Showing posts with label ஜப்பானியச் சிறுகதை. Show all posts
Showing posts with label ஜப்பானியச் சிறுகதை. Show all posts

Thursday, 4 August 2016

ஜப்பானியச் சிறுகதை - ஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டு - The Year of Spaghetti year by Haruki Murakami

ஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டு – THE YEAR OF SPAGHETTI 

ஜப்பான் : ஹாருகி முரகாமி HARUKI MURUKAMI ஆங்கிலம் : பிலிப் காப்ரியேல் PHILIP GABRIEL 

 தமிழில்  ச. ஆறுமுகம்

ஸ்பகேட்டி
ஸ்பகேட்டி
1971 – அதுதான் ஸ்பகேட்டி இடியாப்ப ஆண்டாக இருந்தது. 1971 இல் நான் உயிர் வாழ்வதற்காக ஸ்பகேட்டி இடியாப்பம் சமைத்தேன் என்பதோடு, ஸ்பகேட்டி இடியாப்பம் சமைப்பதற்காகவே வாழ்ந்தேன் என்றும்தான் கூறவேண்டும். அலுமினியப் பானையிலிருந்து உயர்ந்தெழும் ஆவி எனது பெருமித மகிழ்ச்சியாகவும் நீண்ட கைப்பிடியுடன் கூடிய குழம்புச் சட்டியில் குமிழியிட்டுக் கொதிக்கும் தக்காளி சுவைச்சாறு எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த நம்பிக்கையாகவும் திகழ்ந்தது.
சமையல் பாத்திர சிறப்புக் கடை ஒன்றுக்குச் சென்று கிச்சன் டைமர் எனப்படும் சமைப்பான் ஒன்றும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ஒன்றைக் குளிப்பாட்டுவதற்குப் போதுமான அளவிலிருந்த பெரியதொரு அலுமினிய சமையல் பானையும் வாங்கிவிட்டுப் பின் வெளிநாட்டவர்களுக்கெனத் தனிச்சிறப்புபெற்ற பல்பொருள் அங்காடிகளில் சுற்றியலைந்து தாளிப்புக்குத் தேவைப்படுவனவும் வாயில் நுழையாத பெயர்கள் கொண்ட பல்வேறு நறுமணப் பொருட்களும் வாங்கினேன். புத்தகக்கடையில் பாஸ்தா சமையல் புத்தகம் ஒன்றினைத் தேடியெடுத்துக்கொண்டபின், டஜன் கணக்கில் தக்காளிகளும் வாங்கினேன். என்னால் வாங்க முடிகிற அளவுக்கு ஸ்பகேட்டியின் அத்தனை வகைகளையும் வாங்கியதோடு மனிதகுலம் அறிந்த அத்தனைவகை சுவைச்சாறுகளையும் வாங்கித் திளைத்தேன். வெள்ளைப் பூண்டு, வெங்காயத்தின் கண்ணுக்குத் தெரியாத மீச்சிறு துகள்களும், ஆலிவ் எண்ணெய்த் துளிகளும் காற்றில் கலந்து மிதந்து, மனதுக்கிசைந்த மணமாகப் படலமாகித் தவழ்ந்து எனது சின்னஞ்சிறிய அடுக்ககக் குடியிருப்பின் அனைத்து மூலை மற்றும் இடுக்குகளிலும் ஊடுருவி, அடித்தரை, மேற்கூரை, சுவர்கள், எனது துணிமணிகள், எனது புத்தகங்கள், எனது வரிப்பந்து மட்டை, எனக்கு வந்த பழைய கடிதங்களின் மூட்டை என அனைத்துக்குள்ளும் புகுந்து நிறைந்திருந்தது. மொத்தத்தில், அது பண்டைப் பழங்காலத்து ரோமன் கால்வாயின் மணமாக இருந்தது.
இது ஸ்பகேட்டி ஆண்டான கி.பி.1971- இல் நிகழ்ந்த ஒரு கதையென்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
பொதுவான ஒரு விதியாக, நானே ஸ்பகேட்டியைச் சமைத்து, அதை வேறு யாருமின்றித் தனியாகவே சாப்பிட்டுவந்தேன். ஸ்பகேட்டி, அப்படித் தனித்துச் சாப்பிடும்போதுதான் அதிகமாகச் சுவைத்து மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு உணவுவகையென என்னை நானே அமைதிப்படுத்தியிருந்தேன். நான் ஏன் அப்படி நினைத்தேனென்பதற்கு என்னால் எந்த விளக்கமும் சொல்லிவிட முடியாதுதான். ஆனால், அது அப்படித்தானிருந்தது.
நான், எனது ஸ்பகேட்டியை எப்போதுமே லெட்டூஸ் கீரையும் வெள்ளரிப் பிஞ்சும் கலந்த ஒரு சாலட் மற்றும் கறுப்புத் தேநீருடனேயே அருந்தினேன். அவையிரண்டும் குறைவுபடாமல் அதிகமிருக்குமாறு பார்த்துக்கொள்வேன். மேசையின் மீது எல்லாவற்றையும் கொண்டுவந்து அழகாக ஒழுங்குபடுத்தி அமைத்தபின், ஓய்வாக நாளிதழை வாசித்துக்கொண்டே, எனது உணவினைச் சுவைத்து மகிழ்வேன். ஞாயிறு முதல் சனி முடிய ஏழு நாட்களும் ஸ்பகேட்டி நாட்களாகவே ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன. ஒவ்வொரு புதிய ஞாயிறு அன்றும் புத்தம் புதியதொரு ஸ்பகேட்டி வாரம் முகிழ்த்தது.
ஸ்பகேட்டி தட்டுடன் அமர்கிற ஒவ்வொரு முறையும் – அதிலும் குறிப்பாக மழைபெய்கின்ற பிற்பகல்களில் – என் வீட்டு வாசற்கதவை யாரோ ஒருவர் தட்டப்போகிறாரென்ற தனித்த ஒரு உணர்வு எப்போதுமே எனக்குள் எழுந்துகொண்டிருந்தது. அப்படி வரப்போவதாக என் கற்பனையில் வந்தவர்கள் ஒவ்வொரு முறையும் வேறுவேறு நபர்களாக இருந்தனர். சிலவேளைகளில் அது ஒரு வேற்றாளாக இருந்தது; சிலவேளைகளில் எனக்குத் தெரிந்தவராக இருந்தார். ஒருமுறை உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் மணநோக்கு உறவுகொண்டிருந்த ஒரு மெலிந்த கால்களுள்ளவளாக இருந்தாள். பின்னுமொரு முறை, அது நானாகவே, ஒருசில ஆண்டுகளுக்கு முந்திய நானாகவே என்னைப் பார்க்க வந்திருந்தேன். பிறகொரு முறை வந்தது வேறுயாருமில்லை; ஜெனிஃபர் ஜோன்ஸை அணைத்தவாறு வில்லியம் ஹோல்டெனேதான்.
வில்லியம் ஹோல்டென்?
அவர்களில் ஒருவர்கூட என்னுடைய அடுக்ககக் குடியிருப்புக்குள் நுழைய முற்பட்டதேயில்லை; கதவைத் தட்டாமல் வெளிவாசலிலேயே, நினைவுச் சிதறல்கள் போல வந்து உலவிவிட்டுப் பின்னர் நழுவிச் சென்றனர்.
@
வசந்தம், கோடை மற்றும் இலையுதிர்காலங்களில் நான் ஸ்பகேட்டி சமைத்தேன்; ஸ்பகேட்டி சமைப்பதென்பது ஏதோ ஒரு பழிவாங்கும் செய்கையென்பதுபோலச் சமைத்தேன். வஞ்சிக்கப்பட்டுத் தனிமையில் தவிக்கும் ஒரு பெண் அவளுடைய பழைய காதல் கடிதங்களைக் கணப்படுப்பில் ஒவ்வொன்றாக நெருப்பிலிடுவதுபோல, ஸ்பகேட்டியை ஒவ்வொரு கைப்பிடியாக, ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து, பானைக்குள் போட்டுக்கொண்டிருந்தேன்.
காலத்தின் பெருங்கால்களில் மிதிபட்டு நசுங்கிய நிழல்களைப் பாத்திரத்திலிட்டு, ஜெர்மன் ஷெப்பர்டு உருவத்துக்குத் திரட்டி, கொதிக்கும் நீருக்குள் விட்டெறிந்து,, அதன் மீது உப்பினைத் தூவித் தெளிப்பேன். பின்னர் கையில் மிகப்பெரும் உணவுக்கோல்களுடன் பானையே கண்ணாக, சமைப்பானில் `டிங்` அவலக்குரல் கேட்கும்வரையில் அங்கேயே நின்றுகொண்டிருப்பேன்.
ஸ்பகேட்டி இழைகள் தந்திரம்நிறைந்த ஒரு வஞ்சனைக்கொத்தாகச் சேர்ந்திருப்பவை. அவற்றை என் பார்வையிலிருந்தும் விட்டுவிடக்கூடாது; நான் மட்டும் இலேசாக முதுகைக்காட்டித் திரும்பினேனோ, அவ்வளவுதான், பானையின் விளிம்பைத் தாண்டிக் குதித்து, இரவின் மையிருளில் மறைந்துபோகும். பலப்பல வண்ணங்களில் வந்து சேரும் வண்ணத்துப் பூச்சிகளைக் காலத்தின் முழுமைக்குள் விழுங்கி ஏப்பமிடக் காத்திருக்கும் வெப்பமண்டலக் காடுகளைப் போல குதித்து விழும் இழைகளை வழிப்பறிசெய்ய இருள் அமைதியாகக் காத்துக்கிடக்கிறது.
பார்மிஜியானா பாலாடைக் கட்டி சேர்த்த ஸ்பகேட்டி
நெபோலெட்டனா தக்காளிச் சுவைச்சாறு சேர்த்த ஸ்பகேட்டி
கார்ட்டோக்சியா தக்காளி மசாலாப் பொதியுடனான ஸ்பகேட்டி
பூண்டு, மிளகாய், பார்சிலிக்கீரை வதக்கிச் சேர்த்த ஸ்பகேட்டி
பாலாடைக்கட்டி, கறுப்பு மிளகு, மாட்டிறைச்சி, முட்டை சேர்த்த ஸ்பகேட்டி
மணிலா கிளாம் சிப்பி, கறுப்பு மஸ்ஸெல் எனும் ஊமச்சி நத்தை, பூண்டு, துளசிவகைக் கீரை ஒன்று, சான் மர்சானோ என்ற தக்காளி சுவைச்சாறு சேர்த்த ஸ்பகேட்டி
அப்புறம் இருக்கவே இருக்கிறது, மீந்துபோய்க் குளிர்பெட்டியில் அடங்கிக் கிடக்கும் பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிய, இரக்கத்திற்குரிய, பெயரற்ற எனது ஸ்பகேட்டி.
ஆவியில் பிறந்த ஸ்பகேட்டி இழைகள் 1971 இன் காலமென்னும்நதியில் அடித்துச் செல்லப்பட்டு மறைந்துவிட்டன.
அவை எல்லாவற்றுக்குமாக நான் துக்கம் கொண்டாடுகிறேன் – 1971 ஆம் ஆண்டின் அனைத்து ஸ்பகேட்டிகளுக்கும்.
@
முரகாமி
ஜப்பான் எழுத்தாளர்
மூன்று இருபதுக்குத் தொலைபேசி ஒலித்தபோது, நான், டட்டாமி வைக்கோல் பாயில் மேற்கூரையைப் பார்த்துக்கொண்டு கைகால்கள் பரப்பியநிலையில் அம்போவெனப் படுத்துக் கிடந்தேன். நான் கிடந்த இடத்தில் குளிர்காலச் சூரியன் வெயில்திட்டு ஒன்றைப் பரப்பியிருந்தது. 1971 டிசம்பரின் ஒளிவட்டத்தினுள் நான் மரணமுற்ற ஒரு ஈயாக, வெறுமனே விழுந்துகிடந்தேன்.
முதலில் தொலைபேசிதான் ஒலிக்கிறதென நான் உணரவில்லை. ஏதோ முன்பின் அறியாத நினைவலை ஒன்று காற்றின் அடுக்குகளுக்குள் தயங்கித் தயங்கி மறைவதாகவே அது, தோன்றியது. பின்னர் அது உருக்கொள்ளத் தொடங்கியதாகத் தோன்றி, முடிவில், அது தொலைபேசி ஒலியேதானென்று உறைத்தது. நூறு விழுக்காட்டு உண்மையான காற்றில் நூறு விழுக்காட்டு தொலைபேசியொலியாகவே அது இருந்தது. அப்போதும் கைகால் பரப்பிக் கிடந்தநிலையிலேயே, நகர்ந்து தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுத்துத் தொலைத்தேன்.
எதிர் முனையிலிருந்தது, ஒரு பெண். நான்கு முப்பதுக்கெல்லாம் முற்றாக மறைந்துவிடுமளவுக்கு, அல்லது, நினைவில் பதிகிற அளவுக்குச் தனித்துத்தெரிகிற ஏதொன்றுமில்லாத ஒரு பெண். அவள், எனது நண்பனொருவனின் முன்னாள் பெண்தோழி. ஏதோ ஒன்று அவர்களை – அவனையும் அந்தத் தனித்துத் தெரிகிற ஏதொன்றுமில்லாத பெண்ணையும் இணைசேர்த்துப் பின்னர், வேறு ஏதோ ஒன்று அவர்கள் பிரிந்துசெல்வதற்கான வழிவகுத்தது. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், முதலில் அவர்கள் இருவரும் இணைசேர்ந்ததில் என்னுடைய பங்கும் இருந்தது.
“உங்களைச் சிரமப்படுத்துவதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது,” என்ற அவள் ”அவர் இப்போது எங்கிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டாள்.
