ட்ரமான்டனா,
வடதிசை மரணக்காற்று Tramontana
ஸ்பானியம்
– காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்(கொலம்பியா)
ஆங்கிலம்
– எடித் கிராஸ்மான்
தமிழில்
ச.ஆறுமுகம்
மிகவும்
பரிதாபகரமான அவனது மரணத்திற்குச் சில மணிநேரம் முன்பாக, நான் அவனை ஒரே ஒரு முறை மட்டுமே,
புகழ்வாய்ந்த பார்சிலோனா கிளப்பான பொக்கேசியாவில் பார்த்தேன். அப்போது அதிகாலை மணி
இரண்டு. கூடுகை விருந்தினை, கடேக்வெஸ் சென்று முழுமைப்படுத்தும் விருப்பில், அவனைத்
தம்முடன் அழைத்துச்செல்ல முயன்றுகொண்டிருந்த ஒரு இளம் ஸ்வீடானியக் குழுவினர் அவனைத்
துளைத்துக்கொண்டிருந்தனர். அந்தக் குழுவில் பதினொரு ஸ்வீடானியர்கள் இருந்தனர்; அவர்களில்
ஒருவரை, ஒருவர் வேறுபடுத்திச் சொல்வது மிகவும்
கடினம்; ஏனெனில் அவர்கள் ஆண், பெண் எல்லோருமே, அழகாக, ஒரே சாயலாக, ஒடுங்கிய இடுப்பும்
நீண்ட பொன்னிற முடியுமாகத் தோன்றினர். அவனுக்கு இருபது வயதுக்கு மேல் இருக்காது. அவனது
தலையினை முழுவதுமாக மறைத்து, நீலக் கருஞ்சுருள்கள் நிறைந்திருக்க, அம்மாக்கள் நிழலிலேயே
நடக்குமாறு பழக்கிய கரீபியர்களுக்கே உரிய வழுவழுப்பான வெளிறிய மஞ்சள் மேனியும் ஸ்வீடியப்
பெண்களை, ஏன், சிலவேளைகளில் ஒருசில பையன்களையும் கூடக் கிறுக்குப் பிடிக்கச்செய்கிற
அராபியக் கண்களும் கொண்டிருந்தான். அவர்கள் அவனை மதுவகத்தினுள், பொம்மை ஒன்றைக் கையில்
ஏந்தி, அது பேசுவதாகக் குரல்கொடுக்கும் வென்ரிலாக்குயிஸ்ட்2 கலைஞரின் கைப்பாவையைப்
போல் அமர்த்திவைத்து, அவனைச் சுற்றிநின்று ஊரறிந்த காதல்வரிப் பாடல்களை, அவற்றுக்கேற்ற
தாளத்தில் கைகளைத் தட்டிக்கொண்டே பாடி, அவனைத் தம்முடன் வருமாறு தூண்ட, மீண்டும் மீண்டுமாக
முயற்சித்தனர்.
பெருத்த
அச்சத்தில், அவன், அவனுக்கேயான காரணங்களை விளக்கிச் சொல்ல முயன்றான். யாரோ ஒருவர் தலையிட்டு,
அவனைத் தனியே விட்டுச் செல்லுமாறு கத்த, அந்த ஸ்வீடானியர்களில், சிரிக்கும்போது தள்ளாடுகிற3
ஒருவன் அவரோடு மோதினான்.
“அவன்
எங்களுக்குத்தான் சொந்தம், “ என்று உரக்கக் கத்திய அவன். “நாங்கள், அவனைக் குப்பைத்
தொட்டியில் கண்டெடுத்தோம்.” என்றான்.
நான்
சிறிது நேரத்திற்கு முன்புதான், நண்பர்கள் குழுவுடன் பாலவ் இசை அரங்கத்தில் டேவிட்
ஆய்ஸ்ட்ராக்கின் நிறைவுப் பாடல் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அங்கு நுழைந்திருந்தேன்.
