துண்டிக்கப்பட்ட தலையின் கதை என்றொரு சிறுகதை
மலைகள் 150 வது இதழில் துண்டிக்கப்பட்ட தலையின் கதை என்ற பெயரில் கார்த்திகைப் பாண்டியனின் தமிழாக்கச் சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது.
இக்கதை மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முகம்மத் பர்ராடா Mohammed Berrada அவர்களால் அரபு மொழியில் படைக்கப்பட்டு, ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு, இப்போது தமிழுக்கு வந்திருக்கிறது.
தமிழில் நல்ல சிறுகதைகள் வந்துகொண்டு தானிருக்கின்றன. ஆர்வமுள்ள பலர் உலக இலக்கியத்திலிருந்தும் பல சிறுகதைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். கண்ணில்படுகிற கதைகளைப் படிக்கிறோம். தேடிப்படிக்கிறவர்களும் பலர் இருக்கின்றனர். எல்லாக் கதைகளும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துவிடுவதில்லை. ஆனால் `துண்டிக்கப்பட்ட தலையின் கதை` வாசகனைச் சட்டென உள்ளிழுத்துக்கொள்கிறது.
இச்சிறுகதையின் சொல்முறை புதிது; அது வெளிப்படுத்தும் செய்தியும் சமூக அக்கறை மிக்கது.
மொராக்கோவின் ரபாத் நகரத்தில் ஒருவன் தலைவேறு உடல் வேறாகத் துண்டிக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்கிறான். நகரம் எந்தப் பதற்றமும் இல்லாமல் தன் போக்கில் இயங்குகிறது.
அவனது துண்டிக்கப்பட்ட தலை அப்போதும் சாகாமல் உயிரோடிருக்கிறது. அத்தலையினால் சிந்திக்க முடிகிறது. அத்தலை அதன் உணர்வினைக் கொண்டு பறக்க முடிந்தால் பரவாயில்லையே என நினைத்துக் கடவுளை வேண்டுகிறது. அது நினைப்பது போலவே பறக்கத்தொடங்குகிறது.
வானத்திலிருந்து பார்க்கும்போது ரபாத் நகரம் அருவருப்பும் பயங்கரமும் நிறைந்து தோன்றுகிறது.
தலை தெற்கு நோக்கிப் பறந்து, கடலைத் தாண்டி மொரோக்கோவின் மிகமிகப் பழங்காலத்திலிருந்தே கதையாடல், பாடல் மற்றும் இஸ்லாமியத் துறவிகளால் விவாதங்கள் நடைபெற்று வந்து, தற்போது மசூதிச்சதுக்கம் மற்றும் வணிகத்தலமாக, சுற்றுலாத்தலமாக எப்போதும் மனிதர்கள் நிறைந்ததாக விளங்குகின்ற ஜமா-அல் ஃபினா வுக்கு மேலாகப் பறந்து `இழிந்த மனிதர்களே` என விளித்து உண்மைகளை மறந்து மூடநம்பிக்கைகளில் வாழ்வதைச் சுட்டிக்காட்டி, வீரசாகசம், மாயமந்திரங்களை நம்பி, காமத்தின் இன்பக்கனவினை எதிர்பார்த்து, நிதர்சன வாழ்க்கையில் பசி, வறுமை, அடக்குமுறை எல்லாவற்றையும் கண்டுகொள்ளாமலிருப்பதைக் கைவிட்டு விழிப்புணர்வுகொண்டு எதிர்த்துப் போராடுமாறு வலியுறுத்துகிறது.
உடனடியாகத் தீயணைப்பு வீரர்கள் மாபெரும் வலை ஒன்றை வீசித் தலையைப் பிடித்துவிடுகிறார்கள். தலையை நீதிமன்றத்தின் முன் நிறுத்தியபோது, அதன் நாக்கை அறுத்துவிடுமாறு ஆணையிடுகிறார், நீதிபதி. இதுவே கதை.
