பசுமை எங்கு நோக்கினும் பசுமை
ஞாயிற்றுப் பொழுது விடிகிறது.
காலை நடைக்குக் கிளம்புகிறேன்.
கவிதை ஒன்று என்னையும் அழைத்துப்போயேனெனக் கெஞ்சுகிறது.
சேட்டை பண்ணாமல் வருவதென்றால் வாவென்ற நிபந்தனையோடு அதன் கையைப் பிடித்து நடந்தேன்.
வைரமுனீஸ்வரரைக் கண்டதும் கவிதை சிறிது நடுங்குவதாகத் தெரிய, பயப்படாதேயெனச் சொல்லி, ஆதரவாக அணைத்துச் சென்றேன்.
நடைமேடையில் ஏற்றி நிறுத்திய மூன்று சக்கர மிதிவண்டியில் தூங்கும் சுமையாளரின் மீசை அழகாயிருப்பதாகச் சொல்கிற கவிதை அவரது தூக்கம் கலைக்கக்கூடாதென்றே கண்விழித்த கதிருங்கூடக் கனல் வீசாமல் சாந்தமாய் நோக்குகிறதென்றது. சரிதானென்றொரு மவுனப் புன்னகை உதிர்த்து நடையைத் தொடர்ந்தேன்.
பாட்டி வீட்டுக் கூரை மீது படர்ந்திருக்கும் வெள்ளைப் பூசணியில் பச்சையாய் அளவைச் செம்பு போல் ஒற்றைப் பிஞ்சு தொங்குகிறது.
நடைமேடை ஓரநெருஞ்சில் மஞ்சள் கடுக்கன்களைக் காட்டிச் சிரிக்கிறது.
காவல் வெளியில் பரந்து கிடந்த உயிரற்ற வாகனக் கூடுகளைக் கண்டதும் தேசியப் பெருநஷ்டம் என முணுமுணுத்த கவிதைக்கு நான் மவுனத்தையே பதிலாக்கினேன்.
சிறிது தூரத்திலேயே காற்றின் அசைவிலாடிய ஊமத்தையின் வெண் பூக்களைக் கண்டதும் ஆஹா என நின்ற கவிதை, பளபளக்கும் ரத்தினக்கற்களாகப் பூத்திருந்த உண்ணிச்செடியினுள் வழவழக் கறுப்பெனக் குந்தியிருந்த அந்தச் சிறுபறவையை வாஞ்சையோடு நோக்கியது.
அதுவோ இதுவென்ன வம்பென, விலகி அருகிருந்த ஒளிபுகாக் கம்பி வடம் மீதேறி மேலும் கீழுமாக வாலாட்டிக் காட்டியது.
அதையதை அதனதன் போக்கில் விட்டுவிடவேண்டுமெனச் சொல்லிக் கவிதையை இழுத்துக்கொண்டு நகர்ந்த போது நடைபாதைச் சிறு பூக்களைப் பார்த்ததும் தயங்கி நின்றது.
மீண்டுமாக வற்புறுத்தி இழுத்துச் சென்றால் ரேடியோப் பூக்களைக் கண்டதும், ஐயோ உனக்கென்ன, அழகுணர்ச்சியே கிடையாதா, கொஞ்சம் நின்றுதான் பாரேன் என்று வம்புக்கும் இழுத்து நின்றது.
நான் கதிரைப் பார்த்தேன். வானத்தைப் பார்த்தேன். சுற்றி நின்று குன்றுகளை நோக்கினேன். எங்கெங்கும் அழகு. கவிதையின் கவனத்தைத் திருப்பி அத்தனையையும் காட்டியபோது கைதட்டி மகிழ்ந்தது.
போதும், நாளைக்கு மீதம் வைப்போமென மீள அழைத்துக்கொண்டு அதே பாதையில் திரும்பியபோது, கால்வாய் ஓரமாகக் கரிசலாங்கண்ணி வீசியெறிந்திருந்த பொற்காசுகளைப் பறித்தெடுத்தால்தானாயிற்றென அது அடம் பிடித்தபோது, பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாதென அறம் போதிக்கத் தொடங்கினேன்.
மீளவும் நடந்து திரும்பி வரும்போதும் மிதிவண்டிக்காரர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்.
அவரது மீசையை நோக்கிய கவிதையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தபோது பி.எப். அலுவலக வளாகத்துப் பொன்னரளியின் மஞ்சள் கூடாரத்துக்குள் நுழைந்துகொண்டது.
அவரது மீசையை நோக்கிய கவிதையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தபோது பி.எப். அலுவலக வளாகத்துப் பொன்னரளியின் மஞ்சள் கூடாரத்துக்குள் நுழைந்துகொண்டது.
வலியப் பிடித்திழுத்து வீடு வந்து சேர்ந்த போதும் கதிரவன் சாந்தமாகவே துணைக்கு வந்திருந்தான்.
கணினியில் உட்காரும் முன் பசுமைவழிச் சாலை பற்றி என்னதான் நினைக்கிறாயெனக் கவிதையிடம் கேட்டபோது, வாயை மூடு, காவல்நிலையம், கைது, சிறையென அவஸ்தைப்படப் போகிறாயா? என்கிறது.
அரசு, காவல் துறை, நீதிமன்றம் எல்லோரும் சொல்கிறார்களே! கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் சேரும் உரிமை, சுரண்டாப்படாமல் காத்துக்கொள்ளும் உரிமை, வாழ்வுரிமை எல்லா உரிமையும் உனக்கு இருக்கிறது. சொன்னால் புரிந்துகொள்.
பசுமைவழிச் சாலை பற்றி மட்டும் பேசாதே. கைதுசெய்யப்படுவாய்.
No comments:
Post a Comment