Showing posts with label ஸ்பானியச் சிறுகதை (சிலி). Show all posts
Showing posts with label ஸ்பானியச் சிறுகதை (சிலி). Show all posts

Thursday, 21 January 2016

ஸ்பானியச் சிறுகதை (சிலி) - தொலைபேசி அழைப்பு - Phone Calls By Roberto Bolano

தொலைபேசி அழைப்பு ( Phone Calls ) 

ஸ்பானியம் : இராபர்ட்டோ பொலானோ (சிலி) Roberto Bolano 

ஆங்கிலம் : மார்க் ஸ்கேஃபர்  Mark Schafer 

தமிழில் ச. ஆறுமுகம்.

download (2)







இராபர்ட்டோ பொலானோ (28, ஏப்ரல் 1953 – 15 ஜூலை 2003)
மரணம், நிச்சயமென்றபோதிலும், நாம் ஒருபோதும் வாழ்வதை நிறுத்துவதில்லை. அதுபோலத்தான், ஒவ்வொரு புத்தகமும் முடிவுக்கு வருகின்றபோதிலும், வாசிப்பினை நாம், ஒருபோதும் நிறுத்துவதில்லை.
இராபர்ட்டோ பொலானோ
இராபர்ட்டோ பொலானாவை வாசிப்பதென்பது, இரகசியக் கதையைக் கேட்டது போல், குறிப்பிட்ட ஒன்றின் இழை காட்சியாகி, கலை மற்றும் வாழ்க்கையின் பாதைகள் தொடுவானத்தில் இணைவதை, இணைந்து ஒரு கனவு போல் நின்றாடுவதைக் கண்டு, அங்கிருந்து நாம் விழித்தெழுந்து உலகத்தினை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவதாகும்.
– ப்ரான்கைன் ப்ரோஸ் (நியூயார்க் டைம்ஸ் புக் ரிவ்யூ)
*****


`பி` `எக்ஸ்` மீது காதலாகவே இருக்கிறான். அது ஒரு துரதிர்ஷ்டமான காதல்தான். காதலிக்கும் ஒவ்வொருவரும், நினைப்பது மற்றும் சொல்வது போலவே சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, `பி`யும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் `எக்ஸ்`சுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறான். `எக்ஸ்` அவனிடமிருந்து துண்டித்துக் கொள்கிறாள்; ஆம், தொலைபேசி மூலமாகவே அவனிடமிருந்து துண்டித்துக்கொள்கிறாள். `பி` முதலில், உளைச்சலில் தான் இருக்கிறான். ஆனால், பின்னால், எல்லாவற்றையும் போலவே அதனையும் கடக்கிறான். ஆண்டுகள் பலவும் கடக்கின்றன.
செய்வதற்கு வேலையொன்றும் இல்லாத, ஒரு இரவில், இரண்டே தொலைபேசி அழைப்புகளில் `பி` `எக்ஸ்`சுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டான். இருவரில் எவருமே இளமையாக இல்லை என்பதை ஸ்பெயினின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லையைக் கூடக் கடந்துவிடும் அவர்களது குரலிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். அவர்களது நட்பு மறுபடியும் பிறப்பெடுக்கிறது; சில நாட்களுக்குப் பின், அவர்கள் நேரில் சந்திப்பதெனத் தீர்மானிக்கின்றனர்.

இருவருமே மணவிலக்கு, புதிய நோய்கள், விரக்தி எனப் பலவற்றையும் சுமக்கின்றனர். எக்ஸின் நகரத்துக்குச் செல்லும் தொடரியில் ஏறும்போதுகூட, `பி`க்கு காதல் இல்லைதான். எக்ஸின் வீட்டிற்குள்ளேயே முதல் நாள் முழுவதும் அடைபட்டுக்கொண்டு அவரவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியே பேசுகின்றனர். (உண்மையில் `எக்ஸ்` தான் பேசுகிறாள்; `பி` கவனித்துக் கேட்டு, அவ்வப்போது கேள்வி கேட்கிறான்.) இரவில் தன்னுடன் படுத்துக்கொள்ளுமாறு `எக்ஸ்` அழைக்கிறாள். எக்ஸுடன் படுக்கும் ஆர்வம் ஒன்றும் உள்ளூற இல்லையென்றாலும், அவன் ஒப்புக்கொள்கிறான். காலையில் கண்விழிக்கும்போது `பி` மீண்டும் காதல்வயப்படுகிறான். ஆனால், அவன் எக்ஸ் மீது காதல்கொள்கிறானா அல்லது காதல்வயப்படுவது என்ற சிந்தனை மீது காதல்கொள்கிறானா? அவர்களுக்கிடையிலான உறவு சிக்கலாக இருந்தாலும், அது உணர்வு பூர்வமாக ஆழமாகிறது. நாளுக்கு நாள் எக்ஸ் தற்கொலையின் விளிம்புக்கே செல்கிறாள் – மாத்திரைகள், அவளுக்கு எந்தவிதத்திலும் உதவாத ஏராளமான பலவகை மாத்திரைகள் என மனநலச் சிகிச்சையிலிருக்கிறாள். அவள் அடிக்கடி அழுகிறாள்; எந்தக் காரணமும் இல்லாமலேயே அழுகிறாள். அதனால் `பி` எக்ஸுடனிருந்து, அவளைப் பார்த்துக்கொள்கிறான்.

அவன் அவளைக் கனிவுடன், மிகுந்த அக்கறையுடன், ஆனாலும் கூடவே அருவருப்பாகவும்தான் பார்த்துக்கொள்கிறான். அவனுடைய சேவைப்பணிகள் என்னவோ உண்மையாகக் காதல்கொண்ட நபரைப் போன்றதாகவே தோன்றுகின்றன. `பி` அதனை மனத்தாலேயே உணர்கிறான். மன அழுத்தத்திலிருந்தும் அவளை வெளியே கொண்டுவர அவன் முயற்சிக்கிறான்; ஆனால் அது, இன்னும் பாதாளத்திற்கு, அல்லது அதலபாதாளமென அவன் கருதியதொரு ஆழத்திற்கு அழுத்துவதில்தான் போய் முடிகிறது. அவன் தனியாக இருக்கும்போது அல்லது `எக்ஸ்` தூங்குவதைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது, சில நேரங்களில் எல்லாமே அதனதன் முடிவுக்குச் சென்றுவிட்டதாகவே உணர்கிறான். அதனை மாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாக, அவனது இழந்த காதல்களை மீண்டும் நினைவுகூர முயற்சிக்கிறான்; எக்ஸ் இல்லாமலே, அவனால் தனியாக வாழமுடியுமெனத் தனக்குத்தானே நம்பிக்கை கொள்ள முயல்கிறான்.

ஒரு நாள் இரவில் எக்ஸ் அவனை வெளியேறச் சொல்கிறாள்; `பி`யும் தொடரியைப் பிடித்து நகரத்தை விட்டுப் புறப்படுகிறான். அவனை வழியனுப்ப `எக்ஸ்` தொடர்வண்டி நிலையத்திற்கு வருகிறாள். அவர்களது பிரியாவிடை பாசம் மிக்கதாகத் தாங்கொணாத் துயரம் மிக்கதாக இருக்கிறது. படுக்கை வசதிப் பெட்டியிலேயே `பி` பயணித்தும் வெகுநேரம் வரையில் அவனால் தூங்க இயலாமலாகிறது. கடைசியில் அவன் தூங்கும்போது, பனியில் உருவாக்கப்பட்ட ஒரு குரங்கு பாலைவனத்தில் நடந்துசெல்வதாக ஒரு கனவு காண்கிறான். குரங்கின் பாதை அடைபட்டு, அநேகமாகத் தோல்வி தென்படுகிறது. ஆனால், குரங்கு அதனை அலட்சியப்படுத்தவே விரும்புகிறது; அதன் தந்திரமே அதன் உறுதியாக மாறுகிறது. உறைந்த நட்சத்திரங்களே சாட்சியாக, அது, அந்தப் பாலையில் இரவெல்லாம் நடக்கிறது. அவன் கண்விழித்தபோது, (இப்போது அவன் பார்சிலோனாவின் சான்ட்ஸ் தொடர்வண்டி நிலையத்திலிருக்கிறான்.) அவனது கனவின் பொருளைப் புரிந்துகொள்வதாக, (அப்படியொன்று இருந்தால்) அவன் நம்புவதோடு, தன் பாதையே சரியெனத் தன்னை ஆறுதல்படுத்திக்கொள்கிறான்.

அன்று இரவு அவன் எக்ஸை அழைத்து, அவன் கண்ட கனவினைச் சொல்கிறான். எக்ஸ் எதுவுமே சொல்லவில்லை. அடுத்த நாள் அவன் மீண்டும் எக்ஸை அழைக்கிறான். அடுத்த நாளும் அழைக்கிறான். ஒவ்வொரு அழைப்பிலும் `பி` நேரத்தை வீணடிப்பது போல, எக்ஸின் நடவடிக்கைகள் இறுகிச் சுழியும் முகத்தைக் காட்டுகின்றன. நான் மறைந்துகொண்டிருக்கிறேன். அவள் என்னைத் துடைத்து, அழித்துக்கொண்டிருக்கிறாள், என `பி` நினைக்கிறான்.

அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாளென்றும், ஏன் அப்படிச் செய்துகொண்டிருக்கிறாளென்றும் அவன் அறிவான். ஒரு நாள் இரவில், தொடரியைப் பிடித்து, மறுநாள் அவள் வாசலில் நிற்பதாக, `பி` எக்ஸை மிரட்டுகிறான். அந்தமாதிரி நினைப்புகளையெல்லாம் உன் மனத்திலிருந்து அழித்துவிடு என்கிறாள், எக்ஸ். நான் வந்தே விடுவேன். இனிமேலும் இந்தத் தொலைபேசிகளை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது, நான் பேசும்போது, எனக்கு, உன் முகத்தைப் பார்க்க வேண்டுமென்கிறான், `பி`. நீ வந்தால், நான் கதவைத் திறக்கவே மாட்டேன், எனச் சொல்கிற எக்ஸ் ஒலிவாங்கியை அப்படியே தொங்கலில் விடுகிறாள். `பி`க்கு ஒன்றினை மட்டும் விளங்கிக்கொள்ள இயலவில்லை. மிக நீண்ட காலமாக, அவன் நினைக்கிறான், ஒரு மானிடப் பெண்ணால், அவளது ஆசைகளை, அவளது உணர்வுகளை ஒரு உச்சத்திலிருந்து அதன் எதிர் உச்சத்திற்கு எப்படி மாற்றிக்கொள்ள முடிகிறது? பின்னர் அவன் குடிபோதையில் ஆழ்ந்து, ஒரு புத்தகத்தில் ஆறுதலைத் தேட முயல்கிறான். நாட்கள் நகர்கின்றன.
ஒன்றரை ஆண்டுகள் கழிந்தபின், ஒரு நாள் இரவில், `பி` தொலைபேசியில் எக்ஸை அழைக்கிறான். அவனது குரலை எக்ஸ் உணர்ந்துகொள்ளச் சிறிது நேரம் பிடிக்கிறது. ஓ, நீதானா, என அவள் சொல்கிறாள். அவன் மயிர்க்கால்களைக் குத்திடச் செய்வதற்கு, அந்த அலட்சியமே போதுமானதாக இருக்கிறது. என்றாலும், எக்ஸ் எதையோ அவனிடம் சொல்லவிரும்புவதாக அவன் நினைக்கிறான். நேற்றுத்தான் பேசியது போல, நேரம் போவதே தெரியாதது போல, அவள் கேட்டுக்கொண்டிருப்பதாக அவன் நினைக்கிறான். எப்படியிருக்கிறாயெனக் கேட்கிறான், `பி.` ஏதாவது பேசு, என்கிறான்.

ஓரசைச்சொற்களிலயே பதில் சொல்கிற எக்ஸ் சிறிது நேரத்துக்குப் பின் ஒலிவாங்கியைத் தொங்கலில் விடுகிறாள். திகைத்துக் கடுப்பேறிய `பி` எக்ஸின் எண்ணுக்கு மீண்டும் சுழற்றுகிறான். எனினும், இணைப்பு கிடைத்தபோது, `பி` எதுவும் பேசாமலிருக்கவே விரும்புகிறான். மறுமுனையில் எக்ஸின் குரல் கேட்கிறது : ஹலோ, ஹலோ, யாரு? அமைதி. பின்னர் அவள் ஹலோ சொல்வதோடு அமைதியாகிறாள். எல்லாம், நேரம் – நேரம் தான் பியையும் எக்ஸையும் பிரித்தது. `பி`யால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை – தொலைபேசி இணைப்பு வழியாகக் கடக்கின்ற நேரம், இணைப்பின் தன்மையைக் காட்டும் விதமாக அழுத்தமாகி, நீண்டு கிடந்தது. `பி` அதை உணர்ந்துகொள்ளாமல், அழத் தொடங்குகிறான். அழைப்பது யாரென எக்ஸ் அறிவாள் என்பது `பி`க்குத் தெரியும். பின்னர், அவன் அமைதியாக, ஒலிவாங்கியைத் தொங்கலில் விடுகிறான்.
இந்தக் கட்டம் வரையிலும், இது நன்குதெரிந்த ஒரு கதைதான் – சோகமானதென்றாலும் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான். மேற்கொண்டு எக்ஸை ஒருபோதும் அழைக்கக்கூடாது என்பது `பி`க்குப் புரிகிறது. ஒருநாள், அவனது வாசற்கதவு தட்டப்படும் ஓசை அவனுக்குக் கேட்கிறது. அங்கே `ஏ`யும் `இசட்`டும் நிற்கின்றனர். அவர்கள் காவல்துறைப் பணியிலிருக்கும் காவலர்கள்; அவர்கள் அவனைச் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றனர். என்ன காரணமென `பி` கேட்கிறான். அதைச் சொல்வதற்கு `ஏ` தயாராக இல்லை. அருவருப்பாகச் சுற்றிவளைத்த பின், `இசட்` விவரிக்கிறான். ஸ்பெயினின் மறுமூலையில், மூன்று நாட்களுக்கு முன்னர் எக்ஸை யாரோ ஒருவர் கொலை செய்திருக்கிறார்.

