Showing posts with label முகநூலில் பதிவிட்ட கவிதைகள். Show all posts
Showing posts with label முகநூலில் பதிவிட்ட கவிதைகள். Show all posts

Sunday, 8 July 2018

முகநூலில் பதிவிட்ட கவிதை

பசுமை எங்கு நோக்கினும் பசுமை

ஞாயிற்றுப் பொழுது விடிகிறது.
காலை நடைக்குக் கிளம்புகிறேன்.
கவிதை ஒன்று என்னையும் அழைத்துப்போயேனெனக் கெஞ்சுகிறது.
சேட்டை பண்ணாமல் வருவதென்றால் வாவென்ற நிபந்தனையோடு அதன் கையைப் பிடித்து நடந்தேன்.
வைரமுனீஸ்வரரைக் கண்டதும் கவிதை சிறிது நடுங்குவதாகத் தெரிய, பயப்படாதேயெனச் சொல்லி, ஆதரவாக அணைத்துச் சென்றேன்.
நடைமேடையில் ஏற்றி நிறுத்திய மூன்று சக்கர மிதிவண்டியில் தூங்கும் சுமையாளரின் மீசை அழகாயிருப்பதாகச் சொல்கிற கவிதை அவரது தூக்கம் கலைக்கக்கூடாதென்றே கண்விழித்த கதிருங்கூடக் கனல் வீசாமல் சாந்தமாய் நோக்குகிறதென்றது. சரிதானென்றொரு மவுனப் புன்னகை உதிர்த்து நடையைத் தொடர்ந்தேன்.
பாட்டி வீட்டுக் கூரை மீது படர்ந்திருக்கும் வெள்ளைப் பூசணியில் பச்சையாய் அளவைச் செம்பு போல் ஒற்றைப் பிஞ்சு தொங்குகிறது.
நடைமேடை ஓரநெருஞ்சில் மஞ்சள் கடுக்கன்களைக் காட்டிச் சிரிக்கிறது.
காவல் வெளியில் பரந்து கிடந்த உயிரற்ற வாகனக் கூடுகளைக் கண்டதும் தேசியப் பெருநஷ்டம் என முணுமுணுத்த கவிதைக்கு நான் மவுனத்தையே பதிலாக்கினேன்.
சிறிது தூரத்திலேயே காற்றின் அசைவிலாடிய ஊமத்தையின் வெண் பூக்களைக் கண்டதும் ஆஹா என நின்ற கவிதை, பளபளக்கும் ரத்தினக்கற்களாகப் பூத்திருந்த உண்ணிச்செடியினுள் வழவழக் கறுப்பெனக் குந்தியிருந்த அந்தச் சிறுபறவையை வாஞ்சையோடு நோக்கியது.
அதுவோ இதுவென்ன வம்பென, விலகி அருகிருந்த ஒளிபுகாக் கம்பி வடம் மீதேறி மேலும் கீழுமாக வாலாட்டிக் காட்டியது.
அதையதை அதனதன் போக்கில் விட்டுவிடவேண்டுமெனச் சொல்லிக் கவிதையை இழுத்துக்கொண்டு நகர்ந்த போது நடைபாதைச் சிறு பூக்களைப் பார்த்ததும் தயங்கி நின்றது.
மீண்டுமாக வற்புறுத்தி இழுத்துச் சென்றால் ரேடியோப் பூக்களைக் கண்டதும், ஐயோ உனக்கென்ன, அழகுணர்ச்சியே கிடையாதா, கொஞ்சம் நின்றுதான் பாரேன் என்று வம்புக்கும் இழுத்து நின்றது.
நான் கதிரைப் பார்த்தேன். வானத்தைப் பார்த்தேன். சுற்றி நின்று குன்றுகளை நோக்கினேன். எங்கெங்கும் அழகு. கவிதையின் கவனத்தைத் திருப்பி அத்தனையையும் காட்டியபோது கைதட்டி மகிழ்ந்தது.
போதும், நாளைக்கு மீதம் வைப்போமென மீள அழைத்துக்கொண்டு அதே பாதையில் திரும்பியபோது, கால்வாய் ஓரமாகக் கரிசலாங்கண்ணி வீசியெறிந்திருந்த பொற்காசுகளைப் பறித்தெடுத்தால்தானாயிற்றென அது அடம் பிடித்தபோது, பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாதென அறம் போதிக்கத் தொடங்கினேன்.
மீளவும் நடந்து திரும்பி வரும்போதும் மிதிவண்டிக்காரர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்.
அவரது மீசையை நோக்கிய கவிதையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தபோது பி.எப். அலுவலக வளாகத்துப் பொன்னரளியின் மஞ்சள் கூடாரத்துக்குள் நுழைந்துகொண்டது.
வலியப் பிடித்திழுத்து வீடு வந்து சேர்ந்த போதும் கதிரவன் சாந்தமாகவே துணைக்கு வந்திருந்தான்.
கணினியில் உட்காரும் முன் பசுமைவழிச் சாலை பற்றி என்னதான் நினைக்கிறாயெனக் கவிதையிடம் கேட்டபோது, வாயை மூடு, காவல்நிலையம், கைது, சிறையென அவஸ்தைப்படப் போகிறாயா? என்கிறது.
அரசு, காவல் துறை, நீதிமன்றம் எல்லோரும் சொல்கிறார்களே! கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் சேரும் உரிமை, சுரண்டாப்படாமல் காத்துக்கொள்ளும் உரிமை, வாழ்வுரிமை எல்லா உரிமையும் உனக்கு இருக்கிறது. சொன்னால் புரிந்துகொள்.
பசுமைவழிச் சாலை பற்றி மட்டும் பேசாதே. கைதுசெய்யப்படுவாய்.
முகநூல் பதிவு 8.07.2018 விருப்பம் 80