ஸ்வீடானியர்களின் ஐயுறவு வாதத்தில் எனக்கு உடலெங்கும் பற்றியெரிந்தது. அந்தப் பையன்
சொன்ன காரணங்கள் நம்பிக்கை சார்ந்தவை. கடேக்வசின் நவீன மதுக்கூடம் ஒன்றில் ஆன்டிலியன்
தீவுக்கூட்டப் பாடல்களைப் பாடுவதற்காகப் பணியமர்த்தப்பட்ட அவன், கடந்த கோடையில் ட்ரமான்டனாவால்
வீழ்த்தப்படும் வரையில், அங்குதான் வாழ்ந்திருக்கிறான். ட்ரமான்டனாவின் இரண்டாம் நாளில்
அவன் எப்படியோ அங்கிருந்து தப்பி, இனிமேல் ட்ரமான்டனா இருந்தாலும் அல்லது இல்லாமலிருந்தாலும்
அங்கு திரும்பவும் செல்வதில்லையென்று தீர்மானித்ததோடு, அப்படி எப்போதாவது திரும்பிச்
சென்றால், மரணம் அங்கே அவனுக்காகக் காத்திருக்கப்போவது நிச்சயமென்றும் நம்பினான். கோடையின்
மிகை வெப்பம் மற்றும் அந்தக் காலத்திய காட்டமான கேட்டலான் மதுவகை, எல்லாமாகச் சேர்ந்து
மனித இதயங்களில் தூவிய காட்டுவிதைகளின் விளைச்சலான அந்தக் கரீபிய நம்பிக்கையினை ஸ்காண்டிநேவியப்
பகுத்தறிவாளர்களால் புரிந்துகொள்ள இயலாதுதான்.
வேறு
எவரொருவரையும் விட நான், அவனை நன்றாகவே, புரிந்துகொண்டேன்.
கடேக்வஸ், கோஸ்டா ப்ரேவா4 கடற்கரை நெடுகிலும் அமைந்துள்ள மிக அழகிய நகரங்களில்
ஒன்று என்பதுடன் மிகவும் நன்றாகப் பேணிப் பாதுகாக்கப்படுகிறவற்றில் ஒன்றுமாகும். இதில்,
அந்த நகரத்திற்கான ஒடுங்கிய நெடுஞ்சாலை, அடியற்றப் படுகுழி ஒன்றின் விளிம்பில் முறுக்கிச்
செல்வதற்கும் மணிக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் ஓட்டுவற்கான கொஞ்சமும்
ஆடாத ஆன்மபலமும் தேவைப்படுகிறதென்ற உண்மைக்கும் ஒரு இடமிருக்கிறது. பழைய வீடுகளெல்லாம்
வெள்ளை வெளேரென உயரம் குறைந்தவையாக மத்தியதரைக்கடற்பகுதி மீன்பிடி கிராமங்களின் பாரம்பரியக்
கட்டுமான பாணியிலிருந்தன. புதிய வீடுகள், அசல் இணக்கத்தினை மதிக்கின்ற, புகழ்பெற்ற
கட்டுமான நிபுணர்கள் கட்டியவை. நகரத்தெருவை ஒட்டி மறுபக்கமாக அமைந்துள்ள ஆப்பிரிக்கப்
பாலைவனங்களிலிருந்து வெப்பம் வீசுவதாகத் தோன்றும் கோடைக் காலத்தில், கடேக்வஸ், பாழாய்ப்போன
பல்மொழிப் பேபல்5லாகத் தோற்றங்கொண்டு, ஒரு மூன்று மாதங்களுக்கு ஐரோப்பாவின்
ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர்வாசிகளோடும் குறைந்த
விலைக்கு விற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஒரு வீடு
வாங்கும் பேறு பெற்றவர்களான அயல் நாட்டவரோடும் சொர்க்கத்தின் கட்டுப்பாடு6
என்கிற அந்த ஊர்ப் பாரம்பரியம் காக்கும் விதிகளின் காரணமாகப் போட்டியில் மோதிக்கொள்வார்கள்.
ஆனால், கடேக்வஸ் மிக அதிக ஈர்ப்புடன் தோன்றும் இளவேனில் மற்றும் இலையுதிர்காலங்களில்,
பேய் போல் விடாப்பிடியாகத் துரத்திப் பற்றிப் பிடித்துக்கொள்ளும் ட்ரமான்டனா நிலக்காற்றின்
பயங்கரமான நினைவிலிருந்து யாரொருவரும் தப்பமுடியாதென்றும் அந்தக் காற்றில் பைத்திய
நோயின் விதைகள் கலந்திருப்பதாகவும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அங்கே ஏற்கெனவே பாடம்
பெற்ற சில எழுத்தாளர்களும் கூறுகின்றனர்.