இணைப்புச் சுருள் வழியே, அதன் மொத்த நீளத்திற்கும் கண்களை ஓடவிட்ட நான், தொலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தேன். இணைப்புச் சுருள் தொலைபேசியுடன் உறுதியாக இணைக்கப்பட்டேதானிருந்தது. நிலைமையைச் சமாளிக்க வெற்றான ஏதோ ஒன்றைப் பதிலாகச் சொன்னேன். அந்தப் பெண்ணின் குரலில் அவலமான ஏதோ ஒன்று இருந்தது; அது எப்படிப்பட்ட துயரமாக இருந்தாலும் நான் அதில் ஈடுபட்டுக்கொள்ளக்கூடாதென எனக்குத் தெரிந்தது.
“அவர் எங்கிருக்கிறாரென்று யாருமே சொல்லமாட்டேனென்கிறார்கள்,” மிகுந்த வருத்தம் தொனிக்கிற, விரக்தியான ஒரு குரலில் அவள் சொன்னாள். எதுவும் தெரியாத மாதிரி எல்லோருமே நடிக்கிறார்கள். நான் அவருக்குத் தெரிவிக்கவேண்டிய முக்கியமான விஷயமொன்று இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன், தயவுசெய்து அவர் எங்கிருக்கிறாரென்று சொல்லுங்கள். நான் சத்தியமாகச் சொல்கிறேன், உங்களை இழுத்துவிட மாட்டேன். தயவுசெய்து சொல்லுங்கள், அவர் எங்கிருக்கிறார்?”
“உண்மையாகவே சொல்கிறேன், எனக்குத் தெரியாது.” என்றேன், நான். “அவனைப் பார்த்து நிரம்பக் காலம் ஆகிவிட்டது.” ஆனால், எனது குரல் என்னுடையது போலவே இல்லை. அவனை நீண்ட நெடுங்காலமாகப் பார்க்கவில்லையென நான் உண்மையைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்; என்றாலும் இன்னொரு பகுதி – அவனது முகவரியும் தொலைபேசி எண்ணும் எனக்குத் தெரியும்தான். நான் பொய் சொல்லும்போதெல்லாம் என் குரலுக்கு ஏதாவது நேர்ந்துவிடுகிறது.
மறுமுனையில் அவளிடம் எதிர்வினை ஏதுமில்லை.
தொலைபேசி ஒரு பெருந்தூணளவுக்கான பனிக்கட்டியாகக் குளிர்ந்தது.
பின்னர், ஜே.ஜி.பல்லார்டின் அறிவியல் புனைவுலகத்துக்குள் நான் புகுந்துவிட்டது போல, என்னைச்சுற்றிலுமிருந்த பொருட்கள் அனைத்தும் பனித்தூண்களாக மாறின.
“உண்மையிலேயே எனக்குத் தெரியாது,” என மீண்டும் சொன்னேன். ”அவன் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் நிரம்ப நாட்களுக்கு முன்பே சென்றுவிட்டான்.“
அவள் சிரித்தாள். “ நான் பேசுவதற்கு இடைவெளி விடுங்கள். அந்த அளவுக்கு அந்த ஆளுக்குத் திறமை கிடையாது. எந்தக் காரியம் செய்தாலும் அலப்பறை எழுப்பும் ஒரு ஆளைப்பற்றித்தாம் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.”
அவள் சரியாகத்தான் சொன்னாள். அந்த ஆள் கொஞ்சம் மங்கிய பல்புதான்.
ஆனால், அவன் எங்கிருக்கிறானென்று, நான் அவளுக்குச் சொல்வதாக இல்லை. அப்படிச் சொன்னேனென்றால், அடுத்த நிமிடமே தொலைபேசியில் அவனிடம் போதும் போதுமென்கிற அளவுக்கு வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டியிருக்கும். ஏற்கெனவேயே பிறர் விவகாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறேன். பின்பக்கத் தோட்டத்தில் குழிதோண்டி அதில் புதைக்கவேண்டிய எல்லாவற்றையும் ஏற்கெனவே புதைத்துவிட்டேன். அதை யாராலும் மீண்டும் தோண்டியெடுத்துவிடமுடியாது.
“எனக்கு வருத்தமாகத் தானிருக்கிறது.” என்றேன்.
“உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை, இல்லையா?” என்றாள், அவள், திடீரென்று.
என்ன பதில் சொல்வதென்று எனக்கு எதுவும் தோன்றவில்லை. குறிப்பாக, நான் அவளை வெறுக்கவும் இல்லைதான். அவளைப்பற்றி எனக்கு எந்தவிதமான எண்ணப்பதிவும் இல்லையென்பதுதான் உண்மை. ஒருவரைப்பற்றி எந்தவிதமான கருத்துப்பதிவும் இல்லாதபொழுதில் அவரைப்பற்றி மோசமான அபிப்பிராயம் கொள்வது கடினமான காரியமாயிற்றே.
“எனக்கு வருத்தமாகத்தானிருக்கிறது.” என்றேன், மீண்டும். “ஆனால், நான் இப்போது ஸ்பகேட்டி சமைத்துக்கொண்டிருக்கிறேன்.” என்றும் சொன்னேன்.
”என்னது?”
’’நான் ஸ்பகேட்டி சமைத்துக்கொண்டிருக்கிறேன் என்றேன்.” நான் பொய்தான் கூறினேன். நான் ஏன் அப்படிச் சொன்னேனென்று எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், அந்தப் பொய் ஏற்கெனவேயே எனது உண்மையான ஒரு பகுதியாக—அதாவது குறைந்தபட்சம் அந்தக்கணத்திலிருந்தே அது ஒரு பொய்யல்லவென்று எனக்குத் தோன்றத் தொடங்கியது.
தண்ணீர் ஊற்றியிருந்த ஒரு கற்பனைப் பானையை கற்பனையான ஒரு அடுப்பின் மீது வைத்து, கற்பனையான ஒரு தீக்குச்சியால் பற்றவைத்தேன்.
”சரி, அதனாலென்ன?” கேட்டாள், அவள்.
கற்பனையில் கொதித்துக்கொண்டிருந்த கற்பனையான பானைக்குள் கற்பனையாக நான் உப்பினைத் தூவி, கற்பனையான ஸ்பகேட்டியை ஒரு கைப்பிடியளவு எடுத்து பானைக்குள் போட்டுவிட்டு, கற்பனையான சமைப்பானின் நேரங்காட்டியை பன்னிரண்டு நிமிடங்களுக்கு எனச் சீரமைத்தேன்.
‘’அதனாலென்னவென்றால், என்னால் பேசமுடியாது. ஸ்பகேட்டி கெட்டியாகி ஒட்ட்டிக்கொள்ளும்.” என்றேன்.
அவள் பதிலெதுவும் சொல்லவில்லை.
“எனக்கு இதில் உண்மையாகவே வருத்தம் தான், ஆனால் ஸ்பகேட்டி சமைப்பதென்பது கவனமாகவும் நுட்பமாகவும் செய்யவேண்டிய ஒரு காரியம்.”
அந்தப் பெண் அமைதியாக இருந்தாள். என் கையிலிருந்த தொலைபேசி மீண்டும் உறையத் தொடங்கியது.
“அதனால் தான் சொல்கிறேன், நீங்கள் என்னை அப்புறமாகக் கூப்பிடமுடியுமா?” அவசர அவசரமாக நான் கேட்டேன்.
”ஏனென்றால், நீங்கள் ஸ்பகேட்டி சமையலில் இருக்கிறீர்கள், அப்படித்தானே?” என அவள் கேட்டாள்.
“ஹ்ஹூம், ஆமாம்.”
“ அதை நீங்கள் வேறு யாருக்காவது சமைக்கிறீர்களா? அல்லது நீங்கள் மட்டுமே சாப்பிடப் போகிறீர்களா?”
“நானேதான் சாப்பிடுவேன்,” என்றேன், நான்.
அவள் நீண்டதொரு பெருமூச்சு எடுத்துப் பின் மெல்ல மெல்ல வெளியேற்றினாள். ‘உங்களுக்கு இந்த விவரம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை; ஆனால், நான் உண்மையிலேயே பிரச்சினையில் இருக்கிறேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை.”
“உங்களுக்கு உதவமுடியாமலிருப்பதில் எனக்கு வருத்தம்தான்.” என்றேன், நான்.
“இதில் கொஞ்சம் பணமும் மாட்டிக்கொண்டிருக்கிறது.”
‘’அப்படியா?”
“ அவர் என்னிடம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவேண்டும். நான் கொடுத்திருக்கக்கூடாதுதான். ஆனால் கொடுக்கவேண்டியதாகிவிட்டது.”
நான் ஒரு நிமிடம் மவுனமாக இருந்தேன். என் சிந்தனைகள் ஸ்பகேட்டியையே சுற்றிவந்தன. ‘’எனக்கு வருத்தமாகத்தானிருக்கிறது. ஆனால், ஸ்பகேட்டி கொதித்துக்கொண்டிருக்கிறது. அதனால் ……”
அவள் வெற்றாகச் சிரித்தாள். ”குட்பை, உங்கள் ஸ்பகேட்டிக்கு எனது மகிழ்ச்சியான வாழ்த்தினைச் சொல்லுங்கள். அது சரியான பக்குவத்தில் வந்துவிடுமென நம்புகிறேன்.”
“பை” என்றேன், நான்.
தொலைபேசியை நான் துண்டித்துக் கீழே வைத்தபோது, தரையிலிருந்த ஒளிவட்டம் ஒன்று அல்லது இரண்டு அங்குலத்திற்கு நகர்ந்திருந்தது. நான் ஒளிவட்டத்துக்குள் மீண்டும் படுத்து, கூரையை வெறித்துப் பார்ப்பதைத் தொடர்ந்தேன்.
@
ஒருபோதுமே வேகாமல் நிரந்தரமாக முடிவற்றுக் கொதிக்கும் ஸ்பகேட்டியைப் பற்றி நினைப்பது துயரமான விஷயந்தான்.
அந்தப் பெண்ணுக்கு எதுவுமே தெரிவிக்காமலிருந்துவிட்டோமேயென்று, நான், இப்போது கொஞ்சம் வருத்தப்படுகிறேன். அதை நான் தெரிவித்திருக்கலாம்தான். நான் சொல்வது, அவளுடைய முன்னாள் தோழன் ஒரு வெற்றுவேட்டு – கலைத்திறனுள்ளவன் போன்ற பாவனையில் வாய்வீச்சு என்னவோ பெரிதுதான், ஆனால் யாருமே அவனை நம்பவில்லை. அவளிடம் உண்மையிலேயே பணத்தை உருவிப் பறித்துவிட்டது போலவே அவள் பேசினாள்; அது எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருக்கட்டுமே, ஒருவரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டுமில்லையா?
அப்புறம், அந்தப் பெண்ணுக்கு என்ன நிகழ்ந்திருக்குமோவென்று நான் நினைப்பதுண்டு – அதிலும் குறிப்பாக ஆவி பறக்கும் ஸ்பகேட்டி தட்டின் முன் அமரும்போதெல்லாம் இந்த நினைவு என் மனத்தில் வந்து குதிக்கிறது. அவள் தொலைபேசியை வைத்தபின், நான்கரைமணி நிழலில் கரைந்துபோய், நிரந்தரமாக மறைந்துவிட்டாளா? அந்தக் குற்றத்தில் எனக்கும் பங்கு இருக்கிறதா?
இருப்பினும், நீங்கள், என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த நேரத்தில் நான் எவர் விவகாரத்திலும் ஈடுபட்டுக்கொள்ள விரும்பவில்லை. அதனால்தான், நான் எனக்காக ஸ்பகேட்டியை, ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு படுத்துக் கொள்ளும் அளவுக்கான பெரிய பானையில் சமைத்துக்கொண்டேயிருந்தேன்.
@
இத்தாலிய வயல்களில் தரம் செமோலினா, தங்கநிறக் கோதுமை அசைந்துகொண்டிருக்கிறது.
1971 இல் இத்தாலியர்கள் உண்மையில் தனிமையைத்தான் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தார்களென அவர்களுக்குத் தெரியவந்தால், எவ்வளவு வியப்படைவார்களென்பதை நீங்கள் கற்பனைசெய்யமுடிகிறதா?
••••
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
ஸ்பகேட்டி Spaghetti – இத்தாலிய உணவு வகைகளில் ஒன்று
ஜெர்மன் ஷெப்பர்டு German Shepherd – அயல் நாட்டின நாய் வகைகளில் ஒன்று
பார்மிஜியானா – இத்தாலிய பாலாடைக்கட்டி
நெபோலெட்டனா – இத்தாலிய தக்காளி சுவைச்சாறு – Sauce
கார்ட்டோக்சியா – மசாலாப் பொருட்களைத் நீர்புகாத்தாளில் சுற்றிச் சமைக்கும் ஒரு இத்தாலியப் பக்குவம்
டட்டாமி – Tatami – வைக்கோலில் தயாரிக்கும் ஜப்பானியப் பாய்
தரம் செமோலினா – Durum Semolina – கோதுமை வகைகளில் ஒன்று
(((((((())))))))))))))
(இக்கதை 21.11. 2005 நியூயார்க்கர் இதழில் வெளியானது .)
இத்தமிழாக்கம் மலைகள் இணைய இதழ் எண் 102 நாள் 17.07.2016 இல் வெளியானது. 

