந்தாள். அது மேரிக்கு அந்தக் கைக்குழந்தைத் தள்ளு வண்டியும் அவள் கதையைக் கேட்பதிலும் முடிவுசொல்வதிலும் பங்குவகிப்பதாகத் தோன்றியது.

‘’ நீ, மூன்று வாரங்கள் அப்படியே செய்திருக்கிறாய்?’’ கடைசியாக ஹெலன் சொன்னாள். அவள் அதை அழுத்தந்திருத்தமாக உச்சரித்த விதம், அவள் ஒரு உச்சபட்ச வெறுப்பினைக் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பதாக மேரிக்கு உணர்த்தியது. அவள் முகம் மிகக் கடுமையாகியிருந்தது. அவள் இனிமேலும் மேரியின் சிறந்த தோழியாக இருக்கப் போவதில்லை. ‘’ மூன்று வாரங்கள்,’’ தலையை ஆட்டித் திடமாக மொழிந்தாள், ஹெலன். ‘’ திமித்ரியாஸ்  நோய்ப்பட்டிருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.’’

‘’அவர் நோய்ப்பட்டிருக்கிறாரா என்ன?                                

‘’ உனக்கே அது தெரியவில்லையா?’’ எனச் சொன்னது நிச்சயமாக வேறு,  ஹெலன்தான். இவள் புதியதொரு ஹெலன். அவள் முகம் இறுகி இருண்டு, அழகாகவே இல்லை. அவர்கள் ஒரு உணவு விடுதிக்கு வெளியே வர்ணம் பூசவேண்டிய, ஒரு அழகற்ற பெஞ்ச் மீது அமர்ந்திருந்தனர். அங்கே வாசலின் இருபுறமும் சிறிய இடைவெளிகளில் அழகுக்கு வளர்க்கப்படும் சிறுமரங்கள் இருந்தாலும் அவை மனத்தை ஈர்ப்பதாக இல்லை. மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டியிருந்தது. அவை தூசி படிந்து தோன்றின.
‘’ வேலைசெய்ய முடியாதபடி நேற்று திமித்ரியாஸ் அளவுக்கதிகமாகக் குடித்திருந்ததாக டாம் சொன்னார். அவர் கவனமாக இல்லையென்றால் வேலையை இழக்க வேண்டியிருக்கும்.’’
‘’ ஆனால், நீதானே அந்த ஐடியா கொடுத்தாய் ‘’ என்ற வார்த்தைகள் தொண்டை வரைக்கும் வந்துவிட்டாலும் மேரியின் வாயை விட்டு வெளிவரவில்லை. அதுவே அவளுடைய நிரந்தர நிலையாகிவிடுமோ என்ற கலவரத்தின் பிடிக்குள் இருந்த அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் – `அவள் சொன்னதை நான் ஏன் அப்படியே எடுத்துக்கொண்டு அதே வழியில் செய்து பார்த்தேன்?`
‘’ முடிந்த அளவுக்கு இன்னும் நன்கு முயற்சிசெய். எப்படியாவது அவனைச் சரிக்கட்டப் பார்’’ என அழுத்தமாக உச்சரித்த ஹெலன், பெஞ்சிலிருந்து குழந்தையுடன் எழுந்து, மேரியைப் பார்த்து ஒரு சிரிப்புகூடச் சிரிக்காமல்,  சரி, நாளைக்குப் பார்க்கலாமென்று ஒரு ஒப்புக்குக்கூடச் சொல்லாமல் போய்விட்டாள்.
`நான் ஹெலனையுங்கூட இழந்துவிட்டே`னென மேரி நினைத்தாள். திமித்ரி வேலை செய்த விடுதியின் வெளிப்பக்கம் போய் அமரலாமெனச் சென்றாள். பிற்பகலில் அவனுக்கு ஒரு மணிநேரம் இடைவேளை உண்டு. அவன் வெளியே வந்ததும் அவனை நோக்கி ஓடி அவன் கையைப் பிடித்துக்கொண்டு, ‘’ வருந்துகிறேன், திமித்ரி, நான், வருந்துகிறேன்.’’ என்றாள். அவள் அழ, அழ, அவன் திரும்பிக்கொண்டு, ‘’ ஓஹோ, வருத்தம் சொல்லிவிட்டாய். அவ்வளவு தானா, இவ்வளவும் எதனால் வந்தது? நான் என்ன கேட்டுவிட்டேன், ஒரு குழந்தை, இதற்குப்போய்.., ஆனாலும், நீ ரொம்ப, ரொம்ப மோசமான பெண், மேரி.’’ என்றான். அவசரமாக ஏறிட்ட அவனது ஒரு பார்வையிலேயே, அவனது பயத்தை, அவளது முகத்தில் அந்த வெறிக்கின்ற, இறுகிய கோபப் பார்வை எங்கே மீண்டும் தோன்றிவிடுமோவென அவன் அச்சம் கொண்டதை அவள் பார்த்திருக்க முடியும். அவளிடமிருந்தும் கையை விடுவித்துக் கொள்ள அவன் பின்னிழுத்தான். ஆனால், அவள், அவன் கையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘’ திமித்ரி, திமித்ரி, திமித்ரி.’’ எனக் கெஞ்சிக் கெஞ்சித் திக்கினாள். அவன் பாதி திரும்பிய நிலையில், பக்கப் பார்வையாகத் துடிக்கும் கண்களால் அவளை நோக்கினாலும் அவனைத் துயர்ப்படுத்தும்   அவளது கண்களை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவன் அவளை முழுவதுமாக என்றென்றைக்கும் வெறுத்துவிடுவானென அவள் நினைத்து, ‘’ வா, திமித்ரி, வீட்டுக்குப் போகலாம், ப்ளீஸ், ’’ என அழைத்தாள். இருவரும் நடைமேடையில் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தனர். அந்த வழியே வந்தவர்கள் அவர்களைக் கண்டு ஒதுங்கி, விரைந்து அகன்றனர்.   இப்போது அவள் ஆருயிர் வாழ்க்கைக்காக அவன் தோள்களில் தொற்றித்  தொங்கிக் கொண்டிருந்தாள். ஆம்.  வாழ்க்கையை, அவள் அப்படித்தான் உணர்ந்தாள். ஏனென்றால் இப்போது எல்லாமே பறிபோவதாக இருந்தது. அவள் சத்தமாகத் தேம்பி அழுதாள். அவனோ கொதித்துச் சிவந்து பரிதாபமாக நின்றான்.
வீடு கூப்பிடு தூரத்தில், ஒருசில நிமிட இடைவெளியில்தான் இருந்தது. அவள் நெருக்கத்தில், அவன் தள்ளாடிச் சென்றான். அவள் அவனை இறுக்கிப் பிடித்திருந்தாள். விட்டால், ஓடிவிடுவானென்பது மட்டுமில்லை; மீண்டும் அவனைப் பார்க்க முடியாமலாகிவிடலாம்.
வீட்டில் அவனைப் படுக்கையறைக்கு இழுக்க அவள் முயற்சித்தாள். ஆனால், அவனோ மேஜை மீது, தலைக்கு முட்டுக்கொடுத்துக் கைகளில் தாங்கியபடி உட்கார்ந்துவிட்டான்.
‘’இப்போது என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?’’ எனக் கேட்டான், அவன். ‘’சரி. இப்போது உடலுறவு கொண்டால் அத்தோடு எல்லாம் சரியாகி விடுமா?.’’
‘’ மாத்திரை சாப்பிடுவதை நான் நிறுத்திவிட்டேன், திமித்ரி.’’
‘’ ஆக, நீ மாத்திரையை நிறுத்திவிட்டாய்.’’
‘’ வா, திமித்ரி, கெஞ்சிக் கேட்கிறேன், வா, படுக்கைக்குப் போகலாம்.’’
‘’ குழந்தைக்கு என்ன வழி?’’
அவனை இழுப்பதற்காக, அவள், அவன் கையைப் பற்றினாள். கூடவே  அவனோடு கடைசியாகப் படுக்கையில் எப்போது பேசினோமென்றும் நினைத்துக்கொண்டிருந்தாள். அவள் இழுத்த இழுப்புக்கு, அவன் இணங்கிப்  படுக்கைக்கு அவளோடு தள்ளாடிச் சென்றான். அவன் அவ்வப்போது அசிங்கமாக, வேதனைமிக்க தேம்பல் ஒலிகளோடு அழுதுகொண்டிருந்தான். அவள் அவனை உடைத்து நொறுக்கியிருந்தாள்.  சிறிதளவுகூட வெற்றியின் சிலிர்ப்பு அல்லது அவர்களது பாலுறவு விளையாட்டுகளின் மகிழ்வெச்சம் போன்ற எதனையும் அவள் உணரவில்லை. உள்ளுக்குள்ளாகவே, ‘’ அவன் சரியாகி விடுவான். எல்லாவற்றையும் மறந்துவிடுவான். நாங்கள் முன்பிருந்த மாதிரியே மகிழ்ச்சியாகிவிடுவோம்.’’ என்று அவள் பிதற்றிக்கொண்டிருந்தாள். முன்னர், வாழ்க்கை அற்புதமான ஒன்றாக இருந்ததென  இப்போது அவளுக்குத் தோன்றியது. ஆனால், அந்த மகிழ்ச்சியை அவள் ஏன் தூக்கி யெறிந்தாளென்பதை இப்போதும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதற்கிடையில், அவர்கள் காதலில் ஈடுபடுவார்களா அல்லது பாலுறவு கொள்வார்களா என்ற ஒரு கேள்வி அங்கு எழவேயில்லை. ஏனென்றால், வலுவற்று, வாடித் துவண்டு, சுருங்கிப்போன, சிறிய தசைத் துண்டு ஒன்றைத்தான் அவள் கையில் பிடித்திருந்தாள். இதைப்போன்ற எந்த ஒன்றும் எப்போதும் நிகழ்ந்ததேயில்லை.
‘’ இனிமேல் மீண்டும் அப்படிச் செய்யாதே,’’ என அவன் கடுமையாகப் புதியதான ஒரு துன்பக் குரலில் சொன்னான். ‘’ இனிமேலும் அப்படிச் செய்யாதே. இப்போது சொல்கிறேன் கேளு, திரும்பவும் நீ அப்படிச் செய்தால், உன்னைக் கொன்றுவிடுவேன். ஒரேயடியாக வெளியே போய்விடுவேன். வீட்டுக்கு வரவே மாட்டேன். அதுதான் சொல்கிறேன், அதை மீண்டும் செய்துவிடாதே.’’
அவன் படுக்கையில் விழுந்தான்; ஆனால் முதுகைத் திருப்பிக் கொள்ளாமல் மல்லார்ந்துதான் படுத்திருந்தான். அவள், அவளாகவே, அவன் கைகளுக்குள் முடிந்த அளவு நெருக்கமாகத் தன்னை நுழைத்துக்கொண்டாள். ‘’ ஓ, திமித்ரி, வருந்துகிறேன்.’’ அவள் நெடுநேரம் அழுதுகொண்டிருந்தாள்; ஆனாலும் அவளை மன்னிக்கும் விதமாக அவன் சொன்னபடியே, இனிமேல் நடக்கப்போவதாகத் தீர்மானித்தாள். அதனாலேயே அப்போதைக்குக் கொஞ்சம் பரவாயில்லாதது போலும் உணர்ந்தாள். அவள் தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள் : ’’ நாங்கள், ஒன்றிரண்டு நாட்களில் இது எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். எல்லாமே முன்னர்ப் போலவே சரியாகிவிடும்.’’ 
****        
           
மலைகள் இணைய இதழ், டிசம்பர் 17,  2013, இதழ் 40 இல் வெளியானது.

Saturday, 9 January 2016

இங்கிலாந்து சிறுகதை - நரகத்தில் ஹான்வெல்- Hanwell in Hell by Zadie Smith

நரகத்தில் ஹான்வெல் Hanwell in Hell

ஆங்கிலம் : ஜேடி ஸ்மித் Zadie Smith

தமிழில் ச.ஆறுமுகம் 

 

download (7)
(ஜேடீ ஸ்மித், இங்கிலாந்தின் வடமேற்கு லண்டனில் 25. 10. 1975ல் பிறந்தவர்.   பிரித்தானிய நாவலாசிரியர், கட்டுரையாளர் மற்றும் சிறுகதைப் படைப்பாளர். இதுவரை வெள்ளைப் பற்கள், ஆட்டோகிராப் மனிதன், அழகைப்பற்றி, வடமேற்கு (NW) எனப் புகழ் பெற்ற நான்கு நாவல்கள் வெளியாகியுள்ளன. 2003ல் கிரந்தாவின் சிறந்த இருபது இளம் படைப்பாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். 2013 பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். தற்போது நியூயார்க் பல்கலைக் கழகத்தில் 1.09.2010 முதல் ஆக்கபூர்வ படைப்புத் திட்டத்தின் கீழ் பேராசிரியராகப் பணிபுரிகிறார். புனைகதைகளுக்கான ஆரஞ்சு விருது இவருக்கு 2006ல் வழங்கப்பட்டுள்ளது. டைம் இதழின் சிறந்த நூறு ஆங்கில நாவல்கள் 1923 முதல் 2005 பட்டியலில் இவரது வெள்ளைப் பற்கள் நாவல் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது புனைவுகள் மல்ட்டிகல்ச்சுரலிசம் எனப்படும் பண்பாட்டிணைவு குறித்தும் மிகச்சிறந்த நன்னோக்கு நம்பிக்கை குறித்தும் பேசுகின்றன.  தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள HANWELL IN HELL என்ற சிறுகதை 27. 09. 2004 நியூயார்க்கர் இணைய இதழில் வெளியாகியுள்ளது. இக்கதை புகழ்பெற்ற The Broadview Anthology of British Literature: Volume 6: Joseph Black, Leonard Conolly, Kate Flint – 2006 – Literary Collections – தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது.)

