காடு கவின்பெறப் பூத்த மிளிர்கொன்றை (அபுனைவு - 17)
காடு கவின்பெறப் பூத்த மிளிர்கொன்றை
கொன்றை என்கிற சரக் கொன்றை ஒன்று எங்கள் குடியிருப்புப் பகுதியில் இக்கோடை பொலியப் பூத்துள்ளது.
நாஞ்சில், நெல்லை, முகவை மற்றும் மதுரைப் பகுதியில் வசித்த முப்பது ஆண்டுகளில் கொன்றை மரம் எதையும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், கொன்றை வேந்தன் பெயர்க்காரணம் மூலமும் `பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனே என ஓதுவார் பாடுகின்ற தேவாரம் மூலமும் சிறுவயதிலேயே செவிவழியாகக் கொன்றை பொன்போன்ற நிறமென்றும் சரம் சரமாகப் பூத்துக் குலுங்குமென்றும் அறிமுகம்.
அடங்காப்பசியோடு வரலாற்று நாவல்களை அள்ளியள்ளி விழுங்கிய இளமைப்பருவத்தில் `பொன்னியின் செல்வன்` வழியாகப் பூங்குழலியோடு, `கோடிக்கரைக் குழகர் கோயிலும், கொன்றை, பன்னீர் மரங்களும், குழகரின் தனிமையும் கடலோர மலைப்பகுதியும், சதுப்புநிலப் புதைகுழிகளும் கொள்ளிவாய்ப் பிசாசுகளும் `அலைகடலும் ஓய்ந்திருக்கையில் அகக்கடல்தான் பொங்குவதேன், நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்` என்ற வரிகளும் மனத்துக்குள் புகுந்து நிலைபெற்றன.
எண்பதில் வேலூர் வந்தபின் வள்ளிமலை முருகன் கோவிலில்தான் முதன் முதலாகச் சரம் சரமாக மஞ்சட் பூங்கொத்துகள் தொங்கும் மரத்தைப் பார்த்து இது கொன்றையாகத்தான் இருக்கவேண்டுமென நினைத்து, அங்கிருந்த பணியாளரிடம் கேட்டு உறுதிசெய்து, மரத்தின் இலை, பூ, பூங்கொத்து வடிவம் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டேன்.
87 இல் வள்ளலார் பகுதி 3 இல் குடியேறிய பிறகு ஒரு காலைநடையில் வீட்டுவசதி வாரிய அலுவலகச் சாலை, நீதிமன்றச் சாலையோடு சென்று சேரும் மூலையில் கொன்றை ஒன்று அழகாகப் பூத்திருப்பதைக் கண்டுபிடித்தேன். அன்று முதல் அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அம்மரத்தை வாஞ்சையுடன் நோக்குவதும் உடனிருப்பவர்களிடம் இது, கொன்றை என அறிமுகப்படுத்துவதும் வழக்கமாயிற்று. நான்கு வழிச்சாலை அமைந்தபின்னர் அந்தப்பக்கம் நடைப்பயிற்சி செல்வது குறைந்து போனது.
90 களில் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் எங்கள் பகுதியில் நடப்பட்ட மரங்களில் ஒன்றுதான் இப்போது பூத்துள்ளது.
சங்க இலக்கியத்தில் முல்லை, பிடவம், கோடலுடன் கொன்றையினையும் முல்லைத் திணையின் கருப்பொருளாகக் கொண்டுள்ளனர். கொன்றையை சங்கச் சான்றோர்கள் போற்றிக் கொண்டாடியிருக்கும் பெற்றி நாம் அறிந்து மகிழத் தக்கது.
