Monday, 23 April 2018

ருசியச் சிறுகதை -2 - அவதூறு A Slander - By Anton Chekhov

அவதூறு  (A Slander)  
ஆண்டன் பாவ்லோவிச் செகாவ்  Anton Pavlovich Chekov (1860 – 1904)
ஆங்கிலம் வழி தமிழில் ச.ஆறுமுகம்

எழுத்துப் பேராசான், ஆசிரியர் செர்கெய் கபிட்டோனிச் அகிநீவ் அவரது மகளை வரலாறு, புவியியல் ஆசிரியருக்கு மணமுடித்துக் கொடுக்கவிருந்தார். மண விழாக் குதூகலக் கொண்டாட்டங்கள் உச்சத்திலிருந்தன.  வரவேற்பு அறையில் ஒரே பாட்டு, நடனம், கும்மாளம்! வாடகைக்கமர்த்தப்பட்டிருந்த மகிழ் மன்றகப் பரிமாறுகைப் பணியாளர்கள் கருநிறப் பட்டாம்பூச்சி ஆடையும் அழுக்கடைந்த வெண்ணிறக் கழுத்துப் பட்டியும் அணிந்து அங்கும் இங்குமாக, அறை, அறையாகப் பறந்து பறந்து கவனத்தை ஈர்த்தனர். ஆரவாரக் கூச்சலும் உரையாடல்களின் உரத்த ஒலிகளும் அளவு மீறித் தொடர்ந்தன. சாய்மெத்தையில் பக்கம்பக்கமாக அமர்ந்திருந்த கணித ஆசிரியரும் பிரெஞ்சு ஆசிரியரும் இளநிலை வரிக் கணக்கீட்டாளரும் உயிரோடு புதைக்கப்பட்டவர்கள் குறித்த நேர்வுகள் பற்றியும் ஆன்மீகம் பற்றிய கருத்துகளையும் விருந்தினர்களுக்கு, ஒருவரையொருவர் மறித்து, வேக வேகமாக உரைத்துக்கொண்டிருந்தனர். அவர்களில் யாரும் ஆன்மீகத்தை நம்பவில்லை; ஆனால், இந்த உலகில் பல நிகழ்வுகள் எப்போதுமே மனித மனத்தையும் கடந்ததாக இருப்பதாக எல்லோரும் ஒப்புக்கொண்டனர். அடுத்த அறையில் இலக்கியப் பேராசான், வழிநடையாகக் கடந்து செல்பவர்களைக்கூடச் சுடுவதற்கான உரிமை படைக்காவலாளுக்கு இருக்கும் நேர்வுகளைப் பற்றிப் பார்வையாளர்களுக்கு விவரித்தவாறிருந்தார். அவரிடம் அகப்பட்டுக் கொண்டவர்கள், நீங்கள் மனக்கண்ணில் காண்பதுபோலவே, விழிபிதுங்க, ஒருவித பீதியில் கேட்டுக்கொண்டிருந்தாலும் அதனை முழுக்க ஏற்றுக்கொள்பவர்களாகவே இருந்தனர். மணவீட்டுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்ட சமூகப் படிநிலையில் கீழிருந்த மனிதர்கள் முற்றத்திலிருந்தவாறே, சாளரங்கள் வழியாக எட்டிப்பார்த்து நின்றனர்.
நடு இரவானதும் வீட்டின் உரிமையாளர், இரவு விருந்துக்கான அனைத்தும் தயாராகிவிட்டனவா எனப் பார்ப்பதற்காகச் சமையலறைக்குச் சென்றார். சமையலறையின் தரைத்தளம் முதல் கூரை வரையிலுமாக, வாத்து  மணமும் உயரவகைப் பெருவாத்து மற்றும் பல்வகைக் கறிமணங்களும் கலந்த புகை மண்டலமாக நிறைந்திருந்தது. இரண்டு மேஜைகளில் குடி வகைகள்,  மெல்லூக்கப் பானங்கள், தேவையான உபகரணங்களுடன் ஒரு கலைத்தன்மை பொருந்திய ஒழுங்கற்ற பரவலாக வைக்கப்பட்டிருந்தன. இடுப்புப் பட்டை சுற்றிய பீப்பாய் போன்றிருந்த சிவந்த முகத்துப்பெண்ணான சமையலர், மார்ஃபா மேஜைகளுக்கிடையே அமளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.