குடும்பம் மற்றும் குடும்பங்கள்.
1970 – 73க்கிடையில்  மத்திய பிரிஸ்டல் பகுதியில்  வசித்த திரு. ஹான்வெல் அவர்களை நினைவுகொள்கிற எவருடனும் கடிதத் தொடர்பு கொள்ள ஆவலாக இருக்கிறோம். அவர் குறித்த எந்தச்சிறு தகவலும், ஒட்டுத்துண்டுகளைக் கொண்டு அவரது முழுப்படத்தையும் ஒன்று சேர்க்க முனையும் அவரது மகளால், மிகவும் நன்றியுடன் பெற்றுக் கொள்ளப்படும். தயவுசெய்து அஞ்சல்பெட்டி எண். 187க்கு எழுதவும்.
*****
நான், முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்பாக  பிரிஸ்டலில் உங்கள் தந்தையுடன் ஒரே ஒரு இரவு மட்டும்  கழித்தேன். அவரும் என்னைப்போலவே அப்போது நல்வாய்ப்பு குறைகிற ஒரு கால கட்டத்தில் இருந்தார். இருவருமே நற்பேற்றின் நாடகீய எதிர்ப்பாய்ச்சலில் அவதிப்பட்டிருந்தோம். இருவருக்குமே பொதுவாயிருந்த அந்தத் தோல்வியை – ஆண்களுக்கேயான உள்ளுணர்வில் வெகு அபூர்வமாகக் கிடைக்கிற ஒரு உதாரணம் -  உடனேயே புரிந்துகொண்டோம். இருவருமே அடுத்தவருக்கு நேர்ந்த பேரழிவின் மையத்தை மோப்பம் பிடித்துவிட்டோம். என்னுடைய அவப்பேறாக, குடியிருந்த வீட்டையும் என் வாழ்வாதாரத்தையும் இழந்திருந்தேன். அந்த வருடத்தின் இளவேனிற் காலத்தில், ஈரங்கொண்ட இடமெல்லாம் பாசி படர்ந்திருந்த ஒரு அடுக்கக அடித்தளத்தில் நான் வாழநேர்ந்ததைப் புரிந்துகொள்ளவியலாமல் திகைப்பும் தடுமாற்றமும், கொடுமைக்குள்ளான அவமானமுமாகக் கழித்தேன். கடை முகப்பில் பணம் பெறும் ஒரு நேர்மையற்ற வணிகக் கூட்டாளி என்னுடைய கவனக்குறைவான கணக்குவழக்குகளைக் கொண்டே என்னுடைய வணிகத்திலிருந்தும் (பிரிஸ்டலில் அருந்தகம் இல்லாத மது விற்பனையகங்களின் ஒரு சிறு குழுமம்.) என்னை முழுதுமாக விரட்டி, வாழ்க்கைப்பாட்டுக்கு ஒரு சாதாரண விற்பனையாளனாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளிவிட்டான். நான், புதிய அமெரிக்கக் குளிர், உறைபனிப் பெட்டிகளின் விவரப்பட்டியைத் தூக்கிக்கொண்டு வீடுவீடாக அலைந்தேன். அது ஒரு சலிப்பான பணி; அதுவும் பெண்களிடம் மானங்கெட ஏகப்பட்ட நேரத்தை- அப்படித்தான் நான் அப்போது நினைத்தேன்- செலவிட வேண்டியிருந்தது. அருந்தகம் இல்லாத மது விற்பனையகங்களில் என் பணியாளர்கள் எல்லோரையும் ஆண்களாகத்தான் நியமித்திருந்தேன். மேலும், உணர்வுபூர்வமாக ஆண்கள் மிகவும் எளிதானவர்கள் என்ற உண்மையை நான் எப்போதுமே மதிக்கிறவன். இந்தப் புதிய வேலை, என்னுடைய வீட்டுக்கு, குழந்தைப்பருவக்காட்சிகளுக்கு நான் திரும்பிக் கொண்டிருப்பதான உணர்வை ஏற்படுத்தியது. தாய்மைப்பண்புள்ள பெண்கள் அஞ்சுந்தன்மையைத் துறந்து, எனக்கு அளிக்கும் குவளை குவளையான தேநீரை அருந்திக்கொண்டு அடுக்களைகளுக்குள்ளேயே எப்போதும் சுற்றிச்சுற்றி வருவதாகத் தோன்றியது. ஹான்வெல்லின் நிலைமை சற்று மாறானதுதான்: அவர் வீட்டுச் சூழலை மதித்ததோடு, அந்த இழப்பிற்காகத் துயருற்றுப் புலம்பிக்கொண்டிருந்தார். அதிலும் அவர் அக்கறையோடு பேணிப் பாதுகாத்த மனைவி, மகள்கள், குடும்பம், வீடு எல்லாவற்றையும் இழந்துவிட்டிருந்தார். எதனால் நீங்களும் உங்கள் சகோதரிகளும் லண்டனிலேயே விடப்பட்டிருந்தீர்களென எனக்குத் தெரியுமாவென உங்கள் கடிதத்தில் என்னைக் கேட்டிருந்தீர்களே – அது எனக்குத் தெரியாது, ஆனால், அது அவரது விருப்பத்திற்கு மாறானதாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஹான்வெல் மேற்கொண்ட வாழ்க்கையை வேறு யாராக இருந்தாலும் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்.

நான் அவரைச் சந்தித்தபோது, பார்க் தெருவிலுள்ள குன்றின் மேல் பாதிதூரத்தில் அமைந்துள்ள பேர்ரி ஃப்ராங்ஸினுடைய பழைய, முதல் உணவுவிடுதியில் எச்சில் தட்டுகளைக் கழுவிக்கொண்டிருந்தார். பேர்ரி ஃப்ராங்க்ஸ் ஒரு கையில் சிவப்புக் கோப்பையும் மறு கையில் அவருடைய சொந்த சமையல் புத்தகமுமாக ஒன்றும் பிபிசியில் பிறந்துவிடவில்லையென மறுத்துவிடுவது இப்போது எளிதுதான். அது, என்னையும் ஹான்வெல்லையும் போலப்  பிற்காலத்தில் நிலவைக்கூடச் சுருக்குக் கயிற்றில் மாட்டி இழுத்து வந்துவிடுவது எளிதானதென இங்கிலாந்தில் நினைத்த ஒரு காலம். ஆனால், அதற்கும் பத்து வருடங்களுக்கு முன்பாகவே, நாங்கள் அதன் வெற்றிக்காகத் தக்கையின் கீழ்க்கல்லாகச் சமாளித்து நேர்நிறுத்தியிருந்தோம். 1970ல், பேர்ரி ஃப்ராங்க்ஸ், பழம்பெருமை தோன்றப் பெயரிடப்பட்ட, நடுவகைப்பட்ட `கான்டினென்டல் பிரிஸ்டோ` வின் உரிமையாளர் மட்டும்தான். அங்கே காசோலெட் சாம்பல் நிறத்திலும் வியால் மென்று சாப்பிடுவதாகவும் இருந்தது. உணவுக்காக அல்ல அங்கே செல்வது, அது தனித்த ஒரு  உணர்வு பூர்வமான விஷயம் : அருமையான சூழல் உள்ள ஒரு இடம். ஃப்ராங்க்ஸ் அப்போதும் ஒரு கதாநாயகக் குடிகாரராகத்தான் இருந்தார். அவர், எங்கும், தடையின்றிச் சுற்றிச்சுழல்கின்ற நிச்சயமற்ற தன்மையை அந்த இடத்தின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டுவந்திருந்தார். அந்த ஆடம்பரப் பாவனை இப்போது நகைப்புக்குரியதென்றாலும் – பனைநார்ப்பை அணைத்த சியான்டி புட்டிகள், சிவப்பு-வெள்ளைக் கட்டமிட்ட மேஜைவிரிப்புகள்- அதன் வாடிக்கையாளர் கூட்டம் வேறெங்கும் இல்லாதது; மாபெரும் பிரமுகர்கள், நல்லவர்கள், அவ்வளவாக நல்லவர் அல்லாதவர்கள் எல்லாம் கலந்து மகிழ்ச்சியானதாக இருந்தது.

இரவு ஒன்பது மணிக்குப்  பிறகு ஃப்ராங்க்ஸ் ஒரு  பிரபலமான இடம். இது போன்ற ஒரு இடத்தின் உரிமையாளர் `கடை திறந்திருக்கிறது` என்ற அடையாள விளக்கை எரியச்செய்துவிட்டு, கல்லாவில் விழுகின்ற பணத்தைக் கவனித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான் என்று என்னைப்போலவே எல்லோரும் நினைப்பது இயற்கை என்றாலும், அது அப்படியாக இருக்கவில்லை. வருகின்ற லாபத்தையெல்லாம் ஃப்ராங்க்ஸ் அப்படியே குடித்துத் தீர்த்துக்கொண்டிருந்தார். அவர் உள்ளூர்ப் பெரிய மனிதர்களிடம் அளவுக்கதிகமாகக் கடன் வாங்கியிருந்தார்; அதனாலேயே விடுதியின் பின்னறை முழுவதையும் அவர்களுக்கு, அவர்களின் மகிழ்ச்சிக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார். அந்த அறையில் நீங்கள் ஒரு மேஜையை ஒருபோதும் பெற்றுவிடமுடியாது; நீங்கள் இரண்டு சுவர்களுக்கு  மத்தியில் வாதுமை மர அருங்கலைப்பொருட்களான தேவாலயச் சாய்வுப் பலகைகள் போல வரிசையாகக் கிடந்த சாய்வுப்பலகைகளில் அமர்ந்து, மேஜைக்குப் பின் மேஜையாக சட்டைகளைக் கழற்றித் தோளில் போட்ட அடியாட்கள், மடிகளில் பெண்களை அமர்த்திக் கொண்டிருக்கும் காட்சிகளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவர்கள் அங்கே எதற்காகவும் ஒரு காசு கூடக் கொடுத்து நான் பார்த்ததில்லை. இதுபோல வாராமல் நிலுவை நிற்கும் பணம், ஆறாயிரம் பவுண்டுகள். அந்தக்காலத்தில் அது ஒரு வானளாவிய தொகைதான் என்பதை ஒருமுறை பேர்ரி ஃப்ராங்க்ஸ் என்னிடம் ஒப்புக்கொண்டார். அந்தப் பணத்தைக் கொண்டு நகரத்தில் ஒரு நல்ல அடுக்ககக் குடியிருப்பினை நான் வாங்க முடியும். அந்த அடியாட்களெல்லாம் பனிக்குழைம வணிகத்திலிருந்த இரண்டு இத்தாலியக் குடும்பத்தின் வழித் தோன்றல்கள்தாம் என்றாலும் அவர்கள் கொண்டிருந்த இத்தாலிய இரத்தம் முழுவதுமாக எய்வொன் தண்ணீரில் நீர்த்துப்போனது. மேற்கு நாட்டு மக்கள் முகச்சாடை எல்லா ஐரோப்பியர்களையும் போலத்தான். இவர்களும் பார்வையிலும் குரலிலும் எங்களிலிருந்து, அல்லது மற்றவர்களிலிருந்து எதுவும் வேறுபடவில்லை. அவர்களின் ஒரேநிறக் காற்சட்டை, மேற்சட்டைகள் இறுக்கமாக இருந்தன. அவ்வளவுதான். அதோடு அவர்கள் அழகு குறித்து அதீத மெல்லுணர்வு கொண்டவர்களாக இருந்தனர் – சில வேளைகளில் அழகிய உணவு, அழகிய இசை, அழகிய பெண்கள் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் துரிதப் பாதைகளை விரைவில் சென்றடைய அவர்களாகவே தேர்ந்துகொண்ட குறுக்கு வழிகளாகவே அவர்களுடைய குற்றச்செயல்கள் தோன்றின. ஃப்ராங்க்ஸை, ஜாஸ் இசைகேட்குமிடம் போன்ற ஒன்றாக மாற்ற வேண்டுமென்பது அவர்களின் எண்ணம். அதற்காகவே பின்னறையில் ஒரு தற்காலிக மேடையில் ஐந்து வெள்ளை பிரிஸ்டாலியர்கள் கொண்ட பாண்டு வாத்தியக்குழு ஒன்று லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்கின் வேகமிக்க ஐவர் குழுவினை முழுமையாகவும் ஒவ்வொரு அசைவிலும் அதன் தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. நான் அந்த பாண்டு இசையை அதிலும் குறிப்பாக, அதிகக் கிளர்ச்சியாகவோ அல்லது சிறிதாக விடவேண்டிய விஷயங்களைக்கூட அழுத்தமாகவோ இல்லாமல் எப்போதுமே மிகச்சரியாக இசைக்கும் அவர்களின் துல்லியமான விரல்களை அதிகமும் விரும்பினேன். நீங்கள் இந்த உலகில் காணாமற் போனதாக உணரும்போது, பரிச்சயமானவற்றின் மிகச்சரியான மாதிரிப் பிம்பங்களுக்குள்ளிருந்து பொறுக்கியெடுக்கப்படுகிற ஒன்றாக இருப்பதில் சிறிது மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது .

