செல்லம்மாள் – நாடகம் / ச.ஆறுமுகம்
புதுமைப்பித்தனின் 108 ஆம் பிறந்த நாளில் அவரது `செல்லம்மாள்` சிறுகதையினை `மூன்றாம் அரங்கு` அமைப்பினர் சென்னை, எலியட்ஸ் கடற்கரைச் சாலை, கட்டிட வளாகத்தில் 10. 05. 2014 மாலை, நாடகமாக நிகழ்த்திக் காட்டினர்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக, மனைவியோடு சென்னையில் குடியேறி, ஜவுளிக்கடை குமாஸ்தாவாகப் பணியாற்றும் பிரம்மநாயகம் பிள்ளைக்கு குழந்தைகள் இல்லை. மனைவி செல்லம்மாளுக்கு அடிக்கடி கை, கால் சோர்ந்து, ஒரு நெஞ்சு வலியும் அதைத் தொடர்ந்து மயக்கமும் வந்து விடும். பிரமநாயகம் பிள்ளையின் முதலாளி கொடுக்கும் சம்பளம் இரண்டு உடல்கள் கீழே விழுந்துவிடாமல் உயிரோடிருக்கும் அளவுக்கு, வயிற்றுப் பாட்டுக்கு மட்டுமாவது போதுமானதென்றாலும் செல்லம்மாளின் நோய் அதில் பாதிக்கும் மேலாகச் சாப்பிட்டு விடுகிறது. அதனாலேயே அவருக்குக் கடன் தொல்லை. நிம்மதியற்ற வாழ்க்கை. காலை ஒன்பது மணிக்கு வேலைக்குச் செல்லும் பிரமநாயகம்பிள்ளை இரவு பத்து மணிக்கு ஜவுளிக்கடை மூடியபிறகுதான் வீட்டுக்கு வருவார். செல்லம்மாள் உடல்நிலை சரியாக இருந்து ஏதேனும் சமைத்திருந்தால் சரி, இல்லையென்றால், அதன் பிறகு அடுப்பு மூட்டி சமையல் செய்து செல்லம்மாளுக்கும் கொடுத்து, தானும் சாப்பிடுவார். வீட்டில் எதுவுமில்லையென்றாலும் ஒரு வெந்நீராவது வைத்து மனைவிக்குக் கொடுத்து, தவிடு ஒத்தடம் கொடுத்து, கை, காலைப் பிடித்து, ஆசுவாசப்படுத்திவிட்டுத்தான் படுப்பார். இப்படியான வாழ்க்கையில் சொந்த ஊருக்குப் போய் வருவது பற்றிப் பேசிக்கொள்வதுதான் இருவருக்கும் மகிழ்ச்சியான ஒரு போதை.
ஒருமுறையாவது திருநெல்வேலிக்குப் போய் வீட்டு அரிசி சாப்பிட்டு, கொஞ்சநாள் இருந்துவிட்டு வரும்போது நெல்லிக்காய் அடையும் ஒரு படி முருக்க வத்தலும் கொண்டுவரவேண்டும் என்பதுதான் செல்லம்மாளின் மிகமிகப் பெரிய ஆசை. அன்று காலை பிரமநாயகம் பிள்ளை, சாப்பாட்டுப் பொட்டணத்துடன் கடைக்குக் கிளம்பும்போது, மயக்கத்திலிருந்து அப்போதுதான் எழுந்து, கையில் உமிக்கரியுடன் நிற்கும் செல்லம்மாள், அன்று அவருக்குப் பிடித்தமான காணத் துவையல் அரைத்து புளிக்குழம்பும் வைக்கப்போவதாகச் சொல்கிறாள். அவரோ ஓய்வெடுக்கச் சொல்கிறார். அந்த வருடம் தீபாவளிக்காகவாவது அவளுக்கு ஒரு சேலை எடுத்துக் கொடுத்துவிடுவதென்று முதலாளியிடம் சொல்லி அவளுக்குப் பிடித்தமானதை எடுத்துக்கொள்ளட்டுமென்று மூன்று சேலைகளை வீட்டுக்கு எடுத்து வருகிறார். வீடோ, விளக்கு ஏற்றப்படாமல், இருண்டு கிடக்கிறது. உள்ளே சென்று பார்த்தால் வலதுகையைக் கொடுங்கையாக்கி செல்லம்மாள் மயங்கிக் கிடக்கிறாள். சுவாசம் மட்டும் மெதுவாக இழுத்துக் கொண்டிருக்கிறது. வெந்நீர் ஒத்தடம், தவிட்டு