முதலில், `பி` நிலைகுலைந்துவிட்டான்; பின்னர், அவனும் கூட, ஒரு சந்தேகத்திற்குரிய நபர் என்பதை உணர்கிறான்; உயிர்வாழும் இயல்பூக்கம் அவனை எச்சரிக்கைகொள்ளவைக்கிறது. காவலர்கள் குறிப்பான இரண்டு நாட்கள் பற்றி அவனைக் கேள்விகள் கேட்கின்றனர். அந்த இரண்டு நாட்களில் யார், யாரைப் பார்த்தான், என்னென்ன செய்தான் என்று `பி`க்கு ஞாபகம் இல்லை. அவனுக்குத் தெரியும் – எப்படித் தெரியாமலிருக்கமுடியும் – அவன் பார்சிலோனாவை விட்டு அகலவில்லை. உண்மையில் அவன், ஊரகப் பகுதியைவிட்டு, அவ்வளவுக்கு ஏன், வீட்டைவிட்டுக்கூட வெளியேறவில்லை; ஆனால், அதை அவனால் நிரூபிக்க இயலாது. காவல்துறை அவனைப் பிடித்துச் செல்கிறது.

காவல்நிலையத்திலேயே `பி` இரவைக் கழிக்கிறான். விசாரணையின் ஒரு கட்டத்தில் அவர்கள் அவனை எக்ஸின் நகரத்துக்கு அழைத்துச் செல்வார்களோவென்றும், அதன் சாத்தியக்கூறு, அவனுக்கு வினோதமான ஒரு மருட்டலாகவும் தோன்றியது; ஆனால், கடைசியில், அது நிகழவில்லை. அவர்கள் அவனுடைய கைரேகை அடையாளங்களை எடுத்துக்கொண்டதுடன் இரத்தப் பகுப்பாய்வு செய்வதற்கு அனுமதியும் கோரினர். `பி` ஒப்புக்கொண்டான். அடுத்த நாள் காலையில் அவர்கள் அவனை வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கின்றனர். அலுவல்பூர்வமாக, `பி` கைது செய்யப்படவில்லை. கொலை வழக்கினை ஒரு முடிவுக்குக் கொண்டுவர, அவன் காவல்துறையுடன் ஒத்துழைப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறான்.

வீட்டிற்கு வந்ததும், `பி` படுக்கையில் விழுந்து, உடனேயே அயர்ந்து தூங்குகிறான். அவன் பாலைவனம் மற்றும் எக்ஸின் முகம் பற்றி, கனவுகள் காண்கிறான். விழிப்பதற்கு முன், அவை இரண்டும் ஒன்றே எனப் புரிந்துகொள்கிறான். அவன் அந்தப் பாலைவனத்தில் தொலைந்துபோனதான முடிவுக்கு வருவதில் அவனுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.
அன்று இரவில், அவன் சில ஆடைகளை பயணப்பையில் திணித்துக்கொண்டு, தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்று, கடைசிச் செல்லிடமாக எக்ஸின் நகரத்திற்கே செல்கின்ற தொடரியைப் பிடிக்கிறான். ஸ்பெயின் நாட்டின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரையிலுமான அந்த முழு இரவுப் பயணத்தின் போது, அவனால் தூங்கவே முடியவில்லை. எக்ஸுக்கு அவனால் கொடுக்க முடிந்திருக்கிற அனைத்தைப்பற்றியும், ஆனாலும் கொடுக்காமலிருந்ததைப்பற்றியும், அவனால் என்னவெல்லாம் செய்யமுடிந்திருக்குமென்பது பற்றியும், ஆனாலும் செய்யாமலிருந்தது பற்றியும் நினைத்துக்கொண்டே, நேரம் முழுவதையும் கழிக்கிறான்.

மேலும் அவன் நினைக்கிறான்: நான் இறந்த எக்ஸாக இருந்திருந்தால், இந்தப் பயணத்தை வேறு திசையில் மேற்கொண்டிருக்கமாட்டேன். மேலும் அவன் நினைக்கிறான்: அதுவேதான், நான் எப்படி இப்போதும் உயிரோடிருக்கிறேன் என்பதற்குத் மிகத்துல்லியமான பதிலாகும். தூக்கமற்ற அந்தப் பயணத்தில், அவன், கடைசி முறையாக, விருப்பமில்லாமலே, எக்ஸ் முதன்முதலாக எப்படித் தோற்றமளித்தாளோ, அதனை அப்படியே மனக்காட்சியாகப் பார்க்கிறான்; அவன் மீண்டும் அவள் மீதான காதலை உணர்கிறான்; தன் மீது வெறுப்பு கொள்கிறான். அதிகாலையிலேயே வந்துசேர்ந்துவிட்ட அவன், நேராக எக்ஸின் உடன்பிறந்தான் வீட்டுக்குச் செல்கிறான். எக்ஸின் உடன்பிறந்தான் வியப்புடன் குழப்பமுமடைந்தாலும், அவனை வரவேற்றதோடு, காபி சாப்பிடுமாறு உபசரிக்கத் தவறவில்லை.

அவன் அப்போதுதான் எழுந்து, முகம் கழுவியிருந்தான்; அரை ஆடையிலேயே இருந்தான். அவன் குளித்திருக்கவில்லையென்பதை `பி` கவனிக்கிறான். அவன் முகத்தை மட்டுமே கழுவிவிட்டு, தலையில் தண்ணீரைத் தெளித்துத் தடவியிருக்கிறான். அவனது காபி யோசனையினை `பி` ஏற்றுக்கொள்கிறான்; பின்னர், அவன், எக்ஸின் கொலை குறித்து அப்போதுதான் தெரியவந்ததாகவும், காவல்துறையினர் அவனை விசாரித்ததாகவும், அதனால் என்ன நடந்ததென்று அவனுக்குச் சொல்லவேண்டுமென்பதற்காகவே, வந்ததாகவும் சொல்கிறான். அது பயங்கரமான துயரம்தான். ஆனாலும் இதிலெல்லாம் நீங்கள் என்ன செய்துவிட முடியுமென்றுதான் நான் நினைக்கிறேனென்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான், சமையலறையில் காபி தயாரித்துக்கொண்டே.

நான்தான் கொலைசெய்திருப்பேனோ, என காவல்துறைக்குச் சந்தேகம், என்கிறான், `பி`. எக்ஸின் உடன்பிறந்தான் சிரிக்கிறான். உங்களுக்கு எப்போதுமே துரதிர்ஷ்டம் தான் என்று அவன் சொல்கிறான். நான்தான் உயிரோடிருக்கிறேனே, அப்படியும், அவன் அப்படிச் சொல்வது வேடிக்கைதானென `பி` நினைக்கிறான். ஆனால், அதே நேரத்தில், எக்ஸின் உடன்பிறந்தான் தன்னைச் சந்தேகிக்கவில்லையென்பதற்காக அவன் மீது நன்றிகொள்கிறான். பின்னர், எக்ஸின் உடன்பிறந்தான் வேலைக்குச் செல்கிறான். `பி` வீட்டிலேயே இருக்கிறான். சிறிது நேரமானதும் சோர்வடைந்து, ஆழ்ந்த உறக்கத்தில் விழுகிறான். எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே, `எக்ஸ்` அவன் கனவில் தோன்றுகிறாள்.
விழித்தபோது, கொலைகாரனைத் தனக்குத் தெரியுமென அவன் நினைக்கிறான். அவன் முகத்தை, `பி` பார்த்திருக்கிறான். அன்று இரவு, அவன் எக்ஸின் உடன்பிறந்தானோடு வெளியே செல்கிறான். அவர்கள் மதுவகங்களுக்குச் சென்று ஒன்றுமில்லாத, பொதுவான சில விஷயங்களைப் பேசுகிறார்கள். ஆனால், போதை வேண்டுமென்று எவ்வளவுதான் அதிகம் சிரமப்பட்டு, அதிகம் குடித்தாலும் போதை ஏறவில்லை.

வீட்டுக்குச் செல்வதற்காக, ஆளரவமற்ற தெருக்களில் அவர்கள் நடக்கும்போது, ‘’ஒருமுறை எக்ஸைத் தொலைபேசியில் அழைத்துவிட்டுப் பேசாமலிருந்துவிட்டதாக, `பி` அவனிடம் சொல்கிறான். நாய்க்குப் பிறந்தவனே, என்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். நான் அப்படி ஒரே ஒருமுறைதான் செய்தேன், ஆனால், அதுபோன்ற அழைப்புகள் எக்ஸுக்கு அடிக்கடி வருகின்றன என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். ஆனால், அது நான்தானென எக்ஸ் நினைத்தாள். என்கிறான், `பி`. நான் பேசுவதைக் கேட்கிறாயா? என்கிறான் `பி`. அந்தப் பெயர் தெரியாத அழைப்பாளிதான் கொலைகாரனா? எனக் கேட்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். அவனேதான்! ஆனால், அது நான்தான் என்று எக்ஸ் நினைத்தாள், என்கிறான், `பி`. எக்ஸின் உடன்பிறந்தான் கடுகடுத்தான்.

அவளுடைய பழைய காதலர்களில் ஒருவன்தான் கொலைகாரனென்றல்லவா நான் நினைத்தேன். அவளைப் பெண் கேட்டு, நிறையப் பேர் வந்தனர், என்கிறான், அவன். பதிலெதுவும் சொல்லாமலிருப்பதே நல்லதென்று (எக்ஸின் உடன்பிறந்தான், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவில்லையென்று தோன்றுகிறது) நினைக்கிறான். `பி`. வீடு சேரும்வரையில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
மின்னேற்றியில் செல்லும்போது, வாந்தியெடுக்கவேண்டும் போல பி உணர்கிறான். வாந்தியெடுக்கப் போகிறேன், என்கிறான், அவன். கொஞ்சம் பொறுத்துக்கொள், என்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். பின்னர், அவர்கள் அறைக்கூடத்தில் விரைந்து கடக்க, எக்ஸின் உடன்பிறந்தான். கதவைத் திறக்கவும், அம்பு போலக் குளியலறை நோக்கிப் பாய்ந்தான், `பி`. ஆனால், அங்கு சென்றதும் வாந்தி வரவில்லை; வாந்தியெடுக்கவும் தோன்றவில்லை. அவனுக்கு வியர்த்துக் கொட்டுகிறது; வயிறு வலிக்கிறது; ஆனால் வாந்தியெடுக்க முடியவில்லை.

கழிப்பறைக் கோப்பையின் மூடி உயர்ந்து திறந்திருக்க, அது, அவனுக்குப் பொக்கை வாய் ஒன்று, ஈறுகளைக் காட்டிக் கேலியாகச் சிரிப்பது போலிருக்கிறது. முகத்தைக் கழுவியபின், கண்ணாடியில் பார்க்கிறான்: முகம் வெற்றுக் காகிதம் போல வெளுத்துப் போயிருக்கிறது. அந்த மீதி இரவில் அவனால் தூங்கவே முடியவில்லை. வாசிக்க முயற்சித்துக்கொண்டும், எக்ஸின் உடன்பிறந்தான் குறட்டை விடுவதைப் பார்த்துக்கொண்டும் நேரத்தைக் கடத்துகிறான். அடுத்த நாள் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விடைபெறும் நல்வாழ்த்து சொல்கின்றனர். `பி` பார்சிலோனாவுக்குப் புறப்படுகிறான். ‘’இங்கே எக்ஸ் இல்லை; அதனால் இந்த நகரத்திற்கு இனிமேல் எங்கே வரப்போகிறேன்? வரப்போவதேயில்லையென அவன் நினைக்கிறான்
ஒரு வாரத்திற்குப் பின்னர், காவல்துறையினர் கொலைகாரனைப் பிடித்துவிட்ட தகவலைச் சொல்வதற்காக எக்ஸின் உடன்பிறந்தான் அவனை அழைக்கிறான். அந்த ஆள், தொலைபேசி மூலம் எக்ஸைப் பெயர்சொல்லா அழைப்புகளால் அலைக்கழித்துத் தொல்லைப்படுத்தியிருக்கிறான் என்கிறான், உடன்பிறந்தான். `பி` பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு பழைய காதலன், என்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். இதைக் கேட்டதில் எனக்கு நிரம்ப மகிழ்ச்சி, என்கிறான், `பி`. என்னை அழைத்துச் சொன்னதற்கு நன்றி. பின்னர் எக்ஸின் உடன்பிறந்தான் ஒலிவாங்கியைத் தொங்கலில் வைத்தான். `பி` தன்னந்தனியாக இருக்கிறான்.

•••

From Grand Street 68, in memory of Roberto Bolaño, 1953-2003 
மலைகள் இணைய இதழ் நவம்பர் 03, 2015 இதழ் எண் 85 இல் வெளியானது.

