Thursday 31 May 2018

தடியங்காய் என்னும் வெள்ளைப் பூசணி

தடியங்காய் என்ற சாம்பல் பூசணி
தண்ணீர்ச் சத்து நிறைந்த தடியங்காய் என்று அழைக்கப்படும் சாம்பல் பூசணி பெனின்காசா ஹிஸ்பிடா (Benincasa Hispida) என்ற தாவரவியல் பெயர் கொண்டது. ஆங்கிலத்தில் Ash gourd, Wax gourd, White gourd, Winter Gourd, tallow gourd, Ash pumpkin, Fuzzy gourd எனப் பல பெயர்களில் வழங்கப்படும் இந்தக் காய் தமிழிலும் சாம்பல் தடியங்காய், வெள்ளைப் பரங்கி, வெள்ளைப் பூசணிக்காய், சாம்பல் பூசணிக்காய், திருஷ்டிப் பூசணிக்காய், கும்மளங்காய், தண்ணிக்காய் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்காயின் தாயகம் தென்கிழக்கு ஆசியா எனப்படுகிறது.
தடியங்காய் வகையைச் சேர்ந்ததும் தடியங்காய் என்றும் இளவன்காய் என்றும் அழைக்கப்படுவதான ஒரு வகைக் காய் கேரளாவிலும் நாஞ்சில் நாட்டிலும் கிடைக்கிறது. இளவன்காயும் ஆங்கிலத்தில் ash gourd என்றே அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் நாஞ்சில் தவிர்த்த அனைத்துப்பகுதிகளிலும் சாம்பல் தடியங்காயே கிடைக்கிறது. இளவன் காய் சாம்பல் நிறத்துக்கு மாறுவதில்லை. பசிய நிறத்திலேயே இருக்கிறது. வடிவத்திலும் சாம்பல் தடியங்காயிலிருந்தும் வேறுபட்டு முக்காலடிக்கு மேல் ஒரு அடி விட்டமும் நான்கு முதல் ஆறு அடிவரையிலான நீள்வட்ட உருளை வடிவக் காய்களாகவே கிடைக்கின்றன. காய்கறிக்கடைகளில் வட்டு வட்டாக வெட்டிக் கொடுப்பார்கள். இதே காய்கள் கறுப்பு நிறத்திலும் வெளிநாடுகளில் கிடைப்பதாக இணையத்தில் குறிப்புகள் உள்ளன.
நாஞ்சில் நாட்டுக்கிராமங்களில் இளவன்காய் என்ற இந்தத் தடியங்காயை புளிக்கறி, புளிசேரி என்ற மோர்க்குழம்பு மற்றும் எல்லாக்காய்கறிகளும் சேர்த்துச் சமைக்கும் சாம்பார் என்ற குழம்பு வகைகளிலும் கூட்டவியலிலும் போடுவதுண்டு.
அதிலும் தடியங்காய்ப் புளிக்கறி எப்படியும் வாரத்தில் இரு முறையாவது சமைக்கப்படுவதுண்டு. வேகவைத்த தடியங்காயோடு தேங்காய் சீரகம் மிளகாய்வற்றல் அரைத்துப்போட்டு துவரன் மற்றும் கூட்டு செய்வதும் வழக்கம். தடியங்காயை மிகச்சிறு சிறு துண்டுகளாக அரிந்து வேகவைத்து, அதனுடன் பச்சைமிளகாய், சீரகம், சிறிது தேங்காய் அரைத்துச் சேர்த்துத் தாளித்து இறக்கியபின் தயிர் சேர்த்து தயிர்ப்பச்சடி செய்வார்கள். இந்தத் தயிர்ப்பச்சடி கட்டிப் பருப்பு போட்டுப் பிசைந்து சாப்பிடும் சாதத்துக்கும், இரண்டாவதாகச் சாம்பார் ஊற்றிச் சாப்பிடும் சாதத்துக்கும் மிகப் பொருத்தமான ஒன்று. நாஞ்சில் நாட்டுத் திருமண விருந்துகளில் தயிர்ப்பச்சடி, தவிர்க்கப்படாமல் கண்டிப்பாகச் சேர்க்கப்படுகிற ஒரு தொடுகறி.
ஆகவே எங்கள் வீட்டிலும் இளவன்காய் அடிக்கடி சமைக்கப்படுகின்ற ஒரு காயென்பதால் சிறுவயதிலிருந்தே அந்தக் காயின் சுவை எங்களுக்குப் பழக்கமான ஒன்று.