Thursday, 21 July 2016

ஜப்பானியச் சிறுகதை - பச்சைநிறப் படுபயங்கரச் சிறுபிறவி - THE LITTLE GREEN MONSTER BY HARUKI MURAKAMI

பச்சை நிறப் படுபயங்கரச் சிறு பிறவி ( THE LITTLE GREEN MONSTER ) 

ஜப்பான் : ஹாருகி முரகாமி HARUKI MURAKAMI ஆங்கிலம் : ஜே ரூபின் JAY RUBIN 

தமிழில் : ச.ஆறுமுகம்


(முரகாமியின் தொடக்ககாலக் கதைகள் பலவும் மணவாழ்வில் பெண்ணின் தனிமை, காமம் மற்றும் அந்நியப்படுதலை ஆராய்வதாகவே அமைந்துள்ளன. அவற்றிலும் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாகவும் முரகாமியின் புனைவுத் திறன் சிறந்து மிளிர்கின்ற கதையாகவும் திகழ்கின்ற பச்சைநிறப் படுபயங்கரச் சிறு பிறவி வாசகனிடம் ஆழ்ந்த வாசிப்பினைக் கோருகிறது.)


வழக்கம்போல எனது கணவர் வேலைக்குக் கிளம்பிச் சென்றதும், எனக்கு வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை. ஜன்னல் அருகிலிருந்த நாற்காலியில் தனியாக உட்கார்ந்து திரைகளின் இடைவெளி வழியாகத் தோட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தேன். அப்படித் தோட்டத்தைப் பார்ப்பதற்கென எனக்கென்று காரணம் ஏதேனும் இருந்ததென்பதல்ல, அது. நான் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை, அவ்வளவுதான். அப்படி உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருந்தால் அப்போதோ அல்லது சிறிது கழிந்தபிறகோ, எதைப்பற்றியாவது சிந்தனை துளிர்த்து ஓடுமென்று நான் நம்பினேன். தோட்டத்திலிருந்த பலவற்றில் நான் அதிகம் கவனிப்பது ஓக் மரத்தைத்தான். அந்த மரம் எனக்கு மிகமிக விருப்பமானதாக இருந்தது. சிறுமியாக இருந்தபோது, நான்தான் அதனை நட்டு வளர்த்து, அது நாளும் பொழுதுமாக வளர்வதைக் கண்டுகளித்தேன். நான் அதனை எனது உயிர்த் தோழியாகவே கருதினேன். நான் அதனோடு எப்போதும் எனக்குள்ளாகவே பேசிக்கொள்வேன்.
அன்றும் அப்படித்தான் அதனோடு பேசிக்கொண்டிருந்திருப்பேனாக இருக்கலாம் – ஆனால், எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேனென்று எனக்கு நினைவில்லை. எவ்வளவு நேரமாக அப்படி உட்கார்ந்திருந்தேனென்பதும் நினைவில்லை. நான் தோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, காலம் எனது உணர்வுக்கப்பால் நழுவிச்சென்றுவிடுகிறது. அன்று, அது என் கண்ணில்படும் முன்பாகவே இருட்டிவிட்டது : நான் அங்கே, அப்படியே நெடுநேரமாக உட்கார்ந்துவிட்டேனென்றுதான் நினைக்கிறேன். பின்னர், திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. அது எங்கோ மிக, மிகத் தூரத்திலிருந்து வந்ததாகத் தோன்றியது. – மிகவும் வேடிக்கையான, உள்ளடங்கியதான மெல்ல உரசிக்கொள்வது போன்றதான ஒலிவகை. முதலில் அந்த ஒலி எனக்குள் தான் எங்கோ ஆழத்திலிருந்து வருவதாக நினைத்தேன் – என் உடம்பு எனக்குள்ளாகவே நூல் நூற்றுப் பின்னிப்பின்னிக் கட்டிக்கொள்ளும் இருண்ட வலைக்கூட்டுக்குள்ளிருந்து வரும் ஒரு எச்சரிக்கை. நான் மூச்சை அடக்கி உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டேன். ஆம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சிறிதுசிறிதாக, அந்த ஒலி என்னை நெருங்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் அது? எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அது எனது உடலைப் புரட்டிப்போட்டது.
மரத்தடி அருகில் தரைக்குள்ளிருந்து கனத்த பிசுபிசுப்பான திரவம் ஏதோ ஊற்றெடுத்துப் பொங்குவதுபோலத் தரை மேலெழும்பத் தொடங்கியது. மீண்டும் நான் மூச்சை அடக்கிக்கொண்டேன். பின்னர் தரைமேலாக உயர்ந்தெழுந்த மண் மெல்லப் பிளக்கவும், கூர்மையான ஒரு ஜோடி நகங்கள் வெளித்தெரியத் தொடங்கின. என் கண்கள் அவற்றையே குத்திட்டு நோக்க, என் கைகள் திருகி, மணிக்கட்டுகள் இறுகத் தொடங்கின. ஏதோ ஒன்று நிகழப்போகிறதென எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன். அது நிகழத் தொடங்கிவிட்டது. அந்த நகங்கள் மண்ணைக் கடினமாகப் பிராண்டப் பிராண்ட, அந்த இடம் ஒரு வளைப் பொந்தாகி, அதனுள்ளிருந்து நகர்ந்து மேலேறியது, பச்சைநிறத்தில் சிறியதாக ஒரு பயங்கரப் பிறவி.
அதன் உடல் முழுவதும் பளபளக்கும் பச்சைநிறச் செதில்கள் அடர்ந்து தோன்றின. துளைக்குள்ளிருந்து வெளியே வந்ததும் அதன் மேல் ஒட்டியிருந்த மண்துகள்கள் அனைத்தும் கீழே விழுமாறு உதறித்தீர்த்தது. அதன் நீளமான, வேடிக்கையாகத் தோன்றிய மூக்கின் பச்சை நிறம் மூக்குமுனையை நோக்கி அடர்ந்துகொண்டே சென்றது. அதன் முனை கூர்மையாகி சாட்டையின் நுனியைப்போல ஊசிமுனையாகத் தெரிய, அந்த மிருகத்தின் கண்களோ, ஒரு மனிதனின் கண்களே போலப் பெரிதாகத் தெரிந்தன. அந்தக் கண்களைப் பார்த்ததுமே என் உடம்பு முழுவதும் நடுங்கித் தீர்த்தது. அந்தக் கண்களில் உங்களுடையவற்றைப் போல, அல்லது என்னுடையவற்றைப் போலவே உணர்ச்சிகள் பளபளத்தன.
தயக்கம் ஏதுமின்றி, மெல்ல,மெல்ல, ஆனால், உறுதியாக, அந்தப் பயங்கரப் பிறவி என் வீட்டு முன்வாயிற்படிக்கு ஊர்ந்து வந்து, அதனுடைய மூக்கின் இளந்தசை நுனியால் கதவைத் தட்டத் தொடங்கியது. தொடர்ந்து தட்டும் வறட்சியான ஒலி வீடு முழுவதும் எதிரொலித்தது. நான், பின்னறைக்குச் சென்றுவிட்டால், அந்த மிருகம் என்னைக் கண்டுகொள்ளமுடியாதென நினைத்து, முன்பாதங்களால் பின்னறைக்கு நடந்தேன். என்னால் கத்திக் கூச்சலிட முடியவில்லை. அந்தப் பகுதியில் எங்கள் வீடு மட்டுமே தனியொரு வீடாக இருந்தது. மிகவும் பிந்திய இரவு வரையிலுங்கூட எனது கணவரால் வேலை முடிந்து வர இயலாது. என்னால் பின் கதவு வழியாக ஓடவும் முடியாது; ஏனென்றால் எங்கள் வீட்டுக்கு ஒரே ஒரு கதவு; அதுவும் அந்தக் கோரமான பச்சைப் படுபயங்கரப் பிறவி தட்டிக்கொண்டிருக்கிறதே அந்த ஒரே கதவுதான். கொஞ்ச நேரம் போனால், அந்த இழவு, அதுவாகவே விட்டுவிட்டுப் போய்விடுமென்ற ஒரே குருட்டு நம்பிக்கையில், நான் அங்கே இல்லாதது போன்ற பாவனையில் என்னால் முடிந்த அளவுக்கு மூச்சைப் பிடித்துக்கொண்டு சத்தமில்லாமல் இருந்தேன். அப்போதும் அது, விட்டுப் போகவில்லை, கதவினைத் தட்டுவதை விட்டுவிட்டு, அதன் மூக்கு, பூட்டினை அசைத்துக் `கலகலவென`ஒலியெழுப்பத் தொடங்கியது. பூட்டைத் திறப்பதில் அதற்கு எந்தச் சிரமமும் இருந்திருக்காதென்பது போலத்தான் தோன்றியது. அது மட்டுமல்லாமல் கதவு வேறு சிறிதாகப் பிளந்து திறந்தது. பிளவின் ஊடாக மூக்கினை நுழைத்த அது அப்படியே நின்றது. நிரம்ப நேரத்துக்கு அப்படியே, பாம்பு ஒன்று தலையைத் தூக்கி நிற்பது போல நின்று வீட்டின் நிலைமையைக் கணிக்க, அசையாமல் நின்றது. அது இப்படித்தான் நிகழுமென்று எனக்கு முன்பே தெரிந்திருந்தால் கதவு அருகிலேயே நின்று அதன் மூக்கை வெட்டித் தொலைத்திருப்பேனேயென்று எனக்குள்ளாகவே, நினைத்த நான் இப்படிச் சொல்லிக்கொண்டேன் : சமையலறையில் நல்லக் கூர்மையான கத்திகள் நிறைய இருக்கின்றனவே. அப்படியான எண்ணம் எனக்குள் ஏற்பட்டதோ இல்லையோ, அந்தப் படுபிறவி என் மனத்தைப் புரிந்துகொண்டது போல கதவு விளிம்பின் வழியாகப் புன்சிரிப்புடன் விரைந்து வந்தது. பின்னர், அது, திக்குத் திணறல் இல்லாமல், ஆனால் குறிப்பிட்ட சில வார்த்தைகளை மட்டும், அது கற்றுக்கொள்ள விரும்பியது போலத் திரும்பத் திரும்பக் கூறிப் பேசியது. அதனால் உனக்கு எந்த நன்மையும் எந்த நன்மையும் கிடைத்துவிடாதென்றது, அந்தப் படுபயங்கரப் பச்சைநிறச் சிறுபிறவி. என் மூக்கு ஒரு பல்லி வால் போன்றது. அது எப்போதுமே– இன்னும் வலுவும் நீளமுமாக, இன்னும் வலுவும் நீளமுமாக மீண்டும் வளர்கிறது. நீ என்னென்ன வேண்டுமென்று, வேண்டுமென்று நினைக்கிறாயோ, அதற்கு எதிர்ப்பதமாகத் தான் உனக்குக் கிடைக்கும். பின்னர், அதன் இரண்டு கண்களையும் மாயப் பம்பரங்களைப் போல நெடுநேரம் சுழற்றிக்கொண்டிருந்தது.
ஓ, இல்லை, அப்படி இருக்காதென நான் நினைத்தேன். மனிதர்களின் மன ஓட்டங்களை அது தெரிந்துகொள்ளமுடியுமா, என்ன? நான் என்ன நினைக்கிறேனென்பதை யாரொருவரும் தெரிந்துகொள்வதை, அதிலும் குறிப்பாக அந்த ஒருவர் இப்படியான கோர உருவமுள்ள படுபயங்கரச் சிறு பிறவியென்றால் முழுமையாக வெறுக்கிறேன். உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் எனக்கு வியர்த்து வழிந்தது. இந்த இழவு என்னை என்ன செய்யப் போகிறது? என்னைத் தின்றுவிடுமா? பூமியின் ஆழத்திற்கு இழுத்துச் சென்றுவிடுமா? நல்லவேளை, கண்கொண்டு பார்க்கவே முடியாத அளவுக்கு அது, அசிங்கமாக இல்லை. அந்த அளவில் நல்லதுதான். அதன் பச்சைச் செதில் உடம்பில் வெளிப்பக்கமாக இளஞ்சிவப்பில் நீட்டிக்கொண்டிருந்த மெலிந்து நீண்ட கை கால்களின் முடிவில் நகங்கள் நீளமாக இருந்தன. அவற்றைப் பார்க்கப் பார்க்க, மீண்டும் மீண்டுமாகப் பார்க்கும்போது அநேகமாக, மனதுக்குப் பிடிக்கிற மாதிரியாகவே இருந்தன. அந்தப் பிறவி எனக்கு எந்தவிதத் தீங்கும் இழைத்துவிடாதென்றும் எனக்குத் தெரியவந்தது.