Tuesday, 19 January 2016

ஸ்பானியச் சிறுகதை (சிலி) - வில்லியம் பர்ன்ஸ் - இராபர்ட்டோ பொலானோ William Burns By Roberto Bolano (Chile)

வில்லியம் பர்ன்ஸ் William Burns 

ஸ்பானியம் : இராபர்ட்டோ பொலானோ Roberto Bolano (Chile) 

ஆங்கிலம் : க்ரிஸ் ஆண்ட்ரூஸ் Chris Andrews 

தமிழில் ச.ஆறுமுகம்

7748923_1060517197

இந்தக் கதையை, கலிபோர்னியாவின் வெஞ்சுராவைச் சேர்ந்த வில்லியம் பர்ன்ஸ், சொனோராவின் சான்டா தெரேசாவிலிருக்கும் எனது நண்பர் பாஞ்ச்சோ மோங்கே என்ற காவல்துறை காவலருக்குச் சொல்ல, அதை அவர் எனக்குச் சொன்னார். மோங்கே சொன்னபடி, அந்த வட அமெரிக்கன் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத, ஒருபோதும் நிதானமிழந்துவிடாத ஒரு இளைஞன் என்ற விவரணை பின்வரும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது மாறுபாடாகத் தோன்றுகிறது. பின்தொடர்வது பர்ன்ஸின் வார்த்தைகள் :
என் வாழ்க்கையில் கவலைகொள்ளவைக்கிற இருண்ட காலமாக அது இருந்தது. வேலை விஷயத்தில் கடுமையான ஒரு கட்டத்தில் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். அதுவரையிலும் எந்தவகைச் சலிப்பும் அண்டாதவாறு, காப்புக் கவசம் அணிந்தவனாக இருந்த நான், அப்போது, உச்ச அளவில் சலிப்படைந்திருந்தேன். இரண்டு பெண்களோடு வெளியூர் சென்றிருந்தேன். எனக்கு அது நன்றாக நினைவிருக்கிறது. அவர்களில் ஒருத்திக்கு வயது சிறிது அதிகமிருக்கும் – என்னுடைய வயது இருப்பாள் – இன்னொருத்தி, ஒரு இளமங்கையைவிட அதிகமொன்றுமிருக்கமாட்டாள். சில நேரங்களில் அவர்கள் நோயில் சிக்கி, உயிர்வாழ அவதிப்படும், கூன்விழுந்த வயதான பெண்களைப் போலிருந்தார்கள்; மற்றநேரங்களில் விளையாட்டில் ஆர்வமுள்ள இளநங்கைகளைப் போலவே தோன்றினார்கள். அம்மாவும் மகளுமோ என நீங்கள் தவறாக நினைத்துவிடுமளவுக்கு வயதுவித்தியாசம் அப்படியொன்றும் அதிகமில்லை; அப்படியுங்கூடச் சொல்லலாம்தான். இருந்தாலும், இதைப்போன்ற விவகாரங்ளையெல்லாம் ஒரு மனிதர் யூகத்தில்தான் சொல்லமுடியுமே தவிர அது, நிச்சயமாகத் தெரிந்ததென்று கூறிவிடமுடியாது. எப்படியிருந்தாலும், அந்தப் பெண்களிடம் இரண்டு நாய்கள் இருந்தன. ஒன்று பெரியது; மற்றொன்று சிறியது. அதில், எந்த நாய் எந்தப் பெண்ணுக்குச் சொந்தமானதென்று எனக்குத் தெரியாது. கோடை விடுமுறையை அனுபவிக்கச் செல்கின்ற மலை மீதிருந்த ஒரு நகரத்தின் புறநகர் எல்லையில் அமைந்திருந்த ஒரு வீட்டை, அவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர். தெரிந்தவர் அல்லது நண்பர், அல்லது ஏதோ ஒருவரிடம் இந்தக் கோடையில் நான் அங்கு செல்லவிருப்பது பற்றிக் குறிப்பிட்டபோது, அவர் மீன்பிடி தூண்டிலையும் கொண்டுசெல்லுமாறு கூறினார்; ஆனால் என்னிடம் தூண்டிற்கோல் எதுவுமில்லை. அதற்கு வேறு சிலர், அங்கிருக்கும் கடைகள் மற்றும் தங்கும் அறைகள் பற்றிச் சொல்லி, எளிதாக எடுத்துக்கொள்ளுமாறு தேறுதல் கூறினார்கள். ஆனால், நான் அங்கு விடுமுறை அனுபவிப்பதற்காகச் செல்லவில்லை; அந்தப் பெண்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வதற்காகப் போகிறேன். அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளுமாறு ஏன் அவர்கள் கேட்கவேண்டும்? அவர்கள் சொன்னது, அவர்களைத் துன்புறுத்தும் யாரோ ஒரு இளைஞன் இருக்கிறான் என்பதுதான். அவனைக் கொலைகாரன் என்றுதான் அவர்கள் குறிப்பிட்டனர். அவனது நோக்கம் தான் என்னவென நான் கேட்டதற்கு, அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை என்னைத் தடுமாறச்செய்வதற்காக, இருட்டிலேயே வைத்திருக்க வேண்டுமென அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால், நானாகவே அதனைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். அவர்கள் அபாயத்திலிருப்பதாக – அது ஒரு தவறான பயமாகவுமிருக்கலாம் – நம்பினார்கள். ஆனால், ஒருவர் என்ன நினைக்கவேண்டுமென, நான் எப்படி அவர்களுக்குக் கூற முடியும்? அதிலும் என்னை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்களிடம் போய்க் கூறமுடியுமா? இருந்தாலும், ஒரு வாரம், அல்லது அதுபோலக் கழிந்தபின்னர், அவர்கள் கடைசியில், என்னுடைய கருத்தோட்டத்திற்கே வந்து சேர்ந்தனர். அதனால் நான் அவர்களோடும் அவர்களது நாய்களோடும் அந்த மலைகளுக்குச் சென்றேன். அங்கே, கல்லாலும் மரத்தாலும் கட்டியிருந்த ஒரு வீட்டில் குடிபுகுந்தோம். அந்த வீட்டை விட அதிகமான சாளரங்கள் கொண்டதாக, அதிலும் ஒவ்வொன்றும் பல்வேறு அளவுகளில் எந்தவொரு ஒழுங்குமற்றுப் பரவலாகச் சிதறியமைந்த சாளரங்களை நான் இதுவரையிலும் எந்த வீட்டிலும் பார்த்திருக்கவில்லையென்றுதான் நினைக்கிறேன். வெளியிலிருந்து பார்க்கும்போது, அந்த வீடு மூன்று தளங்கள் கொண்டது போன்ற தோற்றத்தை அந்தச் சாளரங்கள் ஏற்படுத்தின; ஆனால் உண்மையில் இரண்டு தளங்களே இருந்தன. உள்ளே, அதிலும் வசிப்பறையிலும் முதல் தளத்திலிருந்த சில படுக்கையறைகளிலும், அந்தச் சாளரங்கள் ஒரு மயக்கத்தை, மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு பித்துணர்வினை எழுப்பின. எனக்குத் தந்திருந்த படுக்கையறையில் இரண்டே சாளரங்கள் இருந்தன; இரண்டுமே மிகவும் சிறியனவாக, ஒன்று மேல் ஒன்றாக, மேலது கூரையைத் தொட்டுவிடுவதாகவும், கீழது தளத்திலிருந்து ஒரே ஒரு அடி உயரத்திலுமாகவும் இருந்தன. அதெல்லாம் எப்படியிருந்தாலும் வாழ்க்கை என்னவோ மகிழ்ச்சியாகவே இருந்தது. வயதில் மூத்த பெண் ஒவ்வொரு நாள் காலையிலும் எழுதினாள்; ஆனால் எல்லா எழுத்தாளர்களும் எழுதும்போது கதவை மூடிக்கொள்வதாகச் சொல்கிறார்களே, அதுபோல மூடுவதில்லை; அவளுடைய மடிக்கணினியை வசிப்பறை மேசை மேல்தான் பணிசெய்ய வசதியாக அமைத்திருந்தாள். இளைய பெண் தோட்டவேலையில் அல்லது நாய்களுடன் விளையாடி, அல்லது என்னுடன் பேசிக்கொண்டிருந்து நேரத்தைச் செலவிட்டாள். அநேகமாகச் சமையல் வேலை முழுவதையும் நானே செய்தேன்; நானொன்றும் அதில் திறமையானவனில்லை; ஆனாலும், என் சமையலை அந்தப் பெண்கள் புகழ்ந்தார்கள். என் வாழ்க்கையின் மீதிக்காலத்தை அப்படியே கழித்துவிட்டிருக்கலாம் தான். ஆனால் ஒருநாள் அந்த நாய்கள் வெளியே ஓடித் தொலைக்கவே, நான் அவற்றைத் தேடிப்போனேன். கையில் ஒரே ஒரு கைவிளக்குடன் பக்கத்துக் காடெங்கும், காலி வீடுகளின் ஒவ்வொரு முற்றத்திலுமாக உற்று உற்றுப் பார்த்துச் சென்றது இப்போதும் நினைவிருக்கிறது. அவற்றை எங்கேயும் காணமுடியவில்லை. வீட்டுக்குத் திரும்பியபோது, நாய்கள் காணாமல் போனதற்கு, நான்தான் காரணமென்பதுபோல, அந்தப் பெண்கள் பார்த்தார்கள். பின்னர், அவர்கள் ஒரு நபரின் பெயரைச் சொன்னார்கள்; அதுதான், அந்தக் கொலைகாரனின் பெயர். அவர்கள் முதலிலிருந்தே அவனைக் கொலைகாரனென்றே குறிப்பிட்டார்கள். நான் அவர்களை நம்பவில்லையென்றாலும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுவந்தேன். அவர்கள் பள்ளிப் பிராயக் காதல்கள், பணப்பிரச்னைகள் மற்றும் பகைக் காழ்ப்புகள் பற்றிப் பேசினார்கள். இருவருக்குமிடையில் அவ்வளவு வயது வித்தியாசமிருக்கும்போது, ஒரே நபருடன் இருவருக்கும் எப்படித் தொடர்புகள் அமையுமென என் தலைக்குள் சுழன்றதை என்னால் தடுக்கமுடியவில்லை. ஆனால் அதற்கும் மேலாக விவரங்கள் எதனையும் அவர்கள் சொல்வதாக இல்லை. அவர்கள் என்னைக் கடிந்திருந்த போதிலும் அன்று இரவில் அவர்களில் ஒருவள் என் அறைக்கு வந்தாள். நான் விளக்கினை எரியவிடவில்லை; அரைத் தூக்கத்தில்தான் இருந்தேன்; ஆனாலும் அது யாரெனத் தெரிந்துகொள்ளவே முடியவில்லை. முதல் கதிரின் வெளிச்சத்தில் விழித்தபோது, நான் தனியாகத்தான் இருந்தேன். நகரத்துக்குள் போய், அவர்கள் பயந்துசாகிற அந்த மனிதனைப் பார்த்துவிடுவதென்று தீர்மானித்தேன். அவனுடைய முகவரியை அவர்களிடம் கேட்டுவிட்டு, நான் திரும்பி வரும்வரையில் வீட்டுக் கதவினைத் திறக்கவேண்டாமெனச் சொல்லிவைத்தேன். வயதில் பெரியவளின் சிறிய டிரக்கினை நானே ஓட்டிக்கொண்டு, அடிவாரம் சென்றேன். நகரத்தைத் தொட்டுவிடுவதற்குச் சிறிது முன்னால், பழைய புட்டிநிரப்பும் தொழிற்சாலை முற்றத்தில் இரண்டு நாய்களையும் கண்டுவிட்டேன். அவை என்னைக் கண்டதும் பணிவோடு, வாலை ஆட்டிக்கொண்டு வந்தன. நான் அவற்றை டிரக்கின் முன் பகுதிக்குள்ளேயே அமரவைத்து, முந்தைய நாள் இரவில் எவ்வளவு கவலைப்பட்டேனென்பதை நினைத்துச் சிரித்துக்கொண்டே, சிறிது நேரத்துக்கு ஊருக்குள்ளாகவே சுற்றிவருகையில், அந்தப் பெண்கள் சொன்ன முகவரியை நோக்கி, நான் நெருங்கி வந்திருந்ததைக் கண்டேன். அந்த இளைஞனின் பெயரை பெட்லோ என்றே வைத்துக்கொள்வோம். விடுமுறை அனுபவிக்க வருபவர்களுக்காகவே, ஊரின் மையப்பகுதியில் தூண்டில்கள், தூண்டிற்கோல்கள் முதல் நிழற்கட்டமிட்ட சட்டைகள், சாக்லேட் பட்டைகள் வரையில் விற்கும் கடை வைத்திருந்தான். கொஞ்ச நேரத்துக்கு நிலையடுக்குகளைக் கண்களால் துளாவிக்கொண்டிருந்தேன். அந்த மனிதன் ஒரு திரைப்பட நடிகனைப் போலத் தோன்றினான்; முப்பத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது. திடமான உடற்கட்டு, அடர் கறுப்புத் தலைமுடி. செய்தித் தாள் ஒன்றினைக் கொடுக்கல் வாங்கல் மேடை மேல் பரப்பி, வாசித்துக் கொண்டிருந்தான். கித்தான் காற்சட்டையும் டி – சர்ட்டும் அணிந்திருந்தான். வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க வேண்டும்; டிராம்களும் கார்களும் வந்துபோய்க்கொண்டிருந்த மையத் தெரு ஒன்றில் கடை அமைந்திருந்தது. நான் கணக்குப் போட்டுப் பார்த்தேன். பெட்லோவின் கடையில் விலை அதிகம்; கடையை விட்டுச் செல்லும்போது, எதனாலோ, எனக்கு அந்தப் பாவப்பட்ட இளைஞன் அவ்வளவுதான், தொலைந்தான், என ஒரு நினைப்பு தோன்றியது. அங்கிருந்து ஒரு பத்து அடி கூட வந்திருக்கமாட்டேன், அவனது நாய் என் பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். கடையில் கூட நான் அதைப் பார்த்திருக்கவில்லை; நல்ல, பெரிய