Tuesday, 6 March 2018

முகநூலில் பதிவிட்ட ஒரு கவிதை



எதிரில் வந்த
இருசக்கரவாகனப்
பின்னிருக்கை லெக்கின்ஸ் மங்கை
முன்னிருக்கை ஆணின்
புன்னகை முகத்தில் அசடு வழியப்
பிடரியில் ஒரு தட்டுத் தட்டினாள்
அப்படி என்னதான்
சொல்லியிருப்பான், அவன்?
என் பின்பக்க இருக்கையிலிருந்த என் மனைவிக்கும்
அது தெரியவில்லை.
பார்த்து ஓட்டுங்கள் என்றாள், அவள். 

மார்ச் 2, 2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது. விருப்பம் 50 பகிர்வு 2 பின்னூட்டம் 7

Thursday, 22 February 2018

முகநூலில் பதிவிட்ட கவிதை - ஒரு இந்து என்பதாலேயே

ஒரு இந்து என்பதாலேயே
நீங்கள் ஒரு இந்து என்பதாலேயே,
பரமஹம்சரின் ஆன்மீகத்தை,
விவேகானந்தரின் விவேகத்தை,
புத்தனின் கருணைமுகத்தினை
சமணத்தின் தன்னலமறுப்பினை
கிறித்துவின் இரக்கத்தை,
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை
அனைத்துமிணைந்த இந்திய மெய்யறிவுச் சாரத்தை,
மகாத்மாவின் மனிதநேய, அறவேட்கையினை,
தன்னார்வச் சேவையின் உன்னதத்தை,
இராமராஜ்யத்தின் பரிபாலன மாண்பினை,
உலகம் உங்களிடம் எதிர்பார்க்கிறது.
அதனாலேயே, இந்தியப் பரிந்துரையாக
யோகாவை ஏற்றுச் சிறப்பித்தது, ஐநா.
நீங்களோ, இப்போதும்,
ரம்ஜான், தீபாவளி, எரிமேடை, புதைமேடு என
வெறுப்பினை விதைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
பதவியின் மாண்பினை, இயக்கங்கள்
கற்றுக்கொடுப்பதில்லை போலும்!
-- ச.ஆறுமுகம்.  
23.02. 2017 இல் முகநூலில் பதிவிடப்பட்டது.