ஒத்தடம், கற்பூரத்தைலம் எதற்கும் மசியவில்லை. கடைசியாக அவருக்குத் தெரிந்த வைத்தியமாக சுக்குத் துண்டு ஒன்றினை கைவிளக்கில் சுட்டு, அதன் புகையினை மூக்கில் செலுத்த செல்லம்மாளின் உடலில் சிறிது அசைவு தென்படுகிறது. மீண்டும் சுக்குப் புகையைச் செலுத்த அதிரும் தும்மலுடன் செல்லம்மாள் விழித்தெழுகிறாள். நாட்டு வைத்தியர் பால் கஞ்சி கொடுத்து ஓய்வெடுக்கச் சொல்கிறார். பால்கார நாயுடுவிடம் மூன்று நாட்களுக்கு பசும்பால் தருமாறு ஏற்பாடு செய்யப்படுகிறது. மீண்டும் செல்லம்மாள் மயக்கத்தில் விழ, அலோபதி வைத்தியர் அழைத்து வரப்படுகிறார். அவர் ஒரு ஊசி குத்தி, இதுபோன்ற நோய்க்கெல்லாம் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்துத்தான் வைத்தியம் பார்க்க வேண்டுமெனச் சொல்லி, எதற்கும் மறுநாள் காலையில் தகவல் சொல்லுமாறு சொல்லிச்செல்கிறார். காலையில் செல்லம்மாள் மரணித்துக் கிடக்கிறாள். பிரமநாயகம்பிள்ளையின் மனத்தில் துக்கம் பெருகினாலும், அவர் நிலைகுலைந்துவிடவில்லை. ஆகவேண்டிய காரியங்களை நிதானமாக மேற்கொள்கிறார். சடலத்தைக் குளிப்பாட்டி, அவர் கொண்டு வந்திருந்த சேலைகளில் அவளுக்குப் பிடித்தமான பச்சைநிறப் புதுச் சேலையைப் போர்த்துகிறார். குத்துவிளக்கைப் பொருத்தி நிறைநாழி வைத்து, சாம்பிராணிப் புகை போடுகிறார். காலையில் பக்கத்து வீட்டுப் பெண்ணின் அழுகைச் சத்தத்தோடு சங்கும் சேகண்டியும் ஒலிக்கிறது. இதுவே கதை.
கடுமையான வறுமை, நோய், உள்ளூற ரணமாக அரிக்கும் நிம்மதியற்ற வாழ்க்கையிலும் அந்த இரண்டு எளிய உயிர்களும் ஒருவருக்கொருவர் ஆதாரமாக வாழும் வாழ்க்கையையும் அவர்களின் அன்பும் பரிவும் மிக்க அந்நியோன்யத்தையும் காட்டுவதையுமே நோக்கமாகக்கொண்ட இக்கதையினை நாடகமாக நிகழ்த்திக் காட்டுவதென்பது எளிதான காரியமல்ல. அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் களென்பதே நாடகக் குழுவினருக்கு வெற்றிதான்.
நாடகம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்தில், ஒரே ஒரு முறை விமான இரைச்சல் மட்டுமே பார்வையாளர்களை இந்த உலகிற்கு இழுத்து வந்தது. மற்றபடி நாடகமே முழுமையான கவனத்தையும் ஈர்த்திருந்தது. இசையென்று எதுவும் இல்லை. ஒளியமைப்பு, நிகழிடம், அனைத்தும் மிகப் பொருத்தமாக மிகுந்த கவனத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. சமையலறைக்கும் வசிப்பறைக்கும் நடுவிலிருந்த தடுப்பு கூட திருநெல்வேலி குச்சு வீடுகளின் பிள்ளைச் சுவர் பாணியில் இயல்பாக இருந்தது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான ரூபா, செல்லம்மாளாகவும் பேராசிரியர் பாலசுப்பிரமணியன், பிரமநாயகம் பிள்ளையாகவும் சிறப்பாக வாழ்ந்து காட்டினர்.