ஹான்வெல்லைச் சந்தித்த இரவில், நான் அப்போது பழகிக்கொண்டிருந்த ஒரு பெண்ணோடு மிகவும் தாமதமாகப் போயிருந்தேன். அவள் பெயர் இப்போது மறந்துவிட்டது. ஆனால், அவளுடைய மார்பகத்தின் புறக்கோட்டுரு மறக்கவில்லை. அது மிகப்பெரியது; மிகக் கவனமாகப் பொதிந்து, முட்டுக்கொடுக்கப்பட்டதாக,   யாருக்குக் கொடுப்பதென முடிவெடுக்காமலேயே,  அலமாரியில் வைத்திருக்கும் பரிசுப்பொருள் போல இருந்தது. அவள் அப்போது எனக்கு முப்பது வயது இளையவள்; அப்போதும் கத்தோலிக்கத்தை மிகக் கச்சிதமாகக் கைக்கொண்டிருந்த அவள் ஒரு நீர்த்துப்போன இத்தாலியப் பெண். அந்த மாலையின் பெரும்பகுதியான ஐந்து மணிநேரத்தை என்னுடைய குடியிருப்பில், எனது காரில், திரையரங்கத்தில், ஒரு பூங்காவில் என அவளோடு கழித்ததில் அவளுக்குள் அவளது கரமேகூடப் படாத இடங்களில் என் கைகளைச் செலுத்தத் தொடர்ச்சியாக முயன்றிருந்தேன். நாங்கள் ஃப்ராங்ஸை அடைந்த நேரத்தில் இருவருமே முழுமையாகக் களைத்து எரிச்சலிலிருந்தோம். தளக் கண்காணிப்பாளரின் `முழுவதுமாக நிறைந்துவிட்டது` என்ற வழக்கமான தற்பெருமை கொழிக்கும் விளக்கம் என்னைத் திடீரெனச் சீறவைத்தது. நான், அவருடன் அமளி மாதிரியான ஒன்றைத் தொடங்கினேன். அதற்கான அதிகாரம் எனக்கில்லாத போதும் அதற்கான உரிமையும் எனக்கில்லையென்றாலும், அப்படியான ஒன்றைத் தொடங்கினேன். அவரோ எப்போதும்போல உள்ளார்ந்த ஆர்வத்தோடு தலையை ஆட்டிக்கொண்டே அவரது பரிமாறும் பணியாளர்களை இந்தமேஜைக்கு, அந்த மேஜைக்கு என கைகாட்டிக் கொண்டிருந்தார்.

அந்தப் பின்னறை  என்னவோ ஒரு குளியலறை போல, `ஆனால் நிறைந்து இருக்கிறதே.` எனப் பழைய வெறுக்கத்தக்க முறையிலேயே அவர் மீண்டும் கூறினார்; நான், என்னையே முட்டாளாக்கிக்கொள்வதை நிறுத்தட்டுமென அவர் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் நாங்கள் ஓடியன் திரையரங்கில் பார்த்துவிட்டு வந்திருந்த வகையிலான இரண்டாந்தர ஹாலிவுட் திரைப்படங்களில் ஆண்மையைக் காட்டுவதாகச் சொல்லிக் கேலியாகிப்போன காட்சிகளில் பொதுவாகிப் போயிருந்த ஒன்றைப்போல, அதே மாதிரியில், அந்தப் பெண் என்னுடைய மேற்கைத் திண்தசையை அவளது இருகைகளாலும் பிடித்துக்கொண்டு நின்றது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், அதற்குப் பொருத்தமான மனிதனாக நான் இல்லையே! தேவாலயச் சாய்வுப் பலகைகளில் தங்கள் கோப்பைகளைத் தங்கள் மடிகளிலேயே வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த  இணைகளுக்கருகில் உட்காருமாறுதான் மிகவும் பணிவாக, வழிகாட்டப்பட்டோம். ஆனால், கடைசி நிமிடத்தில், நான் நின்றிருந்த இடத்திற்கு நேராகப் பின்னால்  மேஜையில் ஒரு குண்டு மனிதனும் அவனது நண்பனும் கிளம்புவதற்காக எழவும்,  காலியான இருக்கையில் அந்தப் பெண்ணைச் சட்டென விரைந்து தள்ளிவிட்டு, அருகிலிருந்த மற்றொன்றில் நான் இடம்பிடித்தேன். விளைவுகளுக்கு அவர் பொறுப்பல்லவெனத் தெரிவிப்பதுபோல், தளக்கண்காணிப்பாளர் தோள்களைக் குலுக்கிக்கொண்டார். எங்கள் இருவருக்குமே அவ்வளவு பசியில்லாவிட்டாலும், அப்போதே மணி இரவு பதினொன்றாகியிருந்துங்கூட நான் இரண்டு ஓஸோ புகோஸ் கொண்டுவரச் சொன்னேன். ஃப்ராங்ஸின் அருமையான இருக்கைகளில் அமர்ந்து அங்கே கிடைக்கின்ற அனைத்து வகை அனுகூலங்களையும் எவ்வளவு அதிகமாகப்பெற முடியுமோ அவ்வளவு அதிகமாகப் பெறுவதென்ற வக்கிர உணர்வோடுதான் அப்படித் தீர்மானித்தேன். இங்கே அமர்ந்திருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது! பாண்டு இசை அதிகச் சத்தமாக இருந்தது. நாங்கள் இருவரும் மேடையைப் பார்த்த மாதிரி -   இருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்ப்பதிலிருந்தும் தப்பிக்கின்ற ஒரு நல்ல அம்சம் – இருக்கைகளைத் திருப்பிக்கொண்டோம். எக்காளக் குழலிசைக்கலைஞர் எழுந்து நின்று தனியாவர்த்தனம் செய்யப்  பின்னர் கிளாரினெட் கலைஞரும் அப்படியே தொடர்ந்தார்; வாய்ப்பாட்டுக்காரர் சரியான அவரது நொடியில் தொடர்வதற்காக நடுநாயகமாக முன்னுக்குச் சாய்ந்து, அவரது மிகப்பெரிய இசைக்கருவியை மகிழ்ச்சியோடு முறுக்கேற்றிக்கொண்டிருந்தார். பியானோ கலைஞர், அவரது முறை வந்தபோது அவரது இருக்கையிலிருந்தும் சிறிது எழுந்தார். இருக்கைநிலையை மாற்றிக்கொள்ள இயலாத முரசுக்கலைஞர், அவரது முரசுகளுக்குள்ளாகவே தலையை இலேசாகக் குனிந்து, முழங்கைகளை உயர்த்த அந்த நிமிடத்தில் இதர கருவிகள் அமைதியாகின. எங்கள் உணவு நினைவுக்கு வருமுன்னர் தனியாவர்த்தனம் மூன்று நான்கு சுற்றுகள் ஓடிவிட்டதையும் இதர மேஜைகளிலும் எரிச்சலான முணுமுணுப்புகள் எழுந்ததையும் கவனித்தேன். ப்ராங்க்ஸில் உணவு  தாமதமாவது வழக்கமானதுதானென்றாலும், இது முழுக்க முழுக்க ஓய்ந்து போனதாக இருந்தது. அந்த அறை முழுவதும் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தது.

திடீரென, மணல் நிற முடியும் வழுக்கையுமாக, மூக்கின் முனையில் ஓய்வூதியரின் கதியற்ற கன்றிச்சிவந்த குமிழுமாகத் தோற்றமளித்த ஒருவன் இரு தட்டுகளை சத்தம் கேட்குமாறு வேகத்தோடு எங்கள் முன் தள்ளினான். இரு தட்டுகளிலும் மூன்று மூன்று பிரெஞ்சு க்ரெப்ஸ், பாலேட்டுநிற இறாலும் காளானும் சேர்ந்த கலவை நிரப்பிப் பொதிந்து முக்கோண வடிவிலான அமைப்பில் வீற்றிருந்தன. அவன் பரிமாறுபவனைப்போலவோ, சமையற்காரரைப்போலவோ இல்லாமல், பாத்திரங் கழுவுபவனைப்போன்று அழுக்குப் படிந்த சட்டைக்கைகளை மேலாக மடித்துத் தூக்கியணிந்திருந்தான். அவனது கள்ளங்கபடற்ற முகத்தின் ஒவ்வொரு இளஞ்சிவப்புத் துவாரத்திலும் வியர்வை துளிர்த்திருந்தது. அவன் எங்களைப் பார்த்து நம்பிக்கையோடு புன்முறுவலித்தான். நாங்கள் ஆட்சேபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் முன்பாகவே, யாரும் கேட்காத இதே மாதிரியான க்ரெப்ஸ்களோடு அடுத்த மேஜைக்குக் கடந்து போனான். மறுப்பும் எரிச்சலுமான சப்தம் அதன் உச்சிக்குச் சென்ற ஒரு நிமிடம், அதுவே பெரும் அமளியாக மாறிவிடுமோவென மிரட்டியது. ஆனால், அநேக வாடிக்கையாளர்களும் என்னைப்போலவே அதிகம் குடித்து, மிகவும் சோர்ந்து போயிருந்தனர். அதுவும், மாதிரிக்கு ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டபோது, அது மிகமிக நல்லதான சுவையோடிருக்கவே, நாங்கள் அமைதியாகிவிட்டோம். இந்த க்ரெப்ஸ், பேர்ரி ஃப்ராங்க்ஸின் உணவு வகைகளைப் போல போலியான மினுமினுப்பு பாவனைகளோ, அதிகமான அழகுபடுத்தல்களோ இல்லாமலிருந்தன. கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒன்றை உருட்டித் தட்டிச் செய்யவேண்டியிருந்தால், உங்கள் பாரீஸ் பாட்டி இந்த க்ரெப்ஸ்களைத்தான் சமைத்திருப்பாள். அன்றைய மாலை  வரையிலும் எத்தனையோ இரவுகளை, ஃப்ராங்க்ஸை விடவும் மிகமிக நல்லதான உணவுவிடுதிகளில் கழித்திருந்தேனென்றாலும் மிக அதிகமாகச் சுவைத்துச் சாப்பிட்டதான எந்த ஒரு உணவைப்பற்றியும் ஞாபகப்படுத்திக்  குறிப்பிட்டுச் சொல்வதற்கு இல்லை. நடு இரவுக்குப் பின் அந்த மனிதன் மீண்டும் எங்கள் மேஜை அருகாகக் கடந்து செல்லும்போது நான் அவனை இடைமறித்தேன்.

‘’சமையலறையில் என்ன குளறுபடி?’’

அவன் என்னை எச்சரிக்கையோடு பார்த்தான். ஆனால், எதுவுமே சொல்லவில்லை. அவன் முகத்திலிருந்த எளிமைத்தன்மை முழுதுமாக வழிந்தோடிவிட்டதோவென வியந்தேன்; அப்படியொரு வஞ்சகமற்ற அவனது முகத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் முதல் எண்ணம் அவன்  உலகியலறிவு ஏதுமில்லாதவனோ என்பதுதான்.

‘’உன் பெயர் என்ன?’’

‘’ஹான்வெல், அய்யா.’’

‘’நான் க்ளைவ், க்ளைவ் பிளாக். சமையல்காரரின் கையைப் பிடித்துக் குலுக்க விரும்புகிறேன்.’’

அவன் என் கைகளைப்  பார்த்தான்; ஆனால் தொடவில்லை. அவன் என்னை அய்யா என அழைத்தது ஒரு புதுமையாக இருந்தது. ஃப்ராங்க்ஸ், அதுமாதிரியான உயர் பண்பாடுகளெல்லாம் எதிர்பார்க்கப்படுகின்ற விடுதியல்ல. அவனை இன்னும் நெருக்கமாகப் பார்த்தபோதுதான் ஹான்வெல் மிக இளமையிலேயே அளவுக்கதிகமான வழுக்கையோடு காணப்பட்டதை உணர்ந்தேன். அவன் நாற்பதுகளின் முற்பகுதியிலேயே இருந்தான். நான் அவனை விடவும் பத்து வருடங்கள் தாம் மூத்தவன்.

’’நீதான் இதைச்  செய்தாயா?’’ நான் மீண்டும் கேட்டேன்.

‘’ அது அற்புதச் சுவை.’’ என அவள் அளவுகடந்து புகழ்ந்தாள். அப்போது, அவளுடைய கட்டைகுட்டையான விரல்களில் ஒன்றை நக்கிக்கொண்டுகூட இருந்திருக்கலாம்.

ஹான்வெல் உதட்டைக் கடித்தான். பொய்சொல்லத் தயாராவதுபோல் தோன்றியது; ஆனால், பின்னால் அப்படிச் சொல்லாமலிருப்பதே நல்லதென நினைத்திருக்க வேண்டும்.

‘’ நல்லது. ஆம். சரியாக இருந்தனவா?’’

‘’ அவை சரியானதற்கும்  மேலானவை. இங்கே நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச்சிறந்த ஒன்று.’’