பறந்துகொண்டிருக்கும்போது தலையின் நினைவோட்டத்தில், நம் அறிவைக் கவர்கிற அழகிய ஒரு கருத்து தோன்றுகிறது. “வழமையான சங்கதிகளின் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பு உயர வேண்டுமெனில் பூமியை நாம் பிரிந்திருக்க வேண்டும். நமக்கிருக்கும் சக்திகளின் மீது பரிபூரண நம்பிக்கையோடு நாம் வாழும் சமயங்களிலெல்லாம் தினசரி வாழ்க்கை தனது கவிதைகளை மீட்டெடுக்கிறது.” அதாவது விஷயங்களைச் சற்று உயரத்தில் நின்று பார்த்துச் சிந்தித்தால் தீர்வு கிடைத்துவிடும்.
அடக்குமுறைக்கெதிராகக் கருத்து வெளியிட்டமைக்காகவே அந்த அறிவுஜீவி கொலைசெய்யப்பட்டிருப்பதோடு அதன் பின்பும் அந்தக் கருத்து வெளிப்படும் சூழ்நிலை ஏற்பட்டதும் அது வெளிப்படாதவாறு நாவை அறுத்துவிடுகின்றனர்.
இதுவே, அதிகாரம் எப்போது ஒரு நிறுவனமாக, அமைப்பாகச் செயல்படத் தொடங்கியதோ அன்று முதல் இன்று வரை காலங்காலமாக, அது, கடைப்பிடித்து வருகின்ற, உலகம் முழுவதிலுமான நடைமுறையாக இருந்து வருகிறது.
மிகமிகப் பழமையான இச்செய்தியினை புதிய வடிவத்தில் தந்திருப்பதுதான் இக்கதையின் நவீனத்துவம்.
தற்போதைய நிகழ்வுகளான தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்பு வழக்குகள் புனையப்படுதல், எட்டு வழிச்சாலை பற்றிக் கருத்து தெரிவிக்கவும் சுதந்திரம் மறுக்கப்படுதல், எட்டுவழிச் சாலைக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது, பாதிக்கப்படும் மக்களைச் சந்திக்கச் செல்லும் சமூக ஆர்வலர்களைக் கைதுசெய்வது என அதிகாரங்கள் தம் கருத்துக்கு மறு கருத்தினைப் பேசுவதை, விவாதிப்பதைக் கூடப் பொறுத்துக்கொள்ள இயலாத எதேச்சாதிகாரப்போக்குக்கு மாறியுள்ள அபாயத்தைக் காண்கிறோம்.
நீதிமன்றங்களிலுங்கூட இப்போக்கு காணப்படுகிறது.
இச்சூழலில் துண்டிக்கப்பட்ட தலையின் கதை தமிழுக்கு மிக மிகத் தேவைப்படுகிற ஒரு அவசரமான நேரத்தில் வந்து சேர்ந்துள்ளது.
மொழிபெயர்ப்பு என்ற போதிலும் வாசிக்கும்போது எவ்வித நெருடலோ, இடறலோ இல்லாமலிருப்பதால் புரிதலுக்கு எவ்விதச் சிக்கலுமில்லாமலிருக்கிறது.
அரபுப் பண்பாட்டினை தமிழின் மொழிமரபுக்குள் இடர்பாடு ஏதுமின்றி வெளிப்படுத்தியிருப்பது ஒன்றே மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு என்பதற்கான சான்றாக உள்ளது.
இக்கதையினைத் தேடியெடுத்துச் சிறப்பாகத் தமிழாக்கியுள்ளமைக்காக கார்த்திகைப்பாண்டியனுக்கும். இக்கதையினை வெளியிட்டமைக்காக `மலைகள்` இதழுக்கும் வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்.
மலைகள் வாசகர்கள் இக்கதையினைச் சிறப்பாகவே வரவேற்றிருக்கிறார்கள்.
கதையினைப் படிக்க :http://malaigal.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E…/
No comments:
Post a Comment