Monday, 7 May 2018

புளிய மரம்

புளிய மரம்
குளத்தங்கரை மைதானத்தில் விரிந்த
அந்த பச்சைக்குடை
கண்களை விழுங்கியது.
எல்லோரும் அதனைப் புளியமரம் 
என்றழைத்தனர்.
பள்ளிக்கூடம் இல்லாத நேரமெல்லாம்
அந்த மரத்தடியே கதியாக இருந்தது.
நான்கு பேர் கைகோர்த்து வட்டமிட்டாலும்
அடிமரம் அளவில் பெரிதுதான்.
ஓரத்து மிளாறை இழுத்துத் தொங்கிக்
குரங்காட்டம் ஆடித்தான்
அந்த மரத்தில் ஏறமுடிந்தது.
தெற்கோரத்துப் பெருங்கிளையில்
வரிசையாய் அமர்ந்து ஆட்டும்போது
நாங்கள் ராஜா தேசிங்குகள்.
பொசுபொசுத்த கீரிப்பிள்ளைகள்
அதன் பொந்துகளில் எட்டிப்பார்த்து
மறைவதுண்டு.
ஆடி மாதத்துக் கருஞ்சிவப்புத்
துளிர்கள் துவர்க்கும்.
ஆவணியின் இளம்பச்சைத் தளிர்கள்
இனிப்போடு மெலிதாய்ப் புளிக்கும்.
புரட்டாசிப் பூக்கள் துவர்ப்போடு இனிக்கும்.
ஐப்பசியின் நொண்டங்காய்களில்
பெண்பிள்ளைகள் கிறங்கிப் போகும்.
கார்த்திகை வாணங்கள் சுற்றும்போது
சடைசடையாய் வாளாங்கொத்துகள் தொங்கும்.
செங்காய்களில் இறுகிக்கிடக்கும்
புளிப்புச்சுவை காரத்தோடு உப்பினைத் தேடும்.
வெண்மை கனிந்து கருமை மெல்லப் படரும்
உதயம்பழங்கள் உவப்பானவை உலகம் முழுவதற்குமே.
மார்கழிக் காற்று உதிர்க்கும் புளியம் பழங்களைக்
கறிப்புளியெனப் பொறுக்கும் கூட்டம்.
நாங்கள் அதனைச் சர்க்கரைப் புளியென்போம்.
எங்கிருந்தோ மரப்பட்டா பெற்றேனென்ற
ஒருவன் மரத்தோடு நிலத்துக்கும் வேலியிட்டான்.
இப்போது அந்த மரம்
துளிர்ப்பதை நிறுத்திக்கொண்டது.

No comments:

Post a Comment