‘’ அதெல்லாம் உண்மையில்லையென்று  எனக்கு நிச்சயமாகத் தெரியும், அய்யா.’’ ‘’

இது முழுக்க முழுக்க  உண்மை. அப்புறம், ஃப்ராங்க்ஸுக்கு என்ன சிக்கல்? மீண்டும் நெருக்கடியிலிருக்கிறாரா?’’

‘’இந்தப் பருவநிலை கொஞ்சம் ஒத்துக்கொள்ளவில்லை. நல்ல காய்ச்சல்,’’ ஹான்வெல், வேறெங்கோ தூரமாகப் பார்த்துக்கொண்டு சொன்னார். நான் புன்முறுவலித்தேன்.

‘’ ஃப்ராங்க்ஸ்  எத்தனை முறைதான் நல்ல காய்ச்சலை  வரவழைத்துக்கொள்வார், இது  மிகவும் வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு ஐந்து வயது குழந்தை மாதிரி.’’ நான் ஒரு சுருட்டை எடுத்து – நான் விட்டுவிட மறுக்கும் ஒரு ஆடம்பரச் சுகானுபவம் – அவருக்கு நீட்டினேன். அவர் மறுத்தார். ‘’ இது மாதிரி கடைசி நிமிடத்தில் சமாளிக்கும் நீங்கள் கிடைத்திருப்பது, அவருக்கு அதிர்ஷ்டம் தான்.’’

‘’நீங்கள் அதை ருசித்துச் சாப்பிட்டது, எனக்கு மகிழ்ச்சி, அய்யா.’’ எனச் செறிவாகச்  சொல்லிவிட்டு, ஹான்வெல் அங்கிருந்து  நகர்வதற்குத் திரும்பினார். நான் அவரைப் போகவிடவில்லை. அவர் குறித்த ஏதோ ஒன்று என்னை வலிந்து ஈர்த்தது. அவர் இதைவிட ஒரு நல்ல மேல்நிலையிலிருந்து வந்திருக்கவேண்டுமென்றும், ஆனால், அந்த வீழ்ச்சி அவரைச் சோர்வுகொள்ளச் செய்யவில்லை அல்லது என்னைப் போல அவரைக் கசப்படையச் செய்யவில்லையென்றும் உணர்ந்தேன்.

’’ இப்படிச் சமைப்பதற்கு  எங்கே கற்றுக்கொண்டீர்கள்?’’

ஹான்வெல், அடுத்து யார், என்ன மாதிரி கேட்கப்போகிறார்களோ என்ற பயத்துடன்  நோக்கினார். அங்கே அவர், மிகத் தாழ்ந்த வேலை செய்துகொண்டிருக்கிறாரென்பதை நான் ஏற்கெனவே யூகித்திருந்தேன். நான் தரையைப் பார்த்த ஒரே கணத்தில் அதுவும் உறுதிப்பட்டது. அவரது காலணிகளின் முன்பகுதி நனைந்து, ஈரத்தில் ஊறிப்போயிருந்தது.

‘’ என்னங்க, அய்யா?’’

‘’ என்னை அய்யா  என அழைக்காதீர்கள். நான் தான் க்ளைவ் என ஏற்கெனவே சொன்னேனே, சமையல், அதை எங்கே கற்றீர்கள்?’’

‘’ நல்லது, நீங்கள்  இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சமெனக் கற்றுக் கொள்வதில்லையா?’’ எனக் கேட்ட அவரது முகம் சிவந்து போயிருந்தது. ‘’ மேலும் நான், `44ல் ஃபிரான்சிலிருந்தேன். அது கொஞ்சம் உதவியது என நினைக்கிறேன்.’’

