நாடோடி வணிகர்கள் மற்றும் உமணர் வாழ்க்கை.
நாடோடி வணிகர் வாழ்க்கை
(23.06.2018) காலை நடையின்போது வேலூர் – சென்னை நெடுஞ்சாலையின் இடது புறமாக சத்துவாச்சாரி காவல்நிலையத்திலிருந்தும் ஒரு நூறு மீட்டர் தாண்டி, வீட்டுமனைகளாக, காலியாகக் கிடக்கும் திறந்தவெளியில் மூன்று டாடா சுமோக்கள், ஒரு டெம்போ டிராவலர் மற்றும் ஒரு ஸ்டான்டர்டு வேன் ஆக ஐந்து ஊர்திகளுடன் வடநாட்டுக்குடும்பத்தினர் தங்கியிருந்ததைப் பார்த்தேன்.
வெட்டவெளியில் பாய்விரித்தும் சிலர் கட்டில் போட்டு அதில் கொசுவலை கட்டியும் உறங்கிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் விழித்துவிட்டிருந்தனர். அக்குழுவின் தலைவரென நான் கருதிக்கொண்ட ஒருவரும் அவரது மனைவியும் ஒரு கட்டிலில் அமர்ந்திருந்தனர்.
எனக்குச் சிறுவயதிலிருந்தே ஊருக்கு வரும் நாடோடிகளான மிராட்டியர், வாழ்க்கை குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. தை மாதம் பூதப்பாண்டித் தேரோட்டம், எங்கள் ஊர் திருக்கலியாண நேரங்களில் எங்கள் ஊர்ப்பக்கம் வந்து குளத்தங்கரை மைதானத்தில் கூடாரம் அடித்து ஓரிரு நாட்கள் தங்கிச் செல்வர் அதுபோன்ற நாட்களில் அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிப்பதும், அவர்கள் வேட்டையாடி வைத்திருக்கும் பறவைகள், விலங்குகள் குறித்து அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளவும் முயற்சித்ததுண்டு.
ராகுல் சாங்கிருத்தியானின் `ஊர்சுற்றிப் புராணம்` படித்துவிட்டு அதுபோன்றதொரு வாழ்க்கைக்கு ஏங்கியதுமுண்டு. இப்போதும் நான் பார்த்த குழுவினர் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் மேலிட, அவர்களை அணுகிக் கேட்டேன்.
நீங்களெல்லாம் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? சென்னை; அது சரி. உங்கள் சொந்த ஊர்? மகாராஷ்டிரா, ஓ, என்ன வியாபாரம்? ஆயுர்வேதம், இங்கேயே கடை போடப்போகிறோம். கடை போட்டதும் வந்து பாருங்க.
நானும் தலையசைத்துக் கொண்டு அவர்களின் ஊர்திகள் பக்கமாக நகர்ந்தேன். ஒவ்வொரு ஊர்தியிலும் ஒரு நாய் கட்டப்பட்டிருந்தது. எரிவாயு உருளை ஒன்று இருந்தது. கட்டில்கள், விரித்துப் படுத்த பாய்கள், மெத்தைகள் சுருட்டப்படாமலேயே கிடந்தன.
எல்லாவற்றையும் புகைப்படமெடுத்துக் கொண்டு திரும்பும்போது, அந்தப் பெரியவர், நாங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட்டு கோயமுத்தூருக்கு இங்கிருந்து எவ்வளவு தூரமெனக்கேட்டார்.
இங்கிருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு போய்க் கோயமுத்தூர் போக பத்து மணி நேரம் பிடிக்கும், எப்படியும் 600 கி.மீ இருக்கலாமென்றேன். இங்கே கடை போடவில்லை; கோயமுத்தூருக்குத்தான் போகப்போகிறோமென்றார்.