அப்படியில்லைதான், என்றது அது, என்னிடம், தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு. அது நகரும்போது அதன் செதில்கள் விரிந்து ஒன்று மேல் ஒன்றாக விழுந்து – மேசை மேலிருக்கும் காபித் தம்ளர்களைத் தட்டிவிட்டால் ஒன்று மேலொன்றாக அடுக்கி விழுந்து ஒலிக்குமே அதுபோல ஒலித்தன. என்னவொரு பயங்கரமான எண்ணம், மேடம் : நானொன்றும் உங்களைத் தின்றுவிடமாட்டேன், இல்லையில்லை, கிடையவே கிடையாது. உங்களுக்கு நான் எந்தத் தீங்கும், எந்தத் தீங்கும், எந்தத் தீங்கும் நினைக்கவில்லை. ஆக, நான் நினைத்தது சரி : நான் நினைப்பதை, அது மிகச்சரியாகப் புரிந்துகொள்கிறது.
மேடம், மேடம், மேடம், உங்களுக்குத் தெரியவில்லையா? உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் காதலைக் கோரித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். மிக ஆழத்திலிருந்து, மிகமிக ஆழம், மிகமிக ஆழத்திலிருந்து. வழி முழுவதையும் நான் இம்மி, இம்மியாக நகர்ந்து நகர்ந்து, இங்கு வரையிலும், இங்கு வரையிலும் ஊர்ந்துவரவேண்டியிருந்தது. மகிழ்ச்சிதான், அது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, நான் தோண்டித் தோண்டித் தோண்டிக்கொண்டேயிருக்கவேண்டியிருந்தது. பாருங்கள், என் நகங்கள் எவ்வளவு மழுங்கிப்போய்விட்டன! நான் உங்களுக்கு ஏதேனும் தீங்கு, ஏதேனும் தீங்கு, ஏதேனும் தீங்கு நினைத்திருந்தால் இவ்வளவு தூரத்துக்குச் சிரமப்பட்டிருக்கமாட்டேன். நான் உங்களைக் காதலிக்கிறேன். இதற்கு மேலும் அந்த ஆழத்திற்குள், அந்த ஆழத்திற்குள் என்னால் தங்கியிருக்க முடியாத அளவுக்கு நான் உங்களைக் காதலிக்கிறேன். உங்களிடம் வருவதற்கான வழி முழுவதையும் நகர்ந்தே தீர்க்கவேண்டியிருந்தது, தீர்க்கவேண்டியிருந்தது. எல்லோரும் என்னைத் தடுத்து நிறுத்த முயற்சித்தார்கள்; ஆனால், என்னால் அதற்கு மேலும் தாங்கமுடியவில்லை. அதற்காக மேற்கொண்ட, மேற்கொண்ட அந்தத் துணிச்சலைத் தயவுசெய்து நினைத்துப் பாருங்கள். என்னை மாதிரி ஒரு பிறவி உங்கள் காதலைக் கோருவதென்பது முரட்டுத்தனம் மிகுந்த தகாதசெயலென்று, முரட்டுத்தனம் மிகுந்த தகாதசெயலென்று நீங்கள் நினைத்தால் என்னசெய்வது?
ஆனால், இது முரட்டுத்தனம் மிகுந்த தகாதசெயலேதானென்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். என்ன ஒரு முரட்டுத்தனமான சிறு பிறவி, நீயெல்லாம் எனது காதலைக் கோரி வருகிறாய்!
நான் இப்படி நினைத்ததுமே அந்தப் பயங்கரப்பிறவியின் முகத்தில் ஒரு துயரப் பார்வை படர்ந்து, அதன் உணர்வுகளை உடனடியாக வெளிக்காட்டுவது போல, அதன் செதில்கள் மெல்லிய கருஞ்சிவப்பு ஊதா நிறம் கொண்டன. அதனுடைய முழு உடலும் கூடச் சிறிது சுருங்கியதாகத் தோன்றியது. அப்படி என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும், அதையும்தான் பார்த்துவிடுவோமேயென்று நானும் முழங்கைகளை மார்பில் கட்டிக்கொண்டு கவனிக்கத் தொடங்கினேன். அதன் உணர்வுகள் மாறும்போதெல்லாம், இதுபோல ஏதாவது நிகழும்போல. காணச் சகிக்காத அதன் முரட்டு வெளியுடல் உள்ளுக்குள் புத்தம்புதிய புதினாமண மென்கோந்து உருண்டை போல மென்மையும் எளிதில் கரையும் தன்மையும் கொண்ட ஒரு இதயத்தை மூடிமறைத்திருக்கிறது போலும். அப்படியிருந்தால், நிச்சயம் நான் வென்றுவிடுவேன். முயற்சித்துப் பார்த்துவிடுவதென்றும் தீர்மானித்தேன். அருவருப்பான சிறுபிறவி, நீ, உனக்கே தெரியும், என் மனத்துக்குள் உச்சத்தின் உச்சக் குரலில் – கத்தினேன், அந்தக் கத்தலின் உரத்த சப்தத்தில் என் இதயமே அதிர்ந்து அலறிவிட்டது. நீ ஒரு அருவருப்பான சிறு பிறவி! செதில்களின் கருஞ்சிவப்பு ஊதா மேலும் மேலும் கறுத்து, என் மனம் உமிழ்ந்த அத்தனை வெறுப்பினையும் அந்தச் சனியனின் கண்கள் உறிஞ்சி, ஊதிப்பருப்பது போலப் பெரிதாகத் தொடங்கின. அவை நன்கு முற்றிய அத்தியின் பச்சைப்பசேல் காய்களே போல அந்தப் பிறவியின் முகத்தில் துருத்தித் தெரிய, அவற்றிலிருந்து சிவப்புச் சாறாகக் கண்ணீர் வழிந்து தரையில் விழுந்து சிதறியது.
இனிமேலும் நான் அந்தப் பயங்கரப் பிறவிக்குப் பயந்துகொண்டிருக்கப் போவதில்லை. அதை எப்படியெப்படிச் சித்திரவதை செய்யவேண்டுமென்று என் மனத்துக்குள்ளாகவே எல்லாவிதக் குரூரச் சித்திரங்களையும் தீட்டிப் பார்த்தேன். அதை உறுதியான ஒரு நாற்காலியில் கனத்த கம்பிகளைக் கொண்டு கட்டிவைத்து ஊசிமுனைக் குறடு ஒன்றால், அதன் செதில்களை ஒவ்வொன்றாக, வேரோடு பிய்த்து எறியத் தொடங்கினேன். கூர்மையான கத்தி ஒன்றின் முனையைச் சூடாக்கிப் பழுக்கக் காய்ச்சி, அதன் மெல்லிய கைகால்களின் சதைப்பகுதிகளில் அழுத்தித் தேய்த்து ஆழமான கோடுகளை இழுத்தேன். உப்பிப் பருத்துத் துருத்திக்கொண்டிருந்த அதன் அத்திக்காய் கண்களில் பற்றவைக்கும் சூட்டிணைப்புக்கோலால் பலமுறை மீண்டும் மீண்டுமாகக் குத்தினேன். புதிய புதிய வன்கொடுமை முறைகளை நான் கற்பனைசெய்யச் செய்ய, அவை அனைத்தும் உண்மையிலேயே அந்தப் பயங்கர உருப் பிறவிக்கு நிகழ்த்தப்பட்டது போல அது, புரள்வதும் நெளிவதும் வேதனையில் வாய்பிளப்பதுமாக இருந்தது. அது, அதனுடைய வண்ணக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிய அழுதது. அதன் வாயிலிருந்து இறுகிய பசை போன்ற திரவம் ஒழுகியது. அதன் காதுகளிலிருந்து சாம்பல்நிறப் புகை கிளம்ப, அப்புகையிலிருந்து ரோஜாக்களின் நறுமணம் பரந்தது. அதன் கண்கள் சிறிதுகூட நடுக்கமில்லாதப் பழிசுமத்தும் பார்வையை என்மீது வீசிக்கொண்டேயிருந்தன. தயவுசெய்யுங்கள் மேடம், ஓ, தயவுசெய்யுங்கள், நான் இரங்கிக்கேட்கிறேன், தயவுசெய்து அந்தமாதிரி பயங்கர எண்ணங்களை, அப்படி எண்ணிப்பார்க்காதீர்கள்! அது அலறியது. உங்களுக்குக் கெடுதல் செய்யும் எந்த எண்ணமும் என்னிடம் இல்லை. உங்களை ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன். நான் உங்கள் மீது கொள்வது காதல், காதல் தவிர வேறு ஏதுமில்லை. ஆனால் நான் அதற்குக் காதுகொடுப்பதில்லையென்றே தீர்மானமாக இருந்தேன். என் மனத்துக்குள் நான் சொல்லிக்கொண்டேன், கேலி, கிண்டலுக்கு இடம் கொடுக்காதே! நீ என் தோட்டத்துக்குள்ளிருந்து வெளிவந்திருக்கிறாய். என் அனுமதியின்றி பூட்டிய கதவைத் திறந்து என் வீட்டுக்குள்ளேயே வந்திருக்கிறாய். நான் உன்னை ஒருபோதும் `இங்கே வா` என அழைத்ததே கிடையாது. நான் விரும்பும் எதை வேண்டுமானாலும் நினைத்துப் பார்ப்பதற்கு எனக்கு உரிமை உண்டு. நான் அதையே குறிப்பாகத் தொடர்ந்து செய்யவும் – அந்தப் பிறவி மீது இன்னும் அதிபயங்கரக் கொடூரங்களை நினைத்துப் பார்க்கத்தொடங்கினேன். நடமாடும் ஒரு ஜீவனை உயிரோடு வதைத்து அதை வலியில் துடிதுடிக்கச்செய்வதற்கென்று இருக்கின்ற எந்த வழிமுறையும் விட்டுப்போகாமல் என் நினைவுக்கு வந்த கருவிகள், எந்திரங்கள் அனைத்தையும் கொண்டு அந்தப்பிறவியின் உடலை வெட்டித் தசையைத் துண்டுதுண்டுகளாகச் சிதைத்தேன். அப்புறம் பார், படுபயங்கரச் சிறுபிறவியே, பெண் என்பவள் எப்படிப்பட்டவள் என்ற சிந்தனையே உனக்கு அற்றுப்போய்விடுகிறதா, இல்லையா, பார். உனக்கு நான் என்னென்ன செய்யமுடியுமென்று நான் நினைக்கின்ற காரியங்களை எண்ணிக்கையிடத் தொடங்கினால் அதற்கு முடிவே இருக்காது, பார்த்துக்கொள். ஆனால், அந்தப் படுபயங்கரப் பிறவியின் வெளிவட்டம் நிறம் மங்கி வெளிறத் தொடங்கி, அதனுடைய வலுவான பச்சை மூக்கு கூட ஒரு புழுவைவிடப் பெரியதாயில்லையென்னுமளவுக்குச் சிறுத்துப் போனது. தரையில் துடித்து நெளிந்துகொண்டிருந்த அந்தப் படுபயங்கரப் பிறவி வாயைத் திறந்து என்னிடம் பேச முயற்சித்து, ஏதோ ஆதிகாலத்துப் பரம்பரை ஞானத்தின் மிக முக்கியமான அறிவுத்துளி ஒன்றை என்னிடம் தெரிவிக்க மறந்துவிட்டது போலவும் அதைத் தன்னுடைய இறுதிச்செய்தியாகத் தெரிவித்தேயாகவேண்டுமென விரும்பி, அதன் வாயிதழ்களைத் திறந்துவிடப் பெரும் போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தது. அப்போராட்டம் நிகழ்ந்து முடியும் முன்பாகவே, அதன் வாய் வலிநிறைந்த அமைதிநிலையொன்றினை அடைந்து, வெகு விரைவிலேயே பார்வை இலக்கினை விட்டும், அகன்று, அகன்று பின் மறைந்துபோனது. அந்தப் படுபயங்கரப்பிறவி இப்போது மாலைக் கருக்கலின் வெளிறிப்போன நிழலாகவே விழுந்து கிடந்தது. அந்த மிச்சம் மீதியில் காற்றில் மிதந்து தெரிந்தது, துயரம் தோய்ந்து, வீங்கிப் பருத்த, இரு கண்கள் மட்டுமே. அது, அந்தப் பிறவிக்கு எந்தப் பயனையும் அளித்துவிடாதென நான் நினைத்தேன். நீ விரும்பிய அளவுக்கு வேண்டுமானால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமே தவிர, உன்னால் எதுவொன்றையும் சொல்லிவிடமுடியாது. உன்னால் எந்தவொரு செயலையும் செய்துவிடமுடியாது. உன் வாழ்வு அவ்வளவுதான், முடிந்துவிட்டது, ஒரேயடியாக முடிக்கப்பட்டுவிட்டது. சிறிது நேரத்திலேயே அந்தக் கண்களும் வெறுமைக்குள் கரைய, அறை முழுவதும் இரவின் இருள் நிறைந்தது.