‘’ அங்கிருந்தீர்களல்லவா? அது போலத்தான் நானும். அங்கே நீங்கள் அரைக்காற் சட்டையில்லாமல் மிக அரிதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.’’
நாங்கள் பதவி, ரெஜிமெண்ட், இடங்கள், தேதிகள்  எல்லாவற்றையும் பரிமாறிக்  கொண்டோம். அவர் சரளமாகப் பேசினாரென்றாலும் அதிகமாகச் சொல்லிவிட முன்வரவில்லை. அவர் சிப்பாய்கள் பிரிவில் முதல் பிரிவு லெப்டினென்ட் ஆக இருந்திருக்கிறார். அவரை உட்காரச்சொன்னேன், ஆனால், மீண்டும் மறுத்துவிட்டார்.
‘’ வாருங்கள், கொஞ்சம் மது சாப்பிடுங்கள் – அது ஒன்றும் உங்களைச் சாகடித்துவிடாது. ஃப்ராங்க்ஸிடம் நான் சொல்லிக்கொள்கிறேன், இப்போதும் நினைவோடிருந்தால். அவர் ஒரு உதவிக்காக எனக்குக் கடன்பட்டிருக்கிறார். அது சரி, அப்புறம் உங்கள்  க்ரெப்ஸ் எதை ஞாபகப்படுத்தியது தெரியுமா? பிரெஞ்சு இல்லம் – லண்டன் சோஹோவில். அவர்கள் முதற்பண்டமாகப் பரிமாற  இதுமாதிரி ஒன்றும்      வைத்திருக்கிறார்கள்.’’
முதல் முறையாக  ஹான்வெல் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார், அதுவும் சிறிது மட்டுமே வாய் திறந்து ஒரு கூச்ச நடவடிக்கையாக இருந்தது.
‘’ஆமாம், நான் அதை, அங்கே சாப்பிட்டிருக்கிறேன் – நான் சோஹோவிலும் வேலை பார்த்திருக்கிறேன். டீன் தெரு.’’
‘’ஆனால், இந்த நரகக்குழியில் கடவுளின் பெயரால் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’’
ஹான்வெல்லின்  முகம் சட்டென்று மூடிக்கொண்டது. அவரது மூக்கின் குமிழ் ஒளி மங்கி, இமைகள் தாழ்ந்தன.
‘’ வேலை நிறையக்  கிடக்கிறது. நான் போகவேண்டும்.’’
‘’ நான் சொல்வதைக்  கேட்டு, உட்காருங்கள், சும்மா உட்காருங்கள், ஒரு பத்தே  நிமிடம் – மிக மிக நேர்மையாக, நீங்கள் சொல்வது போல் போய்விடலாம்.’’
என்னுடைய  பெண் போலியாகச் சிரித்து, தன்னைத் தானே மன்னித்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றாள். ஹான்வெல் உட்கார்ந்தார் நாங்கள் பிரான்சைப்பற்றிச் சிறிது, அதிலும் குறிப்பாகப் பாரீஸ் பற்றிப் பேசினோம். ( ‘’பாரீஸில்தான் அது என்னைப் பளபளப்பாக்கியது’’ என்ற ஒரு வேடிக்கையான தொடரை அவர் பயன்படுத்தியது எனக்கு நல்லத் தெளிவாக நினைவிருக்கிறது.) நாங்கள் இருவருமே கீழ்நாட்டு ஆங்கிலேயர்கள், அவர் இருண்ட இப்ஸ்விச், நான் இருண்ட நார்விச் – மொத்தத்தில் அப்போது நாங்கள் இருந்த நாடகச் சூழலைக் காட்டிலும் அமைதியான பகுதி. நாங்கள் இருவரும் நார்மண்டிக்குப் புறப்படும் முன் வெவ்வேறு நேரங்களில் கடற்கரையில் இறங்கியிருந்தாலும் கடுங்குளிரான ஃபெலிக்ஸ்டோவில் பயிற்சிக்காலத்தை முடித்திருந்தோம். நான் போர்க்காலக் கதைகளை வெறுப்பவனல்ல; அதை நோக்கிக் கொஞ்சம் அதிகமாக நான் அவரை இழுத்தாலும் அவர் அசைந்துகொடுக்கவில்லை.
‘’ வேறுவேறான வாழ்க்கை,’’ என ஆர்வமற்றுச் சொன்ன அவர், கடைசியில் என்னிடமிருந்து ஒரு சுருட்டைப் பெற்றுக்கொண்டார். என்னதான் துளைத்தாலும் அவரிடமிருந்து நான் விரும்பியதை –அவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவரெனச் சரியாகப் பெறமுடியவில்லை.  அவர் ஒரு கறிக்கடைக்காரரின் மகனாக அல்லது ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாக, ஏன், ஒரு ஆட்சிப் பணி அதிகாரியின் மகனாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரு தலைப்பின் கீழும் உரையாடப்போதுமான அளவுக்கு, அதிலும், அவருக்கு மிகச்சிறிய அளவில் தொந்தரவிருந்தால்கூட, திசைமாற்றும் அளவுக்கு  அவருக்கு விஷயங்கள் தெரிந்திருந்தது. அவர் எப்படியான மனிதரென்றால், நீங்கள் குறிப்பிடுகின்ற எந்த ஒரு புத்தகத்தைப் பற்றியும், அவர் அந்தப் புத்தகத்தைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்காவிட்டாலும், அது குறித்து இரண்டு விஷயங்களையாவது தெரிந்திருப்பார். பரிமாறுபவர் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து அவரை மீட்டு அழைத்துச் செல்லப் பலமுறை முயன்றபோதும், நான் அவர்களைக் கையசைத்தே அனுப்பிவிட்டேன். அந்த இடத்தின் உண்மையான அதிகாரமுள்ள ஃப்ராங்க்ஸை யாராலும் என் முன் கொண்டுவந்து நிறுத்தமுடியவில்லை. விடுதியை மூடுவதற்கு அரை மணி நேரமே இருந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர், ஹான்வெல் நிதானமாகி, ஜெர்மன் வேசியர் இல்லம் பற்றி ஒரு அசிங்கமான கதையைக் கூறினார். அவர் பேசும்போது ஒரு அரைப்புன்னகையை அணிந்துகொண்டும், ஜெர்மன் வேசிகள் என்ன உடை அணிவார்கள், அவர்களது படுக்கையறை எந்தமாதிரித் தோற்றத்திலிருந்தன, கால்நீட்டுகிற ஆடம்பரச் சொகுசுமெத்தையில் படுத்துக் கிடப்பார்களா என்றெல்லாம், அதுவும் அந்தச் சொகுசுமெத்தை என்ற சொல்லை, யாரும் கற்பனை செய்ய முடியாதபடி வினோதமாக உச்சரித்த என்னுடைய அந்தப் பெண்ணின் கத்தோலிக்கமற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டுமிருந்தார். ஹான்வெல் அந்தப் பெண்ணிடம் என்னைவிடவும் இணக்கமாக, வெற்றிகரமாகப் பேசிய விஷயம் என்னை எரிச்சலடையச்செய்தாலும், நான் எதனாலோ அந்த எரிச்சலை அவர் மீதல்லாமல் அந்தப் பெண்ணோடு பொருத்திக் கண்டேன். நான் உரையாடலை ஆண்கள் விஷயங்களுக்கு மட்டுமாக – எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் கார்கள், பிரிஸ்டல் நாய்ப் பாதைகள் மற்றும் வேறு விதமாகக் கொண்டு செலுத்தினேன். அந்தப் பெண் சலிப்பில் மூழ்கிப் பிணக்கம் கொண்டுக் கடைசியில் நான் இல்லாமலேயே அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் செல்வதை  நாங்கள் இருவரும் பார்த்துக்கொண்டிருந்த  போது, ஹான்வெல்,   ‘’ ஆள், நல்ல அழகுதான், உலகத்தில் இது போல் அழகான பெண்கள் இருப்பது, என்னை நல்லபடியாக நினைக்கவைக்கிறது.’’ என்றார்.
‘’அப்படியா, உண்மையாகவா சொல்கிறீர்கள். இது என்னை மோசமாக உணரும்படியாகச் செய்கிறது.’’
‘’ அது ஒரு  முன் அறிகுறி ….’’ ஹான்வெல் எதையோ சொல்லத்தொடங்கினார், ஆனால், மேற்கொண்டு ஏதும்  சொல்லவில்லை.
‘’ முன்னறிகுறி என எதைச் சொல்கிறீர்கள்?’’
‘’ அது ஒரு  கருத்துவசப்பட்ட எண்ணப்போக்கு ……முட்டாள்தனமான போக்கு.’’
‘’ இல்லை, இன்னும் விளக்கமாகச் சொல்லுங்கள் – நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.’’
‘’ உலகம்  நல்லதெனச் சொல்லும் ஒரு  அறிகுறி. அதை நீங்கள் புரிந்துகொள்வதற்கு அழகான பெண்கள் உதவுகிறார்கள்.’’
இதைக் கேட்டதும்  நான் சத்தமாகச் சிரித்துவிட்டேன்.
‘’ உங்களுக்கு அவர்கள் கிடைக்க முடியாதபோதுங்  கூடவா?’’
‘’ குறிப்பாக  அப்போதுந்தான்.’’
ரயில் வண்டி  பிரேக் போட்டு நின்றது போன்ற  சப்தத்துடன் எக்காளக் குழல்  ஒலிக்க,  பயங்கரமான வேகத்தோடு, ஏதோ ஒன்றை இசைத்து முடித்ததோடு பாண்டு இசை ஒரு படபடத்த முடிவுக்கு வந்தது. ஹான்வெல் சுருட்டின் ஈரமான அடிக்கட்டையை ஒரு சிறிய சீனத்தட்டில் அழுத்தி வட்ட வட்டமாக வளையமிட்டுக்கொண்டிருந்தார்
‘’ நீங்கள்  ஒரு வித்தியாசமான மனிதர், ஹான்வெல்.’’ என்றேன், அமைதியினூடாக.
‘’ நான் ஒரு சாதாரண நன்னம்பிக்கையாளன், அவ்வளவுதான்.’’ என்றார், ஹான்வெல்.
அப்போதுதான், ஹான்வெல்லைக் கடைசி கடைசியாக அழைத்தனர். ஒருவழியாக ஃப்ராங்க்ஸ் மயக்கத்திலிருந்து எழுந்து, சமையலறைக்குள்ளாகவே நுழைந்து ஹான்வெல்லுக்கு ஆளனுப்பியிருந்தார். ஹான்வெல் மேஜையிலிருந்தும் சென்ற பிறகுதான்,  அவரது சியான்டிக் கோப்பை தொடக்கூட இல்லாமல் அப்படியே இருந்ததைப் பார்த்தேனென்பது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அந்தப் பெண்ணும் குடிக்கவில்லை. என் முன்பு அப்போது காலியாக இருந்த முழுப் புட்டியையும் நான் தான் குடித்திருக்க வேண்டும். நான் ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, மொத்தத்தையும் கீழே ஊற்றிவிட்டு, அதில் என்னுடைய குடுவையிலிருந்த விஸ்கியை நிரப்பத் தொடங்கினேன். மட்டுமீறி, அந்தச் சுயநினைவிழக்கும் நிலைக்குள் நான் நுழைவதாகப் பயந்தேன். என்றாலும் நிலையாக உட்கார்ந்து, என்னைச் சுற்றிலுமிருந்த இரவு, தன்னைத்தானே சுருட்டிக்கொண்டு நகர்ந்துசெல்வதைக் கவனித்தேன். அந்த இரட்டைக்குழல் கருவி அதற்குரிய பெரிய கறுப்பு பைஜாமாவுக்குள் வைத்துப் பட்டிகை மூடப்பட்டது. கிளாரினெட் வாசிப்பவர் பக்குவமாகச் சீவாளியை அகற்றி அதற்குரிய பஞ்சு மெத்தைக்குள் படுக்கவைத்தார். ஏதோ ஒரு கட்டத்தில் நான் மேஜை மீது தலை சாய்த்திருக்கவேண்டும்.
‘’ மிஸ்டர் பிளாக்? மிஸ்டர் பிளாக்? ’’
ஹான்வெல்லின்  கைகள் என் தோள்களைப்  பிடித்து மெல்ல அசைத்தன.
‘’ மிஸ்டர்  பிளாக், மூடப்போகிறோம்.’’
‘’ ஹான்வெல்?’’
‘’ ஆமாம், மிஸ்டர் பிளாக் – ஹான்வெல்தான். நீங்கள் இப்போது கிளம்பவேண்டும், அய்யா.’’
‘’ க்ளைவ் – எத்தனைமுறை சொல்வது? சரி, போகட்டும், இப்போது மணி என்ன?’’
‘’ காலை ஒரு  மணி. க்ளைவ்,’’ என்றார், ஹான்வெல், உள்ளார்ந்த இணக்கமான குரலில்.  முதல் நோக்கில் அவரிடம் நான் கண்ட அவரது இயல்பு மிகச்சரியானது. `அய்யா` அவரது வாயில் மிகவும் இயல்பாக, இயற்கையாக ஒலித்தது. அவர் என்னை வாசலுக்கு வழிநடத்தினார். இருவரும் அவரவர் மேலங்கிகள், தொப்பிகளை அறைவழிக்கூடத்துக் கொக்கிகளிலிருந்தும் எடுத்துக்கொண்டோம்.
‘’நீங்களும் கிளம்புகிறீர்களா?’’
‘’ எல்லோரையும்  போல எனக்கென்றும் ஒரு வீடு இருக்கிறது.’’ என்றார், சிறிது பாதுகாப்புணர்வோடு.
‘’ஹான்வெல், உறங்கும் முன்பான கடையிரவு மதுவருந்தலுக்கு என்ன வழி?’’ இரவினை முறைப்படி முடித்து வையுங்கள். இது, உங்களுக்கு ஒரு வெற்றிகரமான இரவாயிற்றே – நாம் அதைக் கொண்டாட வேண்டும். ஆனால், உங்கள் மனைவி அதை விரும்ப மாட்டார்.’’
‘’  அவள் லண்டனில் இருக்கிறாள்.’’
‘’ என் மனைவி, திம்புக்டுவில் இருக்கிறாள். அப்படியென்றால், கடையிரவு மது, எப்படி?’’
நாங்கள் அவரது  அடுக்ககக் குடியிருப்புக்குச் செல்வதாகத் தீர்மானித்தோம். என்னிடம் கொஞ்சம் விஸ்கி மீதியிருந்தது. அதை அவரோடு பகிர்ந்துகொண்டேன். அந்தக் கடைசி நிமிடத்திலாவது, இரவைத் தொடர்வதென மேற்கொண்ட திட்டம், எந்த மனிதனும் தீட்டக்கூடியதைவிடவும் ஒரு அழகான, அற்புதமான திட்டம்.
நாங்கள் திருப்தியோடு, அமைதியாக பார்க்தெரு குன்றிலிருந்து கீழ்நோக்கி நடந்தோம். ஆனால், அடிவாரத்தை நாங்கள் அடைந்தபோது, பக்கவாட்டில் மழையடிக்கத் தொடங்கியது. ஒரு மூன்று நிமிடங்கள்தான் கடந்திருக்கும், சட்டை உடம்போடு ஒட்டிப்பிடிக்குமளவுக்கு நனைந்துவிட்டேன். வலதும் இடதுமாக ஏகப்பட்ட வளைவுகளில் திரும்பினோம். எனக்குச் சரியாக நினைவில்லாத ஒரு கட்டத்தில், ஹான்வெல்லின் அடுக்ககத்துக்குப் போவதைவிட என்னுடைய அடுக்ககத்துக்கு இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவும் அதிகக் கஷ்டமில்லாமலும் போகலாமேயெனச் சொன்னது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது.