ஒரு
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வாழ்க்கையில் ட்ரமான்டனா குறுக்கிடும் வரையில்,
மிகுந்த பற்றுதலுடன் அந்த நகரத்திற்கு வருபவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். ஒரு
ஞாயிற்றுக் கிழமை மதியத் தூக்க நேரத்தில், ஏதோ ஒன்று நிகழப்போவதான விவரிக்க இயலாத ஒரு
முன்னறியும் உணர்வினால், அந்தக் காற்று வருவதற்கு முன்பாகவே நான் உணர்ந்தேன். எனது
வாழியல் உணர்வுகள், கனமான பாரத்தால் கீழிழுக்கப்படுவதாக, எந்தக் காரணமும் இல்லாமலேயே,
துயரமாக உணர்ந்ததோடு, அப்போது பத்து வயதுக்கும் குறைவான எனது இரு குழந்தைகளும் இணக்கமற்ற
எதிரிப் பார்வையோடு வீட்டைச் சுற்றிச்சுற்றி என்னைப் பின்தொடர்ந்து விரட்டுவதாக ஒரு
நினைவு. சிறிது நேரத்திலேயே கதவு சன்னல்களை இழுத்துக் கட்டுவதற்கான சில கடற்கயிறுகள்
மற்றும் கருவிப் பெட்டியும் கையுமாக அங்கு வந்த வாயில் காவலர் எனது சோர்வினைக் கண்டு
வியப்பேதும் கொள்ளவில்லை.
”இது
ட்ரமான்டனா! இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளாக இங்கே வந்துவிடும்.” என்றார், அவர்.
மிக
வயதான அந்தக் கடலோடி மனிதர், முன்னர் எப்போதும் அணிந்த பாணியிலான அவரது நீர்க்காப்புச்சட்டை,
தொப்பி மற்றும் புகைக்குழாயோடு இந்த உலகத்தின் அனைத்து உப்புகளாலும் பொரிந்துபோன மேனியையும்
கொண்டிருந்தார். அவரது ஓய்வு நேரத்தில், பல போர்களில் கலந்து வென்ற படைத்துறை வீரர்களுடன்
சதுக்கத்தில் உருட்டுப் பந்து விளையாடுவார். அந்தக் கடற்கரை நெடுகிலும் அமைந்துள்ள மதுவகங்களில் பசியைத்
தூண்டும் மது வகைகளை அருந்துவார். அவருடைய படைத்துறை மனிதர்களின் கேட்டலான் மொழியால்
எந்த மொழியினரும் புரிந்துகொள்ளும்படியான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருந்தது. இந்த
பூமிக் கிரகத்திலுள்ள அனைத்துத் துறைமுகங்களும் அறிமுகமென்பதில் அவருக்கு மிகுந்த பெருமிதம்.
ஆனால், அவருக்கு உள் நகரங்களைத் தெரியாது. “பிரான்ஸைப் போலப் புகழ் கொண்டதாக இருந்தாலும்
அந்தப் பாரிஸைக் கூட எனக்குத் தெரியாது.” என்பார், அவர். கடலில் செல்லாத எந்த வாகனத்தின்
மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை.
கடந்த
சில ஆண்டுகளாக முதுமையின் பாதிப்பு அதிகமாகி, அவரால் வெளியே செல்லமுடியாமலாகிவிட்டது.
அதனால், அவரது பெரும்பகுதி நேரத்தையும், காலமெல்லாம் அவர் வாழ்ந்த அதே மகிழ் விருப்புடன்,
காவலர் அறையிலேயே கழித்தார். ஒரு தகரப் பாத்திரத்தைச் சாராய விளக்கில் சூடுபடுத்தி,
அவருக்கான உணவைச் சமைத்துக்கொண்டார். ஆனால், ஒப்பற்ற கேட்டலான் சமையல் முறையின் சுவைமிக்க
உணவு வகைகளை வழங்கி, எங்களை மகிழ்ச்சிப்படுத்த அவருக்கு, அவை மட்டுமே போதுமாக இருந்தன.
