Friday, 20 April 2018

சித்திரைப் பிறப்பு (அபுனைவு - 16)

சித்திரைப் பிறப்பு.
நாஞ்சில் நாட்டின் விவசாய வாழ்வில் சித்திரைப் பிறப்புக்கென ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை என்றாலே பரபரப்புதான்.
சித்திரைப் பிறப்பு அன்று காலையிலேயே குளித்து முழுகி, மாடுகளையும் குளிப்பாட்டிக் கட்டி, கனி காணுதல் முடித்து, சர்க்கரை அவல், தேங்காய்த்துவையல் போட்டு விரவிய எரிப்பு அவலுமாகக் காலை உணவு முடித்தாலும் விவசாயம்தான் அவன் நெஞ்சுக்குள் துடித்துக்கொண்டிருக்கும்.
நான் சொல்கிற அறுபது மற்றும் எழுபதுகளில் விவசாயி, ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட்ட காலம் அது; மாநில அரசும் மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு பசுமைப் புரட்சி, பசுமைப் புரட்சியெனக் கோஷமிட்டுக்கொண்டிருந்தன. கோவை, ஆடுதுறை, அம்பாசமுத்திரம், திண்டிவனம் என தமிழ்நாட்டில் மட்டும் 14 நெல் ஆராய்ச்சி நிலையங்கள் நாளும் ஏடிடி 32, கோ 1, ஐஆர் 8, ஐஆர் 20, ஏஎஸ்டி 14, டிவிஎம் எனப் புதிதுபுதிதாக நெல், கரும்பு, பயறுவகை எனப் பல்வேறு பயிர் ரகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தன. விவசாயத்துறையில் புதிது புதிதாக தென்னைக்கென்று ஒன்று, கரும்புக்கென்று ஒன்று எண்ணெய் வித்துக்களுக்கென்று ஒன்று, தீவிர விவசாயத்துக்கென்று ஒன்று எனப் புதியபுதிய அலுவலகங்கள் முளைத்துக்கொண்டிருந்தன. அநேகமாக அனைத்து விவசாயிகளின் வீடுகளிலும் பாலுக்குப் பசு அல்லது எருமையும் உழவுக்கென ஓரிணை காளை மாடுகள் அல்லது கருமத்த மாடுகள் என்கிற எருமைக் கடாக்களும் இருந்தன. பெருங்கொண்ட விவசாயிகள் பத்துப் பதினைந்து இணை எருமைக் கடாக்கள் பராமரித்தனர். ஊருக்குள்ளேயே வீட்டை அடுத்து இரண்டு ஆள் ஆழத்துக்குங்கூடப் பெரிய பெரிய சாணிக்குண்டுகள் இருந்தன. தெருவில் கிடக்கும் சாணத்தையும் சிலர் சேகரித்து குண்டுகளில் சேர்த்துவிடுவர்.
ஆவணி, புரட்டாசியில் நடவான வாசறுமுண்டான், செந்தி போன்ற நெற்பயிர்கள் அனைத்தும் தை மற்றும் மாசி மூன்றாம் வாரத்துக்குள் அறுவடை முடியும். அறுவடை முடிந்ததும் அப்பாடா என்று ஓய்ந்துவிடமுடியாது. மாசி பங்குனி வெயில் காலத்தில் அடுத்த விதைப்புக்கான முன் தயாரிப்புகள் தொடங்கிவிடும்.
நாஞ்சில் நாட்டில் அறுவடையின் போது இதர பகுதிகளைப் போல நெற்பயிரின் தாளினை தரையோடு தரையாக அறுத்தெடுப்பதில்லை. ஈர நிலமென்பதால் அப்படி அறுத்தெடுக்கவும் இயலாது. குறைந்தது ஒரு கைப்பிடி உயரத்துக்காவது தாள் தரையிலேயே நிற்கும்.
அந்த அடித்தாள் முழுவதையும் அகற்றும் பணி முதலில் தொடங்கும். அதைத் `தாள் பொறுக்குதல்` என அழைப்பர். அத்தனை தாளினையும் கைகொண்டு பிடுங்கி வரப்போரங்களில், வயல்நடுவில் வசதிக்கேற்பக் குவியல் குவியலாகக் குவித்து மாலையில் வீட்டுக்குக் கிளம்பும்போது நெருப்பு வைத்துக் கொளுத்திவிடுவர். இப்பணியை அறுவடை முடிந்து நிலம் ஈரமிழந்து நல்ல காய்ச்சலிலிருக்கும்போதே முடித்துவிட வேண்டும். கொஞ்சம் சோம்பலாக இருந்துவிட்டால் பங்குனியின் முதல் கோடை மழை வந்துவிடலாம். அப்படி மழை பெய்துவிட்டால் நிலம் களியாகி, தாள் நனைந்து தாளைப்பிடுங்குவது சிரமமாகிவிடும். அப்படியான சமயங்களில் உழுத பின்பு, தாள்களைப் பொறுக்கிக் கொளுத்துவர்.