‘’ இன்னும்  நிரம்பத் தூரம் போக வேண்டுமா?’’ அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முயற்சித்துக்கொண்டு, மழையில் கண்களை மூடிமூடித் திறந்துகொண்டு, அவரிடம் கேட்டேன்.
‘’ இன்னும்  கொஞ்சந்தான்,’’ என அவர் சொல்லும்போது இருட்டில் ஒரு தாழ்ப்பாள் கிறீச்சிடும் சப்தத்தைக் கேட்டேன். அவர் திறந்த ஒரு பச்சைநிற இரும்புக் கிராதியின் ஊடாக நானும் தொடர்ந்தேன். நாங்கள் வெண்மை பிரகாசிக்கும், விலையுயர்ந்த பெரிய பெரிய ஜார்ஜியன் கட்டிடங்களின் மத்தியிலமைந்த ஒரு சிறிய பூங்காவில், உண்மையில் ஒரு பசுமையான சதுக்கத்துக்குள் நின்றோம்.
‘’ இது கபோட்  சதுக்கம், மிக அழகான ஒன்று,’’ என்றார், ஹான்வெல். ‘’இந்தச் சதுக்கத்தின் வழியாகச் செல்வது எனக்குக் சுருக்குவழி. இதைப்போன்ற பெரிய பங்களா ஒன்றில் உங்கள் குடும்பத்தோடு வாழ்வதாகக் கற்பனைசெய்து  பாருங்கள்.’’ ‘’ உங்கள் குடும்பத்தோடு’’ என்ற இணைப்புச்சொற்களை மிகவும் புதுமையானதாக நான் நினைத்தேன். இதைப்போன்ற பங்களாக்களில் ஒன்று, மிகமிக அண்மைக்காலம் வரையில் எனக்குச் சொந்தமானதாக இருந்தது என்பதை அவருக்குச் சொல்வதற்கான மனமும் துணிச்சலும் எனக்கு இருக்கவில்லை. அந்த இடம் முழுவதையும் முழுக்க முழுக்க எனக்கானதாகவே வைத்திருந்தேன். அப்படியான ஒரு வாழ்க்கையும் எனக்கு இருந்தது.
‘’ பேர்ரி ஃப்ராங்க்ஸ் இங்குதான்  மனைவி, நான்கு குழந்தைகளுடன்  இருக்கிறார்,’’ என்றார்  ஹான்வெல், மகிழ்ச்சியோடு. அதை அவர் எப்போதுமே சோர்வடையாத ஒரு சுற்றுலா வழிகாட்டி போலச் சொன்னார்.
‘’ இப்போது  ஃப்ராங்க்ஸ போய்க்கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தால், இப்படியே இருக்க அவர் நல்லதொரு நற்பேறு பெற்றிருக்கவேண்டும். ’’ என்றேன், மிகுந்த கோபத்தோடு. என்னை அவதிப்படுத்துகிற கெடுநிலைப்பேற்றினை எல்லோரும் அனுபவிக்கவேண்டுமென விரும்பினேன். எனக்கு நிகழ்ந்தது போல தமக்கு நிகழாதென யாரும் நினைக்காமலிருக்க வேண்டுமென நான் விரும்பவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய கறுப்புப் பாடலைப் பரப்ப நான் விரும்பினேன். ஆனால், இந்த ஹான்வெல், அவரது உரிமையாளரின் வீட்டின் முன்பு நின்று அவரது நற்பேற்றினை நினைத்து மகிழ்ச்சியோடு விசிலடிக்கிறார்.
‘’ உங்களுக்குக் கேட்கிறதா?’’ என்றார், அவர். மழை நின்றுவிட்டது. நாங்கள் பூங்காவை விட்டுக் கிளம்பவிருந்தோம். அங்கே ஏதோ ஒரு வீட்டில் குழந்தை அழுவதாக நான் நினைத்தேன்.
‘’ அது ஒரு  நரி,’’ என்றார், ஹான்வெல். ‘’ அது இப்படித்தான் வினோதமாக ஓலமிடும். அது இங்கேயேதான், நிரம்பப் பக்கத்திலிருக்க வேண்டும்.’’
அவர் நின்று, நிதானமாகச் சுற்றிலும் பார்த்தார். அவர், தன்னை மறைக்க விரும்புவது போலத் தொப்பியைக் கண்களுக்கு மேலாக இழுத்துவிட்டுக்கொண்டார். எரிச்சலடைந்த நான், தொப்பியை எடுத்து, அதன் விளிம்பில் தங்கியிருந்த நீரைத் தட்டிச் சாய்த்து உதறினேன். அதுதான், நான் கடைசியாக இங்கிலாந்தில் தொப்பி அணிந்த வருடம். அதைத் தொடர்ந்த வருடத்தில் கூட நிச்சயமாக, நாட்டில், எந்த ஒரு பொது கட்டிடத்திலோ, உணவு விடுதியிலோ தொப்பி பாதுகாக்குமிடம் இல்லை. ஹான்வெல்லையும் என்னையும் போன்றவர்கள்தான், தொப்பியைப் பொறுத்தவரை,  கடைசி டைனோசர்கள்.
நான் எதையோ  சொல்ல வாய்திறந்த போது ‘’ ஒரு நிமிடம் அமைதியாக இருங்கள்.’’ என்றார், ஹான்வெல். வழியின் குறுக்காக நின்ற பிரமாண்ட வீடுகள் ஒன்றில் விளக்குகள் எரிந்தன. நான் இதுபோன்ற சூட்சுமமான அறிவிப்புகளை வெறுத்தேன். வெளியே இருக்கும் மனிதனுக்கு இது அறிவிக்கும்  அடையாளச் செய்தி : வெளியே நீ என்ன செய்துகொண்டிருக்கிறாயென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் விழித்திருக்கிறேனென்பது மட்டுமல்ல, காவல்துறையை அழைக்கவும் தயங்க மாட்டேன். எனக்கென்று ஒரு வீடு இருந்த போது, எனக்கும் இந்த அற்பத்தனமான பழக்கம் இருந்தது. அந்த மனிதன் போர்வையைப் பாதியாக விலக்கிவிட்டு, அவன் மனைவியிடம் பகட்டாக நான் பார்த்துக்கொள்கிறேனென்று பாதுகாப்பாகச் சொல்லிவிட்டு, மாடிப்படிகளில் கவனமாக இறங்கிவந்து, கஷ்டப்பட்டுச் சம்பாதித்துச் சொந்தமாக வாங்கிய அந்த வீட்டின் விசாலமான பகுதி – உயரக்கூரையுள்ள வசிப்பறைக்குள் நுழைந்து, எட்டிப் பார்த்து, அவனுக்குச் சொந்தமானதையெல்லாம் திருடிக்கொண்டு போக முயற்சிக்கும் இரண்டு கறுத்த உருவங்கள் சதுக்கத்தில் நிற்பதை இருட்டில் துருவித் துளாவித் தேடுவதை நான் கற்பனையில் கண்டேன். இப்போது நான் வசிக்கும் இடத்தில், நீங்கள் வசித்து, நகரத்தின் வன்முறைச் சப்தங்கள் கேட்டாலும் விளக்குகளை ஏற்ற மாட்டீர்கள். நான் சத்தமாக இருமிவிட்டு, ஒரு சுருட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.
‘’ அது ஒன்றும்  நகர்வதாகத் தெரியவில்லை. கவனித்துக் கேளுங்கள்!’’ என்ற ஹான்வெல், வெளிவாசல் அருகில் நன்கு பராமரிக்கப்பட்டிருந்த பெரிய முள்வேலியை மெதுவாக நெருங்கினார். அது நெஞ்சைப்பிழியும் அவல ஓலமாக இருந்தது. ஒரு நீளக்கம்பால், அதனை மூடியிருந்த பச்சைத் தழைகளை ஹான்வெல் விலக்கிய பின், தரையோடு தரையாக விழுந்து கிடந்த அந்த நடுங்கிக்கொண்டிருந்த உடலைப் பார்த்து, என்னதான், ஒருவருக்கொருவர் நரியென்று பேசிக்கொண்டாலும் அந்த ஓலத்தின் மனித வாசனை தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.
‘’நல்ல அழகு,’’ என்றேன், நான். ஆனால், அது முழுவதுமான ஒரு அரைகுறைக் கணிப்பு என்பது இப்போதும் நினைவிருக்கிறது. உண்மையில், அப்படியான ஒரு, எதிர்பார்க்கவே முடியாத மஞ்சள் நிறக் கண்களும் ஆரஞ்சு நிற வாலும் மெலிந்த கால்களும் சாதாரணமாகக் கண்ணில் படாமல் தப்பிச் செல்லுவதுமான ஒரு காட்டு விலங்கின் வெகு அருகில் நிற்பது அசாதாரணமானது. நாங்கள் அதன் நீண்ட மூக்குப்பகுதியைத் தொட்டுவிடுவதுபோல் அருகில் முகம் வைத்துப்பார்த்தோம்.
‘’ அதற்கு என்னாகியிருக்கிறது?’’ நான் முரட்டுக்குரலில் கரகரத்துக் கேட்டேன். ‘’ அந்த இழவுச் சனியன் ஏன் அசையமல் கிடக்கிறது?’’
ஹான்வெல் கம்பைக்கொண்டு மெதுவாக குத்தி அசைத்தார்; அது மீண்டும் ஓலமிட்டது. ஆனால் அசையவோ, எழுந்து நிற்கவோ இல்லை.
‘’ அது எப்படியோ சரியாக அடிபட்டிருக்கிறது.’’ என்றார், ஹான்வெல்.
அதுமாதிரி எந்த அடையாளமும் அதன் உடம்பில் இல்லை. அது மாசுமறுவற்று, பஞ்சடைத்ததுபோலக் கிடந்தது. அந்த பயங்கர ஓலத்தை மட்டும் தவிர்த்துப் பார்த்தால், அதன் உடலில் அப்படியொரு பூரண அழகும் அமைதியும் பொலிந்திருந்தது. வெளிச்சம் தெரிந்த வீட்டிலிருந்து சன்னலின் மேற்புறச் சறுக்குக் கண்ணாடிச் சட்டக் கதவினை ஓங்கி அறைந்து மூடும் சத்தம் கேட்டது. ஹான்வெல் அவரது லாடமடித்த ஈரக் காலணியை நரியின் மெலிந்த தொண்டைப் பகுதிக்குக் கொண்டுபோனார்.
‘’ என்ன செய்கிறீர்கள்?’’ நான் அதிர்ந்து கேட்கவும், அந்தக் கணத்திலேயே காலணியை ஓங்கி அழுத்தி அதன் கழுத்தை முறித்தார்.
‘’ அதன் முடிவில்லாத துன்பத்திலிருந்து விடுதலையளிப்பதுதான் நல்லது.’’ என்றார், ஹான்வெல், அமைதியாக.
முற்றும்  எதிர்பார்க்காதநிலையில் –  ஏனெனில் எனக்கு எந்தச் சுகவீனமும் இல்லை – நான் திரும்பிக்கொண்டு வாந்தியெடுத்தேன். உதவிக்கெனச் சிறிதும் அசையாவிட்டாலும், ‘’ நீங்கள் நன்றாகத்தானே இருக்கிறீர்கள்?’’ என்றார், ஹான்வெல்.
எங்களைப்  போன்ற ஆண்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலளிப்பது எப்படியெனத் தெரியாதவர்களென நான் நினைத்தேன். அதற்கு, நமக்குப் பெண்கள் தேவைப்படுகிறார்கள். நம்பிக்கை இழப்பின் சிறிய அதிர்வு ஒன்று — நான் எந்த நேரம் வீட்டுக்குச் சென்றாலும் எனக்காகக் காத்திருக்க யாரும் இல்லையென்ற நிச்சயமான உண்மை- எனக்குள்  நுழைந்து கடந்து சென்றதாக உணர்ந்தேன்.
‘’என்னைப் பார்த்தால் கிண்டலாகத் தெரிகிறதா,’’ எனக் கேட்டுக்கொண்டே நிமிர்ந்த  நான், ‘’ முன்பே வீட்டுக்குப் போயிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.’’ என்றேன்.
அப்போதுதான் ஹான்வெல் அவரது நரியை விட்டுவிட்டு, என்னை நோக்கித் திரும்பினார். அவரது முகம் முழுக்கத் துயரம் நிறைந்திருந்தது.
‘’ ஆனால், நாம் அநேகமாக அங்கே –‘’
‘’எல்லாம் ஒன்றுதான்,’’ என உறுதியாகச் சொன்ன நான், என்னுடைய நாட்பட்டுப் போன கைக்குட்டையால் என்னைச் சிறிது சுத்தப்படுத்த முயற்சித்துக்கொண்டே, ‘’ என்னுடைய இரவு முடிந்துவிட்டதென்றுதான் நினைக்கிறேன்.’’ என்றேன்.
‘’ ஆனால்  – எனக்கு நம்பிக்கை இருந்தது- ‘’ அவர் விடுதியில் போலவே  உதட்டைக் கடித்தார். அது தண்டனையை எதிர்பார்த்து அஞ்சும் சிறு குழந்தையைப் போன்றதாக இருந்தது.
‘’ என்ன? எதை நம்பினீர்கள்?’’
நான் இப்போது  அவர் மீது கோபமாக இருந்தேன். அந்த மாலையில் என்னுடைய தோல்விகள் – அந்தப்பெண் கிடைக்காதது, அவ்வளவு பணம் செலவழித்து எனக்குள் ஏற்றியிருந்த மதுவை இழந்துகொண்டிருப்பது, ஈரம், குளிர் – எல்லாவற்றுக்கும் அவரோடு ஏதோ தொடர்பு இருப்பதாகவும் நான் அவரைவிட்டு உடனடியாக விலகிச்சென்றால் மட்டுமே அன்றைய பொழுது சரியாகத் தொடங்குமென்றும் எனக்குத் தோன்றியது.
‘’ நீங்கள்  எனக்கு உதவி செய்வீர்களென நான் நம்பினேன்.’’
‘’அது ஏதாவது பணமாக இருந்தால், அதை உடனடியாக மறந்துவிடுங்கள். நான் இப்போது தேவாலயமே கதியெனச் செல்லும் தளர்ந்த சுண்டெலி மனிதனைப் போல ஏழை.’’ என்று சொல்லிவிட்டு எதிர்ப்பக்கமாகத் திரும்பிக்கொண்டேன். அந்த ஈரமான பாவுகற்களின் மீது ஒரு எட்டுதான் எடுத்து வைத்திருப்பேன், அதற்குள் விழுந்துவிட்டேன். ஹான்வெல் எவ்வளவோ தாங்கிப்பிடித்தார்; என்றாலும் தரைக்குச் சில அங்குலங்கள் இருக்கின்ற நேரத்தில் என்னுடைய மனஉறுதி என்னைக் கைவிட்டதைக் கண்டேன். ஹான்வெல்லின் உதவியை மறுத்துத் தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஆரஞ்சு நிறத்தில் கலங்கித் தேங்கியிருந்த சேற்றுநீரில் விழுந்தேன்.. அதிலேயே ஒரு நிமிடம் போல அமைதியாக உட்கார்ந்திருந்தேன். என்னுடைய சரிவின் மிகமிகக் கீழான அடிமட்ட நேரம் அதுதானென்றும்  அதைவிட மோசமாகக் கீழே செல்வதற்கு எதுவுமில்லையென்றும் எனக்குள் கூரான ஒரு உணர்வு எழுந்தது. அந்தத் தன்னுணர்வு சரியானதெனக் காலம் நிரூபித்துவிட்டது. இரவில், பெண்கள் யாரும் உடனில்லாமல், வெட்டவெளியில், சுருண்டு கிடந்த மரணமொன்றின் அருகிலேயே நனைந்து,  ஊறிப்போன இரண்டு அந்நியர்கள். ஆன்மீகச் சத்துணவு எனக்குத் தேவைப்படும்போதெல்லாம் நான் அந்தக் கணத்தை நினைத்துக்கொண்டு, அதற்கும் கீழான நிலைக்கு ஒருபோதும் விழுந்துவிடாமல் காப்பாற்றிய கடவுள் மீது நன்றி கொள்கிறேன். அப்படியான ஒரு சூழ்நிலையில், தன்னைக் காண்பதற்கு ஒரு குறிப்பிட்ட வகை மனிதர்களால்தான் இயலும். நான் அதன்பிறகு எப்போதும் அப்படியான மனிதனாக இருந்ததில்லை. இப்போது நினைத்தாலும் என்னை ஒரு குலுக்குக் குலுக்கியெடுக்கிற அந்த நேரத்தில் அதற்குச் சரியான எதிர்வினையாக என்னிடம் ஒரு சிரிப்புதான் வெடித்தது. நான் சத்தமாகச் சிரித்ததில், சதுக்கத்தில், மேலும் இரண்டு விளக்குகள் எரிந்தன.