ஒரு கறுப்பு நாய், ஜெர்மன் ஷெப்பர்டு வேறு ஏதோ ஒன்றுடன் இணைசேர்ந்த கலப்பினமாக இருக்கும். நான் ஒருபோதும் சொந்தமாக நாய் வளர்த்ததில்லை; என்றாலும் அந்தப் பாழாய்ப் போகிற சனியன்களுக்கு என்னிடம் எது பிடிக்கிறதென்று தெரியவில்லை; எதற்காகவோ பெட்லோவின் நாய் என் பின்னால் வந்தது. நான், அதை கடைக்குத் திரும்பிப் போகுமாறு துரத்தினேன் தான்; ஆனாலும் அது என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. அதனால், நான் அந்த நாய் என் பக்கமாக வர, டிரக்கை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்; பின்னர் ஒரு சீழ்க்கைச் சத்தத்தை என் பின்னால் கேட்டேன். கடைக்காரன் அவனது நாயைத் திரும்பிவருமாறு அழைத்துக்கொண்டிருந்தான். நான் திரும்பிப் பார்க்கவில்லையென்றாலும், அவன் எங்களைத் தேடி கடைக்கு வெளியே வந்துவிட்டானென்பது எனக்குத் தெரிந்தது. எனது பதில் நடவடிக்கை உடனடியானதாகவும் நான் நினைத்துப்பார்க்காததாவும் இருந்தது: அவன் என்னையும் நாயையும் கண்டுவிடாமலிருக்க முயற்சித்தேன். உறைந்து உலர்ந்த இரத்தத்தின் அடர்சிவப்பு நிறத்திலிருந்த டிராம் வண்டியின் பின்புறம் நாயை என் கால்களுக்கிடையில் இடுக்கிக்கொண்டு மறைவாக ஒளிந்து நின்றது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பாதுகாப்பான இடத்திலிருப்பதாக நான் உணருகின்ற கணத்தில், அந்த டிராம் நகர்ந்து தொலைக்கவும், எதிர்ப்பக்கம் நடைபாதையில் நின்ற கடைக்காரன் என்னைப் பார்த்து, ‘’நாயைப் பிடித்துக்கொள்’’ என்றோ, ‘’நன்றாகக் கயிற்றைப் பிடித்துக்கொள்’’ என்றோ, ‘அங்கேயே இரு, ’நான் வரும்வரையில்’’ என்றோ அர்த்தமாகும் வகையில் கைகளை ஆட்டிச் சைகை காட்டினான். ஆனால், அது எதையும் நான் செய்யவில்லை. நான் அப்படியே திரும்பி, கூட்டத்தில் மறையவும், அவன் ‘நில், என் நாய்! டேய், முட்டாள், என் நாய்!’’ என்பதுபோல் என்னவோ கத்தினான். நான் ஏன் அப்படி நடந்துகொண்டேனென்று எனக்குத் தெரியவில்லை. எப்படியோ, கடைக்காரனின் நாய் என்னைப் பின்தொடர்ந்து, டிரக்கை நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்ததோடு, நான் கதவைத்திறந்ததுதான், தாமதம், எனக்கு நேரமே கொடுக்காமல், பொசுக்கென்று உள்ளே குதித்து உட்கார்ந்து கொண்டதோடு, பின்னர் அங்கிருந்து அசையவும் மறுத்துவிட்டது. மூன்று நாய்களோடு நான் வந்து சேர்ந்ததைக் கண்ட அந்தப் பெண்கள், என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நாய்களோடு விளையாடத் தொடங்கிவிட்டார்கள். கடைக்காரனின் நாய்க்கு அவர்களை நீண்ட நாட்ளாகவே தெரியும் போலிருக்கிறது. அன்று பிற்பகலில் நாங்கள் எல்லா விதமான விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். ஊருக்குள் என்ன நடந்ததெனச் சொல்லிப் பேசத் தொடங்கினேன். பின்னர், அவர்கள் கடந்தகால வாழ்க்கை பற்றியும் அவர்களது வேலை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்: ஒருவள் ஆசிரியையாகவும் மற்றவள் சிகையழகுக் கலைஞராகவும் இருந்து, இருவருமே வேலையை விட்டுவிட்டனர். இருந்தபோதிலும், அவர்கள் குழந்தைகளைப் பிரச்னைகளோடுதான் பார்த்துக்கொண்டதாக அவ்வப்போது பேசிக்கொண்டனர். ஏதோ ஒரு கட்டத்தில், இருபத்து நான்கு மணி நேரமும் வீட்டை எப்படிப் பாதுகாப்பது என்பதுபற்றி நானாகவே ஆரம்பித்துப் பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பெண்கள் இருவரும் புன்னகையோடு அதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுச் சரியானதென இசைவும் தெரிவித்தனர். ஏன்தான் அப்படிச் சொன்னோமோ என்றும் நான் வருந்திக்கொண்டேன். பின்னர் நாங்கள் உணவு அருந்தினோம். அன்றைய இரவுக்கான உணவினை நான் சமைத்திருக்கவில்லை. பேச்சு மவுனமாக உறைந்தது. அந்த மவுனமும் எங்கள் தாடை அசைவு மற்றும் பற்களின் அரைவுச் சப்தத்தாலும் வெளியே வீட்டைச் சுற்றி ஓட்டப்பந்தயம் ஓடிக்கொண்டிருந்த நாய்களின் உரசல் மற்றும் விளையாடும் சப்தத்தாலுமே அவ்வப்போது உடைந்தது. வெகு நேரத்துக்குப் பின்னர் நாங்கள் குடிக்கத் தொடங்கினோம். பெண்களில் ஒருவள், யாரென்று நினைவில்லை, பூமியின் கோளத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்தும் மருத்துவர்களின் எச்சரிக்கைகள் குறித்தும் பேசினாள். என் மனம் எங்கோயிருந்தது; அவள் பேசியதை நான் கேட்டுக்கொண்டிருக்கவில்லை; மலைச் சரிவுகளில் முன்பொரு காலத்தில் வசித்த இந்தியர்களைப் பற்றி அவள் பேசிக்கொண்டிருந்தாளென நினைக்கிறேன். சிறிது நேரம் கழிந்ததும் அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாமலாகி, எழுந்து மேசையைச் சுத்தம் செய்துவிட்டு, உணவுத் தட்டு மற்றும் கலங்களைக் கழுவுவதாகச் சமையலறைக்குள் அடைந்துகொண்டேன். அப்போதும் அவர்களின் பேச்சுச் சப்தம் என் காதுகளில் விழுந்துகொண்டு தானிருந்தது. நான் வசிப்பறைக்குத் திரும்பிச் சென்றபோது, இளைய பெண் கம்பளியால் பாதி மூடியபடி சாய்மெத்தையில் படுத்திருக்க, மற்றவள் ஒரு பெரிய நகரத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள்; அது, அவள் ஏதோ ஒரு பெரிய நகரத்தைப்பற்றி, அந்த நகரம் வாழ்க்கைக்கு எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், உண்மையில் அவள் அதைப்பற்றி இகழ்வாகவே பேசிக்கொண்டிருந்தாள்; நான் எதைவைத்து அப்படிச் சொல்கிறேனென்றால், இருவரும் அவ்வப்போது கமுக்கப்புன்னகை பூக்கத் தொடங்கிவிடுவார்கள். எனக்கு இந்த இரண்டுபேரிடமும் புரியாத ஒன்று: அவர்களின் நகைச்சுவை உணர்வு தான். அவர்கள் அழகாக, என்னைக் கவர்பவர்களாக இருந்தார்கள்; எனக்கு அவர்களைப் பிடித்திருந்தது. ஆனால், அவர்களது நகைச்சுவை உணர்வு போலியானதாக, வலிந்து வரவழைக்கப்பட்டதாக, ஏதோ ஒன்று எப்போதுமே தோன்றிக்கொண்டிருந்தது. இரவு உணவுக்குப் பின்னர், நான் திறந்த விஸ்கிப்புட்டியில் பாதி காலியாகிவிட்டது. அது வேறு எனக்குள் கவலையாக இருந்தது. போதையாகிவிடவேண்டுமென நான் நினைக்கவில்லை; அவர்களும் போதையாகி என்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிடவேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. அதனால், நான் அவர்களுடனேயே உட்கார்ந்ததோடு, நாம், இன்னும் ஒரு சில விஷயங்கள் பற்றிப் பேசவேண்டுமென்றேன். ‘’ என்ன விஷயங்கள்?’’ என வியப்புற்றுக் கேட்பதாகப் பாசாங்கு செய்தனர்; ஒருவேளை அது அப்படிப் பாசாங்காக இல்லாமலுமிருக்கலாம். ‘’இந்த வீட்டில் பல்வேறு பலவீனங்கள் உள்ளன. நாம் அதற்குச் சில காரியங்கள் செய்யவேண்டும்,’’ என்றேன், நான். ‘’என்ன செய்யவேண்டும்?’’ என்றாள், ஒருவள். ஓ.கே. என்று நிலைமாற்றி, நிமிர்ந்து அமர்ந்த நான், அந்த வீடு ஊருக்குள்ளிருந்து எவ்வளவு தள்ளி இருக்கிறது, பாதுகாப்பற்ற தன்மை எப்படி வெளிப்படையாகத் தெரிகிறது என்பது பற்றியெல்லாம் பேசத் தொடங்கி, நினைவுபடுத்திக்கொண்டிருந்தேன்; ஆனால், சிறிதுநேரத்திலேயே அவர்கள் அதைக் கவனிக்கவில்லையென்பதை உணர்ந்துவிட்டேன். நான் ஒரு நாயாக இருந்தால், இந்தப் பெண்கள் என்மீது இன்னும் கொஞ்சம் கரிசனம் காட்டுவார்களாயிருக்கலாமென, எரிச்சலோடு எண்ணினேன். பின்னர், எங்களில் யாருக்குமே தூக்கம் துளி கூட வரவில்லையென்பதை நான் உணர்ந்தேன். பிறகு, அவர்கள் குழந்தைகளைப் பற்றிப் பேசத்தொடங்கினர்; அவர்களது பேச்சு எனது இதயத்தைப் புரட்டிப்போட்டது. எந்த ஒரு கடினமான மனிதனையும் உருக்கிவிடும் பயங்கரமான, தீயசெயல்கள், காட்சிகளை நான் கண்டிருக்கிறேனென்றாலும், அந்த இரவில் அந்தப் பெண்கள் பேசுவதைக் கேட்டு, எனது இதயம் அவ்வளவு வேகமாகத் துடித்துச் சுருண்டு, அநேகமாகக் கரைந்து, காணாமலாகிவிட்டது. அதைத் தடுத்துவிடும் முயற்சியில், அவர்களது குழந்தைப்பருவக் காட்சிகளை நினைவுகொண்டு பேசுகிறார்களா அல்லது தற்போதய குழந்தைகளின் உண்மையான நிலையைப் பேசுகிறார்களா எனக் கண்டுபிடிக்க முயன்றேன்; ஆனாலும் முடியவில்லை. என் தொண்டைக்குள் பஞ்சு மற்றும் பட்டைத் துணிகளால் கட்டிய உருண்டை ஒன்று எழுந்து அடைப்பது போலிருந்தது. உரையாடலின் நடுவே அல்லது இரட்டைக் குரல்களின் நடுவில் திடீரென்று எனக்குள் ஒரு முன்னுணர்வு ஏற்பட்டதில், நான் வசிப்பறையின் சாளரங்களில் பிரதான சாளரத்தின் மிக அருகிலிருந்த ஒரு மூலையில், எந்த ஒரு அவசரத்துக்கும் உதவியாக இருக்கட்டுமென அமைத்திருந்த காளைக்கண் வடிவச் சிறு சாளரம் ஒன்றினை நோக்கிப் பொய்நடையில் நகரத் தொடங்கினேன். அந்தப் பெண்களும் ஏதோ ஒன்று நடக்கப்போகிறதென உணர்ந்து என்னைப் பார்க்கத்தொடங்கிவிட்டார்கள் என்பதைக் கடைசி நிமிடத்தில் நானும் உணர்ந்துகொண்டேன். சாளரத் திரையை இழுத்து, பெட்லோவின் தலையை, அதுதான், அந்தக் கொலைகாரனின் தலையைச் சாளர வாசலில் கண்ட அந்த இக்கட்டான நேரத்தில், அந்தப் பெண்களுக்கு என் உதட்டில் ஒரு விரலை வைத்துக் காட்டுவதற்கு மட்டுந்தான் முடிந்தது. அடுத்து நிழ்ந்ததெல்லாமே குழப்பம் தான்; ஏனென்றால் பயமென்பது ஒரு தொற்றுநோய். வந்திருப்பது கொலைகாரனென்பதை நான் உடனடியாகப் புரிந்துகொண்டேன். அவன் வெளியே வீட்டைச் சுற்றி ஓடத்தொடங்கினான். அந்தப் பெண்களும் நானும் வீட்டுக்குள்ளாகவே சுற்றிச் சுற்றி ஓடத் தொடங்கினோம். இரண்டு வட்டங்கள்: நாங்கள் திறந்துகிடக்கும் சாளரங்களை மூடுவதும், கதவுகளை இழுத்துப்பார்த்து அடைப்பதுமாக ஓடியபோது, அவன் வீட்டுக்குள் நுழைவதற்காகத் திறந்து கிடக்கும் சாளரம் ஒன்றைக் கண்டுபிடித்துவிடும் முயற்சியில் ஓடினான். நான் என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்யவில்லையென்று எனக்குத் தெரியத்தான் செய்தது: என் அறைக்குச் சென்று, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, வெளியே சென்று, அவனைச் சரணடையச்செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, நாய்கள் வெளியேதானிருப்பதாவும், அவற்றுக்கு