அவரது மனைவி, என்னை, நீங்கள் யார்? பத்திரக்காரா? மொபைல்ல படம் புடிக்கிறீங்களே, இது சரியில்லை, என்று அதிருப்தியை வெளிக்காட்டியதோடு பத்திரிக்கையிலெல்லாம் எழுதாதீர்கள் என்றார்.
இல்லை, இல்லை, உங்களுக்கு எந்த பாதகமும் வராதென்றேன். ஆனாலும் அவர் சமாதானமடைந்ததாகத் தெரியவில்லை.
அதற்கு மேல் நானும் சரியெனத் தலையசைத்துவிட்டு நடையைத் தொடர்ந்து வழக்கமான தூரம் சென்று மீண்டும் அதே பாதையில் திரும்பிவரும்போது அக்குழுவிலிருந்து ஒரு பெண் காலி கேன் ஒன்றை எடுத்துக்கொண்டு என் முன்னே சென்றுகொண்டிருந்தார். குடிதண்ணீர் தேடிச் செல்கிறாரென்று புரிந்து கொண்டேன். எங்கு சென்றாலும் தண்ணீர் கொண்டு வருவதென்பது பெண்கள் தலையில்தான் விடிகிறது.
காவல் நிலையம் அருகில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைக் கண்டதும் அதில் நீர் பிடிக்க வசதியிருக்குமா என அந்தப் பெண் தயங்கி நின்று கொண்டிருந்தபோது, காவல் நிலையம் முன்பாகவே சின்டெக்ஸ் தொட்டி ஒன்றில் குடிநீர் இருப்பதைக் காட்டினேன். அவர் தண்ணீர் பிடிக்கத் தொடங்கியதும் என் நடையினைத் தொடர்ந்து வீடுவந்து சேர்ந்துவிட்டேன்.
வீணாக அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து விட்டோம் போலிருக்கிறதேயெனச் சிறிது நொந்துகொண்டேன். அதைத் தொடர்ந்து சங்க கால உப்பு வணிகர்களான உமணர்கள், கழுதைச் சாத்து என எண்ணங்கள் ஏற்பட்டு, அப்பதிவுகளோடு இவர்களது வாழ்க்கையை ஒப்பிட்டுச் சிந்தனைகள் ஓடத் தொடங்கின.
சங்க இலக்கியத்தில் அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு நூல்களில் உப்பு வணிகர்களின் மாட்டு வண்டிகள் செல்லும் ஒலியும் உமணர்கள் மாடுகளை அதட்டும் ஒலியும், ஏற்றம் அல்லது நொடிகளில் மாடுகளைத் தட்டிக்கொடுத்து ஆதரவாக உரத்து ஒலிக்கும் பகடு தெழி தெள்விளி (மாடுகளை ஊக்கப்படுத்துகின்ற தெளிவுமிக்க விளிப்பு மொழிகள் - அகம்.17) கேட்டுக்கொண்டேயிருக்கின்றன. அந்த ஆரவார ஒலியில் மான் கூட்டம் அஞ்சி ஓடுகிறது.
வண்டி இழுக்கும் மாடுகளுக்கு மாற்று மாடுகளும் கூடவே இட்டுச் சென்றிருக்கின்றனர். வழியில் மாடு ஒன்று முடமாகிவிட்டால் அதனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். அவை அங்கேயே கிடந்து உண்ண உணவுமின்றிக் குடிக்கத் தண்ணீருமின்றி இறந்திருக்கின்றன.
பாலை நிலங்களிலும் காட்டு வழிகளிலும் அவர்களின் வண்டிகள் ஒன்றையொன்று நெருங்கித் தொடர்ந்தாற் போலவே செல்கின்றன.
வழியில் பூக்கள் சார்த்தி, குருதிப் பலிகொடுத்து வணங்கப்பட்ட பெயரும் பீடும் பொறித்த நடுகற்களைக் காணுகின்றனர். யானை ஒன்று நடுகல்லினை ஆளென்று நினைத்து உதைத்து முன் கால் நகம் உடைந்து இரத்தம் சிந்த நிற்கிறது.