‘’ இது நல்ல வேடிக்கைதான், க்ளைவ்,’’ என்றார், ஹான்வெல், சோகமாக. நான் சிரிப்பதை நிறுத்தினேன். என் தோள் மீது கை போட்டிருந்த அந்த அந்நிய மனிதரை நான் ஏறிட்டுப் பார்த்தேன். அந்த அருமையான க்ரெப்ஸ்களை நீட்டும்போது இருந்த அதே நம்பிக்கை அவர் முகத்தில் அப்போதுமிருந்தது.
‘’ எனக்கு உங்களைத் தெரியாது, ஹான்வெல்.’’
நான் அவரது  முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். அது சாதாரணமான சஃபோல்க்கியத் தோற்றத்தில், உப்பிப்புடைத்துச் சிறுபிள்ளைத் தாடையோடிருந்தது. நான் நினைத்தது தவறென்றும், நாம் முன்பே, இவரை ஆயிரம் முறை சந்தித்திருக்கிறொமென்றும் நான் நினைத்துக்கொண்டது, இப்போதும் ஞாபகமிருக்கிறது. இங்கிலாந்து மனிதர்கள், அரசர் ரேட்வால்டு காலத்திலிருந்தே ஹான்வெல்லைப் போலத் தோற்ற முடையவர்களாய் இருந்துவருகின்றனர்; சூட்டன் ஹூவின் அச்சுறுத்தும் புதைமேட்டில் நூற்றுக்கணக்கான ஹான்வெல்கள் புதைந்திருக்கிறார்கள். இதன் மூலம் அதனை மறு உறுதிப்படுத்தமுடியாதென்பது சாத்தியமற்ற ஒன்று.
‘’ இல்லை. அது உண்மை. ஆனால், மிகவும் அருகிலேயே வந்துவிட்டோம். நீங்கள் உடைகளையெல்லாம் உலர்த்திய பின் காலையில் கிளம்பிக்கொள்ளலாம்.’’
‘’ என்னிடம் பணமெதுவுமில்லை, தெரியுந்தானே.’’
‘’ மீண்டும் மீண்டும் என்னை அவமதிக்காதீர்கள்.’’ எல்லாப் பெருந்தகை மனிதர்களைப் போலவே ஹான்வெல் உறுதிபடக் கூறினார். இந்தப் பளபளப்பு ஒளியை அவர் பாரீஸிலிருந்து பெற்றுக்கொண்டாரோவென நான் வியந்துகொண்டேன். மேலும், அவர் பொய் சொல்லவில்லை. ஒருநிமிடத்திலேயே நாங்கள் அவருடைய இரண்டாவது தளத்திலிருந்த அடுக்ககக் குடியிருப்புக்குச் செல்லும் வெளிறித் தோன்றிய இரும்புப் படிகளில் சிரமத்துடன் ஏறிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு படியும் நனைந்து ஈரத்தில் வழுக்கிப் பெருத்த விபத்து ஏற்படுத்தும் அபாயத்துடனிருந்தன. உள்ளே, அடுக்கக இல்லம் எனது வீட்டைவிடவும் பெரியதாக இல்லாமல், ஆனால், நல்ல முறையில் சுத்தத்துடன் இருந்தது. பார்த்த உடனேயே முன்னர், குடும்பம் இருந்ததற்கான அறிகுறிகளைக் காணமுடிந்தது. வாசலுக்கு நேராக அழகிய காட்சிகள் பொறித்த சீனத்து நீலவண்ணத் தட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. இடைவெளிப் பரப்புகளில் அலங்காரப் பாய்களும் பின்னல் திரைகளும்  மூடியிருக்க அவற்றின் மேல் ஆங்காங்கே கலைப்பொருட்கள் ஒரு தொடர்ச்சியாகப் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. அவையெல்லாமே சிறந்த மாதிரிகள் அடங்கிய ஒரு பெரிய கலைச் சேகரத்திலிருந்து வலிந்து கொண்டுவரப்பட்டவையெனத் தெளிவாகத் தெரிந்தது.
வசிப்பறையின்  ஒரு மூலையிலிருந்த ஓய்விடத்தில் சூட்டடுப்புக்கு நேர்  மேலாக இருந்த ஒரு பெரிய கறுப்பு-வெள்ளைப் புகைப்படம் என்னை ஈர்த்தது: விசுப்பலகை ஒன்றில் அமர்ந்திருக்கும் கறுப்புநிறத் தலைமுடிகொண்ட மூன்று பதின்பருவப் பெண்கள். அவர்களில் ஒருத்தி – மிகமிக அழகானவள் என நான் சொல்வது – நீங்களாக இருக்கலாம். நான் அதைப் பார்ப்பதைக் கண்டதும் ஹான்வெல் அந்தப் புகைப்படத்தைச் சுவற்றிலிருந்தும் பிரித்தெடுத்தார். நான் அதைப்  பார்க்காமலிருந்தாலும் அவர் அப்படித்தான் அதை எடுத்திருப்பாரென எனக்கு ஒரு எண்ணமிருந்தது. அநேக மனிதர்களும் விருந்தாளிகளுக்கு ஒரு கோப்பை மதுவினைப் பெருமிதத்துடன் அளிப்பதுபோலத்தான் அவர் அந்தப் புகைப்படத்தை அவரது விருந்தாளியான என்னிடம் அளித்தார். நான் புன்னகைத்துத் தலையாட்டினாலும் தொண்டை வறட்சியால் கவனம் மாறினேன். பேர்ரி ஃப்ராங்ஸில் அடியாட்களின் எச்சில் தட்டுகளைக் கழுவிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் அடுக்ககத்துக்கு அந்த நடுஇரவில் நான் ஏன் வந்தேனென்பதை விளங்கிக்கொள்ள எனக்கு மேற்கொண்டும் மது தேவைப்பட்டது.
‘’ இது எமிலி,’’ என்றார், ஹான்வெல், மகிழ்ச்சியோடு. ‘’ இது கரோல், இது க்ளேர். அம்மாவின் அழகு முழுவதையும் அப்படியே அள்ளிக்கொண்டது க்ளேர்தான். உங்களுக்கே தெரியும், பாருங்களேன்.’’
உங்கள் அம்மாவைப்  பார்க்கவேயில்லாத நான், இந்தப் பேச்சை எப்படித் தொடர்வதெனத் திகைத்தேன்.
‘’ மிகவும்  அழகு.’’ நான் என்னுடைய மார்புப்பக்கப் பையிலிருந்து சுருட்டுகளை  எடுத்தேன். அவை முழுவதுமாக நனைந்து மக்கிய குப்பையாகக் கெட்ட நாற்றம் வீசின. ‘’ கடைசி, கடைசியாக ஏதாவது கிடைக்குமா, ஹான்வெல்? அதுவே மதுவும்தான்?’’
‘’ இங்கே  பாருங்கள், விஷயம் என்னவென்றால்,’’ என அவசரமாகத் தடுத்த  ஹான்வெல், ‘’ நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்கள் என நம்பித்தான் இங்கே அழைத்துவந்தேன். இது கொஞ்சம் இக்கட்டான நிலைதான்.’’ என்றார்.
‘’ நான் இக்கட்டான  எதற்கும் அப்பாற்பட்டவன், ஹான்வெல். எனது பிரிய நண்பரே, நான் இங்கே உங்களிடம் ஒரு வாய் விஸ்கிக்காக கையேந்திக்கொண்டிருக்கிறேன். முதலில் விஸ்கி சாப்பிடுவோம். பின்னர் மற்றதெல்லாம் பேசுவோம். நான் என்னுடைய காற்சட்டையைக் கழற்றி வெப்பப்பெட்டி மீது போடுகிறேன், அது சரியாகத்தானே இருக்கிறது?’’
‘’ ஒரு மீட்டருக்கு ஒரு ஷில்லிங் ஆகும்.’’ எனக் கவலையுடன் ஒரு குடும்ப சாபத்தை நினைவுகூர்கிற ஒரு ஜிப்சிப் பாட்டியின் தொனியில் கூறிக்கொண்ட ஹான்வெல் என் காற்சட்டையுடன் ஒரு நிமிடம் அந்த அறையிலிருந்தும் மறைந்தார். என்னுடைய மிகப்பெரிய ஆறுதலாக அவர் ஒரு மிகச்சிறந்த ஐரிஷ் மால்ட் புட்டியோடு திரும்பினார். அது எதிர்பார்க்கமுடியாத அளவுக்குச் சிறந்ததாக இருந்தது. அது எப்படி அவர் கைக்கு வந்ததென, நான் கேட்டேன்.
‘’ஓ, நமக்கு உதவிசெய்கிறவர்களை அங்கங்கே சந்திக்கத்தான் செய்கிறோம்.’’ என்றார், ஹான்வெல், எனக்கான விஸ்கியை டம்ளரில் ஊற்றிக்கொண்டே.
‘’அப்படியா, நீங்கள் சந்திக்கிறீர்களா? எனக்கு அப்படித்தோன்றவில்லை.’’
‘’ அது, அவர்கள்  உங்களுக்கு உதவுகிறார்களென்பதை நீங்கள் உணரவில்லை. அவ்வளவுதான். இப்போது பெட்டி சூடாகிக்கொண்டிருக்கிறது. உங்கள் காற்சட்டை சீக்கிரமே உலர்ந்துவிடும்.’’
ஹான்வெல் எழுந்து ஒரு பெண்ணைப்போல அறையைச் சுற்றிலும் கசங்கிய திரையை இழுத்துவிடுவதும் சிதறிக்கிடந்த சிறுபொருட்களை மேஜை இழுப்பறைக்குள் தள்ளி ஒழுங்குபடுத்துவதுமாக ஒன்றுமாற்றி ஒன்றைச் செய்துகொண்டிருந்தார். நான் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முறை ஊற்றிக் குடித்துவிட்டு எனது நாற்காலியில் மீண்டும் அமர்ந்தேன். ஒரு சிறிய பூத்தையலிட்ட தலையணை என் தலைக்கு இதமாக மென்மையாகத் தாங்கிக்கொண்டிருந்தது. அது எளிதில் கிட்டாத எப்படியான ஒரு சுகமாக இருந்ததென்றால் `அப்பாடா` என ஒரு மகிழ்ச்சி வெளிப்பாட்டினை என்னிடமிருந்து அனிச்சையாகத் தோற்றுவித்ததாக இருந்தது.
‘’லாரா தான் பூத்தையலிட்டு அதைச்செய்தாள்.’’
‘’லாரா?’’
‘’லாரா, என்  மனைவி.’’
‘’ஆ, லண்டனில் இருப்பவர்கள்.’’
ஹான்வெல்  தலையாட்டினார்.
‘’ அப்படியென்றால், அவர் ஏன் உங்களோடு இல்லை?’’ என நான் கேட்டேன். ஹான்வெல் ஏன் தனியாக வசிக்கிறார்? அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏன் எச்சில் தட்டுகளைக் கழுவும் வேலைசெய்கிறார்? அவரைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லையென்பதை அப்போது தான் உணர்ந்தேன். அதன் பெரும்பகுதியை நீங்கள் எனக்குச் சொல்லும் வரையில் நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் சில வலிநிறைந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியை நம்பத்தக்கதாயில்லாத அளவுக்கு மென்மையாக இடக்கரடக்கலாகக்  கூறினார். அதுவும் நான் அந்தத் துயரமான உண்மையைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக ஒரு ஒருநிமிடமோ என்னமோதான்.
‘’நீங்கள் அவளைக் கண்டுபிடித்தீர்களா?’’ நான் கேட்டேன். இந்தக் கேள்வியை யாருமே மன்னிக்கமாட்டார்கள். ஒருவர் குடித்திருந்தால், தீயதையே எதிர்நோக்கும் ஆர்வம் விட்டொழிக்கமுடியாதது. ஆனால், என்னுடைய கேள்வியால், ஹான்வெல் எந்த விதத்திலும் எரிச்சலடைந்ததாகத் தோன்றவில்லை.
‘’ நிலத்தடி அறைக்குச் செல்லும் படிக்கட்டு வழிக்கூடத்தில்,’’ என அவர் உண்மை விவரணையாகக் கூறத்தொடங்கினார். ‘’ கட்டக்கூடிய வேறொன்றுமில்லை, குளியல்முடித்து அணியும் ஆடையையே கயிறாக்கி அதில் தூக்குப்போட்டுத் தொங்கினாள். அது பயங்கரம்.’’
மனிதர்கள், இப்படி, விரும்பத்தகாத வழிகளில் மரணத்தைத் தமக்குத் தாமே ஏற்படுத்திக்கொள்வதை நினைத்து நாங்கள் இருவரும் ஒரு நிமிடம் அமைதி காத்தோம்.
‘’ அவள் லண்டனில் இருப்பதாக அல்லவா சொன்னீர்கள், ஏன் அப்படி?’’
‘’ அவள் அங்குதான்  இருந்தாள்.’’
‘’ வருத்தமாக  இருக்கிறது, ஹான்வெல். அது மிகப் பயங்கரமானதுதான். இன்னொரு கோப்பை மது எடுத்துக்கொள்ளுங்கள்,’’ நாங்கள் ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள்; ஆறுதலாகச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.