எதுவும் ஆகியிருக்காதென்றும் எண்ணத் தொடங்கினேன்; நாய்களில் ஒன்று கருவுற்றிருந்ததென்று நினைக்கிறேன், அது நிச்சயமானதாவென்று எனக்குத் தெரியாது, அப்படி ஒரு பேச்சு இருந்தது. அது எப்படியோ போகட்டும், அப்போதும், நான் ஓடிக்கொண்டேயிருந்த அந்தக் கணத்தில் பெண்களில் ஒருவர் ‘’அய்யோ, சேசுவே, அந்தப் பெண் நாய், பெண் நாய்,’’ என அரற்றியது, என் காதில் விழுந்தது; நான் டெலிபதியைப் பற்றி, அதாவது அது நிகழ்வதுபற்றி, அந்த மகிழ்ச்சியைப் பற்றி நினைத்தேன். கூடவே, நாயைப் பற்றிப் பேசிய பெண், அவர்களில் மூத்தவளோ, இளையவளோ யாராக இருந்தாலும், அதைப் பார்ப்பதற்காக கதவைத் திறந்துவிடுவாளோ என்றும் பயந்தேன். நல்லவேளை, அவர்களில் யாரும் வெளியே நகர்வதான எந்த முயற்சியும் செய்யவில்லை. எல்லாம் நல்லது தான், நல்லதேதான் என நினைத்துக்கொண்டேன். அதன் பின்னர், (நான் அதை ஒருபோதும் மறக்கவே மாட்டேன்) முதல் தளத்தில், அதுவரையிலும் நான், பார்த்தேயில்லாத ஒரு அறைக்குள் சென்றேன். அது, ஒடுக்கமாக, நீண்டு, இருட்டாக இருந்தது; நிலா வெளிச்சமும், முற்றத்து விளக்கிலிருந்து வந்த வெளிச்சமும் தான் மங்கலாகத் தெரிந்தது. அந்தவொரு கணத்தில், அந்த விதிதான் (அல்லது கெட்டநேரம் – இந்த விஷயத்தில், அதுவேதான்) என்னை அங்கே, அந்த அறைக்குக் கொண்டுவந்து சேர்த்ததென்று, பயந்துபோயிருந்த அந்தத் தெளிவற்ற மனநிலையிலும் எனக்கு உறுதிப்பாடாகத் தெரிந்தது. மறுமுனையில் சாளரத்துக்கு வெளியில் கடைக்காரனின் நிழலுருவத்தைப் பார்த்தேன். அப்படியே முழங்காலிட்டுக் குனிந்துகொண்டேன். என் உடம்பின் நடுக்கத்தை (என் உடம்பு முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. வியர்வை ஊற்றோ ஊற்றென்று ஊற்றிக் கொண்டிருந்தது.) அடக்க முடியாமல் அடக்கிக்கொண்டு, காத்திருந்தேன். கொலைகாரன் அநியாயத்துக்கு எளிதாகச் சாளரத்தைத் திறந்து அறைக்குள் நிதானமாக, நழுவி இறங்கினான். அறைக்குள் ஒடுங்கலான மூன்று மரக்கட்டில் படுக்கைகள், ஒவ்வொன்றின் அருகிலும் ஒரு மேசையோடு இருந்தன. படுக்கைகளுக்குச் சில அங்குலங்களே உயர்வில், சுவரில் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த மூன்று அச்சுக் குறிப்புகள் தென்பட்டன. கொலைகாரன் ஒரு கணம் அப்படியே நின்றான். அவன் மூச்சுக்காற்றினை நான் உணர்ந்தேன்; அவனது மூச்சுக்குழலுக்குள் சுவாசம் எழுப்பிய சப்தம் எனக்கு நன்றாகவே கேட்டது. பின்னர், அவன், நான் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்த இடத்தை நோக்கி நேரடியாகத் தடவித்தடவி, சுவருக்கும் படுக்கை விளிம்புகளுக்கும் நடுவிலான வழியில் வரத்தொடங்கினான். நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், அவன் கண்களில், நான், படவில்லையென்பது, எனக்குத் தெரிந்தது. எனது அதிர்ஷ்ட நட்சத்திரங்களுக்கு நன்றிசொல்லிவிட்டு, அவன் என்னருகில், எனக்கு வசதியாக நெருங்கிவந்ததும், அவனுடைய கரண்டைக் கால்களைப் பற்றிப்பிடித்துக் கீழே விழுமாறு இழுத்துத் தள்ளினேன். அவன் தரையில் விழுந்ததும் முடிந்த அளவுக்கு அதிகக் காயம் ஏற்படுத்திவிடவேண்டுமென்று வேகமாக உதைக்கத் தொடங்கினேன். ‘’இங்கேதான் இருக்கிறான், அவன் இங்கேதான் இருக்கிறான்! என்று கத்திக் கூச்சலிட்டேன். ஆனால், அந்தப் பெண்கள் என் சத்தத்தைக் கேட்ட மாதிரித் தெரியவில்லை, அல்லது, அவர்கள் வீட்டைச் சுற்றி ஓடும் சப்தமும் எனக்குக் கேட்கவில்லை. முன்,பின் அறியாத அந்த அறை எனது மூளை அதன் நீட்சியாகக் கண்டது போன்ற, ஒரு தனி வீடாக, ஒரே தங்குமிடமாகத் தோன்றியது. விழுந்து கிடந்த அந்த உடலை நான் எவ்வளவு நேரம் உதைத்துக்கொண்டிருந்தேனென்று எனக்கே தெரியவில்லை; யாரோ ஒருவர் என் பின்னாலிருந்த கதவைத் திறந்து, எனக்குப் புரியாத சொற்களைக் கூறி, ஒரு கையை என் தோளில் வைத்தது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், பின்னர் பார்க்கும்போது, நான் தனியாளாகவே இருந்தேன்; உடனேயே உதைப்பதை நிறுத்தினேன். சில கணங்களுக்கு என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை; திகைப்பாகவும் களைப்பாகவும் உணர்ந்தேன். நல்லவேளையாக, உடனேயே அதிலிருந்தும் விடுபட்டு, வசிப்பறைக்கு அந்த உடலை இழுத்துவந்தேன். அங்கே, சாய்மெத்தையில் அந்தப் பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்காத குறையாக நெருக்கமாக உட்கார்ந்திருந்ததைக் கண்டேன். அந்தக் காட்சி எதனாலோ எனக்கு ஒரு பிறந்தநாள் விருந்தினை நினைக்கச் செய்தது. என்ன நிகழ்ந்ததோ என்பதைவிட, நான் கொடுத்த கொடையில் பெட்லோ கிடந்த நிலையைக் கண்டதும் ஏற்பட்ட பதற்றத்தையும், அவர்கள் கண்களில் குடிகொண்டிருந்த அச்சத்தின் தீப்பொறியையும் கண்டேன். அவர்கள் கண்களின் தோற்றம் தான் என் பிடியைத் தளர்த்தி, பெட்லோவின் உடலைத் தரைவிரிப்பின் மீது வீழ்த்தியது. பெட்லோவின் முகம் இரத்த முகமூடியாக வசிப்பறை வெளிச்சத்தில் பயங்கரமாகத் தோன்றியது. அவனது மூக்கு இருந்த இடத்தில் இரத்தக் கூழ் வழியும் ஒரு உருண்டைக்கட்டிதான் இருந்தது. அவனுடைய மார்பில் கைவைத்து இதயம் துடிக்கிறதா எனச் சோதித்துப் பார்த்தேன். அந்தப் பெண்கள் கொஞ்சம் கூட அசையாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். ‘’செத்துவிட்டான்,’’ என்றேன், நான். முன்பக்கத் தாழ்வாரத்துக்கு, நான் நகர்ந்த போது, அவர்களில் ஒருவர் பெருமூச்சிடுவது என் காதுகளில் விழுந்தது. நகரத்து அதிகாரிகளை என்ன சொல்லிச் சமாளிக்கப் போகிறோமென்ற சிந்தனையில் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே ஒரு சிகரெட்டைப் புகைத்தேன்; திரும்பவும் உள்ளே நுழைந்தபோது, அந்தப் பெண்கள் மண்டியிட்டு, நான்கு கால்களிலுமாக நின்று, சடலத்தின் ஆடைகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர். எனக்குள் பீறிட்ட அழுகைச்சத்தத்தை என்னால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களோ என்னைப் பார்க்கக்கூட இல்லை. ஒரு கிளாஸ் விஸ்கியை அருந்திவிட்டு, மீண்டும் வெளியே சென்றேன்; கூடவே விஸ்கிப் புட்டியையும் எடுத்துக்கொண்டேனென்றுதான் நினைக்கிறேன். அந்தப் பெண்கள் அவர்கள் வேலையை முடிக்கட்டுமென்று வெளியில் எவ்வளவு நேரம் குடித்துக்கொண்டும், புகைத்துக்கொண்டும் அமர்ந்திருந்தேனென்று எனக்குத் தெரியவில்லை. நிகழ்ந்தவை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் திரட்டி, ஒன்றுசேர்த்துப் பார்த்தேன். சாளரம் வழியாக, அவன் உள்ளே பார்த்ததை நினைத்தேன்; அவன் கண்களில் தெரிந்த பார்வையை நினைத்துப் பார்த்தபோது, அந்த அச்சத்தை இப்போது உணர்ந்தேன்; நாயை இழந்த தருணத்தில், அவனது கண்களை நினைத்துப் பார்த்தேன்; கடைசியாக கடைவாசலில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தேன். முந்தைய பகலின் வெளிச்சத்தோடு, கடையின் உள்ளிருந்த வெளிச்சத்தையும், அவனைக் கொன்றபோது, அறைக்குள் தெரிந்த முன்பக்கத் தாழ்வார வெளிச்சத்தையும் நினைத்துப் பார்த்தேன். பின்னர், நாய்களைப் பார்க்கத் தொடங்கினேன்; அவை அப்போதும் தூங்காமல், முற்றத்தில் ஒரு மூலைக்கும் எதிர் மூலைக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. மரவேலி பல இடங்களில் இற்றுப்போய், உடைந்திருந்தது; என்றாவது ஒருநாள், யாராவது அதைச் சரிசெய்வார்கள், நிச்சயம், அது நானாக இருக்கப்போவதில்லை. மலைகளின் மறுபுறம், அன்றைய நாளின் விடியல் புலரத் தொடங்கியது. நாய்கள் தாழ்வாரத்தின் மேலேறி, இரவு முழுவதற்கும் விளையாடிக் களைத்ததற்கு, அன்பான ஒரு தட்டு மற்றும் தொடுகையை எதிர்பார்த்து நின்றன. வழக்கமான இரண்டு மட்டுமே வந்திருந்தன; மூன்றாவதற்காக நான் சீழ்க்கை அடித்தேன்; ஆனாலும் அது வரவில்லை. சட்டென்று எனக்குள் தோன்றிய அந்த வெளிச்சம் குளிரின் முதல் நடுக்கத்தை ஏற்படுத்தியது. இறந்தவன் கொலைகாரன் இல்லை. உண்மையான கொலைகாரனால், நாங்கள் ஏமாற்றப்பட்டிருந்தோம். அவன் விதிவசத்தால் தான் எங்கோ தூரத்தில் ஒளிந்துகொண்டிருக்க வேண்டும். பெட்லோ யாரையும் கொலைசெய்ய நினைக்கவில்லை – அவன் நாயைத்தான் தேடி வந்திருக்கிறான். பாவம், அந்த வேசிமகன், என நான் நினைத்தேன். நாய்கள், ஒன்றையொன்று துரத்தி விளையாட முற்றத்திற்குச் சென்றன. நான் கதவைத் திறந்து அந்தப் பெண்களைப் பார்த்தேன்; வசிப்பறைக்குள் என் கால்களால் நுழையவே முடியவில்லை. பெட்லோவின் சடலம் மீண்டும் ஆடைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. ஆடைகள் முன்பைவிட நன்றாகவே இருந்தன. நான் எதையோ சொல்லப் புகுந்தவன் அதில் பயனெதுவும் இல்லையென்று, மீண்டும் தாழ்வாரத்துக்கே திரும்பி வந்தேன். பெண்களில் ஒருத்தி என் பின்னால் வந்தாள்; ‘’நாம் இப்போது சடலத்தை ஒழித்தாக வேண்டும்,’’ எனப் பின்னால் நின்றவாறே சொன்னாள். ‘’ஆமாம்,’’ என்றேன், நான். பின்னர், பெட்லோவைத் தூக்கி அந்த டிரக்கில் ஏற்ற உதவினேன். டிரக்கை நாங்கள் மலைப்பகுதிக்குள் ஓட்டிப் போனோம். ‘’வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை.’’ என்றாள், மூத்தவள். நான் பதில் சொல்லவில்லை; கல்லறை ஒன்றினைத் தோண்டினேன். நாங்கள் திரும்பி வந்து, அவர்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது, நான் டிரக்கைக் கழுவி முடித்து, எனது பொருட்களையெல்லாம் எடுத்து வைத்தேன். நாங்கள் தாழ்வாரத்தில் அமர்ந்து மேகங்களைப் பார்த்துக்கொண்டே காலை உணவு அருந்தும்போது, ‘’இப்போது என்ன செய்யப் போகிறாய்?’’ என அவர்கள் கேட்டார்கள். ‘’நான் நகரத்துக்கே மீண்டும் போய், எங்கே, எந்த இடத்தில் பாதையைத் தவறவிட்டேனென்று கண்டுபிடிக்கப் போகிறேன்.’’ என்றேன், நான்.
பாஞ்ச்சோ மோங்கோ சொன்னபடியென்றால், ஆறு மாதத்திற்குப் பின் வில்லியம் பர்ன்ஸ் அடையாளம் தெரியாத கொலைகாரர்களால் கொலை செய்யப்பட்டான் என்பதே கதையின் முடிவு.
நன்றி:- www.newyorker.com/magazine/2010/02/08/william-burns