பொதுவாகவே நாஞ்சில் பகுதியில் தடியங்காய், வெள்ளரிக்காய்(கீரைக்காய்) மற்றும் பூசணிக்காய் ( மஞ்சள் பூசணி, சர்க்கரைப் பூசணி. அரசாணி) வகைகள் உணவில் எவ்வித வெறுப்புமில்லாமல் அதிகமாகவே சேர்க்கப்பட்டு வந்தன. வெள்ளரிக்காய் தடியங்காயைப் போலவே பயன்படுத்தப்பட்டது. உணவுவிடுதிகளில் இட்லி, தோசை, ஆப்பத்துக்கு பெருவாரியாக பூசணிக்காய் சாம்பார் பரிமாறுவார்கள். சாம்பார், தீயல் குழம்புவகைகளிலும் பெரும்பயறு சேர்த்துக் கூட்டாகவும் உளுந்தம்பருப்பு, தேங்காய் வறுத்துப் போட்டு பூசணிக்காய்ப் பொரியலாகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டது. வாரத்தில் ஒருநாள் சுடுகஞ்சி சாப்பிடுவது வழக்கம். அதற்குத் தொட்டுச் சாப்பிடப் பெரும்பயறும் பூசணிக்காயும் போட்டுக் கட்டியாக வைக்கும் தீயல் மிகப் பிரபலம்.
நெல்லைப்பகுதியில் இளவன்காய் கிடையாது; சாம்பல் தடியங்காய்தான். அதுவும் கடலைப் பருப்போடு சிறிதளவு தேங்காய் சீரகம் அரைத்துப் போட்டு கூட்டாகச் செய்து சாப்பிடுவார்கள்.
நெல்லைப்பகுதி திருமண விருந்துகளில் வாழைக்காய் புட்டு, தடியங்காய் கூட்டு, அவியல், வெண்டைக்காய் அல்லது மாங்காய்ப்பச்சடி என்பது கண்டிப்பான நால் வகைக்கறியாகப் பரிமாறப்படும். நெல்லைப் பகுதிக்கடைகளில் தடியங்காயை நீட்டு நீட்டுக்கு அரிந்து தருவார்கள். அதற்குப் பத்தை என்று பெயர். அநேகமாக எல்லாக் காய்கறிக்கடைகளிலும் தடியங்காய்ப் பத்தை கிடைக்கும். சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வேலூர் மற்றும் சென்னைப் பகுதிகளில் சாம்பல் தடியங்காய், வெள்ளைப் பூசணி என்றும் திருஷ்டிப் பூசணி என்றும் அழைக்கப்படுகிறது. இக்காய்கள் இங்கே மிகச் சிறிதளவே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. உழவர் சந்தையில் எல்லாக் காலங்களிலும் இந்தக்காய்கள் விற்பனைக்குக் கிடைத்தாலும் சமையலுக்கு வசதியாகச் சிறு துண்டுகளாக வெட்டித் தருவது மிகக் குறைவே.
குடியிருப்புப் பகுதிகளிலுள்ள சில்லறை விற்பனைக் காய்க்கடைகளில் இக்காய்கள் கிடைப்பதேயில்லை. புதுமனை புகுவிழா வீடுகள், வணிகத் தலங்கள், அலுவலகங்களில் திருஷ்டிக் காயாக முன்வாசலில் கட்டித்தொங்கவிடப்படுகின்றன. வாகனங்களுக்குப் பூஜை போடும்போதும் அமாவாசை, ஆயுத பூஜை போன்ற முக்கிய நாட்களில் திருஷ்டி கழித்துத் தெருவில் உடைத்து மஞ்சள் குங்குமம் தடவி அப்படியப்படியே சாலையில் கிடத்தப்படுகின்றன. அவை கால் நடைகளுக்கு உணவாகின்றன அல்லது நான்கு சக்கர ஊர்திகளின் சக்கரங்களில் மாட்டி அரைபட்டு வீணாகின்றன. இப்படி எறியப்படும் பூசணித்துண்டுகளால் சில நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் தடுமாறி விபத்துகள் ஏற்படுவதுமுண்டு. இவை நம்பிக்கை சார்ந்த விஷயங்களென்பதால் நாம் குறைசொல்வதற்கில்லை. ஆனால் இதனாலும் ஒரு வகையில் இக்காய்களைச் சாகுபடி செய்பவர்களும் சில்லறை வணிகர்களும் ஏதோ ஒரு விதத்தில் பயன்பெறுகின்றனர்.
பொதுவாகவே இப்பகுதியில் உருளைக்கிழங்கு, வாழை, கத்தரி, வெண்டை, அவரைக்காய்கள், சேப்பங்கிழங்கு, கருணை(சேனை)க் கிழங்கு, காரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, பீட்ரூட் முள்ளங்கி போன்ற காய்கறிகளையும் கீரை வகைகளையுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். சௌசௌ, பூசணி, கீரைக்காய், பீர்க்கு, சுரை போன்றவை நீர்க்காய்களென்றும் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதால் நீர்க்கோர்வை ஏற்படலாமென்றும் அவற்றைத் தவிர்க்கின்றனர். ஆரியபவன் போன்ற உணவுவிடுதிகளில் தடியங்காய்க்கூட்டு பரிமாறுகிறார்கள்.
வடநாட்டினர், குறிப்பாக ஆக்ராவில் இத் தடியங்காயைச் சர்க்கரைப் பாகில் வேகவைத்து பேடா செய்கின்றனர். இங்கும் திருமணவீடுகளில் தடியங்காயை அல்வா செய்கின்றனர்.