மலைகள் இணைய இதழ் 101, ஜூலை 2, 2016 இல் வெளியானது.

Saturday, 16 January 2016

ஜப்பானியச் சிறுகதை - அவள் நகரம், அவள் ஆடுகள் - ஹாருகி முரகாமி Haruki Murakami

  


  
  அவள் நகரம், அவள் ஆடுகள்   Her town, her sheep
 ஜப்பான் : ஹாருகி முரகாமி haruki murakami 
ஆங்கிலம் : கிக்கி 
தமிழாக்கம் : ச. ஆறுமுகம்




அவள் நகரம், அவள் ஆடுகள்
ஜப்பான் : ஹாருகி முரகாமி
ஆங்கிலம் : கிக்கி
தமிழாக்கம் : ச. ஆறுமுகம்
அந்த வருடத்download (10)தின் முதல் பனி, வடக்கு ஜப்பானின் சப்போரா நகரத் தெருக்களில் விழத்தொடங்கியது. அது மழையாகத்தான் ஆரம்பித்தது. பின்னர் பனியாக மாறியது. அது மீண்டும் மழையாக மாறுவதற்கு நீண்ட நேரமொன்றும் ஆகவில்லை. அது எப்படி இருந்தாலும் சப்போராவின் தெருக்களில் பனி ஒன்றும் கிளர்ச்சியூட்டுவதாக இருப்பதில்லை. ஒரு முக்கியமற்ற உறவினராகத்தான் அது வரவேற்கப்படுகிறது. அன்று வெள்ளிக்கிழமை. அக்டோபர், 23.
நாரிட்டா வானூர்தி நிலையத்திலிருந்து 747-ல் நான் டோக்கியோவுக்குக் கிளம்பியபோது, டி-சர்ட் மட்டுமே அணிந்திருந்தேன். என்னுடைய வாக்மென்னில் 90நிமிட ஒலிச்சுருளைக் கேட்டு முடிக்கும் முன்பாகவே பனிபெய்யத் தொடங்கியது.
‘’ அதில் புதிதாக எதுவும் இல்லை. வழக்கம் போலத்தான் தெரிகிறது.’’ என்று சொன்ன எனது நண்பன் ‘’ பொதுவாக, வருடத்தின் முதல் பனி இங்கு இப்போதுதான் பெய்கிறது, பிறகு குளிராக மாறுகிறது.’’ என்றான்.
‘’உண்மையிலேயே குளிர்கிறது, இல்லையா, என்ன?’’
‘’கொஞ்சமாக இல்லை. நன்றாக, நன்றாகவே குளிர்கிறது.’’
நாங்கள் மேற்கு ஜப்பானின் கோப் நகரத்தின் அமைதியான ஒரு சிறிய காலனிப்பகுதியில் வளர்ந்தவர்கள். எங்கள் வீடுகளைப் பிரித்த இடைவெளி ஒரு ஐம்பது மீட்டர் இருக்கும், அவ்வளவுதான். உயர்நிலைப் பள்ளியின் இளநிலை, முதுநிலை வகுப்புகளில் நாங்கள் ஒன்றாகவே படித்தோம். பள்ளிச் சுற்றுலாக்களுக்கும், அவரவர் தோழிச் சந்திப்புகளுக்கும் இணைந்தே சென்றோம். அதிகமாகக் குடித்துவிட்டு, வாடகைக்காரில் ஒருமுறை, கதவுதிறந்துகொண்டபோது இருவரும் ஒன்றாக உருண்டு விழுந்திருக்கிறோம். உயர்நிலைப்பள்ளிப் படிப்பில் வெற்றி பெற்றபின் நாங்கள் வேறு வேறு கல்லூரிகளுக்குச் சென்றுவிட்டோம். அவன் ஹொக்கைடோவுக்குச் சென்றான். நான் டோக்கியோவுக்குச் சென்றேன். டோக்கியோவிலுள்ள என் வகுப்புத் தோழிகளில் ஒருவரை மணந்துகொண்டேன். அவன், அவனுடைய வகுப்புத்தோழிகளில் ஹொக்கைடோவின் ஒதாரு நகரத்திலிருந்த ஒருவரைத் திருமணம் செய்தான். அதது, அப்படித்தான் வாழ்க்கையில் நடந்துவிடுகிறது. நாங்கள், காற்றில் வெடித்துச் சிதறிய விதைகளானோம்.
அவன் டோக்கியோவில் கல்லூரிப்படிப்பு படித்து, ஹொக்கைடோவுக்கு நான் சென்றிருந்தால், எங்கள் வாழ்க்கை முழுவதுமாக மாறிப்போயிருந்திருக்கும். ஒருவேளை நான் சுற்றுலா முகமைக்காக உலகம் முழுதும் சுற்றித் திரிந்துகொண்டிருப்பேனாக இருக்கலாம். அவன் டோக்கியோவில் ஒரு எழுத்தாளராக இருந்திருக்கலாம். ஆனால், விதி என்னை நாவல்களை எழுதுமாறு கொண்டுசெலுத்த, அவன் பாதை சுற்றுலா முகமைக்கு இட்டுச்சென்றது. அதோடு, இன்றுவரை எல்லாநாளும் ஒளிமயம் தான்.
என் நண்பனுக்கு ஆறுவயதில் ஹொகுதோ என்ற மகன் இருக்கிறான். மகனின் மூன்று படங்களை எப்போதும் அவன் பணப்பைக்குள் சுமந்து திரிவான். – உயிர்க்காட்சிச் சாலையில் ஆடுகளோடு விளையாடும் ஹொகுதோ; வாடைப் பருவத்தின் சிச்சிகோசன் குழந்தைகள் விழாவுக்கான உடைகள் அணிந்திருக்கும் ஹொகுதோ; விளையாட்டு மைதானத்தில் ராக்கெட்டில் சவாரி செய்யும் ஹொகுதோ. நான் ஒவ்வொரு படத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக, மூன்றுமுறை உற்றுப் பார்த்துவிட்டு அவனிடம் திருப்பிக்கொடுத்தேன். நான் என்னுடைய பீரை ஒரு கையிலெடுத்துக்கொண்டு, ஹொக்கைடோவின் அற்புத நற்சுவைகளில் ஒன்றான பனிக்கட்டியாகக் குளிர்ந்துவிட்ட `ரூய்ப்` வறுவலில் கொஞ்சத்தை அள்ளினேன். (ரூய்ப் – மிகப்பொடியாக அரிந்த சல்மான் மீன், மிளகுத்தண்ணீர், சோயாப்பாகு கொண்டு சமைக்கப்படும் ஒரு வறுவல்.)
‘’ அது சரி, `பி` எப்படி இருக்கிறான்.’’ என என்னிடம் கேட்டான்.
‘’ நிரம்பவும் நன்றாக.’’ என்றேன், நான். ‘’ இப்பத்தான், ஒருநாள், அவனைத் தெருவில் கண்டதும் பிடித்துக் கொண்டேன். அவன் விவாக ரத்து பெற்றுவிட்டான். இப்போது வேறொரு இளைய பெண்ணோடு வசிக்கிறான்.’’
‘’ `க்யூ` என்னவானான்?’’
‘’அவன் ஒரு விளம்பர முகமையில் பணிபுரிகிறான். சும்மா, பயங்கரமாக எழுதிக் குவிக்கிறான்.’’
‘’ அது ஒன்றும் எனக்கு ஆச்சரியமல்ல……’’
இப்படியாக. இப்படியாக, இதுபோல இன்னும்பல.
பில்லுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு, விடுதியிலிருந்து கிளம்பினோம். மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருந்தது.
‘’சொல்லு, சமீபத்தில் கோபுக்குப் போயிருந்தாயா?’’
‘’ப்ச், இல்லை.’’ என்றான் தலையை அசைத்துக்கொண்டு. ‘’அது வேறு நிரம்பத் தூரம். உன் கதை எப்படி?’’
‘’நானா, நானுந்தான் இல்லை. மீண்டும் அங்கே திரும்பிப் போக உண்மையில், பெரிய அளவில் ஆசை ஒன்றும் இல்லை.’’
‘’ஹேய்.’’
‘’ வருடக் கணக்காகிவிட்டது. காலனி உண்மையிலேயே நிரம்பவும் மாறியிருக்குமென்று நினைக்கிறேன்’’
சப்போராவின் தெருக்களில் மேலும் பத்து நிமிடங்களே நடந்தோம். அதற்குள் பேச வேண்டிய விஷயங்கள் தீர்ந்துபோய்விட்டன. நான் என்னுடைய விடுதிக்குத் திரும்பினேன். அவன் அவனுடைய சிறிய அடுக்ககத்துக்குச் சென்றான்.
‘’ அந்நியன் மாதிரி இருந்துவிடாதே. உடம்பைப் பார்த்துக்கொள். பத்திரம்.’’
‘’நீயுந்தான்.’’
நாளை, நாங்கள் மீண்டும் 500 கி.மீ தூரம் பிரிக்கப்பட்டுவிடுவோமென்ற மாற்றத்தின் ஒலி திடீரென்று வலுத்து, உறைத்தது. இன்னும் ஒருசில நாட்களில் நாங்கள் மீண்டும் வேறுவேறு தெருக்களில் நடந்து கொண்டிருப்போம். எங்கள் சலிப்புமிக்க வழக்கமான பணிகளில் போய் விழுவோம். எலிப்பந்தயத்தின் போட்டியாளர்களாக எந்த இலக்குமற்று மேல் நோக்கிய தீராத தவிப்பில் தொடரப்போகிறோம்.
என் விடுதியறைக்கு வந்ததும் தொலைக்காட்சிப்பெட்டியைத் தட்டி உள்ளூர் பொதுச் சேவை நிகழ்ச்சி ஒன்றைக் கவனிக்கத் தொடங்கினேன். காலணிகளைக் கழற்றாமலேயே படுக்கை மீது ஏறி உட்கார்ந்து, அறைக்குப் பரிமாறப்பட்ட பீரையும் வாட்டிய சல்மான் பொதியப்பத்தையும் போட்டுத்தாக்கத் தொடங்கினேன். ஆழ்மனமின்றிக் கண்கள் மட்டும் திரையை நோக்கிக்கொண்டிருந்தன.
திரையின் நடுவில் இருண்ட நீலநிறத்தில் உடையணிந்த ஒரு இளைய பெண் மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தாள். ஒரு மாமிச உண்ணியைப்போலப் புகைப்படக் கருவி மிகுந்த பொறுமையுடன் அவளை மட்டுமே நோக்கிக்கொண்டிருந்தது. அது அவளது குறிப்பிட்ட பிம்பத்துக்குத் தக்கவாறு அசைவின்றி இருத்தப்பட்டிருந்தது. புகைப்படக் கருவியின் கோணம் எந்தப்பக்கத்துக்கும் மாறவில்லை. கோடார்டு படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன்,
‘’ நான், ஆர் நகர உள்ளாட்சியின் விளம்பரப்பிரிவில் பணிபுரிகிறேன்.’’ என்றாள் அந்தப்பெண். அவள் பேச்சில் உள்ளூர் உச்சரிப்பு இலேசாகத் தலைகாட்டியது. அவள் குரலில் சிறிதாகப் பிசிறு தட்டியது. அவள் சிறிது உணர்ச்சி வயப்பட்டதால் அப்படி இருக்கலாம். ‘’ எங்கள் ஆர் நகரம், சுமார் 7500க்குள் மட்டுமே மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நகரம். அந்தக் குட்டிநகரிலிருந்து புகழ்பெற்ற நபர்கள் யாருமே இல்லை. அதனால் உங்களில் யாருமே எங்கள் நகரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்க முடியாதென்றே நினைக்கிறேன்.’’
இது நிரம்பவும் அநியாயமென்று எனக்குத் தோன்றுகிறது.
‘’ எங்கள் முக்கியத் தொழில் விவசாயம், பால்பண்ணை, கால்நடை வளர்ப்பு. நெல்தான் எங்கள் முக்கியப் பயிராக இருந்தது. ஆனால் பார்லி, கோதுமை, பெருநகரங்களுக்கான காய்கறிகள் என ஒரு பெரிய மாற்றத்தை அரசு மானியக்கொள்கைகள் அண்மையில் வலிந்து திணித்துவிட்டன. நகரின் வெளிப்புறத்தில் நூறு குதிரைகள், நூறு செம்மறியாடுகள் எனத் தலைக்கணக்குக்கு இருநூறு கால்நடைகளுடன் மேய்ச்சல் வெளியும் இருக்கிறது. இப்போது கால்நடை இனப்பெருக்கம் தொடர்ச்சியாகப் பல்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் கால்நடை உற்பத்தி மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கிறோம்.
உண்மையிலேயே அந்தப்பெண் அழகாயிருப்பதாக, நான் விவரித்துக் கூறமாட்டேன். அவளுக்கு இருபது வயதிருக்கலாம். உலோகச் சட்டமிட்ட கண்ணாடி அணிந்திருந்தாள். அவள் பழுதான ஒரு குளிர்பதனப் பெட்டி போலச் சிரித்தாள். இருந்தாலும் அவள் அற்புதமானவள் என நான் நினைத்தேன். கோடார்டு-பாணித் தொழில்நுட்பத்தில் அந்தப் புகைப்படக்கருவி அவளின் ஆகச்சிறந்த உருவத்தன்மைகளைப் படம்பிடித்துவிட்டது. அதோடு, அவளை இயலுகிற அளவில் அதிகபட்ச வெளிச்சத்தில் காட்டி அந்தச் சிறப்புத் தன்மைகளைத் தொடர்ந்து ஒளிவிடுமாறு காட்டியது. அந்தப் புகைப்படக் கருவியின் முன் நம்மில் யாராவது ஒரு பத்து நிமிடங்கள் பொறுமையாக நிற்க முடிந்தால் நாமும் அதைப்போல அற்புதமாகத் தோற்றமளிக்க முடியும். அப்படித்தான் நான் அதைப் பார்த்தேன்.
‘’ பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் எங்கள் சிறுநகருக்கருகில் ஓடும் `ஆர்` நதியில் தங்கத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் நாங்கள் சிறிய ஒரு `தங்கத்துகள் ஏற்ற`த்தைக் கண்டோம். ஆனால், மலையில் எண்ணற்ற பாழுங் குடிசைகள், பாதைகளை உண்டாக்கிவிட்டு, தங்கத்துகள் விரைவிலேயே காணாமல் போய்விட்டது. இது உண்மையிலேயே பெரிய துயரம் தான்.’’
வாட்டிய சல்மான் பொதியப்பத்தின் கடைசிக் கடியை என் வாய்க்குள் திணித்து அரைத்து, கடைசி மிடறு பீர்கொண்டு விழுங்கி உள்ளே தள்ளினேன்.
‘’நகரம்… ம்ம்….நகரத்தின் மக்கள்தொகை ஒருசில வருடங்களுக்கு முன் உச்சத்துக்குப் போய்ப் பத்தாயிரத்தைத் தொட்டது. இருந்தாலும் இப்போது சமீபமாக விவசாயத்தைக் கைவிடும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பிரச்னை. எங்கள் இளைஞர்கள் ஊரைவிட்டுத் தப்பித்துப் பெருநகரங்களுக்குச் செல்கிறார்கள். என் வகுப்புத் தோழர்களில் பாதிப்பேருக்கு மேல் ஏற்கெனவேயே போய்விட்டனர். ஆனால், அங்கேயே இருப்பதென முடிவெடுத்து விட்டவர்கள் எங்கள் ஊருக்காக அவர்களால் இயன்றதைச் செய்கிறார்கள். அதுவே பெரிதாக இருக்கிறது.’’
அவள், அந்தப் புகைப்படக்கருவி என்னவோ எதிர்காலத்தைக் கணித்துக்கூறும் மாயக்கண்ணாடி என்பதுபோல அதையே வெறித்துக்கொண்டிருந்தாள். அவள் என்னை நேரடியாக வெறிப்பதாக எனக்குத் தோன்றியது. குளிர் பெட்டியிலிருந்து இன்னொரு பீரை எடுத்து, அதன் மூடியை இழுத்து, ஒரே மூச்சில் பெருமளவு குடித்தேன்.
அந்தப் பெண்ணின் நகரம்.
அவளின் சிறுநகரைக் கற்பனை செய்வதில் எனக்கு ஏதும் பெரியளவு இடர்பாடு இல்லை. ஒரு நாளைக்கு எட்டு முறை மட்டுமே தொடர்வண்டி நிற்கும் இத்தனூண்டு நிலையம் ஒன்று. நிலையத்தின் காத்திருப்போர் அறைக்குள் காற்றை வெதுவெதுப்பாக்க ஒரு சிறிய சூடேற்றி. பேருந்துகள் வந்து மக்களை ஏற்றிச் செல்கிற, வேறெந்தப் பயனுமற்ற ஒரு சிறு சுற்றுவட்டப் பகுதி. பாதிக்கு மேலும் அழிந்து, சரியாகத் தெரியாமலிருக்கும் நகர வழிகாட்டுவரைபடப் பலகை ஒன்று. பொன்மலர்ப் பாத்தி ஒன்று. காட்டு அசோக மரங்களின் வரிசை ஒன்று. வாழ்வதில் களைப்புற்ற நாட்டுரக வெள்ளை நாய் ஒன்று. பள்ளிச் சீருடைகள் மற்றும் தலைவலி நிவாரணி விளம்பரங்கள். ஜப்பானிய இராணுவப் பிரிவுகளுக்கான ஆள் சேர்ப்புத் தேவை விளம்பரம் ஒன்று. விதவிதமான அனைத்து ரகப் பொருட்கள் விற்கும் மூன்று மாடிப் பல்வகை அங்காடி ஒன்று. ஒரு சிறிய பயண ஏற்பாட்டு முகமை. ஒரு விவசாயக் கூட்டுறவு சங்கம், வனத்துறை நிலையம் ஒன்று, கால்நடை பராமரிப்புக் கட்டிடம் ஒன்று. வானத்தை நோக்கித் தனியாக நிமிர்ந்து நிற்கும் சாம்பல்நிற ஒற்றைப் புகைபோக்கியுடனான, நகரத்தின் பொதுக் குளியலறை. முக்கியத் தெருக்கள் இடைவெட்டும் முன்பாகவே இடதுபுறம் திரும்பி, இரண்டு கட்டிடங்கள் தாண்டியதும் அவள் பணிபுரியும் நகர அரங்கக் கட்டிடம். அங்கே மக்கள் தொடர்புப் பிரிவில் அலுவலக மேசைமுன் அவள் அமர்ந்திருப்பாள். ஆமாம். நிச்சயமாக அது ஒரு சலிப்பூட்டும் நகரம் தான்.வருடத்தில் பாதியும் பனிதான் மூடியிருக்கும். அவள் அலுவலக மேசைமுன் அமர்ந்து அவளுடைய கோப்புகளை எழுதிக்கொண்டிருப்பாள்:
‘’ நாங்கள் வெகு விரைவிலேயே ஆடுகளுக்கான கிருமிநீக்க மருந்து விநியோகிக்க இருக்கிறோம். தேவைப்படுபவர்கள், உரிய படிவங்களை நிரப்பி, உடனேயே அலுவலகத்தில் தாக்கல் செய்வீர்.’’ சப்போரா விடுதியில் என்னுடைய சிறிய அறைக்கு மீண்டு வந்த நான், அந்தப் பெண்ணின் வாழ்க்கையோடு எனக்கும் தொடர்பு இருப்பதைத் திடீரென்று கண்டுணர்ந்தேன். அவளின் இருத்தலை என்னோடு பொருத்திப் பார்த்தேன். பெரும்பகுதி ஒத்திருந்தாலும் ஏதோ ஒன்று இடறுகிறது. எனக்குச் சரியாகப் பொருந்தாத ஆடையைக் கடன் வாங்கி அணிந்திருப்பதுபோல ஒரு உணர்வு. நான் இயல்பான இருப்பமைதி இல்லாததாக உணர்கிறேன். என் கால்கள் கட்டப்பட்டுள்ளன. முனை மழுங்கிய கைக்கோடாரி போன்ற ஒரு கத்தியால் அந்தக் கயிற்றை அறுப்பது குறித்து நினைக்கிறேன். அப்படி அறுத்துவிட்டால், நான் எப்படித் திரும்பி வருவேன்? அந்த நினைப்பு என்னைக் குலைக்கிறது. எப்படியானாலும் நான் அந்தக் கட்டை அறுத்தேயாகவேண்டும். அதிகமாக பீர் குடித்துவிட்டேன், அதனால் இப்படித் தோன்றலாம். பனியும் அந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் அவ்வளவுதான். மெய்ம்மையின் இருண்ட சிறகுகளுக்கடியில் மீண்டும் நழுவி விழுந்தேன். என் நகரம். அவள் ஆடுகள்.
இப்போது அவளுடைய ஆடுகளைப் புதிய மருந்தால் கிருமிநீக்கம் செய்ய, அவள் தயார்படுத்த வேண்டும். நானுந்தான். குளிர்காலத்துக்காக என் ஆடுகளைத் தயார்படுத்த வேண்டும். தீவனம் சேகரிக்கவேண்டும். மண்ணெண்ணெய்க் கிடங்கினை நிரப்ப வேண்டும். அந்தச் சாளரம் பழுதுபார்க்க வேண்டும். குளிர்காலம் பக்கத்து மூலைக்கு வந்தே விட்டது.
‘’ இதுதான் என் நகரம்,’’ தொலைக்காட்சியில் அந்தப்பெண் தொடர்ந்துகொண்டிருந்தாள். ‘’ இது ஒன்றும் ஆர்வமூட்டுவதாக இல்லை ஆனாலும், என் சொந்த ஊர். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டுமானால் எங்கள் ஊருக்கு ஒரு வருகை புரியுங்கள். உங்களுக்கு, எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் நாங்கள் அளிக்கிறோம்.’’
பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சும்மாக் கண்ணிமைப்பதுபோல் அவள் திரையிலிருந்தும் மறைந்துவிட்டாள். நான் அதை மூடிவிட்டு, மீதியிருந்த என் பீரைக் குடித்து முடித்தேன். அவள் ஊருக்குச் சென்று வருவதைப்பற்றி நினைக்கத்தொடங்கினேன். அவள் எனக்கு உதவலாம். ஆனால், அப்படிச் செல்வதைப்பற்றி நினைக்காமலே இருந்திருக்கலாம். அதுபோல எத்தனையோ விஷயங்களைத் தூக்கித் தூர எறிந்திருக்கிறேன், நான். வெளியே இன்னும் பனி பெய்துகொண்டிருக்கிறது. ஒரு நூறு ஆடுகள், இருட்டுக்குள் கண்களை மூடிக்கொண்டன.
*******




மலைகள் இணைய இதழ், ஜனவரி 03, 2013 இல் வெளியானது. 