‘’மன்னித்துக் கொள்ளுங்கள்.’’ என்றார், ஹான்வெல். அவர் அறையைவிட்டு மீண்டும் சென்றார். நான் எனது கோப்பையைக் காலிசெய்து  மீண்டும் ஒருமுறை ஊற்றிக்கொண்டேன். ஓய்விடமும் சமையலறையும் வினோதமாக ஒன்றிணைந்த தோற்றத்தை, அதன் பரண்களை, மரச்சாமான்களை, அழுக்கான பின்னல் திரைகளை நோக்கி என் பார்வையைச் சுழலவிட்டேன். ஹான்வெல் போன்றவர்கள், தங்கள் முடிவில்லாத ஆங்கிலேயக் குலத்துக்கேயானதென உரிமைகோரும், வழிவழி வந்த குடும்பப் பெருமைகளைத் துயரத்துடன் வெளிப்படுத்தும் மலிவான பொருட்களை ஒருவர் அங்கங்கே காணமுடியும். உணர்ச்சிமயமான அன்னம் பொறிக்கப்பட்ட ஒரு ஜாடியும் வாயகன்ற குழித்தட்டும் கணப்படுப்பின் ஒரு மூலையில் அந்த இடத்திற்குப் பொருத்தமில்லாமல் முன்னாள் ஹான்வெல்கள் குளியலறை இல்லாத அவர்களின் படுக்கையறைகளில் கைகால் சுத்தம் செய்ததை நினைவுபடுத்திக்கொண்டிருந்தன. போர்க்காலத்திற்கு முன்னால், பெண்கள் தோள்வழியாக அணிந்த மிருகங்களின் மேற்தோலாடை வகைப்பட்ட ஒன்று இப்போதும் சிறிய பாதங்கள் தனியாக இணைக்கப்பட்டு ஒரு நாற்காலியின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தது. அது அவருடைய மனைவியுடையதா? அல்லது அவரது அம்மாவுடையதா? அது எனக்கு மீண்டும் ஹான்வெல்லின் நரியை நினைவூட்டியது. ஹான்வெல்லின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது, அல்லது என்னுடைய துயரத்திலிருந்தும் என்னை மீட்டெடுக்கப்போவது எதுவாக இருக்குமென நான் வியந்துகொண்டேன். அடுத்து எனக்கு நினைவுக்கு வருவது நான் முகர்ந்த டர்பென்டைன் வாசனைதான். நான் எழுந்து வாசல் பக்கமாக நகர்ந்தேன். அந்த வழி எங்கே இட்டுச்செல்லுமென எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஹான்வெல்லின் அடுக்ககக் குடியிருப்பு உலகத்தின் விளிம்பை எல்லையாக உடையது; அந்த வழியாக வாசலைக் கடந்ததும் எப்போதும் இருக்கின்ற  ஏதோ ஒரு குழியில் நான் விழுந்துவிட வேண்டியதுதான். உண்மையில் அந்த வாசலின் வழி, நாங்கள் இருந்த அறையைவிடப் பெரிதாக இல்லாத, ஆனால் அனைத்து அலங்கரிப்புகளும் அகற்றப்பட்டிருந்த இன்னொரு அறைக்கு இட்டுச் சென்றது. அந்த அறையின் மரச்சாமான்கள் அனைத்தும் அறைக்கு நடுவில் ஆபாசமாக உடல்களின் குவியல் போல் குவிக்கப்பட்டு, தூசி படாமலிருப்பதற்காக ஒரு வெள்ளைத்துணி போர்த்தியிருந்தது. அறை முழுவதும் ஒரு வன்முறையான, இழவெடுத்த, கடுஞ்சிவப்பு வர்ணமடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஹான்வெல்தான் ஒரு ஏணி மீது நின்று தூரிகையால் அதைச் செய்துகொண்டிருந்தார்.
‘’ நீங்கள்  நன்கு தூங்கிவிட்டீர்களென்று  நினைத்தேன்,’’ என்றார், ஹான்வெல், மெய்யாகவே.
‘’ நீங்கள்  ஏன் அப்படி நினைத்தீர்கள்?’’
‘’ நான் உள்ளே  எட்டிப் பார்த்தேன். நீங்கள் தூங்குவது போலத் தெரிந்தது.’’
எனக்கு கவனம்  இல்லை. அவர் சொல்வது உண்மையா அல்லது இல்லையா என்றும் எனக்குத் தெரியவில்லை.
‘’ அடக் கடவுளே! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், ஹான்வெல்? இப்போது இராத்திரி மணி இரண்டு இருக்குமே!’’
‘’ இதுதான்  என் மகள்களுக்கான அறை,’’ என்றார், ஹான்வெல், ஏணியிலிருந்து இறங்கிக்கொண்டே. அவர் பார்வை செம்மறியாட்டுத்தனமாகத் தோன்றியது. ‘’நான் சொல்வது, இது அவர்களுக்கானதாகுமென நம்புகிறேன். நீங்கள் எனக்கு உதவுவீர்கள் என உண்மையிலேயே நம்பினேன்.’’
‘’வர்ணமடிக்கவா? ஹான்வெல், ஒரு வர்ணமடிப்பவரை வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்கிறேன். நான் இங்கே மது அருந்துவதற்காக வந்தேன். உங்களுக்கு அடிமை வேலை செய்ய வரவில்லை.’’
‘’ இல்லை-‘’ என அவசரமாக மறுத்த ஹான்வெல், ‘’ அப்படி இல்லை. எனக்கு உங்கள் அபிப்பிராயம் தேவை. இது சரியான வகை மஞ்சள் தானா? நான் நிறக்குருடு – வேலைக்காரனை அல்லது எனது உதவியாளரைக் கேட்க விருப்பமில்லை – இதை நன்கு பழுத்த வெயில் என்று அழைப்பார்கள். நீங்கள் பாருங்களேன்,  அவர்கள் தூங்கி விழித்ததும், அந்த அறை முழுவதும் எப்போதும் கதிரொளி பிரகாசமாக இருப்பதாக உணரவேண்டுமென்பதுதான் எனது விருப்பம்,
‘’ மஞ்சள்?’’
‘’ அது சரியல்ல  என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்,’’ என்ற ஹான்வெல் என்னை நோக்கியதில் ஒரு நிராதரவான நிலை தெரிந்தது. ‘’ இந்த நேரத்தில்   இவ்வளவுதான் முடிந்தது. ஆனால், அங்கே ஒரு சின்ன வட்டம் விட்டுப்போயிருக்கிறது. இல்லையா, அதை இப்போதே சரிசெய்துவிடப் போகிறேன். அப்படியே சாளரச் சட்டங்களையும். எனக்கு, சுவருக்குச் சுவர் அந்திவானம் போலாக்கிவிட வேண்டும், பார்த்தீர்களா? உங்களுக்குத் தெரிகிறதா? அவர்கள் என்னைத் திட்டுவார்களென்றுதான்  நினைக்கிறேன்.’’ என்றவர் திடீரென்று ஏணியின் இரண்டாவது படியில் நின்ற நிலையில் அப்படியே உட்கார்ந்தார். அவர் பரிதாபமாகக் காட்சியளித்தார்; பயமுறுத்தும் அந்தச் சிவப்புப் பெட்டியினுள் களைத்துச் சிவந்த அவர் மெல்லக் குலுங்கிக்கொண்டிருந்தார்.
‘’ இதில்  யாருடைய தவறுமில்லையே, ஹான்வெல்.’’
அவர் என்னைக்  குறுகுறுப்போடு, நாங்கள்  அப்போதுதான் புதிதாகச்  சந்தித்தது போலப் பார்த்தார்.
‘’இல்லை, இது  உண்மை.’’ என்றார், கடைசியாக. அவர் கண்களைத் துடைத்துக் கொண்டார். ‘’எப்படி இருந்தாலும், இந்த வயதில், மூன்று பெண்களுக்கு இது சிறிய அறைதான்.’’
‘’அவர்களுக்கு என்ன வயது?’’
‘’ பதினேழு, பதினாறு, பதினான்கு. ப்ரோம்லியில் அவர்களுடைய மாமா, அத்தையோடு இருக்கிறார்கள். நான் எழுதினேன், ஆனால் அவர்கள் அனுப்பவில்லை.’’
‘’ உங்களிடம்  இன்னொரு தூரிகை இருக்கிறதா, ஹான்வெல்?’’
ஹான்வெல்  சுவர்களின் அடிக்கட்டைகளில்  வர்ணமடிக்க முழங்காலிட்டபோது, நான் சாளரங்களை நோக்கி வர்ணம் தீட்டச் சென்றேன். அவர் அதில் மிக உன்னிப்பாக இருந்தார்; மூலைகளுக்காக சிறுதூரிகை ஒன்றை வைத்திருந்தார். ஏற்கெனவே மூன்றுமுறை அடித்து முடித்திருந்தார். சாளரச் சட்டங்களில் நான் இரண்டாவது தீற்றலை முடித்தபோது வெளியே உண்மையான மஞ்சள்வெயில் எழுந்து கொண்டிருந்தது. ஒளி ஊடுருவாமல் தடுக்குமளவுக்குச் சிவப்புத் தீற்றல், கடுமையாக இருந்ததால், வெளியே புதிய நாள் புலர்வதை நாங்கள் பார்க்கமுடிந்தபோதும் அறையினுள்ளே என்னுடைய இருளுக்கும் ஹான்வெல்லுடையதற்கும் முடிவேயிருக்காதுபோல் தெரிந்தது. நான் களைப்பைக் கடந்து மறுபக்கம் வந்துவிட்டேன்; எனக்குத் தூக்கமே தேவையில்லாதது போல உணர்ந்தேன். உலகத்திற்குள் மட்டும் மீண்டும் செல்லவேண்டாமென்றிருந்தால் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையிலேயே அந்தச் சாளரச் சட்டங்களை ஆயிரம் முறைகூட வண்ணம் தீற்றிக்கொண்டிருந்திருப்பேன். நான் மகிழ்ச்சியோடிருந்ததாக, இப்போதும் நினைக்கிறேன். காலை ஆறு மணியளவில் ஹான்வெல்லின் மோசமான நிறக்குருட்டுக் கண்களுக்குக் கூட, நாங்கள் இதற்கு மேலும் சிவப்பினை அந்தச்  சுவர்களில் தீற்றமுடியாதெனத் தெரிந்திருக்கும். நான் என்னுடைய ஏணியிலிருந்து இறங்கி மேலும் இரண்டு கோப்பை விஸ்கி எடுத்துவந்தேன். நாங்கள் தரையிலேயே அமர்ந்து எங்கள் கைத்திறமையை வியந்து பார்த்துக்கொண்டோம். உங்களுக்கும் உங்கள் சகோதரிகளுக்காகவும் நாங்கள் ஒரு அறையைத் தயார்செய்து முடித்திருந்தோம். அது ஒரு நல்லவிதமான உணர்வுநிலை. நான் எதுவுமே செய்திருக்கவில்லையென்றாலும் அந்த உணர்வு என்னிடம் நீண்டநாட்களுக்கு நீடித்திருந்தது.
‘’ அவர்கள்  இங்கிருக்கும்போது நீங்கள்  என்ன செய்வதாக உத்தேசம்?’’ என, நான் ஹான்வெல்லைக் கேட்டேன்.
அவர் நீண்டநேரம் பேசிக்கொண்டேயிருந்தார்; அவருக்கு ஏராளமாக விரிவான  திட்டங்கள் இருந்தன. அவர் என்னென்னவோ கற்பனைகளில் – நீங்கள் பகல்வேளைகளில் ஃப்ராங்க்ஸில் மகிழ்ச்சியோடு சுற்றிச்சுற்றி வந்து, அவர் தட்டுகளைச் சுத்தம் செய்வதைப் பார்த்துக்கொண்டும், அல்லது உங்கள் சகோதரி பாண்டு இசைக்குழுவில் பாடுவதைக் கேட்டுக்கொண்டுமிருப்பீர்கள்; அவரால் உங்களைக் கவனிக்கமுடியாமலிருக்கும்போது, நீங்கள் பேர்ரி ஃப்ராங்க்ஸின் மகள்கள் இருவரோடும் நேரத்தைச் செலவழித்துக்கொண்டிருப்பீர்கள். அந்த ஒழுக்கங்கெட்ட, இழிந்த பெண்கள் இருவரும் அந்த நகரத்தின் மிக மோசமான இரண்டு அடியாட்களின் நெருக்கத்தோழிகள் என்பதை நான் அறிவேனென்றாலும்  ஹான்வெல்லுக்குச் சொல்லாமல் எனக்குள்ளேயே மறைத்துக்கொண்ட செய்திகளில் அதுவும் ஒன்று.
அவருடைய அற்புதமான திட்டங்களை விவரிப்பதை முடித்துக்கொண்டபோது ‘’ அவர்கள் வருவார்களென்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா, ஹான்வெல்?’’ என நான் கேட்டேன். அவர் ஒரு பரந்த புன்முறுவலைக் காட்டினார். எங்களைப் போல ஹான்வெல்லின் எந்த ஒரு மகளும்  இந்த அறையில் ஒரு இரவுகூட தங்குவார்களென எதிர்பார்ப்பது ஒருபோதும் நடக்க இயலாததென எனக்குத் தோன்றியது; ஆனால் மறுபடியும் எனது கருத்துரையை நான் எனக்குள்ளேயே அடக்கிக்கொண்டேன். மேலும் எங்கள் தலைமுறை மனிதர்கள் இணைந்து வாழமுடியாதவர்களோவென நான் சந்தேகமாகவே பார்க்கிறேன். நாங்கள் சகமனிதர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை; ஏனென்றால், நாங்களே எங்களை மீட்கமுடியாதபடி மகிழ்ச்சியற்ற வழிகளுக்குட்படுத்திக்கொண்டோம். என்னுடைய சொந்த மகளுங்கூட என் அளவுகள் தெரிந்திருந்தாலும் என்னை எடைபோடுவதிலும் தண்டிப்பதிலும் மகிழ்ச்சிகொள்கிறாள்; அது, அவள்நிலையில் சரியாகக்கூட இருக்கலாம். நீங்களுந்தான். இந்தக்காலத்தில் எல்லோரும் பழிசுமத்துவதை முன்காலத்துக்குக் கொண்டுசெல்கிறார்கள். ஆனால், அதை நாங்கள் செய்யமுடியாது. பழியை நாங்கள் எங்கள் அருகாகவே பற்றிப்பிடித்து வைத்துக்கொண்டோம். உங்கள் தந்தை உங்களை மகிழ்ச்சியற்ற நிலையில் வைத்திருந்தாரென்பதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். உங்களுக்குக் கிடைக்கின்ற வேறு அஞ்சல்கள் பழியைச் சரியான இடத்துக்கு நகர்த்தவும் இப்போதெல்லாம் சொல்கிறார்களே `ஒரு இணக்கத்துக்கு வாருங்கள்` என்று அதற்கும் உதவுவதாக இருக்கலாம். ஆனால், உங்கள் வேண்டுகோளைச் செய்தி இதழில் பார்த்தபோது, எனக்குத் தோன்றிய முதல் எண்ணம், நினைவுகொள்ள விரும்பத்தக்க ஒரு மனிதர் என்பதுதான். இது ஒன்றும் சாதாரணமான சிறிய விஷயமல்ல. நான் அப்போது சந்தித்திருந்த அநேகமாக எல்லா மனிதர்களையும் மறந்துவிட்டிருந்தேன். இதை எழுதும்போது கூட ஹான்வெல்லின் இறால், காளான் கலவை க்ரெப்ஸ்களையும் அவர் அடிக்கட்டைகளை வர்ணமடிக்கும்போது கொண்டிருந்த அக்கறையையும் நினைத்துப் பெருமகிழ்ச்சி கிளர்வதாக உணர்கிறேன். நீங்கள் அவரை மிகக் கடுமையாகப் பார்க்கிறீர்களென நான் நினைக்கிறேன். மேலும் நீங்களும் உங்கள் சகோதரிகளும் அவரோடு தங்கியிருக்க வரமாட்டீர்களென அவருக்குத் தெரிந்திருந்ததென்றோ அல்லது நீங்கள் அவரோடிருப்பதை அவர் விரும்பவில்லையென்றோ நீங்கள் கருதுவது தவறென்றே நான் நினைக்கிறேன். ஹான்வெல்லுக்கு அப்படியொரு அரிய, அழகான நம்பிக்கைச் சிந்தனை இருந்தது. சிவந்த செம்மஞ்சள் மீது நம்பிக்கைகொள்வதென்பது அநேக மனிதர்களாலும் ஆகாத ஒன்று.  




நன்றி: www.newyorker.com

மலைகள் இணைய இதழ் ஜூன் 03, 2013, இல் வெளியானது.




கோடையில் ஒரு மழை, ஆதி பதிப்பகம், ஏப்ரல் 2014 முதல் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.