”ஸ்டர்ஜியான் மீனை எனக்குக் காட்டு, மார்ஃபா,” என்றார், அகிநீவ், உள்ளங்கைகளைத் தேய்த்துக்கொண்டும், உதடுகளை நாவால் தடவிக்கொண்டும். ‘’என்ன ஒரு மணம்! முழுச் சமையலையும் நானே சாப்பிட்டுவிடுவேன். வா, ஸ்டர்ஜியானை எனக்குக் காட்டு.”
அங்கிருந்த பெஞ்சுகளில் ஒன்றை நோக்கிச் சென்ற மார்ஃபா மிகுந்த கவனத்துடன், எண்ணெய் படிந்த செய்தித்தாள் விரிப்பு ஒன்றினை ஒருபக்கமாகத் தூக்கி உயர்த்திப் பிடித்தாள். செய்தித்தாளின் கீழே எண்ணெய் மசாலாவுக்குள் மூழ்கடிக்கப்பட்ட மிகப் பெரிய ஒரு ஸ்டர்ஜியான் மீது பசுங்கீரைகள், ஆலிவ்கள் மற்றும் காரட்டுச் சீவல்களால் அலங்கரிக்கப்பட்ட மகத்தான ஒரு கறி. அகிநீவ் ஸ்டர்ஜியானை விரிந்த கண்களால் பார்த்து வாய் பிளந்தார். அவரது முகம் ஒளிமிக்கதாகப் பரந்து, அவரது கண்கள் மேல்நோக்கி உயர்ந்தன. அப்படியே கீழ் நோக்கிக் குனிந்த அவரது உதடுகள் மையற்ற சக்கரத்தின் ஒலியொன்றை உமிழ்ந்தன.  ஒரு கணம் அங்கேயே நின்று கைவிரல்களில் சுடக்கொலியினை எழுப்பி மகிழ்ந்து மீண்டும் ஒருமுறை உதடுகளை மடித்துச் சுவைத்துக்கொண்டார்.
”ஆஹ் ஹா! என்னவொரு அன்பான முத்தத்தின் ஒலி …..” ”இளம் மார்ஃபாவே, அங்கே யாரை முத்தமிடுகிறாய்?” அடுத்த அறையிலிருந்துதான் அந்தக் குரல் கேட்டது; கூடவே கதவுநிலையில் கிராப்புத் தலையுடன் நின்றார், உதவி வரவேற்பாளர், வான்கின். “யார் அது? ஆ-ஹ்! …. உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! செர்கெய் கபிட்டோனிச்! நீங்கள் ஒரு அருமையான தாத்தா, இதை நான்  சொல்லியேயாகவேண்டும்!”
“நான் எதையும் முத்தமிடவில்லையே,” என்ற அகிநீவ், குழப்பத்துடன்,  “முட்டாளே, யார் அப்படிச் சொன்னது? நான் வெறுமனே….. உதட்டைச் சப்புக்கொட்டினேன் ….. அது …. மீனைப் பார்த்த…..   ஒரு சந்தோஷத்தின் அடையாளம்.”  என்று விளக்கமும் அளிக்க முயன்றார்.
“அதை அந்தக் கப்பல்காரர்களிடம் போய்ச் சொல்லுங்கள்!” உறுத்து நோக்கும் பார்வை மறைந்து, பற்களைக் கரகரக்கும் கடுப்பான முகமாக மாறியது.
அகிநீவுக்குக் குப்பென்று வியர்த்தது.
“ சனியனைத் தூக்கில் போடவேண்டும்!” என நினைத்த அவர், “இந்த நாய் இப்போது வெளியே போய் அவதூறு கிளப்பும். கழுதை, ஊர் முழுக்க என்னைக் கேவலப்படுத்தும்.”
வரவேற்பு அறைக்குள் மருட்சியுடன் நுழைந்த அகிநீவ், வான்கின் இருக்கிறானாவெனச் சுற்றிலுமாக ஓரப் பார்வை பார்த்தார். வான்கின், பியானோ அருகில் நின்று நகைத்துக்கொண்டிருந்த ஆய்வாளரின் மைத்துனியிடம் எதைப்பற்றியும் துளிகூடக் கவலையில்லாத போக்கில், குனிந்து ஏதோ இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.       