மக்கள் புதுமுரசு (ஏப்ரல் 2013) தமிழ்ப் புத்தாண்டு இதழிலும் வெளியானது.








Thursday, 14 January 2016

ஜப்பானியச் சிறுகதை - தோள்வார்க்காற்சட்டை (Lederhosen) by Haruki Murakami

தோள்வார்க்காற்சட்டை (Lederhosen) 

ஜப்பான் : ஹாருகி முரகாமி Haruki Murakami 

ஆங்கிலம் : ஆல்ஃப்ரெட் பர்ன்பாம் 

தமிழில் ச.ஆறுமுகம்  

download (23)








‘’ அம்மா, அப்பாவைத் தள்ளிவைத்துவிட்டாள்.’’ என் மனைவியின் தோழி ஒருத்தி ஒருநாள் சொல்லிக்கொண்டிருந்தாள், ‘’ எல்லாம் ஒரு ஜோடி அரைக்காற்சட்டைக்காக.’’
‘’ ஒரு ஜோடி அரைக்காற்சட்டை? ’’ நான் கேட்டேன்.
‘’ இது வினோதமாக இருக்கிறதென்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அது ஒரு வினோதமான கதைதான்.’’ என்கிறாள், அவள்.
அவள், நல்ல வளர்த்தியும் பருமனுமான ஒரு பெண்; உயரமும் உடற்கட்டும் அநேகமாக என்னுடையதைப் போலவேதான். அவள் மின்னிசைக் கருவி இசைக்கக் கற்றுக்கொடுக்கிறாள், ஆனால் அவள் தன்னுடைய வேலையில்லா நேரத்தை நீச்சலுக்கும் பனிச்சறுக்குக்கும் வரிப்பந்துக்குமெனப் பிரித்துக்கொள்கிறாள். அதனாலேயே அவள் எப்போதும் கட்டான உடலும் வெயிலில் கன்றிய மேனி நிறமுமாக இருக்கிறாள். அவளை ஒரு விளையாட்டு வெறியள் என்றுதான் சொல்லவேண்டும். ஒருநாள் போலில்லாமல், மடக்கிமடக்கிப் பன்முறைக் கரைதொடும் நீச்சலுக்காக உள்ளூர் நீச்சல் குளத்துக்குச் செல்லும் முன் காலையில் ஒரு ஓட்டப் பயிற்சி முடித்துவிடுகிறாள். பின்னர் பிற்பகல் இரண்டு அல்லது மூன்று மணிக்கு வரிப்பந்து; அதைத் தொடர்ந்து உயிர்வளி நாட்டப் பயிற்சிகள் (aerobics). இப்போதும் என்னுடைய விளையாட்டு மற்றும் தடகளப் பயிற்சிகள் எனக்குப் பிடித்தமானவைதாம்; ஆனால், அவளுடையதற்குப் பக்கத்தில்கூட நெருங்க முடியாது.
நான் அவளைத் தீவிர வன்பிடிப்பு அல்லது கருத்து வெறிகொண்டவளென்று அர்த்தப்படுத்தவில்லை. முற்றிலும் மாறாக, அவள் உண்மையிலேயே ஒதுங்கிச்செல்லும் போக்குடையவள். எவரொருவர் மீதும் உணர்ச்சிகரமான அழுத்தத்தைப் பிரயோகிக்க அவள் கனவிலுங்கூடக் கருதமாட்டாள். அவள் அவ்வாறு செலுத்தப்படுகிறாள், அவ்வளவுதான். அவளுடைய உடல் – அந்த உடலோடு பிணைக்கப்பட்டுள்ள உயிர்த்துடிப்பு – அப்படியான ஒரு பெரும் செயல்பாட்டியக்கத்தை, ஒரு வால்நட்சத்திரத்தைப் போலத் தளர்வில்லாத் தொடர்ந்தியக்கத்தைக் கோருகிறது.
அவள் திருமணம் செய்துகொள்ளாமலிருப்பதற்கு அதுவுங்கூட ஏதாவது காரணமாக இருக்கலாம். ஓ, அவளுக்கென்றும் சில ரகசிய விவகாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன – அந்தப் பெண் கொஞ்சம் பெருத்த அளவென்றாலும் அழகானவள் – திருமணப் பேச்சுகள் கூட நடந்து, இருபக்கமும் ஒப்புக் கொண்டனர். ஆனால், திருமணம் முடிகிற நிலையில் தவிர்க்க முடியாத ஏதோ ஒரு பிரச்னை ஏற்பட்டு எல்லாமே தகர்ந்துவிட்டன.
என் மனைவி சொல்லுவதைப்போல, ‘’ அவள் ஒரு அதிர்ஷ்டக்கட்டை, அவ்வளவுதான்.’’
‘’ ஆமாம், அப்படித்தான் நானும் நினைத்தேன்.’’ நான் அனுதாபம் கொண்டேன்.
இதில் என் மனைவி சொல்வதில் எனக்கு முழுமையான உடன்பாடு என்பதில்லை. அதிர்ஷ்டம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் சில பகுதிகளை ஆட்சி செய்யலாம்; அது நமது இருத்தலின் அடித்தளத்தின் மீது கருநிழற்திட்டுகளைப் பதிக்கவும் செய்யலாம் என்பது, உண்மைதான். ஆனால், திட்பமான மன உறுதி இருந்தால், மடக்கி, மடக்கி, முப்பது மடிகள் நீந்துவற்கு அல்லது இருபது கி.மீ. ஓட்டத்துக்குத் தேவைப்படுவதற்குக் குறைவில்லாமல் இருக்குமானால் எந்தச் சிக்கலையும் எதிர்கொள்வதற்கு ஒரு வழி கிடைக்கும். இல்லை, அவளது மனம் திருமணத்தின்மீது திடமாக உட்காரவில்லை என்றுதான் நான் அதைப் பார்க்கிறேன். திருமணம் அவளது கிரக எல்லைகளுக்குள் குறைந்தபட்சமாகக் கூட வரவில்லை. எனவேதான், அவள் மின்னிசைக் கருவி கற்பித்துக்கொண்டும் வேலையில்லாத பொழுதுகளை விளையாட்டுகளுக்கு அர்ப்பணித்துக் கொண்டும் அதிர்ஷ்டமற்ற காதலுக்குள் விழுவதும் வெளியேறுவதுமாக இருக்கிறாள்.
அது ஒரு மழை பெய்யும் ஞாயிறு பிற்பகல். எதிர்பார்த்ததற்கும் இரண்டு மணிநேரம் முன்பாகவே, என் மனைவி அப்போதும் கடைவீதியில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும்போதே, அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டாள்.
‘’ என்னை மன்னியுங்கள்.’’ அவள் மன்னிப்பு கோருகிறாள். ‘’ இன்றைய வரிப்பந்து மழைக்கால விடுப்பு எடுத்துக்கொண்டதால், எனக்கு இன்று இரண்டு மணி நேரம் இதர வேலைகளில் கவனம் செலுத்தக் கிடைத்தது. வீட்டில் தனியாக சலித்துப் போய்விட்டதால்தான், இங்கு, இப்போதுதான் நினைத்தேன்…….. நான் எதையேனும் இடையில் வந்து தடுத்துவிட்டேனா?
இல்லையில்லை, அப்படியெல்லாம் இல்லை. என்கிறேன், நான். பணிக்கான மனநிலை முற்றாக இல்லையெனத் தோன்றியதால் சும்மா, பூனையை மடியில் வைத்துக்கொண்டு காணொலிக் காட்சி ஒன்றைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். உள்ளே போகுமாறு கைகாட்டிவிட்டு, நான் சமையலறைக்குச் சென்று காப்பி தயாரித்தேன். இரண்டு கோப்பைகள். ஜாஸ் படத்தின் கடைசி இருபது நிமிடங்களைப் பார்த்துக்கொண்டு. இருவருமே அந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்திருந்தாலும், அநேகமாக ஒரு முறைக்கும் மேலாக? ஆகவே எங்களில் யாருமே திரையில் ஒட்டிக்கொண்டில்லை. ஆனால், அது எங்கள் கண்முன்னால் ஓடிக்கொண்டிருந்ததால், அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
முடிவு. நன்றிகள் வரிசையாக மேலுயர்ந்து மறைகின்றன. மனைவி வருகிற அடையாளம் எதுவும் இல்லை. ஆகவே நாங்கள் அரட்டையாகச் சிறிது பேசினோம். சுறாக்கள், கடல்புறம், நீச்சல்….. அப்போதும் மனைவி இல்லை. நாங்கள் பேசிக்கொண்டே போனோம். இப்போது, நான் அந்தப் பெண்ணை போதுமான அளவுக்கு விரும்புவதாகத்தான் நினைக்கிறேன். ஆனால், ஒரு மணிநேரம் கழிந்த பின், எங்களுக்கிடையே இருந்த பொதுவான தடைகள் தெளிவாகின. உண்மை என்னவென்றால், அவள் என் மனைவியின் தோழி, எனக்கல்ல.
அடுத்த காணொலியைப் போடலாமாவென நினைத்து நான் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, அவள் திடீரென்று, அவளது பெற்றோரின் மணவிலக்குக் கதையை எடுத்துவிட்டாள். என்னால் அந்தத் தொடர்பின் (என் மனத்தளவில் கூட, நீச்சலுக்கும் அவளது பெற்றோர்களின் பிரிவுக்கும்) ஆழ அலகினைக் கணக்கிட முடியவில்லை. ஆனால், நான் யூகிக்கும் காரணத்தை நீங்கள் தேடினாலும் கிடைக்கும்.
‘’ அது, உண்மையில் அரைக் காற்சட்டை இல்லை.’’ அவள் சொல்கிறாள். ‘’ அது, தோள்வார்க் காற்சட்டை.’’
‘’ நீங்கள் சொல்வது ஜெர்மானியர் அணிகிற நீள்நடைப் பயணக் காற்சட்டையா? தோள்பட்டைக்கு வார் வைத்து, தோலில் செய்தது?’’
‘’ அதேதான். நீங்கள் `டக்`கென்று பிடித்துக்கொள்கிறீர்கள். அப்பா நினைவுப்பரிசாக ஒரு ஜோடி தோள்வார்க்காற்சட்டை கேட்டார். அவர் தலைமுறைக்கு அப்பா நல்ல உயரம். அது, அவருக்கு அழகாகத்தான் இருக்கும், அதனாலேயேகூட அதை அவர் கேட்டிருக்கலாம். ஆனால், ஒரு ஜப்பானியர் தோள்வார்க்காற்சட்டை அணிந்திருப்பதை, நீங்கள் கற்பனைசெய்து பார்க்க முடியுமா? உலகம் பலவிதமென்பார்களே, அதேதான்.
அப்போதும் நான் கதைக்கு நெருக்கமாகவில்லை. நான் கேட்கவேண்டியிருக்கிறது : அவளுடைய அப்பாவின் கோரிக்கைக்குப் பின்னாலிருந்த சூழ்நிலைகள் என்னென்ன? கூடவே அந்தத் தோள்வார் அரைக்காற்சட்டை யாருடைய நினைவுக்காக ?
‘’ ஓ, ஐயாம் சாரி. நான் எப்போதுமே விஷயங்களைக் கோர்வை இல்லாமல், மாற்றி மாற்றிச் சொல்லிவிடுகிறேன். விஷயங்கள் பொருத்தமாக இல்லை யென்றால் என்னை நிறுத்தச் சொல்லுங்கள். ‘’ என்கிறாள், அவள்.
‘’சரி,’’ என்கிறேன், நான்.
அம்மாவின் சகோதரி ஜெர்மனியில் வசிக்கிறாள். அம்மாவை அவள் ஒருநடை வந்து பார்த்துச் செல்லுமாறு அழைத்தாள். அம்மாவும் அந்த எண்ணத்திலேயே இருந்தாள், ஆனால், அம்மாவுக்கு ஜெர்மன் பேசத் தெரியாதுதான். அவள் வெளிநாட்டுக்குச் சென்றதேயில்லை. ஆனால், அவள் ஒரு ஆங்கில ஆசிரியையாக இருப்பதாலேயே, அவளுக்கு எப்போதுமே அந்த எண்ணம் இருப்பது, அவளது அழகுத்தொப்பி மீதமர்ந்திருக்கும் ஒரு ஈயைப் போல வெளிப்படையாகத் தெரிந்தது. அவள் என் சித்தியைப் பார்த்து எத்தனையோ யுகங்களாகியிருக்கும். அதனால், அம்மா அப்பாவிடம் – நாமிருவரும் பத்து நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு ஜெர்மனி போய்வரலாமா? எனக் கேட்டாள். அப்பாவின் வேலை அதற்கு இடமளிக்கவில்லை. அதனால் அம்மா, தனியாகவே போகவேண்டியதாயிற்று.
‘’ அப்போதுதான் உங்கள் அப்பா தோள்வார்க்காற்சட்டை கேட்டிருப்பாரென்று நினைக்கிறேன்?’’
‘’ சரியாகச் சொன்னீர்கள்.’’ என்ற அவள், ‘’ அப்பாவிடம், அம்மா, என்ன வாங்கி வரவேண்டுமென்று கேட்டார், அப்பா தோள்வார்க்காற்சட்டை என்றார்.’’ என்று விளக்கினாள்.
‘’ இதுவரைக்கும் சரி.’’
அவளது பெற்றோர்கள் நெருக்கமாகவே இருந்தனர். இரவுகளில் அவர்கள் மணிக்கணக்காக விவாதித்துச் சண்டை போடுவதில்லை; அவளது அப்பா வீட்டைவிட்டுப் புயலாகக் கிளம்பிப்போய்ப் பல நாட்கள் வீட்டுக்கு வராமலிருந்ததெல்லாம் கிடையாது. ஒருமுறைதான் என்றில்லை, பலமுறை அவருக்கும் வேறு சில பெண்களுக்கும் தொடர்பிருந்ததாக, வெளிப்படையாகவே பேசப்பட்டிருந்தாலும், அப்போதைக்கு இல்லை.
‘’ அவரொன்றும் கெட்டவரில்லை, கடும் உழைப்பாளி, ஆனால் ஒரு பாவாடையைக் கண்டாலும் வாய்பிளந்து பார்ப்பவர் என்பார்களே அந்த மாதிரியான ஒரு பெண்பித்து வகை,’’ அவள் பல விஷயங்களைக் கலவையாக அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தாள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலிருந்தன. ஒரு கட்டத்தில், அவளுடைய தந்தை இறந்துவிட்டிருந்ததாகவே நினைத்தேன். ஆனால், அப்படியில்லை, பின்னர் அவள் எனக்குச் சொன்னாள், அவர் உயிரோடு, நன்றாகவே இருக்கிறார்.