ஊருக்குள்ளும் வயல்களுக்கு நடுவேயுள்ள சாலையோரங்களிலும் குண்டுகள் எனப்படும் எருக்குழிகளில் சேர்த்து வைத்திருக்கிற மாட்டுச் சாணம் மற்றும் இயற்கை உரம் முழுவதும் வயல்களுக்குச் சென்று சேரவேண்டும். சில ஊக்கமுள்ள விவசாயிகள் ஆடி, ஆவணியில் குளத்தில் சேரும் பாசிவகைகளை ஆள்விட்டு அரித்து அதையும் உரக்குண்டுகளில் போட்டு செம்மண்ணால் மூடி உரமாகத் தயாரித்திருப்பார்கள்.
இரவும் பகலுமாக அத்தனை உரமும் மாட்டு வண்டிகளிலும் தலைச்சுமையிலுமாக வயலுக்குள் கொண்டு சேர்த்துப் பின் வயலின் அனைத்துப் பக்கமும் ஒரு சேரப் பரவலாகச் சிதற வேண்டும். ஒரு சிலர் குளத்து வண்டல் மண் எடுத்து வயலுக்குப் போடுவார்கள். இந்தப் பணி முழுவதுமாக முடித்துவிட்டு உழுவதற்காக கோடையின் முதல் மழைக்காகக் காத்திருப்பார்கள்.
மழை விழுந்ததோ இல்லையோ ஊர் மொத்தமும் மாடுகளும் கலப்பையுமாக வயல்பத்தில்தான் பார்க்கமுடியும். உழுது முடித்து அடுத்த மழைக்குக் காத்திருப்பார்கள். பங்குனியிலேயே இரண்டாம் மழையும் கிடைத்துவிட்டால் இன்னும் மகிழ்ச்சி. இரண்டாவது உழவும் முடித்து சித்திரை பத்துக்குக் காத்திருப்பார்கள்.
காத்திருப்பதென்றால் என்னவென்று கேளுங்கள். ஊர்ச் சந்தி, கோயில் முகப்புகள், திண்ணை, படுப்புரைகள், ஒடுத்திண்ணைகள் எல்லாவற்றிலும் மட்டுமில்லை, ஆறு குளங்களில் மாடு குளிப்பாட்டும்போதும், அவர்கள் குளிக்கும்போதும் பேச்சு எதைப்பற்றியதாக இருக்குமென்கிறீர்கள். மழை பற்றியதாகத் தான் இருக்கும்.
சித்திரை பத்தாம் நாள், எங்கள் கிராமத்திற்கு முக்கியமான நாள். அன்று காலையில் அழகம்மன் கோயிலிலுள்ள ஜெயந்தீசுவரர் கருவறை லிங்கத்தின் மீது கதிரொளி விழும். அன்று விதைப்புக்கேற்ற பருவத்தில் மழை கிடைத்துவிட்டால் பெருமகிழ்ச்சி. அந்த ஓரிருநாள் இடைவெளியில் எப்படியும் மழை பெய்துவிடும். அப்படியொரு புவியியல் அமைப்பில் தான் எங்கள் கிராமங்கள் இருந்தன.
மழை பெய்த மறுநாள் காலையிலேயே உழவு ஏர்களுடன் வித்தும் கையுமாக வயலில் நிற்பார்கள். ஒரு முறை காலையில் மழை பெய்தது. அன்று மதியத்துக்கு மேல் ஒரு சில அனுபவசாலிகள் உழுது விதைக்கத் தொடங்கிவிட்டார்கள். கட்டிச்சம்பா தான் விதைப்பார்கள்.
முந்தைய பூவிலேயே வித்துக்குத் தேவையான நெல்லை போதுமான பக்குவத்தில் உணர்த்தி, புங்க இலைகள் சேர்த்து விரவி மூட்டைகளில் வைத்திருப்பார்கள். அந்தப் பச்சை நெல்லை அப்படியே கொண்டு போய்த் தூவி விதைப்பதுதான். இந்த மாதிரியான விதைப்பினை பொடி விதைப்பு என்கிறார்கள். நெல்லைப் பகுதியிலும் சரி, வேறு எங்கும் இப்படி விதைப்பதாகத் தெரியவில்லை.
தொழி விதைப்பு மற்றும் நாற்றுப் பாவுவதற்கென்றால் நெல்லை கோணியோடு சேர்த்துக் குறுக்கும் மறுக்குமாக இறுகக்கட்டி ஆறு குளங்களுக்குள் அமிழ்த்தி வைப்பார்கள். சிலர் வீட்டிலேயே அப்படி வைத்திருந்து காயக் காய தண்ணீர் ஊற்றிக்கொண்டிருப்பார்கள். ஒரு முழுநாள் கழிந்தபின்பு மறுநாள் பார்த்தால் எல்லா நெல்லிலும் முளை வந்திருக்கும். அதைக் கொண்டு போய் நன்கு தொழி கலக்கியிருக்கும் வயலில் விதைப்பார்கள். இந்தச் சித்திரைப் பருவத்தில் தொழி விதைப்பு என்பது கிடையாதென்றே கூறிவிடலாம்.