பொன்னெனக் கொன்றை மலர்ந்தது. நற். 242, ஐங்.420
காயாங்குன்றத்துக் கொன்றை போல மா மலை விடர் அகம் விளங்க விசும்பு மின்னியதாக ஔவை குறிப்பிடுகிறார். (நற்.371) காயா மரங்கள் மணி நிறத்தில் கருநீலமலர்களை உடையவை. கொன்றை பொன்னிறத்தில் பூப்பது. இருவகை மரங்களும் கார் காலத்தில் ஒரே நேரத்தில் பூக்கும் போது கருநீல மலர்கள் நடுவே கொன்றை மலர்கள் மின்னித் தெரிவதால் மலைச்சரிவின் அனைத்துப் பகுதிகளும் விளங்கித் தெரியும். மலைப்பிளவுகளிடையே மின்னல் பாய்ந்து பிளவுகள் விளங்கித் தெரிவதற்கு காயாங் குன்றத்து கொன்றை வினை, பயன், உருவென அனைத்துவமமாகப் புலவர் குறித்த கவித்திறம் உன்னி மகிழத்தக்கது.
செல்வச் சிறுவரின் காலணிக் கொலுசுகளின் கிண்கிணிக்குள் குலுங்கும் பொற்காசுகள் போலக் கொன்றை மொட்டுகளை ஈன்றது. (உரு உவமம்) குறு.148. முல்லை.
வண்டுகள் வந்தமருமாறு விரிந்த பூங்கொத்துகளைப் பொன்னணிகளுடன் இடையிட்டுக்கட்டிய மகளிர் கூந்தலின் சாயலில் பூத்திருக்கும் கொன்றை மரங்களால் கானம் கவின்பெற்றதோடு, இது கார் காலமென வாய் திறந்து, காடு அறிவித்ததாம். (குறு.21)
பருத்த அடிமரத்துடன் விளங்கும் கொன்றை, கார் காலமல்லாத பருவத்தில் பெய்த முதல் மழைக்கே நெருக்கமான சிறுசிறு கொம்புகளில் கொடிமாலையாகப் பூங்கொத்துகளைத் தொங்கவிட்டது. (தடவுநிலைக் கொன்றை வம்ப மாரியைக் கார் என மதித்து, நெரிதரக் கொம்புசேர் கொடி இணர் ஊழ்த்தது - கோவர்த்தனார். (குறுந்தொகை 66). பருத்த அடிமரத்துடன் கூடிய கொன்றை மரத்தை, குஜராத், அகமதுநகரின் அறிவியல் நகர்த்(Science City) தோட்டத்தில் காணமுடிகிறது.
மலை உச்சியில் உட்கூட்டுக்காய்களாகத் தொங்கும் கொன்றையின் கிளைகளில் கொடிபடர்ந்தாற் போலப் பூங்கொத்துகள் தொங்குவது யானையின் புள்ளிகளையுடைய முகத்தில் அணிந்த நெற்றிப்பட்டப் பொன் ஓடம் போல் அழகுறச் சிறப்புற்று விளங்கியதாக, வினைவல் யானை புகர்முகத்து அணிந்த பொன்செய் ஓடைப் புனைநலம் கடுப்பப் புழற்காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர் ஏ கல்மீமிசை மேதக மலருமெனக் கண்டு மகிழ்ந்திருக்கிறார், குதிரைத் தறியனார் என்னும் புலவர். (நற்றிணை.296)
பைங்காற்கொன்றையும் மொட்டுகளை மெல்ல அவிழ்க்கக் `கார் செய்தன்றே கவின் பெறு கானம்` அகம். 4.
பொன்னணி அணிந்த மகளிர் வரப் பொலியும் களம்போல சுடர் வீக் கொன்றை பூக்கக் காட்டில் அழகு பொலிந்ததென்கிறது. நற்.302
கொன்றை கார் காலத்தில் பூப்பதாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. ஆனால், இப்போதெல்லாம் சித்திரை மாதத்தில் தான் கொன்றை பூத்துக் குலுங்குகிறது. அதனால் கொன்றையினை `சித்திரைக்கனிப்பூ` எனத் தற்காலக் கவிஞர்கள் அழைக்கின்றனர்.
காலமாற்றத்தில் இதுவும் ஒரு வியக்கத்தக்க நிகழ்வுதான் போலும்.
No comments:
Post a Comment