“என்னைப்பற்றித்தான் பேசுகிறான்!” என நினைத்தார், அகிநீவ். “என்னைப்பற்றித்தான், உதைக்கவேண்டும் அவனை! அவள் வேறு அதனை நம்பித்தொலைக்கிறாள்…. சிரிக்கிறாள்! அய்யோ நம்பிவிட்டாள்! கடவுளே, கருணை காட்டுங்கள்! இல்லை, இதை நான் அப்படியே விட்டுவிடமுடியாது. …. .. இது அப்படியே நீடிக்கக்கூடாது… எல்லோரும் நம்புவதைத் தடுக்க ஏதாவது செய்தாக வேண்டும். ….. எல்லோரிடமும் நான் பேசியாக வேண்டும், அவன் ஒரு முட்டாள் என்பதோடு வம்பு பேசுகிறவன் என்பதையும் காட்ட வேண்டும்.”
அகிநீவ் தலையைப் பிய்த்துக்கொண்டதோடு பெருத்த தர்மசங்கடத்தில் தவித்து, பிரெஞ்சு ஆசிரியரிடம் சென்றார்.
”இரவு உணவு வேலை எப்படியாகயிருக்கிறதென்று பார்ப்பதற்காக, இப்போதுதான் சமையலறைக்குப் போயிருந்தேன்,” என அந்த பிரெஞ்சுக்காரரிடம் தொடங்கிய அவர், “ எனக்குத் தெரியும் உங்களுக்கு மீன் என்றால், கொள்ளைப் பிரியமாயிற்றே. எனது அன்பான நண்பரே, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு ஸ்டர்ஜியான் சமைத்திருக்கிறோம்! ஒன்றரை கஜம் அதாவது நாலரை அடி நீளம்! ஹ,ஹ,ஹா! அப்புறம் …… ….. கொஞ்சம் மறந்துவிட்டேன் … …. சமையலறையில் அந்த ஸ்டர்ஜியானை வைத்து … …  ஒரு சின்ன சம்பவம் … இப்போதுதான் இரவு உணவுப் பதார்த்தங்களைப் பார்ப்பதற்காகச் சமையலறைக்குப் போய்வந்தேன். ஸ்டர்ஜியானைப் பார்த்து ஆசையோடு என் உதடுகளை மடித்துச் சப்புக்கொட்டினேன்…… …. என்னவொரு சுவாரசியமான மணம்., ஆஹா. அந்த மிகச்சரியான தருணத்தில், அந்த முட்டாள் வான்கின் உள்ளே வந்து சொல்கிறான் …… “ஹ, ஹ, ஹா! ஆ, நீங்கள் இங்கே முத்தமிட்டுக்கொண்டிருக்கிறீர்களா?” சமையலர், மார்ஃபாவை முத்தமிடுவது! எப்படியான ஒரு கற்பனை பாருங்கள், அடி முட்டாள்! அவளுக்கு ஏற்கெனவே ஒரு, சரியான ஒரு கோர முகம், எல்லாப் பிராணி முகங்களையும் ஒன்றாகச் சேர்த்துச் செய்த மாதிரி, அந்தப் பெண்ணைப் போய் முத்தமிடுவதாம், என்ன பேச்சுப் பேசுகிறான் பாருங்கள்! மக்கு மீன்!”
“யார் அந்த மக்கு மீன்?” எனக் கேட்டுக்கொண்டே வந்தார் கணித ஆசிரியர்.
“ஏன், அவன்தான் …. வான்கின்! நான் சமையலறைக்குப் போயிருந்தேனா … .. ”
அப்படியே அவர் வான்கின் கதையைச் சொன்னார். “ ….. மக்கு மீன், என்னைப் பொங்கப் பொங்கச் சிரிக்கவைத்துவிட்டான்! என்னைக் கேட்டால் சொல்வேன், ஒரு நாயைக் கூட முத்தமிட்டாலும் முத்தமிடுவேன், ஆனால் மார்ஃபாவைப் போய்,” என்றார் அகிநீவ். அவர் சுற்றிலும் பார்த்தார்; இளநிலை வரிக் கணக்கீட்டாளர் மிகச்சரியாக அவரின் பின்னால்தான் நின்றார்.