அப்படியாகப் பொடி விதைப்பு செய்தபின்பும் மூன்று முதல் ஏழு நாட்கள் வரையில் மரம் (பரம்பு) அடிப்பார்கள். இதை மூன்றாம் கொம்பு மரம், ஐந்தாம் கொம்பு மரம் எனப் பரம்படிக்கும்போது களிக்கட்டிகள் எல்லாம் உடையும். உடையாத கட்டிகளைப் பொறுக்கி மரத்திலேயே அடித்து உடைப்பதுமுண்டு. ஐந்தாம் நாளில் மண்ணைக் கொஞ்சம் கிளறிப்பார்த்தால் நெல் முளை விட்டிருப்பது தெரியும். ஏழாங்கொம்புக்குப் பிறகு மரம் அடிப்பதில்லை. அப்படி அடித்தால் முளை முறியும்.
அப்படி முளைத்த நெல் வைகாசி 15 வரையில் தண்ணீர் எதுவும் பாய்ச்சாமலேயே வளர்ந்துவிடும். வைகாசி 15 ல் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளிலிருந்து புத்தனாற்றில் தண்ணீர் திறப்பார்கள். அந்தத் தண்ணீரைக் குளங்களில் தேக்கி, வாய்க்கால்கள் மூலம் வயலுக்குப் பாய்ச்சிக் கொள்வார்கள். இப்படிப் பாய்ச்சுகிற தண்ணீரைக் காச்ச வெள்ளம் (காய்ந்துகிடக்கிற பயிருக்கு, நிலத்துக்குப் பாய்ச்சுகிற வெள்ளம்) என்பார்கள். காச்ச வெள்ளம் பாய்ச்சும்போதுதான் உனக்கு முந்தி, எனக்கு முந்தி, மேல் மடை, கீழ் மடை, கடைமடை என்று தகராறு வரும். அதுவும் ஒரு மாதிரியாக முடிந்துவிட்டால் பிறகு தண்ணீரைப் பிள்ளைத் தொழி வாடாமல் நிலையாக நிறுத்தத்தொடங்கிவிடுவார்கள்.
முதல் களையெடுத்து முடித்த பின், பாக்டம்பாஸ் மிக்சர் தூவுவதுண்டு. இந்த நேரத்தில் பயிர் நன்கு பிடித்து கரும் பச்சைக்கு மாறும்.
சில நேரங்களில் பரவலாக முளைக்காமல் குப்பல் குப்பலாக முளைத்தும் சில இடங்கள் காலியாகக் கிடந்தாலும் குப்பலிலிருந்து தொழியோடு எடுத்து இடைவெளிகளை நிரப்புவார்கள். இதை `ஊடு கோரிப் போடுதல்` என்போம். இதற்கெனத் தனி மண்வெட்டி உண்டு. மண்வெட்டியின் நீள அகலம் பத்து அங்குலத்துக்கும் குறைவாகவும் பிடி மட்டும் ஆள் உயரத்துக்கு நீண்டும் இருக்கிற ஊடு மம்பட்டி – வட்டவடிவக் களைக் கொட்டு போல உயரமான கைப்பிடியுடனிருக்கும்.
சித்திரைபற்றிப் பேச வந்த கட்டுரை சாகுபடிக்குப் போய்விட்டது. ஆகச் சித்திரை முழுதும் விதைப்பும் கொம்பு மரம் அடிப்பதுமாகத்தான் பொழுது கழியும். இதன் நடுவிலேயே சித்ரா பவுர்ணமி, நைனார் நோன்பு, இருக்கிறது. பவுர்ணமிக்கு பத்திரகாளியம்மன் வாகனம் எடுப்பித்து மிகப் பெரிய அளவில் ஊட்டுக்குச் சமானமாக சிறப்பு நடக்கும்.
சிறுவர்களுக்கு கோடை விடுமுறை. பங்குனியில் பட்டம் விடுவதற்கு வசதியாக இருந்த வயல் பத்தில் சித்திரையில் விதைக்கத் தொடங்கிவிடுவதால் பம்பரத்துக்கு மாறுவார்கள்.
இப்போது விவசாயத்தை அரசு முற்றிலுமாகக் கைகழுவிவிட்டது. விவசாயி தற்கொலை மனநிலையில்.
முகநூல் பதிவு 20.04.2018. விருப்பம் 60, பகிர்வு 6 

No comments:

Post a Comment