நாடக நிகழ்வின் தொடக்கமாக உரையாற்றிய பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகளுக்கு அறிமுகம் ஏதும் தேவைப்படவில்லையென்றும், மனிதர்களின் உயர் கண்ணியத்தைச் சிறப்பாகக் காட்டும் செல்லம்மாள் கதை, கதை உலகம் உள்ளளவும் நினைவுகொள்ளப்படுமென்றும் குறிப்பிட்டிருந்தார். நாடகம் முடிந்தபின் புதுமைப்பித்தனின் மகளான திருமதி தினகரி சொக்கலிங்கம் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து அவரது தந்தை இன்னும் உயிரோடிருப்பதான நினைவை நாடகம் வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். பேராசிரியர் செ. ரவீந்திரன், வெளி. ரங்கராஜன் மற்றும் கூத்துப் பட்டறையைச் சேர்ந்த கலைஞர் எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட கலைஞர் ஒருவர் நாடகம் சிறப்புற நிகழ்த்தப்பட்டதையும் நடிகர்களின் சிறப்பான நடிப்பினையும் பாராட்டி உரையாற்றினர்.
சிறுகதையின் திருநெல்வேலி உச்சரிப்பினை ரூபா முழுவதுமாக உள்வாங்கி அதனை வெளிப்படுத்தியிருந்த விதம் மிகவும் இயல்பாகப் பொருந்துமாறு இருந்தது. கதை சொல்கிற பக்கத்து வீட்டுப் பெண்பாத்திரமாக நடித்தவருக்கும் அந்த மொழி சிறப்பாகவே இருந்தது. பேராசிரியரின் உச்சரிப்பு அப்படியான ஒரு பொருத்தத்தில் இல்லையென்பது வெளிப்படையான ஒரு உறுத்தலாகத் தொடர்ந்துகொண்டேயிருந்தது.
செல்லம்மாளின் மரணத்தைக் கேள்விப்பட்டதும் ஜவுளிக்கடை ஊழியரின் முதுகு மட்டும் குலுங்குவதான நடிப்புத் திறன், பால்கார நாயுடு, நாட்டு வைத்தியர், அலோபதி வைத்தியர் போன்ற பாத்திரங்கள் சிறுகதை மாந்தர்களை அப்படியே கண்முன் கொண்டுவந்தனர்.
நாடகத்தின் உரையாடல் முழுவதும் புதுமைப்பித்தனின் கதைமொழியிலேயே நிகழ்த்தப்பட்டதுடன், கதைசொல்லியாகக் காட்டப்படும் பக்கத்து வீட்டுப் பெண்ணும் அதே மொழியிலிருந்து சிறிதும் வேறுபடாமல் கதைசொல்வதும் புதுமைப்பித்தனின் மொழியிலிருந்து, வார்த்தைகளிலிருந்தும் கூடச் சிறிதும் விலகிவிடக்கூடாதென்ற உறுதியுடன் செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது நிச்சயமாக இந்த நாடகத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதே நேரத்தில் இயல்பான ஒரு நாடகமாக இல்லாமல் இலக்கிய மொழி பேசும் உரையாடல் நாடகமாகவும் தோற்றமளிக்கிறது.
வெளி, ரங்கராஜனும் சிறுகதை மொழியினை நாடக மொழியாக்குவது குறித்தும் சிறுகதையின் எந்தெந்த நிகழ்வுகளை நாடகமாக்குவது என்பது குறித்தும் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனக் குறிப்பிட்டார்.
சிறுகதை வாசிப்பனுவத்தில் நம் நெஞ்சுக்குள் எப்போதும் நிழலாடுகிற பிம்பங்களை நாடகப் பிம்பங்கள் உணர்த்தவில்லையெனினும் மொத்தத்தில் மிகவும் கடினமான பணியை மேற்கொண்டு வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ள இயக்குநர் கருணா பிரசாத், தலைமை நிர்வாகப் பணி மேற்கொண்ட கி. பார்த்திபராஜா மற்றும் நாடகக் குழுவினர், நாடகத்திற்கு ஆதரவளித்த புரவலர்களான திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மற்றும் பனுவல் புத்தக நிலையத்தினர் அனைவரும் மிகுந்த பாராட்டுதல்களுக்கு உரியவர்களாகின்றனர்.
ச. ஆறுமுகம்
அலைபேசி 9442944347
நடிகர் சாருகாசன் இதே போன்றதொரு நாடகத்தில் நடித்து அது பொதிகை தொலைக்காட்சியில் வெளிவந்ததாக நினைவு! இந்த கதைச்சுருக்கம் அருமை! நன்றி.
ReplyDelete