Tuesday, 22 May 2018

செம்மொழித் தமிழ், முத்தொள்ளாயிரக் காட்சிகள்

யானையும் கண்புதைக்கும் போர்க்களம்
யானையும் கண்புதைக்கும் போர்க்களம்
போர் முடிந்த நாளின் இறுதியில் மரணமுற்ற வீரர்களின் மனைவியர் எரிபுகுகின்றனர். அதைக் கண்ணுறும் மன்னனும் தன் மேலாடையால் கண்களைத் துடைக்கிறான். அந்தக்களத்தில் பகைவரின் யானைகளும் வெட்டுண்டு செத்துக்கிடக்கின்றன. அவற்றைப் பார்த்து மன்னனின் யானையும் அழுகிறது.
இப்படியொரு காட்சியினை முத்தொள்ளாயிரம் காட்டுகிறது.
பாடல் :
ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன்
தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையும்
புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே
பல்யானை அட்ட களத்து.
- 109, முத்தொள்ளாயிரம்

யானை நாணிநின்ற ஒரு காட்சி :
எதிரி நாட்டின் கோட்டை மதில்கள் மீது மோதி மோதி உடைத்துத் தள்ளியதில் களிற்று யானையின் கொம்பு உடைந்ததோடு, பகை அரசர்களின் மணிமுடி தரித்த தலைகளை இடறியதில் நகங்களும் தேய்ந்து போயினவாம், உடைந்த கொம்புகளோடும் தேய்ந்த நகங்களோடும் தன் பிடியின் முன்பு போய் நிற்க நாணிய அக்களிறு புறங்கடையில் போய் நின்றதாம்.
பாடல் :
கொடி மதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார் தோட் கிள்ளி களிறு.
- 48, முத்தொள்ளாயிரம்.
தன் முறிந்த கோட்டினைப் பிடிமுன் காட்டுவதற்கு நாணிய அக்களிறு, முடியுடை மன்னரைக் குத்தி அவர் தம் குடலால் தன் கோடுகளை மறைத்துக்கொண்டதாக இன்னொரு பாடல் :
அடுமதில் பாய அழிந்த தன் கோட்டைப்
பிடிமுன் பழகுதலில் நாணி - முடியுடை
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல் வேல்
தென்னவர் கோமான் களிறு.
-- 102. முத்தொள்ளாயிரம்.
போருக்குப் புறப்படுகிற களிற்றினைக் கண்டதும் புலால் உண்ணும் பறவைகள், பருந்துகள், நரி்களோடு பேய்மகளிரும் தமக்கு விருந்து கிடைக்கப்போவதை எண்ணி பெருமகிழ்வு கொள்கின்றனராம். போர்யானை களம் நோக்கி நடந்துவருகிற காட்சியைக் கண்ணுக்குக் கொண்டுவந்து பாருங்களேன். புலால் உண்ணும் பறவைகள் மகிழ்ந்து குரல் எழுப்ப, பருந்துகள் பின்தொடர, நரிகள் நான்குதிசையிலுமாக ஓடித் திரிய, அணிகலங்கள் ஆட வரும் பேய்மகளிர் மகிழ்ச்சிக் கூத்தாட, போர்யானை பெருமித த்தோடு வருகிறதாம்.
பாடல் :
பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப - ஆற்ற
அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கிலை வேல் களிறு.
-- 50, முத்தொள்ளாயிரம்
( பாற்றினம் - புலாலுண்ணிப்பறவைகள், பேய்மகளிர் - பிணம் உண்ணும் மகளிர்)
முத்தொள்ளாயிரமும் செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ம.வெ, பசுபதி பதிப்பாசிரியர், செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் -2010, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

No comments:

Post a Comment