Monday, 12 February 2018

முகநூல் கவிதை

என் செல்ல மகனே, கேள்.
என் செல்ல மகனே!
மூன்று பக்கம் கடல்,
வடக்கில் வானுயர்ந்த மலை
இந்த நாடு மிகப்பரந்தது
இதன் நீண்ட கடற்கரை அழகானது.
இதன் ஆறுகள் புனிதமானவை.
பருவக் காற்றுகள் மாறிமாறி வீசுகின்றன
மலைகள், காடுகள், கடல்படுபொருட்கள்,
விளைநிலங்கள், அணைகள், கனிமச் சுரங்கங்கள்,
நவரத்தின, மகா ரத்தினத் தொழிற்சாலைகள்
பொது வங்கிகள், நிதியங்கள்,
நாடு முழுவதையும் இணைக்கும் நான்குவழி, ஆறுவழித் தங்க நாற்கரச் சாலைகள்
உலகிலேயே பெரிய தொடர்வண்டி இணைப்பு
பறக்கும் தொடரி, நீர்விமானம்
உலகை வலம்வருகின்ற வானூர்திகள்
நிலவுக்கும் ஆய்வுக்கும் விண்கலங்கள், செயற்கைக் கோள்கள்
எல்லாமே இருக்கின்றன.
நூற்றுக்கணக்கான உன் உடன்பிறப்புத் தொழிலதிபர்கள்
உலகக் கோடீசுவரர்களை மிஞ்சிடும் வகையில் வளம் சேர்க்கின்றனர்;
எல்லாமே உனக்காகத்தான்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்;
எதுவும் பேசாமல் உழைத்துக்கொண்டேயிருக்கவேண்டும்
இன்னொன்று -
நீ நாட்டுப் பற்றோடிருக்கவேண்டும்.
இந்த நாடு உனது.
உனக்காகவே பாராளுமன்றம் நீதிமன்றம்
உனக்காகவே அரசியல் சட்டம்
உனக்காகவே நிதி ஆயோக்
உனக்காகவே பிரதமர் முதல் பியூன் வரை
உழைக்கிறார்கள், உழைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
நம்பிக்கை கொள்;
உனது மதம் உலகிலேயே உயர்ந்தது.
பெருமிதம் கொள்; ஒரு இந்து நாட்டினை ஆள்கிறார்.
மறந்தும் அண்டை நாட்டுப் பெயரை உச்சரித்துவிடாதே
இலவசங்களை எதிர்பார்க்காதே; தன்மானத்தோடு வாழ்.
நாட்டுக்காக, மதத்துக்காக நீ எப்போதும் இரத்தம் சிந்தத் தயாராக இரு.
இரவுக்கான உணவா, கேட்காதே!
ஈரத்துணியால் இறுகக்கட்டிக்கொள்
சிறிது கூட முனகிவிடாதே!
அப்புறம் நீ தேசத் துரோகி.
அவ நம்பிக்கையாளன். 
ஜனவரி, 24, 2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது. விருப்பம் 68 பகிர்வு 6 பின்னூட்டம் 14

முக.நூல் கவிதை - மானுட இலக்கணம்

மானுட இலக்கணம்
ஒரு நாட்டின் பெயர்,
நான்காம் வேற்றுமை உருபு `கு`
ஓரெழுத்தொரு மொழியில் ஒரு வினைச்சொல் `போ`
சேர்ந்த அந்த இரண்டே சொற்களில் தான் எத்துணை
வன்மம் ஒளிந்திருக்கிறது!
சென்ற நூற்றாண்டில் வெடித்த இந்தச் சொற்கள் தாம்
எத்தனையெத்தனை உயிர்களைக் காவுகொண்டன!
தேசத்தந்தையின் உயிரைக் குடித்ததும் இதே சொற்கள்
மசூதிகளை இடித்ததும் இதே சொற்கள்
அந்தச் சொற்களைக் கேட்டதுமே உடல் பதறுகிறது.
மக்கட்பண்பற்ற அந்தச் சொற்களை
இனிமேலாவது உச்சரிக்காதீர்கள்
அது சரி, அந்தச் சொற்களை உச்சரிப்பதற்கு
உங்களுக்குக் கற்றுக்கொடுத்த
அந்த மானுடப் பகைவன்
யார்?
எந்த ஒரு தனிமனிதனுக்குமல்ல,
எந்தவொரு அதிகார மையத்துக்கும் கூட
அதற்கான அதிகாரமில்லையென்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்தச் சொற்களை உச்சரிப்பவரை,
உச்சரிக்கக் கற்றுக்கொடுப்பவரை
என்னென்று அழைப்பது?

06.02.2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது. விருப்பம் -16 பகிர்வு - 0 பின்னூட்டம் - 2