விடிகாலையில் அவர் ஒவ்வொரு தளமாகச் சென்று, அங்குத் தங்கியிருப்பவர்களைக் கவனிக்கத்
தொடங்கிவிடுவார். நான் இதுவரை சந்திருத்திருந்த மனிதர்களில், கேட்டலோனியர்களின் தன்னார்வப்
பெருந்தகைப்பண்பும் மேற்பூச்சற்ற மென்மையும் கொண்ட மிகமிக இணக்கமிக்கவர்களில், அவரும்
ஒருவர். அவர் மிகக் குறைவாகவே பேசினாலும், அவரது பாணி, சொல்லவந்ததை நேரடியாகக் குறிப்பாகச்
சொல்வதாக இருந்தது. செய்வதற்கு வேறெதுவும் வேலையில்லாமலிருக்கும் போது, அவர், கால்பந்துப்
போட்டிகளின் வெற்றிதோல்விகளை முன்கணிக்கும் படிவங்களை நிரப்பிக்கொண்டிருப்பார்; ஆனால்
அவர், அநேகமாக அவற்றை அனுப்புவதேயில்லை.
அன்று
அவர் பேரிடரை எதிர்நோக்கி, கதவுகளையும் சாளரங்களையும் பாதுகாப்பாகக் கட்டிக்கொண்டே,
எங்களிடம் ட்ரமான்டனாவை, வெறுக்கத்தக்க ஒரு பெண்ணைப் போலில்லாமல், அந்தப் பெண் இல்லாவிட்டால்
அவரது வாழ்க்கையே அர்த்தமிழந்துபோவதுபோல் பேசினார். கடலோடி ஒருவர், நிலக்காற்று ஒன்றுக்கு
இப்படிப் புகழ் பாடுவது எனக்குப் பெருவியப்பாக இருந்தது.
“இது
பழங்காலத்தவற்றில் ஒன்று,” என்றார், அவர்.
மாதங்கள்
மற்றும் நாட்களால் அல்லாமல், ஆண்டுகள், ட்ரமான்டனா வீசிய எண்முறைகளால் கணக்கிடப்படுவதான
தோற்றத்தை அவர் ஏற்படுத்தினார். ” கடந்த ஆண்டு, இரண்டாவது ட்ரமான்டனா வந்து, இரண்டு
மூன்று நாட்களில் குடலழற்சி ஏற்பட்டது.” என்று ஒருமுறை என்னிடம் சொன்னார். இதுவே ஒவ்வொரு
ட்ரமான்டனாவுக்குப் பிறகும் ஒருவர் பல ஆண்டுகளுக்கான முதுமையைப் பெறுகிறாரென்ற அவருடைய
நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ட்ரமான்டனா மிக மோசமானதென்றும் நம்மை வசப்படுத்திவிடுகிற
வருகையாளரென்பதாகவும் அவரை ஆட்டிப்படைக்கும்
நம்பிக்கை அப்படியொரு வலுவுடையது; அதைப்பற்றித் தெரிந்துகொள்கிற பெருவிருப்பத்தை
நமக்குள் அவர் நிரப்பிவிடுகிறார்.
நாங்கள்
நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்கவேண்டியதாக இல்லை. அவர் கிளம்பிச் சென்றதுமே, வீளை
ஒலி ஒன்று சிறிது, சிறிதாக வலுவாகித் தீவிரமாகி, நிலநடுக்கத்தின் இடியோசைக்குள் கரைந்துபோனதை
நாங்கள் கேட்டோம். பின்னர் காற்று வீசத் தொடங்கியது.
முதலில்
இடைவெளி விட்டுவிட்டு, அலையலையாகப் பின்னர் அதுவே அடிக்கடி நிகழ்வதாகி, அவற்றில் ஒன்று
அப்படியே அசையாமல், கணநேர இடைவெளிகூட இல்லாமல், எந்த இடைமூச்சும் எடுக்காமல், அப்படியே
நிலைத்துநின்றதோடு தீவிரமும் கொடூரமும் கொண்ட ஒரு மீமிகைத் தன்மைகொண்டதாகத் தோன்றியது.
கரீபிய வழக்கத்துக்கு மாறாக, எங்கள் குடியிருப்பு, மலைகளைப் பார்ப்பதாக அமைந்திருந்தமை,
கடலை நேசித்த பழங்காலப் பாணி கேட்டலோனியர்களின் அந்த வித்தியாசமான முன்னுரிமை, அக்கறையெடுத்துக்
கவனிக்காமலிருந்ததால் ஏற்பட்டிருக்கலாம். அதனால், காற்று எங்கள் தலையை வீழ்த்திவிடுவதுபோல
மோதிச் சாளரக்கதவுகளை இழுத்துக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்துவிடுவதாகப் பயமுறுத்தியது.