மலைகள் இணைய இதழ், டிசம்பர், 03,  2015, இதழ் 87 இல் வெளியானது.

ஸ்பானியச் சிறுகதை (சிலி) - என்ரிக் லின்னுடன் சந்திப்பு (Meeting with Enrique Lihn) மரணமுற்ற ஒரு கவிஞனைச் சந்திக்கும் கனவு Dream of meeting a dead poet ஸ்பானியம் – இராபர்ட்டோ பொலானோ Roberto Bolano (Chile)

என்ரிக் லின்னுடன் சந்திப்பு (Meeting with Enrique Lihn) மரணமுற்ற ஒரு கவிஞனைச் சந்திக்கும் கனவு Dream of meeting a dead poet 

ஸ்பானியம் : இராபர்ட்டோ பொலானோ Roberto Bolano (Chile) 

ஆங்கிலம் : க்ரிஸ் ஆண்ட்ரூஸ் Chris Andrews

 தமிழில்  ச.ஆறுமுகம்


download (6)
1999ல் வெனிசுலாவிலிருந்து திரும்பியபின், கற்பனை நகரத்துக்கும் உண்மையான நகரத்துக்குமாக எப்போதும் நிரந்தரமாக, பூமியின் ஏதோ ஒரு அடியடுக்கில் தெரிகிற சாயலில் சிலியும் சான்டியாகோவும் நரகத்தின் சாயலில் இருந்தது என்பதை மனதில்கொண்டு, சிலியாகத்தான் இருக்க முடியுமென நன்றாகத் தெரிகிற ஒரு நாட்டில், சான்டியாகோ நகரமாகத்தான் இருக்கமுடியுமென நன்றாகத் தெரிகிற ஒரு நகரத்தில், என்ரிக் லின்னின் குடியிருப்புக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கனவு ஒன்று கண்டேன். லின் இறந்துவிட்டார் என்பது எனக்குத் தெரியும் தான்; ஆனால், நான் சேர்ந்திருக்கும் ஆட்கள், அவரைச் சந்திக்க என்னை அழைத்துச் செல்வதாகக் கூறியபோது, எந்தவிதமான தயக்கமும் இன்றி ஒப்புக்கொண்டேன்.
அவர்கள் கேலியாக, விளையாடுவதாக அல்லது அப்படியான அற்புதம் ஒன்று நிகழக்கூடியதுதானென, நினைத்திருந்தேனோ என்னவோ? ஆனால், சரியாக யோசிக்காமலோ, அல்லது அவர்களது அழைப்பினைத் தவறாகப் புரிந்துகொண்டதாலோ கூட இருக்கலாம். அது எப்படியானாலும், நாங்கள், வெளிறிய மஞ்சள் வண்ணப்பூச்சு முகப்புடைய ஒரு ஏழு மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில், ஒரு நீளமான கொடுக்கல் வாங்கல் மேடையும் பல தனியறைகளும் கொண்டதான ஒரு நல்ல பெரிய அளவிலான மதுவகத்திற்கு வந்தோம். எனது நண்பர்கள்(அவர்களை அப்படிக் குறிப்பிடுவது வித்தியாசமாகத் தோன்றுவதால், அந்தக் கவிஞரைச் சந்திக்க என்னை அழைத்துச்செல்ல முன்வந்த அவர்களை ஆர்வலர்கள் என்றே அழைப்போம்) ஒரு தனியறைக்கு இட்டுச் சென்றனர்; அங்கே இருந்தார், லின். முதலில், அவரை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை; புத்தகங்களில் நான் பார்த்திருந்த முகமல்ல அது; மெலிந்து இளமையாகி, அழகாகியிருந்தார்; அவரது கண்கள் மார்பளவு கறுப்பு-வெள்ளைப் புகைப்படக் கண்களைவிடவும் அதிகப் பிரகாசமாகத் தெரிந்தன.
உண்மையில் லின், லின் மாதிரித் தோன்றவேயில்லை; அவர் ஒரு ஹாலிவுட் நடிகரைப் போலிருந்தார்; தொலைக்காட்சிப்படங்களில், அல்லது ஐரோப்பியத் திரையரங்குகளில் ஒருபோதும் காண்பிக்கப்படாமல், நேராகக் காணொலிக்குச் செல்லும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்கும் பி – பட்டியல் நடிகரைப் போலத் தோன்றினார். ஆனால், அதேநேரத்தில் அவர் லின்னாக இருந்தார்; எனக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆர்வலர்கள் அவருக்கு வணக்கம் கூறி, நெருங்கிய நட்பினைக்காட்டும் ஏமாற்றுக் குரலில் அவரை, என்ரிக் எனப் பெயர் சொல்லி அழைத்து, என்னால் புரிந்துகொள்ளமுடியாத கேள்விகளைக் கேட்ட பின்னர், எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினர். உண்மையைச் சொல்வதானால், நான் அவருக்கு அறிமுகம் செய்யப்படவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் ஒரு குறுகிய அளவிலான காலத்துக்கு, நான் அவருடன் கடிதத்தொடர்பு கொண்டிருந்தேன். ஒருவிதத்தில் சொன்னால் அவருடைய கடிதங்களால் தான் இன்று நான் உயிரோடிருக்கிறேன்.
நான் 1981 அல்லது 1982 பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்; அப்போது நான் காசு இல்லாமல், பிழைப்புக்கு எந்த வழியுமில்லாமல் ஜெரோனாவுக்கு வெளியே ஒரு வீட்டில், தன்னந்தனியாகத் தனிமைப்படுத்தப்பட்டவனைப் போல் ஒதுங்கி வாழ்ந்திருந்தேன்; இலக்கியமோ குறிப்பிட்ட ஒரு சில (விரல்விட்டு எண்ணிச் சொல்கிற அளவுக்கு மிகக் குறைவாக) செவ்வியல் படைப்பாளிகள் தவிர, பகைவர்களால் ஆட்கொள்ளப்பட்ட, விரிந்து பரந்த ஒரு சுரங்கவெளியாக இருந்தது. எந்தவொரு தவறான நகர்வும் மரணத்தை விளைத்துவிடும் ஆபத்துள்ளதான அந்தச் சுரங்கவெளிக்குள் ஆர்க்கிலோக்கஸின் கவிதைகள் மட்டுமே துணையாக, நான் ஒவ்வொரு நாளும் சென்றுவரவேண்டியிருந்தது. இளம் படைப்பாளர்கள் எல்லோருக்கும், இதுதான் நிலை. அப்படியான ஒரு நேரம், வழிநடத்துபவர்களை விடுங்கள், நண்பர்களிடமிருந்து கூட எந்த ஆதரவுமில்லாமல், உதவிக்கரம் நீட்ட யாருமேயில்லாத ஒரு நேரம்; திரும்பத் திரும்ப `ஆமாம் அய்யா` போடுபவர்களுக்கு, அல்லது, அதிகார வர்க்க இலக்கியர்களைப் புகழும் கூட்டத்துக்கு, ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனை குறித்த அவர்களது பார்வையாலேயே தனித்துத்தெரிகின்ற முடிவேயில்லாத அந்தக் கூட்டத்துக்கு – அவர்களது கண்களுக்கு எதுவும் தப்புவதேயில்லை என்பதோடு அவர்கள் எந்த ஒன்றையும் மன்னிப்பதுமில்லை – மட்டுமே விழாக்கள், வெளியீடுகள், விருதுகள், நல்கைகள் எல்லாமேயென நிர்ணயிக்கப்பட்டிருந்தன. வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில், ஏதாவது ஒரு வகையில், இளம் எழுத்தாளர்கள் எல்லோருமே நான் சொல்வது போல், உணர்கிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் எனக்கு வயது இருபத்தெட்டு; என்னாலேயே என்னை ஒரு இளம் படைப்பாளி என எந்த விதத்திலும் கருதிக்கொள்ள இயலாதிருந்தது. நான் காற்றிலடித்து வரப்பட்ட ஒரு காகிதமாக இருந்தேன்.
ஏதோ ஒரு அரசு மானியப் புண்ணியத்தில் ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் வகைப்பட்டவனாக இல்லை, நான். அடையாளம் ஏதுமற்ற நான், அதனைக் காட்டிக்கொள்ளவோ, கருணை கோரி இரந்து நிற்கவோ விரும்புபவனாகவும் இல்லை. அப்போதுதான் என்ரிக் லின்னுடன் நான் கடிதத் தொடர்பினை மேற்கொண்டேன். இயல்பாகவே, நான்தான் முதலில் தொடங்கினேன். அவரது பதிலுக்காக நானொன்றும் நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டி, ஏற்படவில்லை. அது, ஒரு நீண்ட விசித்திரக் கடிதம்; நாங்கள் சிலியில் கூறுவது போல சோர்வோடு எரிச்சலுமூட்டும் ஒரு நீண்ட கடிதம்.
பதிலுக்கு நான் எழுதிய கடிதத்தில், எனது வாழ்க்கை, ஜெரோனாவுக்கு வெளியேயுள்ள மலைக்குன்றுகளில் ஒன்றின் மீதிருந்த எனது கிராமத்து வீடு, அதன் முன்னால் தெரிகிற மத்தியகால நகரம், கிராமியக் காட்சி அல்லது அதன் பின்னிருந்த வெறுமை அல்லது வெற்றிடம் என எல்லாவற்றையும் அவருக்கு எழுதினேன். எனது நாய் லைக்காவைப்பற்றியும் ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத் தவிர சிலியன் இலக்கியமென்பது வெறும் மலக்கழிவுதான் என்ற எனது அபிப்பிராயத்தையும் அவருக்குத் தெரிவித்திருந்தேன். நாங்கள் ஏற்கெனவே நண்பர்களாகிவிட்டோம் என்பது அவரது அடுத்த கடிதத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. தொடர்ந்தது என்னவென்றால் ஒரு புகழ்பெற்ற கவிஞர் அடையாளமற்ற ஒருவரோடு நண்பராகும்போது கண்கூடாக என்ன நிகழுமோ, அதுவே நிகழ்ந்தது.
அவர் என் கவிதைகளை வாசித்ததோடு, சிலவற்றை, சிலியன் – வட அமெரிக்கப் பயிலகம் ஒன்றில் இளந் தலைமுறையினரின் படைப்புகளை அறிமுகம் செய்வதற்காக, அவர் ஏற்பாடு செய்த கவிதை வாசிப்பு வகையான நிகழ்வொன்றிலும் இடம்பெறச் செய்தார். அவரது கடிதத்தில், நம்பிக்கை விடிவெள்ளிகளென, அவர் கருதிய சிலரை, 2000 ஆம் ஆண்டின் சிலியக் கவிதையில் ஆறு புலிகளாக இருப்பார்களென்று குறிப்பிட்டிருந்தார். பெர்டோனி, மேக்யீய்ரா, கோன்ஸலோ முனோஸ், மார்ட்டினெஸ், ரோட்ரிகோ லிரா மற்றும் நான் ஆகியவர்களே, அந்த ஆறு புலிகள் என நினைக்கிறேன். அது ஏழு புலிகளாகவும் இருக்கலாம். ஆனால், ஆறே பேர்தான் என்று நினைக்கிறேன்.
இரண்டாயிரத்தில் நாங்கள் ஆறுபேரும் அப்படி ஏதாவது பெரிதாகச் சாதிப்பதும் மிகச்சிரமமான ஒன்றாகத்தான் இருக்கும், ஏனென்றால் அப்போதே ரோட்ரிகோ லிரா, தற்கொலை செய்துகொண்டான்; அவனது மிச்சம் மீதியெல்லாம் ஏதாவது ஒரு கல்லறையின் கீழ் ஆண்டுக்கணக்கில் அழுகிக்கொண்டிருக்கலாம், அல்லது சாம்பலாகித் தெருவெல்லாம் பரந்து, சான்டியாகோவின் அருவருப்புக் குப்பையோடு குப்பையாகக் கலந்திருக்கலாம். புலிகள் என்பதைவிடப் பூனைகள் என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். எனக்குத் தெரிந்து, ஒரு வகை ஹிப்பி வாழ்க்கை வாழும் பெட்ரோனி, கடற்கரையில் சோழி, கடற்பாசி பொறுக்கி உயிர் பிழைக்கிறான். மேக்யீய்ரா, கார்டினல் மற்றும் கரோனெல் உர்ட்டெச்சோவின் வட அமெரிக்கக் கவிதைத் தொகுப்பு குறித்து மிகுந்த அக்கறையுடன் ஒரு ஆய்வினை எழுதியதுடன் இரண்டு நூல்களை வெளியிட்டுவிட்டு, குடிப்பதற்காக அமர்ந்துவிட்டான்.