”வான்கினைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம், “ என்றார். “மக்கு மீன், அவன் தான்! அவன் சமையலறைக்குள் வந்தானா, மார்ஃபாவின் பின்னால் நான் நிற்பதைப் பார்த்தானா, முட்டாள்தனமாகக் கதை கட்டத் தொடங்கிவிட்டான்.  “நீங்கள் ஏன் முத்தமிட்டீர்கள்?” எனக் கேட்கிறான். ஒரு துளி அதிகமாகத்தான் அவன் குடித்திருக்கவேண்டும். `மார்ஃபாவை விட நான் வான்கோழியின் பின்புறத்தைக் கூட முத்தமிட்டிருப்பேன்,` என்றேன், நான். “அதுமட்டுமில்லை, முட்டாளே, எனக்கென்று ஒரு மனைவி இருக்கிறாள், “ என்றேன். உண்மையிலேயே அவன் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டான்!”
“யார் உங்களை ஆச்சரியப்படுத்தியது?” எனக் கேட்டவாறே, பள்ளியில் மதநூல் கற்பிக்கும் பாதிரியார், அகிநீவிடம் வந்தார்.
“வான்கின். நான் சமையலறையில் நின்றுகொண்டிருந்தேனா, அதுதான், ஸ்டர்ஜியானைப் பார்த்துக்கொண்டு … … “
இப்படியே தான் போய்க்கொண்டிருந்தது. அரைமணி நேரம் போல ஆகியிருக்கும் ஸ்டர்ஜியான் – வான்கின் சம்பவத்தைப் பற்றி விருந்தினர் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
“இப்போது சொல்லட்டும் அவன்!” எனக் கறுவிக்கொண்டார், அகிநீவ், உள்ளங்கைகளை உரசித் தேய்த்துக்கொண்டே. “சொல்லட்டும் அவன்! கதையை அவன் சொல்லத் தொடங்கும் முன்பாகவே எல்லோரும் அவன் மூஞ்சியில் அடித்த மாதிரியில், “போதும், முட்டாளே, உன் அடாவடி முட்டாள் தனம், அதைப்பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும்!” என்பார்கள்.
அத்துடன் அகிநீவ் `அப்பாடா` என ஆசுவாசமாகி, அந்த மகிழ்ச்சியிலேயே எத்தனையோ அதிகமான நான்கு கோப்பைகள் குடித்தார். இளம் மணமக்களை அவர்களின் அறைக்கு அனுப்பிவைத்துவிட்டு, அவர் படுக்கையில் போய் விழுந்து ஒரு பச்சைக்குழந்தையைப் போல உறங்கி, மறுநாள் காலை அந்த ஸ்டர்ஜியான் சம்பவத்தை நினைத்துப்பார்க்கக்கூட மறந்துவிட்டார். ஆனால்,   பரிதாபம்! மனிதன் ஏதோ ஒன்றினை நினைக்கிறான்; ஆனால்,  கடவுள் வேறு மாதிரி அல்லவா நினைக்கிறான்! ஒரு கெட்ட நாக்கு அதன் கெட்ட வேலையைச் செய்திருக்க, அகிநீவின் தந்திரமோ பலிக்கவில்லை. ஒரு வாரம் தான் கழிந்திருக்கும் – குறிப்பாகச் சொல்வதென்றால், புதன் கிழமை மூன்றாம் பாடவேளைக்குப் பின், ஆசிரியர் அறை நடுவில் நின்று, அகிநீவ், வைஸ்கின் என்ற மாணவனின் தீய மனப்போக்குகள் பற்றி விளக்கிக்கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியர் நேராக அவரிடம் வந்து தனியாக அழைத்துக்கொண்டு போய், “இங்கே பாருங்கள், செர்கெய் கபிட்டோனிச், “முதலில் என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும் … … … இது என் வேலையில்லை; ஆனால், எப்படியும் நான் உங்களுக்குப் புரியவைத்தேயாகவேண்டும்… … … அது என் கடமை. பாருங்கள், நீங்கள் அந்த, … .. அந்தச் சமையலரோடு .. .. காதல் களியாட்டமாடுவதாக வதந்திகள் வருகின்றன. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, ஆனால் அவளை உரசுவீர்களோ, முத்தமிடுவீர்களோ … … அது உங்கள் விருப்பம், ஆனால், அதை தயவுசெய்து, எல்லோருக்கும் தெரியும்படி செய்யாதீர்கள். உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்! நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதை மறந்துவிடாதீர்கள்.”              