கிணறுகளில் தண்ணீர் இறைத்து அடுப்பு கூட்டிச் சமைத்து உண்டு மீண்டும் பயணம் தொடருகின்றனர். அவர்களின் குழந்தைகளும் கூடவே வருகின்றனர்.
உமணர் வளர்க்கும் மந்தி ஒன்று குழந்தைகளோடு சேர்ந்து கிலுகிலுப்பை ஆட்டி மகிழ்கிறது.
ஊருக்குள் பொது இடங்களில் உமணர் குடும்பங்கள் சில நாள் தங்கிப் பின்னர் செல்லும்போது ஊர்மக்கள் கொள்ளும் பிரிவுத் துயர் பற்றி ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
உப்புக்குப் பதிலாகப் பெற்ற நெல் மூட்டைகளை ஏற்றிவந்த உமணர் தோணிகள் உப்பங்கழிகளில் கட்டிவைக்கப்பட்டு, அசைந்தாடிக்கொண்டிருந்ததாக பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
உமணர் வண்டி பற்றிய வருணனை :
கொழுவிய வட்டையிலே செருகப்பட்டுத் திருந்திய நிலையினை உடைய ஆரம்;
மத்தளம் போன்று முழு மரத்திலே கடைந்தெடுக்கப்பட்ட உருளி;
கணைய மரங்கள் இணைத்தாற் போன்ற வலிய பார்;
மழைமுகிலினைச் சுமந்து செல்வது போல் தோற்றமளிக்கின்ற கரிய தாளிப்பனையின் பாயால் வேயப்பட்ட கூரை; அதன் மேல் தினைப்புனக் காவல் பரண் போல ஒரு கோழிக்கூடு; கூட்டினுள் வளர்ப்புக் கோழிகள்; அந்தக் கூட்டோடு அதன் வாயிலில் கட்டப்பட்டிருக்கும் ஒரு உரல்;
வண்டியின் பாரில் கூத்தாடுவோரின் மத்தளம் போல் கயிறு கொண்டு இறுக்கிக் கட்டப்பட்டுத் தொங்கும் மிடா என்னும் காடிச் சாடி. (ஊறுகாய்ப்பானை)
அந்தப் பாரின் மீது குழந்தையோடு அமர்ந்திருக்கும் உமணப் பெண் வண்டியிழுக்கும் எருதின் முதுகிலேயே அடித்து அதனை ஓட்டுகிறாள்.
பூங்கொத்துகளோடிருக்கும் வேப்பிலைத் தழை மாலைகளை அணிந்த உமணர்கள் வண்டியின் பக்கமாகவே பாதுகாப்பாக நடந்து வருகின்றனர். (பெரும்பாண். (46 – 65)
அகில், பொன், மணி, மிளகு போன்ற மலைபடு பொருட்களையும் முத்து, சங்கு போன்ற கடல் படு பொருட்களையும் கழுதைகளின் மேல் இருபக்கமும் சம எடையுடன் தொங்கும் பொதிகளாக `புணர்ப் பொறை`களாக ஏற்றி அதனோடு செல்லும் வணிகர் கூட்டம் கழுதைச் சாத்து எனப்பட்டது.
இந்த வணிகர் காலுக்கு அடிபுதை அரணம் (SHOE) உடம்பில் மேற்சட்டை (மெய்ப்பை) அணிந்து, மார்பின் குறுக்காகப் பாம்பு போல் தோற்றமளிக்கும் கச்சு பூண்டு அதில் ஒள்ளிய வாளினைத் தொங்கவிட்டு, ஆறலைக்கள்வரையும் எதிர்த்துப் போரிடும் வல்லவர்களாக, வாட்ட சாட்டமாக இருந்ததாகக் குறிப்புள்ளது. (பெரும்பாண். 66 – 82)
No comments:
Post a Comment