கோன்ஸலோ முனோஸ் மெக்சிகோ சென்று அங்கே காணாமற்போனதாக, நான் கேள்விப்பட்டவரையில் லோரியின் ஆங்கிலேயத் தூதுவர் போல் சாராயத்தின் ஆழ்மடிமறதி மூழ்கடிப்பில் அன்றி விளம்பரத்துறையில் காணாமற்போனான். மார்ட்டினெஸ் ‘’டுச்சாம்ப்பின் கையொப்பம்’’ பற்றிப் பகுப்பாய்வுத் திறனாய்வு ஒன்றினைச் செய்துவிட்டுப் பின்னர் இறந்தான். ரோட்ரிகோ லிராவைப் பொறுத்தவரையில் அவனுக்கு என்ன விடிந்ததென்று நான் ஏற்கெனவேயே விவரித்துவிட்டேன். பூனைகளைப் போல புலிகள் அதிகமில்லையென்றாலும், நீங்கள் அவற்றை ஆழ்ந்துபார்க்க விரும்புகிறீர்கள். தொலைதூர மாநிலத்தின் பூனைக்குட்டிகள். எல்லாமாக நான் சொல்லவந்தது என்னவென்றால், லின்னை எனக்குத் தெரியும் என்பதுதான். அதனால், அறிமுகம் என்ற ஒன்று தேவையில்லாதது. இருந்தபோதிலும், மிகை ஆர்வலர்கள் என்னை அறிமுகப்படுத்த முற்பட்டார்கள்; அதனை நானோ, லின்னோ ஆட்சேபிக்கவுமில்லை. ஆகவே, நாங்கள் ஒரு தனியறையினுள் அமர்ந்திருக்க, இது இராபர்ட்டோ பொலானோ எனக் குரல்கள் ஒலிக்கவும் நான், அந்தத் தனியறையின் இருளில் அமிழ்ந்து கிடந்த என் கையை எடுத்து, நீட்டி லின்னின் கையை, சில நொடிகளுக்கு என்கையைப் பிழிந்து இறுக்கிய, இலேசாகக் குளிர்ந்திருந்த அவரது கையை – ஒரு சோகமனிதரின் கையைப் பற்றிக்கொள்ள, அந்தக்கையும் கைகுலுக்கலும், என்னைத் தெரிந்து கொண்டதான எந்தவித அடையாளத்தையும் காட்டாமல் என்னைக் கூர்ந்து ஆய்வுசெய்துகொண்டிருந்த முகத்துக்கு மிகச் சரியாக இணைசேர்ந்து ஒத்திசைவதாக நான் நினைத்தேன்.
அந்த ஒத்திசைவு உடல் ரீதியாகக் குறிப்புணர்த்தும் அசைவியக்கம் தொடர்பானதென்றாலும், எதையும் சொல்லித் தொடங்குவதற்கில்லாத, குறைந்தபட்சம் எனக்கு எந்தச் செய்தியுமில்லாத, ஒரு மறுபேச்சுக்கிடமில்லாத உரையாடல் திறனுடனேயே வழிதிறந்தது. ஒருவழியாக அந்தக் கணம் முடிந்தபின், ஆர்வலர்கள் மீண்டும் பேசத்தொடங்க, அமைதி கலைந்தது; அவர்கள் எல்லோரும் லின்னிடம் முற்றிலும் தொடர்பற்ற பிரச்னைகள் மற்றும் நிகழ்வுகளில், அவரது கருத்தினைக் கேட்டுக்கொண்டிருக்க, அந்த நேரத்தில் அவர்கள் மீதான எனது இகழ்நோக்குப்பார்வை ஆவியாகிப்போனது. ஏனெனில், நான் ஒருகாலத்தில் எப்படியிருந்தேனோ, அப்படியே அவர்களும் இருப்பதை உணர்ந்தேன்: எந்தவித ஆதரவுமில்லாத இளம் கவிஞர்கள், சிலியின் இப்போதய புதிய நடுநிலை – இடதுசாரி அரசினால் கதவு மூடப்பட்ட குழந்தைகளாக, ஆதரவோ புரவலர் அணைப்போ ஏதுமற்று, இருப்பதெல்லாம் லின் மட்டுமே என்ற நிலை.
அதுவும் அவரது நூல்வெளியீட்டுப் புகைப்படங்களில் தோன்றிய மாதிரியான உண்மையான என்ரிக் லின்னாக இல்லாமல், மிகமிக அழகானவர் போல், அவரது கவிதைகள் பிரதிபலிக்கின்ற லின்னாக, அவர்களின் வயதுக்கு ஏற்றமாதிரியான லின்னாக, அவரது கவிதைகளை ஒத்தமாதிரியான ஒரு கட்டிடத்தில் வசிப்பவராக இருந்ததுடன், அவரது கவிதைகள் சில நேரங்களில் நடை நயம் மற்றும் உறுதிப்பாட்டில் மறைந்துவிடுவது போல் மறைந்துவிடுபவராகவும் இருந்தார். நான் இதனைக் கண்டுணர்ந்த போது, எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது, நான் சிறிது நல்லபடியான உணர்வு மீதூரப் பெற்றேன். நான் சொல்லவருவது, அந்தச் சூழ்நிலையினை நான் நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கியதோடு, அது மகிழ்வானதென்றும் உணர்ந்தேன். நான் எதைக் கண்டும் பயப்படத் தேவையில்லை: நான் வீட்டில், நண்பர்களோடு, எப்போதுமே நான் வியந்து போற்றிய ஒரு படைப்பாளருடன் இருந்தேன்.
அது ஒன்றும் திகில் படம் அல்ல. அல்லது முழுக்க முழுக்கத் திகில் நிறைந்த படமல்ல; ஆனால், துயர நகை புட்டி, புட்டியாகக் கொட்டிக் கலக்கப்பட்டு நொதித்துக் கொண்டிருக்கும் ஒரு திகில் படம். துயர நகைச்சுவை பற்றி நான் நினைத்துக்கொண்டிருந்தபோதே, லின் அவரது சட்டைப்பைக்குள்ளிருந்து ஒரு மாத்திரைப் புட்டியை வெளியே எடுத்தார்; நான், இதை மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடவேண்டியிருக்கிறது என்றார். ஆர்வலர்கள் மீண்டும் அமைதியானார்கள். பரிமாறும் பணியாளர் ஒருவர் கண்ணாடி தம்ளரில் தண்ணீர் கொண்டுவந்தார். மாத்திரை பெரிதாக இருந்தது. அது தண்ணீர்த் தம்ளருக்குள் விழுவதைக் கண்டபோது, நான் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், உண்மையில் அது பெரியதல்ல; அடர்த்தி மிகுந்ததாக இருந்தது. அதை, லின் ஒரு கரண்டியால் உடைக்கத் தொடங்கவும் தான், பல்வேறு அடுக்குகளைக்கொண்ட ஒரு வெங்காயம் போல, அது தோன்றுவதாக உணர்ந்தேன்.
நான் முன்பக்கமாகக் குனிந்து தம்ளருக்குள் உற்று நோக்கினேன். ஒரு கண நேரத்துக்கு, அது ஒரு முடிவேயில்லாத மாத்திரையாக இருந்ததென நான் நிச்சயமாகக் கூறுவேன். கண்ணாடித் தம்ளரின் வளைபரப்புக்குக் கண்ணாடிவில்லை போல உருப்பெருக்கும் தன்மை இருந்தது: உள்ளே, அந்த வெளிறிய இளஞ்சிவப்பு மாத்திரை பால்வெளி மண்டலத்தை அல்லது பேரண்டத்தைத் தோற்றுவிப்பது போலச் சிதைவுற்றுக்கொண்டிருந்தது. ஆனால், விண்மீன் திரள்கள் திடீரெனத் தோன்றுவது அல்லது மறைவதாக (எதுவென்பது எனக்கு மறந்துவிட்டது), அந்தத் தம்ளரின் வளைபரப்பு வழியாக நான் பார்த்த காட்சியின் அறிந்திராத ஒவ்வொரு படிநிலையும், மெல்ல விரிந்து புலனாகிப் பின், உள்நோக்கிச் சுருங்கிமறைதலின் ஒவ்வொரு அசைவுகள் மற்றும் அப்போதய அதிர்வு நடுக்கத்தினை மெதுமெதுவான இயக்கநிலைப்படமாக என்னால் காணமுடிந்தது.
பின்னர், சோர்வாக உணர்ந்து, பின்னால் சாய்ந்து, நிமிர்ந்து அமர்ந்து, மருந்திலிருந்தும் என் பார்வையை அகற்றி லின்னின் பார்வையினைச் சந்திப்பதற்காகக் கண்களை உயர்த்தினேன். அவரது பார்வை, இதில் கருத்து எதுவும் சொல்வதற்கில்லை, மூன்று மணி நேரத்திற்கொருமுறை இந்த வேதிக்கரைசலைக் குடித்துத் தொலைக்கவேண்டியிருக்கிறது, இதில் எந்தவிதமான குறியீட்டுப் பொருளையும் காண முயற்சிக்கவேண்டாம் – தண்ணீர், வெங்காயம், விண்மீன்களின் மெதுவான அணிவகுப்பு எனச் சொல்வது போலத் தோன்றியது. ஆர்வலர்கள் எங்கள் மேஜையை விட்டும் அகன்றார்கள். சிலர் மதுக்கூடத்தில் இருந்தனர். மற்றவர்களைக் காணமுடியவில்லை. ஆனால், லின்னை நான் மீண்டும் நோக்கியபோது, அவருடன் ஒரு ஆர்வலர் இருந்ததைக் கண்டேன். அவர் அங்கிருந்து வெளியேறி, அந்த அறையைச் சுற்றிலுமாகச் சிதறி அமர்ந்திருந்த அவரது நண்பர்களைக் கண்டுபிடிக்கச் செல்லும் முன் லின்னின் காதில் எதையோ இரகசியமாக முணுமுணுத்ததையும் கண்டேன்.
அந்தக் கணத்தில் லின்னுக்கு, அவர் இறந்துவிட்டது தெரியுமென எனக்குத் தெரிந்தது. என் இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது. அப்படியான ஒன்று இப்போது இல்லையென நான் நினைக்கிறேன், என்றார், அவர். இங்கே ஏதோ ஒன்று சரியாக இல்லையென நான் நினைத்தேன். மாரடைப்பால் அல்ல அவர் இறந்தது; புற்றுநோயால். மாளாத் துயரம் ஒன்று என்மீது கவிந்தது. அதனால் நான் எழுந்து, கால்களைச் சிறிது அசைத்து, நீட்டிமடக்கி ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காகச் சென்றேன்; ஆனால், அது மதுவகத்தினுள் அல்ல; நான் வெளியே, தெருவுக்குச் சென்றேன். நடைபாதைகள் சமமற்று மேடுபள்ளமாகச் சாம்பல் நிறத்தில் இருந்தன. வானம் கறைகள் ஏதுமற்ற ஒரு கண்ணாடியைப் போலத் தோன்றியது; அந்த இடம், எல்லாவற்றையும் பிரதிபலித்துக் காட்டவேண்டிய ஒன்று, ஆனால் எங்கே?, முடிவில் எதுவுமேயற்றிருந்தது. எனினும், சாதாரணமான ஒரு இயல்நிலை உணர்வு தோன்றித் திசையெங்கிலும் ஊடுருவி நிலைத்தது.
போதுமான புத்துணர்வினைப் புதிய காற்றினைப் பெற்றுவிட்டதாகவும் அதுவே நான் மதுக்கூடத்தினுள் செல்வதற்குத் தக்க தருணமென்றும் எனக்குத் தோன்றியபோது, நான், வாசற்கதவு வரையிலும் உயர்ந்திருந்த படிகளில் ( கருங்கல் போன்ற உறுதியும் வைரம் போல ஒளி உமிழும் மேற்பரப்புமுடைய ஒற்றைக்கல் படிகள்) ஏறி, என்னைவிட உயரம் குறைவாக, ஐம்பதுகளின் அடிதடிக்கும்பலில் ஒருவனைப் போல உடையணிந்து, மெய்யான கொலைகாரத் தோற்றமுள்ள கேலிச்சித்திரத்துக்கு ஒப்புமையான ஏதோ ஒன்றினைக் கொண்டிருந்தவனும், அவனுக்குத் தெரிந்த யாரோ ஒருவராக என்னையும் நினைத்து, முகமன் சொல்லி வரவேற்றவனிடம் போய்ச் சேர்ந்தேன். அவனை எனக்குத் தெரியாதென்பதும் அவன் தான் தவறாகப் புரிந்துகொண்டானென்பதும் முதலிலியே எனக்கு நிச்சயமாகத் தெரியுமென்றபோதிலும் அவனை எனக்குத் தெரிந்தது போலவும், அவனைப் போலவே அவனை எனக்குத் தெரிந்த யாரோ ஒருவராக நினைத்து, நடந்துகொண்டதோடு அவனது வரவேற்புக்கும், நான் பதில் சொன்னேன். ஆக, நாங்கள் இருவருமே அந்தப் பளபளக்கும் (ஆனாலும், மிகுந்த அடக்கத்துடன்) கல் படிகளில் ஏற முயற்சிக்காமலேயே ஒருவருக்கொருவர் முகமன் பரிமாறிக்கொண்டோம்.