அகிநீவ் குளிரில் விரைத்தது போலாகி உணர்வற்ற நிலைக்கு ஆளானார். தேன் கூட்டின் மொத்த ஈக்களிடமும் கொட்டு வாங்கிய ஒரு மனிதன் போல், கொதிநீரில் வெந்துபோன ஒரு மனிதனைப்போல அவர் வீட்டுக்கு நடந்துசென்றார். அவ்வாறாக அவர் நடந்துசெல்கையில் தார்ச்சட்டியைத் தலையில் கவிழ்த்துக் கறைப்பட்டுக்கொண்டது போல் மொத்த நகரமும் அவரையே பார்ப்பது போல அவருக்குத் தோன்றியது. வீட்டில்  புதியதான பிரச்சினை ஒன்று அவருக்காகக் காத்திருந்தது.    
”எப்போதும் போல சாப்பாட்டை விழுங்கித் தொலைக்கவேண்டியதுதானே, இன்றைக்கு என்ன ஆயிற்று?” என, உணவு மேஜையில் கேட்டாள், மனைவி. “ஏன் கிறக்கமாக இருக்கிறீர்கள்? உங்கள் காதல் களியாட்ட நினைப்போ? உங்கள் மார்ஃபா மீதான ஏக்கமோ? எனக்கு எல்லாம் தெரியும், முரட்டு மனிதனே! என்னுடைய உயிர்த் தோழிகள் என் கண்களைத் திறந்துவிட்டார்கள்! நீ – நீ - நீ! .. .. ..ஒரு காட்டுமிராண்டி !”
முகத்திலேயே அறைந்தாள், அவள். மேஜையிலிருந்து எழுந்த அவர், காலுக்குக் கீழாக பூமி நழுவிவிட்டது போலாகி, கோட்டும் தொப்பியும் மறந்து, வான்கின் வீட்டை நோக்கிப் புறப்பட்டார். அவனை அவன் வீட்டிலேயே பிடித்துவிட்டார்.
எடுத்த எடுப்பிலேயே, “ஏண்டா, அயோக்கியப்பயலே!” என்றவர், “இந்த ஊர் முழுவதும், என்மீது சேற்றை வாரி இறைத்திருக்கிறாயே, ஏண்டா இப்படி? என் மீது இந்த அவதூற்றினைக்  கிளப்பிவிட்டிருக்கிறாயே, ஏன்?” எனப் பொரிந்தார்.   
“என்ன அவதூறு? எதைப்பற்றிப் பேசுகிறீர்கள்?”
“மார்ஃபாவை நான் முத்தமிட்டதாக யார் வதந்தி கிளப்பியது? நீதானே? சொல்லுடா, நீதானே அது, திருட்டுப் பயலே?”
வான்கின் பேந்தப் பேந்த விழித்தான். அவனுடைய மறுமொழியின் ஒவ்வொரு முனையும் வெட்டி முறிக்கப்பட, புனிதச் சிற்பத்தை நோக்கி விழிகளை உயர்த்திய அவன், “உங்களைப் பற்றி நான் ஒரு வார்த்தை பேசியிருந்தாலும், கடவுள் என்னைத் தண்டிக்கட்டும்! என் கண்களைக் குருடாக்கட்டும்! என்னைத் தூக்கி வெளியே எறியட்டும் ! வீடு வாசல் இல்லாமல்  தெருத் தெருவாக அலைய வைக்கட்டும்! காலராவை விடவும் மோசமான நீக்கம்பு என்னைப் பீடிக்கட்டும்!” என்று சத்தியம் செய்தான்.
வான்கினின் வாய்மையில் எந்த ஐயுறவுக்கும் இடமில்லை. அந்த அவதூறினைக் கிளப்பியது அவனல்ல என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.
“அப்படியானால் யார், அது யார்?” மனதுக்குள் யார் யாரையெல்லாமோ நினைத்து, மார்பில் அடித்துக்கொண்டு அகிநீவ் கலங்கித்தவித்தார். “அப்படியென்றால் யார்?” 
Source :  http://www.classicshorts.com/bib.html#slander 

அடவி சிற்றிதழில் வெளியானது.

No comments:

Post a Comment