எனக்குள்
அதிக ஆர்வமூட்டித் துளைத்தது எதுவெனில், பொன்னிறக் கதிரும் மாசுமறுவற்ற வானமுமாகக்
கடல்வெளி மீண்டும் காணமுடியாத ஒரு அழகுடன் விளங்கியதுதான். அதனாலேயே கடலைக் காட்டுவதற்காகக்
குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்வதென முடிவெடுத்தேன். மெக்சிகன் நிலநடுக்கங்கள், கரீபியன்
புயல்களுக்கிடையே வளர்ந்தவர்கள் தானே, அதனால் பெரிதோ, சிறிதோ, சாதாரண ஒரு காற்றுக்காகக்
கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையெனத் தோன்றியது. வாயிற் காவலரின் அறையை முன்பாதம் ஊன்றிச்
சத்தமில்லாமல் கடந்தபோது, அவர் பீன்சும் சுவைச்சாறுமாக ஒரு உணவுத் தட்டத்தின் முன்
பிடித்துவைத்த சிலை போல் அமர்ந்திருந்ததைச் சாளரம் வழியே கண்டோம். நாங்கள் வெளியே வந்ததை,
அவர் கவனிக்கவில்லை.
வீட்டின்
வெளிச்சுற்றில் காற்றுப்படாத பக்கமாக நடக்கும் வரையில் சமாளித்துக்கொண்டோம்; ஆனால்,
காற்றுத் திசையில் திரும்பிய மூலைக்கு வந்தபோது, காற்றின் திசையில் காற்றோடு காற்றாக
அடித்துச் சென்றுவிடாமலிருக்க அருகிலிருந்த விளக்குக் கம்பத்தை உறுதியாகப் பிடித்துக்
கொள்ளவேண்டியிருந்தது. எங்களை மீட்பதற்கு அக்கம்பக்கத்தவர் சிலரை அழைத்துக்கொண்டு வாயிற்காவலர்
வரும்வரையில், அப்படியே நின்று, அத்தனை கலவரத்துக்கிடையிலும் அசைவற்றுத் தெரிந்த தெளிவான
கடலைப் பார்த்து வியந்துகொண்டிருந்தோம். பின்னர், இறுதியாகக் கடவுள் மீது பாரத்தைப்
போட்டு, வீட்டுக்குள் அடைந்து கிடப்பதே அறிவுள்ள ஒரே செயலென ஆற்றிக்கொண்டோம். கடவுள்
எப்போது வழிவிடுவாரென்பது பற்றித்தான் யாருக்கும் எதுவும் தெரியாமலிருந்தது.
இரண்டு
நாட்கள் முடிகின்ற நிலையில், அந்தப் பயங்கரமான காற்று ஒரு இயற்கைச்செயல் அல்லவென்றும்
எங்களை நோக்கி, எங்களை நோக்கி மட்டுமே யாரோ ஒருவரால் தனிப்பட்ட பகையினால் ஏவப்பட்டதென்றும்
எங்களுக்குத் தோன்றியது, வாயிற்காவலர் இரண்டு நாளிலும் பலமுறை எங்களை வந்து பார்த்துக்கொண்டார்;
எங்கள் மனநிலை குறித்துத் தான் அவர் அதிக அக்கறை காட்டினார். அந்தப் பருவகாலத்தில்
கிடைத்த பழங்கள் மற்றும் மிட்டாய்களைக் குழந்தைகளுக்காகக் கொண்டுவந்து தந்தார். செவ்வாய்க்கிழமை
மதிய உணவுக்கு, கேட்டலோனிய சமையலின் தலைசிறந்த முயல் மற்றும் நத்தைக்கறி தந்து உற்சாகப்படுத்தினார்.
அதை அவர், அவருடைய தகரப் பாத்திரத்தில் தான் சமைத்திருந்தார். அத்தனை திகிலுக்கு மத்தியில்
அது ஒரு பெருவிருந்தாகத் தான் அமைந்தது.