ஆனால், அந்தக் கொலைகார அடியாளின் குழப்பம் மிகச் சில கணங்களுக்கே நீடித்ததுடன், விரைவிலேயே அவன் தவறாகப் புரிந்துகொண்டதை உணர்ந்ததுடன், நான் அவனைத் தவறாகப் புரிந்துகொண்டேனோ என அவன் தன்னைத் தானே, கேட்டுக்கொள்வதாக, அல்லது அதற்கு மாறாக, முதலிலிருந்தே நான்தான் அவனைத் தவறாக எடுத்துக்கொண்டதாக என்னை வேறுவிதமாக நோக்கத் தொடங்கி, சந்தேகத்துடன் கடுமையாகவும் மாறியதால் (அவனுக்கேயான முரண்பட்ட தன்மையில் கூர்மை குறையாமலிருந்தாலும்), இதழ்களில் இகழ்நோக்குப் புன்னகையுடன் என்னை யாரென அவன் கேட்க, அட ச்சே, ஜாரா, நான் பொலானோ என, நான் பதில் சொல்ல, அவன் ஜாரா இல்லையென்பதை அவனது புன்னகையிலிருந்து எவரும் புரிந்துகொள்வார்களென்றாலும், ஏதோ திடீரென ஒரு பொறி தட்டுப்பட்டது போல் ( நிச்சயமாக நான், இல்லவேயில்லை, லின்னின் கவிதை எதையும் என்னுடையதை விடக் குறைவானதாகக் குறிப்பிட்டுவிடவில்லை) யாரென்றே தெரியாத அந்த ஜாராவாக ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு வாழ்ந்துகாட்டுவதென்ற விபரீத நோக்கில், அந்த இடத்தில் தவிர, ஜாராவாக எப்போதுமே இருக்க முடியாத அவன், அந்தப் பளபளக்கும் படிகளின் மேல்மட்டத்தில் அப்படியே நின்றுகொண்டு, என் வாழ்க்கையைப் பற்றி என்னைக் கேட்பதாக, என்னை யாரென(தடித்த குரலில், முட்டாள்தனமாக)க் கேட்டு, அவன் ஜாராவே தானென்று ஒப்புக்கொண்டு, ஆனால் பொலானோ என்ற மனிதனை முழுவதுமாக மறந்துவிட்ட ஜாராவாக மாற, அது மிகச்சரியாகப் புரிந்துகொள்ள இயலுகிற ஒன்றுதானே, பிறகென்ன, நான் யாரென அவனுக்கு விளக்கிச் சொல்ல, அவனும் அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு எனக்கும் அவனுக்கும் பொருந்துகிற மாதிரியான ஒரு ஜாராவை – சாத்தியமற்ற, அறிவார்ந்த, தைரியமான, பணக்கார, தாராளமனமுள்ள, ஒரு அழகான பெண்ணைக் காதலிக்கும் துணிச்சலுள்ளதோடு, அந்தப் பெண்ணாலும் பதிலுக்குக் காதலிக்கப்பட்ட ஜாரா – உருவாக்கிக் காட்டி, அந்த அடியாள் புன்னகைத்து, நான் அவனை முழுமையாக நம்பிவிட்டதாகவும்,
ஆனாலும் அந்த அத்தியாயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவர இயலாமல் தவிப்பதாவும், நான் அவனுக்காகக் கட்டமைத்த பிம்பத்தில் அவன் திடீரென விழுந்துவிட்டதாகவும் முற்றுமுழுதான முடிவுக்குவந்த அவன் ஜாராவைப்பற்றி மட்டுமல்லாமல் அவனது நண்பர்கள், ஜாராவுக்கே இது மிவும் அதிகமென்று படக்கூடிய அளவுக்கு விரிந்த அவனது உலகம், அந்த மகத்தான ஜாராவை அந்தப் பளபளக்கும் படிகளில் மரணிக்கும் ஒரு எறும்பாக, எப்போதுமே பொருட்படுத்தாத உலகத்தைப் பற்றிப் பேசுமாறு உற்சாகப்படுத்த, ஒருவழியாகக் கடைசியில் அங்கு வந்துசேர்ந்த அவனது நண்பர்கள், விரிந்த மார்பும் இருவரிசைப் பொத்தான்களும் அமைந்த வெளிர் நிறக் கோட்டு அணிந்த உயரமான இரண்டு கூலிக்கொலை அடியாட்கள், என்னையும் அந்தப் போலி ஜாராவையும் நான் யாரென்பது போலப் பார்க்க, அவன், வேறுவழியின்றி, இது பொலானோ எனக் கூற, அந்தக் கொலைக்கூலிகள் இருவரும் என்னை வரவேற்று முகமன் கூற, நான், அவர்களின் கைகளை, மோதிரங்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், முழங்கைத் தங்க வளைகளோடு குலுக்கினேன். அவர்கள் என்னை அவர்களோடு மது அருந்துமாறு அழைத்தபோது, முடியாது, நான் நண்பர் ஒருவரோடு வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே, ஜாராவைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக உள்ளே சென்றுவிட்டேன். லின் அப்போதும் அந்தத் தனியறைக்குள் இருந்தார்.
ஆனால், கண்ணுக்கெட்டியவரையில் ஆர்வலர்கள் யாரையும் காணமுடியவில்லை. தம்ளர் காலியாக இருந்தது. அவர் மருந்தினைக் குடித்துவிட்டுக் காத்திருந்தார். ஒரு வார்த்தை கூடப் பேசாமல், நாங்கள் அவரது குடியிருப்புக்குச் சென்றோம். அவர் ஏழாவது தளத்தில் வசித்தார். நாங்கள் மின்னேற்றிக்குள் நுழைந்தோம். முப்பது பேர் ஏறிக்கொள்ளுகின்ற அளவுக்கு மிகப் பெரிய மின்னேற்றி. அவரது குடியிருப்போ சிறியது, அதுவும் ஒரு சிலியன் எழுத்தாளரின் குடியிருப்பு, என்ற போதிலும் அங்கு புத்தகங்கள் இல்லாமல் இருந்தது குறித்து நான் கேட்ட ஒரு கேள்விக்கு, மேற்கொண்டு அவருக்கு வாசிக்கவேண்டிய தேவை ஏற்படுவதேயில்லை என்றார்; ஆனாலும் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன எனவும் கூறினார்.
அந்த அறையின் தளம் கண்ணாடியாலானது போல, அவரது குடியிருப்பிலிருந்து மதுவகத்தைக் காண முடிகின்றமாதிரி இருந்ததால் நான் சிறிது நேரம் முழங்காலில் நின்று, கீழே ஆர்வலர்கள் அல்லது அந்தக் கொலைக்கூலிகள் மூவரும் தெரிகிறார்களா எனத் தேடியபோது, எனக்கு அறிமுகமற்ற மனிதர்கள் தாம் குடித்துக்கொண்டும் தின்றுகொண்டும், அநேகமாக ஒரு மேசையிலிருந்து இன்னொன்றுக்கு நகருவதும் மதுவகத்தினுள் மேலும் கீழுமாக அலைவதுமாக, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியைச் சேர்ந்த நாவலில் போல பதற்றம் நிறைந்தவர்களாக இருந்ததைக் காணமுடிந்தது.
சிறிது நேரம் சென்றதும்தான், ஏதோ ஒன்று தவறாகியிருந்தது என்ற முடிவான உணர்வுக்கு வந்தேன். லின்னின் குடியிருப்புத் தளமும் மதுவகத்தின் மேற்கூரையும் கண்ணாடியால் செய்யப்பட்டதாக இருந்தால் மீதி இரண்டு முதல் ஆறு தளங்களும் என்னவாக இருந்தன? அவைகளும் கண்ணாடித்தனங்ளா? பின்னர் நான் மீண்டும் கீழ்நோக்கிப் பார்த்தபோதுதான், முதல் தளத்திற்கும் ஏழாவது தளத்திற்கும் இடையில் எதுவுமேயில்லாமல் காலி வெளிதான் இருந்ததென்பதைத் தெரிந்துகொண்டேன். இந்தக் கண்டுபிடிப்பு என்னை விரக்தியில் தள்ளியது. அட சேசுவே, லின், என்னை எங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்களென, நினைத்த நான், பின்னர், சேசுவே, லின், உங்களை எங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்களென்று நினைக்கத் தொடங்கினேன். நான் மிகக் கவனமாக எழுந்துநிற்கத் தொடங்கினேன்; எனக்குத் தெரியும், இயல்பான உலகம் போலின்றி, இங்கே பொருட்கள் மனிதர்களை விடவும் எளிதில் உடையும் தன்மை கொண்டவை.
நான் லின்னைத் தேடிப் பார்வையைச் செலுத்தியபோதுதான், அவர் மறைந்துபோன அந்தக் குடியிருப்பின் பல்வேறு அறைகளும் சிறியவையாகத் தோன்றாமல், ஒரு ஐரோப்பிய எழுத்தாளருடையதைப்போல், பரந்து விரிந்தனவாக, மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த சிலியன் எழுத்தாளருடையதைப் போல மலிவான வீட்டுவேலையாளும், பெரும் விலைமதிப்பும் நுட்பமுடையதுமான பொருட்களும் கொண்டதுமான இடம் மாறும் நிழல்களும் அரையிருட்டு அறைகளுமான குடியிருப்பில், வழவழப்பான கல்லைப் போன்ற செவ்வியல் நூல் ஒன்றும் மலக்கழிவு போலக் காலவரையற்றதான நவீன நூல் ஒன்றுமாக இரண்டு புத்தகங்களை நான் கண்டபின்னர் மெதுவாக லின்னைத் தேடத் தொடங்கியதும் தான், எனக்கும் குளிரத் தொடங்கி நடுக்கமும் பித்துப்பிடிப்பதான உணர்வும் தொற்றிப் பெருகத் தொடங்கியது.
அந்தக் குடியிருப்பு ஒரு கற்பனையான அச்சு அடிப்படையில் சுழல்வதுபோல நான் தலைக்கிறக்கமாக உணரத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒரு கதவு திறக்க, நீச்சல் குளத்தில் லின் நீந்திக்கொண்டிருப்பதைக் கண்டேன். அகவெப்பத்தோடு இயல்பாற்றலும் குறைவது குறித்துப் பேசுவதற்காக, நான் வாயைத் திறப்பதற்குள், அவர், உயிரோடிருப்பதற்காகச் சாப்பிடும் அவரது மருந்தின் மோசமான குணம் அந்த மருந்து நிறுவனம், அவரை ஒரு கினியாப் பன்றியாக மாற்றிக்கொண்டிருப்பதுதான் என எனக்குக் கேட்கும் அளவுக்குச் சொல்ல, எல்லாமே ஒரு நாடகம் போல் தோற்றமளிக்க, திடீரென்று நான் பேசவேண்டிய வசனமும் சகநடிகர்களின் வசனமும் என் நினைவுக்குவர, பின்னர், லின் நீச்சல்குளத்திலிருந்தும் வெளிவர, நாங்கள் இருவரும் கூட்டம் மிகுந்திருந்த மதுவகம் வழியாகத் தரைத்தளத்துக்குச் செல்கையில், லின், புலிகளின் காலம் முடிந்துவிட்டது,
அந்தக் காலம் இனிமையானதாக இருந்தது, சொன்னால் நீ நம்பமாட்டாய், பொலானோ, ஆனால், இந்த ஊர்ப்பகுதியில் மட்டும்தான் இறந்தவர்கள் நடைப்பயிற்சிக்குச் செல்கிறார்கள், என்றார். அதற்குள் நாங்கள் மதுவகத்தின் முன்பக்கத்தை அடைந்து, ஒரு சாளரத்தில் நின்று, இறந்தவர்கள் சுற்றிலுமாக நடந்துசெல்லும் அந்த விசித்திரமான ஊர்ப்பகுதியின் தெருக்களையும் கட்டிட முகப்புகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் பார்க்கப் பார்க்க, கட்டிடமுகப்புகள் வேறொரு காலகட்டம் சேர்ந்ததாக, நடைபாதையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்துகளும் மவுனித்துக் கிடந்த, ஆனாலும் நகர்ந்துகொண்டிருந்த வேறுகாலகட்டத்துக்குரியனவாக (அது நகர்வதை லின் கவனித்துக்கொண்டிருந்தார்)த் தோன்றின. அந்தப் பயங்கரமான காலம் நிலவியதற்குச் செயலற்றிருப்பதைக் குணாம்சமாகக் கொண்ட தன்மை தவிர வேறு காரணம் ஏதுமில்லை.
http://www.newyorker.com/magazine/2008/12/22/meeting-with-enrique-lihn 
மலைகள் இணைய இதழ், நவம்பர் 18, 2015, இதழ் 86 இல் வெளியானது.