‘’ அப்பா எப்போதும் அப்படியேதான் இருந்தார், அப்போது அந்தப் பிரச்னைகள் எல்லாம் பின்னுக்குப் போய்விட்டிருந்தன. அவர்கள் இருவரும், நன்றாக ஒருவருக்கொருவர் ஒத்து வாழ்ந்ததாகவே தோன்றியது.’’
என்றாலும் ஏதோ ஒரு சம்பவம் நடைபெறாமல் இல்லை. அவளுடைய அம்மா பத்து நாள் ஜெர்மனி வாசமென்பதை ஒன்றரை மாதத்துக்கு நீட்டினாள். டோக்யோவுக்கு ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. கடைசியாக, ஜப்பானுக்கு வந்தபிறகும் கூட அவள் அவளுடைய இன்னொரு சகோதரியோடு ஒசாகாவில் தங்கிக்கொண்டாள். அதன்பிறகு அவள் வீட்டுக்குத் திரும்பி, வரவேயில்லை.
என்னதான் நடக்கிறதென மகளுக்கோ, அப்பாவுக்கோ எதுவும் புரியவில்லை. அதுவரையிலும் திருமணச் சிக்கல்கள் என ஏதாவது எழுந்தபோது, அம்மா தான் பொறுமையானவராக இருந்தார் – அப்படி இப்படி இல்லை, கடுமுயற்சியுடனான ஒரு பொறுமை – சிலநேரங்களில் மகளே கூட வியந்தாள், இந்தப் பெண்மணிக்கு, கற்பனை, புரிந்துகொள்ளல் என எதுவுமே கிடையாதோ என; குடும்பம் என்ற எண்ணம் எப்போதுமே முன்னுக்கு நின்றது. அம்மா மகளுக்காகத் தன்னலமற்று அர்ப்பணித்தாள். அதனால் அம்மா வராதபோது, பேசுவதற்குக்கூட முயற்சிக்காதபோது, அது அவர்களின் தெளிவுக்கு அப்பாற்பட்டதாக, புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. அவர்கள் ஒசாகாவிலிருந்த பெரியம்மா வீட்டை மறுபடி, மறுபடி தொலைபேசியில் தொடர்புகொண்டபோதும், அம்மாவைத் தொலைபேசிக்கு அருகேகூடக் கொண்டுவரமுடியாமலாகி, அவளது எண்ணம் என்ன என்பது தெரியவரலானது.
செப்டம்பர் மத்தியில், அம்மா ஜப்பானுக்குத் திரும்பி இருமாதங்களுக்குப் பின், அம்மா அவளின் எண்ணத்தை வெளிப்படுத்தினாள். ஒருநாள் திடீரென அம்மா மவுனத்தைக் கலைத்து, வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அப்பாவிடம், ‘’ விவாக ரத்துக்கான ஆவணங்களை விரைவில் பெறுவீர்கள். தயவுசெய்து அவற்றில் கையொப்பமிட்டு, முத்திரையிட்டு, மூடி, அவற்றை எனக்கு அனுப்புங்கள்.’’ என்றாள். ‘’என்ன காரணமென விளக்கக்கூடாதா?’’ என அவள் கணவர் கேட்டார். ‘’ உங்கள் மீதிருந்த காதலை – அனைத்து வகை, நிலை, முழுவதையும் எல்லா வழியிலும் இழந்துவிட்டேன். ‘ஓ?` என்றார், அப்பா. ‘’ விவாதிப்பதற்குக் கொஞ்சமும் இடமில்லையா?’’ ‘’ மன்னிக்கவும், இல்லை, முற்று முழுக்காக எதுவுமே இல்லை.’’
.‘’ இது எல்லாமே ஒரு பேரதிர்ச்சியாக வந்தது.’’ என்றாள், அவள், என்னிடம். ‘’ ஆனால், அது வெறுமனே ஒரு திருமண ரத்து அல்ல. என்பெற்றோர்கள் பிரிந்துசெல்வதை நான் பலமுறை கற்பனை செய்திருக்கிறேன். அதனால், அதற்கு, நான் மனத்தளவில் எப்போதுமே தயாராக இருந்தேன். அவர்கள் இருவரும் சாதாரணமாக விவாக ரத்து செய்துகொண்டிருந்தால், நான் இப்படி, நிலைகுலைந்திருக்கமாட்டேன். இதில் பிரச்னை, அம்மா அப்பாவைத் தள்ளி வைத்தது மட்டுமல்லாமல், என்னையும் ஓரங்கட்டிவிட்டாளென்பதுதான். அதுதான் என்னைத் துன்புறுத்துகிறது.’’
நான் தலையாட்டினேன்.
‘’அந்த நேரம் வரையிலும், நான் எப்போதுமே என் அம்மாவின் பக்கமே இருந்திருக்கிறேன். அம்மாவும் என்பக்கமே, எனக்கு ஆதரவாக நின்றிருக்கிறாள். இருந்தாலும் அப்பாவுடன் சேர்த்தே அம்மா என்னையும் ஒரு குப்பையைப் போல, விளக்கமாக எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல், தூரமாக வீசியெறிந்துவிட்டாள். அது என்னை பயங்கரமாகத் தாக்கியது. அம்மாவை என்னால் வெகுநீண்ட நாட்களுக்கு மன்னிக்கவே முடியவில்லை. நான் எல்லாவற்றையும் சரிப்படுத்திக்கொள்ளுமாறு சொல்லி அவளுக்கு எத்தனை கடிதங்கள் எழுதினேனென்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால், அவள் என் கேள்விகளுக்குப் பதிலனுப்பவோ, என்னைப் பார்க்கவிரும்புவதாக ஒரு வார்த்தைகூடப் பேசவோ இல்லை.’’
மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவள் அம்மாவை நேரில் பார்த்தாள். அதற்கிடையில் ஒருமுறைகூடப் பார்த்திருக்கவில்லை. உலகில் வேறு இடமே கிடைக்கவில்லையா என்ன? ஒரு குடும்ப ஈமச்சடங்கில் போய்ப் பார்த்திருக்கிறாள். அதற்கிடையில் மகள் சொந்தக் காலில் தனியாக வசிக்கிறாள் – அவளது பெற்றோர் திருமணம் ரத்தானபோது, அவள் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டிலிருந்து வெளியேறினாள் – இப்போது அவள் பட்டம் பெற்று மின்னிசைக் கருவி கற்பிக்கிறாள். இதற்கிடையில் அவள் அம்மா ஒரு தனியார் பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கிறாள்.
என்ன சொல்வதென்று தெரியாமல்தான் அவளது அம்மா, தன் மகளோடு பேசமுடியாமலிருந்ததாக வருத்தம் தெரிவித்தாள். அவள் அம்மா சொன்னாள், ‘’ எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறதென்று என்னாலேயே விளங்கிக்கொள்ள முடியவில்லை, ஆனால் எல்லாமே அந்த அரைக்காற் சட்டையில்தான் ஆரம்பித்தது.’’
‘’ அரைக்காற்சட்டை?’’ அவளும் என்னைப் போலவே கேட்டுத் தொடங்கியிருக்கிறாள். அம்மாவோடு அவள் மீண்டும் பேசவேண்டுமென்று ஒருபோதும் விரும்பியிருக்கவில்லையென்றாலும் வியப்பு அவளை ஆட்கொண்டது. அவர்களது துக்க ஆடையில், அம்மாவும் மகளுமாக அருகிலிருந்த ஒரு காப்பிக் கடைக்குள் போய் அமர்ந்து ஐஸ் காபி கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்கள். அவள் இந்தக் கதையை – இப்படிச் சொல்வதற்காக மன்னித்துக்கொள்ளுங்கள் – சிறுகதையைக் கேட்க வேண்டியிருந்திருக்கிறது.
தோள்வார்க் காற்சட்டை விற்கும் கடை ஹாம்பர்கிலிருந்து ஒரு மணி நேர ரயில் பயண தூரத்திலுள்ள ஒரு சிறுநகரத்தில் இருந்தது. அவளுடைய அம்மாவின் சகோதரிதான் அதை அவளுக்காகத் தேடிக்கண்டுபிடித்தாள்.
‘’ எனக்குத் தெரிந்த ஜெர்மானியர்கள் எல்லோருமே, தோள்வார்க்காற்சட்டை வாங்குவதாக இருந்தால், அதுதான் கடை எனச் சொல்கிறார்கள். கைவினைத் திறமும் செய்நேர்த்தியும் நன்றாக இருக்கிறது. விலையும் அதிகமில்லை என்கிறார்கள்,’’ என்றாள், அவளது சகோதரி.
அதனால், அம்மா அவளது கணவனுக்கு தோள்வார்க்காற்சட்டை நினைவுப் பரிசு வாங்குவதற்காக ரயில் ஏறினாள். அவளது ரயில்பெட்டியில், அவளோடு தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசிய ஒரு நடுவயது ஜெர்மன் தம்பதியர் இருந்தனர். ‘’ நான், நினைவுப்பரிசாக தோள்வார்க்காற்சட்டை வாங்குவதற்காகப் போய்க்கொண்டிருக்கிறேன்.’’ என்றாள், அம்மா. ‘’ வட் (வாட்) ஷாப் யூ கோ?’’ எனக்கேட்டனர், அந்தத் தம்பதியினர். அம்மா கடையின் பெயரைச் சொன்னாள். அந்த நடுவயதுத் தம்பதியினர் இருவரும் சேர்ந்து மணியடிப்பது போல ஒரே குரலாக, ‘’ ஜட் (தட்) இஸ் ஜி(தி) பிளேஸ், ஜா.(யா). ஜட்(தட்) இஸ் ஜி(தி) பெஸ்ட்.’’ என்றார்கள். அதைக் கேட்டதும் அம்மா மிகவும் நம்பிக்கை கொண்டவளானாள்.
அது ஒரு மகிழ்ச்சியான முன்கோடைப் பிற்பகல். அது பண்டை நலமிக்க, ஒரு பழங்கால நகரம். எல்லாத்திசைகளிலும் வட்ட நடைக்கற்கள் பாவிய தெருக்கள் நீண்டிருந்தன. எல்லா இடங்களிலும் பூனைகள் தென்பட்டன. அம்மா காசேகுச்சென் (ஜெர்மன் பாலேட்டுறை இனிப்புரொட்டி) ஒன்றை மென்று, காப்பியும் அருந்தலாமென ஒரு சிற்றுண்டியகத்துக்குள் நுழைந்தாள்.
காப்பியின் கடைசி உறிஞ்சலில், அம்மா அந்தக் கடைப்பூனையோடு விளையாடிக்கொண்டிருக்கையில், உரிமையாளர் வந்து அவர்களின் சிறுநகரத்துக்கு எதற்காக வந்திருக்கிறீர்களெனக் கேட்டார். அவள் தோள்வார்க் காற்சட்டை என்கவும், அவர் சிறுகுறிப்புப் புத்தகமொன்றை உருவி அந்தக் கடைக்குச் செல்லும் வரைபடத்தை வரைந்து காட்டினார்.
‘’ உங்களுக்கு மிக்க நன்றி.’’ என்றாள், அம்மா.
வட்ட நடைக்கற்கள் மீது கால் பதித்து நடந்து செல்லும்போது, தனியாக ஒருவர் பயணிப்பதென்பது எத்துணை அற்புதமாக இருக்கிறதென்று நினைத்தாள், அம்மா. உண்மையில் அவளது ஐம்பத்தைந்து வயது வாழ்க்கையில் இதுதான் முதல்முறையாக அவள் தனிமையில் பயணித்தது. அந்தப் பயணம் முழுவதிலும் ஒருமுறைகூட அவள் தனிமையையோ, பயத்தையோ, சலிப்பினையோ உணரவில்லை. அவள் கண்கள் கண்ட காட்சி ஒவ்வொன்றும் புத்தம் புதிதாகப் புதிய ஒன்றாக இருந்தது. அவள் சந்தித்த எல்லோருமே நட்புடனிருந்தனர். ஒவ்வொரு அனுபவமும், அவளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த அதுவரையிலும் பயன்படுத்தப்படாததும் தொடப்படாததுமான உணர்வெழுச்சியைக் கொண்டுவருவதாக இருந்தது. அவள் அதுவரையிலும் தனக்கு நெருக்கமானதாகவும் இனிமையானதாகவும் கருதிக்கொண்டிருந்த, அது – கணவன், வீடு, மகள் – பூமியின் மறுபக்கத்தில் இருந்தது. அவற்றைப் பற்றியெல்லாம் நினைத்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லையென அவள் உணர்ந்தாள்.
தோள்வார்க்காற்சட்டைக் கடையை எவ்விதச் சிரமமுமில்லாமல் அவள் கண்டுபிடித்தாள். அது ஒரு சிறிய, பழைய கூட்டுறவுக்கடை. அதில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பெரிய விளம்பரப்பலகைகள் எதுவும் இல்லை. ஆனால், உள்ளே நூற்றுக்கணக்கான தோள்வார்க்காற்சட்டைகளை அவளால் பார்க்க முடிந்தது. அவள் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
இரண்டு வயதான மனிதர்கள் அங்கே வேலைசெய்துகொண்டிருந்தனர். அவர்கள் அளவெடுத்துக்கொண்டும் அதை ஒரு குறிப்புப் புத்தகத்தில் பதிந்துகொண்டும் ரகசியம் போல் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். கடையை இரண்டாகப் பிரித்த திரையின் பின்னால், பெரிய பணிக்கூடம் ஒன்று இருந்தது. தையல் இயந்திரங்கள் ஓடுகின்ற ஓசை ஒரே சீராக ஒற்றைத்தொனியில் கேட்டுக்கொண்டிருந்தது.
‘’ டார்ஃப் இச் இஹ்னென் ஹெல்ஃபென், மேடேம்?’’ அந்த இரண்டு வயதானவர்களில் வளர்த்தியும் சதையுமானவர் அம்மாவைக் கேட்டார்.
‘’ தோள்வார்க்காற்சட்டை வேண்டும்.’’ என அவள் ஆங்கிலத்தில் பதில் சொன்னாள்.