காற்றைத்
தவிர வேறு ஏதும் நிகழாத புதன்கிழமை தான் என் வாழ்க்கையிலேயே மிக நீண்ட நாளாக அமைந்தது.
ஆனால், அது விடியலுக்கு முன்பான இருட்டைப் போன்ற ஒன்றாகத் தானிருக்கவேண்டும்; ஏனென்றால்,
நடு இரவுக்குப் பின் நாங்கள் எல்லோரும் ஒரேநேரத்தில் ஒருசேர, மரணத்தின் முன்பு மட்டுமே
நிகழக்கூடிய அமைதியான முழுமையான அசைவற்ற நிலையால் மூச்சுத் திணறி விழித்தெழுந்தோம்.
மலையைப் பார்த்துநின்ற மரங்களில் ஒரு இலை கூட அசையவில்லை. அதனால், நாங்கள், காவலரின்
அறையில் விளக்கு எரிவதற்கு முன்பாகவே வெளியே சாலைக்கு வந்ததோடு, விடிவதற்கு முந்தைய
வானத்தை அதன் ஒளிரும் அனைத்து விண்மீன்களுடன், பளபளத்துக்கொண்டிருந்த கடலையும் பார்த்து
மகிழ்ந்தோம். அப்போது ஐந்து மணிகூட ஆகவில்லையென்றாலும் பல பயணிகளும் அந்தப் பாறைபடிந்த
கடற்கரையில், விட்டு விடுதலையான உணர்வினைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். மூன்று நாள்
தவம் முடித்த பாய்மரப் படகுகள், பாய்களை விரித்தன.
நாங்கள்
வெளியே சென்றபோது, காவலரின் அறை இருண்டிருந்ததின் மீது எந்தவித கவனமும் கொள்ளவில்லை.
ஆனால், வீட்டுக்குத் திரும்பும்போது, கடலைப் போலவே பொழுதும் பளபளக்கையில் அவரது அறைமட்டும்,
அப்போதும் இருண்டிருந்தது, எனக்கு வித்தியாசமாகத் தோன்றவே, கதவை இரண்டு முறை தட்டினேன்;
பதில் எதுவும் வரவில்லை. அதனால், கதவைத் தள்ளித் திறந்தேன். எனக்கு முன்பாகவே குழந்தைகள்
பார்த்துவிட்டார்கள் போலும்; திகிலில் அலறிக் கூச்சலிட்டனர். கூரையின் நடுவிட்டத்தில்
தொங்கிய தூக்குக் கயிறு கழுத்தை இறுக்கிய நிலையில், சிறந்த மாலுமி விருதுகள் மார்புப்
பகுதியில் குத்தப்பட்டிருந்த கடலோடி மேற்கோட்டுடன், அந்த வயதான காவலரின் உடல், அப்போதும்
வீசிக்கொண்டிருந்த ட்ரமான்டனாவின் இறுதிக் காற்றலையில் ஊசலாடிக்கொண்டிருந்தது.
விடுமுறையின்
மத்தியில், இழந்துவிட்டதான ஏக்கத் துயரம் ஏற்படப்போவது தவிர்க்கமுடியாததென உணர்ந்ததுடன்,
இனிமேல் ஒருபோதும் இங்குத் திரும்ப வரப்போவதில்லை என்ற மாற்றமுடியாத தீர்மானத்துடன்,
திட்டமிட்டிருந்ததற்கும் முன்பாகவே நாங்கள் அந்த நகரத்தை விட்டுக் கிளம்பினோம். பயணிகள்
நகரத் தெருக்களுக்குத் திரும்பி வந்திருந்தனர். ஓய்வு பெற்ற போர் வீரர்கள் ஒன்றின்
மீது ஒன்றினை மோதவிடும் உருட்டுப் பந்து விளையாட மனமின்றிப் போனதால், வெறிச்சிட்ட சதுக்கத்தில்
இசை கேட்டது. தாக்குப் பிடித்த நண்பர்கள் சிலர், ஒளிமிக்க ட்ரமான்டனாவின் இளந் தென்றல்
பொழுதில் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதைக் `கடல்நேரம்` மதுவகத்தின் தூசிபடிந்த
சாளரங்கள் வழியாகக் கண்டோம். ஆனால், அவை எல்லாமே கடந்த காலமாகிவிட்டன.