அம்பாசமுத்திரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலுள்ள ஒரு லாலாக்கடையில் தடியங்காய் முரப்பா கிடைத்து வந்தது. என்னுடைய பெரியப்பா ஒருவருக்கு அந்த முரப்பா பிடிக்கும். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போது அதைத்தான் வாங்கி வருவது வழக்கம்.
அண்மையில் கிடைத்த ஒரு தகவலில் பெண்களின் மாதவிடாய் நாட்களிலேற்படும் சிக்கல்களுக்கு வெண்பூசணிச் சாறு சிறந்த மருந்து எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் முழுதாக ஒரு வெண்பூசணி வாங்கி வந்து அரைக்கிலோ அளவுக்கான காயைச் சுத்தம் செய்து விதை, குடல் பகுதியை நீக்கித் தோலோடு பொடியாக அரிந்து மிக்சியிலிட்டு அரைத்து அப்படியே என் மகளுக்குக் கொடுத்ததில் அதை குடிக்கச் சிறிது சிரமமாக இருப்பதாகக் கூறியதால் வடிகட்டிக்கொடுத்ததில் சோர்வு அகன்று, ஆரோக்கியமான ஒரு மனநிலை ஏற்படுவது தெரிந்தது. அதனால் இப்போது முடிந்த போதெல்லாம் வெண்பூசணி வாங்கி வந்து சாறு எடுத்து நான், என் மனைவி மற்றும் மகள் சாப்பிட்டு வருகிறோம். பேத்தி முகத்தைச் சுழித்து அய்யோ, இதைப்போய்க் குடிக்கிறீர்களேயென்கிறாள்.
காயை அரிந்து நீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே மிக்கியிலிட்டு அரைத்து வலைவடிகட்டியிலிட்டுப் பிழிந்தெடுத்த சாற்றினை அப்படியே அருந்தலாம். குடிப்பதற்கு எந்தச் சிரமமுமில்லை.
தடியங்காய் காலங்காலமாக இந்தியாவில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு காய். இதன் மருத்துவப் பயன்கள் மற்றும் சத்துகள் குறித்து ஆயுர்வேத நூல்களில் வெகுவாகச் சொல்லப்பட்டுள்ளதென்கின்றனர்.
உயிர்ச்சத்து பி- 1, பி- 2, பி- 3 , பி – 5, பி- 6 மற்றும் சி ஆகிய வைட்டமின்களையும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மங்கனீஸ், சோடியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் ஆகிய தாதுக்களையும் வெண்பூசணி கொண்டுள்ளது.
96 சதவீத நீர்ச்சத்து கொண்ட சாம்பல் பூசணி எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு.
ஆயுர்வேதத்தில் உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் டானிக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வலிப்பு, மனநோய் போன்ற நரம்பு மூளை நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரத்தன்மை காரணமாக அமிலத் தன்மை மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு மருந்து. ஆஸ்துமா, சிறுநீரகக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதிலும் உதவுகிறது.
வெண்பூசணிச்சாறு
1. சோம்பலை நீக்கி புத்துணர்வை கொடுக்கும்.
2.மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
3.வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.
4.உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
5.உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் எடை அதிகரிப்பினால் ஏற்படும் கால் மூட்டுவலியைக் குறைக்கும்
6. உடலில் அமிலத்தன்மையை சமன்படுத்த பெரிதும் உதவுகிறது.
7. வெண்பூசணிச்சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மூன்று மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தென்றும் தொடர்ந்து பல நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் முழுமையாகக் குணமாகிவிடுமென்றும் குறிப்பிடுகின்றனர்.
8. மலச்சிக்கல் குறையும். குறிப்பாக நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களை வெளியேற்றும்
9. கலோரி குறைந்த உணவென்பதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு எனப்படுகிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி சிறுநீர் வெளியேற்ற உதவுகிறது.
10. தூக்கமின்மைக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நீர்க்கோர்வை, இருமல், கபம் போன்றவற்றை நீக்கும்.
இத்தனை நன்மைகள் கிடைக்கமென்னும் போது இக்காயை வாரமிருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது அறிவுடைமையாகுமென்பது உறுதியாகிறது. நாமே இக்காயைச் சாப்பிடாமல் ஒதுக்கிவந்ததால் நமது மகன், மகள் தலைமுறையே இக்காயைச் சாப்பிட முன்வராமல் முகத்தைச் சுழிக்கின்ற நிலைமையிருக்கும்போது அதற்கடுத்த தலைமுறையான பேரப்பிள்ளைகளுக்கு எப்படிப் பழக்குவது?
இக்காயை உணவில் பயன்படுத்துவதோடு, குடும்பத்தினர் எல்லோரையும் உண்ணும் வகையில் அதனைச் சமைப்பதெப்படியென்றும் சிந்திப்பது அவசியமாகிறது. வெண்பூசணிச் சாறு சாப்பிடுவது சாதாரணமாக பழச் சாறு சாப்பிடுவது போன்றதுதான். உண்மையில் சொல்லப்போனால் அது பழம் தான். சமையலுக்கு அதிகம் பயன்படுவதால் அதனைக் காயென்கிறோம். நன்றி.

No comments:

Post a Comment