‘’ஃபார் மேடேம்?’’ அவர் திருப்பிக் கேட்டார்.
‘’ இல்லை, ஜப்பானிலிருக்கும் என் கணவருக்காக வாங்குகிறேன்.’’
‘’அச் ஸோ,’’ என்ற அந்த வயதானவர், ‘’ யுவர் ஹஸ்பண்ட். ஜென்(தென்) ஹி இஸ் நாட் ஹியர் விஸ்ஸ்(வித்) யூ?’’ எனக் கேட்டார்.
‘’ இல்லை. அவர் ஜப்பானில் இருக்கிறாரென்று நான்தான் ஏற்கெனவே சொன்னேனே,’’ என்று அவள் பதில் சொன்னாள்.
‘’ ஜிஸ்ஸ்(திஸ்) மேக் ப்ராப்ளம்.’’ அந்த வயதானவர் வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ‘’ வி(வீ) டு நாட் மேக் ஆர்ட்டிக்ள் ஃபார் கஸ்டமர் ஹூ நாட் எக்ஸிஸ்ட்.’’
‘’ என் கணவர் உயிரோடிருக்கிறார்.’’ அம்மா தன்னம்பிக்கையோடு சொன்னார்.
‘’ஜா, ஜா, (யா, யா) யுவர் ஹஸ்பண்ட் எக்ஸிஸ்ட், அஃப் கோர்ஸ், அஃப் கோர்ஸ், ‘’ அந்த வயதானவர் அவசர அவசரமாக முந்தினார். ‘’ எக்ஸ்க்யூஸ் மை நாட் குட் இங்க்லிஷ். வாட் ஐ வான்ட் ஸே, இஃப் யுவர் ஹஸ்பண்ட் நாட் எக்ஸிஸ்ட் ஹியர், வி(வீ) கென்னாட் ஸெல் ஜி(தி) லெடெர்ஹாசென்.’’
‘’ ஏன்?’’ அம்மா, திகைத்துப்போய்க் கேட்டாள்.
‘’இஸ் ஸ்டோர் பாலிஸி. இஸ் அன்ஸெர்(அவர்) ப்ரின்ஜிப்(பிரின்சிபிள்). வி மஸ்ட் ஸீ ஜி(தி) லெடெர்ஹாசென் ஹௌ இட் ஃபிட் கஸ்டமர், வி ஆல்ட்டெர் வெரி நைஸ், ஒன்லி ஜென்(தென்) வி(வீ) ஸெல். ஓவர் ஒன் ஹன்ட்ரெட் இயர்ஸ் வி(வீ) ஆர் இன் பிசினெஸ், வி(வீ) பில்ட் ரெபுடேஷன் ஆன் ஜிஸ்(திஸ்) பாலிஸி.’’
‘’ ஆனால், உங்கள் தோள்வார்க்காற்சட்டை வாங்குவதற்காக நான் ஹாம்பர்கிலிருந்து ஒரு அரைநாள் செலவழித்து வந்திருக்கிறேன்.’’
‘’வெரி ஸார்ரி, மேடேம், என்ற வயதானவர் உண்மையிலேயே வருத்தப்படுவதாகத் தோற்றமளித்தார். ‘’ வி மேக் நோ எக்செப்சன். ஜிஸ் (திஸ்) வொர்ல்ட் இஸ் வெரி அன்செர்ட்டன் வொர்ல்ட். ட்ரஸ்ட் இஸ் டிஃபிகல்ட் சிங்(திங்) டு எர்ன் பட் ஈஸி சிங்(திங்) டு லூஸ்.’’
அம்மா பெருமூச்சிட்டு வாசலில் போய் நின்றாள். இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பதென அம்மா மூளையைக் கசக்கிக்கொண்டாள். அந்தப் பெரிய வயதானவர், சிறிய வயதானவருக்கு நிலைமையை விளக்க, அவர் வருத்தத்தோடு தலையாட்டி, ஜா, ஜா (யா, யா) என்றார். அவர்கள் உருவத்தில் பருத்தும் சிறுத்துமாகப் பெரிய வேறுபாட்டோடு இருந்தாலும். இருவருமே ஒத்த உணர்வுச் சாயல்களைக் கொண்டிருந்தனர்.
‘’ நல்லது, ஒருவேளை, இப்படிச் செய்யலாமா?’’ அம்மா யோசனை ஒன்றை முன்வைத்தாள். ‘’ என் கணவரைப் போன்ற உருவமுள்ள ஒரு மனிதரை இங்கு அழைத்து வருகிறேன். அவர் தோள்வார்க்காற்சட்டையை அணியட்டும், நீங்கள் அதை மிக நன்றாகச் சரிசெய்து, எனக்குக் கொடுங்கள்.’’
அந்த முதல் வயதானவர் மிரண்டுபோய் அவள் முகத்தையே பார்த்தார்.
‘’ பட், மேடேம், ஜட்(தட்) இஸ் எகெய்ன்ஸ்ட் ரூல். இஸ் நாட் ஸேம் மேன் ஹூ ட்ரைஸ் ஜி(தி) லெடெர்ஹாசென் ஆன், யுவர் ஹஸ்பண்ட். அன்ட் வி (வீ) நோ ஜிஸ்ஸ்(திஸ்). வி (வீ) கென்னாட் டூ ஜிஸ்ஸ்(திஸ்).’’
‘’ உங்களுக்குத் தெரியாத மாதிரி நடித்துக்கொள்ளுங்களேன். நீங்கள் அந்த மனிதருக்கு தோள்வார்க்காற்சட்டையை விற்கிறீர்கள். அவர் அதை எனக்கு விற்கிறார். அந்த வகையில் உங்கள் கொள்கைக்கும் பங்கம் ஏதுமில்லை. தயவுசெய்யுங்கள், நான் உங்களை மிகவும் வேண்டிக் கேட்கிறேன். நான் இனிமேல் ஒருபோதும் ஜெர்மனிக்குத் திரும்பவும் வரப்போவதில்லை. இப்போது தோள்வார்க்காற்சட்டை வாங்கவில்லையெனில், இனிமேல் நான் எப்போதுமே வாங்கமுடியாது.’’
‘’ஹ்ம்ப்,’’ அந்த வயதானவர் உதட்டைப் பிதுக்கினார். அவர் ஒருசில நிமிடங்கள் யோசித்துவிட்டுப் பின் அடுத்த வயதானவரிடம் ஜெர்மனில் ஆற்றொழுக்காகப் பேசினார். அவர்கள் பலமுறை அப்படியும் இப்படியுமாகப் பேசிக்கொண்டார்கள். பின்னர், இறுதியாக, அந்தப் பெரிய வயதானவர் அம்மாவின் பக்கமாகத் திரும்பி, ‘’ வெரி வெல், மேடேம். ஆஸ் எக்செப்சன் – வெரி எக்செப்சன், யு ப்ளீஸ் அண்டர்ஸ்டான்ட் – வி (வீ) வில் நோ நஸ்ஸிங்க் (நத்திங்) ஆஃப் ஜிஸ்ஸ் (திஸ்) மேட்டர். நாட் ஸோ மெனி கம் ஃப்ரம் யப்பான் (ஜப்பான்) டு பை லெடெர்ஹாசென். ப்ளீஸ் ஃபைன்ட் மேன் வெரி லைக் யுவர் ஹஸ்பன்ட். மை ப்ரதர் ஹி சேய்ஸ் ஜிஸ்ஸ் (திஸ்).’’
‘’உங்களுக்கு நன்றி,’’ என்றாள், அவள். பின்னர் அவள் அந்த இன்னொரு சகோதரருக்கு நன்றிசொல்ல ‘’டாஸ் இஸ்ட் ஸோ நெட்ட் வோர் இஹ்னென்.’’ என ஜெர்மனிலேயே சமாளித்தாள். அவள் – இந்தக் கதையை எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் மகள் – மேஜைமீது கைகளை மடித்து வைத்துப் பெருமூச்சிடுகிறாள். எப்போதோ குளிர்ந்து போன காப்பியின் கடைசியை நான் குடித்தேன். அப்போதும் மழை பெய்துகொண்டிருந்தது. மனைவி வரும் அடையாளம் தான் தெரியவில்லை. பேச்சு இப்படியான ஒரு திருப்பத்துக்கு வந்துசேருமென்று யார்தான் நினைத்திருக்கமுடியும்?
‘’ சரி, அப்புறம்?’’ முடிவைக் கேட்கும் ஆவலில் நான் இடையிட்டேன். ‘’ உங்கள் அப்பாவைப் போன்றே உடற்கட்டுள்ள ஒருவரை உங்கள் அம்மா கண்டுபிடித்தார்களா?’’
‘’ஆமாம்,’’ என்ற அவள் எந்த உணர்வுமின்றி அதை உச்சரித்தாள். ‘’ அம்மா ஒரு பெஞ்சில் அமர்ந்து அப்பாவின் உருவ அளவுக்குப் பொருந்துகிற யாராவது அந்த வழியே வருவார்களா எனப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படிப் பொருத்தமான ஒரு ஆள் வந்தார். அவரிடம் அனுமதி எதுவும் கேட்காமலேயே – அந்த மனிதரால் ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் பேசமுடியாதெனத் தோன்றியதால் – அவரைத் தோள்வார்க்காற்சட்டைக் கடைக்குள் இழுத்துச் சென்றாள்.’’
‘’ கை – செயல் அணுகுமுறை, ‘’ நான் விகடம் பேசினேன்.
‘’ எனக்குத் தெரியாது. வீட்டில் அம்மா எப்போதுமே ஒரு சாதாரணமான, பயன்பாட்டுக்குப் பொருத்தமான காலணி அணிகிற விவேகமுள்ள பெண்மணியாகத்தான் இருந்தாள்.’’ என இன்னொரு பெருமூச்சுடன் அவள் சொல்கிறாள். ‘’ கடைக்காரர்கள் நிலைமையை அந்த மனிதருக்கு விளக்கிச் சொல்ல, அந்த மனிதர் அப்பாவுக்கு மாற்றாக நிற்க மகிழ்ச்சியோடு சம்மதித்தார். அவர் தோள்வார்க்காற்சட்டையை அணிய, அவர்கள் அதை அங்கே இங்கே இழுத்து மடித்துக்கொண்டிருக்கும்போதே அந்த மூவரும் ஜெர்மனில் ஏதோ கிண்டலாகப் பேசிச் சிரித்துக்கொண்டனர். முப்பது நிமிடங்களில் வேலை முடிந்துவிட்டது, அந்த நேரத்தில்தான் அம்மா, அப்பாவை விவாக ரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறாள்.
‘’ பொறுங்கள்,’’ இடைமறித்த நான், ‘’ எனக்கு விளங்கவில்லை. அந்த முப்பது நிமிடங்களுக்குள் வேறு ஏதாவது நிகழ்ந்ததா?’’ எனக் கேட்டேன்.
‘’ எதுவும் இல்லை. அந்த மூன்று ஜெர்மன் மனிதர்களும் ஹ – ஹா என எருமைமாடு மாதிரி எக்காளமிட்டிருக்கிறார்கள்.’’
‘’ ஆனால், உங்கள் அம்மாவை அப்படிச் செய்யவைத்தது எது?’’
‘’ அது இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் கூட அம்மாவாலேயே புரிந்துகொள்ள இயலாத ஒன்று. அது அவளைக் குழப்பித் தற்காத்துக்கொள்ளச் செய்திருக்கிறது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், அந்த மனிதரைத் தோள்வார்க்காற்சட்டையில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தாங்கமுடியாத வெறுப்பு அவளுக்குள் எழுவதை உணர்ந்திருக்கிறாள். அந்த வெறுப்பு அப்பாவை நோக்கியது. அதை அவளால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அம்மாவின் தோள்வார்க்காற்சட்டை மனிதர் அப்பாவைப் போலவே உடம்பு நிறம் மட்டுமல்லாமல் கால்களின் வடிவம், அடிவயிறு, பூஞ்சை முடி எல்லாமே ஒத்திருந்திருக்கின்றன. புதிய தோள்வார்க்காற்சட்டையை அணியும்போது அந்த மனிதர் மகிழ்ச்சியாக இருந்த நிலை, சிறு பையனைப் போல கெக்கே பிக்கேயெனச் சிரித்து, சேட்டை செய்வதாக இருந்தது. அந்த மனிதரை அம்மா பார்த்துக்கொண்டிருந்தபோது, எத்தனையோ எண்ணங்கள் அவளுக்குள் உருவாகி – அவை என்னென்னவென்று அவளாலேயே நிச்சயமாகக் கூறமுடியவில்லை – மெல்லமெல்ல அவளுக்குள் மாற்றத்தை நிகழ்த்திவிட்டன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அப்போதுதான் அம்மா, அப்பாவை வெறுக்கிறோமென்பதை உணர்ந்துகொண்டாள்.
என் மனைவி கடையிலிருந்தும் வீட்டுக்கு வரவே, இருவரும் அவர்களின் பெண்களுக்கேயுரிய பேச்சைத் தொடங்க, நான் தோள்வார்க்காற்சட்டையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
‘’ ஆக, நீங்கள் இப்போது உங்கள் அம்மாவை வெறுக்கவில்லை?’’ என் மனைவி அறையை விட்டு, உள்ளே சென்றபின் நான் கேட்டேன்.
‘’ இல்லை, உண்மையாகவே இல்லை. நாங்கள் நெருக்கமாக இல்லைதானென்றாலும் அவளுக்கு எதிராகக் குற்றம் சொல்ல என்னிடம் ஏதுமில்லை.’’
‘’ ஏனென்றால், தோள்வார்க்காற்சட்டையைப் பற்றி அவள் உங்களிடம் சொல்லியிருக்கிறாள்.’’
‘’ அப்படித்தான் நினைக்கிறேன். அவள் என்னிடம் விஷயங்களை விளக்கிச் சொன்னபின், அவள் மீதான வெறுப்பினை என்னால் தொடர்ந்து கடைப்பிடிக்க இயலவில்லை. அதற்காக, என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டதென்று என்னால் நிச்சயமாக விளக்கத்தெரியாது. ஆனால், அதற்கு, நாங்கள் பெண்களாக இருக்கும் இருப்பு தொடர்பான ஏதோ ஒன்றும் காரணமென்று சொல்வேன்.’’
‘’ இப்போதும், தோள்வார்க்காற்சட்டையை விலக்கிவிட்டால், அதாவது, ஒரு பெண் ஜெர்மனி சென்றபின், அங்கே தன்னைக் கண்டுகொள்கிறாள் என்கிற கதையாக மட்டும் கொண்டால், உங்களால் அவளை மன்னிக்க இயலுமா?’’
‘’ முடியாதுதான்,’’ அவள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சொல்கிறாள். ‘’மொத்த விஷயமுமே தோள்வார்க்காற்சட்டைதான், சரியா?’’
அதற்குப் பதிலாக இன்னொரு தோள்வார்க்காற்சட்டையை, அவளுடைய அப்பா இப்போதுங்கூடப் பெற்றிருக்கமாட்டாரென நான் நினைத்துக்கொள்கிறேன்.
•••
http://www.geocities.jp/yoshio_osakabe/Haruki/Books/Lederhosen.html 
மலைகள் இணைய இதழ், மார்ச் 17, 2014, இதழ் 46 இல் வெளியானது.