அதனால்தான்,
பொக்காசியோவின் அந்த விடிகாலைத் துயர்ப்பொழுதில் கடேக்வசுக்குத் திரும்பப் போகமாட்டேனென்று
அடம்பிடிக்கும் ஒருவரின், கண்டிப்பாக இறந்துவிடுவோமென்ற பேரச்சத்தினை, என்னைப் போல
வேறு எவரும் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், ஆப்பிரிக்க மூடநம்பிக்கைகளின் பிடிமானங்களிலிருந்து
அவனை விடுவிப்பதான ஐரோப்பியத் தீர்க்கத்துடன் அவனை இழுத்துக்கொண்டிருந்த ஸ்வீடானியர்களைத்
திசைதிருப்ப எந்த வழியுமில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒரு பகுதியினரின்
கைதட்டல் மற்றும் உற்சாகக் கூச்சலில் அவர்கள், கடேக்வசுக்குச் செல்லும் நீண்ட பயணத்துக்கு
அந்த மிகவும் பிந்திய இரவு நேரத்தில் கிளம்பத் தயாராகவிருந்த, குடிகாரர்கள் நிரம்பிய
வேனுக்குள் அவனை உதைத்து ஏற்றினார்கள்.
மறுநாள்
காலையில் தொலைபேசிக்குரல் ஒன்று என்னை எழுப்பியது. விருந்திலிருந்து திரும்பி வந்தபோது
சாளரத் திரையினை இழுத்து மூட மறந்திருந்தேன்; அப்போது என்ன நேரமென்று தெரியவில்லையென்றாலும்,
படுக்கையறை ஒளிமிக்க கோடை வெளிச்சத்தில் நிரம்பியிருந்தது. தொலைபேசியில் ஒலித்த கவலைக்குரலை,
என்னால் அப்போதைக்கு இனம்காணமுடியவில்லையென்றாலும், அது என்னைத் தூக்கத்திலிருந்தும்
தட்டியெழுப்பிவிட்டது.
”நேற்று
இரவு அவர்கள் கடேக்வசுக்குக் கொண்டுசென்ற பையனை உங்களுக்கு நினைவிருக்கிறதா?”
எனக்கு
வேறெதுவும் கேட்கவேண்டியிருக்கவில்லை. நான் நினைத்ததை விடவும் அது மிகமிக மோசமானது.
கடேக்வசுக்குத் திரும்பச் செல்வதை நினைத்து நடுங்கிய அந்தப் பையன், அறிவு மயக்கத்திலிருந்த
அந்த ஸ்வீடானியர்களின் கணநேரக் கவனமின்மையைப் பயன்படுத்தி வேகமாகச் சென்றுகொண்டிருந்த
அந்த வேனிலிருந்தும் அந்தப் படுகுழிக்குள் பாய்ந்துவிட்டிருக்கிறான்.
ஜனவரி
1982.
குறிப்புகள்
1. ட்ரமான்டனா – ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய
நாடுகள் சிலவற்றில் கோடைகாலத்தில் வீசும் வடதிசை நிலக்காற்று. இக்காற்று மரணத்தைச்
சுமந்து வருவதான ஒரு நம்பிக்கை ஸ்பெயினில் நிலவுகிறது.
2. வென்ரிலாக்குயிஸ்ட் – Ventriloquist
3. சிரிக்கும்போது தள்ளாடுபவன் – Weak with
Laughter என்னும் மரபுத்தொடர்
4. கோஸ்டா பிரேவா – கேட்டலோனியா நாட்டிலுள்ள
கடற்கரை Costa Brava
5. பேபல் – Babel எபிரேய மொழியில் பாபிலோனியா
பேபல் எனப்படுகிறது.
6. சொர்க்கத்தின் கட்டுப்பாடு – Control of
Paradise, செல்லப் பிராணிகள் வளர்ப்பு, நெகிழிப் பயன்பாடு, சூழல் பாதுகாப்புக்கான சிறப்பு
ஏற்பாடு, சுற்றுலா நகரங்களில் அழகு கெடாமல் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கைகள்
போன்றவை.
இக்கதையின்
ஆங்கிலப் பிரதி Strange Pilgrims (knopf, 1993)pdf – இல் உள்ளது.
மணல்வீடு, இதழ் எண் 37 - 38 ஏப்ரல் - செப்டம்பர் 2019 சிற்றிதழில் வெளியானது.
No comments:
Post a Comment